என் பத்து வருட விமான பயணத்தில் இப்படி ஒரு அவமானத்தை சந்தித்ததில்லை. அதுவும் அமெரிக்காவில் நடந்திருந்தால் கூட "அட, ஷாருக்கான், அமீர்கான் எல்லாம் அசிங்கப்பட்டாங்க, நம்ம என்ன அவ்வளோ பெரிய ஆளா, போனா போகுது" என்று விட்டிருப்பேன்.
ஆனா, தலைநகர் டெல்லில நம்மள கேவலப்படுத்திட்டாங்க. விஷயம் என்னன்னா, போனா சனிக்கிழமை சென்னையிலிருந்து டெல்லி வழியா அமெரிக்கால இருக்கற சிகாகோ நகருக்கு வந்தேன். சென்னை-டெல்லி, டெல்லி-சிகாகோ ஏர் இந்தியா விமானம். சென்னை-டெல்லி வழித்தடத்துல எந்தப் பிரச்சனையும் இல்ல. டெல்லில இறங்கி சிகாகோ போக குடி நுழைவு(Immigration) பகுதிக்கு வந்தப்போ என் பாஸ்போர்டை ஒரு பத்து நிமிஷம் பக்கம் பக்கமா பாத்தாரு அந்த அதிகாரி.
ஒரு வழியா சீல் அடிச்சு கொடுத்ததும் நானும் பாதுகாப்பு சோதனை முடிச்சு விமானம் புறப்படற இடத்துக்கு வந்து சேர்ந்தேன். அங்க உள்ள நுழையற இடத்துல இருந்த அதிகாரி என் பாஸ்போர்ட், போர்டிங் பாஸ் எல்லாம் வாங்கிகிட்டு என்னை ஓரமா ஒதுங்கி நிக்க சொல்லிட்டு மத்தவங்கள விமானத்துக்கு அனுப்ப ஆரம்பிச்சாரு. இதுக்கு நடுவுல அங்க இருந்த ஒலிபெருக்கி எல்லாம் "சுவாமிநாதன் வாசுதேவன், உடனடியாக விமானம் புறப்படும் இடத்திற்கு வந்து அதிகாரியை சந்திக்கவும்" அப்படின்னு ஆங்கிலத்துல அலறிட்டு இருந்தது. இந்த அதிகாரி அதையெல்லாம் சட்டை பண்ண மாதிரியே தெரியல.
"சார், என் பேரு தான் சார் அது. உள்ள உங்காளுங்க கூப்பிடறாங்க" அப்படினேன். "எல்லாம் எனக்கு தெரியும், வெயிட் பண்ணு" அப்படின்னு சொல்லிட்டு மத்த பயணிகளை உள்ள அனுப்பிட்டு இருந்தாரு. ஒரு வழியா எல்லாரும் ஏறின அப்பறம், என்ன அழைச்சுக்கிட்டு உள்ள போய் அங்க இருந்த அதிகாரி கிட்ட, இவர் தான் வாசுதேவன் அப்படின்னாரு. அவரு உடனே, அரை மணி நேரமா உங்க பேரை தான ஒலிபெருக்கில சொல்லிட்டு இருந்தோம், ஏன் வரலைன்னு கேட்க, நான் பரிதாபமா என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம நின்னேன்.
அவர் போன் செஞ்சு யார்கிட்டயோ என்னவோ சொல்ல, ரெண்டு போலீஸ் அதிகாரிங்க துப்பாக்கியோட வந்தாங்க. கொஞ்சம் மறைவான இடத்துக்கு அழைச்சிட்டு போய், என் சட்டை, பான்ட், பை எல்லாம் சோதனை செய்யனும்னு சொன்னங்க. எனக்கு கொஞ்சம் கோபம் வந்து, "இங்க என்ன நடக்குதுன்னு கேட்டப்போ", "உன் படம் தேடப்படற ஒரு தீவிரவாதியோட ஒத்துப் போகுது. அதுக்கு தான் இந்த சோதனை எல்லாம். கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுங்க" அப்படின்னு கேட்டாங்க.
2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாசம் என் முதல் வெளிநாட்டு பயணம். மாசம்/ஆண்டை நல்ல பாருங்க. 9/11/2001 முடிஞ்சு ஒரு மாசத்துக்கு பிறகு என் பயணம். ஹாங்காங் நாட்டுக்கு. அப்போ கூட இந்த இம்சை எல்லாம் படலை. ஆனா, இப்போ மூணு பாஸ்போர்ட் வாங்கி, ஒரு பத்து/பதினஞ்சு நாடு சுத்தினதுக்கு அப்பறம் இந்த கொடுமை எல்லாம் நடக்குது. என்ன சொல்ல முடியும்? வாயை மூடிகிட்டு சோதனைக்கு அனுமதி கொடுத்தேன். ஒரு வழியா, "நான் தேடின ஆள் நீங்க இல்லைன்னு சொல்லி விமானம் ஏற அனுமதிச்சாங்க". ஆனா, பல பேர் பார்க்க போலீஸ் என்னை கூட்டிகிட்டு போனது, என் பேரை ஒலிபெருக்கில பத்து முறை சொன்னது, மத்த பயணிகள் எல்லாம் உள்ளே போகும் போது ஓரமா நின்ன என்னை பாத்துக்கிட்டே போனது, இதையெல்லாம் மறக்கவே முடியாது. எல்லாம் ஒரு அனுபவம் தான்.