RIP வாலி
Thursday, 18 July 2013
Monday, 3 June 2013
சுஜாதா
நிஜ சுஜாதாவை 'எழுத்தாளன் மனைவி' என்ற தலைப்பில் கட்டுரை எழுதித் தரச் சொன்னேன்.
"எல்லாத்தையும் எழுதிடுவேன்" என்று அச்சுறுத்தினாள்.
"எழுது பரவால்ல" என்று சொல்லியும் பல முறை வற்புறுத்தியும் அவள் எழுதவில்லை
No man is a hero to his wife.
"நீங்க எல்லாருக்கும் ரொம்ப நல்லவர் - உங்க மனைவிக்கும் குழந்தைகளுக்கும் தவிர", என்று அண்மையில் ஒரு முறை அவள் சொன்னது உண்மை தான்.
நான் ஆதர்சக் கணவனில்லை. ஆதர்சத் தகப்பன் இல்லை துறைகளில் என்னை முன் மாதிரியாக எடுத்துக் கொள்ள ஏதும் இல்லை. என் போன்ற ஒரு சிக்கலான பிரகிருதியுடன், எப்போதும் கோவம், எப்போதும் மௌனம் என்று தெரியாத அநிச்சயமான சூழ்நிலையில் , இருபத்தேழு வருஷம் வாழ்ந்து வருவது அவளுடைய மகத்தான சாதனை.
இதை படித்த பின் இன்றைய தினகரன் நாளிதழுடன் வந்த வசந்தம் புத்தகத்தில் திருமதி.சுஜாதா எழுதியுள்ளதை படித்துப் பாருங்கள்.
Sunday, 14 April 2013
மீண்டும் கமல்
தெனாலி படத்தில் தனது தந்தை மற்றும் தாயார் இலங்கையில் யுத்தத்தில் மாண்டதை கமல் மருத்துவரான ஜெயராமிடம் விவரிக்கும் காட்சியை விவேக் "ஒரு காமெடி படத்தில் அந்த காட்சி கண்ணீரை வரவழைக்கும் தருணம் மறக்க முடியாது" என்றார். கமல், "சமூக பிரக்ஞை இருக்கும் நகைச்சுவை நடிகர்கள் பலர் சீரியஸ் விஷயங்களை நகைச்சுவை மூலம் தெரிவிப்பார்கள். தெனாலி ஒரு சீரியஸ் படமாக இலங்கை தமிழர்கள் பற்றிய செய்திகளை சொல்லியிருந்தால் அது தடை கூட செய்யப்பட்டிருக்கும்" என்றார்.
இயக்குனர் வசந்துடன் பேசும் போது எழுத்தாளர் ஜெயமோகனின் அறம் வரிசை கதைகளில் ஒன்றான "நூறு நாற்காலிகள்" பற்றி குறிப்பிட்டார். வசந்தும் பெரிய இலக்கிய ரசிகர் என்பதால் தானும் அதை படித்ததாக சொன்னார். புன்னகை மன்னன் படத்தில் வரும் "மாமாவுக்கு குடுமா குடுமா" பாடலை தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அந்த காலகட்டத்தில் படமாக்கிய விதத்தை இருவரும் நினைவு கூர்ந்தனர். அன்பே சிவம், மகாநதி படங்களை சிலாகித்து பேசிய வசந்த், "சிவாஜிக்கு பின் நான் உங்களுக்கு மட்டும் தான் ரசிகன்" என்றார்.
கார்த்திக் சுப்புராஜ் மற்றும் பாலாஜி மோகன் இருவரிடமும் அவர்கள் தங்கள் படங்களுக்கு எப்படி திரைக்கதை எழுதினார்கள் என்று கேட்டுவிட்டு தான் விஸ்வரூபம் படத்திற்கு இரண்டரை மாதம் எடுத்துக் கொண்டதாக கூறினார் கமல். தேவர் மகனுக்கு பதினைந்து நாள் ஆனதாம். சினிமா திரைக்கதை என்பது ஒரு மொழி, அதை எழுத நிறைய பயிற்சி வேண்டும் என்றார். ஒருவர் கதை நன்றாக சொல்கிறார் என்பதற்காக அவரை இயக்குனராக்க கூடாது என்றார். இருவரிடமும் அவர்கள் திரைக்கதை குறித்து எந்த மாதிரி புத்தகங்கள் படிக்கிறார்கள் என்று கேட்டார்.
கடந்த வெள்ளி தான் கமல் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சியில் பொது அறிவில் பட்டையை கிளப்பியதை பார்த்தேன். பேமானி, உட்டாலக்கடி எல்லாம் சென்னை தமிழில் எப்படி கலந்தது என்று அவர் விவரித்ததை கேட்டு "என்ன ஞானம் டா இந்த ஆளுக்கு, எதை பத்தி கேட்டாலும் பதில் சொல்றாரு" என்று வியந்து கொண்டிருந்தேன். இன்று தந்தி தொலைகாட்சி நிகழ்ச்சி. நிகழ்ச்சியின் பஞ்ச் டயலாக் இது தான்.
"சிவாஜி சார் மாதிரி ஒரு சிங்கத்துக்கு இயக்குனர்கள் நிறைய முறை தயிர் சாதம் கொடுத்துட்டாங்க. அதான் என் சாப்பாட்டை நானே பண்ணிக்கிறேன்" என்றார்.
Friday, 12 April 2013
நினைவில் நின்ற பாடல்
இந்த பாடல் மற்றும் படம் பற்றி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் பதிவு இதோ:
அழியாத கோலங்கள் திரைப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் பதின்வயதெனும் அடிவானத்தில் பறக்கத் துவங்கிவிடுகிறேன். நாம் ஒருபோதும் திரும்பிச் செல்ல முடியாத அந்த அடிவானம் மனதின் வெகு தொலைவில் இருப்பதை உணர்ந்தபோதும் நாமாகச் சென்று அங்கே இளைப்பாறுவதற்கு முடியாது.
ஒரு மாயக்கம்பளம் நம்மை அங்கே அழைத்துக் கொண்டு போனால் மட்டுமே சாத்தியம். இப்படம் அப்படியான ஒரு மாயக் கம்பளம்போல நம்மை மீண்டும் விடலைப் பருவத்தின் கனவுலகிற்குள் கொண்டு போய்விடுகிறது. கலையின் தேவையே இது போன்று நாம் திரும்பிச் செல்ல முடியாத வயதிற்குள், அடையமுடியாத உணர்ச்சிகளுக்குள் மீண்டும் நம்மைக் கொண்டு செல்வதேயாகும்.
