பொதிகையில் வாலி தன் பால்ய கால நினைவுகள் பற்றி பேசும் போது ஸ்ரீரங்கத்தையும் சுஜாதாவையும் குறிப்பிட்டார். கேட்டவுடன் சுஜாதா பற்றிய நினைவுகள் பீறிட, கற்றும் பெற்றதும் எடுத்து புரட்டிக் கொண்டிருந்தேன். அதிலிருந்து ஒரு பகுதி.
வாலியின் "பாண்டவர் பூமிக்கு" பாராட்டு விழ மூப்பனார் தலைமையில் பாரதிய வித்யா பவனில் நடந்தது. நான் போனபோது, உள்ளே நுழைய முடியாதபடி கூட்டமாக இருந்ததால் கற்பகாம்பாள் மெஸ்ஸில் காபி சாப்பிட்டுவிட்டு மெரீனாவில் வாக் போகும் போது வாலியை பற்றிய நினைவுகளில் ஆழ்ந்தேன்.
வாலி என் சிறு வயது ஸ்ரீரங்கத்து சிநேகிதர். என் அண்ணன் கிச்சாயிக்கு கொஞ்சம் சீனியர். மேலச்சித்திரை வீதிக்காரர். அவரை நான் கெடிகார ராமையாவின் வீட்டில் ஜனனி சீனிவாசனை சந்திக்க வரும் போது பார்த்திருக்கிறேன். கொஞ்சம் ஜூனியர் என்பதால் எங்களையெல்லாம் அவர்கள் இலக்கிய சர்ச்சையில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். வாலியை பற்றி அதிகம் அறியப்படாத இரண்டு விஷயங்கள்...அவர் பெயரும் ரங்கராஜன், நன்றாக படம் என்பதே(ஆர்ட் ஸ்கூலில் படித்ததாக படித்த ஞாபகம்). எங்கள் "தென்றல்" கையெழுத்துப் பத்திரிகைக்குள் ஒரு மலர் போட்ட போது அவர் வரைந்த சித்திரம் எனக்கு ஞாபகம் இருக்கிறது.
நாங்கள் பகுதி நேரத்தில் தான் இலக்கியமும் கலையும் பேசினோம். வாலி அப்போதே எதாவது சாதிக்க வேண்டும் என்கிற வைராக்கியத்திலே இருக்கிறார். ஸ்ரீரங்கம் ஹைஸ்கூலில் நாடகம் போடுவார். திருச்சி வானொலி நிலையத்திற்கு நாடகங்கள் எழுதுவார், நடிப்பார். அப்போதே பாடல்களும் எழுதி இருக்கலாம். பின்னர் சென்னை சென்று கிருஷ்ணா பிக்சர்ஸ், கே.எஸ்.ஜி போன்றவர்களின் ஆரம்ப ஆதரவுடன் கஷ்டப்பட்டு முன்னேறியதை "புதியபார்வையில்" விஸ்தாரமாக எழுதியிருக்கிறார்.அந்த நாட்களில் அவருடன் எனக்கு தொடர்பு விட்டுப் போனது.
டெல்லியில் இருக்கும் போது "கற்பகம்" படத்தில் "அத்தைமடி மெத்தையடி" என்று தாலாட்டுப் பாட்டு மூலம் அவர் முதலில் பிரபலமானது('டேய், இவரை எனக்கு தெரியுமடா' வகையில்) பெருமையாக இருந்தது. கண்ணதாசன் கொடிகட்டிப் பறந்த காலத்திலும் தனக்கென அடையாளம் தேடிக்கொண்டதும், எம்.ஜி.யாரின் நாட்களில் ஏறக்குறைய கழகத்துக் கொள்கை விளக்கமாக "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்" போன்ற எளிய பாடல்கள் எழுதியதும், அரசியல் மாறுதல்களை எதிர்ப்பார்த்தோ என்னவோ..அந்த மூன்றெழுத்தும் கடமை என்று பின்குறிப்பிட்டதால் அந்தப் பாட்டு காலம் கடந்ததும், கண்ணதாசனுக்கு பின் திரை இசையில் மற்ற கவிஞர்கள் கொண்டு வந்த மாறுதல்களையும் மக்கள் ரசனையில் ஏற்ப்பட்ட திருப்பங்களையும் சமாளித்துத் தான் தாடி வளர்த்தாலும் தன் பாடல்களுக்கு தாடி வளராமல் பார்த்துக் கொண்டதும், மகாதேவனில் இருந்து ரஹ்மான் வரை தாக்குப்பிடித்ததும் மரத்தான் கவிஞர் வாலியின் சாதனைகள்.
