Wednesday, 29 April 2009

அடாணா ராகம்

சலங்கை ஒலியில் மஞ்சு பார்கவி மேடையில் ஆட, கமல் சமையல் கட்டில் அதே பாடலுக்கு அவர் அம்மா முன் ஆடுவாரே, அந்த பாடல் நினைவிருக்கிறதா? அந்த பாடல், "பால கனகமய" அடாணா ராகத்தை சேர்ந்தது. இந்த பாடலை பற்றி ஒரு தனி பதிவே எழுத வேண்டும்.விசாகா ஹரி ஒரு முறை இந்த பாடலுக்கு ஜெயா டிவியில் கொடுத்த விளக்கம் சிலிர்க்க வைத்தது. அதைப்பற்றி வேறு ஒரு சமயம் எழுதுகிறேன்.நான் மீண்டும் அடாணா ராகத்திற்கு வருகிறேன்.

அடாணா மிக கம்பீரமான ராகம். ராகத்தை கேட்கும் போதே ஒரு விட உற்சாகம் பீறிடும். படம் மகாகவி காளிதாசா அல்லது வீர அபிமன்யுவா என்று நினைவில்லை. ஆனால், அதில் வரும் "யார் தருவார் இந்த அரியாசனம்" அடாணா ராகத்தில் அமைந்த பிரபலமான திரைப்பாடல்.இசையமைத்தவர் கே.வி.மகாதேவன்.வேறு பாடல்கள் அடாணாவில் இருக்கலாம்.ஆனால், இந்த பாடல் அளவுக்கு எனக்கு தமிழ் சினிமாவில் அடாணாவில் அமைந்த வேறு எந்த பாடலும் பரிச்சயம் இல்லை.இதை படிப்பவர்கள் யாருக்காவது அடாணாவில் அமைந்த தமிழ் சினிமா பாடல்கள் பற்றி தெரிந்திருந்தால் பகிர்ந்து கொள்ளவும்.

Monday, 27 April 2009

அக்ஷய திருத்தியை

இன்று அக்ஷய திருத்தியை. முதல் முதலில் இந்த வார்த்தையை ஒரு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு முன் கேட்டதாக நினைவு. உழைக்காமல் உட்கார்ந்து சாப்பிட நினைத்த எவனோ தான் இதை ஆரம்பித்து இருக்க வேண்டும். ஆனால், கடந்த சில வருடங்களில் மிக அருமையாக marketing செய்யப்பட்ட நாள் இது தான். என்ன தான் காதலர் நாள்(Valentines Day), அப்பா நாள்(Fathers Day), அம்மா நாள் (Mothers Day) என்று மக்களை உசுப்பேத்தி விட்டாலும், வியாபாரிகளால் பெரிதாக லாபம் பார்க்க முடிவதில்லை. ஆனால், இந்த நாள் அப்படி இல்லை. இந்த நாளில் எது வாங்கினாலும் அது மேலும் மேலும் சேரும் என்கிறார்கள். போதாகுறைக்கு, அக்ஷய திருத்தியை அன்று தங்கம் வாங்குவது தான் சாலச் சிறந்தது என்கிறார்கள். கேட்கவா வேண்டும். பின்னங்கால் பிடரியில் அடிக்க மக்கள் நகை கடையை தேடி ஓடுகிறார்கள். கடந்த இரண்டு வாரமாக ஹிண்டு பேப்பரில் மெயின் பக்கத்திற்கு இணையாக அக்ஷய திருத்தியை விளம்பரங்களை நகை கடைகள் கொடுத்து இருந்தன.

சரி திருமணமான/வயதான பெண்களை நகை வாங்க வைத்தாயிற்று. இளைய தலைமுறை சும்மா இருக்கிறதே? அவர்களை எப்படி இந்த நாளில் செலவு செய்ய வைப்பது? அதற்கு யாரோ புண்ணியவான் இந்த வருடம் ஒரு புது யுத்தியை கொண்டு வந்திருக்கிறார்.இன்று காலை தான் படித்தேன். இந்த நாளில் பெண்ணோ ஆணோ தன் மனதுக்கு பிடித்தவருக்கு காதலை தெரிவித்தால் அது கை கூடுமாம். ஏற்கனவே தமிழ் சினிமா பார்த்து காதல் பைத்தியம் பிடித்து அலைந்து கொண்டு இருக்கும் இளைஞர்கள்(கவனிக்கவும், நான் இளைஞிகளை பற்றி எதுவும் கூறவில்லை) இனி இந்த நாளில் அப்பன் காசை கரியாக்கி விட்டு தான் மறு வேலை பார்ப்பார்கள். வாழ்க அக்ஷய திருத்தியை.