அந்த வகையில் பாலு மகேந்திரா அவர்களின் அழியாத கோலங்கள் உயர்வான கலைப்படைப்பாகும். தமிழ் சினிமாவில் இப்படம் ஒரு தனிமுயற்சி. மிகுந்த கவித்துவத்துடன் பருவவயதினரின் உலகம் படமாக்கப்பட்டிருக்கிறது. பதின்வயதின் நினைவுகளுக்குள் பிரவேசித்த பிறகு நமக்கு ஊரும் வயதும் இருப்பும் மறைந்து போய் விடுகின்றன. நாம் காண்பதெல்லாம் பதின்வயதின் ரகசியங்கள், சந்தோஷங்கள்,வருத்தங்கள், அவமானங்களே.
நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை என்றும் அது கலைவதில்லை. எண்ணங்களும் மறைவதில்லை
என்ற அழியாத கோலங்களின் பாடல்வரிகள் நினைவின் குடுவையைத் திறந்துவிடுகிறது. உள்ளிருந்த பூதம் தன் முழு உடலையும் வெளிப்படுத்தி நம் முன்னே மண்டியிட்டுக் கேட்கிறது.
என்னை ஏன் மறந்துவிட்டாய்!
என்ன பதில் சொல்வது? கடந்து வந்துவிட்ட காலத்தின் கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இல்லை என்பதுதானே நிஜம்!
விடலைப் பருவமென்பது ஒரு ராட்சசம். அதை ஒடுக்கி அன்றாட வாழ்க்கை, வேலை, குடும்பம் என்று பல மூடிகள் கொண்ட குடுவைக்குள் அடைத்து வைத்திருக்கிறோம். எப்போதோ சில தருணங்களில் அந்தப் பூதம் விழித்துக் கொண்டுவிடுகிறது. அதனோடு பேசுவதற்கு நம்மிடம் வார்த்தைகள் இல்லை. ஆனால் நமது மௌனத்தின் பின்புள்ள வலியை அது புரிந்தேயிருக்கிறது. அதன் கண்கள் நம்மைப் பரிகசிக்கின்றன. நமது இயலாமையை, சாதிக்கமுடியாமல் போன கனவுகளை அதன் சிரிப்பு காட்டிக் கொடுக்கிறது.
பதின்வயது ஒரு நீரூற்றைப் போல சதா கொந்தளிக்கக் கூடியது. வீடுதான் உலகமென்றிருந்த மனது கலைந்து போய் வீடுபிடிக்காமல் ஆகிவிடுவதுடன், வெளிஉலகம் பளிச்சென கழுவித்துடைத்து புதிய தோற்றத்தில் மின்னுவதாகவும் தோன்ற ஆரம்பிக்கிறது. தன் உடல் குறித்தும், பெண் உடல் குறித்தும் வியப்பும் மூர்க்கமும் ஒன்று கூடுகின்றன. முட்டையை உடைத்து வெளிவந்த பாம்புக்குட்டியின் வசீகரமாக மனதில் தோன்றும் காமவுணர்வுகள் சீற்றம் கொள்ள ஆரம்பிக்கின்றன.
பருந்து இரையைக் கவ்விக்கொண்டு செல்வதுபோல பதின்வயதில் காமம் நம் உடலைக் கவ்விக் கொண்டு செல்கிறது. நம் உடல் பறக்கிறது என்ற ஆனந்தம் கொண்டபோதும் நம்மை இழக்கப் போகிறோம் என்ற உள்ளார்ந்த உணர்வும் பீறிடுகிறது. பறத்தலின் ஏதோவொரு புள்ளியில் பருந்து தன் இரையை நழுவவிடுகிறது. ஒரு வேளை அதற்காகத்தான் கவ்வி வந்ததோ என்றும் தோன்றுகிறது.
பருந்தின் காலில் இருந்து நழுவும் நிமிசம் அற்புதமானது. எந்தப் பிடிப்பும் இல்லாமல் வானில் எடையற்று விழும் அற்புதமது. ஆனால் அந்த வீழ்ச்சி சில நிமிசங்களில் பயமாகிவிடுகிறது. விடுபடல் ஆகிவிடுகிறது. போதாமை ஆகிவிடுகிறது.
பருந்து மறுமுறை எப்போது தூக்கி செல்லப்போகிறது என்பதைக் கண்டுகொள்வதற்காகவே அதன் கண்ணில் நாம் படவேண்டும் என்ற இச்சை உண்டாகிறது. ஆனால் அடிவானம் வரை சிதறிக்கிடக்கும் மேகங்களுக்குள் பருந்து எங்கே மறைந்து கொண்டது என்று தெரியவில்லை. மனது தன்னை இரையாக்கிக் கொள்வதன் முன்பே ஒப்புக் கொடுக்கவே ஆவலாக இருக்கிறது. காமம் வலியது. யானையின் பாதங்களைப் போல அதன் ஒவ்வொரு காலடியும் அதிர்கிறது.
அப்படி கடந்து வந்த விடலைப்பருவத்தைப்பற்றி இன்று நினைக்கையில் பனிமூட்டத்தினுள் தென்படும் மலையைப் போல அந்த நாட்கள் சாந்தமாக, வசீகரமாக, தன் உக்கிரத்தை மறைத்துக் கொண்டு எளிய நிகழ்வு போல காட்சிதருகிறது.
காதலிப்பதை விடவும் அதைப்பற்றிக் கற்பனை செய்வதுதான் விடலைப்பருவத்தில் சுகமானது. எப்போதும் காதலைப்பற்றி நினைத்தபடியே காதல் பீடித்த கண்களுடன் நிலை கொள்ளாமல் அலைந்த நாட்களை இப்படம் மிக இயல்பாக, உண்மையாக, கவித்துவ நேர்த்தியுடன் காட்சிப்படுத்தியிருக்கிறது.
பாலு மகேந்திரா தனது படங்களில் கதாபாத்திரங்களின் மனநிலையை வெளிப்படுத்துவதற்கும், இருவருக்குள் ஏற்படும் உறவின் வளர்ச்சியை அடையாளப்படுத்துவதற்குமே பாடல்களை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். அழியாத கோலங்களில் அப்படியான ஒரு பாடலிருக்கிறது.
பூவண்ணம் போல நெஞ்சம் பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம் எங்கெங்கும் இன்ப ராகம்.. என்னுள்ளம் போடும் தாளம்
பி.சுசிலாவும் ஜெயச்சந்திரனும் இணைந்து பாடும் இப்பாடலுக்கு இசையமைத்தவர் சலீல் சௌத்ரி. இவர் செம்மீன் உள்ளிட்ட பல முக்கிய திரைப்படங்களுக்கு இசையமைத்த மகத்தான இசைஆளுமை. இப்பாடலை எப்போது கேட்டாலும் மனம் கரைந்து போய்விடுகிறது. பாடும் முறையும் இசையும், அதன் ஊடாக நம் மனது கொள்ளும் கடந்த கால ஏக்கமும் ஒன்று சேரப் பாடலைக் கேட்டுமுடியும் போது நான் உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்ந்து விடுகிறேன்.
