தி.ஜா அல்லது தி.ஜா.ரா எனப்படும் தி.ஜானகிராமன் 1921-இல் பிறந்தவர் , பிறந்தது பழைய தஞ்சை மாவட்ட தேவங்குடி.தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.சுமார் 10 நாவல்கள் பல சிறுகதை தொகுப்புகள் மேடை நாடகங்கள் பயண நூல்கள் என ஒரு வட்டம். இதற்கு மேலும் அவர் படைப்புகளை பற்றி அறிமுகபடுத்துமளவிற்கு எனக்கு படிப்பில்லை.
பயண நூல்களை தவிர்த்து மிகப்பெரும்பாலான கதைகள்,தமிழ்நாட்டு காவிரிக்கரை (உலராத காவிரி),பிராமண சமூகம்,ஒரு 'புருவம் உயர்த்தும்' உறவு முறை என சுற்றி வருபவை.ஆனால் இங்கே நான் சொல்லபோவது அவரின் எழுத்து நடை.
நான் படித்த புனைக்கதைகள் , நான் ரசித்த கதைகள் பல மிச்சங்களை விட்டு செல்லும். சில சமயம் பிரமிப்புக்களை (விஷ்ணுபுரம் போல) , சில சமயம் ஆச்சர்யங்களை, திகைப்பை (ஜீரோ டிகிரி போல) சில சமயங்கள் சில படிப்பினைகளை (வெகு சில பாலகுமாரன் நாவல்கள் போல),பரவசத்தை (சில சுஜாதா நாவல் / கட்டுரை போல) ஆனால் தி.ஜா.வை படிக்கும்போது வருவது ஆசுவாசம்,இதுதான் சரியான சொல் என்று நினைக்கிறேன், மூச்சு திணறி தண்ணீரில் எழுந்தால் வரும் ஆசுவாசம் போல.
தி.ஜாவின் கதைகளை படிக்கும்போது நீங்கள் தமிழை நேசித்தால்,பேரரசு படங்களை ரசிக்காதவராக இருந்தால்,அநாவசிய political correctness பார்க்காதவராக இருந்தால் உங்களுக்கு நிச்சயம் இவர் காட்டும் வாழ்க்கை பிடிக்கும்.
தி.ஜாவின் கதைகளை படிக்கும்போது நீங்கள் தமிழை நேசித்தால்,பேரரசு படங்களை ரசிக்காதவராக இருந்தால்,அநாவசிய political correctness பார்க்காதவராக இருந்தால் உங்களுக்கு நிச்சயம் இவர் காட்டும் வாழ்க்கை பிடிக்கும்.
இவரின் எழுத்து நடையை ஒரு வார்த்தையை வைத்து சொல்வதாக இருந்தால்,இவர் மொழியிலேயே சொல்லலாம் "நறுவிசு", நாம் அன்றாட வாழ்க்கையில் பார்க்கும் மிக மிக எளிய விஷயங்களையே கூர்ந்து கவனிக்கும் அழகுனர்ச்சியே இவரது பெரும் பலம். வீடுகளை,மனிதர்களை, உடைகளை, உணவுகளை, உறவுகளை, மரங்களை, செடிகளை, வீதிகளை, காலங்களை, வானை, பூமியை ,வாசனையை , பெண்ணை, ஆணை, குழந்தையை , குழந்தைதனத்தை, பணத்தை, பாரம்பரியத்தை, ரயிலை, பூவை, காயை ,கனியை, பசுமையை, வளமையை, மேட்டிமைதனத்தை, பக்தியை, மேன்மையை, பாலுணர்ச்சியை, கை கால் போன்ற உடல் உறுப்புக்களை, பெண்மையை , ஆண்மையை இவர் விவரிக்கும் விதமே இவரது பலம். கார்மே (Gourmet) என்று சொல்லலாமா? இல்லை sensualist என்று சொல்லலாம்!
ஒரு உதாரணம் பாருங்களேன், அவர் ஒரு தஞ்சை கிராமத்தின் ஒரு வசதியான வீட்டை விவரிக்கிறார்,
"வீட்டில் ஒரு குளிர்ச்சி. வெளியே வெள்ளையாய் காய்கறி வெயிலின் வெப்பமே படாத ஒரு குளிர்ச்சி. வழவழவென்று கூடம் தாவாரம் எல்லாம் சிவப்பு சிமிண்டு. கூடத்தையும், தாழ்வாரத்தையும் பிரிக்கிற கூடத்தில் நான்கு தேக்கு தூண்கள். கூடத்துக்கு மேல் ஓட்டு போட்டு இருந்தது. மாடி.அங்கு அறைகள் இருப்பது போலிருந்தது. இடைகழி நிலைக்கு இந்த பக்கம் மாடிப்படி. மாடியும் பிறகு சார்ப்பும் இருந்ததால் முற்றம் அகலமின்றி குறுகியிருந்தது. முற்றத்திற்கு மேலே கம்பி கம்பிகிராதி. முற்றத்தின் ஓரத்தில் ஒரு ஜாதிக்கொடி கிளம்பி மேலே கம்பிமீது படர்ந்திருந்தது.முற்றத்தில் ஒரு ஓரமாக சுவரை ஒட்டி ஒரு உயரத்தில் புதைத்த சந்தனக்கல்.கிளி கொஞ்சுகிற வீடு-புதிதாக கட்டினாற்போல ஒரு நறுவிசு. வர்ணம் அடித்த ஜன்னல்கள்.கிணற்றுக்கு பக்கத்தில் சுவரோரமாக மல்லிகை செடி நாலு - துளசி செடி - திருநீர்றுபச்சை எல்லாம் ஒரு குட்டை சிமென்ட் சுவருகுள்ளாக நிரப்பியிருந்த மண்ணில் வளர்ந்திருந்தன. இடது பக்கம் வாழைத்தோட்டம்- நிலைக்கு நேராக நடைபாதை - பாதையில் நடந்தால் - நலிந்து வாழைகள் தார் போட்டு அறுக்க காத்திருந்தன - பாதை ஒரு வாய்க்காலில் போய் முடிந்தது - வாய்க்காலில் தண்ணீரின் மந்த ஓட்டம்-அப்பால் பெரிய தோட்டம் வாழை , எலுமிச்சை, கொய்யா , துரிஞ்சிகள் தோட்டம் முழுவதும் கொத்தி போட்டிருந்தது.மதமதவென்று மரங்களுக்கெல்லாம் ஒரு வளர்த்தி. ஒரே நிழல்."
