Friday, 26 June 2009

ஞானிக்கு குட்டு


சில வாரங்களுக்கு முன்பு தனது ஒ பக்கங்களில் ஞானி கமல்ஹாசனுக்கு ஒரு குட்டு வைத்திருந்தார் , அதாவது "ஆங்கிலம் தெரிந்தவருக்கு மட்டுமே திரைக்கதை பயிற்சி வகுப்பு எடுத்ததற்காக" அந்த குட்டு.

முதலில் ஒரு வகுப்பை ஆங்கிலத்திலோ அல்லது வேறு மொழியிலோ எடுப்பது , அந்த ஆசிரியரின் உரிமை.அதற்காக ஆங்கில ஆசிரியர்களுக்கோ அல்லது English medium நடத்தும் பள்ளிகளுக்கோ குட்டு வைக்க முடியாது.

இரண்டாவதாக , அந்த பயிற்சி வகுப்பை நடத்த வந்தவர்கள் யாரென பார்த்தால்...

அஞ்சும் ராஜ்பாலி
அதுல் திவாரி
கே.ஹரிஹரன்

இவர்கள் புனே திரைப்பட கல்லூரியில் (film institute), National School of Drama போன்ற இடங்களில் ஆசிரியர்களாக இருப்பவர்.

இவர்கள் அனைவரும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள், இவர்களுக்கு தமிழ் தெரியாது. இவர்களை ஏன் அழைக்க வேண்டும், தமிழ் தெரிந்த தமிழ்நாட்டை சேர்ந்த திரைக்கதை ஆசிரியர்கள் யாரையாவது அழைத்து இந்த workshop-ஐ நடத்தலாம் என்று கேட்கலாம், அது அதை நடத்துபவர் தீர்மானிக்க வேண்டியது, ஒரு மருத்துவ துறை மாநாட்டையோ, அல்லது கட்டிடக்கலை மாநாட்டையோ யாரும் தமிழில் ஏன் நடத்தவில்லை என்று கேட்க மாட்டர்கள், திரைப்படத்தை ஒரு தொழிலாக பார்க்க தவறியதால் தரும் குட்டு இது. இதை மாற்றத்தான் கமல் முயற்சிக்கிறார் , இதிலும் ஒரு தொழில் திறமை இருக்கிறது, தொழில் முறை இருக்கிறது என்று கூற முயற்சிக்கிறார்.

மேலும் , வெளி மாநிலங்களில் திறமையே இல்லை, அங்கே இருந்து கற்க எதுவுமே இல்லை என நம்மை நாமே ஏமாற்றி கொண்டால், தமிழில் இருந்தே ஆட்களை கூப்பிடலாம்.அதைத்தான் ஞானி விரும்புகிறாரா?

வேண்டுமானால் இந்த திரைக்கதை பயிற்சி வகுப்பை தமிழிலும் எடுக்கலாம் என்று கமலுக்கு யோசனை கூறலாம் அவ்வளவுதான்.

தமிழ் சமுதாயத்திற்கு ஞானி அவர்கள் செய்து வரும் சேவை மகத்தானது , ஆனால் யானைக்கும் அடி சறுக்குமல்லவா?

Thursday, 25 June 2009

எஸ்.வீ. சேகருக்கு ஒரு எச்சரிக்கை.

நடிகர் எஸ்.வீ.சேகர் கொஞ்ச நாளாவே ரொம்ப தைரியமா இருக்காரு, அம்மாவை நல்ல முறைச்சிக்கிட்டு தாத்தாவை நம்பிட்டு இருக்காரு , நல்லதுக்கான்னு தெரியல்லை. இப்போ ஒரு A.D.M.K M.L.A தன் பக்கம் இருப்பதில் தாத்தா சும்மா இருக்கட்டும் என்று வெச்சிகிட்டு இருக்கார் , ஆனால் எஸ்.வீ.சேகர் ரொம்ப தாத்தாவை ரொம்ப நம்ப கூடாது, தாத்தாவுக்கு எப்புவுமே பிரமணர்களை கண்டால் ஆகாது , 2011-தப்பி தவறி அம்மா ஆட்சிக்கு வந்தாங்க .. டின்னுதான், தாத்தாவும் கண்டுக்க மாட்டாரு , அப்புறம் ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிந்தாமணிதான்.