பூவண்ணம் போல நெஞ்சம் பாடல் படமாக்கப்பட்டுள்ள விதம் எவ்வளவு அற்புதமானது என்பதைக் கண்டுகொள்ள வேண்டும் என்றால் அந்தப் பாடலை நிசப்தமாக்கிவிட்டு வெறும்காட்சிகளை மட்டும் திரையில் பாருங்கள். நான் அப்படி அந்தப் பாடலைப் பலமுறை பார்த்திருக்கிறேன், ஒவ்வொரு காட்சியும் ஒரு ஹைகூ கவிதை.
சிரிப்பையும் வெட்கத்தையும், காதலர்கள் இருவரின் அந்நியோன்யத்தையும் இவ்வளவு கவித்துவமாக வேறு எவரும் திரையில் காட்டியதேயில்லை. அவர்கள் கண்களால் பேசிக் கொள்கிறார்கள். பாட்டு முழுவதும் ஷோபா சிரித்துக் கொண்டேயிருக்கிறார். அந்தச் சிரிப்பு ஒரு தூய வெளிச்சம். மறக்கமுடியாத ஒரு வாசனை. ஆற்றின் கால்வாயில் நீந்தும் வாத்துகளைப்போல அவர்களும் இயற்கையின் ஒரு பகுதியே என்பதுபோல ஷோபாவும் பிரதாப்பும் ஒன்று கலந்திருக்கிறார்கள். பாடல் முழுவதும் காற்று லேசாகப் படபடத்துக் கொண்டேயிருக்கிறது.
நாணல்பூத்த ஆற்றங்கரையோரத்தில் உட்கார்ந்து கொண்டு ஷோபா சிரிக்கிறார். அந்த சிரிப்பு, வாழ்வில் இது போன்ற தருணம் இனியொருமுறை கிடைக்கவே கிடைக்காது என்பதைப் போலவே இருக்கிறது. ஷோபாவின் சிரிப்பில் வெட்கமும், ஆசையும் குறும்பும் ஒன்று கலந்திருக்கிறது. அடிக்கடி தன் மூக்கைத் தடவிக் கொள்வதும் பிரதாப்பின் தலையைக் கோதிவிட்டு செல்லமாக அடிப்பதும், கண்களில் காதலைக் கசியவிட்டு தானும் காற்றைப் போன்றவளே என்பதுபோல அவனோடு இணையாக நடப்பதும் என காதலின் பரவசம் பாடல் முழுவதும் ஒன்று கலந்திருக்கிறது.
ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால் அவளைக் கல்லினுள்ளிருந்து உயிர்ப்பிப்பது என்று பொருள் அடிமுதல் முடிவரை காதலால் நீவி சாபமேற்று உறைந்து போன ரத்தத்தில் கனவுகளின் சூடேற்றுவது என்று பொருள்
என்று மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் கவிதை ஒன்றில் குறிப்பிடுவார்.
அதைத்தான் பாலு மகேந்திரா இப்பாடலில் காட்சியாகக் காட்டுகிறார்.
ஷோபா பிரதாப்புடன் கைகோர்த்துக் கொண்டோ தோளுடன் தோள் உரசிய படியோ நடந்து செல்வதும், ஷோபா சொல்வதை மௌனமாக பிரதாப் கேட் டுக் கொண்டிருப்பதும், மண்சாலையில் அவர்கள் உற்சாகமாக நடந்து செல்வதும் காதல் மயக்கத்தின் அழியாத சித்திரங்களா கப் பதிவாகியிருக்கின்றன. இணைந்த வாழ்வில் பிரிவும் இல்லை.. தனிமையும் இல்லை. என்ற வரி நமக்குள் ஏதேதோ நினைவுகளை ரீங்காரமிட்டடபடி இருக்கிறது. தமிழ்ச் சினிமாவில் மிகச் சிறப்பாகப் படமாக்கப்பட்ட காதல்பாடல் இதுவே என்பேன்.
அழியாத கோலங்கள் என்ற தலைப்பே படத்தின் கதையின் மையப்படிமமாக உள்ளது. நினைவுதான் படத்தின் ஆதாரப்புள்ளி. விடலைப்பருவத்தின் மறக்கமுடியாத நிகழ்வுகளின் தொகுப்பாகவே படம் விரிகிறது. இந்து டீச்சரின் வருகையும் அதைத் தொடர்ந்த சம்பவங்களும் விடலைப் பையன்களின் அன்றாட வாழ்வைத் திசைமாற்றம் செய்கின்றது. காற்றில் பறக்கும் நீர்க்குமிழ் போலிருந்த அவர்கள் வாழ்வு ஒரு மரணத்துடன் இயல்புலகிற்குத் திரும்பிவிடுகிறது. இறுதிக்காட்சியில் நண்பனைப் பறிகொடுத்த பிறகு அவர்கள் அதே மரத்தடியில் தனியே சந்திப்பது மனதை உலுக்கிவிடுகிறது.
அழியாத கோலங்கள் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படம். காரணம், இப்படம் போல அசலாக பருவ வயதின் ஆசைகளை யாரும் திரையில் பதிவு செய்ததேயில்லை. அதுவும் வசனங்கள் அதிக மில்லாமல், நீண்ட காட்சிகளாக, நாம் அவர்களின் உலகை மறைந்திருந்து எட்டிப் பார்ப்பது போல படம் உருவாக்கப்பட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு.
தனது பதின்வயது நினைவுகளைத்தான் படமாக்கியிருக்கிறேன் என்று பாலு மகேந்திரா அவர்கள் குறிப்பிட்டபோதும் இது யாவரின் விடலைப்பருவமும் ஒன்று சேர்ந்ததுதானே!
பச்சைப் பசேலென விரியும் இயற்கையும் அதனுள் ஓடும் ஆற்றின் ஓடையும் அருகாமையில் கடந்து செல்லும் ரயிலை வேடிக்கை பார்த்தபடியே ஓடும் மூவரின் நீண்ட ஓட்டத்துடன் படம் துவங்குகிறது.
ரகு தன் கனத்த சரீரத்துடன் தாவி குதிக்கும்போது, தண்ணீர் அதிர்கிறது. ஆற்றின் கால்வாயும், அருகாமை மரங்களும் மண்பாதைகளும் அந்த மூன்று பையன்களின் சேட்டைகளை நிசப்தமாக வேடிக்கை பார்த்தபடியே இருக்கின்றன. சில காட்சிக் கோணங்களில் இயற்கை அவர்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதாகவே நாம் உணர்கிறோம். அவர்கள் நீர்விளையாட்டில் ஒருவர் மீது மற்றவர் நீரை அள்ளித் தெறிக்கிறார்கள். அந்த நீர்வீச்சு பார்வையாளனின் முகத்திலும் பட்டுக் கூச்சம் ஏற்படுத்துகிறது.
