Friday, 31 December 2010

2010 - திரும்பிப் பார்க்கிறேன்

2010 ஆம் ஆண்டு இன்றுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறது. விடைபெறும் ஆண்டின் Highlights என்ன?

ஆதர்ஷ் வீட்டு வசதி வாரிய ஊழல், சுக்னா நில ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் போன்றவற்றை எல்லாம் புறமுதுகு காட்டி ஓட வைத்த, ஊழலுக்கெல்லாம் தாய் என்று வர்ணிக்கப்படும் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்த ஆண்டு.(அது நடந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது புல்லரிக்க வைக்கும் பெருமை)

ரஜினி டீ குடிப்பதையே இரண்டு மணி நேர படமாக எடுத்தால் கூட தமிழ்நாட்டில் நூறு நாள் ஓடும் என்பதற்கு சாட்சியாக எந்திரன் வெளிவந்த ஆண்டு.

முஹம்மத் அப்சல், அஜ்மல் கசாப் ஆகியோர் நம் அரசு செலவில் சௌஜன்யமாக கழித்த மற்றொரு ஆண்டு.

மாவோயிஸ்டுகள் தங்கள் வீர பிரதாபங்களை அரங்கேற்ற,அரசு கடமை தவறாமல் அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்த மற்றுமொரு சராசரி ஆண்டு.

ஆறேழு விபத்துக்களின் வாயிலாக ரயில்வே துறை தங்கள் திறமையை மீண்டும் ஒரு முறை நிருபித்த ஆண்டு.

டெண்டுல்கர் தன ஐம்பதாவது சதத்தை அடித்து இரண்டு கோடி ரூபாயை வீட்டிற்கு கொண்டு செல்ல, "கலக்கிட்டாம்ப்பா சச்சின்" என்று ஆங்காங்கே டாஸ்மாக்கில் நம் குடிமகன்கள் தங்கள் சம்பளப் பணத்தை செலவழித்து கொண்டாடிய மற்றுமொரு ஆண்டு.

என்னதான் வேகமாக வளர்ந்தாலும் போலிச் சாமியார்கள் மற்றும் "என் மருந்தை சாப்டினா சும்மா லைட் கம்பம் மாதிரி நிக்கும்" என்று சத்தியம் செய்யும் பழனி சித்த மருத்துவர்களுடனோ விஞ்ஞானத்தால் போட்டி போட்டு ஜெயிக்க முடியாது என்று மீண்டும் பறைசாற்றிய ஆண்டு.

இறுதியாக, மன்மோகன் சிங் உண்மையில் நேர்மையானவரா என்று மக்களை கொஞ்சம் சந்தேகப்பட வைத்த ஆண்டு.

Wednesday, 29 December 2010

இசை விமர்சகர்கள்

இசையை ரசிப்பதோடு நிற்காமல் அதைப் பற்றி தங்கள் கருத்துக்களை பதிவு செய்பவர்களை விமர்சகர்கள் எனலாம். இப்படி விமர்சனம் செய்ய இசையில் நல்ல ஞானம் வேண்டும். ஆனால், அவர்கள் இசையை தங்கள் தொழிலாக கொண்டிருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. இந்த பதிவு கர்நாடக இசை விமர்சகர்களை பற்றியது.

கர்நாடக இசை விமர்சகர்களில் முதன்மையானவர் காலம் சென்ற பி.வி.சுப்ரமணியம் என்கிற "சுப்புடு".சுப்புடுவின் விமர்சனத்துக்கு மறைந்த செம்மங்குடி சீனிவாச ஐயர் கூட தப்பிக்கவில்லை."எமர்ஜன்சி என்கிற கொடுமை கூட முடிவுக்கு வந்துவிட்டது ஆனால் செம்மங்குடிக்கு முடிவு வரவில்லை" என்ற சுப்புடுவின் விமர்சனம் 1970களில் மிகப் பிரபலம். ஒரு கட்டத்தில் செம்மங்குடி "நானும் வெட்கம் இல்லாம வருஷா வருஷம் பாடிண்டு இருக்கேன், நீயும் வெட்கம் இல்லாம வருஷா வருஷம் எழுதிண்டு இருக்கே" என்றார். "நாய்கள் மற்றும் சுப்புடுவிற்கு இங்கு அனுமதி இல்லை" என்று மியூசிக் அகாடமி 1980 களில் போர்டே வைத்தது.

