Saturday, 3 January 2009

எம்.ஜி.ஆர் - 2


1960-ல் இருந்து அடுத்த 12 ஆண்டுகள் எம்.ஜி.ஆரின் பொற்காலம். இந்த 12 ஆண்டுகளில் அவர் சம்பளத்தை பேரம் பேசும் ஒரு திரைப்பட நடிகரில் இருந்து தமிழகத்தின் ஒரு முக்கியமான V.I.P-ஆக மாறினார். அவரே தமிழ் திரைப்பட வசூல் சக்கரவர்த்தி.


இரண்டாவது மனைவி காலமானார். அதாவது அவர் எம்.ஜி.ஆரின் விஸ்வரூப வளர்ச்சியை பார்க்காமலேயே இறந்துவிட்டார்.


1960-களில் மத்தியில் ஒரே நாளில் வெளி வந்த படங்கள்தான் சிவாஜியின் "கர்ணன்" மற்றும் எம்.ஜி.ஆரின் "வேட்டைக்காரன்". கர்ணன் தோல்வி, வேட்டைக்காரன் சுப்பர் ஹிட்.


இத்தனைக்கும் கர்ணன் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட படம். சிவாஜியின் மிகச்சிறந்த நடிப்பில் வெளி வந்த படம்.


தனது பல வருட அனுபவத்தில் மக்களின் குறிப்பாக படத்தை ஓட வைக்கும் அடித்தட்டு மக்களின் எதிர்ப்பார்ப்பை எம்.ஜி.ஆர் எப்படி பூர்த்தி செய்தார் என்பதற்கு மேற்கூறிய படங்கள் ஒரு சாட்சி. மிகச்சிறந்த நடிப்பு, பிரம்மாண்டமான தயாரிப்பு, நல்ல இசை எல்லாம் இருந்தும் மக்கள் கர்ணன் என்ற ஒரு தோல்வியடைந்த கதாபாத்திரத்தை விட வேட்டைக்காரன் என்ற வெற்றியாளனையே விரும்பினர்.


இந்த காலகட்டத்தில்தான் எம்.ஜி.ஆர் தனது பிம்பத்தை உரமிட்டு வளர்த்தினார்.


எம்.ஜி.ஆர் எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்கமாட்டார்.

எம்.ஜி.ஆர் குடி, சிகரெட், வெற்றிலை கூட போட மாட்டார்.

எம்.ஜி.ஆர் உண்மையே பேசுவார்.

எம்.ஜி.ஆர் ஏழைகளின் தோழன்.

எம்.ஜி.ஆர் அநியாயம் நடந்தால் தட்டிக்கேட்பார்.

எம்.ஜி.ஆர் ஏழைகளுக்கு உதவி செய்வார்.

கடையேழு வள்ளல்களுக்கு அடுத்தபடியான எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்....போன்றவை மக்களிடையே எம்.ஜி.ஆரை பற்றிய பிம்பத்தில் சில பாகங்கள்.


எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் ஒரு நிச்சயமான சக்தி என்று இருக்கும்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. அது ஒரு விதத்தில் எம்.ஜி.ஆரின் சக்தியை வெளிச்சம் போட்டு காண்பித்தது.
1967-ல் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டார். எம்.ஜி.ஆருக்கு உச்சரிப்பு போனது.
இப்போது அவர் தனது பழுதடைந்த தொண்டையுடன் தமிழ் சினிமாவின் "சிம்மக்குரலோனுடன்" போட்டி போட வேண்டிய சூழ்நிலை!
தனது கடந்த கால இமேஜ் மற்றும் சினமாவின் வியாபார நுணுக்கம் போன்றவற்றை கொண்டே அவர் தன் பழுதடைந்த குரலை அவர் வென்றார்.
இதன் பிறகு வந்த எம்.ஜி.ஆரின் படங்கள் அனைத்திலும்


கேமரா

உடைகள் (குறிப்பாக கதா நாயகியரின் உடை)

இசை பாடல் வரிகள்

கதா நாயகியரின் கவர்ச்சி


போன்றவற்றில்அவர் கவனம் செலுத்தினார்.
ஆக 1967-ல் இருந்து அதாவது தனது 50-வது வயதில் இருந்து அவர் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பித்தார்.
எம்.ஜி.ஆர் ஜெயலலிதா கிசு கிசு வந்த போது எம்.ஜி.ஆரின் வயது 50.உலகம் சுற்றும் ' வாலிபன்' வரும்போது தலைவரின் வயது "55".
இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம், அவரின் பிறந்த வருடம் 1917 என்று சொன்னாலும், அதற்கான ஆதாரம் என்று ஒன்றும் கிடையாது.... அவர் தன் வயதை குறைக்க வேண்டி 4-5 வருடங்கள் குறைத்து சொல்லி இருக்கலாம் (அவர் இருந்த துறை அப்படி...!) அப்படி பார்த்தால் 1967-ல் அவரின் வயது 55 , உலகம் சுற்றும் வாலிபனில் அவரின் வயது 60!.




