Saturday, 1 January 2011

ஸ்ரீபெரும்புதூர்

ஆண்டின் முதல் பதிவை சென்னைக்கருகே உள்ள ஒரு திருத்தலத்தை பற்றிய குறிப்போடு தொடங்குகிறேன். வருடப்பிறப்பை முன்னிட்டு இன்று காலை காஞ்சிபுரம் சென்றேன். வரும் வழியில் ராமானுஜர் அவதரித்த திருபெரும்புதூரில் உள்ள ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள்/ஸ்ரீ பாஷ்யகார பெருமாள் கோவிலுக்கு வண்டியை செலுத்தினேன்.

ஸ்ரீபெரும்புதூர் ஒரு காலத்தில் மிக அழகான கிராமமாக இருந்திருக்க வேண்டும். கோவில் உள்ள சாலையின் இரு புறமும் திண்ணை வைத்து கட்டப்பட்ட அழகான ஐயங்கார் வீடுகள். பெருமாள் பெயர் ஆதி கேசவன். ஸ்ரீதேவி பூதேவி சகிதமாக ஆதி கேசவ பெருமாள் காட்சி தருகிறார். தாயார் பெயர் எதிராஜநாதவல்லி.

நாயக்கர், நாயுடு குடும்பங்கள் பெருமாளுக்கு ஒரு காலத்தில் நிறைய கைங்கர்யம் செய்திருக்க வேண்டும். கோவிலில் உள்ள படங்களில் எல்லாம் தெலுங்கில் பெயர் மற்றும் விளக்கங்கள். பெருமாள் மற்றும் தாயார் பெயர்களில் கூட தெலுங்கு வாசம் இருப்பதை உணரலாம். கோவிலின் அருகே பழங்கள்/பூ விற்பனை செய்பவர்கள் கூட தெலுங்கு கலந்த தமிழில் பேசுகிறார்கள்.

பிரகாரத்தை சுற்றி முக்கிய வைணவ திருத்தலங்களின் பெயர்கள், அங்கு பெருமாளின் பெயர், அவர் காட்சி தரும் அழகு என்று படங்களாக வரைந்திருக்கிறார்கள். ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், திருமாலிருஞ்சோலை, பரமபதம், பத்ரிநாத், திருவல்லிக்கேணி போன்றவை சில உதாரணங்கள். கோவிலில் நம்மாழ்வர்க்கென்று தனி சந்நிதி உள்ளது. கோவில் எந்த ஆண்டு கட்டப்பட்டிருக்கும் என்று தெரியவில்லை ஆனால் உள்ளிருக்கும் சிலைகளின் அழகை பார்த்தால் சோழர் அல்லது விஜயநகர மன்னர்களின் காலமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

Friday, 31 December 2010

2010 - திரும்பிப் பார்க்கிறேன்

2010 ஆம் ஆண்டு இன்றுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறது. விடைபெறும் ஆண்டின் Highlights என்ன?

ஆதர்ஷ் வீட்டு வசதி வாரிய ஊழல், சுக்னா நில ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் போன்றவற்றை எல்லாம் புறமுதுகு காட்டி ஓட வைத்த, ஊழலுக்கெல்லாம் தாய் என்று வர்ணிக்கப்படும் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்த ஆண்டு.(அது நடந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது புல்லரிக்க வைக்கும் பெருமை)

ரஜினி டீ குடிப்பதையே இரண்டு மணி நேர படமாக எடுத்தால் கூட தமிழ்நாட்டில் நூறு நாள் ஓடும் என்பதற்கு சாட்சியாக எந்திரன் வெளிவந்த ஆண்டு.

முஹம்மத் அப்சல், அஜ்மல் கசாப் ஆகியோர் நம் அரசு செலவில் சௌஜன்யமாக கழித்த மற்றொரு ஆண்டு.

மாவோயிஸ்டுகள் தங்கள் வீர பிரதாபங்களை அரங்கேற்ற,அரசு கடமை தவறாமல் அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்த மற்றுமொரு சராசரி ஆண்டு.

ஆறேழு விபத்துக்களின் வாயிலாக ரயில்வே துறை தங்கள் திறமையை மீண்டும் ஒரு முறை நிருபித்த ஆண்டு.

டெண்டுல்கர் தன ஐம்பதாவது சதத்தை அடித்து இரண்டு கோடி ரூபாயை வீட்டிற்கு கொண்டு செல்ல, "கலக்கிட்டாம்ப்பா சச்சின்" என்று ஆங்காங்கே டாஸ்மாக்கில் நம் குடிமகன்கள் தங்கள் சம்பளப் பணத்தை செலவழித்து கொண்டாடிய மற்றுமொரு ஆண்டு.

என்னதான் வேகமாக வளர்ந்தாலும் போலிச் சாமியார்கள் மற்றும் "என் மருந்தை சாப்டினா சும்மா லைட் கம்பம் மாதிரி நிக்கும்" என்று சத்தியம் செய்யும் பழனி சித்த மருத்துவர்களுடனோ விஞ்ஞானத்தால் போட்டி போட்டு ஜெயிக்க முடியாது என்று மீண்டும் பறைசாற்றிய ஆண்டு.

இறுதியாக, மன்மோகன் சிங் உண்மையில் நேர்மையானவரா என்று மக்களை கொஞ்சம் சந்தேகப்பட வைத்த ஆண்டு.

