Monday, 10 December 2012

எதை அணிந்து கொண்டு குடிக்கலாம் ?

ஞாயிறு தினமலர் நாளிதழுடன் வரும் வாரமலர் புத்தகத்தில் இதை படித்தேன்:

"உற்சாக பானத்தை ஆராதிப்பவன் நான். உ.பா., அருந்திவிட்டு தூங்கும் நாட்களில் எல்லாம், இடுப்பு கைலி நெகிழ்ந்து, நமீதா போல் அலங்கோலமாய் படுத்து கிடப்பேன் போல. இது, என் மனைவிக்கு பழக்கமான காட்சியாக இருந்தாலும், என் 15 வயது மகனின் முகத்தை சுளிக்க வைத்திருக்கிறது. பல விதமாய், "கமென்ட்' அடிக்க ஆரம்பித்தான். நானும், கைலியை இறுக்கிக்கட்டி, அய்யம்பேட்டை பாய் போல் இடுப்பில் சுருட்டி விட்டு பார்த்தேன். கைலி மேல் பெல்ட் அணிந்தும் பார்த்தேன்; பலனில்லை. காலையில் கைலி அவிழ்ந்து கிடந்து, "மச்சான்ஸ்...' என்றது.

கடைசியில் என் நண்பர் ஒருவர் ஐடியா கொடுத்தார். உ.பா., அருந்த பெர்முடா டவுசருடன் போய், அதனுடனேயே அருந்துவது. உ.பா.,விற்கு பின், தொளதொள பைஜாமா அணிந்து தூங்குவது. பெர்முடாவும், பைஜாமாவும் என் மானத்தை காப்பாற்றுகின்றன. உ.பா., அன்பரே... லுங்கி தவிர்ப்பீர்; தொளதொள பெர்முடா டவுசர் அணிவீர்!

— ஆர்.ஒய்.எம்.பாலகிருஷ்ணன், சாத்தூர்.

இதை எப்படி ஆசிரியர் வெளியிட்டார் என்று தெரியவில்லை. சரக்கு அடித்தால் லுங்கிக்கு பதிலாக பெர்முடா அணியுங்கள் என்று ஒரு குடிமகன் பிற குடிமகன்களுக்கு அறிவுரை தருகிறார். அதை ஒரு நாளிதழ் பிரசுரிக்கிறது. கலி காலம்.

Saturday, 8 December 2012

வலியின் வரிகள்

Viktor Frankl எழுதிய "Man's Search For Meaning" புத்தகத்தை படிக்க நேர்ந்தது. Neurology மற்றும் Psychiatry துறை பேராசிரியராக வியன்னா பல்கலைகழகத்தின் மருத்துவப் பள்ளியில் 1997 ஆம் ஆண்டு தான் இறக்கும் வரை பணிபுரிந்தார் Frankl. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாசி ஆட்சி ஏறத்தாழ அறுபது லட்சம் யூதர்களை Concentration மற்றும் Extermination camps மூலம் கொன்று குவித்தது.ஆஸ்திரியாவில் தன் மனைவியுடன் கைது செய்யப்பட்டு Auschwitz Concentration கேம்பிற்கு மாற்றப்பட்டார் Frankl.அடுத்த மூன்று ஆண்டுகள் Auschwitz, Dachau மற்றும் வேறு சில Concentration கேம்ப்களில் இருந்தார் Frankl. Holocaust என்று அழைக்கப்படும் இந்த கொலைகளில் இருந்து தப்பிய ஒருவர் தான் Frankl.

Man's Search For Meaning அவரது மூன்றாண்டு கேம்ப் அனுபவங்களை பற்றியது. மனித வாழ்க்கையில் எத்தனை துன்பம் நேர்ந்தாலும், மனிதன் தன் வாழ்வின் அர்த்தத்தை தேடிக்கொள்ள வேண்டும் என்கிறார் Frankl. புத்தகத்தில் பல இடங்களில் ஜெர்மன் வேதாந்தி நீட்ஷேவின் எழுத்துக்களை குறிப்பிடுகிறார் Frankl. "He who has a Why to live for can bear almost any How" என்னும் நீட்ஷேவின் வரிகளை, எந்த நிலையிலும் வாழ்வாசை கொள்ள வேண்டும் என்பதற்கு மேற்கோள் காட்டுகிறார்.

கூட்டம் கூடமாக விஷவாயு பீழ்ச்சி கேம்பில் கொல்லப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள், இரக்கமற்ற ஹிட்லரின் கைகூலிகளும் அவர்கள் கேம்பில் இருந்தவர்களை நடத்திய விதமும் பற்றியெல்லாம் படிக்கும் போது மனம் கனக்கிறது. வாழ்வில் விரக்தி அடைந்த பலருக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது இந்த நூல்.

Monday, 12 November 2012

காசி - 2

காசி நடப்பதற்கு ஏற்ற ஊர். சிறிய தெருக்களில் நடந்தே ஊரை தெரிந்து கொள்ள முடியும். இருப்பினும் முதல் முறை என்பதால் வழிகாட்டி ஒருவரின் உதவி இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. நான் தங்கியிருந்த விடுதியில் பனராஸ் ஹிந்து பல்கலையில் வணிகவியல் படிக்கும் குல்தீப் என்னும் இளைஞன் நட்பானான். "நீங்கள் விரும்பினால் பணம் கொடுங்கள், எனக்கு வழிகாட்டுவது பிடிக்கும், உங்களுடன் வருகிறேன்" என்றான். முகல்சராய் வந்து இறங்கி காசி சென்றடைய இரவு 9 ஆகி விட்டது. "மயானங்களை பார்க்க படகு தான் சிறந்த வழி. காலை ஆறு மணிக்கு விடுதிக்கு வந்து உங்களை படகோட்டியிடம் அழைத்துச் செல்கிறேன். நான் உள்ளூர்வாசி என்பதால் என்னால் உங்களுக்கு பேரம் பேச உதவ முடியாது. நீங்களே பேசிக் கொள்ளுங்கள்" என்றான் குல்தீப்.

சொன்னபடி ஆறு மணிக்கு விடுதியில் இருந்தான் குல்தீப். விடுதியில் இருந்து வெளியே வர மழை தூர ஆரம்பித்தது. காசியில் உள்ள அனைத்து படித்துறைக்கும் படகில் செல்ல ஆறாயிரம் ஆகும் என்றான் படகோட்டி. எனக்கு மணிகர்ணிகா மற்றும் ஹரிஷ்சந்திரா படித்துறைகள் பார்த்தால் போதும் என்றேன். அதற்கு நாலாயிரத்து ஐநூறு ஆகும் என்றான். குல்தீபிடம் நடந்தே செல்வோம் என்றேன். அது நல்ல முடிவு என்று பின்னர் புரிந்தது. ஹரிஷ்சந்திரா காட்டில் ஒரு பிணம் எரிக்க தயாராய் இருந்தது. மழை நன்றாக பிடித்துக் கொள்ள, இப்போது சிதையை எரிக்க மாட்டார்கள் என்றான் குல்தீப். அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து மணிகர்ணிகா அமைந்திருந்த நகரின் மையப் பகுதிக்கு வந்தோம்.

மணிகர்ணிகாவில் இரண்டு சிதைகள் எரிந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பிணம் எரிக்கும் நபர், அருகில் சென்று பாருங்கள் என்றார். சதை மொத்தமும் எரிந்து எலும்புகள் தெரியும் காட்சியை பார்க்க முடியவில்லை என்னை தந்தையால். "இங்கிருந்து செல்வோம்" என்றார். இரண்டு நிமிடத்தில் கங்கையை அடைந்து குளித்தோம். நாங்கள் மூன்று முங்கு போட்டு எழவும் சூரியன் வெளிவரவும் சரியாக இருந்தது. நான் "ஆதித்ய ஹ்ருதயம்" சொன்னேன். அங்கிருந்து நேராக விஸ்வநாதர் கோயில் சென்று தரிசித்தோம். பின்னர் விடுதிக்கு வந்து உடை மாற்றி ஹனுமான் காட்டில் இருந்த காஞ்சி காமகோடி மடத்தை சென்று பார்த்தோம். அங்கிருந்து விடுதிக்கு வரும் வழியில் மதிய உணவை முடித்துக் கொண்டோம். மாலையில் நடக்கும் கங்கா ஆர்த்தி அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று. விடுதிக்கு வந்து உங்களை அழைத்துச் செல்கிறேன் என்று கூறி விடைபெற்றான் குல்தீப்.

காசியில் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி கங்கா ஆர்த்தி. கங்கையை கடவுளாக வரித்துக் கொண்டு அதற்கு செய்யப்படும் பூஜை தான் கங்கா ஆர்த்தி. இதற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் இந்த பூஜையை ஒவ்வொரு நாளும் மாலை செய்கிறார்கள். நூறு ரூபாய் கொடுத்து ஒரு படகில் இடம் வாங்கித் தந்தான் குல்தீப். கங்கையில் நின்று கொண்டிருக்கும் படகில் அமர்ந்து இதை ரசிக்க வேண்டும்.

இரவு காசியில் இருந்து அலகாபாத் பயணம். சென்னையில் இருந்து பாண்டி செல்லும் தூரத்தை சென்றடைய ஐந்து மணி நேரம் ஆயிற்று. சாலை நிலை அப்படி. அந்த சாலையை உபயோகிக்க வரி வேறு. காலையில் எழுந்து திரிவேணி சங்கமம் சென்றோம். கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் இடம். இரண்டு நதிகளின் நிறமும் தனியாக தெரிகிறது. கரையில் இருந்து சங்கமிக்கும் இடம் சென்ற வர படகு கூலி ரூபாய். படகோட்டி தமிழ் நன்றாகவே பேசுகிறேன். பெரும்பாலும் ஐயர் கூட்டம் வருவதால் பார்த்த உடனே மாமா, மாமி என்கிறான்.அங்கே இருந்த படே ஹனுமான் கோயில் சென்றோம். ஹனுமான் ரங்கநாதர் மாதிரி படத்துக் கொண்டிருந்தார். மிக பெரிய ஹனுமான் சிலை. மேலிருந்து பார்க்க வேண்டும். வடக்கே கிராமங்களில் இருந்து வரும் மக்கள் கங்கையை வழிபடும் விதம் பரவசப்படுத்துகிறது. அவர்களுக்கு கங்கை தாய். நம்மூர் ஆடிப்பெருக்கு போல் கங்கைக்கு தினம் பூ, விளக்கு, பழம் என்று பூஜை.

"Male Chauvinism" வடக்கில் அதிகம் என்று தோன்றுகிறது. தங்களுக்கு மட்டும் டீ வாங்கிக் கொள்ளும் கணவன்மார்கள். அவர்களுக்காக திரிவேணி கரையிலேயே அடுப்பு கொளுத்தி சப்பாத்தி செய்யும் மனைவிகள். பீடி பிடித்துக் கொண்டிருக்கும் கணவன் நலத்திற்காக திரிவேணியில் அவனை அமர வைத்து பூஜை. அலகாபாதில் இருந்து பீகார் வழியாக கொல்கத்தாவிற்கு ரயில் பயணம். பீகார் உள்ளே செல்ல செல்ல ஏழ்மை செழுமை அடைகிறது. கொல்கத்தாவிற்கு வேலை தேடி வரும் பீகார் இளைஞர்கள் ரயிலை மொத்தமாக ஆக்கிரமித்து கொள்கிறார்கள். இரவு பயணம் முழுதும் டீ மற்றும் புகையிலை தான் பக்கத்துணை அவர்களுக்கு. காலை நாலு மணிக்கு கொல்கத்தா வந்தடைந்தேன். அங்கே இரண்டு நாள் இருந்து விட்டு சென்னை வந்தேன்.

Thursday, 20 September 2012

காசி - 1

காசி சென்று வந்து ஒரு மாதம் ஆகப் போகிறது. திரும்பி வந்த உடனே ஒரு பதிவு எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால், எதைப் பற்றி எழுதுவது என்று தெரியவில்லை. காரணம், காசி பற்றி மட்டுமே எழுத அதிகம் ஒன்றும் இல்லை. மணிகர்ணிகா மற்றும் ஹரிச்சந்திரா காட்டில் சிதை எரிவதை பார்த்ததும், கங்கையில் வெள்ளம் சுழலோடு கரைபுரண்டோட, அதனூடே அஸ்தியும், எறிந்த விறகும், மாலைகளும் சென்ற வண்ணம் இருந்த காட்சிகளும், கங்கையின் விஸ்தாரமும், நவீன உலகின் மாற்றங்கள் எதுவும் பெரிய அளவில் இல்லாத காசி நகரும் என்னை பாதித்தன என்றாலும், அதை விட முக்கியமாக நான் கருதுவது காசி சென்று சென்னை திரும்பும் வரை கிடைத்த அனுபவங்களைத் தான்.

சென்னையிலிருந்து ஆந்திரா, மகாராஷ்டிரா, ம.பி வழியாக உ.பியில் உள்ள முகல்சராய் சென்று அங்கிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாரனாசி எனப்படும் காசி நகரை சென்றிந்தேன். கயா எக்ஸ்பிரஸ் என்னும் அந்த ரயில் சென்னையில் காலை ஏழு மணிக்கு கிளம்பி மறுநாள் மாலை 6:30 மணிக்கு முகல்சராய் செல்கிறது. ரயில் முழுதும் சென்னை பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள். பெட்டி முழுதும் நடக்கக் கூட இடம் இல்லாத அளவிற்கு சாமான்களை அடைத்து ஊருக்கு செல்கிறார்கள். இவர்களில் தொண்ணூறு சதர்விகிதம் பேர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள். என் பெட்டியில் இருந்த நான்கு வாலிபர்களும் சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு கணினி நிறுவன கட்டுமான பணியில் ஈடுபட்டிருப்பதாக சொன்னார்கள். மாத சம்பளம் பதினைந்தாயிரம் ரூபாய். பீகாரில் இருந்தால் நாலாயிரம் தாண்டாது என்றார்கள். அதுவும் கையில் வந்து சேரும் வரை சொல்லமுடியாது. சென்னையில் அந்த பிரச்சனை இல்லை. மாதம் தவறாமல் சம்பளம் பட்டுவாடா செய்யப்படும் என்றார்கள்.

பெட்டியில் இன்னொரு வட மாநில இளம்பெண் அவள் பாட்டியுடன் இருந்தாள். மத்திய பிரதேசத்தில் ஏதோ ஒரு கிராமத்திற்கு பாட்டியை அழைத்து செல்கிறேன் என்றாள் ஹிந்தியில். பாட்டி கையில் பெரிய புண் இருந்தது. அவ்வப்போது அதற்கு மருந்து தடவி கட்டுப் போட்டாள். ஒரு கட்டத்தில் அவள் தூங்கி விட, பாட்டிக்கு அம்பத்தூர் நண்பர்கள் பாட்டிக்கு அந்த சேவையை செய்தார்கள். ம.பியில் அவர்கள் இறங்கி விட, என்னுடன் பேசிக்கொண்டு வந்த அந்த இளைஞர்களில் ஒருவன், அந்த பாட்டிக்கு புற்றுநோய், ஆனால் மருத்துவரிடம் செல்லாமல் தானே ஏதோ ஆயுர்வேத மருந்துகளை உபயோகிக்கிறாள் என்றான். உனக்கு எப்படி தெரியும் என்றேன்? அந்த பெண் சொன்னாள். பாட்டிக்கு புகையிலை மற்றும் புகை பிடிக்கும் பழக்கமும் உள்ளது என்றான்.

இடார்சி வரை வறுமை பெரிதாக தென்படவில்லை. இடார்சி தாண்டி ம.பியில் நுழைந்து ஜபல்பூரை அடைந்தது ரயில். ஜபல்பூர் ரயில் நிலையத்தில் மனிதர்களை விட அதிகமாக மாடுகளும், நாய்களும் இருந்தன. பெட்டியில் பாம்பாட்டிகள் ஏறிக் கொண்டார்கள். பாம்பாட்டிகள் என்று கூட சொல்ல முடியாது. மிஞ்சி போனால் பதினைந்து வயதிருக்கும். ஒவ்வொருவர் கையிலும் ஆறடி கரு நாகப் பாம்புகள். இரண்டு ரூபாய் கொடு, தலையில் ஆசிர்வதிக்க செய்கிறேன் என்றார்கள். இருந்த பயத்தில் நான் பெட்டியின் கடைசிக்கு சென்று விட்டேன். ம.பி தாண்டும் வரை இப்படி பலரை பார்த்தேன். இடார்சி தாண்டிய பின் பயணச்சீட்டு பரிசோதகர் கண்ணில் படவே இல்லை. வேர்கடலை, மசாலா பொரி, பழம், கூடை விற்பவர்கள் என்று வந்து கொண்டே இருந்தார்கள்.

ம.பி, உ.பி இரண்டு இடங்களிலுமே நான் பார்த்த வரை, எந்த இடத்திலும் ஆடம்பரமான வீடுகளோ, சுத்தமான தெருக்களோ தென்படவே இல்லை. உ.பியில் பத்து மணி நேர மின்வெட்டு சர்வ சாதாரணம் போலும். சாலை என்பது பெயருக்கு கூட இல்லை. கடைகள் பலவற்றில் காடா விளக்கில் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. தமிழகம் எண்பதுகளில் அப்படி இருந்திருக்குமா என்பது கூட சந்தேகம். முகல்சராய், வாரனாசி போன்ற ஊர்களில் தான் இந்த நிலை என்று நினைத்த எனக்கு அலகாபாத் நகரும் அதே போல் இருப்பது அதிர்ச்சி அளித்தது. திரிவேணி சங்கமம் செல்லும் சாலை முழுதும் குண்டும் குழியுமாக இருந்தது.

(தொடரும்)

Saturday, 25 August 2012

துக்ளக் கேள்வி-பதில்

துக்ளக் இந்த வார இதழில் இடம்பெற்ற சில கேள்விகளும் அதற்கான சோவின் சுவாரசியமான பதில்களும்:

1. "கொஞ்சமாகத் திருடுங்கள், கொள்ளையடிக்காதீர்கள்" என்று அதிகாரிகளுக்கு உத்திரப் பிரதேசப் பொதுப் பணித்துறை அமைச்சர் ஷிவ்பால் யாதவ் கூறியுள்ளது பற்றி..?

மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் யாராவது இது பற்றி வியப்புத் தெரிவித்திருந்தால், பரவாயில்லை. நீங்கள் தமிழ்நாட்டில் இருந்து கொண்டே இது பற்றி ஆச்சர்யப்படுகிறீர்களே, அது எப்படி? நமக்குத்தான் இது தெரிந்த விஷயமாயிற்றே! வழக்கமான விஷயமாயிற்றே! பல வருடங்களுக்கு முன்பாகவே கலைஞர் 'புறங்கையைத்தானே நக்கினோம், தேன் எடுத்தவன் புறங்கையை நக்க மாட்டானா? இதற்காக தண்டனையா?' என்று கூறி மக்களிடம் மன்றாடவில்லையா? அவ்வளவு தெளிவாக அவரே கூறி விட்ட விஷயத்தை இப்போது காப்பி அடித்து உத்திரப் பிரதேச அமைச்சர் பேசுகிறார். நீங்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்கிறீர்கள். சொல்லப் போனால், கலைஞரின் காப்பிரைட்டை மீறியதற்காக உத்திரப் பிரதேச அமைச்சர் மீது வழக்குத் தொடர வேண்டும்.

2.இனி லோக்பால் மசோதா குறித்து மத்திய அரசுடன் பேசப்போவதில்லை என்று அன்னா ஹசாரே அறிவித்து விட்டாரே? ஏன்?

ஊரில் எத்தனையோ சிறுவர்கள் 'காய்' விட்டுக் கொள்வார்கள், பிறகு 'பழம்' விட்டுக் கொள்வார்கள். இதையெல்லாம் நாம் கவனித்துக் கொண்டிருக்க முடியுமா? விடுங்கள்.

3. ராகுல் காந்தி பிரதமராவதற்கு அவரிடம் உள்ள தகுதிகள் போதுமா?