Friday, 2 January 2009

John Borthwick Higgins(1939-1984)


கர்நாடக சங்கீதத்தை பொதுவாக மக்கள் அதிகம் விரும்புவதில்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு. பெரும்பாலான பாடல்கள் தெலுங்கில் இருப்பது ஒரு முக்கிய காரணம். மொழி புரியாத போது அதை கேட்டு என்ன பயன் என்பார்கள். இந்தியர்கள் நாமே இப்படி சொன்னால், ஒரு ஆங்கிலேயர் கர்நாடக சங்கீதத்தை கற்பது எவ்வளவு கடினம்? அப்படி ஒரு அபூர்வ கலைஞர் இருந்தார். அவரை அறிமுகப்படுத்தவே இந்த பதிவு.

ஜான் ஹிக்கின்ஸ் அமெரிக்காவில் பிறந்தார். கர்நாடக இசையின் மேல் இருந்த ஈடுபாட்டால் தமிழகம் வந்து கர்நாடக சங்கீதம் கற்று மிக குறைந்த காலத்தில் அதில் தேர்ச்சி பெற்று தனது சம காலத்தில் வாழ்ந்த இந்திய கர்நாடக இசை கலைஞர்களுக்கு இணையாக பேசப்பட்டார். அகில இந்திய வானொலியில் பல இசை நிகழ்ச்சிகள் வழங்கியுள்ளார். அவர் பாடிய எந்தரோ மகானுபாவுலு, சிவ சிவ சிவ என ராதா, கிருஷ்ணா நீ பேகனே மற்றும் கா வா வா பெரும் புகழ் பெற்றன. திரு. ஜான் ஹிக்கின்ஸ் அவர்களின் பாடல்களை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.

Wednesday, 31 December 2008

Happy New Year

Wishing all Kulambiyagam visitors a very happy and prosperous 2009.

-Vasu & Gokul

Tuesday, 30 December 2008

எம்.ஜி.ஆர்- 1

எல்லோருக்கும் தெரியும், எம்.ஜி.ஆரை பற்றி பல பேர் பல இதழ்களில் எழுதி விட்டார்கள், ஆனாலும் இந்த 2008-லும் எனக்கு எம்.ஜி.ஆரை பற்றி எழுத தோன்றுகிறது.

அவர் பிறந்தது 1917. அவரின் முதல் படம் சதி லீலாவதி வந்தது 1936 (அவருக்கு வயது 19).அவரின் முதல் வெற்றிப்படம் மருத நாட்டு இளவரசி , வெளியான ஆண்டு 1950.
1950-ல் அவரின் வயது 33. அதாவது 19-வது வயதில் இருந்து 33-வது வயது வரை அவர் ஒரு துணை நடிகராக வறுமையில் வாடிக்கொண்டுதான் இருந்து இருக்கிறார்.இந்த காலத்தில்தான் அவருக்கு திருமணம் ஆகியது, தாங்க முடியாத வறுமை, மனைவிக்கு காச நோய். நோய் முற்றி மனைவி இறந்து விட்டார். குழந்தை எதுவும் இல்லை.


ஆக, குழந்தை இல்லாதது ஒரு குறை, தொழிலில் வருமானம் வராதது ஒரு குறை, மனைவி மறைந்த சோகம்.

மருத நாட்டு இளவரசி வந்த பின்பும் எம்.ஜி.ஆர் முன்னணி நட்சத்திரமாக ஆகவில்லை, அதன் பிறகு வந்த படம் "மந்திரி குமாரி". படம் ஹிட் ஆனாலும் எம்.ஜி.ஆர் ஒரு முன்னணி நட்சத்திரம் இல்லை.

