Monday, 1 March 2010

Seppuku a.k.a Hara Kiri

Tom Cruise நடித்த The Last Samurai படத்தை கடந்த வெள்ளி இரவு பார்த்தேன். Ken Watanabe இறுதிக் காட்சியில் மரணமடையும் விதம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததால் அதை பற்றி கூகுளித்தேன். படத்தில் Ken Watanabe வயிற்றில் கத்தியை சொருகிக் கொண்டு Tom Cruise உதவியுடன் வயிற்றின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கம் எடுத்துச் செல்வார். கூகுளித்ததில் இதற்கு பெயர் "Seppuku" என்று அறிந்தேன். இதையே பேச்சு வழக்கில் சொல்லும் போது ஜப்பானியர்கள் "Hara Kiri" என்று குறிப்பிடுவார்களாம்.

ஜப்பானிய சாமுராய் வீரர்கள் bushido எனப்படும் "வீரர்களுக்கான நியதிகளுக்கு" உட்பட்டே வாழ்ந்தாங்களாம். அதில் ஒன்று தான் Seppuku(கௌரவமான மரணம்). சரி, இது ஏதோ சாமுராய் காலத்தில் மட்டும் தான் இருந்தது என்று நினைத்தால் இன்று வரை இந்த முறை ஜப்பானில் நடைமுறையில் இருக்கிறது. Dede Fortin என்பவர் 2000 ஆண்டு இந்த முறையில் மரணத்தை தழுவியுள்ளார். அதன் பிறகு 2001 ஆண்டு Isao Inokuma தனது நிறுவனம் கடன் தொல்லையில் மாட்டிக்கொண்டு ஏற்பட்ட அவமானத்தால் இந்த முறையால் மரணமடைந்துள்ளார். நம்ம ஊர்ல, நான் கவரி மான் பரம்பரை, ஒரு மசிரு உதிர்ந்தா கூட உயிரோட இருக்க மாட்டேன்னு படம் போடுவாங்க இல்ல? சாமுராய் வழி வந்த ஜப்பானியர்கள் நிஜமாவே கவரிமான் ஜாதி தான். ஏன்னா, இப்போ கூட அவங்க இந்த முறை மரணத்தை வரவேற்க்கறாங்க.

ஏன்பா இந்திய அரசியல்வாதிகளே, உங்க காதுல இதெல்லாம் விழுதா?

Friday, 26 February 2010

பாட்டு

இன்று காலை எப்.எம் அலைவரிசை ஒன்றில் கேட்ட பாடல் வரி:

பெண் குரல்: "புஜ வலி உனக்கு, நிஜ வலி எனக்கு"

எந்த படம் என்று தெரியவில்லை.புதிய படமாக தான் இருக்க வேண்டும்.ஏதோ இலை மறை காய் மறையாக எழுத ஆரம்பித்து இப்போது நேரடியாகவே பாடல்களில் ஆபாசம் புகுத்தப்படுகிறது.பாடல்களுக்கும் சென்சார் குழு தேவையோ என்று எண்ண வைத்தது.

Tuesday, 23 February 2010

சலூன் கடைக்காரரும் நானும்

நம்மில் பலர் உணவு, உடைக்கு அடுத்தபடியாக ஆர்வம் காட்டுவது நமது தோற்றத்தில் தான். அதுவும் குறிப்பாக நமது சிகை அலங்காரத்தில். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வீடு மாற்றும் போது கூட பிள்ளைகளின் பள்ளி அருகில் இருக்கிறதா, மனைவி அவரசமாக எதாவது வாங்க வேண்டுமென்றால் கடைகள் இருக்கிறதா என்றெல்லாம் பார்க்கும் போதே நமக்கு ஏற்ற ஒரு முடி திருத்தும் நிலையம் இருக்கிறதா என்றும் பார்ப்போம். ஒரு நல்ல முடி திருத்தகம் அமைவதும் அங்கு நம் வசதிக்கு ஏற்ற மாதிரி ஒரு சிகை அலங்கார நிபுணர் கிடைப்பதும் அதிர்ஷ்டம் தான் என்று நினைக்கிறேன்.