கான்பூர் ஜீன்ஸ்

சில நாட்களுக்கு முன்பு , கான்பூர் நகரில் உள்ள பெண்கள் கல்லூரிகளில் ஜீன்ஸ் அணிய தடை விதித்தது கான்பூர் பலகலை கழகம்.இப்போது உத்திரபிரதேச அரசு அந்த தடையை ரத்து செய்து உத்திரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அதை விட மோசமான தடைகளை தமிழ்நாடு அண்ணா பல்கலை கழகம் பின்பற்றுகின்றது , அதை தமிழக அரசும் ஆமோதித்துள்ளது.

பின்தங்கிய உத்திரபிரதேசத்தில் உள்ள ஒரு மன நிலை கூட 'முன்னேறிய' தமிழ்நாட்டில் இல்லை, ஒரு கலாசார தலிபான்கள் நிறைந்த பிரதேசத்தில் வாழும் உணர்வு வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு Dark color T-shirt அணிந்ததாக ஒரு வட இந்திய மாணவனை சத்யபாமா கல்லூரி சஸ்பெண்ட் செய்தது, அதனை எதிர்த்து அந்த மாணவனின் தந்தை அந்த கல்லூரியில் இருந்தே டி.சி வாங்கி கர்நாடகாவில் உள்ள வேறு ஒரு கல்லூரியில் சேர்த்து விட்டார்.

ஆனால் தமிழக அப்பாக்களும் , மகன்களும் மிகவும் ஒழுக்கமானவர்கள் , நமக்கேன் வம்பு என்று இருப்பவர்கள் (மகள்களையும் அம்மாவையும் பற்றி கேட்பானேன்) படிப்புதான் முக்கியம் என்று இருப்பவர்கள் , நியாயவான்கள் , எனவே எந்தவித dress code கொடுத்தாலும் அதை கடைப்பிடிப்பவர்கள். நாளைக்கே பெண்கள் சேலையும் ,ஆண்கள் முழுக்கை சட்டை மட்டுமே அணிந்து வரவேண்டும் என்றாலும் அதனையும் செய்வார்கள். Globalization மற்றும் IT வேலை வாய்ப்பு வந்து இந்த மந்தை தனத்திற்கு ஆமாம் சாமி போட வைத்திருக்கிறது மக்களை.

தமிழக கல்லூரிகளில் மிகக்கேவலமான மனித உரிமை மீறல்கள் நடக்கின்றது, கல்லூரி அளவில் பெண்களும் ஆண்களும் பேசக்கூடாது என்ற விதியும், மீறினால் அபராதமும் இருக்கும் அவலமும் இருக்கின்றது.இந்த கேவலங்கள் எல்லாம் நல்லது என்று சொல்ல பழமை கூட்டமும், அதனை ஆதரிக்க கலாசார தலிபான்கள் நிறைந்த குண்டர் படைகளும் முழு அளவில் இருக்கின்றது.

முற்போக்கு, திராவிட, தேசிய கட்சிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.கெட்ட கேட்டிற்கு பெரியார் வழி வந்த திராவிட கட்சிகள் வேறு.சில நாட்கள் முன்பு 'கல்வித்தந்தை' ஜேப்பியாரை மாணவர் அடித்து விரட்டியது இம்மாதிரி extreme disciplinary actions என்பதால்தான்.கல்லூரி அரசியல் ரவுடிகளிடம் இருப்பதால் , படிக்காத முட்டாள்களாகிய அந்த சமுதாய பெரிய மனிதர்கள் கல்லூரியின் தரத்தை ஆண் பெண் உறவில் மட்டுமே பார்க்க முடிகிறது.

மாணவ மாணவியரின் ஒழுக்கத்தை பேணுவது அரசியல் ரவுடிகள், இந்த முரண்பாட்டை எந்த பத்திரிகைகளும் கேட்காது, ஆக , பத்திரிக்கைகள் , அரசு, பெற்றோர், அரசியல் ரவுடிகள் என்று எல்லா தரப்பும் ஆண் பெண் உறவில் , உடையில் , ஒரே நிலைப்பாடு கொண்டு இருப்பதை காணலாம்.

