Saturday, 9 April 2011

ரலேகன் சித்தி

ரலேகன் சித்தி என்ற அந்த கிராமத்தை மது ஆக்கிரமித்திருந்தது. மதுவை ஒழித்தால் அன்றி முன்னேற்றம் ஏற்படாது என்று அந்த மனிதருக்கு புரிந்தது.மக்கள் தெய்வத்திற்கு பயப்படுவார்கள் என்பதால் அவர்களை கோவிலில் ஒருங்கிணைத்து "மதுவை தீண்டமாட்டோம்" என்று சபதம் ஏற்க செய்தார். சாராய விற்பனை செய்த முப்பது கடைகள் மூடப்பட்டன."விற்றே தீருவோம், முடிந்ததை பார்" என்று சூளுரைத்த சாராய வியாபாரிகள் சிலரின் கடைகள் அந்த கிராமத்து இளைஞர்களால் அடித்து நொறுக்கப்பட்டன.

ஆனால், இதையும் மீறி கிராம மக்கள் சிலர், அக்கம் பக்கம் இருந்த ஊர்களில் இருந்து மது வாங்கி அருந்தினர். அப்படி செய்த பனிரெண்டு பேரை கிராம மக்கள் ஊர் நடுவே கம்பத்தில் கட்டி வைத்து நையப் புடைத்தனர். அப்போது அந்த மனிதர் சொன்னார், "ஒரு தாய் தன் குழந்தை உடல் நலம் குன்றி திணறும் வேளையில் அதற்கு கசப்பான மருந்தை தருகிறாள். குழந்தைக்கு மருந்து பிடிக்காது என்ற போதிலும் அந்த குழந்தையின் நலம் கருதியே மருந்து திணிக்கப்படுகிறது. இந்த பனிரெண்டு பேருக்கு கொடுத்த தண்டனை அவர்கள் குடும்பத்தை காப்பாற்றும்.

அய்யா கிசன் பாபத் பாபுராவ் ஹசாரே அவர்களே, காந்தியவாதியாக இருந்த போதிலும் "ரௌத்திரம் பழக" வேண்டிய சூழ்நிலை வந்த போது அதை செய்தீர்கள். இன்று அப்படிப்பட்ட மருந்தே இந்த தேசத்திற்கு தேவைப்படுகிறது. வெள்ளையனிடமிருந்து விடுதலை பெற காந்தியம் உதவியது. நம்மவர்களிடம் நம்மை காத்துக்கொள்ள காந்தியம் உதவுமா என்று தெரியவில்லை. உங்கள் சித்தாந்தத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Saturday, 26 March 2011

அதிகம் அறியாத குறள்கள்....

சமீபத்தில் வாசு குடுத்த சுஜாதாவின் திருக்குறள் - ஒரு எளிய உரை என்ற நூலை படித்தேன். சிறு வயதில் இருந்து திருக்குறள் படித்து இருந்தாலும் (நன்றி: மனப்பாட பகுதி) அவற்றின் அதிகப்படியான திணிப்பு ஒரு வகையில் அதனை வெறுக்க காரணமாக இருந்தது.

இப்போது பல வருடங்கள் கழித்து இந்த எளிய உரையை படிக்கும்போது  "திருக்குறளுக்கு இவ்வளவு எளிய உரை எழுதி என்னை போன்றவர்களையும் படிக்க வைத்த சுஜாதா அவர்களின் மேதமையை புகழ்வதா அல்லது குறளில் உள்ள கருத்துகளுக்காக வள்ளுவரை புகழ்வதா" என்று தெரியவில்லை. இருவரையும் புகழும் அருகதையும் எனக்கில்லை என்றும் தெரிகிறது.

பல குறள்கள் புகழ் பெற்று இருந்தாலும், அறிமுகம் ஆகாத சில வைரங்களும் இருக்கத்தான் செய்கின்றன...எனக்கு பிடித்த சில குறள்கள்

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்


பொருள்: அரசன் தன்னை சுற்றிலும் உள்ளவர்களை ஒரு சமமாக பார்க்காமல் அவரவர் தகுதிக்கு ஏற்ப கவனித்தால் அவர்கள் நிலைத்து நிற்ப்பார்கள்.