ஆன்மீகமும் அரசியலும்

பொதுவாக ஆன்மீகவாதிகள் அரசியல் பேசக்கூடாது என்று நினைக்கும் பலரில் நானும் ஒருவன். ஏற்கனவே அரசியல் பேசி/அரசியல்வாதிகளுடன் பழகி, காஞ்சியில் ஒருவர் என்ன கதியானார் என்று அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் ஸ்ரீலங்கா விஜயமும் அதன் பின்னணியில் அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சில பகுதிகளும் தேவையற்றதோ என்று தோன்றியது.

ஸ்ரீ ஸ்ரீ அவர்களின் அறிக்கையின் ஒரு பகுதி இது தான். "இலங்கை அரசாங்கம் ஈழ தமிழர்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்துள்ள முகாம்கள் மிக நன்றாக இருக்கின்றன. காஷ்மீர் போரினால் இடம் பெயர்ந்த மக்களுக்கு இந்திய அரசாங்கம் கட்டிய முகாம்களும் தமிழகத்தை நோக்கி வரும் ஈழ தமிழர்களுக்காக தமிழக அரசு கட்டிய முகாம்களும் இலங்கை அரசின் ஏற்பாடோடு ஒப்பிட்டு பார்த்தால் சுமார் ரகமே."

இதோடு நிறுத்தினாரா? "அங்கு கஷ்டப்படும் மக்களுக்காக இங்கு உண்ணாவிரதம், தீக்குளிப்பு, பந்த் என்று போராடி என்ன பயன்? இதன் மூலம் சமூகத்தில் கோபமும் வெறுப்பும் மட்டுமே உண்டாகும் என்று கூறியுள்ளார்."

என்ன தான் உண்மை என்றாலும் கலைஞர் உண்ணாவிரதம் இருந்த இன்று இதை கூறியிருக்க வேண்டாம். இனி ஸ்ரீ ஸ்ரீ மதுரையை தாண்டுவது கடினம் தான். என் உள்ளுணர்வு சரி என்றால் இன்னும் ஒரு வாரத்திற்குள் ஸ்ரீ ஸ்ரீ அவர்களின் அலுவலகத்தில் இருந்து நான் சொல்ல வந்தது ஊடகங்களால் வேறு மாதிரி சித்தரிக்கப்பட்டது என்று ஒரு செய்திக்குறிப்பு வெளியாகும்.பார்க்கலாம்.

Sunday, 26 April 2009

கலி காலமாச்சுதடா.....

CPM கட்சி எவ்வளவு ஊழலற்ற கட்சி என்பது எல்லோருக்குமே தெரியும். ஓரிரு வருடங்களுக்கு முன்பு NDTV எல்லா கட்சி எம்.பிகளை சந்தித்து லஞ்சம் கொடுக்க முயற்சித்த போது இந்தியாவில் லஞ்சம் வாங்காத ஒரே கட்சி கம்யூனிஸ்ட் கட்சிதான்.

ஆனால் அந்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தா.பாண்டியன் மீது சொத்து சம்பந்தமான புகார் சொல்லி இருக்கின்றார் North chennai DMK candidate இளங்கோவன், அதாவது சுமார் 60,000 கோடி ஊழல் செய்தார்களே அந்த கட்சி ஆள். வாழ்நாள் முழுவதும் ஒரு சில படங்களுக்கு screenplay எழுதிவிட்டு சுமார் 146 கோடி சொத்து வைத்து இருக்கிறாரே (அதாவது காண்பித்து) அவருடைய கட்சி ஆள்.

எவ்வளவு தூரம் ஒரு அமைப்பை கேலி செய்ய முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம். இதற்கு எனக்கு உவமையே கிடைக்கவில்லை .