Saturday, 29 January 2011

கமல் - தனி வாழ்வின் உக்கிரம் (நிகழும் அற்புதம்)




மேலே உள்ள படத்தில் இருப்பது கமலின் மகள் ஸ்ருதி கமல்ஹாசன்! இந்த படம் இந்த பதிவிற்கு மிகவும் முக்கியமானது. நான் கமல் பற்றி எழுதிய கடந்த பல பதிவுகள் அவருக்கு எதிராகவே எழுதி இருக்கிறேன்.

ஆனால் இந்த படம் அவரின் படங்களை பற்றி அல்ல, அவரின் தனி வாழ்வை பற்றி, அவரின் தனி வாழ்வில் அவர் கடைபிடித்து வரும் உக்கிரமான நேர்மை பற்றியது.

இங்கே நேர்மை என நான் கொள்வது மனதிற்கும் புத்திக்கும் உண்மையாக நடந்து கொள்வதை, எதன் பொருட்டும் சமாதானம் அடையாமல், போலித்தனம் இல்லாமல், பொய் இல்லாமல்  வாழ்வதை! (உடனே அவர் சில படங்களை ஹாலிவுட்டில் இருந்து காப்பி அடித்தார் என பஜ்ஜி சுட  வேண்டாம் .. நான் சொல்வது அவரது சொந்த வாழ்வை).

பொதுவாக இந்தியாவில் விவாகரத்தை செய்தவர்கள் அடுத்த மணவாழ்வை மிக மிக ஜாக்கிரதையாக அணுகுவார்கள் , உண்மையிலேயே பிரச்சினை என்றாலும் அதனை பொறுத்து கொண்டு வாழ்வார்கள். 

இதை படிக்கும் பலர் இதனை கண்டும், கேட்டும் அனுபவித்தும் இருப்பார்கள்.

இரண்டாவது விவாகரத்து என்பது தென்னிந்தியா சினிமா நடிகர்களுக்கே மிகவும் புதிது.இரண்டாவது விவாகரத்து முடிந்து , அவர் தேர்ந்தெடுத்தது Living Together relationship. அவர் அவரது துணைவியான கௌதமியுடன் சிவாஜி வீட்டு திருமணம் உட்பட பல திருமணங்களுக்கு வந்தார்.

அடுத்து அவருடைய மகளுடைய தொழில், இது வரை நீங்கள் எந்த தென்னிந்தியா சினிமா நடிகருடைய மகளாவது சினிமாவில் அதுவும் கவர்ச்சியாக நடித்து பார்த்து இருக்கறீர்களா?

அது மட்டுமல்ல அவரது முதல் விவாகரத்து மூலம் அவரது வீட்டு சொந்தங்கள் அவரை விட்டு விலகியது , சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ளாதவர்கள் பட்டியலில் இருந்தது சாருஹாசன் (கமலின் அண்ணன்), சுகாசினி (அண்ணன் மகள்) , மணிரத்னம் (அண்ணனின் மருமகன்).

சுருதி ஹாசன் ஒருமுறை தன் திருமணம் பற்றி கூறும்போது "தன் திருமணம் பற்றி அப்பாவிடம் கூறினால் முதலில் வாழ்த்து தெரிவித்து விட்டுதான் பிறகு மாப்பிள்ளை யார் என கேட்பார் " என கூறி இருந்தார்.

இப்படி தமிழ் சமூகம் எதிர்பார்க்கும் தம்பி, கணவன் , தந்தை என்ற எந்த பாத்திரத்திற்கும் (தன் சுயத்தை இழப்பதால்) தன்னை விட்டு குடுக்காமல் வாழ்பவரை நீங்கள் பார்த்ததுண்டா?





குடும்ப உறவு முறையை விட்டு குடுத்து வாழ்வது ஒரு சாதனையா என்று கேட்பவர்கள் தமிழகத்தில் வாழ தகுதி இல்லாதவர்கள் , ஏனெனில் கடந்த பல  வருடங்களாக தமிழக அரசியலில் இருந்து வரும் முக்கிய பிரச்சினை குடும்ப(திற்குள் வரும்) அதிகார போர்.
அதை தவிர்த்து பார்த்தாலே , இங்கே இந்தியாவில் - விளையாட்டில், அரசியலில் , சினிமாவில் , வியாபாரத்தில்  உள்ள முக்கிய பிரச்சினை nepotism (தமிழில் நேரடி மொழிபெயர்ப்பு இல்லை, உற்றார் உறவினர்களுக்கு செல்வாக்கான ஆட்களின் உதவி என்று வேண்டுமானால் சொல்லலாம் இல்லையென்றால் கலைஞரின்/சசிகலாவின் குடும்ப ஆட்சி என்று சுருக்கமாக கூறலாம்). இந்த nepotism பிரச்சினைக்கு முதல் காரணம் குடும்ப உறுப்பினரை பகைத்து கொள்ள முடியாத அமைப்பு , அதன் மூலம் தொடர்ச்சியான சமரசங்கள் ,சமாதானங்கள்,பேரங்கள்...

