Saturday, 4 October 2014

சிக்கெனப் பிடித்தேன்

நான் வசிக்கும் Fremont நகரிலிருந்து சற்று தள்ளி Concord என்ற இடம் உள்ளது. இங்குள்ள முருகன் கோவிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றேன். விநாயகர், முருகர், சிவன், துர்க்கை சந்நிதிகள். அர்ச்சனை செய்த சிவாச்சார்யார் திருவாசகத்தில் உள்ள

"அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே."

என்ற பாடலை கணீர்க் குரலில் பாட, எனக்கு இந்த "சிக்கெனப் பிடித்தேன்" என்கிற வரியை எங்கேயோ கேட்டிருக்கிறோமோ என்று வெகு நேரம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. ஏழாம் உலகத்தில் பண்டாரம் பழனியில் உருப்படிகளை விற்றது தெரிந்து பிக்பாக்கெட் திருடன் ஒருவன் பண்டாரத்தின் பின்னேயே வெகு நேரம் அலைந்து ஒன்றும் தேறாமல் அவரிடமே வந்து தேநீர் வாங்கிக் தரச் சொல்வான். அப்போது "நம்ம ஊர்ல ஆழ்வார் பிரபந்தம் பாடுவாங்களே, 'சிக்கெனப் பிடித்தேன்னு' அப்படி தான் அண்ணாச்சிய பிடிக்கலாம்னு வந்தேன் என்பான்.

கதையில் அந்த வரியை படித்த போது, "பணம், குடும்பம், வேலை" என்று எத்தனையோ விஷயங்களை "சிக்கெனப் பிடித்துக் கொள்ள வேண்டியுள்ளது" ஆனால் ஒருபோதும் இறைவனை அப்படி பற்றிக்கொள்ள தோன்றவில்லையே என்று எண்ணிக்கொண்டேன். கோவிலில் இந்த வரிகளை கேட்டபோது மறுபடியும் அதே நினைவு வந்தது.அது சரி, பிரபந்தம்னு சொல்லிடு இங்கே திருவாசக வரிகளை போட்டிருக்கேனேனு கேக்கறீங்களா..இதோ பிரபந்தம்..

வைகுந்தா!மணிவண்ணனே!என்பொல்லாத்
திருக்குறளா!என்னுள் மன்னி,
வைகும் வைகல் தோறும்
அமுதாய வானேறே,
செய்குந் தாவருந் தீமையுன் னடியார்க்குத்
தீர்த்தசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா, உன்னைநான்
பிடித்தேன்கொள் சிக்கெனவே.

No comments: