Monday, 12 March 2012

வேறெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி..

இரண்டு நாட்கள் தஞ்சை, திருச்சி என்று சுற்றி விட்டு நேற்றிரவு வீடு திரும்பினேன். வெள்ளி இரவு சென்னையில் இருந்து கிளம்பி அரியலூர் வழியாக தஞ்சை சென்றடைந்தேன். சென்ற முறை வாடகை கார் அமர்த்திக்கொண்டு அரியலூர் மார்கமாக தஞ்சை சென்ற போது சாலை மிக மோசமாக இருந்தது. அரியலூர்-தஞ்சை சாலை இப்போது புதிதாக போடப்பட்டுள்ளது. திருமானூர், திருவையாறு வழியாக தஞ்சை செல்லும் பாதை அது. வழியில் திருமழப்பாடி சாலை பிரியும். திருமழப்பாடி நந்திகேஸ்வரர் திருமணம் நடந்த இடம். காலை நான்கு மணிக்கு திருவையாறு காவேரி பாலம் வழியாக காரை செலுத்தினேன். பெண்கள் காவிரியில் குளிக்க சென்று கொண்டிருந்தார்கள். பாலம் தாண்டி காரை நிறுத்திவிட்டு காவிரியை சிறிது ரசித்தேன். ஓரமாக கொஞ்சம் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது.

தஞ்சை வந்து சேர்ந்த போது மணி நாலரை. திண்ணையில் படுத்து பத்து நிமிடம் கூட ஆகவில்லை, காமாட்சி அம்மன் கோயில் மணி கால சந்திக்கு அடித்தது. சிறிது நேரம் தூங்கி விட்டு ஆறரை மணிக்கு எழுந்தேன். குளித்துவிட்டு புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் சென்றேன். கோவிலில் அதிக கூட்டமில்லை. மகமாயியை மிக அருகில் தரிசிக்க முடிந்தது. தஞ்சையை ஆண்ட மராட்ட மன்னர் ஒருவர் சமயபுரம் மாரியம்மனை தரிசித்து திரும்பிய போது, மாரியம்மன் அவர் கனவில் தோன்றி நான் தஞ்சைக்கு கிழக்கே புன்னை காட்டில் வசிப்பதாக கூற, மன்னர் அங்கு சென்றார். கரையான் புற்று வடிவில் இருந்த அன்னையை சுற்றி கோவிலை கட்டினார். அந்த புற்றை பின்னர் அம்மனாக்கி அங்கு ஒரு யந்திரத்தையும் பிரதிஷ்டை செய்தார் சதாசிவ பிரம்மேந்திரர். மாரியம்மன் கோவிலின் பின்புறம் ஒரு பழமையான ராமர் கோவில் உள்ளது.அம்மனை பார்த்துவிட்டு வீட்டிற்கு வர, பாகற்காய் வதக்கல், கத்திரிக்காய் ரசவாங்கி, கதம்ப சாம்பார், ரசம், தயிர், மாங்காய் தொக்கு, மாகாளிக்கிழங்கு ஊறுகாய் என்று சாப்பாடு தயாராக இருந்தது. ஒரு பிடி பிடித்துவிட்டு மீண்டும் தூக்கம்.

மதியம் இரண்டு மணிக்கு கிளம்பி திருச்சி சென்றேன். மாலை ஸ்ரீரங்கத்தையும், திருவானைக்காவையும் தரிசித்தேன். கீழ அடையவளஞ்சான் வீதி, உத்திர வீதி எல்லாம் சுற்றி வர, சுஜாதா ஞாபகங்கள் பீறிட்டு எழுந்தன. சனிக்கிழமை என்பதால் ஏகக் கூட்டம். ரங்கனை சேவிக்க பெரிய வரிசை நிற்க, நான் சந்நிதியை ஒரு சுற்று சுற்றி விட்டு வெளியே வந்தேன். திருவானைக்காவில் அதிக கூட்டமில்லை. ஜம்புகேஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி தரிசனம் அற்புதமாக கிடைத்தது. கபாலி கோவில் அளவிற்கு அம்பாள் சந்நிதி மட்டும் திருவானைக்காவில். தீக்ஷதர் த்விஜவந்தி ராகத்தில் அமைத்த "அகிலாண்டேஸ்வரி ரக்ஷமாம்" மனதில் ஓடிக்கொண்டிருந்தது. கோவிலின் வெளிப் பிரகாரத்தில் ஓதுவார்கள் தேவாரம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஞாயிறு காலை திருச்சியில் இருந்து சென்னை கிளம்பினேன். மதுராந்தகத்தில் வழக்கம் போல் "கும்பகோணம் டிகிரி காபி" சுவைத்தேன். சென்ற முறை யக்ஷ பிரஷ்ணம். நேற்று விதுர நீதி. சிக்கில் குருசரண் குறுந்தகடு ஒன்று வாங்கினேன். ரீதிகௌளையில் "நன்னு விடசி" கேட்டபடி சென்னை வந்தடைந்தேன்.

2 comments:

Gokul said...

வாசு சூப்பர்... ஒரு மினி பாலகுமாரன் நாவல் படிச்ச மாதிரி இருக்கு.

Viji said...

very good narration... liking it