Thursday, 8 October 2009

நோபல் தமிழர்



நோபல் தமிழர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

Wednesday, 7 October 2009

www.buzzintown.com

பொதுவாக சென்னை / பெங்களூரில் இருக்கும் நம் மக்கள் வார இறுதியை எப்படி கழிக்கிறார்கள் என்று எனக்கு ஓரளவு தெரியும், இருப்பதில் சுமாரான தமிழ் படத்தை பார்ப்பது / தண்ணி அடித்து மட்டையாவது / பேங்க்/காஸ்/வண்டி/வீடு ரிப்பேர் என்று பொறுப்பானவர்களாக மாறுவது என்பது அதில் சில

சிலர் ஆங்கில / ஹிந்தி படங்களுக்கு செல்கின்றனர் .. ஆனால் எத்தனை பேர் போட்டோ கண்காட்சி , ஓவிய கண்காட்சி,உணவுத்திருவிழா,மாறுபட்ட இசை கச்சேரிகள் , திரைப்பட திருவிழாவிற்கெல்லாம் போகிறோம்? பெரும்பாலும் எங்கே என்ன நடக்கிறது என்பதே தெரியாது அல்லவா?

www.buzzintown.com- என்ற  தளம் அதற்கு உதவுகிறது, வார இறுதி என்று மட்டுமில்லாமல் வார நாட்களிலும் நகரில் (பல இந்தியா நகரங்களில்) நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை சொல்லுகிறது.இந்த வெப்சைட் உங்கள் பல பேருக்கு தெரிந்து இருக்கலாம் இது போல வேறு சில வெப்சைட்டுகளும் தெரிந்து இருக்கலாம் , மொத்தத்தில் உபயோகமான வலைத்தளம்.

Tuesday, 6 October 2009

நவீன கொள்ளையர்கள்

நீங்கள் சுஜாதாவின் "ஸ்ரீரங்கத்து தேவதைகள்" படித்திருக்கிறீர்களா? அதில் "திண்ணா" என்று ஒரு கதை வரும், நினைவிருக்கிறதா? அதில் சுஜாதா சொல்வார், "எனது மூதாதையர்களில் ஒருவரான குவளக்குடி சிங்கமையங்கார் ஏழை தென்கலை ஐயங்கார் பையன்களுக்கு உதவ ஒரு பாடசாலை நிறுவினார். அங்கு விஷிஷ்டாத்வைதம், புருஷ சுக்தம் போன்றவை சொல்லி தரப்பட்டன. இதெல்லாம் எப்படி அவர்களுக்கு உதவும் என்று அவர் நம்பினார் என்று தெரியவில்லை".

என்னை பொறுத்த வரை,குவளக்குடி சிங்கமையங்கார் போன்றவர்கள் வருங்காலத்தை யூகித்தே இதையெல்லாம் செய்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. எனக்கு ஐயங்கார் பாடசாலைகள் பற்றி அவ்வளவு பரிச்சயமில்லை. ஆனால் பொதுவாக பாடசாலைகள் பற்றி உண்டு. என் தஞ்சை வீட்டை பற்றி முன்பே ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன். நான் சிறுவனாக விடுமுறைக்கு அங்கு செல்லும் போது எதிர்வீட்டில் ஒரு பாடசாலை இருந்தது. இது ஏழை ஐயர் (Preferably Vadamal) பசங்களுக்கு என்று உருவாக்கப்பட்டது.பொதுவாக, இப்படி பாடசாலை நடத்துபவர்களுக்கு பல வழிகளில் நிதி உதவி கிடைக்கும்.இந்த பாடசாலைக்கு காஞ்சி மடம் நிதி உதவி செய்தது.

பிராமணர்களுக்கு வேத அத்த்யயணம் மிக முக்கியம். இந்த வேத அத்த்யயணம் என்பது சில ஆண்டுகள் ஒரு பாடசாலையில் தங்கி கற்க வேண்டிய ஒரு விஷயம். அந்த காலத்தில் பிராமணர்களுக்கு வேதம் ஓதுவதை தவிர வேறு தொழிலும் கிடையாது. அரசன் செத்தாலும் வேதம் ஓத வேண்டும், அவன் போரில் வென்றாலும் வேதம் ஓத வேண்டும், அவன் கிணறு வெட்டினாலும் வேதம் ஓத வேண்டும், அவன் யாகம் செய்தாலும் வேதம் ஓத வேண்டும் என்ற நிலை இருந்ததால் பிராமணர்கள் வேதம் ஓதுவதை தொழிலாக கொண்டார்கள். காலங்கள் மாற மாற, இந்த நிலை மாறியது.அரசர்களின் ஆட்சி முடிந்தது.அதற்கு பின்னால் வந்த வெள்ளையர்கள் ஆட்சியில் வேதம் தெரிந்தவர்கள் தேவைப்படவில்லை. வேறு தொழில் செய்தால் தான் "புவ்வா" கிடைக்கும் என்ற நிலை ஏற்பட, பிராமணர்கள் இந்த தொழிலில் இருந்து விலகத் தொடங்கினார்கள்.

