Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Tuesday, 13 October 2009

ஞானி - என்னை போல் ஒருவனா நீங்கள்?

சமீபத்தில் உன்னை போல் ஒருவன் படத்தை குமுதத்தில் ஞானி விமர்சனம் செய்து இருந்தார் , அதற்கு ஒரு எதிர்வினை.//  // குறிக்குள் இருப்பது ஞானியின் எழுத்துக்கள். ஞானியின் முழு விமர்சனத்தையும் படிக்க நினைப்பவர்கள் இங்கே செல்லலாம்.

//படத்தில் பெயர் இல்லாத நாயகனே, என்னைப் போல் ஒருவனா நீ?

நான் மனசாட்சியின் குரலுக்கு எப்போதும் செவி கொடுக்கிற ஒரு நடுத்தர வகுப்பு மனிதன். என்னால் பிறருக்கு வலியும், பிறரால் எனக்கு வலியும் ஏற்படக்கூடாது என்று விரும்பும் சாதாரண மனிதன். ஜாதி, மதம், மொழி, இனம் அடிப்படையில் மனிதரை மனிதர் உயர்வு தாழ்வு பார்க்கக்கூடாது என்று விரும்பும் ஒருவன். //


இதுவரைக்கும் சரி.. இனிமேல்தான் பிரச்சினை, ஞானி மேலும் எழுதுகிறார்

//
குற்றம் சாட்டப்பட்ட எவரும் முறையாக விசாரிக்கப்பட்டு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவேண்டும் என்றே விரும்புகிறவன். கொலைக் குற்றவாளிக்குக் கூட அதிகபட்சமாக ஆயுள் தண்டனையே தரப்படலாமே தவிர, மரண தண்டனை கூடாது என்று நினைக்கிறவன். சட்டத்தை என் கையில் எடுத்துக் கொள்ள ஆசைப்படாதவன்.

நீ என்னைப் போல் ஒருவனா? நிச்சயம் இல்லை.//


ஞானியே நீங்கள் என்னை போல் ஒருவரா? நிச்சயம் இல்லை.நிச்சயமாக இந்தியாவில் தூக்கு தண்டனையை ஆதரிப்பவர் இருக்கவே செய்கின்றனர், எப்படி சிலர் தூக்கு தண்டனையை எதிர்க்கின்றனறோ , அப்படியே மிகப்பலர் ஆதரிக்கவே செய்கின்றனர், "இந்த மாதிரி குண்டு வைக்கின்ற ஆட்களை தூக்குல போடணும் சார்" என்று பலர் பேசிக்கொண்டேதான் இருக்கின்றனர்.இது ஒரு பொது புத்தி, பொது புத்தியை உருவாக்குபவர் பெயரில்லாத பொதுஜனம், அந்த பொதுஜனமே நோக்கியே சொல்கிறார் அந்த படத்தை எடுத்தவர் "உன்னை போல் ஒருவன்"

இதுவரை தீவிரவாதாத்தால் இறந்தவர் எத்தனை பேர் (அது இஸ்லாமிய தீவிரவாதமோ அல்லது இந்து தீவிரவாதமோ அல்லது மற்ற எந்த தீவிரவாதமோ) , கொல்லப்பட்டும் ஒவ்வொரு தீவிரவாதியும் சுமார் பத்து பொதுமக்களை கொன்று விட்டே சாகின்றனர்.

இந்தியாவில் உள்ள வாக்கு வங்கி அரசியலுக்கு குந்தகம் வராமல் செயல்படுத்தப்படும் 'விசாரணையின் வேகம்' உங்களுக்கு தெரியாதா? "என்னை போல் ஒருவன்" எதிர்கொள்ளும் ஆமை வேக விசாரைணையின் எதிர்வினையே அந்த படம் என்பதும் உங்களுக்கு தெரியாமல் போனதில் ஆச்சர்யமே!