இது போன்ற வீட்டில் நான் இருந்ததில்லை, இனிமேல் இருக்க போவதும் இல்லை, இது போன்ற ஒரு வீடு 2011-இல் தமிழ்நாட்டில் எங்காவது இருக்குமா என்பதே சந்தேகம்தான்.
ஒரு பெண் பாத்திரத்தை அறிமுகபடுத்தும்போது இப்படி விவரிக்கிறார்,"உனக்கு நான் சளைத்தவளா என்று ஒரு எடுப்பு. செதுக்கின முகம். காலையும், கையையும் , விரல்களையும் நாள் முழுதும் பார்த்து கொண்டிருக்க வேண்டும். நறுக்கின மூக்கு நுனி. இந்த சமையல் அறைக்குப் பிறக்காதது போன்ற ஒரு பெருமித பார்வை, நடை. ஆனால் அவள் சமைக்கும்போது பார்த்துக்கொண்டே இருக்க தோணும். அவள் சமையலின் மனத்தையும் ருசியையும் நுகர்கிறபோது எனக்கு இதுவும் வரும், உங்களையெல்லாம் விட நன்றாக வரும் என்று சொல்வது போலிருக்கும். இவளை பார்த்தால் இருபது வயது போல, முப்பது வயதுபோல - நாற்பது வயது போல - ஐம்பது வயது போல - பத்து வயது போல - எல்லா வயதும் தெரிகிற தோற்றம்.
ஒரு பெண்ணை பார்த்து இருபது வயது போல , முப்பது வயது போல நாற்பது வயது போல என்று எப்படி சொல்ல தோணும , அப்படி சொல்லி மீண்டும் பத்து வயது போல என்று சொல்ல தோணுமா ? இப்படி விவரிக்க எந்த விதமான கற்பனை வேண்டும் ? எழுதும்போது யாரை நினைத்து எழுதி இருப்பார்?
இவர் கதைகளில் நான் ரசித்து படிக்கும் இன்னொரு விஷயம், இவர் மத்தியானங்களை , இளமாலைகளை விவரிக்கும் பாங்கு,
பெரும்பாலும் படைப்பாளிகள் மதியங்களை விட்டு விடுவார்கள் நேரா போய் ரைட்ல திரும்பின மாலைதான், மாலை நேரத்து மயக்கம்தான், அப்புறம் ஒரு லெப்ட் திரும்பினா இரவும் அதன் மர்மங்களும். ஆனால் தி.ஜா முற்பகலையும் , பிற்பகலையும் அப்போது மனித மனம் கொள்ளும் அமைதியையும் வெகு லாவகமாக படம் பிடிப்பார். ஒரு விடுமுறை நாளின் தூங்கி எழுந்த பிற்பகல் (ஒரு 3 மணியை எடுத்துக்கொள்ளுங்கள்) எப்படி இருக்கும்?அப்போது மனதிற்குகந்த துணையின் பேச்சும், காப்பியும் பேச்சின் ஊடாக இருக்கும் காதலும், ஒரு நிம்மதியும் , நிறைவும் ..தி.ஜாவின் உலகில் நுழைந்து விட்டீர்கள்.
ஒன்று ,இவர் வாழ்ந்த காலகட்டம் , சுதந்திரம் வாங்கி முதல் இருபது ஆண்டுகளே இவரது காலம், கதைக்களனும் அப்போதுதான். இன்றைய உலகமயமாக்கம் உச்சத்தில் இருக்கும் காலத்தில், இவரது நாவல்கள் வாசகருக்கு
இரண்டாவது,இவர் எழுத்தை தன் தொழிலாக வைத்துக்கொள்ளவில்லை ,அதனால் பாலகுமரானுக்கு வந்த வணிக நெருக்கடிகள் இவருக்கு இல்லை.அதனால் அதீத உணர்சிகள் சொல்ல தேவையில்லை, டமார் என்று காலில் விழ வேண்டாம், காமத்தையும் வஞ்சத்தையும் பிசைந்து சொல்ல வேண்டாம் , ரஜினி படம் போல 'Rise and Rise of Hero' கதை சொல்ல தேவையில்லை.
தி.ஜா கதையை போலவே நடுவில் ஆரம்பித்து நடுவில் முடிக்கிறேன். இன்னும் தோன்றினால் பார்ப்போம்.