மேலும்
இதை நீங்கள் எப்படி பார்க்கறீர்கள் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நம்முடைய முதல்வரே மனைவியும் / துனைவியுமாக 'வளம்' வருகிறார். மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவிற்கு 'சட்டப்படியே' இரண்டு மனைவியர்.பல வட்ட/மாவட்ட/எம்.எல்.ஏ/எம்.பி/அமைச்சர்களுக்கு "சண்டேன்னா ரெண்டு" (அவரவர் ரேஞ்...அய்யா பெரிய ஆளுங்க....,அவங்க பெரியவங்க , இவங்க சின்னவங்க),கர்நாடக முன்னாள் முதல்வர் H.D.குமாரசாமி பற்றி சமீபத்தில் வெளியான தகவல் கன்னட நடிகை குட்டி ரேவதியை (தமிழில் இயற்கை படத்தில் நடித்தவர்) இரண்டு வருடம் முன்பு திருமணம் செய்து கொண்டார், தற்போது ஒரு குழந்தை , இதை முன்னாள் முதல்வர் மறுக்கவில்லை.


சினிமா உலகை எடுத்து கொண்டால் நம் கண் முன்னே தெரிபவர் ஜெமினி கணேசன் , விஜயகுமார் , புரட்சி தலைவர்! அடுத்த தலைமுறையில் பிரபு (ரகசிய திருமணம் செய்து பிறகு கைவிட்டார் என்று குஷ்பு பகிரங்கமாக பேட்டி அளித்தார்) , கார்த்திக் (இரு மனைவியர் , தன் மனைவியின் சகோதிரியையே இரண்டாம் மனம் செய்து கொண்டார்). பாலு மகேந்திரா நடிகை மௌனிகாவை திருமணம் செய்து கொண்டார் , ஆனால் பகிரங்கமாக அறிவிக்கவில்லை. ஒரே ஒரு விதிவிலக்கு சரத்குமார்! வெகுகாலம் கழித்து பட்டியலில் சேர்பவர்கள் பிரகாஷ்ராஜ் / பிரபுதேவா.


ஆனால் மேலே சொன்ன அனைவரை விட கமல் இந்த விஷயத்தில் மிக மோசமாக பார்க்க படுகிறார். மேலே சொன்ன அனைவருக்கும் / கமலுக்கும் இருக்கும் வித்தியாசம் ..கமல் இரண்டு மனைவியருடன் எப்போதும் வாழவில்லை, மேலும் எதையும் ரகசியமாக செய்யவில்லை. இது போன்ற விஷயங்களை எப்போதும் ரகசியமாக செய்யும் தமிழர்களின் குலவழக்கதிற்கு மிக மிக எதிரானது இது. தமிழகத்தில் சமூக மட்டத்தில் மேலே செல்ல செல்ல தவறுகள் மறைக்கப்படும் / மறுக்கப்படும் / நியாபடுத்தபடும் என்ற ஆணாதிக்க சொகுசு இருந்தும் அவர் இதை செய்தார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் தன் படங்களில் அவர் கற்பு எனும் விஷயத்தையும் / காதல் எனும் விஷயத்தையும் அணுகும் விதத்தை கவனித்தால் தெரியும், தான் நம்புவதை தன் படங்களில் சொல்ல துணியும் மனப்பான்மையை.

அவர் படங்களில் அவர் என்றுமே "காதல் ஒருமுறைதான் வரும்" (நன்றி : விஜய் மற்றும் டி.ராஜேந்தர்) என்று வசனமோ காட்சி அமைப்போ வைத்ததே இல்லை, அதைவிட முக்கியம் காதல் இரண்டாம் முறை வரும் என்பதை மீண்டும் மீண்டும் காண்பித்து இருக்கிறார், அதற்கு அவர் படங்களில் இருந்து பெரிய பட்டியலே போடலாம்

-சிப்பிக்குள் முத்து
-வேட்டையாடு விளையாடு
-மும்பை எக்ஸ்பிரஸ் (இதில் வில்லனின் சின்ன வீடுதான் ஹீரோவின் காதலி)
-மகாநதி
-தேவர் மகன்
போன்றவை சில.

இது மற்ற 'புனித காதல்' படங்களில் இருந்து எவ்வளவு மாறுபடுகிறது என்பதை கவனியுங்கள்.மொத்தத்தில் எதிர் கலாச்சாரத்திற்கு தமிழகத்தில் மிக முக்கியமான பிரதிநிதி கமல்ஹாசன்.

