தற்போது தமிழில் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருப்பவர்களில் கவனிக்க வேண்டியவர்கள் பட்டியலில் ஜெயமோகனின் பெயர் இருக்கிறது. சில ஆண்டுகளாக எழுதி வரும் இவர் கதைகளை நான் அவ்வப்போது கவனித்ததுண்டு. போன வருஷம் "கதா" என்கிற அகில இந்திய நிறுவனம் வெளியிட்ட தொகுப்பில் இவர் கதையான 'ஜகன் மித்யை' இடம் பெற்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வந்து ஜனாதிபதி பரிசு பெற்றது சந்தோஷமாக இருந்தது. (இவருடைய வேறு நல்ல கதையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்பது வேறு விஷயம்) சிறு பத்திரிகைகளில் எழுதி வரும் ஒரு எழுத்தாளருக்கு இந்த மாதிரி அடையாளம் கிடைத்திருப்பது சந்தோஷமான விஷயமே.
என்னைப் பொறுத்தவரையில், நான் ஒரு சிறுகதையின் உணர்ச்சிப்பூர்வமான அனுபவத்தில் பங்கேற்கும்போது தான் அது எனக்கு நல்ல கதையாகிறது. இல்லையெனில் நான் அதை உடனே நிராகரித்து விடுகிறேன். மற்றவன் அனுபவம் எனக்கு முக்கியமில்லை.
இந்தப் பரிட்சையில் ஜெயமோகனின் பதினான்கு கதைகளில் ஐந்து தேர்ந்தன. இதனால் மற்ற கதைகள் நல்ல கதைகள் இல்லை என்று சொல்லவில்லை. எனக்கு அவை உறைக்கவில்லை. உதாரணம் 'ஜகன்மித்யை' என்கிற கதையை அகில இந்திய அளவுக்கு உயர்த்தித் தேர்ந்தெடுக்க அக்கதையில் ஏதும் இருப்பதாக எனக்குப் படவில்லை. ஆனால், அதைத் தேர்ந்தெடுத்த சுந்தர ராமசாமி ரசித்திருக்கலாம். மாறாக இந்த தொகுப்பில் உள்ள 'பல்லக்கு' என்கிற கதை அண்மையில் தமிழில் எழுதப்பட்ட சிறந்த கதைகளில் ஒன்று என்று கருதுகிறேன். இதை எப்படி அவர்கள் எப்படி விட்டிருக்க முடியும் என்று ஆச்சர்யமாக இருக்கிறது.
ஜெயமோகன் ஒரு வேற்று மொழிக்காரரின் அசாத்திய தைரியத்துடன் சிறுகதையின் பல்வேறு வடிவங்களை முயற்சிப்பதை பாராட்ட வேண்டும். வேதகாலக் கதைகள், சாமியார் கதைகள், பிலாசபி கதைகள் எல்லாமே தயங்காமல் முயற்சிக்கிறார். தன் முன்னுரையில் 'அறச்' சார்பே எனது கடவுள். அறச்சார்பற்ற படைப்பை இலக்கியமாக மதிக்க மாட்டேன். கால் சுண்டு விரலால் எற்றித்தள்ள தயங்க மாட்டேன். அவற்றின் சகல அங்கீகாரங்களின் கூட! என்று ஆரவாரமான அலட்டலான முன்னுரையின் தேவையில்லாமலேயே 'நதி', 'விலை', 'போதி', 'படுகை' போன்ற கதைகளை ரசிக்க முடிகிறது. அறச்சார்பு என்று எதைச் சொல்கிறார் என்பது குழப்பமாக இருப்பினும், ஒரு தொகுதிக்கு ஒரு 'பல்லக்கு' வந்தாலே போதும்.