//எந்த மதத்து தீவிரவாதியாக இருந்தாலும் சரி, அவர்களை விசாரிக்காமல் சுட்டுக் கொன்றுவிடவேண்டும் என்று நினைக்கிறவர்கள் சார்பாக புறப்பட்டு வந்தவனும் அல்ல நீ.
அப்படி நினைக்கிறவர்கள் கருத்தை ஏற்பதாக இருந்தால், மசூதியை இடித்து மதக் கலவரங்களை உற்பத்தி செய்த அத்வானியையும், அரசு இயந்திரத்தின் உதவியோடு முஸ்லிம்களை கும்பல் கும்பலாகக் கொல்ல ஏற்பாடு செய்த மோடியையும் சுட்டுக் கொல்ல நீ புறப்பட்டிருப்பாய். //

 
இது நிச்சயமாக ஒத்துக்கொள்ளவேண்டிய ஒரு விஷயம், ஞானி எழுதுவது உண்மை.
ஆனால் மீரா நாயரின் water மற்றும் Fire வந்தபோதும் இந்துத்தவா ஆட்கள் இதையேதான் சொன்னார்கள் (அதாவது இம்மாதிரியான படங்களை இஸ்லாமிய கதாபாத்திரங்களை கொண்டு எடுக்க முடியுமா என்று?) அதாவது இந்துத்தவா ஆட்கள் சொல்லும் வாதத்தையே ஞானியும் வேறு சொற்களை வைத்து வேறு பாத்திரங்களுக்காக வேறு மதத்திற்காக சொல்கிறார்.ஹிந்தி படத்தில் வராத ஒரு ஹிந்து தீவிரவாதியை தமிழ் version-இல் சேர்த்தே இந்த கதி. இதற்காக மோடியையோ, அத்வானியோ ஆதரிக்கறேன் என்று நினைக்க வேண்டாம், என்னுடைய பதில் ஞானி அவர்களின் விமர்சனத்திற்கு மட்டும்தான்.

ஞானி அவர்களே, நீங்கள் மிகச்சிறந்த விமர்சகர், தமிழகத்தில் கலை மற்றும் அரசியலில் இன்றுள்ள நேர்மையான விமர்சகர் நீங்கள் மட்டுமே. ஆனாலும் உங்கள் விமர்சனத்தை மற்றவர் விமர்சிக்கலாம்தானே?

குளம்பியகத்தின் 300-வது பதிவு இது, இதுவரை ஆதரவு தந்த (இனிமேலும் ஆதரவு தரப்போகும்) அனைவருக்கும் நன்றி.

Saturday, 29 August 2009

விமர்சிக்க முடியாத பாலகுமாரன்


சமீபத்தில் பாலகுமாரன் பேசுகிறார் (http://balakumaranpesukirar.blogspot.com/) என்ற ப்ளாக்கில் பாலகுமாரனின் உடையார் நாவல் பற்றி ஒரு வாசகர் எழுதிய கடிதத்தை படிக்க நேர்ந்தது.அந்த நாவலை பற்றி மிகவும் உயர்வாக எழுதி பாலகுமாரனுக்கு ஒரு பெரிய பாராட்டு ஒன்றை வழங்கி இருந்தார் அந்த வாசகர்.

அதனை படிக்கும்போது, அந்த உடையார் என்ற 6 பாக நாவலை படிக்க வேண்டுமென்ற ஆவல் வந்தது, அதனை விட அந்த நாவலை பற்றி ஒரு தேர்ந்த விமர்சகர் விமர்சனம் செய்ய வேண்டும் , அந்த விமர்சனத்தை படிக்க வேண்டும் என்ற ஆவலும் வந்தது.
அதனை ஒரு கடிதமாக எழுதி ஒரு பின்னூட்டம் இட்டேன். நான் சொல்ல வந்தது என்னவென்றால்,
என்னதான் உடையார் நாவலை பற்றி வாசகர்கள் உயர்வாக சொன்னாலும், இந்த புகழ்ச்சிகள் அந்த வாசகர்கள் பாலகுமரான் என்ற எழுத்தாளர் மேல் இருக்கும் ஒரு பிரியம் காரணமாக வந்தது என்று சந்தேகப்பட வைக்கிறது, ஆகவே இந்த படைப்பை பற்றி தீவிர வாசகர்களும், மற்ற எழுத்தாளர்களும் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிய வேண்டும். அந்த தீவிர வாசக மற்றும் சக எழுத்தாளர்களின் விமர்சனமே, அந்த புத்தகத்தின் உண்மையான் இடத்தை அடைய வைக்கும்.

