வன்முறையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள மற்றுமொரு திரைப்படம். டிவி மற்றும் பத்திரிகைகளில் இந்த படத்தை பற்றிய விமர்சனங்கள் நன்றாக இருந்ததாலும், என்னுடன் பணிபுரியும் நண்பர்கள் பலர் இத்திரைப்படம் பார்க்க வேண்டிய ஒன்று என்று கூறியதாலும் பார்க்கலாம் என்று போன எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கதை என்றெல்லாம் சொல்ல பெரிதாக எதுவுமில்லை. நன்றி உணர்வால் ஒரு கொலை செய்யும் கதாநாயகனும் அவன் நண்பனும் யாருக்காக அந்த கொலையை செய்தார்களோ அவன் தங்களை ஏமாற்றிவிட்டான் என்பது தெரிய வர அவனை கொலை செய்வது என்று முடிவு செய்கிறார்கள். இந்த வழக்கமான பழி வாங்கும் கதையில் காதல், காமெடி என்று அங்கங்கே கொஞ்சம் கலந்திருக்கிறார்கள். படத்தின் இயக்குனர் சசிகுமார் பாலா மற்றும் அமீரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது படத்தில் வரும் வன்முறை காட்சிகளை பார்த்தாலே தெரிகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் வில்லனின் தலையை வெட்டி ஒரு பையில் போட்டு கொண்டு செல்கிறார்(இந்த இடத்தில் அல் கொய்தா தீவிரவாதிகள் ஒரு பத்திரிகையாளரின் தலையை அறுப்பது போல இன்டர்நெட்டில் வந்த வீடியோவை நினைவுப்படுத்தி கொள்ளவும்).
படம் 25 நாட்களை கடந்து ஹவுஸ்புல்லாக ஓடி கொண்டிருக்கிறது. நான் சென்ற திங்கட்கிழமை மதியக்காட்சியும் ஹவுஸ்புல்.(60 ரூபாய் டிக்கெட்டை நான் 100 ரூபாய் கொடுத்து வாங்கினேன்). ஆனால், சுப்ரமணியபுரம் போல வன்முறையை மட்டுமே நம்பி எடுக்கப்படும் படங்களின் வெற்றி ஒரு பக்கம் கவலையளிக்கிறது. பருத்திவீரனின் வெற்றிக்கு பிறகு மதுரையையும் அதை சுற்றியுள்ள மண்ணையும் சார்ந்த மக்களின் வாழ்க்கை முறையை படம் பண்ணும் இயக்குனர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. ஆனால், அந்த மக்களின் வாழ்க்கை முறை வெறும் வன்முறையால் மட்டுமே நிறைந்துள்ளது என்ற தப்பான செய்தியை இந்த கூட்டம் தமிழ்நாட்டின் மற்ற பகுதியை சேர்ந்த மக்களுக்கு கொண்டு சேர்க்கிறதோ என்ற ஐயம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
முடிவாக சுப்ரமணியபுரம் பற்றி ஒரு வார்த்தையில் கூற வேண்டுமென்றால் "படம் முடிந்து ஸ்க்ரீன் போட்ட பிறகும் ரத்தம் கொட்டுவது போன்ற பிரமை ஏற்படுகிறது".
No comments:
Post a Comment