தாராளமாக போதும். சொல்லப் போனால் வேண்டிய தகுதியை விட, மிக அதிகமான தகுதியே ராகுல் காந்தியிடம் இருக்கிறது. பிரதமர் ஆவதற்கு வேண்டிய தகுதி வயது. ராகுல் காந்தி அந்த தகுதியை மீறிய தகுதி படைத்தவர். அவருக்கு வயதாகிறதே!

4.டெஸோவுக்கு எதிராக இலங்கை அரசு பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாகக் கலைஞர் தெரிவித்துள்ளாரே?

முன்பெல்லாம் இலங்கை விவகாரத்தில் கலைஞர் மத்திய அரசுக்கு தான் பயப்பட்டார். இப்பொழுது இலங்கை அரசுக்கும் பயப்படத் தொடங்கி விட்டார். 'நாங்கள் நடத்துகின்ற டெஸோ, இலங்கை அரசுக்கு எதிரானது அல்ல; அப்படியிருக்க அது இலங்கை அரசுக்கு எதிரானது என்று அங்கே யாரோ பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்; அதை இலங்கை அரசு நம்பக் கூடாது' என்று மன்றாடி இருக்கிறார் அவர். டெல்லியிலாவது அவருக்கு பதவிகள் இருக்கின்றன. இலங்கையில் பதவிகள் கூட இல்லை. அப்படியிருக்க ஏன் அவர் இப்படி அஞ்சுகிறார் என்பது புரியவில்லை.

Wednesday, 8 August 2012

துக்கம்

எந்த ஒரு கலை வடிவத்தின் வெற்றியும் உச்சமும் மனித உள்ளத்தை வெல்வதிலேயே இருக்கிறது... துக்கத்தை  எப்படி வெளிப்படுத்துவது? கண்ணீரின் மூலம்  ஆனால் மற்றவன் கண்ணீரை எப்படி நான் வெளிப்படுத்த முடியும் .. கலையால் மற்றவன் கண்ணீரை வெளிப்படுத்துவது எப்படி என்று சில வரிகளில் ஜெயமோகன் எழுத்து கலையின் மூலம் வெளிப்படுத்துகிறார்,

"அப்படி ஒரு அழுகையை நான் கண்டதில்லை. ஒரு மனித ஜீவனின் மொத்த உடலும் கதறி அழமுடியுமென அப்போது கண்டேன். ஒருவர் அழுகை மட்டுமாகவே மாறிவிட முடியும் என்று உணர்ந்தேன். வாய் அழுவதை உள்ளம் அழுவதைக் கண்டிருக்கிறேன், ஆன்மா கதறியழுவதை அன்று கண்முன் கண்டேன். ஏன் என்றறியாமலேயே நானும் கண்ணீர்விட்டுக்கொண்டிருந்தேன்"

இந்த காட்சியை வெளிப்படுத்தும் ஓவியத்தை  தேடிக்கொண்டு இருக்கிறேன்..எங்காவது இருக்கும் , சரியான நேரம், இடம் ஒன்று கூட வேண்டும்...  அந்த ஓவியத்தில் வாய் அழ வேண்டும், முகம் அழ வேண்டும்,  உள்ளம் அழ வேண்டும் .ஓவியத்தின் சட்டங்களில் துக்கம் நிரம்பி இருக்க வேண்டும், ஓவியமே துக்கமாய் இருக்க வேண்டும் , துக்கமே ஓவியமாய் இருக்க வேண்டும் , துக்கத்தில் வர்ணம் கலந்திருக்க வேண்டும்...

Tuesday, 24 July 2012

அனுராக் கஷ்யப், கமல், சாரு

Quentin Tarantino பிரபல அமெரிக்க இயக்குனர். Kill Bill, Reservoir Dogs, Pulp Fiction போன்ற படங்களை இயக்கியவர். "Kill Bill படத்துல சில கோரமான வன்முறை காட்சிகளை நான் காமிக்ஸ் பாணில காமிச்சதுக்கு கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் படம் தான் காரணம்" அப்படின்னு Dev D, Gangs of Wasseypur படங்களை இயக்கிய பிரபல ஹிந்தி இயக்குனர் அனுராக் கஷ்யபை சந்திச்சப்போ சொல்லியிருக்காரு.

இதை அனுராக் நம்ம மீடியா மக்கள் கிட்ட சொல்ல, இப்போ இது தான் ஹாட் நியூஸ். கமல் இதுக்கு நன்றி சொல்லி, "நான் அந்த காமிக்க ஆளவந்தான்ல அறிமுகப்படுத்தினப்போ இந்தியால வரவேற்பு இல்லை. ஆனா, இப்போ உலகப் புகழ் பெற்ற இயக்குனர் ஒருத்தர் இப்படி சொல்றது சந்தோஷமா இருக்கு" அப்படின்னு சொல்லியிருக்காரு.

என்னோட சந்தேகம் என்ன அப்படின, ரெண்டு நாள் முன்னாடி தான் சாரு அனுராக் கஷ்யப் தனக்கு குறுஞ்செய்தி அனுப்பினாரு அப்படின்னு தன் வலைமனைல சொல்லியிருந்தாரு. ஒரு வேளை இதை தான் அனுராக் கஷ்யப் அனுப்பி வச்சாரோ? அடுத்த பதிவு என்னவா இருக்கும் சாரு வலைதளத்துல அப்படின்னு நினைச்சா இப்போவே த்ரில்லிங்கா இருக்கு. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இப்படி எழுதுவாரு..

"Quentin Tarantino இயக்கிய படங்களுக்கும் கமல்ஹாசன் இயக்கம் படங்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. "குஜ்லிக்கா ஒக்கமக்க", "மட்டேரிக்க மக்கரோனி" போன்ற பிரெஞ்சு இயக்குனர் படங்களை Quentin Tarantino பார்த்ததில்லை. பார்த்தா, படம் எப்படி எடுக்கறதுன்னு கத்துகிட்டிருப்பாரு.உலகநாயகன் பட்டத்தை கமல்ஹாசன் உதறாத வரைக்கும் இந்த மாதிரி வீணாப்போன இயக்குனர்கள் புகழ்ந்துட்டு தான் இருப்பாங்க.."

Sunday, 22 July 2012

மெர்க்குரிப் பூக்களும் மாருதியும்

பாலகுமாரனின் மெர்க்குரிப் பூக்கள் படித்திருக்கிறீர்களா? ஒரு தொழிற்சங்க போராட்டத்தை களமாக கொண்ட கதை. சென்னை சிம்ப்சன் நிறுவனத்தில் நடந்த ஒரு போராட்டத்தை மையமாக கொண்டது என்று நினைக்கிறேன். நான் பல முறை ரசித்து வாசித்த கதைகளில் ஒன்று. சாவித்திரி, கணேசன், கோபாலன், சியாமளி, ரங்கஸ்வாமி, சங்கரன் கதாபாத்திரங்களை மறக்கவே முடியாது. கணேசன் போராட்ட களத்தில் கொலை செய்யப்பட கதை அங்கிருந்து நகர்கிறது.

மனேசர் என்னும் ஊரில் மாருதி நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே தற்போது நடந்து வரும் போராட்டம் பற்றி நீங்கள் படித்து வருகிறீர்கள் என்றால், மெர்க்குரிப் பூக்கள் படிக்க வேண்டியதில்லை. HR துறையை சேர்ந்த General Manager ஒருவர் கொல்லப் பட்டிருக்கிறார். மூவாயிரம் தொழிலாளர்கள் எங்கு ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. மாருதி நிறுவனத்தின் இந்திய தலைவர் R.C.பார்கவா, "காவல் துறை முழு விசாரணை முடிக்கும் வரை தொழிற்சாலை மூடப்படும்" என்று அறிவித்துள்ளார்.தொழிற்சங்கமோ இந்த வன்முறைக்கு காரணம் நிர்வாகம் என்று குற்றம் சாட்டியுள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்பு ஸ்பீடோமீட்டர் தயார் செய்யும் கோயம்புத்துரை சார்ந்த Pricol நிறுவனத்தில் நடந்த தொழிற்சங்க போராட்டத்தில் அதன் மனிதவளத் துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.தொழிற்சங்க போராட்டங்கள் வன்முறையில் முடிவது தொடர்ந்து பல காலமாக நடந்து வருகிறது. அரசு தரப்பில் இதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப் படுவதாக தெரியவில்லை. வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கே(அவர் தானே அமைச்சர்?), மாருதி நிறுவன விஷயம் குறித்து வாய் கூட திறக்கவில்லை.

கொலை செய்யப்பட்டுள்ள மாருதி நிறுவன அதிகாரி தான் மெர்க்குரிப் பூக்கள் கணேசன். கதையில் அவன் மனைவி சாவித்திரி மிகுந்த தைரியமும் சிந்திக்கும் திறனும் உள்ளவளாக சிருஷ்டிக்க பட்டிருப்பாள். நிஜ சாவித்திரி எப்படியோ? என்ன செய்து கொண்டிருக்கிறாளோ?

Sunday, 8 July 2012

எனக்குள் எம்.ஜி.ஆர்

"எனக்குள் எம்.ஜி.ஆர்" என்ற பெயரில் கவிஞர் வாலி அவர்கள் துக்ளக்கில் ஒரு தொடர் எழுதி வருகிறார் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். கடந்த இருபத்தைந்து வாரங்களாக இந்த தொடரை படித்து வருகிறேன். கலைஞருக்கு நெருக்கமாக இருந்து கொண்டு எம்.ஜி.ஆர் பற்றி இப்படி எழுத கூடிய ஒரு மனிதர் வாலி அவர்களாக தான் இருக்க முடியும். கலைஞரின் இன்றைய நண்பர்கள்/கட்சியினர் பலர் எம்.ஜி.ஆர் மூலம் ஒரு காலத்தில் ஆதாயம் பெற்றவர்களே. ஆனால், அவர்கள் யாருக்கும் வாலியின் தைரியம் இருக்கும் என்று தோன்றவில்லை.

இந்த வார தொடரில், "தன்னை குடிப்பழக்கத்தில் இருந்து முற்றிலும் வெளியே கொண்டு வந்தவர் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்" என்கிறார் வாலி. இது குறித்து ஒரு விமான பயணத்தில் எம்.ஜி.ஆரிடம் வாலி சொல்ல, "ஒரு தமிழ்க் கவிஞனை மீட்டுக் கொடுத்த முத்துராமன் வாழ்க" என்றாராம் எம.ஜி.ஆர். மேலும் இந்திய மொழிகள் பலவற்றில் திரைப்படமாக எடுக்கப்பட்ட "தேவதாஸ்" படத்தை தமிழில் எம்.ஜி.ஆர் நடிக்க வேண்டும் என்றாராம் வாலி. அதற்கு எம்.ஜி.ஆர்,

"ஆண்டவனே!(எம்.ஜி.ஆர் வாலியை இப்படி அழைப்பாராம்) எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு..அது - நானா முயன்று முன்னின்று உருவாகிக் கொண்டதல்ல..படத்துக்குப் படம் அது இயற்கையா எற்பட்டுடுச்சு...கண்ணதாசன், பட்டுக்கோட்டை, நீங்க - இப்படி கவிஞர்களும், நான் கருத்தாழம் மிக்க பாடல்களைப் பாடற மாதிரியே எழுதிடீங்க..எந்த பாட்டுலயும் சமூகத்துக்கு ஒரு சேதி இருக்கற மாதிரி பாடிட்டு ஒரு குடிகாரனா கதைக்கே தேவைப்பட்டாலும் நான் வந்தா எப்படி? இயல்பாவே எனக்கு அந்த பழக்கம் கிடையாது! குடிகாரனா நடிக்கிறது வேற;குடிச்ச மாதிரி நடிக்கிறது வேற..நான் இந்த ரெண்டாவது வேஷத்தை பல படத்துல பண்ணியிருக்கேன் - அதுவும் வில்லனின் வில்லங்கங்களை கண்டுபிடிக்க...நீங்க பார்த்து இருக்கலாம்..அவன் மதுக் கிண்ணத்தை என் கிட்ட கொடுத்தா கூட, அதை பக்கத்துல இருக்கற பூந்தொட்டில கொட்டிட்டு - சாப்ட மாதிரி சமாளிப்பேன்.."

எம்.ஜி.யார் அவ்வளவு தூரம் தன்னிலை விளக்கம் தந்தும் வாலி விடவில்லையாம். "அண்ணே!நீங்களும் சிவாஜியும் சேர்ந்து நடிச்ச படம் 'கூண்டுக்கிளி';விந்தனோட கதை வசனத்துல, ராமண்ணா டைரக்க்ஷன்ல வந்த படம்..அதுல - நீங்க சிகரெட் பிடிக்கறீங்களே - ஒரு காட்சில? அது எப்படி?

எம்.ஜி.யார் சொன்னாராம், "அப்பல்லாம் - நான் பொது வாழ்க்கைல அவ்வளோ தீவிரமா ஈடுபடல...ஒரு நல்ல நடிகன்..ஒரு நல்ல மனிதன் - என்கிற அளவிலதான் என்னைப் பற்றி அபிப்பிராயம் இருந்தது..வளர வளர "வாத்யா"ராயிட்டேன் - உழைக்கும் வர்க்கத்துக்கு ! அந்த சிகரெட் பிடிக்கிற சீன் கூட - பின்னாளில் அந்த படத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டது!"

எம்.ஜி.ஆரின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டாராம் வாலி.

"ஆயினும் அத்தகு எம்.ஜி.ஆருக்கு ஒரு சோதனை வந்தது; ஒரு படத்தில் அவர் குடிகாரனாகவே வந்தாக வேண்டிய கட்டாயம்! எப்படி அதை எதிர்கொள்வது என்று என்னை கூப்பிடு ஆலோசித்தார் எம்.ஜி.ஆர்" என்று இந்த வாரத்தை முடிக்கிறார் வாலி.

இந்த தொடரின் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால் இது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர் பற்றியது. எழுதும் போது ஆளும் கட்சி ஆட்களையும் நினைவில் கொள்ள வேண்டும். கொஞ்சம் பிசகினாலும் அரசியலாக்கி விடுவார்கள்.

Vaali is doing the tightrope walk so well. Hats off sir..

Saturday, 7 July 2012

Happy Birthday

ஜூலை நான்கு 2007 ஆம் ஆண்டு குளம்பியகம் தொடங்கப்பட்டது. இன்றுடன் ஐந்து ஆண்டு மூன்று நாட்களை நிறைவு செய்கிறது அந்த குழந்தை. "காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு" என்பதை போல பிறர் கண்களுக்கு இந்த குழந்தை எப்படி தெரிந்தாலும் எனக்கும் கோகுலுக்கும் அதை பார்க்கையில் பெருமை தான். இந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து வருகை தரும் அனைவருக்கும் நன்றி.

குளம்பிக்கு ஐந்தாவது பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

Sunday, 1 July 2012

என் ஜன்னலின் வழியே

வைரமுத்து அவர்களின் "என் ஜன்னலின் வழியே" படித்துக் கொண்டிருந்தேன். புத்தகத்தின் முதல் பதிப்பு வெளி வந்தது 1984ல். சங்கீத சமுத்திரம் என்கிற தலைப்பில் இளையராஜா பற்றி சொல்கிறார்.

"அண்மையில் திரு.இளையராஜாவின் சங்கீத ஒலி கேட்கும் "சலங்கை ஒலி" என் உறக்கத்தில் கூட ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் இளையராஜாவின் இசை யாருக்கும் சிக்காத சிகரங்களில் சிம்மாசனம் போட்டுக் கொண்டிருக்கிறது என்றே எண்ணுகிறேன். என்னடா இது, இந்த ஊமை வாத்தியம் இந்த மனிதனின் உத்தரவுக்கு மட்டும் கட்டுப்பட்டு இதனை உற்சாக மொழிகளைப் பேசுகிறதே!"

இந்த கம்பீரமான இசை வெள்ள்ளத்திற்கு இடையில் வரும் சின்னச் சின்ன மௌனங்களுக்குமல்லவா அர்த்தகனம் வந்து விடுகிறது.

"நாத வினோதங்கள்" என்ற பாடலில் அவர் நிகழ்த்தியிருக்கும் கீத வினோதங்கள் மனதுக்குள் ஒரு பிரபஞ்சப் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. தவஞானிகள் சொல்லும் அத்வைத நிலையை நான் பாடல் ஆரம்பிக்கும் போதே அடைந்துவிடுகிறேன்.

ஒன்றன் மேல் படரத் துடிக்கும் இரு மனசுகள்.

நெருப்பு கங்குகளை முடிந்து வைத்திருக்கிற பட்டுத் துணி மாதிரி அவர்கள் காதலை மறைக்க முடியவில்லை. மொழியை துணைக்கழைக்காமலேயே அவர்கள் இமைகளின் அசைவுகளாலும், இதழ்களின் நெளிவுகளாலும், அவர்களின் விலாசம் சொல்லும் வெட்க ரேகைகளாலும், தங்களின் பாஷையை பரிமாறிக் கொள்கிறார்கள்.

ஓர் இரவில் விரல்களின் எதிர்பாராத ஸ்பரிசத்தில் அதிர்ந்து, மௌனித்துப் போகிறார்கள். பாடல், அந்த மன்மத வினாடிகளில் ஆரம்பமாகிறது.

"மௌனமான நேரம் - இள மனதிலென்ன பாரம்?
மனதின் ஓசைகள், இதழில் மௌனங்கள்
ஏனென்று கேளுங்கள்"

பல்லவி அவர்களின் மன உணர்ச்சிகளை சுருக்கிச் செல்கிறது. சரணம் அதற்கு உரை எழுதுகிறது.

"இளமைச் சுமையை மனம்
தாங்கிக் கொள்ளுமோ?
புலம்பும் அலையை கடல்
மூடிக் கொள்ளுமோ?
குளிக்கும் ஓர் கிளி
கொதிக்கும் நீர்த்துளி
கூதலான மார்கழி
நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி."

என்னைப் பொறுத்தவரை இந்த பாடலுக்கு இரு சிறப்புகள் இருக்கின்றன. திரு.இளையராஜா அவர்கள் இந்தப் பாடலுக்கு மெட்டமைத்த பிறகு மட்டுமல்ல- சங்கராபரணம் திரு.கே.விஸ்வநாத் அவர்களால் இந்தப் பாடலுக்கான காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்ட பிறகு எழுதப்பட்ட பாடல் இது. இந்த பாடலின் தொடக்கத்தில் ஆடம்பரமாக ஆரம்பித்த புல்லாங்குழல் சற்று நேரத்தில் மெல்ல மெல்லத் தேய்ந்து தன்னை குறுக்கிக் கொள்ளும்.

காதலர்கள் உள்ளத்தில் உற்பத்தியான வார்த்தைகள், நாவுக்கு வரும் போது கரைந்து விடுகின்றன என்பதற்கான குறியீடு அது. இளையராஜாவின் கற்பனைக்கு நாம் கைதட்டத் தான் வேண்டும்."

இந்த பாடலை நான் பல முறை கேட்டிருக்கிறேன். "நீ வந்து ஆதரி" என்ற அந்த வரியை ஜானகி அவர்கள் குரலில் விரகதாபத்துடன் வெளிப்படுத்தி இருப்பார். ஆனால், "கூடலான மார்கழி" என்று நினைத்திருந்தேன். இப்போது தான் "கூதல்" என்றறிந்தேன். அதென்ன கூதல்? கூதல் என்றால் குளிர் என்று அர்த்தமாம். "கூதல் என்னைக் கொல்கையில் உன் நினைவுகள் கொளுத்திக் குளிர் காய்கிறேன்" என்று கூதல் பற்றி தெரிந்து கொள்ள இணையத்தை துழாவிய போது படித்தேன்.

இளையராஜா, வைரமுத்து என்ற இரு ஜாம்பவான்களும் இன்னும் பல காலம் இணைந்து பணியாற்றி இருக்கலாம். நமக்கு கொடுப்பினை இல்லை.