இதுதான் நான் அந்த கடிதத்தில் எழுதியது, ஆனால் இந்த பின்னோட்டத்தை அந்த வலைமனை வெளியிடவே இல்லை...

இந்த கடிதத்தில், பாலகுமாரனை பற்றி நான் என்ன தவறாக எழுதி விட்டேன் என்று இன்று வரை புரியவில்லை. இது பற்றி நான் ஏற்கனவே எழுதி இருந்தாலும் மீண்டும் மீண்டும் பாலகுமாரனின் ரசிகர்கள் ஒரு சிறு விமர்சன குரலையும் தாஙக முடியாமல் இருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

Sunday, 1 June 2008

ஜெயமோகனின் விமர்சனம்

இதனை ஒரு மாதத்திற்கு முன்பே எழுதி இருக்க வேண்டும் இப்போதுதான் முடிந்தது.

சில நாட்களுக்கு முன்பு ஜெயமோகன் எம்.ஜி.ஆர் பற்றியும் சிவாஜி பற்றியும் அவரது Blog-ல் குறிப்பிட்டு இருந்தார் அதற்காக அவர் தமிழ் சினிமா
துறையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார். (அவர் மன்னிப்பு கேட்காததனால்).


இது எந்த வகையில் நியாயம்? சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா ? காந்தியை பலரும் பல ஊடகங்களில் விமர்சனம்
செய்த பொது அவர்களுக்கு எந்த அளவிற்கு எதிர்ப்பு வரவில்லையே ஏன்?


சிவாஜியை சிம்ம குரலோன் நடிகர் திலகம் , அவரது ஒவ்வொரு நகக்கண்ணும் நடிக்கும் என்றெல்லாம் புகழ்ந்து எழுதும் போது அதை காது குளிர கேட்டவர்கள் அவர்களை விமர்சனம் செய்தபோதும் அதை கேட்டு இருக்க வேண்டும்.

ஒரு சினிமா நடிகரை (அவர் இறந்தவரோ உயிரோடு இருப்பவரோ) விமர்சனம் செய்ய கூடாது என்பது உலகிலேயே இங்குதான் நடக்க முடியும்.

இது எவ்வளவு பெரிய கேலிக்கூத்து?அதனால்தான் கேட்கிறேன் இறந்து போன காந்தியை விமர்சனம் செய்யும்போது எம்.ஜி.ஆரை / சிவாஜியை விமர்சனம் செய்ய கூடாதா?


ஜெயமோகன் விமர்சனம் செய்தது சிவாஜியின் சில முக பாவங்களை மற்றும் அவரது உருவ அமைப்பை. அது பொய்யே அல்ல , சிவாஜி 1976 முதல் 1982 வரை ஒரு மெகா சைஸ் தொப்பையை வைத்துக்கொண்டு அதை மறைக்க ஒரு கோட் மாட்டிக்கொண்டு சுமார் 50-60 படங்கள் நடித்து இருப்பார். இதை விமர்சிக்க கூடாதா?

தென்னிந்திய திரைத்துறையில் ஆணாதிக்கம் என்ற கோட்பாட்டிற்கு உருவம் கொடுத்தால் அது சிவாஜி மற்றும் என்.டி.ஆர் ஆகியவர்களுக்குதான் கொடுக்க முடியும் (எம்.ஜி.ஆரின் இடம் வேறு!).

