Wednesday, 4 May 2011

நளினகாந்தி

இயக்குனர் பாலச்சந்தர் சிந்து பைரவி படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்த பாலகுமாரனிடம் சொன்னாராம், "ஒரு நல்ல சவுண்ட் சிஸ்டம் இருக்கற ஏ.சி கார். அதுல கத்ரி கோபால்நாத் சாக்ஸ் கேட்டுண்டே பிரயாணம் பண்ணனும். அந்த சுகத்துக்காக எவ்வளோ வேணாலும் உழைக்கலாம் தெரியுமோ?"."இதற்குத்தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா?" புத்தகத்தில் மேலே சொன்ன வரிகள் வரும். பாலச்சந்தர் சொன்னது நூறு சதவீத உண்மை.

என் விஷயத்தில் கத்ரிக்கு பதிலாக டி.எம்.கிருஷ்ணா. தியாகையர் நளினகாந்தி ராகத்தில் அமைத்த "மனவ்யாலகிம்" கிருதியை டி.எம்.கிருஷ்ணா பாட
கேட்டுக்கொண்டு இன்று காலை வந்த போது பாலச்சந்தர் சொன்ன வரிகள் நினைவுக்கு வந்தன. இளையராஜா நளினகாந்தியை அட்சரம் பிசகாமல் உள்வாங்கி "மனவ்யாலகிம்" போலவே அமைத்த பாடல் தான் கலைஞன் படத்தில் யேசுதாஸ்-ஜானகி பாடிய "என்தன்
நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா". நான் அறிந்த வரை நளினகாந்தியில் பிரபலமான திரைப்பாடல் இது தான்.

நேருக்கு நேர் படத்தில் இடம் பெற்ற "மனம் விரும்புதே", அந்நியன் படத்தில் "அண்டங்காக்கா", கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஹரிஹரன்-மகாலட்சுமி பாடிய "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்", கற்க கசடற படத்தில் வரும் "நூதனா", ஜெயம் படத்தில் "திருவிழான்னு வந்தா" போன்றவையும் நளினகாந்தி என்றே நினைக்கிறேன்.

Sunday, 17 April 2011

The White Tiger

2008 ஆம் ஆண்டு புக்கர் பரிசு வென்ற அரவிந்த் அடிகாவின் "The White Tiger" படித்துக் கொண்டிருக்கிறேன். இது வரை படித்த பகுதிகள் முழுதும் இந்தியா மீதான தாக்குதல் தான். சில நாட்களுக்கு முன்பு தான் ஜெமோ தனது பதிவு ஒன்றில் காசியில் கங்கை ஆற்றில் பிணங்கள் மிதக்கும் என்பதெல்லாம் உண்மையல்ல என்று எழுதியிருந்தார். அதற்கு மாறாக கங்கை நோய்களின் மொத்த வடிவம் போன்ற வரிகள் இதில்.

இந்த புத்தகத்திற்கு எதற்காக புக்கர் பரிசு கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. புக்கர் வென்ற மற்ற இந்தியர்களான அருந்ததி ராய், சல்மான் ருஷ்டி, கிரண் தேசாய், நைபால் போன்றவர்களும் அரவிந்த் போல "india bashing" செய்து தான் அதை வென்றார்களா
என்று தெரிந்து கொள்ள அவர்களையும் படிக்க வேண்டும்.படிக்க முடியாவிட்டாலும் ஜெமோவிற்கு ஒரு மின்னஞ்சல் எழுதியாவது கேட்க வேண்டும்

Saturday, 16 April 2011

மரணம்



இரண்டு வாரங்களுக்கு முன் பணி முடித்து பின்னிரவு வீடு திரும்பும் போது ஏதோ ஒரு எப்.எம் அலைவரிசையில் டி.எம்.எஸ் உணர்ச்சிகரமாக பாடிக்கொண்டிருந்தார்.

வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் – இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம் – வரும்
ஜனனம் என்பது வரவாகும் – அதில்
மரணம் என்பது செலவாகும்

போனால் போகட்டும் போடா

இரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது – இது
கோட்டைக்குப் போனால் ஜெயிக்காது – அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது

ஏழு வயது சிறுவனாக தாயின் சிதைக்கு எரியூட்ட நின்ற அந்த கணங்கள் கண் முன் வந்து போனது. ஏதோ ஒரு சொல்ல முடியாத சோகம் தொண்டை குழியை அடைத்தது. இந்த நிமிடம் என்னை மரணம் தழுவினால் என்ன நடக்கும் என்று யோசித்தேன். வெறும் சடலமாக அடுத்த ஒரு மணி நேரத்தில் வீடு போய் சேர்ந்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கவே பயமாய் இருந்தது. வீட்டிற்கு வந்தவுடன் கழுத்தை கட்டிக்கொள்ளும் குழந்தை அதே பாசத்துடன் என் சடலத்தை கட்டிக்கொள்ளுமா என்று யோசித்தேன்.

இரண்டு நாட்களுக்கு இந்த பாடலே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு வழியாக இதையெல்லாம் மறந்து அன்றாட பிரச்சனைகளுக்கள் மீண்டும் சுழன்று கொண்டிருக்கும் போது அதெப்படி நீ என்னை மறக்கலாம் என்று மரணம் என்னை கோபித்துக் கொள்வது போல் இருந்தது நான் படித்த அந்த செய்தி.

"பாடகி சித்ரா அவர்களின் மகள் துபாய் நீச்சல் குளம் ஒன்றில் மரணம்".
உலகில் பிறந்த அனைவரும் ஒரு நாள் இறந்தாக வேண்டும் என்பது நியதி. ஆனால், தன் குரலால் உலகை எல்லாம் மயங்க செய்த சித்ரா, அடக்கம் என்ற வார்த்தைக்கு அர்த்தமாய் விளங்கும் சித்ரா, எப்போதும் இறைவன் நாமம் சொல்லும் சித்ரா, கடுகளவும் பிறர்க்கு தீது நினைக்காத சித்ரா, அவருக்கா இந்த தண்டனை?

அன்பே சிவம் படத்தில் சொல்வது போல், "என்ன மாதிரி கடவுள் இது?" பத்து வருடங்கள் குழந்தை இல்லாமல் துயரப்பட்டு அதன் பின் பிறந்த குழந்தை. அதுவும் "autism" குறைபாடுள்ள குழந்தை. எதற்கு பத்து வருடங்கள் அவரை துன்புறுத்தி, பின்னர் குறையோடு ஒரு பிள்ளையை கொடுத்து அதையும் எட்டு வயதில் பிடுங்கிக் கொள்ள வேண்டும்? பூமியில் இருந்து கொண்டு செல்ல ஆட்களுக்கா பஞ்சம்?

உறவை பிரிந்து வாடும் சித்ரா மற்றும் அவர் குடும்பத்தாருக்கு நம் அனுதாபங்கள்.