ஒரு வழியாக கடந்த வியாழன் மதியம் சிகாகோவில் இருந்து டெல்லி செல்ல ஏர் இந்தியா ஏறினேன். மீண்டும் டெல்லியில் "ட்ரவுசர்" பரிசோதனை செய்யப்படுமோ என்ற எண்ணம் கொஞ்சம் கலவரப்படுத்தினாலும், மனைவி குழந்தைகளை பார்க்கப் போகும் சந்தோஷம் அதை கொஞ்சம் மறக்கச் செய்தது. விதி டெல்லி விமான நிலையத்தின் ஈசான மூலையில் சிரித்துக் கொண்டு இருந்ததை அப்போது நான் அறியவில்லை.
சிகாகோ-டெல்லி, டெல்லி-சென்னை இரண்டு தடங்களுக்குமான போர்டிங் பாசை சிகாகோவில் பெற்றுக்கொண்டேன். இரண்டிலுமே ஜன்னலோர இருக்கை(எத்தனை வயதானாலும் இந்த ஜன்னலோர இருக்கை மீதுள்ள பற்று மறையவேயில்லை).சிகாகோ-டெல்லி விமானத்தில் ஏறி என் பாட்டி வயதொத்த ஏர் இந்தியா "விமான பணிஆயாக்களுக்கு" வணக்கம் சொல்லி இருக்கையில் சென்று அமர்ந்தேன். முதல் லட்டுவாக ஜன்னலோர இருக்கை, "கண்ணா, ரெண்டாவது லட்டு தின்ன ஆசையா?" என்பது போல நடு மற்றும் அயில்(Aisle) இரண்டுமே காலி.அந்த சந்தோஷத்தை அனுபவிப்பதற்க்குள், ஒரு ஆயா வந்து, இந்த இடம் காலியா என்று அயில் இருக்கையை பார்த்துக் கேட்டது. ஆம் என்றேன்.
சிறிது நேரத்தில் ஒரு பத்து வயது சிறுமியை அழைத்துக்கொண்டு வந்து, "இவள் பெயர் மோகினி. சிகாகோவில் இருந்து டெல்லி மார்கமாக அகமதாபாத் செல்கிறாள். வேறு யாரும் கூட வரவில்லை. அவள் தந்தை வந்து ஏற்றி விட்டார். ஏறியதிலிருந்து அழுதுக்கொண்டு இருக்கிறாள். அவள் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு அருகில் பெற்றோர்களுடன் குழந்தைகள் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து இன்னும் அழுகிறாள். இவள் இங்கு அமரட்டும். நான் கொஞ்சம் வேலையாக இருக்கிறேன். இவளை பார்த்துக்கொள்ளுங்கள். ஏதேனும் தேவைப்பட்டால் என்னை அழையுங்கள்" என்றார்.
மோகினியிடம் "ஹலோ, என் பெயர் வாசு" என்றேன். கை குலுக்கிவிட்டு விரோதமாக முகத்தை திருப்பிக்கொண்டு அழுதாள். "கைக்குட்டை வேண்டுமா?" என்றேன். அழகான ஆங்கிலத்தில் "எனக்கு தேவைப்படும் என்று தோன்றவில்லை" என்றாள். விமானம் வேகம் பிடித்து மேகத்தை தொட, இன்னும் அழுகை பலமாயிற்று. சரி, சிறிது நேரம் கழித்து பேசுவோம் என்று நான் அடுத்த பதினைந்து மணி நேரத்திற்கு என்னுடனேயே வரப்போகும் மேகங்களை ரசிக்க ஆரம்பித்தேன். இருக்கையில் இருந்து கொஞ்சம் எம்பி என்னைத் தாண்டி மேகங்களை பார்த்தாள். "என் இருக்கையில் அமர்ந்து கொள்கிறாயா?" என்றேன். வேண்டாம் என்று மீண்டும் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
சிறிது நேரத்திற்கு பிறகு, உடன் கொண்டு வந்திருந்த பையிலிருந்து பேப்பர்,கலர் பென்சில் எடுத்துக்கொண்டு வரைய ஆரம்பித்தாள்."நானும் உன்னுடன் சேர்ந்து வரையலாமா?" என்றேன். கொஞ்சம் நட்பாகி, ஒரு காகிதமும் பென்சிலும் தர "உனக்கெல்லாம் இந்த ஜென்மத்துல டிராயிங் வராது" என்று ஏழாம் வகுப்பில் நான் வரைந்த தாவரவியல்/விலங்கியல் படங்களை பார்த்து சபித்த என் ஆசிரியை மனக்கண்ணில் கொண்டு வந்து அவருக்கு நாலு கால், ஐந்து கை இருப்பது போல் ஒரு படம் வரைந்து மோகினியிடம் காட்ட, "உங்களுக்கு வரையறது நா என்னனு தெரியுமா?" என்றாள் ஹிந்தியில். "எனக்கு வரையத் தெரியாது" என்று சிரித்தேன்.
