Friday, 3 July 2009

லோகிததாஸ்

நான் பார்த்த மலையாள படங்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. ஆனால், பார்த்த சில படங்கள் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு என்னை பாதித்திருக்கின்றன. சில படங்கள் உடல் ரீதியாக பாதித்திருக்கின்றன:-)).சில படங்கள் உள்ளத்தை பாதித்திருக்கின்றன.அப்படி உள்ளத்தை பாதித்த படங்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடியவை கிரீடம், தனியாவர்த்தனம். அந்த படங்களை பார்த்த போது எனக்கு லோகிததாஸ் யார் என்று தெரியாது. ஆனால், தனியாவர்த்தனம் பார்த்துவிட்டு அழுததை மறக்க முடியாது. இதை நான் சொல்வது பெரிய விஷயம் இல்லை. சினிமாவின் பாசாங்குகள் அறிந்த கலைஞர்கள் பலர் இதை சொல்லி கேட்டிருக்கிறேன். குறிப்பாக கமல். ஏனென்றால், கமல் அவ்வளவு சீக்கிரம் ஒருவரை புகழமாட்டார். தசாவதாரத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கமல் மம்மூட்டியை பார்த்து சொன்னார் "I cry everytime when i watch thaniyavarthanam."

சினிமாவின் உண்மையான ஹீரோ கதையும் அது திரைக்கதையாக அமைக்கப்படும் வித்தையும் தான். அப்படி பார்த்தால் மலையாள சினிமாவின் முக்கிய ஹீரோக்களில் ஒருவர் லோகிததாஸ். அவருக்கு கேரளா கொடுத்திருக்கும் மரியாதையை நீங்கள் இங்கே படித்து தெரிந்து கொள்ளலாம். லோகிததாஸ் யார் என்று நமது தமிழ் ரசிகர்களை கேட்டால், "மீரா ஜாஸ்மினை வெச்சிருக்கார் அப்படின்னு பேப்பர்ல எல்லாம் வந்துச்சே, அவர்தான?" என்பார்கள். அதற்கு மேல் நமக்கு அவரை பற்றி தெரியாது.

பெரும்பாலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு படத்தின் கதையாசிரியர் யார் என்றே தெரியாது. அதை தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை. நமக்கு தேவை எல்லாம் ஹீரோ தான். நல்ல கதை மற்றும் திரைக்கதை வல்லுனர்களாக நாம் கருதும் பாலு மகேந்திரா, பாக்யராஜ், பாலசந்தர்(அனந்து தான் இவருக்கு எல்லாம்),பாரதிராஜா ஆகியோருக்கு தமிழ்நாடு இப்படி ஒரு மரியாதையை செய்யும் என்று தோன்றவில்லை. அப்படியே செய்தாலும் அது அவர்களின் இலக்கிய ரசனைக்கோ அல்லது கதை எழுதும் திறனுக்கோ கிடைத்ததாக எடுத்துக்கொள்ள முடியாது.

Thursday, 2 July 2009

வடகொரியா

வடகொரியாவை கேள்விப்பட்டு இருப்பீர்கள் , தெரியாதவர்களுக்கு அதை ஒரே வார்த்தை சொல்ல வேண்டும் என்றால் நரகம் என்று சொல்லலாம். கம்யுனிஸ்டுகள் ஆளும் தேசம், பல பத்தாண்டுகளாக தந்தையும் மகனும் ஆட்சி செய்யும் தேசம் (அடுத்த வாரிசாக பேரனும் தயார்).

அங்கே இருக்கும் சிறைகளில் நடக்கும் கொடுமைகள் மட்டும் இங்கே

- சரமாரியாக அடிப்பது, ஷாக் கொடுப்பது, குளிரிலோ அனல் காற்றிலோ வெகுநேரம் நிர்வாணமாக நிற்க வைப்பது.

-பொது இடத்தில் நிர்வாணமாக நடக்க வைப்பது,நிற்கவோ உட்காரவோ முடியாத சின்னஞ்சிறு அறையில் பலநாட்கள் இருக்கவைப்பது.