மீண்டும் பாடசாலைக்கு வருவோம். எனக்கு தெரிந்த வரை பாடசாலை படிப்பு ஏழு ஆண்டுகள். இந்த ஏழு ஆண்டுகளில் பொதுவான விஷயங்கள் சொல்லித்தரப்படும். பொதுவான என்பது ரிக்/யஜுர்/சாம/அதர்வண வேதங்கள் போன்றவை. இதற்கு பின் அந்த மாணவர்கள் hands on செய்து திருமணம், ஸ்ரார்தம், உபநயனம் போன்றவற்றிற்கு தேவையான மந்திரங்களை கற்றுக் கொள்வார்கள். இந்த ஏழு ஆண்டுகள் படிப்பை சொல்லிக்கொடுக்க மாயவரம், கும்பகோணம் என்று பல ஊர்களில் பாடசாலைகள் உண்டு.

எப்படி, இரண்டு பெரிய மனிதர்கள் சந்தித்தால் "நீங்கள் எங்கு படித்தீர்கள், ஐ.ஐ.டியா? நானும் அங்கு தான். எந்த வருடம்?" என்று கேட்டுக் கொள்வார்களோ அதே போல இரண்டு சாஸ்திரிகள் சந்தித்தால் கேட்டுக்கொள்ளும் முதல் கேள்வி "எந்த பாடசாலைல படிச்சேள்? செம்பனார் கோயிலா? அது சந்திரசேகர கனபாடிகள் தான நடத்திண்டு இருந்தார்? நான் ஆங்கரை பாடசாலை. ஜாமாதா நடத்திண்டு இருந்தார். இப்போ முன்னே மாதிரி எல்லாம் இல்லை ஒய். நான் தான் பார்கறேனே.பசங்க மந்திர பிரயோகமே சரி இல்ல.போன வாரம் ஆங்கரை பாடசாலை பையன் ஒருத்தன் கல்யாணத்துல ஸ்ரார்த மந்திரம் சொல்லிண்டு இருந்தான். நமக்கேன் வம்புன்னு கண்டுக்காம விட்டுட்டேன்.கிருஷ்ணா கிருஷ்ணா" என்பார்கள்.

மீண்டும் சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.பின்நவீனத்துவ எழுத்தாளர்கள் மாதிரி சொல்ல வந்ததை சொல்லாமல் குரங்கு மாதிரி தாவிக்கொண்டே இருக்கிறேன். ஒரு வேலை இது தான் "non linear" எழுத்தோ என்னவோ? யார் கண்டது? அடச்சே, மீண்டும் விஷயத்திற்கு வருவோம். ஆக, நான் சொல்ல வந்தது என்னவென்றால், இந்த பாடசாலை என்ற அமைப்பை நிறுவியவர்கள், வேதம் ஓதும் தொழிலுக்கு மிகப் பெரிய Demand ஏற்படும் என்பதை உணர்ந்திருந்தார்கள். சொல்லப்போனால் இன்று,"Supply doesn't meet Demand".

பாருங்களேன், இன்று ஒரு விஷேசத்திற்கு சாஸ்திரிகளை வீட்டிற்க்கு அழைக்க நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது? அவர் வீட்டுக்கு நாலு தடவை நடையாய் நடந்து, அவர் மனைவி, குழந்தைக்கு எல்லாம் சலாம் போட்டு "மாமா வந்தா நான் வந்ததா சொல்லுங்கோ" என்று ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து, அவர் குழந்தைக்கு ரெண்டு சாக்லேட் கொடுத்து என்று நாய் படாத பாடு பட்டு அவரை அழைக்க வேண்டி இருக்கிறது.சரி, வேறு சாஸ்திரிகளை அமர்திக்கொள்வோம் என்றால் நல்ல ஞானம் உள்ள ஒருவரை தேடி கண்டுபிடிப்பதே கடினமாக உள்ளது.