Sunday, 24 June 2012

சாரு என்ற கழுகார்


சற்று நாளைக்கு முன் சாரு தன் வலைத்தளத்தில் அராத்து எழுதிய அமெரிக்காவில் கழுகார் படித்தேன். வழக்கப்படி அராத்து சூப்பர்.

இப்போ சாரு சென்னையிலேயே கழுகாராக வேலை பார்த்தால் எப்படி இருக்கும் ..பார்க்கலாமா ...


" கழுகாருக்காக அரை மணி நேரமாக காத்திருந்தோம், பொறுமை இழக்கும் நேரத்தில் சோர்வாக பறந்து வந்தார். பொதுவாக மிகவும் புத்திளமை உணர்ச்சியோடு வருபவர் , இப்போது களைத்திருப்பதை கண்டு மனம் திக் என்று ஆனது , என்ன விஷயம் என்று மெதுவாக கேட்டோம், அவ்வளவுதான்  பொரிய தொடங்கினார்!

உங்களுக்கு கொஞ்சமாவது சூடு சுரணை இருக்கா, ஒரு கழுகை நடத்தும் விதமா இது என்ற கேள்வியோடு ஆரம்பித்தார். நாம் ஒன்றும் தோன்றாமல் பார்க்க , சுமார் ஆறு கிலோமீட்டர் பறந்து வந்து இருக்கிறேன், இந்த சனியன் பிடித்த சென்னை வெய்யிலில் ரோட்டில் நடப்பதே கஷ்டம் எனும்போது வானில் பறப்பது எவ்வளவு கடினம் என்று உங்களுக்கு தெரியாதா என்றவரை கூல் படுத்த ஜில்லென்ற ஐஸ் மோரை நீட்டினோம். ஒரு மடக்கு குடித்தவர் , கண்களில் கோபத்தின் தீப்பொறிகள் ..இது எங்கே வாங்கியது என்று கேட்க பக்கத்தில் உள்ள ஜூஸ் கடையின் பெயரை சொன்னோம், அவ்வளவுதான் அந்த ஜூஸ் கடை மட்டுமில்லாமல் , சென்னையில் எந்த எந்த ஜூஸ் கடைகளில் மட்டமான ஐஸ் மோர் கிடைக்கும் என்று லெச்சரே குடுத்து விட்டார். அது மட்டுமில்லாமல் மைலாப்பூரில் உள்ள லே இடலி (இட்லி அல்ல ) அல்லது ஜூஸ் ஷாப் அட் கிரீம்ஸ் ரோடு (இது கிரீம்ஸ் ரோட்டில் ஆரம்பித்தது , ஆனால் சென்னையில் பல்வேறு இடங்களில் இருக்கிறது, எல்லா இடங்களிலும் இதே பெயர்தான், இதே போல் வடக்கு அல்ஜீரியாவில் உள்ள ஷக்சோக (ShakShouka ) என்ற பணியாரம் விற்கும் கடையும் ஒரே இடத்தின் பெயரை பல்வேறு இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார்கள்) போன்ற இடங்களில்தான் உண்மையான ஐஸ் மோர் கிடைக்கிறது என்றும் பொரிந்தார்.

தலையை தொங்க போட்ட நாம், சரி கூலான ஐஸ் மோர் வேண்டாம் , சூடான அரசியல் செய்திகளுக்கு செல்வோமே என்று நாம் நினைவுபடுத்த , "போடா பெஹன் சூத்" என்று கர்ஜித்தார், விதிர்விதிர்த்து போய் நின்ற நம் அருகில் இருந்த இளம் நிருபரை ஆசுவாசபடுத்தி உட்காரபடுத்தி காரணம் கேட்டோம், நான் எண்பதுகளின் ஆரம்பத்தில் இருந்து அரசியல் செய்திகளை சொல்லி இருக்கிறேன் , இது வரை எந்த வாரமாவது அரசியல் செய்தி இல்லாமல் , என்னுடைய இரை பற்றியோ , இறைக்கைகள் பற்றியோ , நிறத்தை பற்றியோ யாருக்கும் கவலை இல்லை , ஒரு கழுகு எவ்வளவு நாள்தான் இந்த சனியன் பிடித்த தமிழக அரசியலை பற்றி சொல்வது , வேறு ஏதாவது கேள் என்றார். நாம் இதுவரை கழுகாரிடம் தமிழக அரசியல் தவிர வேறெதுவும் கேட்டதில்லை என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் "ங்கே " என்று விழித்தோம்.

சற்று கூலாகி அவரே சொல்ல தொடங்கினார் இதோ பாருங்கள் இனிமேல் நான் மூன்று விஷயங்களை பற்றிதான் பேசப்போகிறேன்  செக்ஸ்,ருசியான உணவு வகைகள், பிற நாட்டு சரக்குகள் , இவை மூன்றும் போரடிக்கும்போது நடுவே என் சோகங்களை சொல்வேன், என் சோகங்கள் போரடிக்கும்போது எனது 'கழுகு ரசிகர் மன்றத்தினர் என்னுடைய அகல உயர நீளத்தினை பற்றி சொல்லுவார்கள், இவையெல்லாம் போக நேரமிருந்தால் அரசியல் பற்றி சொல்லுவேன் என்றார்.

கழுகின்  திடீர்  மாற்றத்தினை சற்றும் எதிர்பாராத நாம் அடுத்து என்ன கேட்பது என்று யோசிக்கும் வேளையில் , கழுகார் நான் தென்னமெரிக்கா போக வேண்டும் டிக்கெட் போடு என்றார், நாம் புரியாமல் விழிக்க , எவ்வளவு நாள் தான் நான் தமிழ அரசியல் கிசுகிசுக்களை சொல்வது, நான் அடுத்து பறக்க போவது பொலிவிய தலைமை செயலகம் அருகில், அங்கிருந்தே நான் உங்களுக்கு அந்நாட்டு அரசியல் கிசுகிசுக்களை  fax செய்கிறேன் என்று சொல்லி புயல் வேகத்தில் அங்கே இருந்த மோரை காலி செய்து விட்டு பறந்தார்.

Saturday, 23 June 2012

குருவியார் பதில்கள்

சலூன் கடையில் தந்தி பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தேன். குருவியார் பதில்கள் பகுதியில் பார்த்த சில கேள்விகள் திகில் அளித்தது. உண்மையிலேயே இதெல்லாம் வாசகர் கேள்விகளா இல்லை தினத்தந்தி குழுமத்திலேயே உருவாக்கப் பட்டதா என்று தெரியவில்லை. இந்த பதிவுக்காகவே சில கேள்விகளை சலூன் கடைக்காரரிடம் பேனா வாங்கி எழுதிக் கொண்டு வந்தேன்.

1. குருவியாரே, தமன்னாவுடன் படப்பிடிப்பு தளத்திற்கு வரும் அந்த அழகான பெண் அவர் சகோதரியா?
2. குருவியாரே, விஜய் தமிழ் தவிர வேறு மொழி படங்களில் நடித்திருக்கிறாரா?
3. குருவியாரே, சூர்யாவின் மாற்றான் படக் கதையும் பிரியாமணியின் சாருலதா படக் கதையும் ஒன்றா?
4. குருவியாரே, என் கனவு தேவதை சிம்ரன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?
5. குருவியாரே, அஞ்சலி தற்போது நடித்து வரும் படங்கள் எவை?
6. குருவியாரே, என் உள்ளம் கவர்ந்த நாயகி ஒஸ்தி மயக்கம் என்ன புகழ் ரிச்சவின் முகவரி என்ன?

இவை வாசகர் கேள்வி எனில் ஒரே வரி தான் சொல்ல நினைக்கிறேன். "டேய், விளங்கிடும்டா தமிழ்நாடு"..

Tuesday, 22 May 2012

மேற்கிலிருந்து கற்றதும்/பெற்றதும்

சிகாகோ நகரிலிருந்து Fort Lauderdale வரும் விமானத்தில் அவரை சந்தித்தேன். அவர் பெயர் Dennis Tino. அவர் மனைவி பெயர் Norma. பொதுவாக ஐரோப்பா, அமெரிக்கா இரண்டு இடங்களிலுமே நான் பார்த்த விஷயம், விமானத்திலோ, ரயிலிலோ அருகில் இருப்பவரிடம் ஒரு ஹலோ சொல்லி பேசி விடுவார்கள். இவரும் விதிவிலக்கல்ல. என்னிடம் ஹலோ சொல்லி பேச ஆரம்பித்தார். அவர் கையில் "Dearborn Stories" என்றொரு புத்தகம் இருந்தது. Dearborn, மிச்சிகன் நகரை சேர்ந்தது. Henry Ford பிறந்த ஊர். அங்கு தான் Ford தலைமையகம் உள்ளது.


என்னிடம் Dearborn பற்றி கூறி அந்த புத்தகத்தை படி என்றார். Dearborn பகுதியில் பல காலமாக வாழ்ந்து வரும் குடும்பங்கள் தங்கள் ஊரின் நினைவுகளை அந்த புத்தகத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். தன் தாத்தா முதலாம் ஹென்றி போர்டுடன் வேலை செய்தது, ஹென்றி போர்ட் அந்த ஊர் மக்களுக்காக செய்த நன்மைகள், மூன்று தலைமுறையாக அதே ஊரில் வாழ்பவர்கள், இல்லத்தின் ஒரு குறிப்பிட்ட அறையில் 1900 ஆம் ஆண்டு பிறந்து 1973 ஆம் ஆண்டு உயிர் நீத்த தன் பாட்டனாரை பற்றிய பேரனின் கதை, இரண்டாம் உலகப் போரின் போது Dearborn நகர் எப்படி இருந்தது என்று ஒரு மணி நேரத்தில் நிறைய கதைகள் படித்திருந்தேன்.


டென்னிஸ் என்னை தோளில் தொட்டு, புத்தகம் எப்படி என்றார்? நான் சிரித்தபடி, நீங்கள் இந்த புத்தகத்தை படித்தாயிற்றா என்றேன்? இல்லை என்றார். என் நெஞ்சை கனக்கச் செய்த சில பக்கங்களை காட்டி, படியுங்கள் என்றேன். அவ்வப்போது தன் மனைவியை அருகில் அழைத்து காட்டி முத்தமிட்டபடி படித்து பழைய நினைவுகளில் இருவரும் மூழ்கினர். கொஞ்ச நேரம் கண் மூடியபடி இருந்தேன். இதைப்போல மாம்பலம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் வாசிகள் புத்தகம் கொண்டு வந்தால் என்னவென்று தோன்றியது. பாலகுமாரனின் அப்பம், வடை, தயிர்சாதம் இந்த வகை புத்தகம். மூன்று தலைமுறைகளை பற்றிய கதை. ஒரே வித்தியாசம் பாலகுமாரன் புத்தகம் கற்பனை. Dearborn Stories உண்மை. இந்த தலைமுறை கொஞ்சம் பிரயாசை செய்து தேடினால் நமக்கும் நிறைய Dearborn கிடைக்கும்.


என் தந்தை தஞ்சை பற்றிய தன் பால்ய நாட்களை அடிக்கடி சொல்லுவார். ஒரு வீச கொத்தவரங்காய் ஓரணா. மூணு கிலோ நல்லெண்ணெய் ரெண்டனா. எண்பளது(தஞ்சை பகுதியில் அந்த நாளில் வாழ்ந்தவர்கள் எண்பதை எண்பளது என்பார்கள்) ருபாய் சம்பளத்துல பத்து பேர் இருக்கற குடும்பம் ஒரு மாசம் முழுக்க சாப்பிடலாம். எல்லா கறிகாயும் கொல்லைப்புறமே பயிர் பண்ணுவோம். முருங்கைக்காய், புடலங்காய், வெண்டை எல்லாம் கொல்லைல தான். கண்டத்திப்பிலி ரசம், விளாம்பழ ஓடு ரசம், சாம்பார், வெத்தக்கொழம்பு, பொரியல், கூட்டுன்னு பத்து வகையா டெய்லி சாப்பாடு. பெரிய கோவில் உற்சவம், முத்துப் பல்லாக்கு, திருவையாறு சப்தஸ்தானம், கருத்த்தட்டாங்குடி சப்தஸ்தானம், முஸ்லிம்கள் கொண்டாடற சந்தன கூடு அப்படின்னு வருஷம் பூரா விழா தான்.


முத்துப் பல்லாகுக்கு M.P.N.சேதுராமன்-பொன்னுசாமி நாதஸ்வரம். ராத்திரி பூரா நாலு வீதியும் சுத்தி வந்து வாசிப்பா. ஒடம்புல சட்டை போட மாட்டான். ஹோட்டல்ல காபி ஆத்தறவன் ராத்திரி கச்சேரில துளி கூட சுருதி பிசகாம தாளம் போடுவான். கார்த்திகை வந்தா வடவாறு, குடமுருட்டி, காவேரி எல்லாத்துலயும் தண்ணி கரைபுரண்டு ஓடும். அதுல விளையாடுவோம். யார் வீட்டுக்கு போனாலும் சாப்பாடு உண்டு. பள்ளிகூடத்துல வாத்தியார் சாயந்தரம் சாப்ட்டு முடிச்ச பாத்திரத்தை எங்க கிட்ட சொல்லி வீட்ல கொடுக்க சொல்லிடு வேற எங்கயாவது போய்டுவார். அவர் வீட்டுக்கு போனா மாமி ரெண்டு அடை வாத்து போடுவா. ஒரு அடை ஒன்றரை இன்ச் இருக்கும். ரெண்டு சாப்டா ராத்திரி சாப்பிட முடியாது. தொட்டுக்க காலம்பறது ரச வண்டல் இருக்கும். அந்த காலமே தனி என்பார்.


நிச்சயம் இந்த கதைகள் சென்னையிலும் உண்டு. ஏன் நம் பிள்ளை பிராயத்து கதைகளே எத்தனை உண்டு? Dearborn Stories போன்ற மேற்கின் நல்ல விஷயங்கள் நம் கண்ணுக்கு தெரிவதே இல்லை.டென்னிஸ் நார்மாவை தழுவிக்கொண்டு தன் பழைய நினைவுகளில் மூழ்கிய அந்த நிமிடங்களை எண்ணி சிலிர்க்கின்றேன். நம்மூராக இருந்தால் மனைவி, "போறும் போறும், உங்களை கட்டிண்டு நான் பட்ட பாடு" என்று சொல்லியிருக்க கூடும். நம் திருமண குறுந்தகடை கூட நாம் FF செய்யாமல் ஒரு முறை பார்த்திருப்போமா? ஒரு ஞாயிறு நம் குழந்தைகளுடன் அதை அமர்ந்து பார்க்க வேண்டும் என்று நினைக்கிறோமா? அதை பார்க்கும் போது மனைவியின் முகத்தில் ஏற்படும் நாணத்தை கண்டு களிப்புறும் தருணங்களுக்கு என்ன விலை கொடுக்கக் கூடும்?

Monday, 21 May 2012

P.A.சங்மா

ஜெயலலிதா தனது வாழ்நாளில் செய்த நல்ல காரியங்களில் ஒன்று சங்மா பெயரை ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரை செய்தது. அவர் ஜனாதிபதி ஆகிறாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் ஆனால் சங்மா இந்த பதவிக்கு ஏன் தகுதியானவர் என்று இப்போது பார்ப்போம்.


1947 ஆம் ஆண்டு மேகாலயாவில் பிறந்தார் சங்மா. B.A(Hons), Masters Degree in International Relations, LLB படித்தவர். 1973 ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். மேகாலயாவின் முதல்வர் உட்பட பல்வேறு பதவிகள் வகித்தவர். மத்திய மந்திரியாக பல துறைகளுக்கு தலைமை வகித்தவர்.


1991-93 - Union Minister of State, Coal (Independent Charge)
1993-95 - Union Minister of State, Labour (Independent Charge)
February–September 1995 - Union Minister of State, Labour
1995-96 - Union Cabinet Minister of Information and Broadcasting


தொழிலாளர் துறை அமைச்சராக பல மாற்றங்கள் கொண்டு வந்தவர். அவர் புண்ணியத்தில் தான் லிப்டன் டீ நிறுவனத்தில் இருந்து 1995ல் விருப்ப ஓய்வு வாங்கிய என் தந்தை இன்னும் மாதம் ஐநூறு ரூபாயோ என்னவோ பென்ஷன் வாங்கிக் கொண்டிருக்கிறார். முக்கியமாக கறைபடாத கை. இந்தியாவின் உள்நாட்டு/வெளிநாட்டு பிரச்சனைகளை நன்கு உணர்ந்தவர். யார் யாரோ ஐந்து வருடம் இருந்தாயிற்று. இந்த நல்ல மனிதருக்கு தாராளமாக ஜனாதிபதி பதவி தரலாம். அந்த பதவிக்கு நிச்சயம் இவரால் கௌரவம் கிடைக்கும்.


டெயில்பீஸ்: சங்மாவின் மகள் அகதா சங்மா தற்போது உள்ள மத்திய காங்கிரஸ் அமைச்சரவையின் கிராம வளர்ச்சி துறை மந்திரி(Minister of State for Rural Development). இவர் தான் இந்த அமைச்சரவையிலேயே இளையவர்.

Monday, 14 May 2012

என்ன எழுதுவது?

ஆங்கிலத்தில் "Writer's Block" என்று சொல்லுவார்கள். நாங்கள் இரண்டு பேர் இருப்பதால் Apostrophe இல்லாமல் நிஜமாகவே "Writers Block" என்று தான் சொல்ல வேண்டும். அது சரி, இதையெல்லாம் நிஜ Writer சொன்னால் பரவாயில்லை, உனக்கென்ன என்கிறீர்களா? உண்மை தான். மிகுந்த வேலைப் பளு என்றாலும் எழுத முடியாத காரணம் அது ஒன்று மட்டும் இல்லை. சொந்த பிரச்சனைகளும் முக்கிய காரணம். தற்போது இருபது நாட்கள் அமெரிக்க பயணம் என்பதால் கொஞ்சம் நேரம் கிடைத்தது. கிடைத்த நேரத்தில் கொஞ்சம் எழுதலாம் என்று உட்கார்ந்து விட்டேன். நிறைய விஷயங்கள் குறித்து எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், எழுத நினைத்திருந்த விஷயங்கள் இப்போது மறந்துவிட்டன. சரி, நினைவில் இருப்பதை பதிவிடுகிறேன்.


மாசுக் கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பை சார்ந்த விஞ்ஞானி ஒருவர் கடந்த மாதம் சென்னையை அடுத்த எருக்கஞ்சேரியில் குப்பை எரிப்பதால் புற்றுநோய் உண்டாக்கும் கிருமிகள் அந்த பகுதியையும் அதை சுற்றியுள்ள இடங்களையும் பாதிக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக கூறியிருந்தார். சொன்னவர் பெயர் நினைவில் இல்லை என்றாலும் சொன்ன விஷயம் மறக்கக் கூடியது அல்ல. ஒரு போபால் மட்டும் தான் வெளியே தெரிந்துள்ளது. அதைப்போல பல உண்டு இந்தியாவில். அரசின் கவனத்திற்கு இதை யாராவது(இந்த வார்த்தையை அழுத்தம் கொடுத்து படிக்கவும்) எடுத்துச் செல்வார்கள் என்று நம்புவோம். அல்லது, Erin Brokovich படம் போல எதாவது நடந்தால் உண்டு.


மற்றபடி, சென்ற பதிவிற்கும் இதற்குமிடையே பதிவிடும் அளவிற்கு முக்கிய நடப்புகள் என்ன என்று யோசிக்கிறேன். சட்டசபையில் நெரிக்கப்படும் ஜனநாயகத்தின் குரல் என்ற தலைப்பில் நடத்தப்படும் தி.மு.க கூட்டங்கள், அழகிரி-ஸ்டாலின் மோதல், மதுரை ஆதீனம்-நித்தியானந்தா காமெடி, ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்தவுடன் தான் சென்று தங்க வேண்டிய இடத்தை அபகரித்ததாக பிரதீபா பதில் மீது கூறப்பட்ட புகார், எடியூரப்பா போன்றவை சராசரி விஷயங்களே. அவற்றை சீரியசாக எடுத்துக்கொள்ள தேவையில்லை.


அமீர் கானின் "சத்யமேவ் ஜெயதே" என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சி இந்தியா முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது. திரைப்பட தொழிலில் உள்ள அவர் நண்பர்கள் உட்பட பலரும் அவர் நிகழ்ச்சியை ரசித்து பாராட்டியுள்ளனர். முதல் வாரம் "பெண் சிசுக்களை கருவில் அழிப்பதை" பற்றியது. ராஜஸ்தானில் மருத்துவர் பட்டம் பெறாத பலர் பெண்களுக்கு இந்த கருக்கலைப்பை செய்கின்றனர். இந்த நிகழ்ச்சியை என்னால் பார்க்க முடியவில்லை என்றாலும் இணையத்தில் இந்நிகழ்ச்சி குறித்த பல தகவல்களை படிக்க முடிந்தது. நடிகை லக்ஷ்மி நடத்திய "இது கதையல்ல நிஜம்" போன்ற நிகழ்ச்சி. அமீர் கானின் சமூக உணர்வு பாராட்டத்தக்கது. முதலில் Coca Cola விளம்பரங்களில் நடித்த அவர் தற்போது அதன் இந்திய வடிவத்தின் தரம் சரியில்லை என்று அந்த நிறுவனத்தின் விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். அவரை போல பல பெரிய நட்சத்திரங்கள் இது போன்ற சமூக சீர்திருத்த முயற்சிகளில் ஈடுபட வேண்டும். பணம் என்பது இரண்டாம் பட்சமே என்று அமீர் கான் சொல்லாமல் சொல்லி விட்டார்.


இங்கு அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான முதல் கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. நவம்பர் ஆறாம் தேதி தேர்தல். இந்தியாவில் கொலைகாரர்களும் கொள்ளைக்காரர்களும் அரசியலில் நிற்கிறார்கள், இதை போல வேறெந்த நாட்டிலும் இல்லை என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தோம். இப்போது தேர்தலில் Presidential Primaries என்று கூறப்படும் முதல் கட்ட தேர்தல் நடப்புகளில் Keith Rusell Judd என்கிற கைதி அமெரிக்காவின் West Virginia மாகாணத்தில் ஒபாமாவின் ஓட்டில் 41% பெற்றுள்ளார். Keith Juddd ஜனாதிபதி வேட்பாளராக ஆகலாமா கூடாதா என்று ஏகப்பட்ட சர்ச்சை இங்கே.


எதாவது எழுத வேண்டுமே என்று ஒரு பதிவு போட்டாயிற்று. ஒரு தரமான பதிவுடன் வெகு விரைவில் சந்திக்கிறேன். நன்றி.

Monday, 23 April 2012

மதன்'ஸ் திரைப்பார்வை

சென்ற வாரம் எஸ்.ரா பங்கேற்ற மதன்'ஸ் திரைப்பார்வை நிகழ்ச்சியில் கர்ணன் ரீ-ரிலீஸ் மாபெரும் வெற்றியடைந்துள்ளதை சுட்டிக்காட்டி இதை போல வேறு எந்த படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டால் வெற்றியடையும் என்று கேட்டிருந்தார் மதன். இதோ என் வரிசை:

ஹரிதாஸ்
மன்னாதி மன்னன்
மலைக்கள்ளன்
திருவிளையாடல்
உத்தமபுத்திரன்
அதே கண்கள்
துணிவே துணை
பாசமலர்
நீர்க்குமுழி
சர்வர் சுந்தரம்
உலகம் சுற்றும் வாலிபன்
காதலிக்க நேரமில்லை
படகோட்டி
வஞ்சிக்கோட்டை வாலிபன்
பராசக்தி
காஞ்சித் தலைவன்
மகாதேவி
பாமா விஜயம்

Tuesday, 10 April 2012

205 கோடி

2007 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை மேற்கொண்ட பயணங்கள் - 12

தென் ஆப்பரிக்க பயணம் ஒன்று இன்னும் மிச்சம் உள்ளது

ஏர் இந்தியா தனி விமானத்தில் சென்ற பயணச் செலவு - 169 கோடி

உடன் பயணித்தவர்கள் - பெரும்பாலும் குடும்பத்தினர் மட்டுமே

பூட்டான் செல்ல சிறிய ரக ஜெட் தனி விமானம்

தங்குமிடம், உள்ளூர் பயண செலவு,தினசரி பெற வேண்டிய படிக்காசு(Allowance), இதர செலவுகள் - 36 கோடி

இதெல்லாம் நம்ம ஜனாதிபதி பிரதிபா பாடீலோட வெளிநாட்டு பிரயாண செலவு கணக்கு. இன்னும் நாலு மாசம் இருக்கு இவங்க அஞ்சு வருஷம் முடிக்க. இந்த வாரம் தென் ஆப்பரிக்க பயணம் கெளம்பறாங்க. பிரதீபா பாடீல் என்ன தகுதி அடிப்படையில ஜனாதிபதி ஆனாங்க அப்படினே இன்னும் தெரியல. ஏதோ ஒரு காலத்துல இந்திரா காந்தி வீட்ல வேலைக்காரியா இருந்தாங்க அப்படின்னு எல்லாம் கூட புரளி ஒடிச்சு. 205 கோடி செலவுல வெளிநாட்டு பயணம்.

சரி, இந்த ஊருக்கு எல்லாம் போய் இவங்க என்ன செஞ்சாங்க? இந்தியாவுக்கு இதனால என்ன பிரயோஜனம்? ஒன்னும் புரியல. ஒரு பக்கம் ரயில்வே பட்ஜெட்ல ஒரு ரூபா ஏறினதுக்கு அவ்வளோ பிரச்சனை ஆனா இதையெல்லாம் கேக்க ஆள் இல்லை. பூட்டான் செல்ல தனி விமானம் அதுவும் சிறிய வகை ஜெட்.

"சூரியன்" படத்துல கவுண்டர் சொல்லுவார், "டெல்லிக்கு லாரில போற நாய் தானடா நீ, எப்போ போனா என்னனு?". அது தான் ஞாபகம் வருது.

Thursday, 5 April 2012

இந்திய காண்டாமிருகங்கள்

" Ionesco வின் Rhinoceros என்கிற நாடகத்தில் ஒரு காட்சி ஞாபகம் வருகிறது. நாடக பாத்திரங்கள் ஒரு பொது இடத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது முழுசாக ஒரு காண்டாமிருகம் குறுக்கே திடும்
திடும் என்று புழுதியைக் கிளப்பிக் கொண்டு அவர்கள் எதிரே ஓடி மறைகிறது. இந்தக் காட்சியின் Incongurity யும் அபத்தமும் அவர்களைப் பாதிப்பதில்லை. ஓடின மிருகம் ஆசிய வகையா ஆப்ரிக்க
வகையா என்று சர்ச்சையில் தீவிரமாக இறங்கிவிடுகிறார்கள். நம் தின வாழ்க்கையில் எத்தனை காண்டாமிருகங்கள்! "

இது மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதியது. இதை நான் படித்தது சாரு நிவேதிதா சுஜாதா மறைவுக்கு எழுதிய அஞ்சலியில்.இதற்கான அர்த்தம் எனக்கு நேற்றுவரை உறைக்கவில்லை. டெல்லியில் நடந்த
ஒரு சம்பவமும் அதை தொடர்ந்து நான் என் நண்பர்களுடன் பேசிய போதுதான் தெரிந்தது.

அதாவது இந்தியாவில் ஜனநாயகம் ஜனநாயகம் என்று ஒரு வஸ்து பெயரளவில் இருக்கிறது இல்லையா?அதற்க்கும் ஒரு ஆபத்து.இந்திய ராணுவத்தின் முக்கியமான இரண்டு army units டெல்லியை நோக்கி 'அணிவகுத்து' வர ஆரம்பித்தது இந்த வார ஆரம்பத்தில்.

இந்த சம்பவத்தின் உண்மையான அர்த்தம் என்ன? அவை ஏன் வந்தது என்பதெல்லாம் இன்னும் மர்மமே (ராணுவம் பதில் சொல்லிய பிறகும்). ஆனால் இந்த சம்பவத்திற்கு பின்பு இருக்கும் விளைவுகள் ..அதற்கான சாத்தியக்கூறுகள் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றுபவை ..ஆனால் இது பற்றி  நண்பர்களுடன் பேசும்போது அதன் உண்மையான அர்த்தமே விளங்கியது , எனக்கு கிடைத்தது கீழ்கண்ட பதில்கள்

ராணுவம் டெல்லி நோக்கி வந்ததா? ஓஹோ..
ராணுவம் டெல்லியில்தானே இருக்கும் , பிறகு எப்படி டெல்லிக்குள் வரும்!
ராணுவம் டெல்லியை நோக்கி வந்தால் என்ன? யார் யாரோ வர்றாங்க , ராணுவம் வரக்கூடாதா?
ரெண்டே ரெண்டு army units தானே வந்தது , அதுக்கு போய் எதுக்கு அலட்டிக்கணும்?

முடியலை ...

நம் தின வாழ்க்கையில் எத்தனை காண்டாமிருகங்கள்!

Monday, 2 April 2012

பங்குனி உத்திரம், ராம நவமி

இந்த வருடம் கபாலி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவை தரிசிக்க முடியாத சூழ்நிலை. வழக்கமாய் விடியலில் சென்று அதிகார நந்தி சேவை பார்ப்பது வழக்கம். இம்முறை கபாலி கருணை கிட்டவில்லை. அயோத்யா மண்டபம் சென்று ராம நவமி விழா நிகழ்ச்சி விபரங்கள் அடங்கிய பத்திரிக்கை வாங்க வேண்டும் என்று நினைத்தேன். அதுவும் முடியவில்லை. நல்ல வேளை, அயோத்யா மண்டபத்தை நிர்வகிக்கும் ராம் சமாஜ் டிரஸ்ட் ஆன்லைனில் நிகழ்ச்சி நிரலை வெளியிட்டுள்ளார்கள்.

அயோத்யா மண்டபம் ராம நவமி விழா நிகழ்ச்சி நிரல்

Friday, 30 March 2012

இரண்டாம் உலகம்

வாழ்நாள் முழுதும் துன்பம் கண்டு சோராமல் இருக்க ஒரு மனிதன் என்ன செய்ய வேண்டும்? என்னைப் பொறுத்தவரை வருடத்திற்கு ஒரு முறை என ஒரு வாரம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பார்த்தாலே போதும். பள்ளி, கல்லூரி சென்று கல்வி கற்றுள்ளேன் என்றாலும் வாழ்க்கை "பொறுமை, சகிப்புத்தன்மை, மனிதநேயம்" போன்ற வார்த்தைகளை கடந்த ஏழு நாட்களில் தான் எனக்கு அறிமுகப்படுத்தியது என்பேன்.

மருத்துவமனையின் மறு பெயர் காத்திருத்தல். "சார், டாக்டர் எப்போ வருவார்? தெரியாது சார், வெயிட் பண்ணுங்க. சார், பேஷேண்டை எப்போ வார்டுக்கு மாற்றுவீங்க? தெரியாது சார், டாக்டரை தான் கேக்கணும். வெயிட் பண்ணுங்க. டாக்டர், இந்த நோய் மறுபடியும் வருமா? தெரியல, வெயிட் பண்ணி பார்ப்போம். டாக்டர், எப்போ வீட்டுக்கு போலாம்? வெயிட் பண்ணுங்க, நான் சொல்றேன். சிஸ்டர், மூத்திரப் பை புல் ஆயிடிச்சு, வார்டு பாயை கூப்பிடு மாத்த சொல்லுங்க. வெயிட் பண்ணுங்க சார், வருவாங்க. இன்சுலின் கொடுத்த பிறகு எவ்வளோ நேரம் கழிச்சி சாப்பிடலாம்? வெயிட் பண்ணுங்க சார், டாக்டரை கேக்கறேன்". இப்படி எங்கு சென்றாலும் காத்திருத்தல்கள். ஆனால், சொல்லப்படும் எந்த பதிலிலும் கோபம் இல்லை. எந்த சூழலிலும் பதட்டப்படாமல், கோபப்படாமல் இருக்க பயிற்சி கொடுக்கபட்டவர்கள். "சிஸ்டர், எங்க பாட்டிக்கு தனி ரூம் வேணும், இருக்கா? ரூம் இல்லையே சார். ஸ்பெஷல் வார்டுல? ஜெனரல் வார்டுல? டீலக்ஸ் ரூம்? எதுலயும் இல்ல சார். மார்ச்சுவரில இருக்கா? அந்த கோபத்திற்கும் புன்னகையுடன் தான் பதில்.

ஊரிலிருந்து உறவினரை பார்க்க வரும் கூட்டம் இங்கேயே தங்கி, குளித்து, உண்டு ஒரு கட்டத்தில் தன் வீடு போல பாவிக்கிறது. நைட் போடில வண்டி ஏறி காலைல கோயம்பேடு வந்தேன். பெரும்பாக்கம் போக எந்த வண்டி ஏறனும்னு கேட்டேன். அங்க ஒருத்தன் இந்த வண்டி தான்னு சொன்னான். கண்டக்டர் தூக்கத்துல இருந்திருப்பான் போல. பெரும்பாக்கம்னு சொல்லிட்டு நானும் தூங்கிட்டேன். எறங்கி பாத்தா செங்கல்பட்டு. மறுபடியும் பஸ் பிடிச்சு வந்தேன் என்று உறவினரிடம் சொல்லிவிட்டு அருகில் இருக்கும் நம்மை பார்க்க, அவன் நிலையை எண்ணி பரிதாபப்படுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியாது.

அக்கம் பக்கம் நோயாளிகளின் உறவினர்களிடம் பேச ஆரம்பித்து, நெருங்கி பழகி ஒரு கட்டத்தில் அவர்கள் குடும்பத்தினர் போல ஆகிவிடுவார்கள். "இந்த ஆஸ்பத்திரி எல்லாம் வேண்டாம். கீழக்கரைல நம்ம பாய் ஒருத்தர் இருக்காரு. போய் பாத்தீனா பத்தே நிமிஷத்துல எவன் சூன்யம் வெச்சு இந்த வியாதி வந்துச்சுன்னு சொல்லிடுவாரு. அவன் குடும்பத்துக்கு இதே நோய வர வைப்பாரு. நான் நாளை கழிச்சி மறுநாள் ஊருக்கு போறேன். வரியா? என்பார். கேட்டுக்கொண்டு இருக்கும் நோயாளியின் உறவினன், "அப்பறம் ஏன் நாயே நீ இங்க வந்த என்று கேட்காமல் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டிக் கொண்டிருப்பான்". சர்வ மதங்களும் பிரார்த்தனை செய்யும் வார்டுகள். ஒரு பக்கம் ராதாகிருஷ்ண சாஸ்திரிகள் குரலில் ருத்ரம், சமகம். இன்னொரு இடத்தில பாதிரியை அழைத்து ரட்சை, வார்டுக்குள்ளேயே தொழுகை என்று அனைத்தும் பார்க்கலாம். அய்யரே, ஏன் இவ்வளோ சத்தமா உங்க சமாச்சாரத்தை வைக்கறீங்க என்று யாரும் கேட்பதில்லை. இன்னொரு மதத்தின் விஷயம் தான் என்றாலும், நோயாளி கேட்கட்டுமே, சரியாகும் என்கிற நம்பிக்கை.

எந்த உறவும் இல்லாத போதும் வாஞ்சை. "கண்ணு, அப்பாக்கு சரியாடும். நீ ஒன்னும் கவலைப்படாத. ஏசப்பா காப்பாத்துவாரு". எந்த நோயாளின் உறவினர் என்று தெரியவில்லை. காண்டீனில் என்னிடம் இதை சொன்னார். அவர் யாருக்காக வந்திருக்கிறார் என்று கேட்க தோன்றியது. உங்க அப்பாருக்கு பக்கத்துக்கு ரூம். பையனுக்கு ஆக்சிடென்ட் ஆகி ஒரு மாசமா கோமா. மருமவ அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டா. தாய் நானு விட முடியுமா சொல்லு?". என்ன சொல்லி தேற்ற அந்த தாயை. தன் ப்ரச்சனைகிடையே என்னிடம் கரிசனம்.

மாறி மாறி ரத்தமும் சதையும் தினமும் பார்க்கும் டாக்டர், செவிலியர். "உங்க புருஷனுக்கு ரத்தமா வெளிக்கி போறது. ரத்தம் ஏத்த சொல்லியிருக்கேன். பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை என் கிட்ட எப்படியிருக்கார்னு கேட்டா நான் என்ன சொல்றது? மன்னிச்சிடுங்க டாக்டர், கவலை அதான் கேட்டேன். விலையுர்ந்த காரில் வரும் அந்த பெண்மணி கெஞ்சுவார். ஒரு நாளில் நான்கு குடல் அறுவை சிகிச்சை. ஒவ்வொன்றும் மூன்று அல்லது நான்கு மணி நேரம். அறுவை சிகிச்சை அரங்கிற்கு வெளியே அழுகையுடன் காத்திருக்கும் உறவினர்கள். மருத்துவரை பார்த்தவுடன் முகம் மலர்ந்து தன் சொந்தம் குறித்த கேள்விகள். அவை அனைத்திற்கும் பதில் சொல்ல வேண்டும். எப்போது உணவு, தூக்கம், குடும்பம் அவருக்கு? மலப்பை, மூத்திரப்பை சகிதம் நோயாளியுடன் நேரம் செலவிடும் செவிலியர்கள். நம் சொந்தம் தான் என்றாலும் அந்த மூத்திரப்பையை இரண்டு நாள் பிடித்தால் தான் நம் சகிப்புத்தன்மையின் அளவுகோல் தெரிய வரும். எத்தனை நன்றி சொன்னாலும் அவர்கள் செய்யும் சேவைக்கு தகாது.

நம் கஷ்டம் பெரிது என்ற நினைப்பை புரட்டிப் போடும் வினோத நோய்கள். ஆறு வயது குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை. வலியின் சுவடே தெரியாமல் நம்மை பார்த்து சிரிக்க நமக்கு கண்ணீர் பீறிடுகிறது. ஒரே வரியில் கவிஞர் சொன்னார், "உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு". என் நிலையை அவர்களுடன் ஒப்பிட்டு என்னால் நிம்மதி நாட முடியாது.

சகலே ஜனா சுகினோ பவந்து.

Thursday, 22 March 2012

பாரதியின் முரசு கவிதை - சில வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன் எனக்குண்மை தெரிந்தது சொல்வேன்
சீருக்கெல்லாம் முதலாகும் ஒரு தெய்வம் துணை செய்ய வேண்டும்

வேதமறிந்தவன் பார்ப்பான் பல வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதி நிலை தவறாமல் தண்ட நேமங்கள் செய்பவன் நாயக்கன்

பண்டங்கள் விற்பவன் செட்டி பிறர் பட்டினி தீர்ப்பவன் செட்டி
தொண்டரென்றோர் வகுப்பில்லை தொழில் சோம்பலைப் போல் இழிவில்லை

நாலு வகுப்பும் இங்கொன்றே இந்த நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே செத்து வீழ்ந்திடும் மானிடச் சாதி

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சிலமூடர் நல்ல மாதரறிவைக் கெடுத்தார்

கண்கள் இரண்டில் ஒன்றைக் குத்தி காட்சி கெடுத்திடலாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை யற்றிடுங் காணீர்

வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை; அவை பேருக்கொரு நிறமாகும்

சம்பால் நிறமொரு குட்டி; கருஞ் சாந்து நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி; வெள்ளை பாலின் நிறமொரு குட்டி

எந்த நிறமிருந்தாலும் அவையாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம் சிறிதென்றும் இது ஏற்றமென்றும் சொல்லலாமோ?

Monday, 12 March 2012

வேறெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி..