-பல மணி நேரம் முட்டி போட்டும், அசையாமல் உட்கார வைத்து பார்ப்பது (இது கைதிகள் மயக்கமையும் வரை தொடரும்)

-மயக்கமடையும் வரை situp செய்ய வைப்பது

-முக்கியமான ஒரு கொள்கை , சிறைக்குள் குழந்தை பிறக்க கூடாது , அதனால் அபார்ஷன் செய்யப்படும், அது எத்தனை மாத கருவாக இருந்தாலும் சரி.

-அப்படி தப்பி தவறி குழந்தை பிறந்துவிட்டால், ஒரு தண்டனை, தாயின் கண்கள் முன்னாள் குழந்தை பட்டினி போட்டோ அல்லது வேறு விதமாகவோ கொல்லப்படும். இது போனஸ்.

-அரசியல் கைதிகள் இத்தனை கொடுமைகளை அனுபவித்தபின், உயிரோடு இருந்தால் அதன் சர்வாதிகாரி (மறைந்த) கிம் இல் சங்ன் பேச்சை மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டும்.

-இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அரசியல் கைதிகளுக்கு விடுதலை என்பதே கிடையாது.

-1994-இல் நாட்டின் சர்வாதிகாரி கிம் இல் சங் மைந்த போது, நாட்டின் குடிமக்கள் அனைவரும் தரையில் மண்டியிட்டு அழவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மேலும் அனைவரும் அருகில் உள்ள சர்வாதிகாரியின் உலோகசிலையை கட்டிபிடித்து அழவேண்டும் என்றும் உத்தரவு போடப்பட்டது.

-வடகொரியாவில் கிம்-இல் -சங்கின் சிலைகள் மட்டும் ஆயிரக்கணக்கில் , நகரத்தில், கிராமத்தில், காட்டில் என்று இல்லாத இடமில்லை. சுமார் மூன்று வயதிலிருந்து அவரின் உருவ பொம்மை பதித்த டாலர் செயின்களை எல்லோரும் அணியவேண்டும் என்று அரசு உத்தரவு.

சிந்தித்து பார்த்தால் , இந்தியாவும், தமிழகமும் இதற்கு மிக அருகில் இருக்கிறது, ஒரே ஆறுதலாக ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வந்து ஜனநாயகம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது , எந்த மகானுபாவர் செய்த புண்ணியமோ!

Wednesday, 1 July 2009

சவீதாபாபி

கலாசார தலிபான்கள் இண்டர்நெட்டில் ஏன் கை வைக்கவில்லை என்று எழுதி இருந்தேன், கையை வைத்து விட்டார்கள் , இந்தியாவின் முதல் porn site (தமிழில் எப்படி சொல்ல - பாலியல் வலைமனை...?!) சவீதாபாபி டாட் காமை இந்திய அரசாங்கம் தடை செய்து விட்டது.

ஆனால் பிரச்சினை என்னவென்றால், இந்த சைட்டில் வருவது கற்பனை கதை, படம், ஆனால் நேரடியாக விபச்சாரத்திற்கு அழைக்கும் escorts வலைப்பக்கங்கள் இந்தியாவில் ஏராளமாக இருக்கின்றன , அவைகளை ஏனோ தடை செய்யவில்லை. சவீதாபாபியை விட விவகாரமான இந்திய ப்ளாக்குகள் ஏராளமாக இருக்கின்றன , அதிகாரபூர்வமாக ஆரம்பித்தால் தடை போல..

எப்படியோ வெறும் உடைகளை தடை செய்துவிட்டு, இது போன்ற வெப்சைட்டுகளை தடை செய்யாமல் இருப்பது ஒரு 'அரைவேக்காட்டுத்தனமான' செயலாக இருப்பதால், இந்த 'முழுவேக்காட்டத்தை' வரவேற்கலாம்.

Tuesday, 30 June 2009

சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணிற்கு...


உத்திர பிரதேசத்தில் மாயாவதி, கன்ஷிராம் போன்றோரின் சிலைகளை வைக்க அரசுக்கு ஏற்பட்ட செலவு ரூ. 1000 கோடி.