மேலும், ஒரு காலத்தில் வேதம் ஓதும் பிராமணர்கள் என்ன கொடுத்தாலும் யத்கிஞ்சிதமாக வாங்கிக் கொள்வார்கள். இன்று அந்த நிலை கிடையாது. ஒவ்வொரு விஷேசத்திர்க்கும் தகுந்த மாதிரி ஒரு அமௌன்ட் உண்டு. கிட்டத்தட்ட Prepaid ஆட்டோ மாதிரி. சரி, கொடுத்த பணத்திற்கு மதிப்பு உண்டா என்றால் அதுவும் இல்லை. எவ்வளவு சமரசம் செய்துக்கொள்ள வேண்டும் தெரியுமா? பசு மாட்டு எரு கிடைக்கவில்லை என்றால் அவசரத்திற்கு வறட்டியில் தண்ணீர் கலந்து அதை சாணம் என்கிறார்கள்(Reverse Engineering). இறந்தவருக்கு காரியம் செய்துவிட்டு அப்படியே திருமணம் செய்து வைக்க வருகிறார்கள். மரணம் நடந்த வீட்டில் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் "பதினைந்து நாள் காரியத்திற்கும் நான் தான் Contract. அப்படி இருந்தால் இன்று நான் காரியம் செய்வேன்" என்று பணத்திற்கு நாயாய் அலைகிறார்கள்.

பணம் எல்லாருக்கும் தேவையாய் இருக்கிறது. நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், மற்றவர்களை விட தர்மத்தை கடைப்பிடிப்பதில் இவர்களின் பங்கு அதிகம். மேலும், வேதம் எதையெல்லாம் பாவம் என்று சொல்கிறது என்பது இவர்களுக்கு நன்றாகவே தெரியும். அப்படி இருந்தும், சிறிது கூட மனசாட்சிக்கு பயமில்லாமல் இவர்கள் நடப்பது நல்லதல்ல.

Monday, 5 October 2009

உன்னைப்போல் ஒருவன்

A Wednesday படத்தை மூன்று முறை பார்த்துவிட்டதால் UPO(உன்னைப்போல் ஒருவன்) பார்க்க அவசரப்படவில்லை. ஆனாலும், கமல் ரசிகன் என்பதால் அவர் நடிப்பு எப்படி இருக்கும் என்று எண்ணிக்கொண்டு இருந்தேன். மேலும், தமிழுக்கு ஏற்ற மாதிரி எப்படி எடுத்திருப்பார்கள் என்றும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

கடந்த சனிக்கிழமை படத்தை பார்த்த போது எதிர்பார்த்தது வீண்போகவில்லை என்றே சொல்லத் தோன்றியது. கமல் என்பதால் ஒரிஜினல் படத்தை காட்சிக்கு காட்சி காப்பி அடிக்கவில்லை. சில மாற்றங்கள் செய்திருக்கிறார். உதாரணம், சிகரெட் பிடிக்கும் பெண் டிவி நிருபர், ஆரிப்(Ganesh Venkatraman) கதாபாத்திரத்திற்கு மேலும் சில காட்சிகள், இறுதி காட்சியில் பெஞ்சிற்கு பதிலாக ஜீப் போன்ற சில. படத்தை விமர்சனம் செய்கிறேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. காரணம், நான் ஒரு சாதாரண ரசிகன் மட்டுமே. நான் கொடுத்த ஐம்பது ரூபாய்க்கு "I got my worth". இருந்தாலும், சில கேள்விகள் உள்ளன. அவை:

1. எதற்காக அந்த பெண் டிவி நிருவர் புகைப்பதாக காட்ட வேண்டும்? பார்வையாளனுக்கு பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வு கொண்டு வரும் முயற்சியா?

2. ஒரு இடத்தில் தீவிரவாதி சொல்கிறான், "என் மனைவி மற்றும் குழந்தை குஜராத் Best Bakery இடத்தில் நடந்த வன்முறையில் இறந்து விட்டார்கள்". ஆரிப் சொல்கிறான், "நான் அங்கு இருந்தால் தடுத்திருப்பேன்". அதற்கு தீவிரவாதி சொல்கிறான், "அங்கு மோதி பார்த்தால் தான் உனக்கு தெரியும். மோதினால் மரணம் தான்". அது மோடியா அல்லது மோதியா என்று தெரியவில்லை..

3. உங்கள் இஷ்ட தெய்வம் என்ன என்று ஒரு போலீஸ் ஆணையரிடம் முதல்வர் கேட்பதாக ஒரு காட்சி எதற்கு? தன் இஷ்ட தெய்வத்தின் பெயரை போலீஸ் ஆணையாளர் சொன்னவுடன் முதல்வர், "இங்க தமிழ்நாட்ல பக்கத்துல இவ்வளோ கடவுள் இருக்கே, அவ்வளவு தூரம் போகணுமா?" என்கிறார். கமல் போலீஸ் ஆணையாளராக நடித்திருந்தால் படத்தில் இந்த காட்சி இடம் பெற்றிருக்காது.

