Sunday, 30 October 2011

நண்பன்


நண்பர் ஒருவர் மேலே உள்ள புகைப்படத்தை முகநூலில்(Facebook) கொடுத்து இதை பற்றி எதாவது பதிவு எழுதும் எண்ணம் உள்ளதா என்று கேட்டிருந்தார். அவருக்காக இது.

புகைப்படத்தை பார்த்தவுடன் தோன்றுவது, "இந்த படத்தின் தோல்விக்கு காரணம் விஜய் தான் என்று ஸ்ரீகாந்தும், ஜீவாவும் கை காட்டுவது போலவும், இல்லை இல்லை இவங்க ரெண்டு பேரும் தான் என்று விஜய் சொல்வது போலவும் உள்ளது". கோடிக்கணக்கில் பணத்தை போட்டு படம் எடுக்கிறார்கள். அதன் வெற்றி, தோல்வியை பற்றி நாம் பேசத்
தேவையில்லை இருந்தாலும் உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்ற ஒரு இந்தியத் திரைப்படம் என்பதால் அதை தமிழில் எடுக்கும் போது மூலப் படத்தின் Originality பாழாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது.

வெற்றிக்கு முக்கியக் காரணம் அப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி. அபிஜத் ஜோஷியுடன் இணைந்து இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்தவரும் அவரே. பொதுவாக படத்தொகுப்பாளருக்கு இயக்குனரின் பார்வை இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். 3 Idiots படத்தை பொறுத்தவரை அதன் தொகுப்பாளரும் ராஜ்குமார் ஹிரானி தான். இயக்குனரே படத்தை எடிட் செய்வது காட்சிகளுக்கு வலு கொடுக்கிறது. Rashomon, Seven Samurai போன்ற படங்களை இயக்கிய உலக புகழ் பெற்ற ஜப்பானிய இயக்குனரான அகிரா குரோசவா தன் படத்தொகுப்பாளருடன் பல நாட்கள் படதொகுப்பறையில் நேரத்தை செலவிடுவார் என்று படித்திருக்கிறேன்.

ஷங்கர் கைதேர்ந்த இயக்குனர். அவர் கலையில் நமக்கு சந்தேகம் இல்லை. இருந்தாலும் அமீர் கானால் அமரத்துவம் பெற்ற ராஞ்சோ பாத்திரத்தை விஜய் செய்கிறார் எனும் போது விஜய்யின் பழைய படங்களை பார்த்தவர்கள் என்கிற முறையில் நம்மை பீதி பற்றிக்கொள்வதை தவிர்க்க முடியவில்லை. சாத்தூர்(Chattur) வேடத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார் என்று படித்த போது அதே பீதி பன்மடங்கு அதிகமாக தொற்றிக்கொண்டது. ஓமி வைத்யா என்ற நடிகர் அந்த பாத்திரத்தை மூலப் படத்தில் செய்திருந்தார். இயக்குனரால் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட கதாப்பாத்திரம்.

ராஞ்சோ மிஷின்கள்(Machines) பற்றி தன் பேராசிரியருக்கு விளக்கும் காட்சி, படிப்பது எப்படி என்று ராஞ்சோ கல்லூரி முதல்வரான போமன் இரானிக்கும் சக மாணவர்களுக்கும் அளிக்கும் விளக்கம், வயிறு புண்ணாக சாத்தூர்(Chattur) சிரிக்க வைக்கும் பலாத்கார் காட்சி போன்றவற்றை ஷங்கர் தமிழில் எப்படி செய்திருக்கிறார் என்று பார்க்க வேண்டும். தமிழில் கல்லூரி வாழ்வை மையமாக கொண்ட படங்கள் பல வந்திருந்தாலும்(தலைவாசல், நம்மவர், காதல் தேசம் ஆகியவை சில உதாரணங்கள்) அவற்றில் காதல், வன்முறை போன்றவையே பிரதானமாக முன்னிறுத்தப்பட்டது. 3 Idiots முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் கல்லூரிகளையும் நம் கல்வி முறையையும் சாடியது. நம்மில் பலர் மனதில் நினைப்பதை திரையில் காட்டியதே அதன் அமோக வெற்றிக்கு காரணம். இளைய தளபதி குறித்த பயம் இருந்தாலும் நானும் நண்பனுக்காக காத்திருக்கிறேன்.

3 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நண்பேண்டா...

Gokul said...

எது எப்படி இருந்தாலும் இரண்டு விஷயங்கள் தோன்றுகிறது,

ஒரிஜினல் படத்தையும் இந்த படத்தையும் .செய்ய முடியாது , ஏனெனில் North is North and South is South. ஹிந்தி படங்களின் வெற்றியை நிர்ணயிப்பவர் வேறு வகை மனிதர், தமிழ் படத்தின் வெற்றியை நிர்ணயிப்பவர் வேறு வகை மனிதர்.

ஷங்கர் என்னும் மாய வித்தைகாரர் எல்லவற்றையும் 3 மணி நேரம் மறக்கடித்து விடுவார்.

Viji said...

"இந்த படத்தின் தோல்விக்கு காரணம் விஜய் தான் என்று ஸ்ரீகாந்தும், ஜீவாவும் கை காட்டுவது போலவும், இல்லை இல்லை இவங்க ரெண்டு பேரும் தான் என்று விஜய் சொல்வது போலவும் உள்ளது" - good one :) Aamir Khan Vs Vijay - நினைத்தாலே நடுக்கம்