இரண்டு நாட்கள் தஞ்சை, திருச்சி என்று சுற்றி விட்டு நேற்றிரவு வீடு திரும்பினேன். வெள்ளி இரவு சென்னையில் இருந்து கிளம்பி அரியலூர் வழியாக தஞ்சை சென்றடைந்தேன். சென்ற முறை வாடகை கார் அமர்த்திக்கொண்டு அரியலூர் மார்கமாக தஞ்சை சென்ற போது சாலை மிக மோசமாக இருந்தது. அரியலூர்-தஞ்சை சாலை இப்போது புதிதாக போடப்பட்டுள்ளது. திருமானூர், திருவையாறு வழியாக தஞ்சை செல்லும் பாதை அது. வழியில் திருமழப்பாடி சாலை பிரியும். திருமழப்பாடி நந்திகேஸ்வரர் திருமணம் நடந்த இடம். காலை நான்கு மணிக்கு திருவையாறு காவேரி பாலம் வழியாக காரை செலுத்தினேன். பெண்கள் காவிரியில் குளிக்க சென்று கொண்டிருந்தார்கள். பாலம் தாண்டி காரை நிறுத்திவிட்டு காவிரியை சிறிது ரசித்தேன். ஓரமாக கொஞ்சம் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது.

தஞ்சை வந்து சேர்ந்த போது மணி நாலரை. திண்ணையில் படுத்து பத்து நிமிடம் கூட ஆகவில்லை, காமாட்சி அம்மன் கோயில் மணி கால சந்திக்கு அடித்தது. சிறிது நேரம் தூங்கி விட்டு ஆறரை மணிக்கு எழுந்தேன். குளித்துவிட்டு புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் சென்றேன். கோவிலில் அதிக கூட்டமில்லை. மகமாயியை மிக அருகில் தரிசிக்க முடிந்தது. தஞ்சையை ஆண்ட மராட்ட மன்னர் ஒருவர் சமயபுரம் மாரியம்மனை தரிசித்து திரும்பிய போது, மாரியம்மன் அவர் கனவில் தோன்றி நான் தஞ்சைக்கு கிழக்கே புன்னை காட்டில் வசிப்பதாக கூற, மன்னர் அங்கு சென்றார். கரையான் புற்று வடிவில் இருந்த அன்னையை சுற்றி கோவிலை கட்டினார். அந்த புற்றை பின்னர் அம்மனாக்கி அங்கு ஒரு யந்திரத்தையும் பிரதிஷ்டை செய்தார் சதாசிவ பிரம்மேந்திரர். மாரியம்மன் கோவிலின் பின்புறம் ஒரு பழமையான ராமர் கோவில் உள்ளது.அம்மனை பார்த்துவிட்டு வீட்டிற்கு வர, பாகற்காய் வதக்கல், கத்திரிக்காய் ரசவாங்கி, கதம்ப சாம்பார், ரசம், தயிர், மாங்காய் தொக்கு, மாகாளிக்கிழங்கு ஊறுகாய் என்று சாப்பாடு தயாராக இருந்தது. ஒரு பிடி பிடித்துவிட்டு மீண்டும் தூக்கம்.

மதியம் இரண்டு மணிக்கு கிளம்பி திருச்சி சென்றேன். மாலை ஸ்ரீரங்கத்தையும், திருவானைக்காவையும் தரிசித்தேன். கீழ அடையவளஞ்சான் வீதி, உத்திர வீதி எல்லாம் சுற்றி வர, சுஜாதா ஞாபகங்கள் பீறிட்டு எழுந்தன. சனிக்கிழமை என்பதால் ஏகக் கூட்டம். ரங்கனை சேவிக்க பெரிய வரிசை நிற்க, நான் சந்நிதியை ஒரு சுற்று சுற்றி விட்டு வெளியே வந்தேன். திருவானைக்காவில் அதிக கூட்டமில்லை. ஜம்புகேஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி தரிசனம் அற்புதமாக கிடைத்தது. கபாலி கோவில் அளவிற்கு அம்பாள் சந்நிதி மட்டும் திருவானைக்காவில். தீக்ஷதர் த்விஜவந்தி ராகத்தில் அமைத்த "அகிலாண்டேஸ்வரி ரக்ஷமாம்" மனதில் ஓடிக்கொண்டிருந்தது. கோவிலின் வெளிப் பிரகாரத்தில் ஓதுவார்கள் தேவாரம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஞாயிறு காலை திருச்சியில் இருந்து சென்னை கிளம்பினேன். மதுராந்தகத்தில் வழக்கம் போல் "கும்பகோணம் டிகிரி காபி" சுவைத்தேன். சென்ற முறை யக்ஷ பிரஷ்ணம். நேற்று விதுர நீதி. சிக்கில் குருசரண் குறுந்தகடு ஒன்று வாங்கினேன். ரீதிகௌளையில் "நன்னு விடசி" கேட்டபடி சென்னை வந்தடைந்தேன்.

Tuesday, 6 March 2012

வேலன் பாட்டு

பாரதியின் வேலன் பாடல்களில் ஒன்று இது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்.உன்னிகிருஷ்ணன் குரலில் இந்த பாடலை கேட்டுக்கொண்டே பலமுறை தூங்கியிருக்கிறேன்.

வில்லினை யொத்த புருவம் வளைத்தனை வேலவா - அங்கோர் வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி யானது வேலவா!
சொல்லினை தேனிற் குழைத்துரைப்பாள் சிறு வள்ளியைக் கண்டு சொக்கி மரமென நின்றனை தென்மலை காட்டிலே
கல்லினை யொத்த வலிய மனம் கொண்ட பாதகன் சிங்கன் கண்ணிரண்டாயிரம் காக்கைக் கிரையிட்ட வேலவா !
பல்லினை காட்டி வெண் முத்தைப் பழித்திடும் வள்ளியை - ஒரு பார்ப்பனக் கோலம் தரித்துக் கரந்தொட்ட வேலவா!

Monday, 5 March 2012

ஹரிஹரன் - காணாமல்போன இசைஞன்



ஹரி தானே..! எங்கேயாவது ’ஷராப்’ அருந்தி படுத்திருப்பார்” என்று எனக்கு பின்னால் இருந்த ஒரு மதிய வயது பெண் சத்தமாகச் சொன்னபோது அங்கு சிரிப்பொலிகள் உயர்ந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இரவு சென்னை ம்யூசிக் அகாதமியில் ஹரிஹரனின் கஸல் கச்சேரி துவங்கவிருந்த நேரமது. அரங்கம் நிரம்பிய கூட்டம். மேடையில் பக்க வாத்தியங்களான சாரங்கி, தபலா, ஹார்மோனியம், புல்லாங்குழல், கிதார் அனைத்துமே தயார். ஆனால் அறிவிக்கப்பட்ட நேரம் தாண்டி அரைமணி கடந்த பின்னரும் ஹரிஹரன் வந்து சேரவில்லை. கூட்டம் அல்லோகலப்பட ஆரம்பித்தது. கண்டனச் சத்தங்களும் கூச்சல் குழப்பங்களும் பொங்கத் தொடங்கியது.

கூட்டத்தை சமாதானப்படுத்தும் பொருட்டு இசைக் கலைஞர்கள் வந்து அமர்ந்து ஏற்கெனவே சுருதி சேர்த்து வைத்திருந்த கருவிகளை மறுபடியும் சுருதி சேர்க்க ஆரம்பித்தனர்! ஏறத்தாழ ஒரு மணிநேரம் கடந்தபின் ஹரிஹரன் வேகமாக நடந்து வந்து மேடையில் அமர்ந்தார். பார்வையாளர்கள் மத்தியில் சிறு ஆசுவாசம் உண்டாகியதேயொழிய பெரிய கரகோஷங்கள் எதுவும் உயரவில்லை. ஹரிஹரனும் தாமதத்திற்கு மன்னிப்பு எதுவுமே கோராமல் அமர்ந்து ஹார்மோணியத்தை தன்பக்கம் நகர்த்தி சுருதி மீட்டி பாட ஆரம்பித்தார். “இந்த இரவின் தனிமை எனது இதயம்போல் துடிதுடிக்கிறது...அது எனது நினைவுகளின் ஜன்னல் திரைச்சீலைகள் போல் வழுக்கி மாறுகிறது”.... ஜப் ராத் கீ தன்ஹாயீ தில் பன் கே தடக்தீ ஹே.....

அரங்கமே ஒரு கணம் நிலைகுலைந்து போனது. அனைவம் நொடிநேரத்தில் தங்களை மறந்து, இதயம் தொடும் இசையால் மட்டுமே ஒருவர் சென்றடையக் கூடிய ஏதேதோ உலகங்களுக்கு போய்விட்டனர். கஸலின் நீர்வீழ்ச்சிகள் அல்லது ஆப்ஷார் ஏ கஸல் என்ற தனது முதல் தொகுப்பில் ஹரிஹரனே இசையமைத்து, உருதுவின் மக்கள் கஸல் கவிஞன் என்று அழைக்கப்படும் பஷீர் பத்ர் எழுதி ஆஷா போன்ஸ்லே பாடிய அப்பாடலை அவர் பாடிமுடிக்கையில் இனம்புரியாத ஒரு வலியால் என் இதயமும் துடிதுடித்து போக எனது கண்கள் ஈரமாயின. அப்பாடலை ஹரிஹரன் பாடி நான் அதற்கு முன் கேட்டிருக்கவேயில்லை. தொடர்ந்து இரண்டரை மணிநேரம் நடந்தது எனது வாழ்நாளில் நான்கேட்ட மிக அற்புதமான கஸல் கச்சேரிகளில் ஒன்று. இந்தியாவில் தோன்றிய மிக அரிதான கஸல் பாடகன்தான் ஹரிஹரன் என்பதை என் மனதிற்குள் அந்நிகழ்ச்சி மீண்டும் உறுதி செய்தது.

சில ஆண்டுகள் கழித்து சென்னையின் ஐந்துநட்சத்திரத் தங்கும் விடுதியான லே மெரீடியனில் நான் ஹரிஹரனை சந்திக்கப்போனேன். தொண்ணூறுகளில் அவரது பல இசைத் தொகுப்புகளின் விநியோக உரிமை எங்கள் நிறுவனத்திடம் தான் இருந்தது என்பதால் அவற்றில் சிலதை பிரபலப்படுத்தி விற்பனை செய்வதில் நானும் எனது சிறு பங்கை ஆற்றியிருக்கிறேன் என்றாலும் நெருக்கமாக அவரை சந்திக்கப்போனது அதுதான் முதன்முறை.

குவைத்தில் நடக்கப்போகும் அவரது ஓர் இசைநிகழ்ச்சி விஷயமாகத்தான் அச்சந்திப்பு. வரச்சொல்லி எனக்கு அளித்திருந்த நேரத்தையெல்லாம் கடந்து தாமதமாகத்தான் அவர் வந்தார். ஆனால் எனது ஆதர்ச கஸல் பாடகனுடனான நேரடிச் சந்திப்பு என்பதால் எனக்கு உற்சாகம் சற்றுமே குறையவில்லை. அவரை பார்த்தவுடன் ’ஹரிஜீ’ என்றழைத்து நான் அவரது பாதங்களைத் தொட்டேன். சிரித்தார், மகிழ்ந்தார். ‘பவர் ஆஃப் விமன்’ எனும் ’தமிழ்’ படத்தில் குஷ்புவின் கதாநாயகனாக அவர் அப்போது நடித்துக் கொண்டிருந்தார். அதைப்பற்றியான ஆதங்கங்களிலும் தொலைப் பேச்சுக்களிலும் தொலைந்து போனவராக காணப்பட்டார்.

அத்தங்கும் விடுதியின் வரவேற்புக் கூடத்திலிருந்து நாங்கள் அவரது அறைக்கு மின்தூக்கியில் செல்லும்போது அதில் நவநாகரிக ஆடைகளில் வசீகரத் தோற்றத்துடனிருந்த ஒரு பெண்ணிடம் அவர் “நீங்கள் காலையில் நான் மும்பையிலிருந்து வந்த விமானத்தில் இருந்தீர்கள் அல்லவா?” என்று கேட்டார். அப்பெண்ணோ அவர் யார் என்றே தெரியாததுபோல் ‘இல்லையே’ என்று சாதாரணமாக சொல்லிவிட்டு அடுத்த தளத்தில் இறங்கிப்போனாள். அவர் முகத்தில் ஏமாற்றம் வெளிப்பட்டது. எனக்கும் சங்கடமாகயிருந்தது. ’இசை உணர்வு அற்ற ஜென்மம்’ என்று அப்பெண்ணை நான் மனதில் எண்ணிக்கொண்டேன்.

‘பவர் ஆஃப் விமன்’ படத்தின் சிக்கல்களும் அந்த மின்தூக்கி அழகியும் சேர்ந்து எங்களது சந்திப்பை ஒரு நாராசமான அனுபவமாக மாற்றியது. குவைத்து இசை நிகழ்ச்சியில் அவரது சில முக்கியமான கஸல்களையும் சேர்க்க வேண்டும் என்று நான் சொன்னதற்கு “அதெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன், எனது மேடை நிகழ்ச்சிப் பாடல்களின் பட்டியலை நான் யாரிடமும் கலந்தாலோசிப்பதில்லை” என்றார். கருவியிசைக் கலைஞர்களுக்கு பாடல்களின் பட்டியலை முதலிலேயே நான் கொடுக்க வேண்டுமே என்று சொன்னதற்கு ”அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்” என்று விரக்தியுடன் சொன்னார். மேலும் நேரவிரையத்திற்கு விருப்பப்படாததால் நான் அங்கிருந்து வெளியேறினேன்.

எண்பதுகளின் மத்தியில் முதன்முதலில் ஹரிஹரனின் கஸல்கள் கேட்க ஆரம்பித்த காலத்திலிருந்தே எனக்கு அவரது அசாத்தியமான பாடும்முறையின் மேலும் அரிதான குரலின்மேலும் அப்படியொரு மோகம். அப்போது ஜெக்ஜித் சிங் கஸல்களின் ரசிகனாக இருந்தபோதிலும், தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் மெஹ்தி ஹஸன் எனக்கு அறிமுகமாகும் வரைக்கும் ஹரிஹரன்தான் இவ்வுலகில் எனக்கு மிகவும் நெருக்கமான கஸல் பாடகராக இருந்தார். ஹரிஹரன் ஒரு தென்னிந்தியர் என்பதும், இங்கிருந்து புறப்பட்ட ஒரு பாடகன் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் வட இந்தியர்களும் மட்டுமே இருந்துவந்த ஒரு இசைமுறையை இவ்வளவு அற்புதமாகவும் அனாயாசமாகவும் கையாளுவதும் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் தந்தது.

அவரது ஆரம்பகால தொகுப்புகளாக 1983ல் வந்த ’கஸல் கா மௌச’த்தின் ’தாயம் படா ஹுவா’, முன் சொன்ன ’ஆப்ஷார் ஏ கஸல்’இல் இருந்த ’குச் தூர் ஹமாரே ஸாத் சலோ’, ஹொரைசன் (Horizon) இல் வந்த ’பன் நஹீ பாயா’, ’ஸாகியா ஜாயெ கஹான்’, ’ஆவாரா’, ’ஹம் னே காட்டீ’, ரிஃப்ளெக்ஷன்ஸ் (Reflections) தொகுப்பில் இடம்பெற்ற ’கப் தக் யூ ஹீ’, ’ஸுகூன்’இல் வந்த ’ஹாத் மே லே கர்’ போன்றவை தொடங்கி 2000ஆம் ஆண்டில் வெளிவந்த ’காஷ்’ தொகுப்பின் ’காஷ் ஐஸா’, ’யே ஆயினே ஸே’, ’ஜூம் லே’, ’மைகதே பந்த் கரே’வரைக்கும் அவரது பலபல கஸல்களின் அதி தீவிர ரசிகனாகத்தான் நான் இருந்திருக்கிறேன்.

பைகாம், தில் கி பாத், குல்ஃபாம், கரார், ஜஷ்ன், ஹாஸிர் என அவரது பல கஸல் தொகுப்புகள் நான் அடிக்கடி கேட்டுவந்தவை. ‘ஆ சாந்த்னீ ஃபீ’, ‘அஹ்தே வஃபா ஆஹிஸ்தா’, ‘ஜப் வோ மேரே கரீப்’, ‘முஜே ஃபிர் வஹீ யாத்’, ‘கோயீ பத்தா ஹிலே’, ‘ஜியா ஜியா ன ஜியா’, ‘கோயீ ஸாயா’, ‘ஃபூல் ஹே சாந்த் ஹே’, ‘ஷஹர் தர் ஷஹர்’ என எனக்கு மிகவும் பிடித்தமான ஹரிஹரன் கஸல்களின் பட்டியலை அடுக்கிக்கொண்டே போவேன்.

அவரது முதன்முதல் திரைப்பாடலுமே மந்திரஜாலம் போல் ஒலிக்கும் ஒரு கஸல். என் ஆதர்ச இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜெய்தேவ் இசையமைத்தது. ’அஜீப் ஸானேஹா முஜ் பர் குஸர் கயா யாரோ’ என்கிற அப்பாடல் 1978ல் வந்த கமன் என்கிற ஹிந்திப்படத்தில் இருந்தது. அப்பாடலுக்காக ஹரிஹரனுக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தின் சிறந்த பாடகனுக்கான விருதும் கிடைத்தது.

ஸந்தூர் மாமேதை சிவ்குமார் சர்மாவும் புல்லாங்குழல் இதிகாசம் ஹரி பிரசாத் சௌரஸ்யாவும் இணைந்து சிவ்-ஹரி என்கிற பெயரில் இசையமைத்த லம்ஹே படத்தின் ’கஃபீ மே கஹூம்’, ’யே லம்ஹே’ போன்ற பாடல்களைப்பாட தேர்வு செய்யப்பட்டார் ஹரிஹரன். பின்னர் ஹிந்தி, மராத்தி, போஜ்புரி, பெங்காலி, தமிழ், மலையாளம், கன்னடா, தெலுங்கு மொழிகளில் நூற்றுக்கணக்கான புகழ்பெற்ற திரைப் பாடல்களை பாடினார். இரண்டுமுறை இந்தியாவின் சிறந்த திரைப்பாடகனுக்கான தேசிய விருதையும் பெற்றார்.

தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட ஹரிஹரன் 1955ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ல் கேரளாவில், திருவனந்தபுரத்தில் பிறந்தவர். அது அவரது அப்பா எச் ஏ எஸ் மணியின் சொந்த ஊர். திருவாங்கூர் இசைக் கல்லூரியிலிருந்து அதன் முதல் ஆண்டு பட்டதாரிகளில் ஒருவராக வெளிவந்த அவர் பம்பாய்க்கு இடம்பெயர்ந்து அங்கு தென்னிந்திய இசைப்பள்ளியை நடத்தி வந்தார். ஒரு இசை ஆசிரியராக அங்கு பம்பாய் சகோதரிகள்(Bombay Sisters) போன்ற புகழ்பெற்ற பல கர்நாடக செவ்வியல் இசைப் பாடகர்களை உருவாக்கியவர் அவர்.

பத்தே வயதான அலமேலு எனும் பெண் அவரது மாணவியாக வந்தார். 9 ஆண்டுகள் நீண்ட இசைப்பயிற்சிக்கு பின்னர் 31 வயதான மணி 19 வயதான அந்த மாணவியை காதலித்து மனைவியாக்கிக்கொண்டார். அடுத்த ஆண்டு ஹரிஹரன் பிறந்தார். அலமேலுவும் அசாத்தியமான இசைத்திறனை பெற்றிருந்தவர். இசை மட்டுமே நிரம்பி வழிந்த சூழலில் வளர்ந்தார் ஹரிஹரன். ஆனால் துரதிருஷ்ட வசமாக ஹரிஹரனுக்கு எட்டு வயது மட்டுமே இருந்தபோது அவரது அப்பா இறந்துபோனார்.

