Monday, 3 June 2013

சுஜாதா

சுஜாதாவை காப்பாற்ற வேண்டுமா? என்ற இந்த பதிவில் ஜெயமோகன் எழுதியிருக்கும் பதில் அற்புதம். இந்த பதிவை படித்ததிலிருந்து ஞாயிறு தினகரனில் திருமதி.சுஜாதா அவர்கள் அப்படியென்ன சொல்லி இருக்கிறார் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் அதிகமாகி காலை ஆறு மணிக்கே கடைக்கு சென்று ஏடை வாங்கி வந்தேன். எல்லா மனைவிக்கும் தன் கணவர் குறித்து சில குறை இருக்கும். அதையே தான் திருமதி.சுஜாதா அவர்களும் கூறி இருக்கிறார். மேலும், இதை சுஜாதா அவர்களே "தோரணத்து மாவிலைகள்" கட்டுரை தொகுப்பில் "நிஜ சுஜாதா" என்கிற தலைப்பில் குறிப்பிட்டுள்ளார். அவர் வரிகள் அப்படியே இதோ:

நிஜ சுஜாதாவை 'எழுத்தாளன் மனைவி' என்ற தலைப்பில் கட்டுரை எழுதித் தரச் சொன்னேன்.
"எல்லாத்தையும் எழுதிடுவேன்" என்று அச்சுறுத்தினாள்.
"எழுது பரவால்ல" என்று சொல்லியும் பல முறை வற்புறுத்தியும் அவள் எழுதவில்லை

No man is a hero to his wife.

"நீங்க எல்லாருக்கும் ரொம்ப நல்லவர் - உங்க மனைவிக்கும் குழந்தைகளுக்கும் தவிர", என்று அண்மையில் ஒரு முறை அவள் சொன்னது உண்மை தான்.

நான் ஆதர்சக் கணவனில்லை. ஆதர்சத் தகப்பன் இல்லை துறைகளில் என்னை முன் மாதிரியாக எடுத்துக் கொள்ள ஏதும் இல்லை. என் போன்ற ஒரு சிக்கலான பிரகிருதியுடன், எப்போதும் கோவம், எப்போதும் மௌனம் என்று தெரியாத அநிச்சயமான சூழ்நிலையில் , இருபத்தேழு வருஷம் வாழ்ந்து வருவது அவளுடைய மகத்தான சாதனை.

இதை படித்த பின் இன்றைய தினகரன் நாளிதழுடன் வந்த வசந்தம் புத்தகத்தில் திருமதி.சுஜாதா எழுதியுள்ளதை படித்துப் பாருங்கள்.