நான் மடிப்பாக்கம் வந்த புதிதில் இரண்டு மூன்று முடி திருத்தும் நிலையங்களில் நுழைந்து அவர்களை "evaluate" செய்து இறுதியாக அதில் ஒன்றை தேர்வு செய்து என் ஆஸ்தான முடி திருத்தகமாக ஆக்கிக் கொண்டேன். கடந்த எட்டு வருடங்களாக அங்கு தான் செல்கிறேன். பொதுவாக, அங்கு மூன்று சிகை அலங்கார நிபுணர்கள் இருப்பார்கள். ஆனால், நான் அதில் குறிப்பிட்ட ஒரு நபர் தான் எனக்கு சிகை அலங்காரம் செய்ய வேண்டும் என்று கூறி விடுவேன். அந்த நபர் வேறு வேலையாக இருந்தால் கூட அவர் முடித்து விட்டு வரும் வரை காத்திருப்பேன். அவரும் எனக்குத் தனி மரியாதை கொடுப்பார். எட்டு வருடங்களாக பழக்கம் என்பதால் நான் ஒரு மாதம் வராவிட்டாலும் அவருக்கு தெரியும். மீண்டும் வரும் போது "என்ன சார் காணோம்?" என்பார். நானும் வெளிநாடு சென்றிருந்தேன் என்பேன். எந்த ஊருக்கு சென்றேன் அங்கு என்ன பார்த்தேன் என்பதெல்லாம் கேட்பார். நானும் என் அனுபவங்களை பகிர்ந்து கொள்வேன்.

இப்படியாக இருந்த எங்கள் உறவு சமீப காலமாக குரங்காட்டி-குரங்கு உறவு போல் ஆகிவிட்டது. நம்மை விட்டால் இவனுக்கு நாதியில்லை என்று நினைத்து விட்டாரோ என்னவோ தெரியவில்லை, இப்போதெல்லாம் நான் கடைக்கு செல்லும் போது அவர் வேலையாக இருந்தால், "சார், பத்து நிமிஷம் ஆவும் எனக்கு. அது வரைக்கும் நீங்க லண்டன் போனதை பத்தி சொல்லுங்க என்கிறார்". பக்கத்தில் இருப்பவர்களிடம் "சார் லண்டன், அமெரிக்கா எல்லாம் போய் இருக்காரு. கதை சொல்வாரு கேளுங்களேன், குஜாலா இருக்கும்" என்பார். எனக்கு ஒரு கட்டத்தில் " ஜனம் பாக்குது பாரு, ஆடுறா ராமா, குட்டி கரணம் போடுறா ராமா" என்று அவர் சொல்வது போல் தோன்றியது.

இது போதாது என்று கிரிக்கெட் மேட்ச் நடக்கும் தினங்களில் போனால் ஒவ்வொரு பந்தையும் எனக்கு விவரிப்பார். "என்னத்த ஆடறானுங்க, ரைட் சைடுல ஆட வேண்டிய பந்து சார் இது. இதோ இந்த மாதிரி ஆடணும்" என்று சவரக் கத்தியை இரண்டு முறை முகத்துக்கு அருகில் வைத்து காற்றை வெட்டுவார்."தில்" படத்தில் வரும் ஆஷிஸ் வித்யார்த்தி போல முகத்தில் கத்தி பட்டு மடிப்பாக்கத்தில் "வெட்டு வாசு" என்று பிரபலமாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று நினைத்துக் கொள்வேன்.

ஒரு நாள் கடையில் இருந்த போது நண்பர் ஒருவர் கைத் தொலைபேசியில் அழைத்து ஏதோ பேசிக்கொண்டே சுந்தர ராமசாமி புத்தகம் பற்றி ஏதோ சொன்னார். நானும் பதில் சொல்லும் போது சுந்தர ராமசாமி என்று சொல்லிவிட, போனை வைத்தவுடன் இவர், "அவரு நல்ல தான் மனுஷன் சார், ஆனா கடைசி காலத்துல சின்ன பொண்ணை கட்டிக்கிட்டு கெட்ட பேரு வாங்கிட்டாரு இல்ல", என்றார். எனக்கு உண்மையிலேயே அது பற்றி எதுவும் தெரியாததால், "அப்படியா" என்றேன்.என்ன சார், படிச்சவரு நீங்க, சத்யராஜ் சம்சாரமா குஷ்பூ நடிச்சாங்களே சார், அவங்க பேரு என்ன என்றார்.அப்போது தான் புரிந்தது அவர் பெரியாரை பற்றி சொல்கிறார் என்று.

எத்தனையோ இடங்களில் தைரியமாக பேசும் என்னால் ஏன் இவரிடம் "மூடிட்டு வேலையை செய்" என்று சொல்ல முடியவில்லை என்று யோசிக்கிறேன். சுஜாதா அடிக்கடி தன புத்தகங்களில் சொல்வது போல் "இதற்கெல்லாம் Sigmund Freud ஒரு காரணம் வைத்திருப்பார் என்று நினைக்கிறேன்.