28 வயதில் கணவனை இழந்த அலமேலு மணி பின்னர் தன் மகனுக்காகவே வாழ்ந்தார். செம்மங்குடியிடமிருந்தும் டி.பிருந்தாவிடமிருந்தும் மேலும் மேலும் கர்நாடக இசை கற்றுத்தேர்ந்த அவர் பம்பாயின் பெரும்புகழ்பெற்ற ஷண்முகானந்த சபாவின் இசைப்பள்ளியின் முதல் தலமை ஆசிரியராக இருந்திருக்கிறார். ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு அவர் கர்நாடக இசை கற்பித்தார். அவர்தான் ஹரிஹரனின் முதல் குருவாக அவருக்கு கர்நாடக இசைப்பாடங்களை கற்பித்தவர்.

ஆனால் ஹரிஹரனுக்கோ சிறுவயதிலிருந்தே கர்நாடக இசையை விட ஹிந்துஸ்தானியின்மேல் தான் ஈர்ப்பும் மோகமும் இருந்தது. அதிலும் மெஹ்தி ஹஸனின் கஸல்களின்மேல் அவருக்கு தனிப்பட்ட பிரியம். ஜெக்ஜித் சிங்கின் கஸல்களையும் விரும்பினார். ஹிந்துஸ்தானிதான் தனது இசைவழி என்று முடிவெடுத்த அவர் தனது பதின்பருவத்திலேயே புகழ்பெற்ற பாடகரும் இசை ஆசிரியருமான உஸ்தாத் குலாம் முஸ்தபா கானின் மாணவனாக மாறினார்.

மியான் தான்ஸேனால் நிறுவப்பட்ட ஸானியா இசைப்பரம்பரையின் கிளையான ராம்பூர்-ஸாஹஸ்வான் கரானாவின் வாரிசான உஸ்தாத் குலாம் முஸ்தபா கானின் கீழிலான இசைப்படிப்பின் வழியாக முற்றிலுமாக ஹிந்துஸ்தானி இசைக்குள் மூழ்கிப்போனார் ஹரிஹரன். தினமும் 10-13 மணிநேரம் இசைப்பயிற்சி செய்தார் அவர்! ஒரு கஸல் பாடகனாக மட்டுமே வாழ விரும்பிய ஹரிஹரன் கஸல்களின் மொழியான உருதுவை முற்றிலுமாக கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற ஆவலுடன் அம்மொழியிலும் அதன் நுட்பங்களிலும் ஆழ்ந்த ஈடுபாட்டைக் காட்டினார். பின்னர் இந்தியாவில் உருதுவின் தலைநகரமான லக்னௌவில் கூட அவரது உருது மொழிப்புலமை பாராட்டப்பட்டது.

இதற்கிடையில் கல்லூரியில் பட்டப்படிப்பையும் முடித்த ஹரிஹரன் சிறு கச்சேரிகள் நடத்த ஆரம்பித்தார். கருப்பு வெள்ளை தொலைக்காட்சிகளின் காலத்திலேயே தொலைக்காட்சியில் பாடினார். 1977ல் ஒரு அனைத்திந்திய இசைப்போட்டியில் அவர் வெற்றிபெற்றபோது அங்கு நடுவராக வந்திருந்த இசையமைப்பாளர் ஜெய்தேவ் ஹரிஹரனை கவனித்தார். அவ்வாறாகத்தான் அவருக்கு கமன் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தொடர்ந்து பல ஆண்டுகள் திரைப்படங்களில் அவருக்கு சொல்லும்படியான வாய்ப்புகள் எதுவுமே வரவில்லை.

ஹிந்தியில் அவ்வப்போது ஒரு சில திரைப்பாடல்களை பாடி வந்தார்.
இக்காலகட்டம் தான் ஹரிஹரன் கஸல்களின் பொற்காலம். முன்சொன்ன பல தொகுப்புகள் அப்போதுதான் வெளியாயின. தனது பெரும்பாலான கஸல்களுக்கு அவரே இசையமைத்தார். இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஏற்கனவே பிரபலமான பல கஸல்களை எடுத்து அவற்றின் இசையை முற்றிலுமாக வேறு வேறு ராகங்களில் மாற்றியமைத்தார். அதில் வெற்றியும் பெற்றார். அது சாமானியமான ஒரு விஷயமல்ல. தொடர்ந்த தொகுப்புகளும் மேடை நிகழ்ச்சிகளும் வழியாக இந்தியா முழுவதும் பாகிஸ்தானிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாயினர்.

ஹரிஹரனின் தனிச்சிறப்புகளாக சொல்லக்கூடிய விஷயங்கள் நிறையவே இருக்கிறது. அதில் மிக முக்கியமானது அவரது குரல். ஒரு விசேஷமான காதற்காவியத்தன்மை கொண்டது (Romantic) அது. அக்குரலின் வழியாக அவர் பிறப்பிக்கும் சங்கதிகள் அசாத்தியமானவை. அச்சங்கதிகளை அபாரமாக உருவாக்க உதவும் கற்பனை வளமும் இசை ஞானமும் பலபல ஆண்டுகளின் அசுரத்தன்மைகொண்ட கடும் இசைப்பயிற்சியும் அவருக்கு இருக்கிறது. ஹிந்துஸ்தானி செவ்வியல் இசையின் ஆழ்ந்த நுட்பங்களைக்கூட தெரிந்து வைத்திருக்கும் அவருக்கு கர்நாடக இசையிலும் காத்திரமான அஸ்திவாரம் இருப்பதனால் மனதில் நினைக்கும் எந்தவொரு இசைக்கற்பனையையும் எளிதாக பாடி வெளிப்படுத்த அவரால் முடிகிறது.

கஸல் விரும்பிகளால் பெருவாரியாக ரசிக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட தொகுப்புகள் வெளிவந்த பின்னர்தான் 1992ல் ஏ ஆர் ரஹ்மானின் இசையில் ரோஜா படத்தில் ’தமிழா தமிழா’ என்கிற பாடலை அவர் பாடினார். அப்படத்தின் ஹிந்தி வடிவத்தில் அதே பாடலை ’பாரத் ஹம் கோ’ என்றும், காதல் ரோஜாவே பாடலை ’ரோஜா ஜானே மன்’ என்றும் பாடினார். அன்றிலிருந்துதான் ஒரு முழுநேர சினிமாப்பாடகராக அறியப்பட ஆரம்பித்தார் ஹரிஹரன். ஹிந்தி சினிமாவில் அவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியதாக சொல்லப்படுகிறது என்றாலும் அவற்றில் வெற்றி பெற்ற பாடல்களின் எண்ணிக்கை குறைவே. அவற்றிலும் பல ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த தமிழ் பாடல்களின் ஹிந்தி வடிவங்கள் தான்.

’மேரே துஷ்மன் மேரே பாயீ’ என்கிற அனு மல்லிக் இசையமைத்து ’பார்டர்’ படத்தில் வந்த பாடலுக்குதான் அவருக்கு 1998ல் முதல் தேசிய விருது கிடைத்தது. தேசிய ஒற்றுமையையும், போர் முக்கியமில்லை வாழ்க்கைதான் முக்கியம் என்கிற கருத்தையும் முன்வைத்த வரிகள் கொண்டிருந்ததேயொழிய அப்பாடலின் இசைக்கும் பாடும்முறைக்கும் எந்தவொரு சிறப்புமே இருந்ததில்லை என்று சொல்லித்தான் ஆகவேண்டும். 2009ல் ஜோக்வா எனும் மராத்திப் படத்தின் ’ஜிவ் தங்கலா குங்க்லா’ பாடலுக்காக கிடைத்ததுதான் அவரது இரண்டாவது தேசிய விருது. இரண்டு முறை தமிழக அரசு விருதையும் ஆந்திர, கேரள மாநில விருதுகளையும், ஃபிலிம்பேர் விருது போன்ற எண்ணற்ற தனியார் விருதுகளையும் பெற்றிருக்கிறார் ஹரிஹரன்.

தமிழில் அவருக்கு தரமானதும் வெற்றி பெற்றதுமான பல பாடல்கள் கிடைத்தது. உண்மையில் ஒரு முழுநேர திரைப்பாடகனாக ஹரிஹன் அங்கீகரிக்கப்பட்டது அவரது தாய்மொழியான தமிழில் மட்டும் தான். நிலா காய்கிறது, கொஞ்ச நாள் பொறு தலைவா, விடுகதையா இந்த வாழ்க்கை, ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ, காதலீ காதலீ காதலால், குச்சிக் குச்சி ராக்கம்மா, உயிரே உயிரே, டெலஃபோன் மணிபோல், கல்லூரிச் சாலை, மலர்களே மலர்களே, கண்ணைக் கட்டிக் கொள்ளாதே, ஒரு மணி அடித்தால், மின்னல் ஒரு கோடி, அன்பே அன்பே கொல்லாதே, என்னை தாலாட்ட வருவாளோ, ஏதோ ஒரு பாட்டு, மழை துளி மழை துளி, நீ காற்று நான் மரம், இருபது கோடி மலர்கள், பச்சை நிறமே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சுற்றும் விழிச் சுடர் தான், நிலவு பாட்டு, யார் சொல்வதோ, ஒரு பொண்ணு ஒண்ணு நான், ஒரு பொய்யாவது சொல், என் மன வானில், வெண்ணிலவே வெண்ணிலவே, மஞ்சள் வெயில் மாலையிலே, முதல் மழை, வாஜி வாஜி, நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை போன்றவையெல்லாம் ஹரிஹரனின் பெரும் வெற்றிபெற்ற தமிழ்ப் பாடல்கள்.

தமிழில் அவரது திரைப்பாடல்களுக்கு கிடைத்த பெரும் வெற்றியும் அதேநேரம் இந்திய அளவில் ஒரு பாடக உச்சநட்சத்திரமாக மாறமுடியாமல் போனதன் ஏமாற்றமும் அவரை முற்றிலுமாக மாற்றியமைத்தது என்றே நினைக்கிறேன். கஸலின் உண்மைகளை அவர் கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டர். பெருவாரியான மக்கள் கூட்டத்தை ஈர்க்காத கஸலை ஒரு உபதொழிலாக மட்டுமே வைத்துக்கொண்டு பெரும்புகழடைந்த ஒரு திரைப்பாடகனாக மாறவும் அத்துடன் இந்தியாவின் பெரும் வெற்றிபெற்ற பாப் இசைப் பாடகனாக வலம்வரவும்தான் தொண்ணூறுகளுக்குப் பின்னர் அவர் முயற்சித்தார் என்றே படுகிறது. ஆரம்பத்தில் அதில் ஒரளவுக்கு வெற்றியும் பெற்றார்.

பாப் இசைப்பாணியில் அவர் அமைத்த ஹல்கா நஷா ஒரு வெற்றித்தொகுப்பே. கொளோனியல் கசின்ஸ் என்கிற பேரில் அவரும் லெஸ்லி லூயீஸும் சேர்ந்து வெளியிட்ட முதல் தொகுப்பும் பெரும் வெற்றிபெற்றது. ஆனால் பின்னர் வந்த அவரது அனைத்து பாப் முயற்சிகளுமே பெரும் தோல்வியைத்தான் சந்தித்தது. இரண்டு தொகுப்புகளின் தோல்விக்கு பின் கிட்டத்தட்ட இல்லாமலாகிப்போன கொளோனியல் கசின்ஸை ஒரு சினிமா இசையமைப்பாளர் இரட்டையராக ஆக்கும் முயற்சியில் மோதிவிளையாடு, சிக்குபுக்கு எனும் இரண்டு தமிழ் திரைப்படங்களுக்கும் இசையமைத்து பார்த்தார். அதுவும் எடுபடவில்லை.

தொண்ணூறுகளின் கடைசியிலிருந்து ஒரு கஸல் பாடகர் என்கிற இடத்தை அவர் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து இன்றைக்கு கஸலில் அவரது தரமான பங்களிப்புகள் எதுவுமே இல்லை என்றாகிவிட்டது. ஆத்மா, தில் ஐஸா கிஸி னே மேரா தோடா, லாஹோர் கே ரங்க் ஹரீ கெ சங்க், வக்த் பர் போல்னா போன்ற அவரது பிற்காலத் தொகுப்புகள், இதை உருவாக்கினவர் அவரா என்று நம்மை அதிர வைக்கும் அளவுக்கு இருக்கிறது.

அவரது மேடை கஸல் நிகழ்ச்சிகள் என் போன்ற அவரது ஒரு காலத்து தீவிர ரசிகர்களுக்கு மிக ஏமாற்றமான ஒரு அனுபவமாக மாறி பலகாலமாகிவிட்டது. வேறு யாராலும் பாடமுடியாத சங்கதிகளை அதீத சுயமோகத்துடன் வலிந்து பாடும் ஒருவகையான களரி விளையாட்டாக அவரது மேடை நிகழ்ச்சிகள் மாறிவிட்டது. திரையிசை, பாப் இசை சார்ந்த மேடைகளிலுமே இதைத்தான் அவர் செய்து வருகிறார். அங்கு தனது சக பாடகர்களை விட தான் பலமடங்கு மேலானவர் என்று நிரூபிப்பது மட்டுமே அவருக்கு இன்று முக்கியமாகி விட்டது.

திரைப்பாடல் பதிவின்போது இசையமைப்பாளர் கராறானவராக இல்லா விட்டால் இத்தகைய, அழகுணர்வற்ற அதீதமான சங்கதிகளை பாடுவதிலேயே அவர் தொடர்ந்து நாட்டம் காட்டுகிறார் போலும். மேடைகளில் மேற்கத்திய ஆரவாரப் பாடகர்களைப்போல், அவருக்கு சற்றுமே பொருந்தாத விசித்திரமான உடைகளுடனும் சிகை அலங்காரத்துடனும் தோன்றி தன்னையே சிறுமைபடுத்துவதிலும் அவருக்கு அலாதியான பிரியம் உருவாகியது! அது அவருக்கு பெருமை சேர்ப்பதாக அவர் நினைத்து கொண்டிருக்கிறார்.

ஹார்மோணியத்திற்கு ’பின்னால்’ அதாவது இசையின் பின்னால், அமைதியாக அமர்ந்து இசையின் பெருக்கெடுப்பில் தன்னையே மறந்து பாடும் ஒரு கஸல் பாடகன் இது எதுவுமே செய்ய முடியாது அல்லவா? மேற்கத்திய பாப் இசையில் தனது ஆதர்சம் என்று அவர் சொன்ன லயணல் ரிச்சி ( Lionel Richie) போன்றவர்கள் கூட இத்தகைய அபத்தமான ஆடம்பர ஒப்பனைகளில் ஒருபோதும் தோன்றவில்லை என்பதுமா ஹரிஹரனுக்குத் தெரியவைல்லை?

ஹரிஹரனின் அசாத்தியமான இசைத்திறனும் மனித சாத்தியமில்லாதது என்றே சொல்லக்கூடிய அவரது இசை பயிற்சியுமெல்லாம் மாயமாகி, ’லாகூரின் வண்ணம் ஹரியின் எண்ணம்’, ’ஹரியுடன் நான்’ என எல்லாமே அவருக்கு ’ஹரி’ மட்டுமேயாகி விட்டது. அந்த பிரம்மாண்டமான ஹரியின் வருகையுடன் ஏ ஹரிஹரன் என்கிற ஆத்மா ததும்பும் கஸல் பாடகன் எங்கோ மறைந்து விட்டார். இசை பின்வாங்கி நகர ஹரி தனது இசையை விட வெகுதூரம் முன்னேறி விட்டார்! அவர் இன்று தொலைக்காட்சிகளின் யதார்த்த இசை நிகழ்ச்சிகளில் அமர்ந்து தற்பெருமை பயணங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அங்கு துவண்டு நிற்கும் இளம் பாடகர்களை, யாராலுமே பாடமுடியாத சங்கதிகளையும் தானங்களையும் பாடிக்காட்டி பயமுறுத்துகிறார்.

கடந்த வாரம் ஏஷியானெட் எனும் மலையாள தொலைக்காட்சி வழங்கிய மலையாளத் திரைப்பட விருது நிகழ்ச்சியில் ஹரிஹரனுக்கு மீண்டும் ஒரு விருது கிடைத்தது. ஸ்னேஹவீடு என்கிற படத்தில் இளையராஜாவின் இசையில் அவர் பாடிய மிகச்சாதாரணமான ஒரு பாடலுக்கு. அந்த விருது அவருக்கு கிடைத்ததில் ஆச்சரியமில்லை. ஏன் என்றால் அவர்தான் தற்போது அந்த சேனலின் ’ இசை ரியாலிடி ஷோ’ வின் முக்கிய நடுவர்! கடந்த ஆண்டின் உலகப்புகழ் பாடல் ’ஒய் திஸ் கொலவெறி’யின் பாடலாசிரியரும் பாடகருமான தனுஷை புகழாரங்களுடன் அந்த விருது நிகழ்ச்சி மேடைக்கு அழைத்தார் ஹரிஹரன்.

மேடையில் அவருக்கு முன்னால் பேசுவதற்கே தயங்கி நின்ற தனுஷை ஒரு சிறந்த பாடகர் என்றே அழைத்தார் ஹரிஹரன்! அதை மறுத்த தனுஷ் ”நான் ஒரு பாடகனுமில்லை, கொலவெறி ஒரு பாடலுமில்லை. அது ஒரு தவறு. ஒரு திரைப்படத்தின் விளம்பரத்திற்காக வெறும் முப்பதே நிமிடங்களில் நாங்கள் தயார் செய்த ஒரு பாடலை இப்படியெல்லாம் புகழ்ந்து என்னை மேலும் கூனிக்குறுக வைக்காதீர்கள்” என்று சொன்னார்.

ஆனால் ஹரிஹரன் அதை ஒரு ’கூல்’ பாடல், ’ட்ரென்டி’ பாடல் என்றெல்லாம் புகழ்ந்து கொண்டே போனார். அது ஒரு தவறென்றால் அந்த தவறை மேலும் மேலும் செய்யுங்கள் என்றார்! எதற்கு? அது பெரும் வெற்றிபெற்றிருக்கிறது என்கிற ஒரே காரணத்திற்காக! அம்மேடையில் தனுஷை கொலவெறி பாடலை பாடவைத்து அதன் சில வரிகளை அவருடன் இணைந்து பாடவும் செய்தார் ஹரி!

தனது இசையிலிருந்து, தனது வேர்களிலிருந்து முற்றிலுமாக பிரிந்து, தான் அல்லாதது எதையோ ஒன்றை தான் என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறார் இன்று ஹரிஹரன். ஹரிஜீ... ஒன்று மட்டும் உங்களிடம் கேட்கிறேன். நீங்கள் வந்துநிற்கும் இந்த முடிவற்ற இரவின் ஆழ்ந்த இருட்டையும் அளப்பரிய தனிமையையும் என்போன்ற ஒரு எளிய இசை ரசிகன் எதிர்கொள்வது எப்படி?

Source: http://musicshaji.blogspot.in/

Thursday, 23 February 2012

பாரதியார் கவிதைகள்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தின் "மகாகவி பாரதியார் கவிதைகள்" என்கிற தொகுப்பை சில நாட்களுக்கு முன் வாங்கினேன். புத்தகம் வாங்கும் போதே ஜெயமோகன் மற்றும் எம்.டி.எம் உருவங்கள் மனதில் வந்து சென்றன. தேசிய கீதங்கள், தெய்வப் பாடல்கள், ஞானப் பாடல்கள், பாஞ்சாலி சபதம், பல்வகைப் பாடல்கள் என்று நிறைய தலைப்பில் முண்டாசு கவியின் வரிகள். சரி, ஞானப் பாடல்கள் பகுதியை பார்ப்போம் என்று சென்றேன். முதல் பாடல், அச்சமில்லை அச்சமில்லை. எத்தனையோ முறை கேட்ட வரிகள் தான் இருப்பினும் ஒவ்வொரு முறை இதை படிக்கும் போது எழும் உணர்வு சொல்லில் அடங்காது. குறிப்பாக இவை:

பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இச்சை கொண்ட பொருளெல்லாம் இழந்து விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

(நீ ஏன் இப்படி டிரஸ் போட்டுட்டு வர, பொண்ணுங்க இப்படி டிரஸ் பண்ணா தான் பசங்களுக்கு பார்க்க தோணுது என்று வாதாடும் இந்த தலைமுறை ஆண்களுக்கு ஏற்ப)

கச்சணிந்த கொங்கை கண்கள் வீசு போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே


எனக்கென்னவோ "பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்" என்று கவிராஜன் சொல்லும் போது, பரங்கியர் தலைமையில் இருந்த நம் மக்களின் வாழ்வை சொல்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதே போல, பேயோ, பிசாசோ குறித்து அச்சம் தேவையில்லை என்று சொல்லாதவர், "கச்சை அணிந்த கொங்கை மாதர் பார்வை" குறித்து அச்சம் தேவையில்லை என்கிறார். இன்னும் கொஞ்ச நாளைக்கு குளம்பியகத்தில் பாரதி பாடல்கள் தான்.

