ஒவ்வொரு நாளும் ஒரு நண்பரின் வீட்டில் கூடி மணிக்கணக்கில் மலையாள, தமிழ் இலக்கியம் மற்றும் சினிமா குறித்து நிறைய விவாதம் செய்தோம். நண்பர்கள் எனக்கு நல்ல மலையாள படங்களை அறிமுகப்படுத்த நான் அவர்களுக்கு தமிழ் இலக்கியம் மற்றும் சினிமா பற்றி எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொண்டேன். உஸ்தாத் ஹோட்டல், ஒழிமுறி போன்ற படங்கள் குறித்து நிறைய விவாதித்தோம். கமலை விட மோகன்லால் சிறந்த நடிகர் என்று நண்பர்கள் வாதாட நான் கமலை holistic ஆக பார்க்கும் போது அவர் மோகன்லாலை விட சிறந்தவர் என்றேன்.
தன்மாத்ரா, ப்ரணயம், ஸ்படிகம், கிரீடம், வானப்ரஸ்தம் போன்ற மோகன்லால் படங்களை எடுத்துக்கொண்டு அதற்கு இணையாக கமல் நடிப்பை வெளிப்படுத்திய படங்களை பட்டியலிட சொன்னார்கள். நான் பதினாறு வயதினிலே, குணா, மூன்றாம் பிறை, சலங்கை ஒலி, மகாநதி, அன்பே சிவம் ஆகியவற்றை குறிப்பிட்டேன். மலையாள சினிமா பெரும்பாலும் தன் கதைகளை இலக்கியத்தில் இருந்து எடுக்கிறது. இலக்கியம் யதாதர்த்தை தழுவி இருப்பதால் தன்மாத்ரா போன்ற படங்கள் சாத்தியமாகிறது. அந்த நிலை தமிழில் இல்லை என்றேன்.மலையாள சினிமாவில் செலவும் குறைவு. எந்திரன், விஸ்வரூபம் போன்ற படங்கள் நூறு கோடி முதலீடு செய்து தயாரிக்கப்பட்டவை. வருங்காலத்தில் இது இன்னும் அதிகமாகலாம். ஆனால், மலையாளத்தில் அந்த நிலை இல்லை.ரஞ்சித், பிளஸ்சி, அனூப் மேனன், வினீத் ஸ்ரீனிவாசன், அஞ்சலி மேனன் போன்ற நல்ல இயக்குனர்கள் மற்றும் திரைக்கதை வல்லுனர்கள் மலையாள சினிமாவை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல வந்துவிட்டனர். தமிழில் நல்ல இயக்குனர்கள் மற்றும் திரைக்கதை விற்பன்னர்கள் இருந்தாலும் வெகுஜன ரசனையை கருத்தில் கொண்டே அவர்கள் செயல்பட வேண்டிய நிலை உள்ளது. அவர்கள் நினைத்ததை எல்லாம் செய்ய முடியாது என்றேன்.
எம்.டி.வாசுதேவன் நாயர், லோஹிததாஸ் ஆகியோரை பற்றி பேச்சு வந்தது. ஜெயமோகன் வாயிலாக லோகி பற்றி அறிந்ததால் அவர் படங்களை பற்றியும் பேசினோம். தமிழ்நாட்டில் இருந்து கொண்டு கேரளா பற்றி எப்படி தெரிந்து வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்றார்கள்? ஜெயமோகன், சாரு, எஸ்.ரா ஆகியோரை பற்றி சொன்னேன். சத்சங்கம் என்பது நல்லவர்களின் அருகாமையில் இருப்பதை குறிக்கிறது. நல்லவர்களாக மட்டுமன்றி ஞானமும் பொருந்தி இருப்பவர்களின் அருகில் இருக்கும் போது நம்மை நாம் மேலும் செம்மைப்படுத்த உதவுகிறது. நன்றி நண்பர்களே..