கோடை விடுமுறை பற்றி சில பதிவுகளை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. உடனே, தெனாலி கமல் மாதிரி மனதிற்குள்ளேயே வளையம் சுற்றி நினைவுகள் கொஞ்சம் பின்னோக்கி நகர்ந்து எனது பள்ளி நாட்களுக்கு சென்றது. பெரும்பாலும் கோடை விடுமுறைக்கு நான் தஞ்சைக்கு சென்று விடுவேன். அங்கு தான் என் பாட்டி(அப்பாவின் அம்மா) இருந்தார். என் தந்தையுடன் பிறந்தவர்கள் எட்டு பேர் என்பதால் பெரியப்பா/சித்தப்பா பிள்ளைகள் என்று குறைந்தது ஒரு பத்து பேர் தஞ்சையில் ஆஜராகிவிடுவோம்.
எங்களை சென்னையிலிருந்து தஞ்சைக்கு அழைத்து செல்ல என் பாட்டியும் அத்தையும் சென்னைக்கு வருவார்கள். அப்போது, சென்னையிலிருந்து தஞ்சை செல்ல "சோழன் எக்ஸ்பிரஸ்" என்று ஒரு ரயில் உண்டு. இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை. காலை 9:00 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மாலை 5:30 மணிக்கு தஞ்சை போய் சேரும். அந்த காலத்தில் ரயில்களுக்கு எல்லாம் சம்பந்தப்பட்ட ஊர்காரர்கள் ஒரு செல்ல பெயர் வைத்திருப்பார்கள்.
உதாரணமாக சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு மாயவரம்,கும்பகோணம்,தஞ்சை வழியாக ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் என்று ஒரு ரயில் உண்டு. என் நினைவு சரி என்றால் அந்த வண்டி எண் 6701. இந்த வண்டிக்கு செல்லப்பெயர் "தனுஷ்கோடி boatmail". இந்த ரயிலை பற்றிய குறிப்பு தில்லான மோகனாம்பாள் கதையில் வரும்(சினிமாவில் அல்ல) என்று நினைக்கிறேன். கொத்தமங்கலம் சுப்பு அழகாக வர்ணித்திருப்பார். இந்த வண்டி நாலு மணிக்கு காலை தஞ்சை வரும் என்றும் அந்த நேரத்திலேயே தஞ்சை ஆனந்தா லாட்ஜில் சுடச்சுட இட்லி மிளகாய் பொடி நல்லெண்ணையோடு கிடைக்கும் என்று எழுதியிருப்பார்.அதே போல் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு ஒரு பாசெஞ்சர் ரயில் தஞ்சை வழியாக செல்லும். அந்த வண்டியை 110 என்பார்கள். ஏனென்றால் அந்த வண்டி எண் 6110. அதன் உண்மையான பெயர் என்னவென்றே தெரியாது. அதே போல், மேலே நான் சொன்ன சோழன் எக்ஸ்பிரஸ் வண்டிக்கு செல்லப்பெயர் "Day Express". பெயர் காரணம் ஏன் என்று சொல்ல தேவையில்லை.
பாட்டி ஒரு அடுக்கு நிறைய நல்லெண்ணையில் மிளகாய் பொடி போட்டு ஊற வாய்த்த இட்லியையும் அதே போல் இரண்டு அடுக்குகளில் ஒன்றில் புளிசாதமும், மற்றொன்றில் தயிர் சாதமும் எடுத்துக்கொண்டு தான் ரயில் ஏறுவார். புளிசாதத்திற்கு தொட்டுக்கொள்ள வடாம். தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மாங்காய் தொக்கு,மாவடு,புளிமிளகாய் என்று ரெண்டு மூன்று ஐட்டம் இருக்கும்.ரயிலில் விற்கும் எதையும் வாங்கக்கூடாது.சுகாதாரம் மண்ணாங்கட்டி எல்லாம் இல்லை.பாட்டியிடம் காசு இருக்காது.
ரயில் விழுப்புரம் வந்தவுடன் சோத்து மூட்டை திறக்கப்படும். என்ஜின் மாற்ற ரயில் அரை மணி அங்கு நிற்கும். அதற்குள் சாப்பிட்டு ஸ்டேஷனில் இறங்கி கை கழுவ வேண்டும். தண்ணி வேண்டும் என்றால் ஸ்டேஷனில் உள்ள குடிநீர் குழாய்க்கு சென்று பாட்டிலில் பிடித்து கொண்டு வர வேண்டும். இதை யார் செய்வது என்று ஒரு பெரும் போட்டி வரும். கூட வரும் கொஞ்சம் வயதில் பெரிய கசின் யாராவது எங்களை ரெண்டு தட்டு தட்டி உட்கார வைத்துவிட்டு இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வார்கள். ரயிலில் இருந்து இறங்கி ஏறுவதில் ஒரு குஜால்.
எங்கள் வீடு இருந்தது தஞ்சை மேல வீதியில். தெருவின் பெயர் காமாக்ஷி அம்மன் கோயில் அக்ரஹாரம். மொத்தமே இருபது வீடுகள் தான் இருக்கும். எல்லா வீட்டிலும் எங்களை போலவே விடுமுறைக்கு வரும் குழந்தைகள் உண்டு. இதை தவிர அங்கேயே இருக்கும் பிள்ளைகளும் உண்டு. மொத்தத்தில் ஒரு விளையாட்டு என்றால் நாற்பது முதல் ஐம்பத்து பிள்ளைகள் ஈடுபடுவார்கள். கண்ணாமூச்சி எல்லாம் விளையாட ஆரம்பித்தால் முடியவே முடியாது.
