நூதன முறையில் மக்களை ஏமாற்றுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. என் அலுவலகத்திற்கு அருகில் சாமியார் போல் உடை அணிந்த ஒருவரை தினமும் பார்ப்பேன். மிக தீர்க்கமான பார்வை கொண்டவர். உதடுகளில் எப்போதும் எதோ மந்திரத்தை உச்சரித்தபடி இருப்பார். நான் அவரை தாண்டி செல்லும் போதெல்லாம் என்னை பற்றி அனைத்தும் அறிந்தவர் போல் சிரிப்பார். சில நாட்களுக்கு முன் அவருடன் பேச நேர்ந்தது.
என்னை பார்த்தவுடன் "நீ நினைத்த காரியம் இன்னும் சில நாட்களில் நிறைவேறும் என்றார்". இப்படி ஒருவர் திடீர் என்று உங்களை பார்த்து சொன்னால் வேறு வழியே இல்லாமல் இரண்டு நிமிடம் நின்று யோசிப்பீர்கள், அல்லவா? அதை தான் நானும் செய்தேன். என்னுடைய இரண்டு நிமிட சலனம் அவருக்கு போதுமானதாக இருந்தது. உடனே "உன் மனதிற்குள் ஒரு பூவை நினைத்துக்கொள். நான் அந்த பூவை சரியாக சொல்கிறேன். அதன் பிறகு உனக்கு என் மேல் நம்பிக்கை வரும். உனக்கு நம்பிக்கை வந்தபின் காணிக்கை கொடு. உன் வாழ்வில் வரப்போகும் பல முக்கிய கட்டங்களை உனக்கு கூறுகிறேன் என்றார்".
எனக்கு மாட்டிக்கொண்டோம் என்று புரிந்தது ஆனாலும் சுதாரித்துக்கொண்டு சரி என்றேன். இரண்டு நிமிடத்திற்கு பின் எதோ மந்திரங்கள் சொல்லிவிட்டு "நீ நினைத்தது மல்லிகைப்பூ என்றார்". நான் இல்லை என்றேன். உடனே என்னை பார்த்து சிரித்துவிட்டு "நீ புத்திசாலி என்று எனக்கு தெரியும். உனது புத்தியில் உள்ள கலைவாணி என்னிடம் விளையாட்டு காட்டுகிறாள் என்றவர் இன்னும் சில மந்திரங்களை கொஞ்சம் மூர்க்கமாக உச்சரித்து விட்டு "நீ நினைத்தது ரோஜா என்றார்". நான் மீண்டும் நக்கலாக இல்லை என்றேன். இந்த முறை கொஞ்சம் கடுப்பாகி வேறு என்ன சாமந்தியா என்றார். நான் இல்லை என்றேன். அவ்வளவு நேரம் தூய தமிழில் பேசியவர் கொஞ்சம் ஜகா வாங்கி சென்னை தமிழுக்கு வந்து "தம்பி, என்ன பூ தான் நஞ்ச நீ" என்றார். நான் சிரிப்புடன் "குஷ்பூ" என்றேன். அதன் பிறகு அவரை நான் பார்க்கவில்லை.
No comments:
Post a Comment