"சரி, வேறு என்ன விளையாட்டு தெரியும்?" என்றாள். என் பெரிய மகளுடன் வழக்கமாக விளையாடும் Words Game நினைவிற்கு வர, அதை விவரித்து விளையாடுவோமா என்றேன். அதையே சற்று மாற்றி Bollywood படப்பெயர்களாக விளையாடுவோம் என்றாள். சரி என்று சிறிது நேரம் இருவரும் அதில் நேரம் கடத்தினோம். இதற்கிடையே, அவளிடம் அவள் குடும்பத்தை பற்றிக் கேட்க, தந்தை சிகாகோவில் இருப்பதாகவும், தமக்கை டென்னிசி நகரில் படிப்பதாகவும் இவள் தாயுடன் அகமதாபாத் நகரில் வசிப்பதாகவும் சொன்னாள். அங்குள்ள Delhi Public School பள்ளியில் படிக்கிறேன் என்றாள்.
டெல்லியில் இருந்து அஹமதாபாத் விமானம் எப்போது என்றேன்? தெரியாது, எல்லா விவரமும் ஏர் இந்தியா மக்களிடம் உள்ளது என்றாள். இந்தப் பிஞ்சை தனியாக அனுப்ப எப்படி மனம் வந்தது என்றெண்ணி அவள் தந்தையை நொந்தேன். இதற்கிடையே விமானம் கிளம்பி நான்கைந்து மணி நேரம் ஆகி இருக்க, ஆயா இடையிடையே வந்து மோகினியிடம் உணவு, தின்பண்டம் ஏதும் வேண்டுமா என்று கேட்டு தேவையானவற்றை கொடுத்துச் சென்றார்.மோகினி படேல் முகேஷ்குமார் அசதியில் உறங்கச் சென்றாள். நானும் கண் அயர்ந்தேன்.
டெல்லியில் இறங்குவதற்கு சில மணி நேரம் முன் விழித்தேன். மோகினி "Sheila ki Jawani" பாடலை inflight entertainment பகுதியில் பார்த்துக் கொண்டிருந்தாள். "கார்ட்டூன் படம் எல்லாம் பார்க்க மாட்டாயா?" என்றேன். "எனக்கு காமெடி படங்கள் தான் பிடிக்கும். அதான் Tees Maar Khan பார்க்க ஆரம்பித்தேன். உங்களுடன் விளையாடலாம் என்று நினைத்தேன், ஆனால் நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தீர்கள்.அதுவரை படம் பார்க்கலாம் என்று எண்ணினேன்" என்றபடி ஓடிக்கொண்டிருந்த படத்தை நிறுத்திவிட்டு, "உங்களுக்கு 4 cups செய்ய தெரியுமா" என்றாள்? அடடா, குழந்தை ஆசையாக கேட்கிறாளே, நமக்கு தெரியாதே என்று யோசித்தபடி,"எனக்கு தெரியும், ஆனால் செய்து ரொம்ப நாள் ஆனதால், பழக்கம் விட்டுப் போயாச்சே" என்றேன். பரவாயில்லை, நான் சொல்லித் தருகிறேன் என்று காகிதத்தை கிழித்து அற்புதமாக 4 Cups செய்தாள். ஒவ்வொரு எண்ணுக்கும் எதையோ எழுதி சிறிது நேரம் என்னை அதை வைத்து கலாய்த்தாள். இறங்கும் நேரம் வர, அவளை பிரிய கஷ்டமாக இருந்தது. Hi Five, Hi Ten எல்லாம் செய்து விடைக் கொடுத்தேன்.
டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் மாலை நான்கு மணிக்கு இறங்கி ஜம்பமாக உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்து Security கடந்து நான் செல்ல வேண்டிய விமானம் கிளம்பும் இடத்திற்கு வந்தேன். விமானம் இரவு எட்டேகாலுக்கு தான் என்பதால் Subway சென்று Veggie Delite ஒன்றை வெட்டினேன்( Subway நிறுவனம் Franchisee விடுபவர்களிடம் தங்கள் தயாரிப்பு முறையை நன்கு எடுத்துச் சொல்லி பழக்கப் படுத்துவது நல்லது. அமெரிக்க Subway உணவகத்திற்கும் டெல்லி விமான நிலைய Subway உணவகத்திற்கும் ஏணி வைத்தாலும் எட்டாத தூரம்).
ஏழரை மணிக்கு முதல் பத்தியில் சொன்ன ஈசான மூலை தன் வேலையை ஆரம்பித்தது. ஒலிபெருக்கியில் என் பெயரை சொல்லி உடனடியாக தொடர்புகொள்ள சொல்லியது ஏர் இந்தியா நிறுவனம். இதற்கிடையே, என் பெட்டிகள் வந்து சேரவில்லை என்று ஏர் இந்தியா நிறுவனம் என் அலுவகத்திற்கு பயணச்சீட்டு பதிவு செய்த ஏற்பாட்டாளர் மூலம் தெரிவிக்க, அவர்கள் என் வீட்டில் அதை சொல்ல என ஏக குழப்பம். ஒரு வழியாக ஏர் இந்தியாவின் டெல்லி விமான நிலைய அரங்கு சென்று என்னவென்று கேட்க, உங்கள் பெட்டிகள் சர்வதேச விமான நிலையத்தில் உள்ளன. அதை நீங்கள் தான் உள்நாட்டு விமான நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். நீங்கள் அதை எடுத்துச் செல்லாததால் Customs கையகப்படுத்தியுள்ளார்கள். எங்கள் அதிகாரியை உடன் அனுப்புகிறோம். சென்று பெட்டிகளை கொண்டு வந்து இந்த விமானத்தில் சேருங்கள்.உங்களுக்கு இருபது நிமிடம் தான் உள்ளது என்றார்கள்.
நாற்பது டிகிரி டெல்லி சூட்டில் இங்கயும் அங்கயும் ஓடி முன்னூறு ரூபாய் அபராதம் செலுத்தி ஒரு வழியாக பெட்டிகளை கொண்டு வந்து ஏர் இந்தியாவின் உள்நாட்டு விமான நிலைய அரங்கில் தந்து என் விமானத்தில் சேர்க்க சொன்னபோது எனக்கு விசர்ஜனம் வந்துவிட்டது. சென்னை விமானத்தில் ஏறி அமர்ந்தும் படபடப்பு குறையவில்லை. டென்ஷன் குறைக்க
ஏர் இந்தியாவின் விமானத்தில் படிக்கும் புத்தகமான "நமஸ்கார்" எடுத்து அதிலிருந்து பக்கங்களை கிழித்து மோகினி சொல்லிகொடுத்த 4 cups செய்து கொண்டே இரவு பனிரெண்டு மணிக்கு சென்னை வந்து சேர்ந்தேன்.
Saturday, 25 June 2011
Wednesday, 22 June 2011
சிட்டுக்குருவி
இங்கு அமெரிக்காவில் நிறைய சிட்டுக்குருவி(என் போன்ற வக்கிர மனம் உடையோர் கவனிக்கவும். சிட்டு இல்லை சிட்டுக்குருவி பறவை)பார்த்தேன். மொபைல் டவர் வைப்பதால் தான் சிட்டுக்குருவிகள் இந்தியாவில் extinct ஆகிவிட்டன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
அப்படியென்றால் உலகின் முன்னேறிய நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் மொபைல் டவர் இல்லையா? பின் எப்படி இங்கு சிட்டுக்குருவிகள் வசிக்கின்றன?ஒரு வேளை இவையெல்லாம் இந்தியாவில் இருந்து வருவாயை பெருக்கிக்கொள்ள இங்கு வந்த இந்த Generation குருவிகளோ?
Tuesday, 21 June 2011
கமலுக்கு என்ன ஆச்சு?
Subscribe to:
Posts (Atom)