ராகங்கள் பற்றி பேசி ரொம்ப நாளாச்சு. சில நாட்களுக்கு முன் வித்யாசாகர் இசையில் பிரிவோம் சிந்திப்போம் படத்திலிருந்து "கண்டேன் கண்டேன் காதலை" அப்படின்னு ஒரு பாட்டு கேட்டேன். வசந்தா ராகத்தை முழுமையாக உபயோகப்படுத்தி இருக்கிற பாட்டு இது.
வசந்தா மாலை நேரத்தில் பாடுவதற்கு ஏற்ற ராகம். இளையராஜா அதனால தான் ராஜபார்வை படத்துல வர "அந்தி மழை பொழிகிறது" பாடலை வசந்தால அமைத்திருக்கார் என்று நினைக்கிறேன்.ராஜரிஷி படத்தில் வரும் "மான் கண்டேன் மான் கண்டேன்", கூட வசந்தா தான். இதை தவிர வேறு பாடல்கள் இருக்கலாம். எனக்கு தெரியவில்லை. உன்னால் முடியும் தம்பி படத்துல "ராகம் வசந்தா நானும் குடித்து பார்க்க ரசம் தா" அப்படின்னு ஒரு வரிக்கு வசந்தா உபயோகப்படுத்தி இருப்பார் இசைஞானி. இந்த பாடல் கூட அவர் எழுதியது அப்படின்னு கேள்விப்பட்டேன். உறுதியாக தெரியவில்லை.
எனக்கு தெரிஞ்சு ஏ.ஆர்.ரகுமான் வசந்தால இசையமைச்ச பாடல் படையப்பா படத்துல வர "மின்சார பூவே". இதை தவிர வசந்தா ராகத்தை அவர் வேறு பாடல்களில் அங்கங்கே பயன்படுத்தி இருக்கலாம். ஆனால், மின்சார பூவே கலப்படம் இல்லாத வசந்தா. சங்கீதம் கற்றுக்கொண்டவர்கள் நிச்சயம் "நின்னே கோரி" என்ற வசந்தா ராக வர்ணத்தை தாண்டாமல் கீர்த்தனைகளுக்கு பிரயாணம் செய்திருக்க முடியாது. சீதம்மா மாயம்மா என்ற தியாகராஜர் கீர்த்தனையும் வசந்தா ராகத்தில் பிரபலம்.
No comments:
Post a Comment