Sunday, 19 July 2009

தாரா ஷுகோவின் வாள்

வாசுவின் சில சுவாரஸ்யமான பதிவுகளிற்கு பின்பு மீண்டும் மொக்கைகளுக்கு தயாராகுங்கள். ஆனால் இந்த மொக்கைகள் இருந்தால்தான் அந்த பதிவுகளுக்கு மேலும் சுவாரஸ்யம் கிடைக்கும் இல்லையா..

இங்கே லண்டனில் விக்டோரியா & ஆல்பர்ட் (Victoria & Albert) ம்யுசியத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே உள்ள பல பொருட்களில் ஒரு வாள் என்னை மிகவும் ஈர்த்தது. ஒரு வாள்,பதினேழாம் நூற்றாண்டின் வாள். மிகவும் அமைதியாக , ஒரு வித எண்ணெய் பளபளப்புடன் இருந்தது அது. அந்த வாளிற்கு கீழே தாரா ஷிகோ (Dara Shikoh) வின் வாள் என எழுதி அதன் பிறகு சில விஷயங்களை கொடுத்து இருந்தார்கள்.
யார் இந்த தாரா ஷிகோ ?
இவர் மொகலாய சக்கரவர்த்தி ஷாஜகானின் மூத்த மகன், ஷாஜகானின் விருப்பம் தனக்கு பிறகு தாரா இந்தியாவின் சக்கரவர்த்தியாக வரவேண்டும் என்பதே, ஆனால் வந்தது என்னவோ அவுரங்கசீப்தான்!
என்ன நடந்தது?
அது செப்டெம்பர் மாதம் 6-தேதி , ஆண்டு 1658, ஷாஜகான் கடும் காய்ச்சலுக்கு உள்ளானார், ஏறக்குறைய இறந்து விடுவார் என அனைவரும் நம்ப தொடங்கினர். அவரது மகன்களில் யார் அடுத்து மன்னர் ஆவது என்று சண்டை தொடங்கியது அப்போதுதான், சண்டையில் முன்னணியில் இருந்தவர்கள்

தாரா ஷிகோ
அவுரங்கசீப்

முதல் மூவ் தாரவினுடயது , பெங்காலில் இருந்து தனது படையினருடன் ஆக்ரா நோக்கி புறப்பட்டு ஆக்ரா கோட்டையை ஆக்ரமித்து தானே மன்னர் என்று சொன்னார்.ஆனால் இவர் ரொம்ப நாள் நிம்மதியா இல்லை , அடுத்த வருஷம் மே மாசம் 30-ம் நாள் அவுரங்கசீப் ஆக்ராவில் தாராவை தோற்கடித்து , தன் அப்பாவை சிறைப்பிடித்தார்.தன்னை மன்னன் என அறிவித்துக்கொண்டார் .சண்டையில் தோற்றபின் தாரா ஓடியது லாகூரை நோக்கி , அங்கே இருந்து பின்பு சிந்துவிற்கு வந்து (இப்போது பாகிஸ்தானில்) பிறகு அங்கே இருந்து குஜராத் வந்தார் , குஜராத்தில் தன் நண்பனான ஷா நவாஸ் கானின் துணை கொண்டு ஒரு புதிய ராணுவத்தை தயார் செய்தார்.

அங்கே இருந்து ஆக்ராவை நோக்கி சென்றார் , நடுவே ஆஜ்மீரில் கடும் சண்டை , மீண்டும் அவுரங்கசீபால் தோற்கடிக்கப்பட்டார் , இது நடந்தது மே மாதம் 11-ஆம் தேதி 1659. தோற்றபின் மீண்டும் சிந்துவிற்கு தப்பித்தார் அங்கே அவரின் இன்னொரு நண்பன் மாலிக் ஜிவான் அவருக்காக காத்திருந்தார், சில நாட்கள் அங்கே தங்கியபின், ஒரு சுப முகூர்த்தத்தில் தனது வெகு நாளைய நண்பனான மாலிக் ஜிவானால் அவுரங்கசீபின் ஆட்களுக்கு காட்டி கொடுக்கப்பட்டார் (ஜூன் மாதம் பத்தாம் தேதி) டெல்லிக்கு கொண்டு வரப்பட்ட தாராவை சங்கிலியால் கட்டி ஒரு அழுக்கான யானை மேல் உட்கார செய்து
தெருத்தெருவாக இழுத்து வரச்சொன்னார் சக்கரவர்த்தி.பொது அமைதிக்கு பிரச்சினை கொடுத்ததாகவும், இஸ்லாமிற்கு அவமானம் செய்ததாகவும் சொல்லி 1659-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முப்பதாம் தேதி இரவு தாரா கொலை செய்யப்பட்டார்.

தாரா எப்படி எல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை விகடன் மதனின் 'வந்தார்கள் வென்றார்கள்' புத்தகத்தை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம், நண்பனின் துரோகம், அவுரங்கசீப் அளவிற்கு கொடூரமான மனப்பான்மை இல்லாதது, மென்மையான உள்ளம் இவையே தாராவின் தோல்விக்கு காரணங்கள். தாரா ஒரு கலைஞர் , ஒரு சிறந்த ஓவியர் , நடன ரசிகர்.

அவரின் வாளை பார்த்தேன், அது ஒரு தோல்வி அடைந்த வாள், தன் எஜமானனை எங்கோ பதினேழாம் நூற்றாண்டில் விட்டுவிட்டு , வேறு ஒரு தேசத்தில் இப்போது அமைதியாக இருக்கிறது, சுற்றி இருக்கும் பல வாள்களோடு அதுவும் இருக்கிறது, அது மிகவும் அவமானமாக உணர்வதாகவே எனக்கு பட்டது.

நாம் பல வெற்றி சின்னங்களை பார்த்து இருப்போம், பல கட்டிடங்கள், பல சமாதிகள், பல கோவில்கள் ...எல்லாமே வெற்றியாளர்களின் சின்னங்கள், பழமையின் பெருமிதங்கள், ஆனால் வெற்றி மட்டுமே உலகம் இல்லையே , தோல்வியும் சேர்ந்தல்லவா இருக்கிறது. உலகில் , ஒருவனின் வெற்றி இன்னொருவனின் தோல்வி இல்லையா? தோல்வியின் சின்னங்கள் நாம் கவனிப்பதில்லை, உலக நியதியே வெற்றியை பார்ப்பதுதான், இங்கே ஒரு தோல்வியடைந்த வாளை கண்டது ஒரு வித்தியாசமான உணர்வை அளித்து.