நாம் திரையில் எவ்வளவு முறை ரயிலைப் பார்த்தாலும் அந்த சந்தோஷம் மாறுவதேயில்லை. இப்படத்தில் கடந்து செல்லும் ரயில் மட்டும்தான் புறஉலகின் தலையீடு. அது அவர்களின் இயல்புலகை மாற்றுவதில்லை. மாறாக, தொலைவில் இன்னொரு உலகம் இருக்கிறது என்பதை நினைவுபடுத்திக் கடந்து போகிறது. அவர்கள் தன்னைக் கடந்து செல்லும் நவீன காலத்தினை வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள்.
ஆனால் அந்த ரயிலைப் போலவே புறஉலகில் இருந்து அந்தக் கிராமத்திற்குள் நுழையும் இந்து டீச்சர் அவர்களின் இயல்புலகை மாற்றிவிடுகிறாள். இந்து டீச்சரின் பெயரை மூவரும் சொல்லிப்பார்க்கும் காட்சி ஒன்றிருக்கிறது. அந்தப் பெயரை ஒரு இனிப்பு மிட்டாயை ருசிப்பது போல மூவரும் ருசிக்கிறார்கள். விடலைப்பருவத்தில் பெண்பெயர்கள் அப்படியான ருசியைக் கொண்டிருந்தது உண்மைதானே.
அப்போது ஒரு கூட்ஸ் ரயில் கடந்து போகிறது. அதை மூச்சு இரைக்க எண்ணுகிறான் ரகு. அது முடிவடைவதேயில்லை. கடந்து செல்லும் ரயில் பெட்டிகளை எண்ணாத சிறுவர்கள் எவர் இருக்கிறார்கள்? அவர்களால் எதிர்கொள்ள முடியாத ஒரு கூட்ஸ் ரயிலைப் போல பிரதாப் என்ற கதாபாத்திரம் அவர்களின் உலகிற்குள் பிரவேசிக்க இருக்கிறான் என்பதையே அது உணர்த்துவதாக எனக்குத் தோன்றுகிறது.
மூவரில் ரகு எப்போதும் மாங்காய் தின்று கொண்டேயிருக்கிறான். அவன் உடைத்துத் தரும் மாங்காயை மற்றவர்கள் தின்கிறார்கள். அவன் தனக்கென ஒரு தனிருசி வேண்டுபவனாக இருக்கிறான். ரகு ஒருவன்தான் பால்யத்திற்கும் பதின்வயதிற்கும் இடையில் ஊசலாடிக் கொண்டி ருக்கிறான். அதனால்தான் அவன் செக்ஸ் புத்தகத்தைக் காட்டும்போது பெண் உடல்பற்றிப் புரியாமல் கேள்விகேட்கிறான். தபால் ஊழியரின் புணர்ச்சியை நெருங்கிக் காணமுடியாமல் தயங்கித் தயங்கிப் பின்னால் நடந்து வருகிறான். பிறகு விலகி ஓடி விடுகிறான். அவன் தனது நண்பர்களின் கனவுகளைத் தன் கனவாக்கிக் கொள்கிறான்.
அதை ஒரு காட்சி அழகாகக் காட்டுகிறது. சாலையில் கடந்து வரும் தாவணி அணிந்த பெண்களில் யார் யாருக்கு என்று பேசிக் கொள்ளும்போது ரகு எந்தப் பெண்ணைத் தேர்வு செய்து என தெரியாமல் நண்பன் சொல்லிய மஞ்சள் தாவணிப் பெண்ணைத் தானும் தேர்வு செய்வதாகச் சொல்வான். அதுதான் அவன் மன இயல்பு.
பதின்வயதின் சிக்கல்கள் என்று சமூகம் மறைத்தும் ஒளித்தும் வைத்த நிகழ்வுகளை இப்படம் நேரடியாக விவாதிக்கிறது. உடலுறவு குறித்த ஏக்கம், புகைபிடித்தல், செக்ஸ் புத்தகங்களை வாசித்தல், அத்தை பெண்ணோடு காதல் கொள்வது, டீச்சரைக் காதலிப்பது, நண்பர்களுக்குள் ஏற்படும் கோபம், ஊர் சுற்றுதல், சலிப்பில்லாத விளையாட்டுத்தனம் என்று பருவ வயதில் ஏற்படும் அத்தனை அனுபவங்களையும் சரி தவறு என்று குற்றம்சாட்டாமல் நிஜமாகப் பதிவு செய்துள்ளது அழியாத கோலங்கள்.
டீச்சர் ஊருக்கு வந்து சேரும் வரை சிறுவர்களின் உலகம் வெறும் விளையாட்டுத்தனமாகவே உள்ளது. அவர்கள் ஊரில் இரண்டே தியேட்டர் உள்ளதற்காக அலுத்துக் கொள்கிறார்கள். பொழுது போக்குவது எப்படி என்று தெரியாமல் சுற்றுகிறார்கள். தபால் ஊழியரின் சைக்கிளை எடுத்து சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்கிறார்கள். ஆட்டக்காரியின் முன்னால் அமர்ந்து அவள் உடலை வியப்போடு வேடிக்கை பார்க்கிறார்கள். அவளுக்கும் தபால் ஊழியருக்குமான ரகசிய காதலை ஒளிந்திருந்து பார்க்கிறார்கள். அந்தக் காட்சியில் இடிந்த மண்டபத்தில் ஆட்டக்காரியின் உடைகள் களையப்படுவதும், அவர்கள் காம மயக்கத்தில் ஒன்றுகலப்பதும் சிறுவர்களின் கண்ணோட்டத்தில் காட்டப்படுகிறது. காட்சியில் விரசம் துளியுமில்லை. ஆனால் பார்வையாளனின் மனம் காமத்தூண்டுதலில் உக்கிரம் கொண்டுவிடுகிறது. அதுதான் பதின்வயதில் ஏற்பட்ட உணர்ச்சிநிலை. அதை அப்படியே பார்வையாளனுக்குள் ஏற்படுத்தியிருப்பதைக் கலையின் வெற்றி என்றுதான் சொல்வேன்.
ஆட்டக்காரியின் வீட்டிற்குப் போய் தண்ணீர் வாங்கிக் குடிக்கும் காட்சியில் அவர்கள் அவளைக் கடித்துத் தின்றுவிடுவது போல பார்க்கிறார்கள். அவளுக்கும் அந்தப் பார்வையின் அர்த்தம் புரிகிறது. பிராயத்தின் காமம் வடிகால் அற்றது என்பதை மௌனமாகவே அவர்களுக்குப் புரிய வைக்கிறாள். அவள் கையில் தண்ணீர் வாங்கிக் குடித்ததையே பெரிய இன்பமாகக் கருதிய அவர்கள் ஆணுறைகளைப் பலூனாக்கி ஊதி விளையாடியபடியே ஓடுகிறார்கள்.
