சிதம்பரம் நடராஜர் கோவில் இனி தீக்ஷதர்களின் கட்டுப்பாட்டில் இருக்காது என்றும் அதை அரசே ஏற்று நடத்தும் என்றும் நேற்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கோவிலுக்காக பணிகளை கண்காணிக்க ஒரு அதிகாரியையும் உடனே நியமனம் செய்ய உள்ளது. இது என்னை பொறுத்தவரை வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. கோவில் என்பது அனைவருக்கும் சொந்தம். இறைவன் மீது பக்தி உள்ள யார் வேண்டுமானாலும் அங்கு செல்லலாம்;சென்று இறைவன் நாமத்தை பாடலாம். அது குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு மட்டுமே சொந்தம் என்று கூறுவது சரியல்ல. ஆனால், இந்த அரசு நிஜமாகவே ஆலயங்கள் அனைவருக்கும் பொது என்ற நோக்கில் இதை செய்கிறதா அல்லது பார்பன எதிர்ப்பு கொள்கையில் இதுவும் ஒன்றா என்பது நமக்கு தெரியாது. எப்படியாக இருந்தாலும், அரசு சிதம்பரம் கோவிலை கையகபடுத்துவதில் உறுதியாக இருந்தால் கோவில் மட்டுமே கதி என்று வாழும் தீக்ஷதர்களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
கிருத யுகத்தில் சிவபெருமான் சிதம்பரம் கோயில் பொறுப்பை 3000 அந்தணர்களிடம் ஒப்படைத்தார் எனவும் அந்த வம்சத்தில் வந்தவர்கள் தான் தீக்ஷதர்கள் என்றும் கூறப்படுகிறது. இன்றும் சிதம்பரம் கோயிலுக்கு அரசு மான்யம் எல்லாம் கிடையாது. தனியார் நிறுவனங்கள் கொடுக்கும் நிதி மற்றும் தனி நபர் செய்யும் தானம் ஆகியவற்றில் தான் சிதம்பரம் கோயில் இயங்குகிறது. வரும் வருமானத்தின் முதல் பங்கு நடராஜருக்கு தான். தில்லை நாயகனுக்கு செய்யப்படும் நெய்வேத்யம் மற்றும் இதர செலவுகள் போக பாக்கி இருப்பதை தீக்ஷதர்கள் தங்களுக்குள் பிரித்து கொள்வார்கள். அரசு இந்த கோவிலை எடுத்து கொள்ளும் பட்சத்தில் தீக்ஷதர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.
கோவில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் கையில் இருப்பது நியாயமில்லை என்றாலும் இந்தியாவில்(குறிப்பாக கேரளாவில்) பல கோவில்கள் இப்படி உள்ளன. குருவாயூர் கண்ணனை பற்றி எத்தனையோ பாடல்கள் பாடிய யேசுதாஸ் அவர்களுக்கு இன்று வரை அங்கு அனுமதி இல்லை. சமீபத்தில் கேரளாவில் தாழ்ந்த சாதியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் தனது குடும்பத்துடன் குருவாயூர் கோவில் சென்று வந்தார். அவர் சென்ற பின் கோவில் நிர்வாகம் மொத்த கோவிலையும் தண்ணீர் ஊற்றி அலம்பியது. ஆனால், கேரளாவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இது போன்ற பிரச்சனைகளில் தலையிட முடியாது. இப்போது கூட இது தி.மு.க ஆட்சி என்பதால் தான் இதெல்லாம். மீண்டும் அம்மா ஆட்சிக்கு வந்தால் கோவில் தீக்ஷதர்களுக்கு திரும்ப போய்விடும் சாத்தியம் உள்ளது. ஆக, தமிழ்நாட்டில் பல கேவலங்களுக்கு வித்திட்ட தி.மு.க அரசு இன்று கோவிலை வைத்து அரசியல் செய்து ஒரு புதிய பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது.
2 comments:
வாசு,
நீ என்ன சொல்ல வருகிறாய்? இப்போது இது தேவை என்றா இல்லை என்றா? Confusing... மேலும் கேரளாவில் கோவிலில் என்ன தவறு நேர்ந்தாலும் அரசு தலையிடாமல் இருப்பதும் (அதிலும் ஒரு communist அரசு) தலையிடாமல் இருப்பது ஆச்சர்யம் மட்டுமல்ல தவறும் கூட..
தீக்ஷிதர்களுக்கு தனியாக சம்பளம் தரவேண்டும் என்பதில் மறு கருத்தில்லை, எனவே தி.மு.க பல கேவலங்களை செய்திருந்தாலும் இதில் தவறேதும் இருப்பதாக
தெரியவில்லை.
கோகுல்,
இதை ஒரு அரசாங்கம் இவ்வளவு அவசரமாக செய்ய வேண்டிய அவசியமில்லை. உச்ச நீதிமன்றம் இந்த ஆணையை பிறப்பித்திருந்தால் சரியாக இருந்திருக்கும். வேலை மெனக்கெட்டு இதை செய்வதால் அரசுக்கு என்ன கிடைக்க போகிறது என்று தான் தெரியவில்லை. இதற்கெல்லாம் ஒரே பின்னணி தான். சென்ற வருடம் நடராஜ பெருமான் சந்நிதியில் தேவாரம் பாடியே தீருவேன் என்று ஒருவர் கங்கணம் கட்டி கொண்டு அலைந்தார். அவர் பெயர் மறந்துவிட்டது. தீக்ஷதர்கள் அதை அனுமதிக்க முடியாது என்று கூற கடைசியில் அவர் கோவில் பிரகாரத்தில் நின்று தேவாரம் பாடிவிட்டு சென்றார். அவர் ஆரம்பித்த சின்ன பிரச்சனையை அரசு ஊதி பெரிசாக்கி விட்டது. இதை தவிர இப்போது அதை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர எந்த காரணமும் இல்லை.
ஆனால் யாருக்கு தெரியும்? கலைஞர் குடும்பத்தை சேர்ந்த யாராவது சிதம்பரம் கோவில் வேண்டும் என்று கேட்டார்களோ என்னவோ? எப்படியோ போகட்டும், இந்த சமயத்தில் இது தேவையற்றது என்பதே என் கருத்து.
மேலும், கேரளாவில் ஆலயம் சம்பந்தபட்ட விஷயங்களில் அரசு தலையிடுவதே இல்லை. அது ஏன் என்று தெரியாது. ஆனால், எத்தனை பெரிய மனிதராக இருந்தாலும் அங்கே கோவில் விதிகளுக்கு உட்பட்டே நடக்க வேண்டும்.
Post a Comment