1.இதை பெண் நடிகைகளில் செய்து காட்டியவர் ராதிகா மற்றும் லக்ஷ்மி , அவர்களை பற்றி தனி பதிவே போடலாம்.
2.இதில் மற்றொரு விஷயம் ஒரு பெண்ணை / ஆணை பார்த்து காதலித்து , திருமணம் செய்து  கடைசி வரை வாழ்பவரை பற்றி இங்கே பேச்சில்லை, அவர்களுக்கு my warm regards!

Thursday, 27 January 2011

இளையராஜா ரசிகர்கள் பார்க்க வேண்டிய வலைமனை

இளையராஜா ரசிகர்கள் கவனிக்க வேண்டிய வலைமனைகளில் ஒன்று  http://rajarasigan.blogspot.com

Wednesday, 26 January 2011

சவால்-குடியரசு என்றால் என்ன?

எனக்கு மிகப்பல நாட்களுக்கு பின்தான் குடியரசு என்பதற்கான அர்த்தம் தெரிந்தது. இப்போது இதை படிக்கும் நீங்கள் சொல்லுங்கள், சுதந்திர தினம் என்றால் தெரியும், ஆனால் குடியரசு தினம் எதற்காக கொண்டாடுகிறோம்? 26-1-1950 அன்று என்ன நடந்தது? நம் நாட்டை குடியரசு (republic) என்று ஏன் கூறுகிறோம்?

இதை படிக்கும் நீங்கள் விக்கிபீடியாவை / கூகிளாண்டவரை  துணைக்கு அழைக்காமல் , மனசாட்சியுடன் 2/3 வரிகளில் பதில் கூறுங்கள் (பின்னூட்டம் வழியாக). 

Tuesday, 25 January 2011

தியாகராஜ ஆராதனை - திருவையாறு

ஞாயிறு காலை திருவையாறு சென்றேன்.ஆராதனை திங்களன்று தான் என்பதால் கூட்டம் அதிகமில்லை. தியாகராஜர் சந்நிதியில் மட்டும் கொஞ்சம் கூட்டம் இருந்தது. காவிரியில் தண்ணீர் அதிகம் இல்லை. குழந்தைகள் இருவரையும் காவிரியில் இறக்கி ப்ரோக்ஷனம் செய்தேன். மேடையில் பெயர் தெரியாத வளரும் கலைஞர்களின் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. ஜெயமோகன் எங்காவது தென்படுகிறாரா என்று அந்த சொற்ப கூட்டத்தில் தேடினேன்.

காவேரி கரைக்கு செல்லும் வழி நெடுக கடைகள். அண்ணாமலை பல்கலைகழகம் தொலை தூர கல்வித் துறையின் அரங்கு, பக்தி பாடல்கள் கடை, மிருதங்கம், தவில் ஆகியவற்றுக்கு தேவையான உபகரணங்கள் விற்கும் கடை, தமிழக அரசின் போலியோ சொட்டு மருந்து முகாம் என்று ஏகப்பட்ட அங்காடிகள். காரியதரிசி என்ற முறையில் தவில் வித்வான் ஹரித்வாரமங்கலம் ஏ.கே. பழனிவேல் ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தார். ஜி.கே. மூப்பனார் குடும்பம் தான் வெகு காலமாக இந்த விழாவிற்கு தொடர்ந்து ஆதரவு. தஞ்சையை அடுத்த கபிஸ்தலம் மூப்பனாரின் சொந்த ஊர்.

தியாகராஜருடன் பெங்களூர் நாகரத்னம்மாள் படமும் சந்நிதியில் இருந்ததை பார்த்த போது மனதிற்கு இதமாக இருந்தது. இத்தனை சங்கீத வித்வான்கள் இன்று வந்து திருவையாறில் பாடினாலும் அவருக்கு நினைவுச் சின்னம் அமைத்தது அந்த தாசி தானே.வரும் வழியில் ஐயாறப்பர் (வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவேரி, வடவாறு என்று ஐந்து ஆறுகள் தாண்டி இருப்பதால் திருவையாறு சிவனுக்கு ஐயாறப்பர் என்று பெயர்) கோவில் முகப்பில் இருக்கும் ஆட்கொண்டார் சந்நிதியில் குங்குலியம் வாங்கிப் போட வேண்டுமென்று நினைத்தேன். கடை வீதியில் கூட்டம் அதிகம் இருந்ததால் காரை நிறுத்தவில்லை. ஆட்கொண்டார் சந்நிதியில் குங்குலியம் போடுவோரை எந்த ஜந்துவும் கடிக்காது என்பது ஐதீகம்.சென்னை வந்து சேர்ந்தவுடன் வலது கை ஏதோ பூச்சி கடிபட்டு வீங்கி விட்டது. குங்குலியம் போடாதது தான் காரணமோ என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.