இந்து டீச்சர் ஒரு வானவில்லைப் போல அவர்கள் வாழ்க்கையில் நுழைகிறாள். அவளது தோற்றமும் குரலும் அவர்களை மயக்கிவிடுகிறது. "என் பேர் இந்துமதி. வீட்ல இந்துனு கூப்பிடுவாங்க. உங்க பேர்லாம் சொல்லுங்கம்மா.
” என்று சொல்லும்போது ஷோபா மெல்லிய படபடப்பை மறைத்துக் கொண்டு காட்டும் வெட்கம் எவ்வளவு அற்புதமானது.
இந்து டீச்சராக ஷோபா வாழ்ந்தி ருக்கிறார். அவர் இந்தப் படத்தின் உதவி இயக்குனராக வேலை செய்திருப்பது அவரது ஈடுபாட்டின் சாட்சி. தன்னைத் தேடி திடீரென பிரதாப் வீட்டின் முன்பாக வந்து நிற்கும் காட்சியில் ஷோபா காட்டும் வியப்பும், ஆற்றங்கரைக்குக் குளிக்கக் கிளம்பிய பிரதாப் ஷோபாவைத் தூக்கி சுற்றும்போது அடையும் சந்தோஷம் கலந்த வெட்கமும் இதன் முறையில் திரையில் யாரும் காட்டி அறியாத உணர்ச்சிகள்.
ஷோபாவைப் போலவே படத்தில் பிரதாப்பையும் மிகவும் பிடித்திருக்கிறது. அலட்டிக் கொள்ளாத நடிப்பு, அவருக்கு பாலு மகேந்திராவே குரல் கொடுத்திருக்கிறார். பிரதாப்பிற்கு மிக குறைவான வசனங்கள். ஆனால் காதலுற்றவனின் கண்கள் அவருக்கு இருக்கின்றன. ஏதோ நினைவுகளுக்குள் சிக்கிக் கொண்டவரைப் போல அவர் படம் முழுவதும் நடந்து கொள்கிறார். இவர்களைப் போலவே பட்டாபியின் அத்தை பெண், அவள் படுத்துக் கொண்டு புத்தகம் படிக்கும் காட்சியில் காலை ஆட்டிக் கொண்டே பட்டாபி கேட்கும் கேள்விக்குப் பதில் தரும்போது அவள் கண்கள் அவனை ஆழமாக ஊடுருவுகின்றன. அவளும் விடலைப்பருவத்தில் தானிருக்கிறாள். ஆனால் அந்தப் பையன்களைப் போல தன்னை வெளிக்காட்டிக் கொள்ள முடியவில்லை. அவளுக்கும் உடலின் புதிர்மை குழப்பமாகவே இருக்கிறது. லேசான தலை திருப்பல், மௌனமாகப் பார்ப்பது என்று தனது உடல்மொழியாலே அவள் பேசுகிறாள். நல்ல சினிமா என்பது சின்னஞ்சிறு உணர்ச்சிகளைக் கூட கவனமாகப் பதிவு செய்யக்கூடியது என்பதற்கு இவளது கதாபாத்திரம் ஒரு உதாரணம்.
ஆசிரியர்களைக் கேலி செய்வது அல்லது படிக்காத மாணவனை அவமானப்படுத்துதல் மற்றும் இரட்டை அர்த்தமுள்ள வசனங்களைப் பயன்படுத்துவது என தமிழ்ப்படங்களில் பள்ளியின் வகுப்பறைக் காட்சிகள் பெரும்பாலும் படுகேவலமான நகைச்சுவையோடு சித்தரிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாலு மகேந்திரா காட்டும் வகுப்பறை முற்றிலும் மாறுபட்டது. மாணவர்களின் இயல்பான குறும்புகள், ஆசிரியரின் மென்மையான அணுகுமுறை, ரகுவின் சேட்டையைக் கண்டிக்கும் டீச்சரின் பாங்கு என முற்றிலும் மாறுபட்ட பள்ளி அனுபவத்தை தருகிறது அழியாத கோலங்கள்.
மூன்று சிறுவர்களும் மூன்று வேறுபட்ட அகவேட்கையுடன் இருக்கி றார்கள். பட்டாபி இதில் சற்று துணிந்த சிறுவனாக இருக்கி றான். அவன் இரவில் அத்தைப் பெண்ணைத் தொடுவதற்குச் செல்வதும், செக்ஸ் புத்தகத்தை ரகசியமாக கொண்டுவருவதும் என அவன் தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள தைரியமாக முயற்சிக்கி றான்.
மற்றவன் டீச்சரை மனதிற்குள்ளாக காதலிப்பதோடு, அவள் வீடு தேடிப் போய் உதவி செய்கிறான். டீச்சரை பிரதாப் காதலிப்பதை அறிந்து பொறாமை கொள்கிறான். அவனுக்குள் மட்டும் காதல் உருவாகிறது. அவனது நடை மற்றும் பேச்சு, செயல்களில் தான் வளர்ந்தவன் என்ற தோரணை அழகாக வெளிப்படுகிறது.
ரகுவோ மற்றவர்கள் செய்வதில் தானும் இணைந்து கொள்ள நினைக்கிறான். பயம் அவனைத் தடுக்கிறது. ஆனால் ஆசை உந்தித் தள்ளுகிறது. அந்தத் தடு மாற்றத்தின் உச்சமே அவனது எதிர்பாராத சாவு. பதின்வயதின் அகச்சிக்கல்கள் ஒருவனின் ஆளுமையை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது. பொது தளங்களில் இவை விவாதிக்கப்படாமலே ஒளித்து வைக்கப்படுவதும், விடலைப் பருவத்தினரைப் புரிந்துகொள்ளாமல் பெற்றோர் ஒடுக்க முற்படுவதும் சமூகத்தின் நோய்க்கூறுகள் என்றே சொல்வேன். இப்படம் அது போன்ற மனத் தடைகளை உடைத் தெறிந்து காதலையும் காமத்தையும் மரணத்தையும் முதன்முதலாக உணரும் பருவ வயதின் தவிப்பை அசலாகப் பதிவு செய்திருக்கிறது.
இப்படத்தின் திரைக்கதை அமைப்பு ஒரு புதிய பாதையை நமக்கு அடையாளம் காட்டுகிறது. அதாவது கதை ஒரு புள்ளியில் இருந்து மேலோங்கி வளர்ந்து செல்ல வேண்டியதில்லை. தனித்தனி நிகழ்வுகளை ஒன்றிணைத்து ஒரு கோலம் உருவாவது போலவே திரைக்கதை அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு எழுத்தாளனாக இதன் தனித்தன்மை மிகவும் ஆச்சரியமூட்டுகிறது. அது போலவே இசையும் மௌனமும் ஒரு திரைப்படத்திற்கு எவ்வளவு முக்கியமானது என்பதை அறிந்து கொள்வதற்கு இப்படமே ஒரு முன்னுதாரணம்.
