Saturday, 18 January 2014

சக்கரை இனிக்கிற சக்கரை

கடந்த ஏப்ரல் மாதம் எனக்கு ரத்தத்தில் சக்கரையின் அளவு அதிகமாக உள்ளதென கண்டேறியப்பட்டது. உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மற்றும் மருந்தின் மூலம் இப்போது ஓரளவு குறைந்துள்ளது என்றாலும் முழுமையாக அது இருக்க வேண்டிய அளவிற்கு வரவில்லை. கட்டையில் போகும் காலம் வரை இந்த நோயுடன் தான் நீ இருந்தாக வேண்டும் என்று சொல்லிவிட்டார் மருத்துவர்.

குடும்பத்தில் யாருக்கும் இந்த நோய் இல்லை, அதிகமாக இனிப்புகள் எடுத்துக்கொள்ளும் ஆளும் இல்லை என்கிறாய், இருந்தாலும் 35 வயதில் உனக்கு ஏன் இது வந்தது என்று தெரியவில்லையே என்றார் மருத்துவர். சரி, வந்தாயிற்று, நம் கர்மா என்று விட வேண்டியது தான் டாக்டர் என்றேன். அது சரி, ஆனால் உன்னால் முடிந்த வரை இந்த நோயை பற்றி பிறருக்கு எடுத்து சொல்லு(முக்கியமாக குழந்தைகளுக்கு). ஏனென்றால், வருங்காலத்தில் இந்தியாவில் இரண்டில் ஒருவருக்கு இந்த நோய் வரும் அபாயம் இருக்கிறது. தனி மனிதன் முயற்சி செய்தால் மட்டுமே இந்த நோயிலிருந்து தப்பிக்க முடியும் என்றார். நிச்சயம் செய்கிறேன் என்றேன்.

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டு அதை கவனிக்காமல் இருப்பவர்கள் பல உடல் உபாதைகளுக்கு உள்ளாவார்கள் என்பது உண்மை. உடனே எந்த பாதிப்பும் இருக்காது என்றாலும் சில வருடங்களில் பார்வை மங்குதல், சிறுநீரக பாதிப்பு, இதய நோய் போன்றவை சாதாரண மனிதர்களை காட்டிலும் இவர்களுக்கு வருவதற்கான சாத்தியங்கள் 50% அதிகம் உள்ளது. இதையெல்லாம் விட பெரிய உபாதை "அறிவுரை" சொல்லியே நம்மை சாகடிக்கும் நண்பர்/உறவினர் கூட்டம். "51 வயசு பக்கத்துக்கு வீடு ஆளுக்கு. சுகர் 700 போச்சு ஆனா திடீர்னு 55 வந்து கோமால போனான். பத்து நாள் தான். ஆள் போய்ட்டான். அவனுக்கு பரவாயில்ல ரெண்டு ஆம்பிள பசங்க. உனக்கு ரெண்டு பொண்ணுங்க. என்ன பண்ணுவா உன் பொண்டாட்டி? இன்சூரன்ஸ் எல்லாம் பண்ணியிருக்க இல்ல? எனக்கு பாரு 75 ஆயாச்சு. உடம்புல ஒரு பிரச்சனை இல்ல. என்னத்த IT கம்பெனி வேலையோ. சுகர் வந்தது தான் மிச்சம்." என்பார் பக்கத்து வீட்டு மாமா.

"இந்த அலோபதி எல்லாம் நம்பாதே. திருநெல்வேலி கிட்ட நமக்கு தெரிஞ்ச சித்த மருத்துவர் இருக்காரு. கான்சர் ஆளுங்களையே நூறு வருஷம் வாழ வெச்சவரு. சுகர் எல்லாம் சும்மா. நீ அங்கே போய்டு. சுத்தமா சரி பண்ணி அனுப்புவாரு" என்பார் இன்னொருவர்."டேய், அனாவசியமா மனசை போட்டு அலட்டிக்காத. காலம்பற வெறும் வயத்துல வெந்தயத் தண்ணி குடி. இல்லேனா வெண்டைக்காவ தண்ணில மொதல் நாள் ராத்திரி ஊற போட்டு அந்த தண்ணிய மறுநாள் காலம்பற குடி. சுகர் எப்படி கொறையும் பாரு. எங்காத்து மாமாக்கு 19 வயசுல சக்கரை வியாதி. சாகும் போது 82 வயசு. மருந்தா சாப்டார்? எல்லாம் என் கை வைத்தியம் தான்" என்பார் ஒரு மாமி.