4. உண்மையிலேயே, சோழவரத்தில் World War II ஏர்போர்ட் இருக்கா?

இறுதியாக, நடிகை லக்ஷ்மி அந்த தலைமை செயலாளர் வேடத்திற்கு கன கச்சிதம். ஆனால், நடிக்கத்தான் வாய்ப்பு இல்லை. மோகன்லால் பற்றி என்ன சொல்ல? அவர் நடிப்பு திறனுக்கு தீனி போடும் வேடம் இல்லை. ஆனால், அவரும் கமல் மாதிரி எந்த வேடம் கொடுத்தாலும் ஜொலிப்பவர் தானே? படத்தின் முதல் காட்சியில் நடிகராக வரும் ஸ்ரீமான் "விஜய்" நண்பராச்சே? ஏன் அவரையே நக்கல் அடித்திருக்கிறார்? மொத்தத்தில், நான் மேலே சொன்ன மாதிரி UPO கொடுத்த காசுக்கு நல்ல பொருள்.

Sunday, 4 October 2009

மனைவி எவ்வளவு திட்டினாலும் பொறுக்கணுமா?

மும்பை ஹைகோர்ட் "மனைவி எவ்வளவு திட்டினாலும் பொறுத்து கொள்ள வேண்டும்" என்று சொல்லி இருக்கிறது.(03-Oct-09,தினமலர்)

இது என்னங்க அநியாயமா இருக்கு அதுக்காக கேவலமா பச்சை பச்சையாய் திட்டினாலும் பொறுத்து கொண்டு பூமி ஆளனுமா? ஒரு அளவு வேணாமா? மனுஷன் எந்த அளவுக்கு பொறுக்கறது? ஒரு மனுஷ தன்மை வேணாமா? அட நம்மளை திட்டினாலும் பரவாயில்லய்யா , நம்ம அப்பா ஆத்தா கூட பொறந்தவங்க , பார்க்க வரவங்க , கூட வேலை செய்யறவங்க எல்லோரையுமா திட்டுறது, ச்சே.. மனுஷன் தின்ன முடியுதா, மத்தவங்க கூட பேச முடியுதா , பிடிச்ச டிரஸ் போட்டுக்க முடியுதா ... எல்லாத்துக்கும் இப்படி நாக்கை புடிங்குக்குற மாதிரி கேள்வியா கேட்டா நாங்க என்னதான் செய்யறது .


அட ஒரு நாள் ரெண்டு நாள்னா பரவாயில்லப்பா , அட ரெண்டு மூணு மாசம் , மிஞ்சி போனா ரெண்டு மூணு வருஷம்னாலும் பரவாயில்லை இப்படி வருஷகணக்கா திட்டின என்னதான் செய்யுறது? சூடு-சொரனையே இல்லைன்னாலும் கோவம் வரும், இப்படி கோவப்பட்ட ஒருத்தன் கோர்ட் வாசல் ஏறி இருக்கான் , (அதுக்கு என்ன திட்டு...) ஆனாலும் ஏறி இருக்கான் .. தெரியாமத்தான் கேக்குறேன், அப்படி வந்தவனை அந்த ஜட்ஜும் திட்டறதா.. அப்படி துணிவா , வீரமா, ஒரு தீர்மானமா,சாமர்த்தியமா, திடமா கோர்ட்டுக்கு போனவனுக்கு ஒரு நீதி வேணாமா,? ஒரு நியாயம் வேணாமா?

ஒன்னே ஒன்னு சொல்லிக்கறேன் , இப்படியே திட்டு வாங்கிட்டே இருந்தா .. திட்டிகிட்டேதான் இருப்பாங்க..அதனால கேவலமா பேசறப்போ  ஒரு வரைமுறை இருக்கணும்னு ஒரு ஒப்பந்தம் போட்டுக்கணும், அப்புறம் சாப்புடும்போதோ, பெரிய மனுஷனா பேசிகிட்டு இருக்கும்போதோ, காலையில ஏழு மணிக்கு முன்னே, பக்கத்து வீட்டு சின்ன பசங்க முன்னாடியோ (நம்ம குழந்தைகளை விடுங்க ..எல்லாம் ஒரே குடும்பம்),வேலைக்காரி முன்னாடியோ,பொது இடத்திலயோ,ராத்திரி முக்கியமான நேரத்திலோயோ திட்டக்கூடாது அப்படின்னு ஒரு முறை வெச்சாதான் முடியும், மத்தபடி இந்த கோர்ட் ஜட்ஜ் இவங்க மேலே இருக்கற நம்பிக்கையெல்லாம் எனக்கு போயிடுச்சுங்க ..நீங்க என்ன சொல்றீங்க?