சினிமா என்பது காட்சிகளின் மொழியில் எழுதப்படும் நீள்கவிதை என்றே பாலு மகேந்திரா கருதுகிறார். ஆகவே அவர் காட்சிக் கோணங்களைத் தீர்மானிக்கும் விதமும் இயற்கையான வெளிச்சத்தைப் படமாக்கும் விதமும் ஒப்பற்ற உன்னதமாக இருக்கிறது.
பாலு மகேந்திரா போன்ற அரிய கலைஞர்களால் மட்டுமே இது போன்ற படத்தை துணிச்சலாக எடுக்க முடியும். அவ்வகையில் அழியாத கோலங்கள் தமிழ் சினிமாவிற்கு பாலு மகேந்திரா தந்த கொடை என்றே சொல்வேன்.
Wednesday, 27 February 2013
மலையாள நண்பர்கள்
ஒவ்வொரு நாளும் ஒரு நண்பரின் வீட்டில் கூடி மணிக்கணக்கில் மலையாள, தமிழ் இலக்கியம் மற்றும் சினிமா குறித்து நிறைய விவாதம் செய்தோம். நண்பர்கள் எனக்கு நல்ல மலையாள படங்களை அறிமுகப்படுத்த நான் அவர்களுக்கு தமிழ் இலக்கியம் மற்றும் சினிமா பற்றி எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொண்டேன். உஸ்தாத் ஹோட்டல், ஒழிமுறி போன்ற படங்கள் குறித்து நிறைய விவாதித்தோம். கமலை விட மோகன்லால் சிறந்த நடிகர் என்று நண்பர்கள் வாதாட நான் கமலை holistic ஆக பார்க்கும் போது அவர் மோகன்லாலை விட சிறந்தவர் என்றேன்.
தன்மாத்ரா, ப்ரணயம், ஸ்படிகம், கிரீடம், வானப்ரஸ்தம் போன்ற மோகன்லால் படங்களை எடுத்துக்கொண்டு அதற்கு இணையாக கமல் நடிப்பை வெளிப்படுத்திய படங்களை பட்டியலிட சொன்னார்கள். நான் பதினாறு வயதினிலே, குணா, மூன்றாம் பிறை, சலங்கை ஒலி, மகாநதி, அன்பே சிவம் ஆகியவற்றை குறிப்பிட்டேன். மலையாள சினிமா பெரும்பாலும் தன் கதைகளை இலக்கியத்தில் இருந்து எடுக்கிறது. இலக்கியம் யதாதர்த்தை தழுவி இருப்பதால் தன்மாத்ரா போன்ற படங்கள் சாத்தியமாகிறது. அந்த நிலை தமிழில் இல்லை என்றேன்.மலையாள சினிமாவில் செலவும் குறைவு. எந்திரன், விஸ்வரூபம் போன்ற படங்கள் நூறு கோடி முதலீடு செய்து தயாரிக்கப்பட்டவை. வருங்காலத்தில் இது இன்னும் அதிகமாகலாம். ஆனால், மலையாளத்தில் அந்த நிலை இல்லை.ரஞ்சித், பிளஸ்சி, அனூப் மேனன், வினீத் ஸ்ரீனிவாசன், அஞ்சலி மேனன் போன்ற நல்ல இயக்குனர்கள் மற்றும் திரைக்கதை வல்லுனர்கள் மலையாள சினிமாவை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல வந்துவிட்டனர். தமிழில் நல்ல இயக்குனர்கள் மற்றும் திரைக்கதை விற்பன்னர்கள் இருந்தாலும் வெகுஜன ரசனையை கருத்தில் கொண்டே அவர்கள் செயல்பட வேண்டிய நிலை உள்ளது. அவர்கள் நினைத்ததை எல்லாம் செய்ய முடியாது என்றேன்.
எம்.டி.வாசுதேவன் நாயர், லோஹிததாஸ் ஆகியோரை பற்றி பேச்சு வந்தது. ஜெயமோகன் வாயிலாக லோகி பற்றி அறிந்ததால் அவர் படங்களை பற்றியும் பேசினோம். தமிழ்நாட்டில் இருந்து கொண்டு கேரளா பற்றி எப்படி தெரிந்து வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்றார்கள்? ஜெயமோகன், சாரு, எஸ்.ரா ஆகியோரை பற்றி சொன்னேன். சத்சங்கம் என்பது நல்லவர்களின் அருகாமையில் இருப்பதை குறிக்கிறது. நல்லவர்களாக மட்டுமன்றி ஞானமும் பொருந்தி இருப்பவர்களின் அருகில் இருக்கும் போது நம்மை நாம் மேலும் செம்மைப்படுத்த உதவுகிறது. நன்றி நண்பர்களே..
Sunday, 3 February 2013
கமல் ....போதும்
சில வருடங்களாகவே கமலை பற்றி எதுவும் சிந்திப்பதில்லை என்று முடிவெடுத்து இருந்தேன், அதை மாற்றி விட்டது விஸ்வரூபம். இந்த படம் பற்றிய / தடை பற்றிய பதிவு அல்ல , முக்கியமாக கமலை சிலாகித்து / புகழ்ந்து எழுதும் பதிவும் இல்லை.
இப்போது கமலின் வாழ்வை பார்த்தல் (அதாவது பொதுவாக public தெரிந்த அளவில்)
-கமல் இரண்டு முறை திருமணம் செய்து , இரண்டு முறையும் விவாகரத்து செய்தவர். எனவே இப்போது மனைவி இல்லை .
-கௌதமி பற்றி இப்போது செய்தியில்லை, சேர்ந்து வாழ்கிறார்களா என்று தெரியவில்லை, விஸ்வரூப சர்ச்சையில் அவரை பார்க்கவே முடியவில்லை.
-இரண்டு பெண்கள், அதில் இரண்டாவது பெண் மும்பையில் இருக்கிறார் , முதல் பெண் பெரும்பாலும் ஹைதராபாத்தில் இருக்கிறார் (தெலுகு படங்களுக்காக).
-அண்ணன் சாரு ஹாசன் / அவர் மகள் சுஹாசினி / மணிரத்னம் போன்றவர்களுடன் அவ்வளவு நல்ல rapport கிடையாது. நடுவில் பேச்சுவார்த்தையே இல்லாமல் இருந்தது.
-கமலின் வயது 58 .இனிமேல் அவரது கதாநாயக வாழ்வு maximum 2 வருடம்.
-கமல் நடிகர் சங்க கூட்டதை மதிப்பதே இல்லை, சமீபத்தில் நடந்த சேவை வரி பிரச்சினையில் அவர் வரவே இல்லை , வர முடியாததை பற்றி ஒரு அறிக்கையும் இல்லை. அரசியல் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் / போராட்டம் இருந்தால் மட்டுமே கலந்து கொள்கிறார்.