சுப்புடு அளவிற்கு விமர்சனத்திற்காக புகழ் பெற்றவர்கள் யாருமில்லை என்றாலும், SVK,U.K, G.Swaminathan, Lakshmi Venkatraman, H.Ramakrishnan(வானமே எல்லை படத்தில் நடித்தவர்) போன்றவர்கள் இன்று கர்நாடக இசை விமர்சன உலகில் பிரபலமான பெயர்கள்.

இங்கே திரு.ராமகிருஷ்ணன் அவர்களை பற்றி கொஞ்சம் பேச வேண்டும். மாற்றுத் திறனாளியான இவர் செய்திருக்கும் சாதனைகள் பல. திருவையாறு தியாகராஜ ஆராதனை நிகழ்ச்சியில் ஒவ்வொரு வருடமும் பங்கேற்று மற்ற வித்வான்களை போல முழு மேடை கச்சேரி செய்பவர். மிருதங்கம்,கஞ்சிரா வாத்தியங்களை கற்றவர். கொன்னக்கோல் பயிற்சியும் பெற்றவர். ஸ்ரீ பைரவி கான சபா என்ற பெயரில் சென்னையில் சபா ஒன்றை அமைத்து இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.தமிழக அரசின் "கலைமாமணி" விருது பெற்றவர். நிகழ்ச்சி வழங்கியவரை ஊக்குவிக்கும் வகையிலேயே இவர் விமர்சனங்கள் இருக்கும். இன்றைய ஹிண்டுவில் கூட ஸ்ருதி சாகர் மற்றும் லக்ஷ்மி ரங்கராஜன் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளை விமர்சித்திருந்தார்.

மற்ற விமர்சகர்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவர்கள் விமர்சனங்களை படிப்பதோடு சரி.

Sunday, 26 December 2010

Cupid's Arrow - Insipid Show

பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் வகையில் மற்றுமொரு கமல் காமெடி. ஆனால், முன் சொன்ன படங்களின் அளவுக்கு நகைச்சுவையை எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள். தனக்கு கதையெழுத வரும், பாட வரும் என்று இனி யாருக்கு நிரூபிக்க நினைக்கிறார் கமல் என்று தெரியவில்லை. நல்ல வேளை, நடிப்பிலும் அதை செய்யாமல் மற்றவர்களுக்கு கொஞ்சம் வாய்ப்பளித்திருக்கிறார்.

கே.எஸ். ரவிக்குமார் சார், இந்த படத்துல நீங்க என்ன பண்றீங்க? நீங்க கமல் கூட கொஞ்ச நாள் சேராமல் இருப்பது உங்களுக்கு நல்லது. "You are losing your individuality". வழக்கம் போல் ரமேஷ் அர்விந்த், ஊர்வசி என்று கமல் லாயத்தை சேர்ந்தவர்கள். கொச்சின் ஹனீபா செய்திருக்க வேண்டிய பாத்திரத்திற்கு மலையாளத்தில் இருந்து மோகன்தாஸ் என்ற நடிகர். மாதவன், த்ரிஷா நடிப்பு பரவாயில்லை. சங்கீதாவிற்கு இது ஜுஜுபி ரோல்.

கௌதம் பாணியில் படம் முழுதும் ஆங்கில வசனங்களை அள்ளித் தெளித்திருக்கிறார்கள்(பதிவின் தலைப்பிற்கான காரணம் புரிந்ததா?). வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் படங்களின் பி மற்றும் சி வெற்றிகள் கமலுக்கு நம்பிக்கை அளித்திருக்க வேண்டும். இந்த நிலை வருங்கால கமல் படங்களில் தொடரலாம். நீல வானம் பாடலை பார்க்கையில் "பார்த்த முதல் நாளே" பாடல் நினைவுக்கு வராவிட்டால் நீங்கள் ஆசிர்வதிக்கபட்டவர்.