Wednesday, 29 December 2010

இசை விமர்சகர்கள்

இசையை ரசிப்பதோடு நிற்காமல் அதைப் பற்றி தங்கள் கருத்துக்களை பதிவு செய்பவர்களை விமர்சகர்கள் எனலாம். இப்படி விமர்சனம் செய்ய இசையில் நல்ல ஞானம் வேண்டும். ஆனால், அவர்கள் இசையை தங்கள் தொழிலாக கொண்டிருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. இந்த பதிவு கர்நாடக இசை விமர்சகர்களை பற்றியது.

கர்நாடக இசை விமர்சகர்களில் முதன்மையானவர் காலம் சென்ற பி.வி.சுப்ரமணியம் என்கிற "சுப்புடு".சுப்புடுவின் விமர்சனத்துக்கு மறைந்த செம்மங்குடி சீனிவாச ஐயர் கூட தப்பிக்கவில்லை."எமர்ஜன்சி என்கிற கொடுமை கூட முடிவுக்கு வந்துவிட்டது ஆனால் செம்மங்குடிக்கு முடிவு வரவில்லை" என்ற சுப்புடுவின் விமர்சனம் 1970களில் மிகப் பிரபலம். ஒரு கட்டத்தில் செம்மங்குடி "நானும் வெட்கம் இல்லாம வருஷா வருஷம் பாடிண்டு இருக்கேன், நீயும் வெட்கம் இல்லாம வருஷா வருஷம் எழுதிண்டு இருக்கே" என்றார். "நாய்கள் மற்றும் சுப்புடுவிற்கு இங்கு அனுமதி இல்லை" என்று மியூசிக் அகாடமி 1980 களில் போர்டே வைத்தது.

சுப்புடு அளவிற்கு விமர்சனத்திற்காக புகழ் பெற்றவர்கள் யாருமில்லை என்றாலும், SVK,U.K, G.Swaminathan, Lakshmi Venkatraman, H.Ramakrishnan(வானமே எல்லை படத்தில் நடித்தவர்) போன்றவர்கள் இன்று கர்நாடக இசை விமர்சன உலகில் பிரபலமான பெயர்கள்.

இங்கே திரு.ராமகிருஷ்ணன் அவர்களை பற்றி கொஞ்சம் பேச வேண்டும். மாற்றுத் திறனாளியான இவர் செய்திருக்கும் சாதனைகள் பல. திருவையாறு தியாகராஜ ஆராதனை நிகழ்ச்சியில் ஒவ்வொரு வருடமும் பங்கேற்று மற்ற வித்வான்களை போல முழு மேடை கச்சேரி செய்பவர். மிருதங்கம்,கஞ்சிரா வாத்தியங்களை கற்றவர். கொன்னக்கோல் பயிற்சியும் பெற்றவர். ஸ்ரீ பைரவி கான சபா என்ற பெயரில் சென்னையில் சபா ஒன்றை அமைத்து இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.தமிழக அரசின் "கலைமாமணி" விருது பெற்றவர். நிகழ்ச்சி வழங்கியவரை ஊக்குவிக்கும் வகையிலேயே இவர் விமர்சனங்கள் இருக்கும். இன்றைய ஹிண்டுவில் கூட ஸ்ருதி சாகர் மற்றும் லக்ஷ்மி ரங்கராஜன் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளை விமர்சித்திருந்தார்.

மற்ற விமர்சகர்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவர்கள் விமர்சனங்களை படிப்பதோடு சரி.

Sunday, 26 December 2010

Cupid's Arrow - Insipid Show

பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் வகையில் மற்றுமொரு கமல் காமெடி. ஆனால், முன் சொன்ன படங்களின் அளவுக்கு நகைச்சுவையை எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள். தனக்கு கதையெழுத வரும், பாட வரும் என்று இனி யாருக்கு நிரூபிக்க நினைக்கிறார் கமல் என்று தெரியவில்லை. நல்ல வேளை, நடிப்பிலும் அதை செய்யாமல் மற்றவர்களுக்கு கொஞ்சம் வாய்ப்பளித்திருக்கிறார்.

கே.எஸ். ரவிக்குமார் சார், இந்த படத்துல நீங்க என்ன பண்றீங்க? நீங்க கமல் கூட கொஞ்ச நாள் சேராமல் இருப்பது உங்களுக்கு நல்லது. "You are losing your individuality". வழக்கம் போல் ரமேஷ் அர்விந்த், ஊர்வசி என்று கமல் லாயத்தை சேர்ந்தவர்கள். கொச்சின் ஹனீபா செய்திருக்க வேண்டிய பாத்திரத்திற்கு மலையாளத்தில் இருந்து மோகன்தாஸ் என்ற நடிகர். மாதவன், த்ரிஷா நடிப்பு பரவாயில்லை. சங்கீதாவிற்கு இது ஜுஜுபி ரோல்.

கௌதம் பாணியில் படம் முழுதும் ஆங்கில வசனங்களை அள்ளித் தெளித்திருக்கிறார்கள்(பதிவின் தலைப்பிற்கான காரணம் புரிந்ததா?). வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் படங்களின் பி மற்றும் சி வெற்றிகள் கமலுக்கு நம்பிக்கை அளித்திருக்க வேண்டும். இந்த நிலை வருங்கால கமல் படங்களில் தொடரலாம். நீல வானம் பாடலை பார்க்கையில் "பார்த்த முதல் நாளே" பாடல் நினைவுக்கு வராவிட்டால் நீங்கள் ஆசிர்வதிக்கபட்டவர்.

இசை, பாடல்கள் சுமார் ரகம். தமிழ் இனி மெல்லச் சாகும், அறம் செய்ய விரும்பு போன்ற standard கமல் வசனங்கள். matrimony, alimony என்று "கிரேசி" ஸ்டைல் காமெடி.

மொத்தத்தில் கமல் சார், "We need a break".