-நடிகர் சங்க தேர்தலில் ஒட்டு போட வருவதே இல்லை.
-ஆக நடிகர் சங்க ஆதரவு இல்லை. [சில நடிகர்களின் தனிப்பட்ட ஆதரவு தவிர].
-இப்போது பெரும் பண நஷ்டம் , கையில் உள்ள வீடு கூட கடன்காரரிடம் போகப்போகிறது.
ஆக வாழ்க்கை துணையில்லை , ஓய்ந்து சாய தோளில்லை , பணம் இல்லை , வயதில்லை , வெற்றி எங்கோ தூரத்தில் இருக்கிறது ,
பின்பு ஏன் இந்த ஓட்டம்?
எதை நோக்கி?
58 வயதில் 95 கோடியில் படமா?
எந்த நம்பிக்கையில் 95 கோடியில் ஒரு படம்? ஓய்வு பெறும் வயதில் எதற்கிந்த போராட்டம்?
யாரிடம் எதை நிரூபிக்க?
எதற்காக இஸ்லாத்தை வைத்து ஒரு சினிமா? அதில் சச்சரவுகள்?
உங்களையே வருத்தி வருத்தி சில பயிற்சிகள் , தெளிவில்லாத, குழப்பமான output , அதை கிழித்து தொங்கவிட ஒரு கூட்டம் ...
எதற்கிந்த சுமை கமல்?
ஞானி கலைஞரை பார்த்து கேட்டதை , நான் கமலை பார்த்து கேட்கிறேன், தயவு செய்து மற்றவர்கள் உங்களை dismiss செய்யும் முன் ராஜினாமா செய்து விடுங்கள் , இனிமேல் உங்களால் ஒரு படம் செய்ய முடியுமா என்று தெரியவில்லை, அப்படி முடிந்தாலும் இன்னொரு சினிமா வேண்டாம், please.உங்களின் பொற்காலம் முடிந்து விட்டது.
இளையராஜா , சிவாஜி கணேசன் போன்றவர்களை பின்பற்ற வேண்டாம் , ஜெயகாந்தனை பார்த்தாலே போதும்.
உங்களுக்கு கவிதை,நடனம்,பாடல்,ஓவியம்,இலக்கிய சிந்தனை,சங்கீத பயிற்சி, தமிழார்வம் , பிறமொழி அறிவு போன்றவை உண்டு , ஒரு நல்ல கலாச்சார ambassador ஆக இருக்க எல்லாவித தகுதியும் உண்டு.
You need rest. you need peace. If you want cinema, write books on cinema, take short films, take documentary films on tamil cinema, do some exhibhition with your paintings,start some film society...உங்களுக்கு சொல்லியா குடுக்க வேண்டும்..?
கடைசியாக விஸ்வரூபம் பற்றி...
-கமல் இயக்கிய படங்களை வைத்து பார்த்தல் , விஸ்வரூபம் பற்றி என்னால் ஒன்றை கூற முடியும் [இன்னும் படம் பார்க்கவில்லை],
-அது நல்ல படமோ / கெட்ட படமோ /
-இஸ்லாமியர்களுக்கு எதிரான படமோ/ இல்லையோ
-அது வியாபார ரீதியாக ஓடுமோ / ஓடாதோ
ஆனால் நிச்சயமாக அது சுவாரஸ்யமான படமாக இருக்க முடியாது.
ஏன் எனில் கமலால் ஒரு great movie கூட குடுக்க முடியலாம் ஆனால் நிச்சயம் ஒரு interesting movie குடுக்க முடியாது.அவரின் படிப்பும் அதன் மூலம் அவரை ஆக்ரமிக்கும் information overflow-உம் அவரை intellectual arrogant ஆக்கி அவரின் படத்தை சுவாரஸ்யமில்லாமல் செய்யும்.அவர் நடித்து வெளி வந்த சுவாரஸ்யமான படங்கள் அவரின் கைவண்ணத்தில் உருவானவை இல்லை.
ஆக இதுவும் அப்படியேதான் இருக்க போகிறது. ஜெயலலிதா புண்ணியத்தில் மிக பிரமாண்டமான பப்ளிசிட்டி , எந்திரனுக்கு கலாநிதி மாறனின்/ஷங்கரின் /ரஜினியின் money power/muscle power-இல் கிடைத்த விளம்பரத்தை , இதில் கமல் வழக்கம் போல தன்னை வருத்தி /அழுது பெற்று இருக்கிறார்.
Wednesday, 30 January 2013
அரச கட்டளை...
கமல் ஆத்திகத்திற்கு மாறும் நேரம் வந்துவிட்டது. ஸ்ரீரங்கம் தாயார் சந்நிதியில் இருந்து தனது பக்தி பயணத்தை தொடங்கலாம்!
இது 1972 இல்லை , விஸ்வரூபம் - உலகம் சுற்றும் வாலிபன் இல்லை , கமல் எம்.ஜி.ஆர் இல்லை. அதுதான் பயமாக இருக்கிறது.
ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் 'எதிர் கலாச்சாரத்தில்' வாழும் ஒரு கலைஞனின்/உண்மையாக வாழும் மனிதனின் கலை வாழ்வு முடியாமல் இருக்க பிரார்த்திப்போம்.
Monday, 21 January 2013
ஆயுத எழுத்து
தங்கரும் சாருவும் வேஷ்டி என்று இரண்டு முறை கூற, அது வடமொழி சொல் என்ற ஞானச்செல்வன், வேட்டி என்பதே தமிழ்ச்சொல் என்றார். எல்.கே.ஜி ஆரம்பித்து தமிழே படிக்காமல் ஒருவன் முதுகலை பட்டம் வரை பெற முடியும் என்கிற நிலை தமிழ்நாட்டில் மட்டும் தான் உள்ளது என்றனர் மூவரும். ஊடகங்களை பெரிய அளவில் சாடினார் மூவருமே. "அம்மாவின் கைப்பேசி" என்று படத்திற்கு பெயர் வைத்தால், "கைப்பேசி" என்றால் என்ன என்று கேட்கிறான்? கைப்பேசி, அலைபேசி, செல்பேசி(சென்று கொண்டே பேசுவதால்) என்று அதற்கு பல பெயர்கள் உள்ளன. எது சரியான பெயர் என்று தெரியவில்லை. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசே தமிழை பற்றி அக்கறை இருக்கும் போது மக்கள் எப்படி மதிப்பார்கள் என்றார் தங்கர்.
