சுவாமி சந்நிதியில் கூட்டம் அதிகமில்லை. இராமலிங்க அடிகளின் "பெற்ற தாய் தனை மக மறந்தாலும்" என்ற விருத்தத்தை(விருத்தத்தை இறுதியில் தந்திருக்கிறேன்) கேட்போர் கண்ணில் நீர் வர பாடிக்கொண்டிருந்தனர் ஒரு தம்பதி. சீர்காழி அவர்களின் குரல் போலவே இருந்தது. அவர்கள் முடிக்கும் வரை அந்த இடத்தை விட்டு நகரவே மனமில்லை. பூத வாகனம், திருவையாறு சப்தஸ்தான கண்ணாடி பல்லக்கு ஆகியவை பிரகாரத்தில் இருந்ததால் குழந்தைகளுக்கு காட்டினேன்.அப்படியே நடந்து அம்பாள் சந்நிதிக்கு சென்றோம். அங்கும் நல்ல தரிசனம்.
ஒரு மணி நேரம் கோவிலில் இருந்து விட்டு வெளியே வர பசி இம்சித்தது. சோற்றுக்கு பெயர் போன தஞ்சையில் ஒரு நல்ல மெஸ் கூட இல்லை. கோவிலுக்கு எதிர் தெருவில் இருந்த ஒரு பாடாவதி ஓட்டலில் உண்டோம். "திருவையாறு ஆண்டவர் அல்வா/அசோகா" கடை நினைவிற்கு வர, கொஞ்சம் அல்வாவும் காராசேவும் வாங்கிக்கொண்டு காரை சென்னைக்கு விரட்டினோம்.வழக்கம் போல் மதுராந்தகம் "கும்பகோணம் டிகிரி காபி" கடையில் ஒரு பில்டர் காபி. இவர்கள் வியாபார உத்தியை பார்த்து விட்டு இப்போது தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் ஐம்பதடிக்கு ஒரு "கும்பகோணம் டிகிரி காபி" முளைத்து விட்டது. எது அசல் என்று நமக்கே சந்தேகம் வருகிறது.
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமசிவாயத்தை நான் மறவேனே.