Saturday, 4 October 2014

சிக்கெனப் பிடித்தேன்

நான் வசிக்கும் Fremont நகரிலிருந்து சற்று தள்ளி Concord என்ற இடம் உள்ளது. இங்குள்ள முருகன் கோவிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றேன். விநாயகர், முருகர், சிவன், துர்க்கை சந்நிதிகள். அர்ச்சனை செய்த சிவாச்சார்யார் திருவாசகத்தில் உள்ள

"அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே."

என்ற பாடலை கணீர்க் குரலில் பாட, எனக்கு இந்த "சிக்கெனப் பிடித்தேன்" என்கிற வரியை எங்கேயோ கேட்டிருக்கிறோமோ என்று வெகு நேரம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. ஏழாம் உலகத்தில் பண்டாரம் பழனியில் உருப்படிகளை விற்றது தெரிந்து பிக்பாக்கெட் திருடன் ஒருவன் பண்டாரத்தின் பின்னேயே வெகு நேரம் அலைந்து ஒன்றும் தேறாமல் அவரிடமே வந்து தேநீர் வாங்கிக் தரச் சொல்வான். அப்போது "நம்ம ஊர்ல ஆழ்வார் பிரபந்தம் பாடுவாங்களே, 'சிக்கெனப் பிடித்தேன்னு' அப்படி தான் அண்ணாச்சிய பிடிக்கலாம்னு வந்தேன் என்பான்.

கதையில் அந்த வரியை படித்த போது, "பணம், குடும்பம், வேலை" என்று எத்தனையோ விஷயங்களை "சிக்கெனப் பிடித்துக் கொள்ள வேண்டியுள்ளது" ஆனால் ஒருபோதும் இறைவனை அப்படி பற்றிக்கொள்ள தோன்றவில்லையே என்று எண்ணிக்கொண்டேன். கோவிலில் இந்த வரிகளை கேட்டபோது மறுபடியும் அதே நினைவு வந்தது.அது சரி, பிரபந்தம்னு சொல்லிடு இங்கே திருவாசக வரிகளை போட்டிருக்கேனேனு கேக்கறீங்களா..இதோ பிரபந்தம்..

வைகுந்தா!மணிவண்ணனே!என்பொல்லாத்
திருக்குறளா!என்னுள் மன்னி,
வைகும் வைகல் தோறும்
அமுதாய வானேறே,
செய்குந் தாவருந் தீமையுன் னடியார்க்குத்
தீர்த்தசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா, உன்னைநான்
பிடித்தேன்கொள் சிக்கெனவே.

Monday, 29 September 2014

2 ஸ்டேட்ஸ்

சேத்தன் பகத்தின் இந்த புத்தகத்தை மனைவியிடம் இரவல் வாங்கி படித்தேன். சுவாரசியமான புத்தகம். புத்தகத்தில் எனக்கு பிடித்த இடம் கதை நாயகன் க்ரிஷ் சென்னை வந்து படும் அவஸ்தைகள். சென்னை ஆட்டோ ஓட்டுனர்கள் பேசும் கெட்டவார்த்தை எல்லாம் ஞாபகம் வைத்து எழுதியிருக்கிறார் சேத்தன் பகத். நம்மை மீறி பல இடங்களில் சிரிக்கிறோம். புத்தகத்தில் பகத் தனது முதல் நிறுவனமான Citibank பற்றி எழுதிய பகுதிகளை படித்த போது எனக்கு என் முதல் வேலை நினைவுக்கு வந்தது. வணிகவியல் முடித்து என்ன செய்வது என்று தெரியாமல் நாளிதழ்களில் வரும் வேலை வாய்ப்பு விளம்பரங்களை பார்த்து "walk in" என்று போட்டிருக்கும் இடங்களுக்கு நானும் என் நண்பனும் செல்வோம்.

முகப்பேரில் அந்த மருந்து தயாரிக்கும் அலுவலகம் இருந்தது. சிறிய தொழிற்சாலை அவர்களுக்கு ராமாபுரத்தில் இருந்தது. விற்பனைப் பிரதிநிதி தமிழகம் முழுதும் தேவை என்று சொன்னது விளம்பரம். ஒரு சனிக்கிழமை காலை பல்லாவரத்தில் இருந்து முகப்பேர் சென்றோம். பிரதான சாலையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் உள்ளே சென்று வரவேற்பறையில் லேசாக புடவை விலகி செழுமை தெரிய அமர்ந்திருந்த அந்த சுமார் பெண்ணிடம் பெயர் கொடுத்துவிட்டு வெளியே நின்றுகொண்டிருந்தோம். எங்களை அழைத்த போது மதியம் மணி மூன்று. இரண்டு பச்சை வாழைப்பழம், ஒரு டீ வயிற்றில் இருந்தது.