இசை, பாடல்கள் சுமார் ரகம். தமிழ் இனி மெல்லச் சாகும், அறம் செய்ய விரும்பு போன்ற standard கமல் வசனங்கள். matrimony, alimony என்று "கிரேசி" ஸ்டைல் காமெடி.

மொத்தத்தில் கமல் சார், "We need a break".

Thursday, 9 December 2010

கலைஞர் காமெடி - 3

"ராஜா குற்றம் செய்திருக்கிறார் என்று நிரூபிக்கப்பட்டால் அவர் மீது நடவடிக்கை" - கருணாநிதி


Tuesday, 7 December 2010

மன்மதன் அம்பு - கமல் கவிதை

எச்சரிக்கை: குழந்தைகளும், பெண்களும் இந்தக் கட்டுரையை படிக்க வேண்டாம்.

விளம்பர வியூகங்கள் பல வகைப்பட்டவை. அதே தொழிலாகக் கொண்ட, "மார்க்கெட்டிங்' பிரிவினர், புதுப்புது யோசனைகளை செயல்படுத்துவர். ஆனால், கலைத்தாயின் தாகத்தைத் தணிக்க வந்த தலைமகனான கமல்ஹாசனைப் போல வித்தியாசமாக சிந்திப்பவர்கள், இதுவரை தமிழகத்தில் பிறக்கவில்லை; இனி பிறக்க வேண்டியதும் இல்லை.

தான் நடித்த, "மன்மதன் அம்பு' என்ற படத்தின் பாடல்கள் அடங்கிய கேசட் வெளியீட்டு விழாவை சமீபத்தில் நடத்தினார் கமல். அதில் இடம்பெறும் ஒரு பாடலை, சதாவதானியான அவரே இயற்றியும் உள்ளார். பெண் ஒருத்தி, வரலட்சுமியிடம் வரம் கேட்கும் விதமாக அந்தக் கவிதையை அமைத்துள்ளார் கமல். அதை, புரட்சி நடிகை த்ரிஷாவின் வேண்டுகோளுக்கு இணங்க, அழுத்தம் திருத்தமாக, நடை, உடை, பாவனைகளோடு சொல்லிக்காட்டினார்.அந்தக், "கவிதை' இப்படி போகிறது:

கண்ணொடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கைகோர்த்தாளா
ஒழுங்கங் கெட்டவள் எச்சரிக்கை
ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
கலவி முடிந்த பின் கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை

உன்னுடன் இருப்பது சுகமென்றாளா
உறுதியாய்ச் சிக்கல் எச்சரிக்கை
அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாகக் கொள்
கூட்டல் ஒன்றே குறியென்றான பின்
கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்
உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்
யோசிக்காமல் வருவதை எதிர்கொள்
முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்
காமமெனப்படும் பண்டைச் செயலில்
காதல் கலவாது காத்துக்கொள்

கலவி செய்கையில் காதில் பேசி
கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும்
வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்
குழந்தை வாயை முகர்ந்தது போலக்
கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்
காமக் கழிவுகள் கழுவும் வேளையும்
கூட நின்றுவன் உதவிட வேண்டும்

வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென
வழங்கிப் புழங்கிட பணமும் வேண்டும்

இப்படிக் கணவன் வரவேண்டும் என
ஒன்பது நாட்கள் நோம்பு இருந்தேன்
வரந்தருவாள் என் வரலட்சுமியென
கடும் நோம்பு முடிந்ததும் தேடிப்போனேன் பீச்சுக்கு

தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன்
முற்றும் துறந்து மங்கையரோடு
அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்

மூத்த அக்காள் கணவனுக்கு
முக்கால் தகுதிகள் இருந்தும் கூட
அக்காளில்லா வேளையில் அவன்
காளத்தி வேண்டும் என்றான்

வரம்தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு
வீட்டுக்காரர் அமைந்தது எப்படி?
நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது?
உறங்கிக்கொண்டே இருக்கும் உந்தன்
அரங்கநாதன் ஆள் எப்படி?
பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும்
வாஸ்தவமாக நடப்பது உண்டோ?
அதுவும் இதுவும் உதுவும் செய்யும்
இனிய கணவர் யார்க்குமுண்டோ?
உனக்கேனுமது அமையப் பெற்றால்
உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்
நீ அதுபோல எனக்கும் அமையச் செய்யேன்
ஸ்ரீ வரலட்சுமி நமோஸ்துதே!