இந்த மாதிரி அறிவுரைகள் ஆரம்ப நிலையில் பயங்கர ஆறுதல் அளிக்கும். எல்லாவற்றையும் முயற்சி செய்ய சொல்லும். ஆனால், சக்கரை நோயை நிரந்தரமாக குணமாக்கவே முடியாது. அதை கட்டுப்படுத்த மட்டும் தான் முடியும். இந்த நிதர்சனம் புரிய ஆறு மாதம் ஆகும். மேலும், உங்கள் உடல் வாகை பொறுத்தே மருந்து, மாத்திரை, வெந்தய தண்ணி, வெண்டைக்காய் எல்லாம். எல்லாருக்கும் ஒரே மாதிரி வைத்தியம் உதவாது. ஆக, சக்கரை நோய் இருக்கிறது என்று தெரிந்தவுடன் நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம், உங்களுக்கென ஒரு மருத்துவரை தேர்ந்தெடுத்து அவரிடம் முறையான சிகிச்சை பெறுவது தான்.அலோபதி, சித்தா, ஆயுர்வேதா எதுவாக இருந்தாலும் ஒரு மருத்துவரை அணுகி தொடர்ந்து அவரிடம் சிகிச்சை பெறுங்கள்.

சக்கரை ரத்தத்தில் ஏறுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். மன அழுத்தம்(Stress) கூட ஒரு காரணம். அதற்கு Stress induced sugar என்பார்கள். ஆகையால், சக்கரை அளவுக்கு அதிகம் என்று பார்த்தவுடன் பதட்டம் வேண்டாம். HbA1C எனப்படும் Glycosylated Haemoglobin டெஸ்ட் எடுத்துப் பார்க்கவும். அது ஏழுக்கு மேலே இருந்தால் நீங்கள் கொஞ்சம் கவலைப்பட வேண்டும். அது தான் நீங்கள் சர்க்கரை நோயாளி என்று முடிவு செய்ய மருத்துவர் பயன்படுத்தும் பிரம்மாஸ்திரம். இந்த டெஸ்ட் உங்களுக்கு சர்க்கரை திடீரென்று இன்றோ நேற்றோ வந்ததல்ல சில மாதங்களாக/வருடங்களாக இருக்கிறது என்று உறுதி செய்யும். அடியேனுக்கு 11.9 இருந்தது. எந்த நேரமும் Heart attack அல்லது Stroke வரலாம் என்றார்கள்.

சர்க்கரை நோய் உள்ளது என்று உறுதி செய்யபட்டால் மற்ற எல்லா சோதனைகளையும்(சிறுநீரகம், இருதயம், கண்கள்) ஒரு முறை செய்து விடவும். இந்த சோதனைகளை விடாது வருடத்திற்கு ஒரு முறை செய்யவும். இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் திட்டமிட்டு உடற் பரிசோதனை செய்து கொள்வதே இல்லை என்பது மருத்துவர்களின் பெரிய குற்றச்சாட்டு. வியாதி வந்த பின் தான் மருத்துவரை தேடிச் செல்கிறார்கள். முதலிலேயே வியாதி இருப்பது தெரிந்தால் இன்சூரன்ஸ் போன்ற சமாசாரங்களை அதற்கு ஏற்றார் போல் திட்டமிடலாம்.

சக்கரை நோய் வந்த பின் சக்கரை சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பது இன்று குழந்தைக்கு கூட தெரியும் என்பதால் நான் அதையெல்லாம் சொல்லப்போவதில்லை. எதை சாப்பிடலாம் அல்லது சாப்பிட வேண்டாம் என்றும் சொல்லமாட்டேன். Glycemix Index என்று ஒன்று இருக்கிறது. ஒவ்வொரு உணவிற்கும் இது உண்டு. இதை பார்த்துக் கொள்ளவும்(கூகுள் செய்தால் ஒரு வண்டி தகவல் கிடைக்கும்). இது எந்த உணவு ரத்தத்தில் சக்கரையின் அளவை விரைவாக/குறைவாக ஏற்றும் என்பதின் சுட்டு. இதற்கு ஏற்றவாறு உங்கள் உணவை திட்டமிடவும்.

சிலர் சுகர் ப்ரீ சேர்த்துக் கொள்ளலாமே என்பார். அவரவர் உடல் நிலையை பொறுத்து உபயோகிக்கலாம். சிலருக்கு சுகர் ப்ரீ சேர்த்தால் வயிற்றால் போகும். பார்த்துக் கொள்ளுங்கள். சக சக்கரை வியாதி நண்பர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை பெறாமல் எடுத்துக் கொள்ளாதீர்கள். வெந்தயம், வெண்டைக்காய் போன்றவை சக்கரை அளவை கட்டுப்படுத்தும் தான். ஆனால் முற்றிலும் குறைக்காது. சாப்பிடாமலே இருந்தால் சக்கரை அளவு குறையும் என்று நம்பாதீர்கள். அது சக்கரை அளவை மேலும் ஏற்றும். தினசரி உடற் பயிற்சி செய்யுங்கள். அரை மணி நேரம் வியர்வை சொட்ட நடந்தால் கூட போதும். நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.