Sunday, 28 June 2009

பாராட்டு

யோசித்து பார்க்கையில், நாம் பாராட்ட வேண்டியவர்களை , சரியான முறையில் பாராட்டுகிறோமா என்று தெரியவில்லை.

பாராட்டு சமூக வாழ்வின் ஒரு முக்கியமான அங்கமாகவே இருக்கிறது, சமூகத்தில் சரியான நேரத்தில் முக்கியமான செயல்களை, பெரும் ஆபத்துக்களை, சீரழிவுகளை தடுப்பவர்களை, தன்னலம் பாராது உழைப்பவர்களை , ஒரு மாற்றத்தை கொண்டு வருபவர்களை , சீர்திருத்தம் செய்பவர்களை, கவலைகளை குறைப்பவர்களை , பீதியை குறைத்து, பயத்தை குறைத்து ஆசுவாச படுத்துபவர்களை , பெரும் நிம்மதி அளிப்பவர்களை, அநியாயங்களை தட்டி கேட்பவர்களை, மாறுபட்ட துறைகளில், அதிகம் கவனித்திரா துறைகளில் முதன்முறையாக நுழைந்து சாதிப்பவர்களை நாம் சரியான முறையில், நிறுவனபடுத்தி பாராட்ட தவறுகிறோம் என்றே தோன்றுகிறது.

நாம் பாராட்டு எல்லாம் சினிமா, சங்கீதம் என்று கலைதொடர்பான விஷயங்களுக்கும், விளையாட்டுகளுக்குமே போய் விடுவதாக தோன்றுகிறது, இது உலகெங்கும் நடக்கும் விஷயம்தான் எனினும் , மற்ற முக்கிய துறைகளில், விஷயங்களில் இருப்பவர்களுக்கு நாம் எம்மாதிரியான பாராட்டை வழங்குகிறோம் என்று தெரியவில்லை, அல்லது தெரியும்படி பாராட்டை
வழங்குவதில்லை.விளையாட்டுகளிலும் கிரிக்கெட் அல்லாத வேறு விளையாட்டுகளில் நாம் பெரும்பாலும் பாராட்டை வழங்குவதில்லை, அவர்கள் உலக அரங்கில் நுழையும் வரை , தேசிய அளவு சாம்பியன்களை பெரும் இந்தியருக்கு தெரிவதில்லை.ஒரு தேசிய சாம்பியன்களுக்கு குடுக்காத பாராட்டு என்பது நமது தாழ்வு மனப்பான்மையையே காட்டுகிறது , அதாவது எங்களை
ஜெயிப்பது சுலபம், மற்ற நாட்டினரை ஜெயிப்பதுதான் கஷ்டம் என்று..

இது ஒரு வகையில், நமக்கு நாமே செய்து கொள்ளும் துரோகம், ஒரு சமூக சேவகருக்கோ, ஒரு நேர்மையான அரசு அதிகாரிக்கோ கொடுக்காத பாராட்டு , எதிர்காலத்தில் வரும் பல நல்ல திட்டங்களுக்கு ஒரு பெரும் முட்டுக்கட்டை.

அதே போல் கல்வி, சுகாதாரம், மருத்துவம், பொறியியல், Town planning,உணவு, ஐ.ஏ.எஸ் , ஐ.பி.எஸ் அதிகாரிகள், புத்தகம், உடை முக்கியமாக விஞ்ஞானம் , கணிதம் என்று கலை சம்பந்த படாத துறைகளுக்கு நாம் ஒரு நிறுவனபடுத்தபட்ட (institutionalised) பாராட்டை வழங்க வேண்டும். அது அரசியல் சார்பற்ற நிலையில் இருக்க வேண்டும், இது இன்றைய middle class செய்ய வேண்டிய மிக மிக முக்கிய பணி.ஏனெனில், பெரும் பணக்காரர்கள் இதற்கென மெனக்கெட மாட்டர்கள், ஏழைகள் இதனை யோசிக்க மாட்டர்கள், மேலும் ஒரு அளவிற்கு மேல் அவர்களால் போக முடியாது, படித்த ஓரளவு வசதி படைத்த மிடில் கிளாஸ் ஜனமே இதனை செயல்படுத்த முடியும்.