இதுதான் அந்தக், "கவிதை.'தமிழ் சினிமாவின் தரத்தை, "சர்வதேச லெவலுக்கு' உயர்த்தியே தீருவேன் என்பதில் கமல் எவ்வளவு உக்கிரமாக இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் தான், தான் நடிக்கும் படங்களில், பாத்ரூமில் உச்சா போகும் காட்சிகளையும், கதாநாயகியின் நாக்கைச் சுவைக்கும் காட்சியையும் தவறாமல் வைத்துவிடுவார். ஹாலிவுட் படங்களை வேறு எப்படி தான் அவரால் அசிங்கப்படுத்த முடியும்?இப்போது, "சர்வதேச லெவலையும்' தாண்டி, அடுத்த லெவலுக்கு கொண்டு போக எண்ணி, இந்தக் கவிதையைப் படைத்துள்ளார். காமம் முடிந்த பிறகு கரெக்டாக கழுவிக்கொள்ள வேண்டும் என கற்றுக்கொடுக்கிறார் கமல்.

"எய்ட்ஸ்' பிரசாரத்துக்கு இவரை விட சிறந்த ஆள், வேறெங்கு கிடைப்பார்?தன் காம வேட்கையைக் காட்டிக்கொண்ட மாதிரியும் ஆயிற்று; இந்துக் கடவுள்களை இழிவுபடுத்திய மாதிரியும் ஆயிற்று என, ஒரே கவிதையில் இரண்டு இலக்குகளை எட்டியுள்ளார் கமல்.இந்தக் கவிதையைப் படித்ததும் எண்ணற்ற கேள்விகள் மனதில் எழுகின்றன. கொஞ்சம் கோபமும் எட்டிப் பார்க்கிறது. நாகரீகமற்றவர்கள் முன் நாமும் நாகரீகமில்லாமல் செயல்படுவது நாகரீகமில்லை என்பதால், நாகரீகமாக அடக்கிக்கொள்கிறேன்.

நன்றி: தினமலர்

Monday, 6 December 2010

இன்றைய காமெடி

சென்னையில் இளைஞன் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கு கொண்ட கலைஞர், "படித்தவர்கள் கூட 1,76,000 கோடி ரூபாயை ஒருவன் கையாடல் செய்திருப்பான் என்று நம்புவது ஆச்சர்யமாக உள்ளது" என்று சொல்லியிருக்கிறார்.

ஏன் தாத்தா, நாங்க எப்போ ஒரு ஆள்னு சொன்னோம்? ஒரு குடும்பமா இதுல நீங்க ஈடுபட்டிருக்கீங்க அப்படின்னு தமிழ்நாட்டுக்கே தெரியும். இதை தவிர காங்கிரஸ் கட்சியில் சிலர் இதற்கு உடந்தை என்பதும் நிச்சயம்.

படிச்சவங்க நாங்க. அப்படியெல்லாம் ஒரு ஏழை தலித் மேல எடுத்தோம் கவுத்தோம்னு பழி போடுவோமா?

Wednesday, 1 December 2010

டிசம்பர் சீசன்

சென்னையில் மார்கழி இசை சீசன் துவங்கவுள்ளது. இன்றைய ஹிண்டு நாளிதழில் பெரும்பாலான சபாக்கள் தங்கள் நிகழ்ச்சி நிரலை வெளியிட்டுள்ளன. இணையத்தில் http://www.kutcheribuzz.com/ தளம் சபா/கலைஞர்கள் பெயர்கள் மூலம் தேடி நிகழ்ச்சிகள் பற்றி அறிய உதவி செய்கிறது.

