தெனாலி படத்தில் தனது தந்தை மற்றும் தாயார் இலங்கையில் யுத்தத்தில் மாண்டதை கமல் மருத்துவரான ஜெயராமிடம் விவரிக்கும் காட்சியை விவேக் "ஒரு காமெடி படத்தில் அந்த காட்சி கண்ணீரை வரவழைக்கும் தருணம் மறக்க முடியாது" என்றார். கமல், "சமூக பிரக்ஞை இருக்கும் நகைச்சுவை நடிகர்கள் பலர் சீரியஸ் விஷயங்களை நகைச்சுவை மூலம் தெரிவிப்பார்கள். தெனாலி ஒரு சீரியஸ் படமாக இலங்கை தமிழர்கள் பற்றிய செய்திகளை சொல்லியிருந்தால் அது தடை கூட செய்யப்பட்டிருக்கும்" என்றார்.
இயக்குனர் வசந்துடன் பேசும் போது எழுத்தாளர் ஜெயமோகனின் அறம் வரிசை கதைகளில் ஒன்றான "நூறு நாற்காலிகள்" பற்றி குறிப்பிட்டார். வசந்தும் பெரிய இலக்கிய ரசிகர் என்பதால் தானும் அதை படித்ததாக சொன்னார். புன்னகை மன்னன் படத்தில் வரும் "மாமாவுக்கு குடுமா குடுமா" பாடலை தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அந்த காலகட்டத்தில் படமாக்கிய விதத்தை இருவரும் நினைவு கூர்ந்தனர். அன்பே சிவம், மகாநதி படங்களை சிலாகித்து பேசிய வசந்த், "சிவாஜிக்கு பின் நான் உங்களுக்கு மட்டும் தான் ரசிகன்" என்றார்.
கார்த்திக் சுப்புராஜ் மற்றும் பாலாஜி மோகன் இருவரிடமும் அவர்கள் தங்கள் படங்களுக்கு எப்படி திரைக்கதை எழுதினார்கள் என்று கேட்டுவிட்டு தான் விஸ்வரூபம் படத்திற்கு இரண்டரை மாதம் எடுத்துக் கொண்டதாக கூறினார் கமல். தேவர் மகனுக்கு பதினைந்து நாள் ஆனதாம். சினிமா திரைக்கதை என்பது ஒரு மொழி, அதை எழுத நிறைய பயிற்சி வேண்டும் என்றார். ஒருவர் கதை நன்றாக சொல்கிறார் என்பதற்காக அவரை இயக்குனராக்க கூடாது என்றார். இருவரிடமும் அவர்கள் திரைக்கதை குறித்து எந்த மாதிரி புத்தகங்கள் படிக்கிறார்கள் என்று கேட்டார்.
கடந்த வெள்ளி தான் கமல் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சியில் பொது அறிவில் பட்டையை கிளப்பியதை பார்த்தேன். பேமானி, உட்டாலக்கடி எல்லாம் சென்னை தமிழில் எப்படி கலந்தது என்று அவர் விவரித்ததை கேட்டு "என்ன ஞானம் டா இந்த ஆளுக்கு, எதை பத்தி கேட்டாலும் பதில் சொல்றாரு" என்று வியந்து கொண்டிருந்தேன். இன்று தந்தி தொலைகாட்சி நிகழ்ச்சி. நிகழ்ச்சியின் பஞ்ச் டயலாக் இது தான்.
"சிவாஜி சார் மாதிரி ஒரு சிங்கத்துக்கு இயக்குனர்கள் நிறைய முறை தயிர் சாதம் கொடுத்துட்டாங்க. அதான் என் சாப்பாட்டை நானே பண்ணிக்கிறேன்" என்றார்.