இது ஒன்றும் வித்தியாசமான விஷயமில்லை, சவுதி அரேபியாவிலும் இதை பார்க்கலாம், ஆனால் வித்தியாசம் என்னவென்றால் இங்கே இதை ஜனநாயகம் என்ற பெயரில் செய்கிறார்கள். மேலும் சினிமா என்ற ஆபாச களஞ்சியத்தையும், interner-இல் வரும் pornography-களையும் இந்த கலாசார தலிபான்கள் கண்களுக்கு தெரியவே தெரியாது. சரி இண்டேரநெட்டாவது ஒரு பொட்டிக்குள் இருப்பதால் இந்த கலாச்சார போலீஸ் கண்களுக்கு தெரியாமல் போய்விட்டதாக வைத்துக்கொண்டாலும், மிக ஆபாசமான தமிழ் சினிமாவை இவர்கள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டு , அதை இருட்டறையில் ரகசியமாக பார்க்கிறார்கள்.

ஆக இருட்டறையில் , மற்ற மாநிலக்கரர்கள் ஆபாசமாக ஆடுவதை பார்க்கலாம், ஆனால் தமிழக கல்லூரிகளில் Jeans போன்ற உடைகளுக்கு கூட அனுமதி இல்லை.இப்படி

கலாச்சார தலிபான்கள் மிரட்டி நடத்தும் கல்லூரிகள் ,
ஏன் என்று கேட்க ஆளில்லாமல் இருக்கும் அரசு கல்லூரிகள்,
ஆளை வெட்டி போடும் ரவுடி கல்லூரிகள்

(மிகுந்த புத்திசாலிகள் படிக்கும் கல்லூரிகளை விட்டு விடுவோம்!)

இவைதான் தமிழக கல்லூரிகளின் வகைகள்.கல்லூரி முடிந்தும் ஒருவன் பள்ளி மாணவனாகத்தான் வெளியே வருகின்றான்,வருகின்றாள் மன முதிர்ச்சி இல்லை, தெளிவு இல்லை, ஏதோ சம்பாதிக்க கற்று கொடுக்கும் ஒரு இயந்திர சாலையாகத்தான் கல்லூரிகள் இருக்கின்றன.

Tuesday, 23 June 2009

மீசை

ஜெயமோகனின் மீசை பதிவை படித்த பாதிப்பில் உருவான பதிவு இது. இந்த குளம்பியகம் வலைப்பூவை ஆரம்பிக்கும் போது நானும் கோகுலும் சொந்த விஷயங்களை பற்றி எழுதுவதில்லை என்று ஒரு சங்கல்பம் செய்துகொண்டோம். இந்த பதிவு அதற்கு விதிவிலக்கு.

ஜெயன் அவர்களின் பதிவு மீசை வைப்பது/எடுப்பதை பற்றி. என் பதிவு மீசை வளராத காலத்தில் சந்தித்த அவமானங்களையும் அதன் பின் வளர்த்த மீசையையும் பற்றியது. இறுதி வருடம் கல்லூரி முடிக்கும் வரை எனக்கு மீசை வளரவில்லை. ஏற்கனவே பள்ளியில் மீசை இல்லாத காரணத்தால் பல காமெடிகளுக்கு ஆளானேன். சின்னப்பையன் என்று ஒதுக்கப்பட்டு எடுபிடி வேலைகளுக்கு மட்டுமே அழைக்கப்பட்டேன். நான் சொல்லும் பள்ளிப்பருவம் பிளஸ் ஒன் & பிளஸ் டூ.

இங்கே எடுபிடி வேலை என்பது நல்ல மீசை வளர்ந்த என் வகுப்பு மாணவன் என் வகுப்பை சேர்ந்த மாணவியை பள்ளி முடிந்து தள்ளிக்கொண்டு போகும் போது நான் அவன் வண்டியை தள்ளிக்கொண்டு வரவேண்டும். யாராவது மாணவியிடம் தங்கள் காதலை(காதல் என்ன கருமம் எல்லாம் ஒரு infatuation தான்) தெரிவிக்க வேண்டும் என்றால் நான் தான் தூது. அந்த பெண் கர்ம சிரத்தையாக பிரின்சிபாலிடம் போய் சொல்ல என்னை பின்னி எடுப்பார்கள். அந்த காவிய காதலுக்கு தூது போகவில்லை என்றாலும் உதைப்பார்கள். இது போதாதென்று வகுப்பில் உள்ள மாணவிகளிடம் யாராவது மாணவன் வீரம் காட்டவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் அவர்களுக்கு நான் தான் "கைப்புள்ள". உயரம் வேறு கம்மியாக இருந்ததால் நாலு பிரிவில் இருந்த மாணவர்களும் ரவுண்டு கட்டினார்கள். என்ன ஒரு நல்ல விஷயம் என்றால் என்னை மாதிரி இன்னும் இரண்டு பேர் இருந்தார்கள். பெண்கள் எங்களை ஏறெடுத்து கூட பார்க்க மாட்டார்கள் என்று சொல்லவே தேவையில்லை.

இப்படியாக பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டு ஒரு வழியாக கல்லூரியில் போய் சேர்ந்தேன். இங்கேயும் கைப்புள்ள தான் ஆனால் பள்ளி அளவுக்கு மோசமில்லை. இருந்தாலும் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது "மீசை இல்லாதவன் ஆம்பளையே இல்லை" என்று என்னை பார்த்து கூறப்பட்டது. இதற்கு நடுவில் என் மீசை வளர்ப்பு முயற்சிகளை சொல்லியாக வேண்டும். கரடி ரத்தம் தடவினால் வளரும் என்று ஒருவர் சொன்னார். கரடிக்கு எங்கே போவது என்று அதை மட்டும் தான் முயற்சிக்கவில்லை. மற்றபடி அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கு மேல் கொஞ்சம் பிளேடு பட்டாலும் ரத்தம் கொட்டுமோ என்கிற அளவுக்கு சவரம் செய்தேன். தலைக்கு தடவும் எண்ணையை உதட்டின் மேல் போட்டுப்பார்த்தேன். ம்ஹூம்..ஒரு மாற்றமும் இல்லை.இதற்கிடையில் மீசையில் சீப்பை உபயோகிப்பவர்கள், Handlebar mustache எனப்படும் வளைந்த மீசை வைத்திருப்பவர்கள், கையால் மீசையை நீவி விடுபவர்கள்,இவர்களை எல்லாம் பார்த்தால் கொலைவெறி ஏற்பட்டது.

மலையாளத்தில் மம்மூட்டி நடித்த "தனியாவர்த்தனம்" என்று ஒரு படம் உண்டு. அதில் அவர் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு கட்டாயம் பைத்தியம் பிடிக்கும். மம்மூட்டி அவர்களின் சந்ததியில் அவருக்கு தான் வரும் என்று சொல்லியே அவருக்கு பைத்தியம் பிடிக்க வைத்துவிடுவார்கள் ஊர்காரர்கள். அந்த மாதிரி உனக்கு மீசை வளராது என்று தொடர்ந்து சொல்லப்பட்டதால் நானும் அதை நம்ப தொடங்கினேன். அதன் காரணமாக கல்லூரி முடித்து வேலைக்கு சென்ற பின் கூட மீசை வளர்ப்பதை பற்றி யோசிக்கவே இல்லை.ஆனால், ஆணாய் பிறந்த ஒவ்வொருவரும் ஆணினத்தின் அடையாளம் என்று பெருமையுடன் சொல்கிற ஒரு விஷயம் நம் வாழ்க்கையில் கிடையவே கிடையாதோ என்கிற கவலை மட்டும் இருந்தது. அதை விட மேலாக, திருமணம் முடித்தவுடன் மனைவி "ஏங்க, மீசை வைங்களேன். உங்களுக்கு மீசை வெச்சா எப்படி இருக்குன்னு பாக்கலாம்" என்று சொல்லக்கூடாதே என்கிற யோசனை ஒரு பக்கம். மீசை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்குமா என்று ஒரு எக்ஸ்ட்ரா பிட்டிங் கவலை வேறு சேர்ந்து கொண்டது.

ஒரு வழியாக திருமணம் நடந்து முடிந்தது. எதிர்பார்த்த மாதிரியே சில நாட்களுக்கு பின் என் மனைவி மீசை வைங்களேன் என்றார். "என் முகத்துக்கு மீசை செட் ஆகாது மா. இப்படி இருந்தா தான் ஹிந்தி பட ஹீரோ மாதிரி இருக்கேன்னு எல்லாரும் சொல்றாங்க" என்று சமாளித்தேன்.ஆனால் மனதிற்குள், "எவ்வளவு நாளைக்கு தான் சின்னத்தம்பி கவுண்டமணி மாதிரி இப்படி சமாளிப்பது.". எவ்வளவு செலவானாலும் சரி, எப்படியாவது மீசை வளரும் உபாயங்களை சீக்கிரம் தெரிந்து கொண்டு ஒரு கடா மீசை வளர்க்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். இதற்கிடையே ஒரு வருடம் லண்டன் செல்ல நேர்ந்தது.