கமல் விஸ்வரூபம், தசாவதாரம், அபூர்வ சகோதரர்கள் என்று பெயர் வைக்கிறார். கமல் என்பதால் சொல்லவில்லை, ஆனால் சம்ஸ்க்ருத வார்த்தைகள் தமிழில் கலக்கின்றன, பிறமொழி கலப்பு கூடாது என்கிற போது ஆங்கிலம் என்ன சமஸ்க்ருதம் என்ன, எதுவுமே தமிழுடன் சேரக்கூடாது என்றார் தங்கர். தங்கர், ஞானச்செல்வன் இருவரும் அதிகம் பேச, சாரு பெரும்பாலும் அமைதியாகவே இருந்தார். பூங்கா ஒன்றில் தந்தை ஒருவர் புளியமரம், மாமரம் போன்றவற்றை ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தியதை சொன்னவர், இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அவர்கள் தமிழர்கள் என்றார். சென்னையில் நடைபெறும் புத்தக விழாவின் மீதான தன் அதிருப்தியையும் பதிவு செய்தார் அவர்.
இவ்வளவும் கேட்ட பின் எனக்கு தோன்றிய கேள்விகள் இவை.
அமெரிக்க உலகின் மற்ற நாடுகளில் இருந்து எத்தனையோ பேரை வரவேற்று அரவணைத்து செல்கிறது. அவர்கள் பண்பாட்டை இழப்பது பற்றி பேசுவதில்லை. நாம் ஏன் இவ்வளவு கொதிக்கிறோம்?
சிதம்பரம் எந்த நேரமும் வேட்டியுடன் தான் இருக்கிறார். அதை பார்த்து ராஜ் தாக்கரே "தமிழர்களை பாருங்கள், அவர்கள் பண்பாட்டை விட்டுக்கொடுப்பதே இல்லை. மராட்டியர்கள் நாம் எப்போது அப்படி இருக்கப் போகிறோம்?" என்கிறார். ஆக, பண்பாடு கூட Perception தான். அது பார்ப்பவர் கண்ணை பொருத்தது.
பண்பாடு என்பதே நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை மாறுவது தானே? பொங்கலை பானையில் வைத்துக் கொண்டாடினான் பாட்டன். அதையே, Induction ஸ்டவ்வில் வைத்துக் கொண்டாடுகிறோம் இன்று. ஆனால், பொங்கலை கொண்டாட வேண்டும் என்னும் எண்ணம் மாறவில்லையே?
பாரதியாருக்கு அவர் வாழ்ந்த காலத்தில் மரியாதை இல்லை. ஆனால். அவரை இன்றைய இளைஞர் சமூகம் தான் கொண்டாடுகிறது. தங்கர் சொல்லும் தமிழ் தெரியாத இன்றைய இளைஞர்கள் கூட்டம் தான் பாரதிக்கு விழா எடுக்கிறது. இந்தக் கூட்டமா தமிழை வளர்க்காமல் விட்டுவிடும்?
Sunday, 20 January 2013
டி.எம்.கிருஷ்ணா
ஏதோ வந்தோம் பாடினோம் என்று இல்லாமல் கிருஷ்ணா அங்கிருந்த மாணவர்களுக்கு கர்நாடக சங்கீதம் பற்றி நிறைய கற்றுத் தந்தார். அது கூட தனக்கு தெரிந்ததை சொல்லாமல் மாணவர்களை நிறைய கேள்வி கேட்டு அவர்களுக்கு சுலபமாக புரியும் வகையில் ஆலாபனை, ராகம், நிரவல் பாடுவது ஆகியவை பற்றி விளக்கினார். முதல் பாடலாக ரவிச்சந்திரிகா ராகத்தில் தியாகையர் இயற்றிய "மா கேளரா விசாரமு" எடுத்துக்கொண்டு அதில் கல்பனாஸ்வரங்கள் ஆரம்பிக்கும் முன் நிறுத்திவிட்டு அவர் எப்படி improvise செய்ய போகிறார் என்பதை விவரித்தார். பொதுவாக கச்சேரிகளில் பாடுபவரும் வயலின் வாசிப்பவரும் எப்படி ஸ்வரங்களை exchange செய்து கொள்கின்றனர் என்பதையும் அனைவருக்கும் புரியும் வண்ணம் கூறினார்.
அதன் பின் கல்யாணி ராகத்தில் நிரவல் ஒன்றை செய்து காட்டி அப்ப்ளாசை அள்ளினார். "நீ என் சங்கீதத்தை விரும்புவதும் விரும்பாததும் உன் இஷ்டம், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் ஓரளவு இதை புரிந்துகொண்டு அந்த கருத்துக்கு நீ வர வேண்டும் என்பதே என் கவலை" என்றார். இறுதியாக பாருக்குள்ளே நல்ல நாடு, சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா, இங்கிலீஷ் நோட்ஸ், மங்களம் என்ற வரிசையில் பாடி முடித்தார்.
Tuesday, 15 January 2013
திருவையாறு
சுவாமி சந்நிதியில் கூட்டம் அதிகமில்லை. இராமலிங்க அடிகளின் "பெற்ற தாய் தனை மக மறந்தாலும்" என்ற விருத்தத்தை(விருத்தத்தை இறுதியில் தந்திருக்கிறேன்) கேட்போர் கண்ணில் நீர் வர பாடிக்கொண்டிருந்தனர் ஒரு தம்பதி. சீர்காழி அவர்களின் குரல் போலவே இருந்தது. அவர்கள் முடிக்கும் வரை அந்த இடத்தை விட்டு நகரவே மனமில்லை. பூத வாகனம், திருவையாறு சப்தஸ்தான கண்ணாடி பல்லக்கு ஆகியவை பிரகாரத்தில் இருந்ததால் குழந்தைகளுக்கு காட்டினேன்.அப்படியே நடந்து அம்பாள் சந்நிதிக்கு சென்றோம். அங்கும் நல்ல தரிசனம்.
ஒரு மணி நேரம் கோவிலில் இருந்து விட்டு வெளியே வர பசி இம்சித்தது. சோற்றுக்கு பெயர் போன தஞ்சையில் ஒரு நல்ல மெஸ் கூட இல்லை. கோவிலுக்கு எதிர் தெருவில் இருந்த ஒரு பாடாவதி ஓட்டலில் உண்டோம். "திருவையாறு ஆண்டவர் அல்வா/அசோகா" கடை நினைவிற்கு வர, கொஞ்சம் அல்வாவும் காராசேவும் வாங்கிக்கொண்டு காரை சென்னைக்கு விரட்டினோம்.வழக்கம் போல் மதுராந்தகம் "கும்பகோணம் டிகிரி காபி" கடையில் ஒரு பில்டர் காபி. இவர்கள் வியாபார உத்தியை பார்த்து விட்டு இப்போது தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் ஐம்பதடிக்கு ஒரு "கும்பகோணம் டிகிரி காபி" முளைத்து விட்டது. எது அசல் என்று நமக்கே சந்தேகம் வருகிறது.
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமசிவாயத்தை நான் மறவேனே.
Tuesday, 1 January 2013
புது வருட வேண்டுதல்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்திலுறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண்பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம் ஓம்