முகப்பேரில் அந்த மருந்து தயாரிக்கும் அலுவலகம் இருந்தது. சிறிய தொழிற்சாலை அவர்களுக்கு ராமாபுரத்தில் இருந்தது. விற்பனைப் பிரதிநிதி தமிழகம் முழுதும் தேவை என்று சொன்னது விளம்பரம். ஒரு சனிக்கிழமை காலை பல்லாவரத்தில் இருந்து முகப்பேர் சென்றோம். பிரதான சாலையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் உள்ளே சென்று வரவேற்பறையில் லேசாக புடவை விலகி செழுமை தெரிய அமர்ந்திருந்த அந்த சுமார் பெண்ணிடம் பெயர் கொடுத்துவிட்டு வெளியே நின்றுகொண்டிருந்தோம். எங்களை அழைத்த போது மதியம் மணி மூன்று. இரண்டு பச்சை வாழைப்பழம், ஒரு டீ வயிற்றில் இருந்தது.
நேர்முகத் தேர்வு, குழு கலந்துரையாடல் எல்லாம் முடிந்து இறுதி பெயர்ப் பட்டியல் வந்த போது மணி ஏழு. எங்கள் பெயர் இருந்தது. பத்துநாட்கள் முகப்பேரில் பயிற்சி. பயிற்சி முடியும் இறுதி நாளன்று நிறுவன தலைவருடன் நேர்முகம். அவர் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு வேலை. பத்து நாள் பயிற்சி ஆரம்பித்தது. நிறுவனத்தில் மருந்து பெயரை சரியாக உச்சரிப்பது தான் முதல் பயிற்சி. "செபெக்ஸ்" என்பது மருந்தின் பெயர். அதன் பிறகு, மருத்துவரை சந்திக்கும் போது எப்படி பேச வேண்டும், மருந்து அட்டையை எப்படி பிடித்துக்கொள்ள வேண்டும் போன்ற பயிற்சிகள். கிட்டத்தட்ட முப்பது பேருக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி கொடுத்தவர் நிறுவனத்தின் ஆரம்ப காலத்தில் சேர்ந்த ஒருவர்.
செபெக்ஸ் என்ற பெயர் சபெக்ஸ், சபீக்ஸ், சபேக்ஸ், செக்ஸ், சிக்ஸ் என்று ஒவ்வொருவர் வாயிலும் மாறி மாறி வந்த போது பயிற்சி கொடுத்தவர் பதட்டப்படாமல் சொன்ன ஒரே வரி "கடைசி நாள் முதலாளி முன்னால் இப்படி சொல்லாதீர்கள்" என்பது தான். அது ஏன் என்று அப்போது புரியவில்லை. என் விடலை பருவத்தின் உச்சம் அந்த காலகட்டம். நானும் என் நண்பனும் அவர் சொன்ன எதையுமே காதில் போட்டுக்கொள்ளவில்லை. ஆனால், நாங்கள் மருந்து பெயரை சரியாகவே உச்சரித்தோம்.
பயிற்சியின் கடைசி நாள் வந்தது. மதிய உணவு வேளை முடிந்த பின் நிறுவனத் தலைவர் வந்தார். எங்கள் எல்லாரையும் அவர் பார்க்கும் மாதிரி ஒரு வட்ட மேஜை போடப்பட்டு நாங்கள் அவரை சுற்றி அமர்ந்திருந்தோம். என்னை மருத்துவராக பாவித்து நீங்கள் பயிற்சியின் போது "கத்துகிட்ட வித்தைகளை மொத்தமாக இறக்குங்கள்" என்றார் லிங்குசாமி போல.
முதல் நபர் "சபெக்ஸ்" என்றார். "தே மவனே, நான் கஷ்டப்பட்டு மார்க்கெட் பிடிச்சிருக்கேன்டா, ஏன்டா பேரை மாத்தறே?" என்றார். அறையில் மயான அமைதி. நானும் என் நண்பனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். அடுத்த நபரை பார்த்து "நீ சொல்லு" என்றார் தலைவர். அவர் "செபிக்ஸ்" என்றார். முதலாளி அமைதியாக, "தம்பியோட அப்பா என்ன செய்யறாரு?" என்றார். "எண்ணெய் வியாபாரம் ஊர்ல", என்றார் நம்ம செபிக்ஸ். "அப்போ உங்க அப்பன் கூட சேர்ந்து அந்த மயித்தையே செய்ய வேண்டியதானே. இங்க எதுக்கு வந்த? என் உசிர வாங்கவா? எந்த நேரத்துல உங்க அப்பன் கோவணத்த அவுத்தானோ" என்றார்.
என் நண்பன் இயல்பாகவே கொஞ்சம் முன்கோபி. என்னிடம், "ஒம்மாள, நம்மள எதாவது சொன்னான், ஒத்த இவன நாளைக்கே பசங்ககிட்ட சொல்லி தூக்கறோம் மச்சான்" என்றான். நல்லவேளையாக எங்களுக்கு முன்னே இருந்தவர்கள் செய்த தவறுகளில் இருந்து நாங்கள் கொஞ்சம் கற்றுக்கொண்டு ஒழுங்காக பேசினோம். பெரிய அளவில் எங்களை எதுவும் சொல்லவில்லை அவர். ஆனால், மறக்கவே முடியாத ஒரு அனுபவம் அது. கடைசியில், வெளியூர் போக சொன்னதால் அந்த வேலை வேண்டாம் என்று முடிவு செய்தோம் நானும் என் நண்பனும். அப்பறம், தகவல் தொழில்நுட்பம் தான் நிறைய பணம் தரும் என்று ஞானம் பெற்று அதற்காக பயிற்சி பெற்று வேளைக்கு வந்ததை எல்லாம் புத்தகமாகவே போடலாம்.
2 comments:
good one guys....
Thanks Temple Jersey.
Post a Comment