நேர்முகத் தேர்வு, குழு கலந்துரையாடல் எல்லாம் முடிந்து இறுதி பெயர்ப் பட்டியல் வந்த போது மணி ஏழு. எங்கள் பெயர் இருந்தது. பத்துநாட்கள் முகப்பேரில் பயிற்சி. பயிற்சி முடியும் இறுதி நாளன்று நிறுவன தலைவருடன் நேர்முகம். அவர் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு வேலை. பத்து நாள் பயிற்சி ஆரம்பித்தது. நிறுவனத்தில் மருந்து பெயரை சரியாக உச்சரிப்பது தான் முதல் பயிற்சி. "செபெக்ஸ்" என்பது மருந்தின் பெயர். அதன் பிறகு, மருத்துவரை சந்திக்கும் போது எப்படி பேச வேண்டும், மருந்து அட்டையை எப்படி பிடித்துக்கொள்ள வேண்டும் போன்ற பயிற்சிகள். கிட்டத்தட்ட முப்பது பேருக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி கொடுத்தவர் நிறுவனத்தின் ஆரம்ப காலத்தில் சேர்ந்த ஒருவர்.

செபெக்ஸ் என்ற பெயர் சபெக்ஸ், சபீக்ஸ், சபேக்ஸ், செக்ஸ், சிக்ஸ் என்று ஒவ்வொருவர் வாயிலும் மாறி மாறி வந்த போது பயிற்சி கொடுத்தவர் பதட்டப்படாமல் சொன்ன ஒரே வரி "கடைசி நாள் முதலாளி முன்னால் இப்படி சொல்லாதீர்கள்" என்பது தான். அது ஏன் என்று அப்போது புரியவில்லை. என் விடலை பருவத்தின் உச்சம் அந்த காலகட்டம். நானும் என் நண்பனும் அவர் சொன்ன எதையுமே காதில் போட்டுக்கொள்ளவில்லை. ஆனால், நாங்கள் மருந்து பெயரை சரியாகவே உச்சரித்தோம்.

பயிற்சியின் கடைசி நாள் வந்தது. மதிய உணவு வேளை முடிந்த பின் நிறுவனத் தலைவர் வந்தார். எங்கள் எல்லாரையும் அவர் பார்க்கும் மாதிரி ஒரு வட்ட மேஜை போடப்பட்டு நாங்கள் அவரை சுற்றி அமர்ந்திருந்தோம். என்னை மருத்துவராக பாவித்து நீங்கள் பயிற்சியின் போது "கத்துகிட்ட வித்தைகளை மொத்தமாக இறக்குங்கள்" என்றார் லிங்குசாமி போல.

முதல் நபர் "சபெக்ஸ்" என்றார். "தே மவனே, நான் கஷ்டப்பட்டு மார்க்கெட் பிடிச்சிருக்கேன்டா, ஏன்டா பேரை மாத்தறே?" என்றார். அறையில் மயான அமைதி. நானும் என் நண்பனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். அடுத்த நபரை பார்த்து "நீ சொல்லு" என்றார் தலைவர். அவர் "செபிக்ஸ்" என்றார். முதலாளி அமைதியாக, "தம்பியோட அப்பா என்ன செய்யறாரு?" என்றார். "எண்ணெய் வியாபாரம் ஊர்ல", என்றார் நம்ம செபிக்ஸ். "அப்போ உங்க அப்பன் கூட சேர்ந்து அந்த மயித்தையே செய்ய வேண்டியதானே. இங்க எதுக்கு வந்த? என் உசிர வாங்கவா? எந்த நேரத்துல உங்க அப்பன் கோவணத்த அவுத்தானோ" என்றார்.

என் நண்பன் இயல்பாகவே கொஞ்சம் முன்கோபி. என்னிடம், "ஒம்மாள, நம்மள எதாவது சொன்னான், ஒத்த இவன நாளைக்கே பசங்ககிட்ட சொல்லி தூக்கறோம் மச்சான்" என்றான். நல்லவேளையாக எங்களுக்கு முன்னே இருந்தவர்கள் செய்த தவறுகளில் இருந்து நாங்கள் கொஞ்சம் கற்றுக்கொண்டு ஒழுங்காக பேசினோம். பெரிய அளவில் எங்களை எதுவும் சொல்லவில்லை அவர். ஆனால், மறக்கவே முடியாத ஒரு அனுபவம் அது. கடைசியில், வெளியூர் போக சொன்னதால் அந்த வேலை வேண்டாம் என்று முடிவு செய்தோம் நானும் என் நண்பனும். அப்பறம், தகவல் தொழில்நுட்பம் தான் நிறைய பணம் தரும் என்று ஞானம் பெற்று அதற்காக பயிற்சி பெற்று வேளைக்கு வந்ததை எல்லாம் புத்தகமாகவே போடலாம்.

மீண்டும் குளம்பியகத்தில்

பல்வேறு காரணங்களினால் எழுதுவது ரொம்பவே குறைந்துவிட்டது. வேலை, இடமாற்றம் எல்லாம் காரணம் தான் என்றாலும் மனம் சொல்கிறது "சோம்பல்" தான் நிஜமான காரணம் என்று. மீண்டும் எழுத உத்தேசித்திருக்கிறேன். குறைந்தது இரண்டு பதிவு வாரம் ஒன்றிற்கு. எனக்கு ஊக்கமளிப்பது நீங்கள் படிப்பதும் பின்னூட்டம் போடுவதும் தான். அதை எதிர்நோக்கி..

நன்றியுடன்,

வாசு