காலை ஏழு மணிக்கு எழுந்தவுடன் நல்ல திக்கான பாலில் காபி. ஏழரை அல்லது எட்டு மணிக்கு தெருவில் இருக்கும் மற்ற வாண்டுகளுடன் திண்ணையின் கொஞ்ச நேரம் அரட்டை கச்சேரி.ஒன்பது மணிக்கு குளியல்.பத்து மணிக்கு இரண்டு அல்லது மூன்று பொரியல், ஒரு கூட்டு, ஒரு கீரை, சாம்பார், ரசம், மோர் என்று ஒரு விருந்து சாப்பாடு. பத்தரை மணிக்கு மீண்டும் வாண்டுகள் விஜயம். அவர்களுடன் அப்படியே சீட்டாட ஆரம்பித்தால் ஒன்றரை மணி வரை போகும். மீண்டும் மதிய உணவாக தயிர் சாதம் ஊறுகாயுடன். இரண்டு மணிக்கு நாலு வீடு தள்ளி இருக்கும் வீட்டில் கேபிள் டிவியில் படம் போடுவார்கள். அதற்கு அனைத்து வாண்டுகளும் ஆஜர். மூன்றரை மணிக்கு தெருவில் வரும் ஐஸ் வண்டிக்காரனிடம் பதினைந்து காசுக்கு பால் ஐஸ். திரும்ப ஐந்து மணிக்கு வீட்டுக்கு வந்து கிணற்றடியில் குளியல். அப்படியே காலாற நடந்து பெரிய கோவிலுக்கு சென்று நந்தி மண்டபத்தில் உட்கார்ந்து காற்று வாங்கிவிட்டு வந்தால் வீட்டில் அடையோ, தோசையோ, சேவையோ, பச்சமாபொடி உப்புமாவோ செய்திருப்பார்கள். அதை ஒரு ரவுண்டு கட்டிவிட்டு ஏழரை மணிக்கு தூக்கம். எட்டரை மணி அந்த தெருவுக்கே நடுஜாமம். மீண்டும் காலை ஏழு மணி...என்ன சுகமான வாழ்கை? அனுபவிக்கும் போது தெரியவில்லை.
இப்படியே ஒரு மாசம் போகும். மீண்டும் செங்கோட்டை பாசஞ்சரில் சோத்து மூட்டை கட்டிக்கொண்டு சென்னை பயணம். ஒரு ஸ்டேஷன் விடாமல் எல்லா இடத்திலும் நிற்கும் செங்கோட்டை பாசஞ்சர். ஆறு மணிக்கு திட்டை, பண்டாரவாடை ஊர்களில் விற்கும் காய்கறிகளும், அதை விற்கும் பெண்களும், மாயவரம் ரயில் நிலையத்திற்கு வந்தவுடன் நாசியை துளைக்கும் அந்த பில்டர் காபி, தோசை, சாம்பார் வடை எல்லாம் கலந்த வாசம். அந்த நாளும் வந்திடாதோ?
Tuesday, 26 May 2009
Monday, 25 May 2009
இவன் பச்சைபுள்ளையா இருப்பான் போல இருக்கே?
படத்துல இருக்கறது தென் கொரியா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி. இவர் கடந்த சனிக்கிழமை தற்கொலை பண்ணிக்கிட்டார். எதுக்கு தெரியுமா? கேவலம் லஞ்ச ஊழல் வழக்குல சிக்கினதுக்காக. அவர் பேரு ரோ மூ ஹ்யுன்(Roh Moo Hyun). இத்தனைக்கும் அவர் குற்றவாளின்னு இன்னும் கோர்ட் முடிவு செய்யல. இருந்தாலும், நான் தப்பு செஞ்சது உண்மை தான் அப்படின்னு சொல்லி ஜனங்க கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு சொந்த ஊருக்கு போய் மலை மேலேந்து குதிச்சி தற்கொலை பண்ணிக்கிட்டார்.
சரி, எதோ Spectrum மாதிரி ஒரு 60,000 கோடி இல்ல மாட்டு தீவன ஊழல் மாதிரி ஒரு 1000 கோடி இல்ல வளர்ப்பு மகன் திருமணம் போல ஒரு ஊழல் இதெல்லாம் செஞ்சா தற்கொலை செஞ்சிக்கிறது நியாயம். இந்த பச்சைப்புள்ள பாவம் ஒரு 300 கோடி ஆட்டைய போட்டு இருக்கும் போல? அதுக்குள்ள சோலிய முடிச்சுட்டானுங்க.
தற்கொலைக்கு அப்படின்னு ஒரு மரியாதை இருக்கு இல்ல? இப்போ எங்க ஊர்ல இலங்கை தமிழருக்காக என் உயிரை இழப்பேன் அப்படின்னு கலைஞர் எவ்வளவு தடவை சொல்றாரு. செஞ்சாரா? ஆனா, ஜனங்க எப்படி ஓட்டுப்போட்டு 25 எம்.பி சீட் கொடுத்தாங்க. அது ராஜதந்திரம். என்ன இது சின்னப்புள்ள மாதிரி தற்கொலை அது இதுன்னு? மக்களை நம்பணும் அய்யா. ஓவரா பிரச்சனை ஆகும்னு தோணிச்சு அப்படின்னா, "ஐயோ கொல்றாங்களே" அப்படின்னு அலறணும். அங்கங்க ரெண்டு பேர தீக்குளிக்க வெக்கணும். இதெல்லாம் தெரியாதவன் என்னய்யா அரசியல்வாதி?
இவனுங்க மாதிரி ஆளையெல்லாம் வெச்சு என்ன அரசியல் நடத்துறானுங்க தென் கொரியால?
Subscribe to:
Posts (Atom)