இது இன்றும், எந்த முதல் அமைச்சருக்கும், அமைச்சருக்கும், எந்த அதிகாரிக்கும், முதலாளிக்கும், எந்த மேனேஜருக்கும் பொருந்தும் சொல்.

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்(து)
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.


பொருள்: விவேகமுள்ளவர்கள் பகைவரை பார்த்த உடனே எகிற மாட்டார்கள் . மனத்தில் அடக்கி தக்க சமயத்துக்கு காத்திருப்பார்கள்.

இது பற்றி கொஞ்சம் சிந்தித்து பார்த்தாலே போதும், நம்மை சுற்றி உள்ளவரிடையே இதற்கு உதாரணம் கிடைத்து விடும்.மேலும் விவரங்களுக்கு சோனியா காந்தியை அணுகவும்.

செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.

பொருள்: பணத்தால் செய்யக்கூடியதைச் செய்யாதவனின் சொத்து நிலைக்காது.எது பணத்தால் செய்யக்கூடியது? நண்பனோ ,உறவினரோ மிகுந்த பணமுடையாய் இருக்கும் சமயம்

செல்வந்தனின் பணம் அதற்கு உதவ வேண்டும். எல்லோரும் கூடும் சமயத்தில் செல்வந்தனின் பணம் உதவ வேண்டும், பஞ்ச காலத்தில் உதவ வேண்டும், நெருக்கடியான காலகட்டத்தில் உதவ வேண்டும். இதை செய்யாதவனின் சொத்து நிலைக்காது என்கிறார் வள்ளுவர். இதில் சொத்து என்பதை செல்வந்தனின் மகிழ்ச்சி அல்லது மதிப்பு என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

தெரிந்து தெளிதல் என்னும் அதிகாரத்தில் இப்படி கூறுகிறார்,

அற்றாரை தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நானற பழி


"பொருள் : உறவுகள் இல்லாதவரை நம்ப கூடாது. பற்று இல்லாததால் பழிக்கு அஞ்ச மாட்டார்கள்"
...................

Sunday, 20 March 2011

ஒரு நல்ல அரசியல்வாதிக்கு தமிழக மக்களின் சார்பில் மன்னிப்பு

ஒரு மிகச்சிறந்த தமிழ் பேச்சாளர் , ஆங்கிலத்திலும் பேசக்கூடியவர் , வெகு நாட்களாக அரசியலில் இருப்பவர். கீழ்த்தரமான அரசியல் நடந்ததில்லை.



ஆனாலும் ஜாதியை முன்னிறுத்தி அரசியல் செய்யும் ராமதாஸ் / திருமாவளவன் போன்றோருக்கு கிடைக்கும் மரியாதை , சினிமா கவர்ச்சியை மட்டுமே மூலதனம் வைத்து கட்சி வளர்த்த எம்.ஜி.ஆர் / கருப்பு எம்.ஜி.ஆர் போன்றோருக்கு கிடைத்த கிடைக்கும் செல்வாக்கும் இவருக்கு கிடைக்கவில்லை. விடுதலை புலிகள் ( மற்றவரை போல் அல்லாமல் வெளிப்படையான / உண்மையான ) ஆதரவு மட்டுமே இவருக்கு ஒரு பின்னடைவு.

கடந்த பல தேர்தலில் இவருக்கு ஒட்டு போடாமல் இன்று இந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கும் தமிழக மக்களின் சார்பாக ஒரு மன்னிப்பு. 

மன்னித்து கொள்ளுங்கள் அய்யா , பெருந்தலைவருக்கு அடுத்தபடி உங்களுக்கு தமிழர்கள் கொடுத்த பரிசு இது. அதாவது தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டு கொள்ளும் தமிழர் வழக்கத்திற்கு இன்று நீங்கள் பலி.