Thursday, 12 March 2009

ஜெயா டிவி - திரும்பி பார்க்கிறேன்

ஜெயா டிவியில் தினமும் இரவு பத்து மணிக்கு திரும்பி பார்க்கிறேன் என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் தற்போது சோ ராமசாமி அவர்கள் பங்கு பெறுகிறார். சோவின் பால்ய காலம், அவர் பயின்ற பள்ளி/கல்லூரி, அவரது நாடக அனுபவங்கள், அரசியலில் அவர் சந்தித்தவர்கள்/அவர்களுடன் நடந்த சுவையான சம்பவங்கள் என்று தனக்கே உரிய நகைச்சுவையான முறையில் சோ இவற்றை விவரிக்கிறார். நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி.

HDFC வங்கியில் ஒரு மணி நேரம்..

டிடி எனப்படும் டிமாண்ட் ட்ராப்ட் வாங்க ஒரு மணி நேரம் நீங்கள் வங்கியில் இருந்தால் உங்களுக்கு நேரும் அனுபவங்கள்:

1.பேனா கேட்டு குறைந்தது ஐந்து பேராவது உங்களிடம் வருவார்கள்.

2.SB Application Form அல்லது Credit card form நிரப்பித் தர சொல்லி குறைந்தது இரண்டு பேர் உங்களிடம் வருவார்கள்.

3.நீங்கள் டிடி ரிக்வெஸ்ட் கொடுத்த வங்கி பணியாளர் உங்களை கடந்து செல்லும் போதெல்லாம் "சார் சிஸ்டம் ரொம்ப மெதுவா வொர்க் பண்ணுது. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க" என்பார்.(இப்போதெல்லாம் ரயில்வே புக்கிங் ஆபீஸ், பாஸ்போர்ட் ஆபீஸ் என்று கணினி உள்ள எல்லா அலுவலகங்களிலும் இதை சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அது என்ன இத்து போன சிஸ்டம் என்பது கடவுளுக்கே வெளிச்சம்)

4.Mutual Fund பற்றி உங்களுக்கு விளக்க வங்கி தன் பணியாளர் ஒருவரை அனுப்பும்.

5.1955 ஆம் ஆண்டில் வங்கிகள் எப்படி சுறுசுறுப்பாக பணி புரிந்தன என்று ஒரு வயதானவர் உங்களுக்கு பக்கத்து இருக்கையில் இருந்தபடி ஊருக்கே கேட்குமாறு சொல்வார்.மொத்த வங்கியும் உங்களை திரும்பி பார்க்கும்.

இதையெல்லாம் தாண்டி ஒரு வழியாக உங்கள் வேலையை முடித்து கொண்டு வந்தால் வங்கியின் வாசலில் உள்ள விளம்பர பலகையில் ஒரு அழகான பெண் "இது e-age banking. வங்கிக்கு நேரா போறதெல்லாம் அந்த காலம்" என்ற வாசகங்களை உதிர்த்தபடி நிற்பார்.

Tuesday, 10 March 2009

மீண்டும் சதி லீலாவதி

இன்று காலை காரில் கமல் மற்றும் சித்ரா சதி லீலாவதி படத்தில் பாடிய மாருகோ மாருகோ மாருகயி பாடலை கேட்டபடி வந்தேன். கமலுக்கு ஒரு பாடகராக 10/10 மதிப்பெண் கொடுப்பேன் என்று s.ஜானகி ஒரு முறை கூறினார். அது ஏன் என்று இந்த பாடலை கேட்டபோது புரிந்தது. இந்த பாடலின் ஆரம்பத்தில் கமல் செய்யும் குட்டி ராக ஆலாபனைகள் ஒரு அளவுக்கு கர்நாடக சங்கீதம் தெரிந்தவருக்கே கைவரும்.

சித்ரா கோவை சரளாவுக்கு ஏற்ற ஒரு பின்னணி குரலில் பாடியிருப்பார். இந்த பாட்டின் இன்னொரு விசேஷம் என்னவென்றால் கமலின் மற்ற திரைப்படங்களின் பாடல் வரிகள் தான் இதில் உள்ளன. அதை இன்று தான் கவனித்தேன்.

இந்த பாடல் அமைந்துள்ள ராகம் கானடா."அலைபாயுதே கண்ணா" என்ற பிரபல கர்நாடக பாடல் இந்த ராகத்தில் உள்ளது.