லண்டனில் என்னுடன் இருந்த இரண்டு நண்பர்கள் மீண்டும் மீசை வளர்க்கும் ஆசைக்கு தூபம் போட என் இருபது ஆண்டு கால ஆசை மீண்டும் உயிர் பெற்றது. நான்கு மாதம் சவரம் செய்யாமல் விட வாயை மறைக்கும் அளவுக்கு மீசை வளர்ந்தது. முதல் முறை மூக்குக்கு கீழே அத்தனை ரோமங்களை பார்த்த போது நான் அடைந்த இன்பத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை.எனக்கு மீசை வளராது என்று சொன்ன ஒவ்வொரு நண்பனுக்கும் என் முகத்தை படம்பிடித்து அனுப்பி வைத்தேன்.

மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு மீசை வளர்த்தது ஒரு இமாலய சாதனை தான்.ஆனால், இருபது வருடங்கள் இல்லையே இல்லையே என்று ஆதங்கப்பட்டு வளர்த்த மீசையை என் மகள் வேண்டாம் என்று கூறியதால் எடுத்துவிட்டேன்.

Monday, 22 June 2009

ஒரு கிராம் தங்கம் வேணுமா?

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டப்பட்டால் ஒரு கிராம் தங்க மோதிரம் பரிசு - முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மேயர் சுப்ரமணியம் அறிவிப்பு.

இது என்ன ஸ்டண்ட் என்று புரியவில்லை. உயிர் போய்விடுமோ என்று பயந்து அரசு மருத்துவமனைகளுக்கு வராத மக்களை ஈர்க்க இப்படி ஒரு கவர்ச்சி திட்டமா? இல்லை ஒருவேளை தமிழ்நாட்டில் மக்கள்தொகை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று நினைத்து அதை அதிகரிக்க முயற்சிக்கிறாரா மேயர்? இந்த மாதிரி அறிவிப்பை எல்லாம் நம்மூரில் செய்வது பெரிய ஆபத்து. எட்டு கிராம் சேர்த்தால் ஒரு பவுன் ஆகிவிடும் என்று எட்டு குழந்தைகள் பெற்று கொள்கிற கிங்கரன்கள் வாழும் தேசம் இது. வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு.

சரி, மேலே சொன்ன பிரச்சனை ஒரு பக்கம். எது தமிழ் பெயர் என்பதிலேயே குழப்பம் இருக்கிறதே? உதாரணமாக, ஸ்டாலின் என்பது தமிழ் பெயரா? ஆனால், இந்த பெயர் வைக்கப்படும் குழந்தைக்கு ஒரு கிராம் தங்கம் கிடைக்கவில்லை என்றால் அது பகுத்தறிவு பகலவனை பகைத்துக்கொள்வது போல் ஆகாதா? மேலும், பகுத்தறிவின் பொருட்டு இந்து பண்டிகைகளை கொண்டாடாத ஆனால் ரம்ஜான் நோன்பில் கூழ் குடிக்கிற/கிறிஸ்துமஸ் கேக்கை அவர்களுடன் பகிர்ந்து உண்ணுகிற நம் முதல்வர் அந்த மதத்தை சேர்ந்த சகோதரர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் பெயர்கள் எப்படி தமிழில் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியும்? மைனாரிட்டி ஓட்டுக்களை பாதிக்கும் இப்படி ஒரு முடிவை எப்படி கழக தந்தை தவறவிட்டார்?

ராமதாஸ் தான் கூட்டணியை விட்டு போய்விட்டாரே? இன்னும் எதற்கு இந்த தமிழ் பித்து? அது சரி, ராமதாஸ் அடுத்த வருஷம் அவர் பிறந்த நாளைக்கு இந்த திட்டத்தை அமல்படுத்திவிட்டார் என்றால் "தமிழ் காவலர்" பட்டம் அவருக்கு போய்விடுமே.