சுமார் 25 வருடங்கள் கழித்து இதனை ஒரு விமர்சனம் செய்தால் அதை கண்டிப்பதா? பாராட்டல்லவா வேண்டும்.

அதே போல் எம்.ஜி.ஆருக்கு மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், புரட்சி நடிகர் என்று பல பட்டங்கள்.

அவரின் படங்களின் வசூல் பற்றியோ, அல்லது அவரின் உதவி செய்யும் குணத்தை பற்றியோ அல்லது அவரது தனிப்பட்ட குணநலன்கள் பற்றியோ ஜெயமோகன் எந்த கிண்டலும் செய்யவில்லை, மாறாக அவர் திரையில் அவரது கதாநாயகியை எப்படி treat செய்தார் என்பது பற்றியே அவரது இருக்கிறது.அதற்காக அவரை குறை சொல்பவர்கள் 1972-1978 வருடங்களில் வந்த எம்.ஜி.ஆரின் படங்களை பார்த்தல் நலம்.(முக்கியமான condition, நாயகி லதா அல்லது மஞ்சுளாவாக இருக்க வேண்டும்).

அடுத்து அவரது உச்சரிப்பு. அது ஏனோ தெரியவில்லை தமிழ்நாட்டு சூப்பர் ஸ்டார்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் வித்தியாசமானதாகவே அமைகிறது.

எம்.ஜி.ஆரின் தமிழ் உச்சரிப்பு அவர் சுடப்படுவதற்கு முன் மிக நன்றாகவே இருந்து இருக்கிறது.


ஆனால் அவர் சுடப்பட்ட பின் மிகவும் மோசமானதாக ஆகிவிட்டது. இதை விஷயத்தை ஒரு சாதாரண மனிதனை கொண்டு ஒப்பிட்டு பார்ப்போம்.

ஒரு tailor அவருக்கு கண் பார்வை மிகவும் மங்கலாகி விட்டது, ஊசியில் நூல் கோர்க்க முடியவில்லை, நாம் என்ன செய்வோம்? அவரை பார்த்து பரிதாபப்படுவோம் ஆனால் அவரிடம் துணி கொடுப்போமா சில சமயம் பரிதாபத்தின்பால் கொடுப்போம் ஆனால் நிச்சயம் எல்லா துணிமணிகளையும் கொடுக்க மாட்டோம், சில பேர் ஒரு துணியை கூட கொடுக்க மாட்டார்கள்.

ஒரு வேலை துணியை கொடுத்து அந்த tailor நன்றாக தைக்கவில்லை என்றால் நிச்சயம் "என்னப்பா கண் சரியா தெரியாதவன் எப்படிப்பா ஒழுங்க தைப்பான்?" என்று கமெண்ட் அடிப்போம்.யாருமே "கண் தெரியாதவன் இவ்வளவுதான் தைக்க முடியும், எனவே தைத்த சட்டையை குறை சொல்லாமல் போட்டுக்கொள்" என்று கூற மாட்டார்கள்.


துணி விஷயத்தில் இப்படி என்றால், ஆயிரக்கணக்கான மக்கள் பார்க்கும் சினிமாவில் அந்த வித்தியாசமான உச்சரிப்புக்கு விமர்சனங்கள் எழாமலா இருக்கும், நிச்சயம் அப்போதே எழுந்து இருக்கும், இப்போதும் ஜெயமோகன் அதைத்தான் நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார். இந்த விமர்சனத்தை தாங்காதவர்கள் உண்மையில் கலைஞர்கள்தானா என்ற சந்தேகம் வருகிறது.

ஆனந்த விகடனின் "சும்பன்" மற்றும் ஜெயமோகன் இருவருக்கும் நடந்த மோதலில் தோற்றதென்னவோ நகைச்சுவை உணர்வும் கருத்துரிமையும்தான்!