Saturday, 11 February 2012

எது (மட்டும்) ஒழுக்கம்?




சமீபத்தில் கர்நாடக சட்டசபையில் porn clip பார்த்த இரு அமைச்சர்கள் ராஜினாமா செய்தாச்சு. இது தொடர்பாக தினமணி தலையங்கத்தில் படித்தது -- " இது தவறுதான், ஆனால் இது மட்டும் தவறல்ல ... சட்டசபையில் விவாதம் நடக்கும்போது சக உறுப்பினருடன் தேவையில்லாமல் வம்பளப்பது, கேண்டீன் போவது இதெல்லாமும் தவறுதான்"

இது பற்றி யோசிக்கும்போது, அந்த இரு அமைச்சர்களும் தம்முள் பேசிக்கொண்டு இருந்தாலும், கேண்டீன் போயிருந்தாலும் , செல் போனில் பேசிக்கொண்டு இருந்தாலும் நாம் யாரும் கவலைப்பட போவதில்லை , அவர்கள் தங்களுக்கு சொந்தமான business சம்பந்தமான file பார்த்துக்கொண்டு இருந்திருந்தாலும் நமக்கு பிரச்சினையே இல்லை, அவர்கள் குடிபோதையில் வந்திருந்தாலும் (வந்து உளறாமல் இருந்தால்) பிரச்சினை இல்லை, பிரச்சினையே அவர்கள் ஒரு porn clip பார்த்துகொண்டு இருந்ததுதான் , அது இந்தியாவில் எதிர்க்கப்படும் மிகப்பெரிய (ஒரே)ஒழுக்ககேடு இல்லையா.. அதனால் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சாதனையாக அவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டார்கள்.எப்போ மற்ற விஷயங்களும் ஒழுக்க கேடு என்றாகிறதோ அப்போதான் நாம உருப்படுவோம்.

(ஆமா அந்த porn clip url பத்தி எந்த T.Vயும் சொல்லவே..யில்லை..என்னதான் news போடறாங்களோ..nonsense)

Monday, 30 January 2012

19B

முன்னுரை:

குமுதத்தில் முன்பெல்லாம் ஒரு பக்க கதை என்று வெளிவரும். இப்போது வருகிறதா என்று தெரியாது. இது அந்த வகை முயற்சி.

இப்படி ஒரு பேரழகியை கைப்பிடிப்போம் என்று கார்த்திக் நினைக்கவே இல்லை. "ஏன்டா, ஐ.டி கம்பெனில வேலை செய்யற பசங்க எல்லாம் என்னமா பிகர் கரெக்ட் பண்றாங்க, நீ ஏன் இப்படி தத்தியா இருக்க" என்று ஸ்வேதா சகட்டுமேனிக்கு கிண்டல் செய்வாள். ஸ்வேதா அவன் தங்கை. இந்த நிமிடம் அவளை பார்த்து "எப்படி பிடிச்சேன் பாத்தியா?" என்று கேட்கத் தோன்றியது. ஆனால், யாரோ "நாழியாச்சு நாழியாச்சு" என்று கத்திக்கொண்டே இருந்தார்கள். குரலின் சொந்தக்காரரை தேட விழைய, அம்மா எதிரே வந்தாள். "ஆபீஸ் போக வேண்டாம், நாழியாச்சு எழுந்திருடா" என்றாள்.

இன்னிக்கு என்ன ஆபீஸ்மா என்று கைவீசி அவளிடம் சொல்ல, அருகில் இருந்த மடிக்கணினி மீது கைபட்டு அது Hibernate நிலையில் இருந்து உயிர்ப்பெற்று முனகியது. அடச்சே, அத்தனையும் கனவு. ஐயோ, கேளம்பாக்கம் செல்லும் எட்டு மணி 19B ஏ.சி பேருந்தை பிடிக்க வேண்டுமே, மணி என்னவோ என்றெண்ணி கைபேசியை எடுக்க வால்பேப்பர் அசின் சிரித்துக்கொண்டே ஏழேகால் என்றாள். இந்த பேருந்தை விட்டால் அவ்வளவுதான், மத்ய கைலாஷ் ஆரம்பித்து சோளிங்கநல்லூர் வரை டிராபிக் இருக்கும் என்ற நினைப்பே கவலை தர, கனவில் வந்த அழகியின் முகத்தை மீண்டும் நினைவு கொண்டு வர யத்தனித்தபடி கார்த்திக் தன் காலையை துவங்கினான்.

ஒரு வழியாக கார்த்திக் தி.நகர் டெர்மினஸ் வரவும் பேருந்தை ஓட்டுனர் அங்கிருந்து வெளியே எடுத்து வரவும் சரியாக இருந்தது. உள்ளே இரண்டொரு இருக்கை காலியாக இருக்க, ஒன்றில் தன்னை பொருத்திக் கொண்டான். பேருந்து சைதை தாண்டி மத்ய கைலாஷை அடைந்தது. நின்று கொண்டிருந்த ஓரிருவர் அங்கு இடம் கிடைத்து அமர, தன் இருக்கைக்கு நாலைந்து வரிசை முன் அவனை நோக்கி உட்கார்ந்தபடி இருந்த அந்த பெண்ணின் முகம் தெரிந்தது.கல்லூரி மாணவி போல் இருந்தாள். ஜன்னலை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். கனவில் பார்த்த பெண் போல் அசரடிக்கும் அழகில்லை என்றாலும் நன்றாகவே இருந்தாள். அவள் குணாதிசயங்கள் பல இவளுக்கு பொருந்துவது போல் கார்த்திக்கிற்கு தோன்றியது.

மயில் பச்சை நிற சுடிதார், அழகான கழுத்தில் ஒரு ஒற்றைச் செயின், ஐ-லைனர் உபயத்தில் நெற்றியில் இருந்த பாம்பு வடிவ பொட்டு என்று அனைத்தும் அவனுக்கு பிடித்த விஷயங்கள். ஆள் ஆர்வமே இல்லாத ஒரு ஏரி அருகில் மெல்லிய மழை சாரல் வீசும் மாலையில் அவளுடன் நடப்பது போல் மனக் காமிராவை ஓட்டத் துவங்கினான். "தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா, நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா" என்று யேசுதாசின் குரல் கேட்டது.

ஜன்னல் பக்கம் பார்த்துக்கொண்டிருந்தவள் பேருந்திற்குள் பார்வையை துழாவி கார்த்திக்கிடம் நிறுத்தினாள். அவள் தன்னை பார்த்து புன்னகைப்பது போல் பட்டது கார்த்திக்கிற்கு. கற்பனையை ஒரு நிமிடம் நிறுத்திவிட்டு மீண்டும் அவளை பார்க்க, அட, நிஜம் தான். நம்மை பார்த்து தான் சிரிக்கிறாள். பேருந்து சிறுசேரியை நெருங்கிக் கொண்டிருந்தது. கார்த்திக் இறங்க ஆயுத்தமானான். மயில் பச்சை சுடிதாரும் இறங்க தயாராவதை கண்டான். அவள் இறங்கியவுடன் அவளிடம் சென்று ஏன் தன்னை பார்த்து சிரித்தாள் என்று கேட்க வேண்டும். இங்கே எங்கு படிக்கிறாள் அல்லது பணி செய்கிறாள் என்று தெரிந்தால் பேசி பழக வசதியாய் இருக்கும்.

இவனை தொடர்ந்து அவளும் இறங்கினாள். அவளே முன்னே வந்து, "நீங்க கார்த்திக் தானே? என்றாள். தொடர்ந்து, "என்ன அண்ணா பார்கறீங்க? நான் ஸ்வேதா பிரண்டு காயத்ரி. உங்க வீட்டுக்கு கூட வந்திருக்கேனே. ஸ்வேதா எப்படி இருக்கா? ரொம்ப நாள் ஆச்சுண்ணா அவளோட பேசி. எனக்கு இங்க ஜாப் கிடைச்சு இருக்கு. இன்னிக்கு தான் ஜாயின் பண்றேன். வீட்ல ஆன்ட்டி, அங்கிள் எல்லாரையும் கேட்டதா சொல்லுங்கண்ணா" என்று பொரிந்து விட்டு பதிலுக்கு காத்திராமல் சென்று விட்டாள். கார்த்திக் காதில் "அண்ணா" என்ற வார்த்தை மட்டும் வெகு நேரம் கேட்டுக் கொண்டிருந்தது.

Sunday, 29 January 2012

எப்படி சாக வேண்டும்?

பாரத ரத்னா எம்.ஜி.ஆர் இறந்தது 25-12-1987.

இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி , ப்ரெசிடென்ட் ஆர்.வெங்கட்ராமன், வைஸ் ப்ரெசிடென்ட் ஷங்கர் தயாள் ஷர்மா மூவரும் தனி விமானங்களில் சென்னைக்கு வந்து எம்.ஜி.ஆருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள், இது போன்று இந்த மூன்று பதவியில் இருப்பவர்களில் ஒரே நேரத்தில் டெல்லியை விட்டு கிளம்பியதில்லை.

மத்திய அரசு தன் எல்லா அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவித்தது, எம்.ஜி.ஆருக்கு மரியாதை செய்யும் வகையில், தமிழ்நாடு , புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா , கோவா , ஹரியானா,மத்திய பிரதேசம், போன்ற மாநிலங்களும் விடுமுறை அறிவித்தன.

ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ் , கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே, முன்னாள் முதல்வர் குண்டு ராவ், காஷ்மீர் முதல்வர் பாரூக் அப்துல்லா , குஜராத் முதல்வர் அமர்சிங் சௌத்ரி, முன்னாள் குடியரசு தலைவர்கள் சஞ்சீவ ரெட்டி, ஜெயில்சிங் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.ஸ்ரீலங்கா அரசின் சார்பில், மந்திரி தொண்டைமான் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

ஹிந்தி நடிகர்கள் திலிப்குமார், தேவ் ஆனந்த, பிரான்,தர்மேந்திரா,ஹேமாமாலினி , பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் , நாகேஸ்வரராவ் , ராஜ்குமார் மற்றும் தமிழ் தெலுகு கன்னட மலையாள திரையுலகத்தினர் பலர் வந்திருந்தனர்.

ஸ்ரீலங்கா, சிங்கப்பூர் , மலேசியா ரஷ்ய நாடுகளின் பார்லிமென்ட்களில் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா முழுவதும் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது. எல்லா மாநிலங்களிலும் அரைக்கம்பத்தில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டன.

திருச்செந்தூர், திருப்பதி, திருவேற்காடு , பார்த்தசாரதி பெருமாள், காஞ்சிபுரம் உள்பட பல கோவில்களில் எம்.ஜி.ஆர் ஆத்மா சாந்தி அடைய கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா , கர்நாடக ஆகிய மாநிலங்களை சேர்ந்த 15 ஆயிரம் ரசிகர்கள் அவர் இறந்த துக்கதிற்காக மொட்டை அடித்துக்கொண்டனர்.

இந்தியாவின் எல்லா மாநில சட்ட சபைகளிலும் அவர் நினைவாக இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தூர்தர்ஷன் ,தமிழகத்தில் செய்த முதல் நேரடி ஒளிபரப்பு,அவர் இறுதி யாத்திரைக்குதான்.

தமிழக அமைச்சர்கள் தவிர, பூட்டா சிங், நரசிம்ம ராவ் ,பா.சிதம்பரம் ஆகியோர் இறுதி ஊர்வலத்தில் நடந்து வந்தனர்.இறுதி ஊர்வலத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.  டிசம்பர் 25, 1987 மதியம் 1:20க்கு இறுதி ஊர்வலம் ஆரம்பமானது. ராணுவ வண்டியில் அவரது உடல் வைக்கப்பட்டது, அண்ணா சாலை , ஜெமினி, கதீட்ரல் ரோடு, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக நான்கு மணி நேரத்தில் கடற்கரைக்கு ஊர்வலம் வந்து சேர்ந்தது. வழி நெடுக ஹெலிகாப்ட்டர் மூலம் எம்.ஜி.ஆர் உடல் மீது மலர் தூவப்பட்டது.

இலங்கையில் தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் சுமார் ஐந்து லட்சம் தோட்ட தொழிலாளர்கள் துக்கம் அனுஷ்டித்து பணிக்கு செல்லவில்லை. N.T.ராமராவ், குண்டுராவ் , டீ.ஜி.பி ராஜேந்திரன் , போலீஸ் கமிஷனர் தேவாரம் ஆகியோர் இராணுவத்தினரோடு சேர்ந்து கயிற்றை பிடித்து அவரது உடல் அடங்கிய சந்தன பெட்டியை கீழே இறக்கினார்கள். வழி நெடுக கட்டிடங்களில் இருந்து பூக்கள் தூவி மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

கூட்டத்தின் நெரிசலில் ஐந்து பேர் சிக்கி இறந்தனர். எம்.ஜி.ஆர் இறந்ததை கேட்டு அதிர்ச்சியில்  இறந்தோர் நான்கு பேர். தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டோர் 25 பேர்.

எம்.ஜி.ஆர் இறந்தபின் ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அரசு, அவருக்கு பாரத ரத்னா விருது அறிவித்தது.

-எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம் நூலில் இருந்து

Thursday, 26 January 2012

மார்கண்டேய கட்ஜு

"சல்மான் ருஷ்டி அவ்வளவு பெரிய எழுத்தாளர் எல்லாம் இல்லை, He is a poor and substandard writer, தேம்ஸ் நதிக்கரையில் வசிப்பதால் இந்த புகழ் அவருக்கு" என்று கூறியிருக்கிறார் முன்னாள் உச்ச நீதி மன்ற நீதிபதியும் இந்நாள் பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜு.ருஷ்டியின் புத்தகங்களை தான் படித்துள்ளதாகவும் அவற்றின் தரம் மிகக் குறைவே என்று குறிப்பிட்டுள்ள அவர், The Satanic Verses புத்தகம் பிரபலம் அடைந்திருக்கவிட்டால் ருஷ்டி பற்றி யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும், படித்த இந்தியர்கள் வெளிநாட்டில் வசிக்கும் இந்திய எழுத்தாளர்களே சிறந்தவர்கள் என்று நினைக்கும் தாழ்வு மனப்பான்மையால் வரும் நிலை இது என்று குற்றம் சாட்டியுள்ளார்

ஜெய்ப்பூரில் நடந்து வரும் இலக்கிய விழாவை கடுமையாக சாடியுள்ள அவர் கபீர், காலிப், பிரேம்சந்த், ஷரத் சந்திரா போன்றோர் குறித்து பேசப்படவேண்டிய விழா "இரண்டு சினிமா பாடலாசிரியர்களை (குல்சார் மற்றும் ஜாவேத் அக்தர்) இந்தியாவின் சிறந்த இலக்கியவாதிகள் போல சித்தரித்திருப்பது ஜெய்பூர் இலக்கிய விழாவின் தரத்தை காட்டுகிறது என்று கூறியுள்ளார். என்னை பொறுத்தவரை அவர்களின் ஆக்கங்கள் கீழ்த் தரமானவை என்று கூறி முடித்துள்ளார். சில வாரங்களுக்கு முன் இதே கட்ஜு, "பாரதி போன்ற கவிஞர்களுக்கு தரப்பட வேண்டிய பாரத ரத்னா விருது கிரிக்கெட் விளையாட்டு வீரருக்கு வழங்க பட வேண்டும் என்கிற அவல நிலையில் இந்த தேசம் உள்ளது" என்று கூறியிருந்தார்.

இதைப் பற்றி கருத்து சொல்லும் அளவுக்கு நமக்கு ஞானம் இல்லை. ஆனால், கட்ஜு அவர்களின் சில முடிவுகள் எனக்கு உவப்பானவையே. உதாரணமாக Euthanasia எனப்படும் கருணைக் கொலையை சென்ற வருடம் சட்டமாக்கினார் கட்ஜு.அவர் சொல்பவை சரியே என்று நம்புவோமாக.

Friday, 20 January 2012

எனக்கு பிடித்த நகுலன் கவிதைகள்...


இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்

-------------------------------------------

எனக்கு
யாருமில்லை
நான்
கூட..

Thursday, 19 January 2012

துக்ளக்

நீங்கள் அ.தி.மு.க மற்றும் சோ இருவரையும் வெறுப்பவராய் இருக்கலாம். ஆனால், உங்களுக்கு சினிமா மற்றும் ஆன்மீகத்தில் விருப்பம் உண்டெங்கில் துக்ளக் உங்களை கவர இரு புதிய பகுதிகளை அறிமுகம் செய்துள்ளது. எம்.ஜி.யார் பற்றி வாலி எழுதும் புதிய கட்டுரை சென்ற வாரம் தொடங்கியது. முதல் கட்டுரையே அமர்க்களம். பெரிய பீடிகையுடன் ஆரம்பித்துள்ளார் வாலி. அதே போல, வரும் இருபத்தியாறாம் வரவுள்ள இதழில் இருந்து திரு.வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களும் துக்ளக்கில் ஒரு புதிய ஆன்மீக பகுதியை ஆரம்பிக்கிறார்.படித்து ரசியுங்கள்.

Wednesday, 18 January 2012

ஒரு பின்நவீனத்துவ நாவலில் விடுபட்ட பொங்கல் பலன்கள்

இந்த வருட சங்கராந்தி பலன்கள்

மகர சங்கராந்தி புருஷர் ஸ்த்ரீருபமாய் 3-முகங்கள்,4-கால்கள்,வளைவான புருவமும் , கருப்பு முடியும், 3 -வாய்களும்,8-கைகளும் ,2-கால்களும் நிதானமாக ஆலோசனையுடன் கருப்பு சரீரத்துடன் துவாங்கிசி என்ற பெயரில் திடகாத்திரமான சரிரத்துடன் வேப்பங்குச்சியில் பல்துலக்கி பிரசாத்தி பெற்ற ஜலத்தில் குளித்து , அலரி பூ,தவனம்,வெள்ளை சம்பங்கி,கஸ்தூரி கோரஜனம்,லவங்கம்,பன்னீர்,வாசனை திரவியங்களை சுத்த ஜலத்தில் கலந்து மீண்டும் ஆற்றில் சுத்த ஜலத்தில் ஸ்நானம் செய்து பன்னீர் அபிஷேகத்துடன் உடலுக்கு சந்தனம் ,கதம் பொடி,வாசனை திரவியம் ,குங்குமமப்பூ, புனுகு,தைல வகை பூசிக்கொண்டு இளநீர் மற்றும் தேங்காய் சாதம் புசித்து , வெள்ளை பாயாசம் ஆயாசம் தீர சாப்பிட்டு , ஆகாயத்தையும் பூமியையும் கண்களால் பார்த்து சிகப்பு வஸ்திரம் அணிந்துகொண்டு நெற்றியில் மஞ்சள்குங்குமம் ,அட்சதை பொட்டாக திருநீறு நெற்றியில் வைத்து , சம்பங்கி பூ மாலை அணிந்து, நவரத்தினம் மாலை ஆபரணம் அணிந்து , சொர்ண ஆபரணம் அணிந்து, மயில் குடை பிடித்து, சகல ஜாதி புடை சூழ , மயில் வெண்சாமரை பிடித்து , ஈயபாத்திரத்தில் தேங்காய் அன்னம் புசித்து , வாழைப்பழம் தின்று,கிழக்கு திசை நோக்கி வேத மந்திரம் மற்றும் பஜனை கோஷ்டியுடன் மங்கள வாத்தியம் பூமியை பார்த்து கிழக்கே அமர்கிறார். பொங்கல் பால் இவ்வாண்டு பொங்கல், பால் கிழக்கே பொங்கும் கவனிக்கவும்.