புதுக்கவிதையும் மரபுக்கவிதையும் இல்லாத, பகுதி நேர எதுகைகள் கொண்ட ஓர் எளிய கவிதை வடிவத்தை தனக்கே அமைத்துக்கொண்டார். அதன் லேசான சந்தத்துடன் ராமாயண, மகாபாரதங்களை எழுதியது அவர் வாழ்வின் முத்தாய்ப்பான சம்பவங்கள். வாலியின் இதிகாச முயற்சிகளை நம் நாட்டுப்புறக் கதை பாடல்களுக்கு ஒப்பிடத் தோன்றுகிறது. புராணக் கதைகளைக் காவிய வடிவில் சொல்லாமல் இன்றைய உடனடி தமிழனும் புரிந்து பகிர்ந்து கொள்ளும்படி, கொச்சைப்படுத்தாமல் எளிமைப் படுத்தியிருக்கிறார். இந்த முறை நம் பாரம்பரியத்தில் உள்ளதே. "ஐவர் ராசாக்கள் கதை" போன்ற நம் நாட்டார் கதைப் பாடல்கள் இதையேதான் செய்தன.
ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்
தாழ் இருஞ் சடைகள் தாங்கி, தாங்க அருந்தவம் மேற்கொண்டு
பூழி வெங் கானம் நண்ணி புண்ணியத் துறைகள் ஆடி,
ஏழ்-இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினான் அரசன்
என்று கம்பம் விஸ்தாரமாக அறுசீர் விருத்தத்தில் சொன்னதை "பரதனுக்கு ராஜ்யம், ராமனுக்கு பூஜ்யம்" என்று இரண்டே வரிகளில் சொன்னார் வாலி. வாழ்த்துக்கள்.
Sunday, 7 November 2010
தீபாவளி நிகழ்ச்சிகள்
பொதிகை தவிர்த்து மற்ற சேனல்கள் விளம்பரங்களுக்கு நடுவில் சில நிகழ்ச்சிகளை "சான்ட்விச்" செய்திருந்தன என்றே சொல்ல வேண்டும். பொதிகையில் கவிஞர் வாலியின் பேட்டி ருசிகரம். அரங்கில் இருந்த இளைஞர்/யுவதிகள் கேள்வி கணைகள் தொடுக்க வாலி அனாயாசமாக அவற்றை கையாண்டார். நீங்கள் மூன்று தலைமுறைகளாக எழுதி வருகிறீர்கள், இந்த மூன்று தலைமுறையில் உங்கள் பாடலுக்கு சிறப்பாக நடித்த நடிகர்களை சொல்லுங்கள் என்றார் ஒரு பெண். யோசைனையே செய்யாமல் சிவாஜி என்றார். தற்போது கமலை சொல்லலாம் என்றார். தனக்கு வாலி என்ற பெயரை வைத்துக்கொண்ட காரணத்தையும் அதோடு தொடர்புடைய நகைச்சுவையான நிகழ்ச்சி ஒன்றையும் குறிப்பிட்டார். ஒரு விளம்பரம் கூட இல்லாமல் பார்க்க முடிந்த நிகழ்ச்சி.
பொதிகையில் இருந்து தாவி அப்படியே "Koffee with Anu" பக்கம் சென்றால் சிறுப்பு விருந்தினர் நம்ம கமல். சித்தப்பாவை பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார் அனு. ஆனால், அந்த சாயலே இல்லாமல் ஒரு விருந்தினர் போலவே கேள்விகள் இருந்தன. வழக்கம் போல் கமல் முடிவில் நாத்திக பிரச்சாரம் செய்தார். "மக்களின் தெய்வங்கள்" என்ற நூலை குறிப்பிட்டார் கமல். ஆனால் அதை எழுதியவரின் பெயரை கவனிக்க தவறிவிட்டேன். இந்தப் பதிவை படிப்பவர்கள் தெரிந்தால் கூறவும். புகைப்படங்கள் பகுதியில் சிறப்பாக இருந்தது. அதே போல் கமலை ஒரு கவிஞனாய் வைரமுத்து, பேராசிரியர் ஞானசம்பந்தன், வாலி போன்றவர்கள் பாராட்டினார்கள். அந்த பகுதிக்கு முத்தாய்ப்பாய் ஞானசம்பந்தன் "கல்லும் சொல்லாதோ கதை" என்று ஒரு வரியை சொல்லி அதில் கமலை ஒரு வெண்பா புனைய சொல்ல, கமலும் கலக்கினார். ஒரு திரைக்கதை வல்லுனராய் கமல் பற்றி கே.பி பேசினார். கே.பி திரைக்கதைக்கு நரி, காக்கா, வடை கதையை வைத்து சொன்ன உவமை அற்புதம்.
மதியம் ஜெயா தொலைக்காட்சியில் பேராசிரியர் ஞானசம்பந்தன் கமலை சந்தித்து தமிழ் குறித்து உரையாடினார். ஞானசம்பந்தன் கமலை அளவுக்கு மீறி புகழ்ந்ததும் கமலின் "மொக்கையும்" தாங்க முடியாததால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் அதை பார்க்க முடியவில்லை.மீண்டும் ஜெயாவில் மாலை நான்கரை மணிக்கு "Kings in Concert" நிகழ்ச்சி. ஹரிஹரனும் ஷங்கர் மகாதேவனும் பின்னிப் பெடலேடுத்தார்கள். "கண்டேன் காதலை" படத்தின் "கொக்கே கொக்கே பூவை போடு" பாடலின் அந்த "ஓஓஓஓ" ஸ்வரத்தை ஹரிஹரன் பாடியதை பார்த்தவர்கள் பாக்கியவான்கள்.

Subscribe to:
Posts (Atom)