துரத்தும் consumerism , அதற்கான பணம் சம்பாதிக்கும் சமூக, குடும்ப அழுத்தம், தனி மனிதனின் ஆசையை அதிகபட்சமாக தூண்டக்கூடிய விளம்பரங்கள், சக பணியாளர்களின் குற்ற உணர்ச்சி இல்லா ஊழல் தன்மை , நிறுவனபடுத்தபட்ட ஊழல், லஞ்சம், நேர்மையின்மை, அதன்மூலம் வரும் ஆதாயங்கள், பெருமைகள், இவற்றை தாண்டி அரசியல்வாதிகளின் அதிகாரம், மிரட்டல், ஆசை காட்டுதல், தனி மனித பலவீனங்களை குறி வைத்து அடிக்கப்படும் அம்புகள் ,நேர்மையாக இருந்தால் அவன் சாமர்த்தியம் இல்லாதவன் என பார்க்கும் மக்கள், அது தரும் விரக்தி, எரிச்சல்,இவை எல்லாவற்றையும் தாண்டியே இன்று நேர்மை என்பது இருக்கிறது.

இந்த நேர்மைக்கு நீங்கள் எப்படி பலம் கூட்ட முடியும்? எத்தனையோ முறைகள் இருக்கின்றன , பாராட்டுதல் அதில் முக்கியமானது, செத்துக்கொண்டு இருக்கும் பொது வாழ்வு நேர்மைக்கு உயிர் தருவது.

வேறு வழியில்லாமல், வருமான வரி கட்டுவதும், கிரிக்கெட்டில் இந்திய ஜெயிக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுவதும், கூடுமானவரை பொது இடத்தில் குப்பை போடாமல் இருப்பதும் மட்டும் போதாது.இதைப்போன்ற அர்த்தமுள்ள செயல்களை செய்தால்தான் அது உண்மையாக இருப்பது, இல்லாவிட்டால் ஒரு மொந்தைத்தனம் உள்ள கூட்டம் என்பதை தவிர வேறு எதுவும் சொல்ல முடியாது.

இதில் மீடியாக்களுக்கு மிக முக்கிய இடம் உண்டு , கூடுமானவரை இந்த பாராட்டல்களை தகுந்த மனிதருக்கு தருவதோ , அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதோ மீடியாவின் பணி, மிகச்சிறிய அளவிலாவது இதை அரசியல் கலப்பில்லாமல் ஆரம்பித்தால் அது சமூகத்திற்கு செய்த மிகப்பெரிய தொண்டு.தங்கள் வணிக நோக்கங்களை சுமார் 1% குறைத்துக்கொண்டாலே , இதனை மீடியாக்கள் செய்ய முடியும்.

ஒரு ஏரியாவில் மிகச்சிறப்பாக குப்பை அள்ளுபவருக்கு ஒரு பாராட்டு பத்திரம் என்பதில் இருந்து ஆரம்பித்து, ஒரு நகராட்சி பூங்காவை ஒழுங்காக வடிவமைத்தரை பாராட்டுவதில் இருந்து , ஒரு ஏரியாவின் (இருப்பதிலேயே) சுத்தமான தெரு எது என்று அடையாளம் கண்டுகொள்வதில் இருந்து, தமிழகத்தின் மிக சிறந்த தாசில்தார் யார் என்று அடையாளம் கண்டுகொண்டு பெருமைபடுத்துவதில் இருந்து, மாநில அளவில் சிறந்த விஞ்ஞானி யார் என்பது வரை போகாலாம். அடையாளம் கண்டுகொள்வதில் இருக்கும் அறிவியல் தன்மை, துறை வல்லுனர்களின் நேர்மையான பங்களிப்பு, transparency, தனி மனித கோபதாபங்கள் மற்றும் அரசியலை அகற்றுவதிலேயே இந்த பாராட்டுதல்களுக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்.