In mathematics, the Pythagorean theorem or Pythagoras' theorem is a relation in Euclidean geometry among the three sides of a right triangle (right-angled triangle). In terms of areas, it states:

In any right triangle, the area of the square whose side is the hypotenuse (the side opposite the right angle) is equal to the sum of the areas of the squares whose sides are the two legs (the two sides that meet at a right angle).

எங்கும் நல்ல மழை பொழியும் , கீழ்காற்று , அதிகமான விமான விபத்துகள் அயல்நாட்டார் அதிக முதலீடுகள் செய்வர். ரச வர்க்கம் சிறிதளவு விலை ஏறி குறையும் , ஆன்மீகவாதிகளுக்கு பலவகையில் தொந்தரவுகளுக்கும் , வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு நிம்மதியும் , கருப்பு பணம் வைத்திருக்கும் தனவந்தர்களுக்கு அரச அதிகாரிகளால் கெடுபிடி அதிகமும் , ஜீவராசிகளுக்கு நன்மையையும் , கால்நடைகள் கோமாரியால் பாதிக்கும். உத்தராயனத்தில் மின்னல் இடி அதிகமும், மூட்டை பூச்சி , புழு, சர்ப்பம் அழிதலும் , சைவ உணவு விடுதி அதிகரிக்கும். கடல் வாணிகத்தில் அதிக லாபம் இருக்கும். கடல் கொந்தளிப்பால் சுமத்ரா,ஜப்பான்,இலங்கை,அந்தமான்,நாகப்பட்டினம்,சென்னை,கல்பாக்கம்,நாகர்கோயில்,கன்னியாகுமரி,காரைக்கால்,பாண்டி, கடலூர்,வடமதுரை பாதிப்பும் ஏற்படும். எங்கும் பழைய புராதன கோவில்களுக்கு குடமுழுக்கு மற்றும் பழைய ஆலயங்களை சீர்திருத்தம் செய்வர். எங்கும் பூரான்,பாம்பு,பல்லி விருத்தியாகும்.

Fauvism is the style of les Fauves (French for "the wild beasts"), a short-lived and loose group of early twentieth-century Modern artists whose works emphasized painterly qualities and strong colour over the representational or realistic values retained by Impressionism.




பூர்விக தேவாலயங்களில் இடி விழும், மலை பிரதேசங்களுக்கு பலவகையில் சேதாரமும் கம்ப்யூட்டர் வகைகளுக்கு அதிக அளவில் வியாபாரம் ஆகும்.மேற்கு திக்கில் (கேரளா) பாதிப்பு . பறவைகளின் கூட்டத்தை சில குரவர்கள் துப்பாக்கியால் சுட்டு இனத்தை அழிக்கக் நேரும். பெண்களுக்கு நரம்பு தளர்ச்சி நோய் கடுமையாக பாதிக்கும்.

பிட்டு

யோனிப்பொருத்தம்:
நக்ஷத்திர யோனிகள் குறிப்பிட்டபடி யானைக்கு சிங்கம் மனிதர் , குதிரைக்கு பசு, எருமை பசு கடா மான் நாய் இவைகளுக்கு புலி, குரங்குக்கு ஆடும் , எலிக்கு பூனையும் பாம்பும் , பூனைக்கு புலியும் நாயும் பகையாம்.மற்றவை நட்பாகும்.இரண்டு புருஷ யோனிகள் கூடாது. பெண் ஸ்த்ரி யோனியும் , புருஷன் ஆண் யோனியும் உத்தமம் . மாறி இருந்தாலும் கூடாது, இருந்தால் அன்னியோன்னிய அந்நிய சிநேகம்.

                                                 A Z H M





(தங்கள் நக்ஷத்திர மிருகம் பற்றி தெரிந்து கொள்ள தனியாக சுயவிலாசமிட்ட கவருடன் கடிதம் அனுப்பவும்).

Monday, 16 January 2012

பார்த்தசாரதி - ஒரு விளக்கம்

வெள்ளியன்று மாலை ஜெயா டிவியின் மார்கழி மாத நிகழ்ச்சியில் டாக்டர்.சுதா சேஷையன் அவர்கள் கீதை குறித்து பேசிக்கொண்டிருந்தார். "திருதிராட்டிரனுக்கு புறப்பார்வை கிடைத்தது ஆனால் அதை சஞ்சயனுக்கு கொடுத்து விட்டான் அவன் ஆனால் கடைசி வரை அவன் அகக்கண் திறக்கவே இல்லை, மாறாக அர்ஜுனனுக்கு அகக்கண் திறந்தது அதுவே கீதை பிறக்க வழியாயிற்று" என்றார்.

நிகழ்ச்சி முடியும் தருவாயில் பார்த்தசாரதி என்கிற நாமத்திற்கு ஒரு அற்புதமான விளக்கம் தந்தார். இதுநாள் வரை "பார்த்தனுக்கு சாரதி" ஆகையால் பார்த்தசாரதி என்று கேட்டு வந்துள்ளோம். சுதா சேஷையன் அவர்களோ, "குந்தி சூரசேனன் மகள். சூரசேனனின் மகன் தான் கிருஷ்ணரின் தந்தை வசுதேவர். ஆகையால், கிருஷ்ணரின் அத்தை குந்தி. வாரிசு இல்லாத குந்திபோஜ மகாராஜாவுக்கு தத்து மகளாக தரப் பட்டாள் ப்ரிதா. அதனால் குந்தி என்ற பெயர்.

குந்தியின் இயற்பெயர் ப்ரிதா. ப்ரிதா என்றால் பூமி. ப்ரிதையின் மகன் அர்ஜுனன். பூமியின் மகன் அர்ஜுனன். ஆக, அர்ஜுனனுக்கு மட்டுமல்லாது பூமியில் பிறந்த நம் அனைவருக்கும் சாரதியாக கண்ணன் அருளியதே கீதை. இதைப் படிக்கும் போது வரும் உணர்வு எத்தகையது என்று எனக்கு தெரியவில்லை ஆனால் சுதா சேஷையன் சொன்ன விதம் மெய் சிலிர்க்க வைத்தது.

பரமபத சோபன படம்





குழந்தைகள் விளையாடுவதற்காக என் தந்தை பரமபத சோபன படமும் பித்தளையில் தாயக் கட்டையும் வாங்கிக்கொண்டு வந்திருந்தார். நேற்று மதியம் வெகு நேரம் நானும் என் மகளும் விளையாடிய போதும் வெற்றி பெறவில்லை. என் மகள் அருகஷனிடம் (பரமபதத்தின் பெரிய பாம்பு) இரண்டு முறை மாட்டிக்கொண்டு கீழே இறங்கியதால் விளையாட்டே வேண்டாம் என்று சென்றுவிட்டாள்.

சரி பரமபதம் பற்றி விக்கிபீடியா என்ன சொல்கிறது என்று பார்க்கலாம் என்று வலையை துழாவினேன். "இவ் விளையாட்டு பண்டைய இந்தியாவில் கி.மு இரண்டாம் நூற்றாண்டளவில் விளையாடப்பட்டது. 1892 அளவில் இங்கிலாந்தில் அறிமுகமானது. இவ்விளையாட்டு நல்வினைகளதும் தீவினைகளதும் பெறுபேறுகளைக் குழந்தைகளுக்கு விளக்குவதாக அறிமுகஞ் செய்யப்பட்டிருக்கலாம்." என்கிறது விக்கி.

சிறு வயதில் வைகுண்ட ஏகாதசி இரவன்று பரமபதம் விளையாடி இருக்கிறேன் ஆனால் அதிலுள்ள படங்கள் பற்றி எதுவும் தெரியாது. ஒரு கட்டத்திற்கும் ஒரு படம் உள்ளது. அது எதை குறிக்கிறது என்று தெரியவில்லை. அந்த பெரிய பாம்பின் பெயர் அருகஷன் என்று தெரியும் ஆனால் ஏன் அந்தப் பெயர் என்று தெரியவில்லை. பரமபதம் விளையாட்டு பற்றிய விபரமுள்ளவர்கள் தெரிவிக்கவும்.

Wednesday, 11 January 2012

கவிஞனை தேடி..

புதியதோர் கவிஞன் செய்வோம் என்றொரு நிகழ்ச்சி ராஜ் டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியை நடத்துவது விசாலி கண்ணதாசன். திறமையுள்ள கவிஞர்களை தேடி ஊக்குவிப்பதே நிகழ்ச்சியின் நோக்கம். அகஸ்மாத்தாக நேற்று இதை பார்க்க நேர்ந்தது. வசூல்ராஜாவில் கமல் சொல்வது போல், "வட்டி கலக்கிட்டடா காபி", மார்க்கபந்து மூணாவது சந்து" ரீதியில் கவிதைகள். செந்தமிழ்தாசன் என்றொரு ஆர்வக்கோளாறு நபர் சொன்ன கவிதையை கேட்டு மாரடைப்பே வந்துவிட்டது. "அன்று கண்ணதாசன் இன்று செந்தமிழ்தாசன் கண்டெடுத்தது விசாலி கண்ணதாசன்" என்று ஏதோ சொல்லிக்கொண்டே போனார். அரை மணி நேரம் நிகழ்ச்சியை பார்த்து நான் புரிந்து கொண்டது, தமிழ்நாட்டில் நூற்றுக்கு தொண்ணூறு பேரை காதல் தோல்வி சந்தித்துள்ளது. கவிதை முழுதும் காதலியும் அவள் குண நலன்களும் தான்.

விசாலியோ ஒவ்வொரு வருங்கால கவிஞரிடமும், "நான் எதிர்ப்பார்ப்பது மன்மதன் அம்பு படத்தில் வரும் சாம தான பேத தண்டம் நாலும் தோத்து போகும் போது தகிடதத்தாம்" போன்ற கவிதையை என்று அதையே சொல்லிக் கொண்டிருந்தார். அவர் எழுதிய கவிதைகளில் இருந்து ஒன்றை சொல்லி விளக்க முயற்சித்திருக்கலாம். கவி சொல்ல வந்த சிலரின் பெயர்கள் "கவியரசு", "செந்தமிழ்தாசன்", "இலக்குவன்","தமிழரசி". சொல்லி வைத்து போல ஆண் கவிகள் எல்லாம் தாடி, ஜிப்பா சகிதமாக ஆஜர். ஜிப்பா இல்லையென்றால் ஒரு பழைய பான்ட் சட்டை. தமிழ்நாட்டின் வளரும் கவிகள் அனைவரும் ஏழை போலும்.

நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கும் போதே சுஜாதா "மிஸ்.தமிழ்த்தாயே நமஸ்காரம்" புத்தகத்தில் தான் குமுதம் இதழின் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் இளையராஜாவுடன் சேர்ந்து நடத்திய கவிஞர் தேடும் படலத்தை நகைச்சுவையுடன் விவரிக்கும் பகுதியை நினைத்துக் கொண்டேன். சுஜாதா சொல்வது போல, "நல்ல கவிஞர்களை இது போன்ற முயற்சிகளின் மூலம் தேர்ந்தெடுக்க முடியாது".

Tuesday, 3 January 2012

சென்னை புத்தக்க்காட்சியில்..

திரு.ஞாநி அவர்களின் வலைத்தளத்திலிருந்து இந்த அறிவிப்பு:

ஜனவரி 5 முதல் 17 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடக்கும் சென்னைப் புத்தக்க்காட்சியில் என் ஞானபாநு பதிப்பகத்தின் அரங்கு எண் 310. தினசரி மாலைகளில் என்னை(ஞாநி அவர்களை) அங்கே சந்திக்கலாம்.

இந்த முறை எழுத்தாளர்களுடன் வாசகர்கள் சந்திக்கும் நேருக்கு நேர் நிகழ்ச்சியை புத்தகக்காட்சியை நடத்தும் பபாசி ஏற்பாடு செய்துள்ளது. விமர்சகர் க.நா.சு நூற்றாண்டையொட்டி அவர் பெயரிடப்பட்டுள்ள F35 அரங்கில் இந்த சந்திப்புகள் நிகழும். இதை நெறிப்படுத்தும் பொறுப்பை நானும் பாரதி புத்தகாலயம் நாகராஜனும் மேற்கொண்டுள்ளோம்.

பங்கேற்கும் எழுத்தாளர் பட்டியல்:

வெள்ளி - ஜனவரி 6- மாலை 6-8 மணி- சா.கந்தசாமி
சனி ஜனவரி 7- மதியம் 3-5 மணி- பெருமாள் முருகன்
மாலை 6-8 மணி- கி.ராஜநாராயணன்
ஞா ஜனவரி 8- மதியம் 3-5 மணி- கவிஞர் சுகுமாரன்
மாலை 6-8 மணி – எஸ்.ராமகிருஷ்ணன்
தி ஜனவரி 9 மாலை 6-8 மணி- கண்மணி குணசேகரன்
செ ஜனவரி 10 மாலை 6-8 மணி- அ.மார்க்ஸ்
பு ஜனவரி 11- மாலை 6-8 மணி- சு.வெங்கடேசன்
வி ஜனவரி 12- மாலை 6-8 மணி- இரா நடராஜன்
வெ ஜனவரி 13-மாலை 6-8 மணி- அழகிய பெரியவன்
சனி ஜனவரி 14-மதியம் 3-5 மணி- மனுஷ்யபுத்திரன்
மாலை 6-8 மணி- பிரபஞ்சன்
ஞா ஜனவரி 5- மதியம் 3-5 மணி- பாமா
மாலை 6-8 மணி- அசோகமித்திரன்
தி ஜனவரி 16- மதியம் 3-5 மணி- ஆதவன் தீட்சண்யா
மாலை 6-8 மணி- சாரு நிவேதிதா
செ ஜனவரி 17- மதியம் 3-5 மணி- இந்திரா பார்த்தசாரதி
மாலை 6-8 மணி- தமிழ்ச்செல்வன்

Sunday, 1 January 2012

பாண்டிச்சேரி

"புயலடிச்சு ஒஞ்சா மாதிரி இருக்கு" என்பார்கள். புயல் அடித்து ஓய்ந்தால் எப்படி இருக்கும் என்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது நேற்று. பாண்டிச்சேரி "பாதிச்சேரி" ஆகியுள்ளது . புத்தாண்டை முன்னிட்டு மணக்குள விநாயகரை தரிசிக்கலாம் என்று பாண்டி சென்ற எனக்கு ஜிப்மர் மருத்துவமனை நெருங்கிய நிமிடமே "தானே" ஆடிய கோரத் தாண்டவம் விளங்கிவிட்டது. தெருவெங்கும் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன. "நானே விழும் போது நீ என்ன கொசுறு" என்கிற மாதிரி மின்சாரம் மற்றும் தொலைபேசி வயர்களை இழுத்துக்கொண்டு சாய்ந்துள்ளன. பேனர்கள், கொடிக்கம்பகள், தகர கூரைகள் என்று ஒன்று விடாமல் துவம்சம் செய்துள்ளது தானே. தகர கூரைகளை எல்லாம் எடுத்து சென்று கிடைத்த விலைக்கு விற்றுள்ளது ஒரு கூட்டம்.

பல இடங்களில் இன்னும் மின்சார இணைப்பு வரவில்லை. டீஸல் நிரப்பிவிட்டு கடன் அட்டையை நீட்ட, "சார், இன்னும் பத்து நாளைக்கு இதெல்லாம் யூஸ் பண்ண முடியாது" என்றார் அங்கிருந்த பணியாளர். தானே பாண்டியை தாக்கிய வியாழன், வெள்ளி ஆகிய இரு நாட்கள் பால், தண்ணீர் எல்லாம் ஐந்து மடங்கு விலையில் விற்கப்பட்டுள்ளது. அரை லிட்டர் பால் அறுபது ரூபாய் என்றார் என் உறவினர். இத்தனைக்கும் நடுவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறையவில்லை புதுவையில். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்துள்ள இளைஞர் கூட்டம் கிங்பிஷர், ஐந்தாயிரம் சகிதமாக அங்கெங்கே நின்று கொண்டு வருடப் பிறப்பை கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

நாலு நாளாக மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி நேற்று மதியத்திற்கு மேல் தான் வெளியே வர தொடங்கியுள்ளனர். எந்த பெட்ரோல் பங்க், ஏ.டி.எம் சென்றாலும் கூட்டம். காரை எடுத்துக்கொண்டு பீச் வரை சென்று பார்க்கலாம் என்று போனேன். பல கட்டிடங்கள் உடைந்து விழுந்துள்ளன. அலைகள் பீச் சாலை முழுதும் ஆக்கிரமித்ததற்கு அடையாளமாக சாலை முழுதும் கற்கள் மற்றும், கடல் நீர். கடலூரில் இதை விட மோசம் என்றார்கள். மணக்குள விநாயகரை தரிசிக்க அளவே இல்லாமல் வரிசை நீண்டு கொண்டே போனதால் வெளியில் இருந்தே தரிசித்து விட்டு வந்தேன்.

கோவிலின் வெளியே இருந்தே யானைக்கு "லக்ஷ்மி" என்று பெயர் போலும். அதை ஒரு கார்டில் எழுதி மென்பொருள் தொழிலில் பணிபுரியும் ஊழியர் கழுத்தில் இருப்பது போல மாட்டியிருந்தனர். முன்னங்கால் இரண்டிலும் வெள்ளிக் கொலுசு. யானைக்கு ஐந்து ரூபாய் கொடுத்து விட்டு பத்து குடும்ப உறுப்பினர்களை ஆசிர்வாதம் செய்ய சொன்ன வரை கடிந்து கொண்டிருந்தான் பாகன். யானை அவர்களை பார்த்தபடி நின்று கொண்டிருந்தது. அதன் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கும் என்று எண்ணினேன். ஜெயமோகனின் "யானை டாக்டர்" சிறுகதையை நினைத்துக் கொண்டேன்.

அங்கிருந்து கிளம்பி திண்டிவனம் மார்கமாக சென்னை வந்தடைந்தேன். மதுராந்தகம் அருகே "கும்பகோணம் டிகிரி காபி" என்று ஒரு காபி கடை திறந்திருக்கிறார்கள். பித்தளை டபரா செட்டில் காபி இருபது ரூபாய். செம்ம கூட்டம் வருகிறது. "யக்ஷ பிரச்னம்"(யக்ஷன் யுதிஷ்டிரனிடம் கேட்ட கேள்விகள்) என்னவென்று ஒரு போர்டில் எழுதி வைத்திருந்தார்கள். வித்தியாசமாக இருந்தது.

யக்ஷ பிரச்னம் பற்றி தெரியாதவர்களுக்கு - இது மகாபாரதத்தில் ஒரு பகுதி. நதியை காக்கும் யக்ஷன் ஒருவன் பாண்டு புத்திரர்களை தன் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தண்ணீரை குடித்தால் மரணமடைவீர்கள் என்று எச்சரித்தும் அர்ஜுனன், பீமன், நகுலன் மற்றும் சஹாதேவன் ஆகியோர் அதைப் புறக்கணித்து குடித்து மரணமெய்து விட, அவர்களை தேடி வரும் தர்மபுத்திரரையும் எச்சரிக்கிறான் யக்ஷன். அவன் கேள்விகளுக்கு சரியான பதில்களை அவர் தர, நான்கு சகோதரர்களில் ஒருவரை உயிர்பிக்கிறேன் என்கிறான் யக்ஷன். தர்மபுத்திரர் நகுலன் அல்லது சஹாதேவனை கேட்கிறார். ஏன் என்று யக்ஷன் கேட்க, குந்தி மைந்தர்களில் தான் ஒருவன் உயிரோடு இருப்பதால் மாத்ரி மைந்தன் ஒருவன் உயிருடன் வேண்டும் என்கிறார் அவர். எந்த நிலையிலும் தர்மத்தை விட்டு விலகாமல் உள்ள அவர் பாராட்டி நால்வரையும் உயிர்ப்பிக்கிறான் யக்ஷன்.