வழக்கமாக தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தீபாவளி அன்று நடிகர் அல்லது நடிகைகளை அழைத்து தீபாவளியை பற்றி அவர்கள் எண்ணங்களையும் சிறு வயது அனுபவங்களையும் கேட்பார்கள். அவர்களும் "லண்டன்ல எங்க வீட்டு பக்கத்துல இருந்த குப்பத்து ஜனங்களுக்கு தீபாவளி அன்னைக்கு கூழ் ஊத்துவோம். அப்படி ஒரு முறை ஊத்தும் போது மணிரத்னம் அத கேள்விப்பட்டு குடிக்க வந்தாரு. அப்போ என்ன பார்த்து நடிக்க வாங்கன்னு சொன்னாரு, அப்படி தான் நான் நடிக்க வந்தேன்னு" வாய் கூசாம சொல்லுவாங்க. சரி, இதே கேள்வியை நமக்கு தெரிந்த சில பிரபலங்களிடம் கேட்டால் என்ன சொல்வார்கள் என்று தோன்றியது.
சாரு நிவேதிதா:
என்னை பொறுத்த வரைக்கும் தீபாவளி ஒரு காட்டுமிராண்டி பண்டிகை. என்ன மாதிரி எழுத்தாளன கொண்டாடாத இந்த தமிழ்நாடு நான் தூங்கும் போது வெடி வெடிச்சு எழுப்புது. இந்த அவல நிலை கேரளால கிடையாது. அங்க ஓணத்துக்கு எனக்கு கட்அவுட் உண்டு. இங்க நடிகனுக்கு தான் அதெல்லாம். எனக்கு என்னவோ தீபாவளியை ஆரம்பிச்சது உத்தமத் தமிழ் எழுத்தாளன் முன்னோர்கள் தான் அப்படின்னு தோணுது.. அந்தாள் குடும்பம் தான் இப்படி எல்லாம் சிந்திக்கும். பின் நவீனதுவத்துல தீபாவளி எல்லாம் கிடையாது. உடனே எனக்கு மெயில் அனுப்பிச்சு பின் நவீனத்துவம் அப்படின்னா என்னனு கேக்காதீங்க. என் நண்பன் ராமகிருஷ்ணன் சும்மா தான் இருக்காரு. அவர் கிட்ட கேளுங்க. நான் என்ன சொன்னாலும் நீங்க பட்டாசு வெடிக்க போறீங்க. அதனால ஒரே ஒரு வேண்டுகோள். பட்டாசுக்கு செலவு பண்ற பணத்தை எனக்கு கொடுத்தீங்கன்னா நான், என் புள்ளைகுட்டி, என்னை நம்பி இருக்கற நாலு பொண்ணுங்க அப்பறம் கடைசியா தமிழ் எல்லாரும வாழ்வோம். என் வங்கி தகவல்கள் அடுத்த மெயில்ல தரேன் ஏன்னா இப்போ நான் எழுதறது பஸ் டிக்கெட் பின்னாடி. இதில் இடம் இல்லை.
மறைந்த சுஜாதா அவர்கள்:
தீபாவளியை பத்தின முதல் குறிப்பு ஆண்டாள் பாசுரத்துல தான் வருது. அதுக்கு முன்னாடி புறநானூறு தீபாவளியை பத்தி சின்னதா ஒரு message சொல்லுது ஆனா,ஆண்டாள் இன்னும் intricate details சொல்றா. தீபாவளியை பத்தின ஆண்டாள் பாசுரத்தை பார்ப்போம்.
"அரங்கம் மதில்லேல்லாம் ஒளி சூழ,
விண்ணிலிருந்து வந்ததே ஒரு கணை".
இதுல கணை அப்படிங்கறது அப்போதைய ராக்கெட். அது காலபோக்குல மருவி இப்போ கலாம் விடற ஏவுகணை ஆகிவிட்டது. இது எப்படி மாறியது என்று யாராவது ஆராய்ச்சி செய்தால் குறைந்தது M.Phil பட்டம் வாங்கலாம்.
பாலகுமாரன்:
தீபாவளி அப்படின்னா என்ன? உன்னுள் இருக்கும் தீ அல்லது ஒளி. அந்த ஒளி என்ன பண்ணும்? உன்னை வழி நடத்தும். தீபாவளி அன்னைக்கு காலை 2:30 மணிக்கு எழுந்து 10 நாடிசுத்தி பண்ணலாம். மூச்சை சீராக்க ரெண்டு காலையும் தலைக்கு மேல் தூக்கி மூச்சை இழுத்து விடலாம். இப்படி 20 முறை செய்ய உடல் லேசாகும். இதை படித்துவிட்டு புரியவில்லை என்று சொல்ல வேண்டாம். நாலு நாள் இதை செய்ய, அதன் பிறகு நார்மலாய் உட்காருவது கடினமாகும்.
கலைஞர்:
தம்பி, இது போன்ற பண்டிகைகளை கொண்டாடும் பழக்கம் பண்பாட்டில் இருந்தாலும் என் பகுத்தறிவு பேட்டில் இல்லை.ரம்ஜான் நோன்பு கூழ் சாப்பிடும் கலைஞர் ஏன் தீபாவளி லேகியம் சாப்பிடவில்லை என்று அம்மையாரின் துதி பாடும் ஏடுகள் சில இளப்பமாக செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் தமிழன் படும் இன்னல்களை பார்த்த பின் தீபாவளியை கொண்டாடுபவர்கள் தமிழர்களே இல்லை. இதை நான் 1955 ஆம் வருடம் அண்ணா முன்னிலையில் தஞ்சையில் நடந்த கழக மாநாட்டிலேயே கூறி இருக்கிறேன். மேலும், பெரியார் இறக்கும் தருவாயில் என்னிடம் கேட்ட சத்தியங்களில் ஒன்று நான் தீபாவளி கொண்டாட கூடாது என்பதாகும். இது எனது அருமை நண்பர் வீரமணிக்கு தெரியும்.
ஜெயலலிதா:
மைனாரிட்டி தி.மு.க அரசின் மற்றொரு சாதனை தமிழர்களை தீபாவளி கொண்டாட விடாமல் செய்தது. ரேஷன் கடைகளில் மளிகை சாமான்களை மலிவு விலையில் விற்க முடிந்த கருணாநிதியால் ஏன் அதே கடைகளில் பட்டாசுகளை மலிவு விலையில் விற்க முடியவில்லை? இங்கே தமிழன் ஊசி வெடி வாங்க பணம் இல்லாமல் இருக்கும் நிலையில் அங்கே கனிமொழி வீட்டிலும் ஸ்டாலின் வீட்டிலும் ஆயிரம் வாலா சர வெடிகள் மின்சாரத்தை பயன்படுத்தி கொளுத்தப்படுகின்றன. எங்கே இருந்து வந்தது அதற்கு பணம்? இதற்கு பதில் சொல்லாத கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும்.