இந்த நிலையில் 1952-ல் வந்த பராசக்தி படம் மூலம் (சிவாஜி) கணேசன் ஒரே படத்தின் மூலம் super star ஆகிவிட்டதையும் கவனிக்க வேண்டும்.எம்.ஜி.ஆரின் அடுத்த பெரிய மைல்கல் "அலிபாபாவும் 40 திருடர்களும்" , vandha ஆண்டு 1955. கவனிக்கவும் மருத நாட்டு இளவரசி வந்து சுமார் 5 ஆண்டுகள் கழித்தே அலிபாபா வருகிறது, இப்போது அவருக்கு வயது 38.
அதன் பிறகும் அவரால் தொடர்ச்சியான வெற்றி கொடுக்க முடியாமல் இருந்தது. பெயரும் புகழும் இருந்தாலும், அவரால் "சிவாஜி" அளவிற்கு தொடர்ச்சியாக படத்தில் நடிக்க முடியவில்லை.


இந்த சமயங்களில் சிவாஜி வீர பாண்டிய கட்ட பொம்மன், உத்திம புத்திரன், தங்க பதுமை போன்ற படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்று இருந்தார் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

பின் 1958-ல் எம்.ஜி.ஆர், தயாரித்த படம் "நாடோடி மன்னன்" , தனது வாழ்நாள் சேமிப்பை / சொத்தை விற்றுத்தான் இந்த படத்தை அவர் தயாரித்தார்.
அவரை super star அந்தஸ்திற்கு கொண்டு சேர்த்தது அந்த படம்தான். ஆக அவருக்கு திரை உலகில் நிலையான வெற்றி என்பது அவரின் 40-வது வயதில்தான் வந்து இருக்கிறது. அது வரை ஒரு அங்கீகாரத்திற்கு / பணத்திற்கு அவர் காத்திருந்து இருக்கிறார்...


அவரின் தனிப்பட்ட வாழ்விலும் பெரிய மகிழ்ச்சி எதுவுமில்லை, இரண்டாவது மனைவியும் நோய்வாய் பட்ட நிலையிலேயே இருந்து இருக்கிறார். குழந்தை இல்லை.

ஆக 40-வது வயது வரை மிகப்பெரிய தோல்விகளையே சந்தித்து கொண்டு இருந்து இருக்கிறார்.

தொடரும்...

(வருடங்களில் பிழை இருக்கலாம்..)

Monday, 29 December 2008

koffee with anu - bombay jayashree and t.m.krishna

கடந்த சனிக்கிழமை இரவு "koffee with anu" நிகழ்ச்சியை பார்த்த போது எனக்கு தோன்றியது ஒன்று தான். தமிழ் மொழி, தமிழ் இசை இதையெல்லாம் காப்பாற்ற வேண்டும் என்றால் முதலில் நாம் தமிழில் பேச வேண்டும். t.m.கிருஷ்ணா கூட பரவாயில்லை, கொஞ்சம் தமிழ் பேசினார் ஆனால் பாம்பே ஜெயஸ்ரீ அந்த நிகழ்ச்சி முழுதும் ஆங்கிலத்தில் தான் பேசினார். கர்நாடக இசையை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அந்த நிகழ்ச்சியை யாராவது ஒரு பாமரர் பார்த்திருந்தார் என்றால் நிச்சயமாக எதுவுமே புரிந்திருக்காது. நிகழ்ச்சியை நடத்தும் அனுஹாசன் என்ன தான் கேள்விகளை தமிழில் கேட்டாலும் பதில்கள் ஆங்கிலத்திலேயே வந்தன.

கணினி வந்த பின் கடுதாசி எழுதும் பழக்கம் அறவே போய்விட்டது. அதன் விளைவால் தமிழில் எழுதுவது என்பது அரிதாகிவிட்டது. இரண்டு வாரங்களுக்கு முன் என் பாட்டி மறைந்துவிட்டார். அவர் பெயரை(ராஜலக்ஷ்மி) இறந்தவர் பதிவு அட்டையில்(Death Certificate) எழுத நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்."ஜ" எழுதுவதற்குள் கை ஒடிந்து விடும் போல் இருந்தது. இத்தனைக்கும் கல்லூரி அளவில் நான் தமிழில் முதல் மதிப்பெண் பெற்றவன். ஆனால் தமிழ் எழுதி பதிமூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதால் ஒரு வார்த்தை கூட எழுத முடியவில்லை. பாலகுமாரன் ஒரு முறை சொன்னார் "என் எழுத்துக்கள் நூறாண்டுகளுக்கு மேலாக இருக்கும் என்று". இதை பற்றி சுஜாதாவிடம் கேட்ட போது(தோரணத்து மாவிலைகள் கட்டுரை தொகுதியில் சுஜாதா அவர்களின் பேட்டியை படிக்கவும்) "தமிழே இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இருக்குமா என்று தெரியவில்லை என்றார்". உண்மையாகி விடுமோ என்று அஞ்சுகிறேன்.