Wednesday, 18 November 2009

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்


மயிலாப்பூர் சித்திரகுளம்

மரங்கள் சூழ்ந்த சென்னை சாலைகள்

ஹிண்டு நாளிதழில் ஒவ்வொரு புதன்கிழமையும் "Metro Plus" பகுதியில் வரும் "Memories of Madras" என்னும் பத்தியில் சென்னை தங்கள் இளமைக் காலத்தில் எப்படி இருந்தது என்று எழுத்தாளர் பாலகுமாரன், வி.கல்யாணம் போன்றவர்கள் தங்கள் மெட்ராஸ் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள்.

வீட்டை திறந்து வைத்து விட்டு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், திருட்டு பயமே கிடையாது என்று இவர்கள் சொல்வதை எல்லாம் இன்றைய சென்னையுடன் ஒப்பிடவே முடியவில்லை. கூட்டமில்லாத சாலைகள், மரங்கள் சூழ்ந்த தி. நகர் பகுதி, குப்பையில்லாத மெரினா கடற்கரை என்று நிறைய நம்ப முடியாத தகவல்கள். ஆனால், நம்பியே ஆக வேண்டும் என்கிற மாதிரி கூடவே அந்த கால சென்னையின் படங்களை வேறு பிரசுரித்து வெறுப்பேற்றுகிறார்கள்.நேரம் கிடைத்தால் அவசியம் படியுங்கள்.

Photos Courtesy: Hindu Archives

Monday, 16 November 2009

நான் முதல்வரானால் கட்டுரை...

சிறு வயதில் நான் முதல்வரானால் என்று கட்டுரை எழுத சொல்லுவார்கள்..அது போல இப்போது எழுதினால் எப்படி இருக்கும் என்று பார்க்கிறேன் , இப்படி வந்தது,

முதல் விசிட் தமிழகத்தில் உள்ள முக்கிய சிறைச்சாலைகள் - அங்கே பார்க்க வேண்டியது....

-70 வயதுக்கு மேல் இருப்பவர் எத்தனை பேர்? அதில் தண்டனை காலம் முடிந்தும் இருப்பவர் எத்தனை பேர்? அதில் கடுமையான உடல் உபாதையினால் அவதிப்படுபவர் எத்தனை பேர்? மூர்கமாக தாக்கப்பட்டு உடல் உறுப்பு சிதைந்தவர் எத்தனை பேர்? ஓரினப்புனர்சியில் வேறு வழியில்லாமல் ஈடுபட்டவர் எத்தனைபேர்?
    
- பெண்கள் சிறைகளில் கர்பப்பையை எடுக்க வேண்டிய நிலையில் இருப்பவர் எத்தனை பேர்? கர்பமாக இருப்பவர் எத்தனை பேர் அவருக்கான ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்ற கேள்விக்கான பதில்? மாதவிடாய் காலங்களில் அவர்களுக்கு வேண்டிய உபகரணங்கள் கிடைக்கிறதா? 

-சிறைகளில் உள்ள மன நலம் பாதிக்கப்பட்டவர் எப்படி நடத்தபடுகின்றனர்? மன நோயாளியுடன் எத்தனை பேர் ஒரே அறையில் தங்கி இருக்கின்றனர்?
 -சிறைகளில் உள்ள கழிவறைகளின் நிலை என்ன, எத்தனை நாட்களுக்கொருமுறை சுத்தம் செய்யபடுகின்றது?

அடுத்த விசிட் மனநோய் விடுதிகளுக்கு, அங்கேயும் முதல்வர் பார்க்க வேண்டியது..


-பெண்கள் மனநோய் விடுதிகளில் உள்ள பெண்களின் உடல்நிலை முக்கியமாக பெண்களுக்கு வரும் பிரத்யேக உடல் பிரச்சினைகள் எப்படி எதிர்கொள்கின்றனர்?
-மனநோய் விடுதியில் எத்தனை பேர் இருக்க முடியும்? எத்தனை பேர் இருக்கிறார்கள்?
-குழந்தைகளுக்கு தனி மனநோய் விடுதி இருக்கிறதா / தனிப்பிரிவு இருக்கிறதா?
-முக்கியமாக குணமடைந்தும் வெளியே போகமுடியாமல் இருக்கும் நோயாளிகள் எத்தனை பேர்?
-அரசாங்கத்திற்கு தெரியாமல் நடத்தப்படும் மனநோய் விடுதிகள் (ஏர்வாடி / குற்றாலம் போன்ற இடங்களில் நடக்கும்) மனநோய் விடுதிகளில் உள்ளே  போகும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கும் வெளியே வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கும் இருக்கும் வித்தியாசம்.
-மனநலம் சரியாக இருந்து , பிற காரணங்களால் (உ.தா பெண்ணை காதலித்தவனை பைத்தியம் என்று சொல்லி அரசியல் செல்வாக்கு உள்ள பெரும்புள்ளி ஒருவனை குற்றாலத்தில் உள்ள மனநோய் விடுதிக்கு அனுப்பிய செய்தியை படித்து இருக்கிறேன்) மனநோய் விடுதிகளில் மாட்டிக்கொண்டு அங்கே இருக்கும் சூழ்நிலை காரணமாக பைத்தியம் ஆகியவர் எத்தனை பேர்?

-மன நோயாளிகளாக மருத்துவமனைக்கு வந்து கர்ப்பம் ஆன  பெண்கள் எத்தனை பேர்? அவர்களுக்கு கருக்கலைப்பு எந்த மாதத்தில், யாரால் செய்யப்பட்டது?
-பொது மருத்துவமனையில் பெற்றெடுத்த குழந்தைகளில் பிறந்த சில மணி நேரங்களில் காணாமல் போய் , சில மாதங்களில் கை கால் இழந்த நிலையில் உள்ளவை எண்ணிக்கை ?
-அப்படி தொலைந்து போனதால் மனநலம் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் எண்ணிக்கை?

ஒருவேளை இப்படியெல்லாம் தோன்றுவதால்தான் வளர்ந்த பிறகு இப்படி கட்டுரை எழுத வாய்ப்பு வரவில்லையோ....?