Friday, 26 November 2010

டேய் லூசு வாசகனே

எங்கம்மாவை அவனும் அவங்கம்மாவை நானும் பச்சை பச்சையா திட்டுவோம். ஆனா, அதெல்லாம் அந்த ஒரு நிமிஷம் தான். அதை அப்பறம் மறந்துடுவோம். அவன் பொண்டாட்டி உள்ளாடைய கட்டிக்கிட்டு தூங்கறவன் அப்படின்னு ஒருத்தன் பதிவு எழுதினா அவனை பாராட்டுவேன். ஆனா, அதெல்லாம் சும்மா. உண்மை என்னன்னா "We have mutual Love & Hate feelings for each other".

அவனை மாதிரி பைத்தியக்காரனை உலகத்துலே பாத்ததே இல்ல அப்படின்னு சொல்லுவேன். ஆனா, அவன் கல்லூரி பேராசிரியரா ஆக வேண்டியவன் என்பதே உண்மை. அவனை மனுஷ ஜாதியிலேயே சேர்த்துக்க கூடாதுன்னு சொல்லுவேன். ஆனா, அவன் உண்மையில தெய்வம். Mummy Returns அப்படின்னு அவனை பற்றி பத்து பக்க கட்டுரை எழுதி அவன் எவ்வளவு கேவலமானவன் அப்படின்னு என் வாசகனுக்கு சொல்லுவேன். ஆனா, அதெல்லாம் அவன் மேல இருக்கிற அதீத அன்பு காரணமா எழுதினது. நம்மளுக்கு ரொம்ப பிடிச்சவங்கள தான "கொத்தா கொம்மா" அப்படின்னு திட்ட முடியும்.

அடேய் வாசக முண்டங்களா, நாங்க அடிச்சிப்போம் சேர்ந்துப்போம். உங்க "மா"நாவுக்கு என்ன? முடிஞ்சா மாசம் நூறு டாலர் பணம் அனுப்பு. உன்னை பற்றியும் புகழ்ந்து தள்ளறேன்.இல்லேனா நான் எழுதற "கிளு கிளு" விஷயத்த எல்லாம் படிச்சிட்டு மூடிட்டு வேலைய பாரு.

Monday, 22 November 2010

அனுவுடன் குளம்பியில் மீண்டும் பாலகுமாரன்

பதிவோட தலைப்பு சுத்த தமிழ்ல இருந்தா அரசு எதாவது 'விலக்கு' தருமோன்னு ஒரு நப்பாசை. அதான். சாரி, உங்க கடுப்பு புரியுது. மேட்டருக்கு வரேன். நேத்து நைட் Koffee with அனுவில் மீண்டும் எழுத்துச் சித்தருடன் சந்திப்பு. போன தடவை இல.கணேசன் இன்னொரு கெஸ்ட். இந்த தபா பாலகுமாரன் சார் மகன் திரு.சூர்யா பாலகுமாரன். நல்லவேளை, அவரை நிறைய கேள்வி எல்லாம் கேட்காம விட்டாங்க அனு.

தனக்கு பிடித்த பாடல்கள், யோகி ராம் சுரத் குமார் பற்றி எல்லாம் நிறைய சொன்னாரு பாலா சார். அவர் புத்தகங்களை படிக்கிற என்னை மாதிரி ஆளுங்களுக்கு அதெல்லாம் புதுசு இல்ல. நிகழ்ச்சி முடியும் போது "Secret of Success" அப்படின்னு நிஜமாவே ஒரு விஷயம் இருந்தா உங்களுக்கு அது என்னன்னு கேட்டாங்க அனு. 'குறைந்த உணவு, குறைந்த தூக்கம், குறைந்த பேச்சு' மூணும் தான் அப்படின்னாரு நம்ம பாலகுமாரன். அதோட சார் முடிச்சிருந்தா இந்த பதிவே எழுதி இருக்க மாட்டேன். அடுத்ததா,

"தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று"

அப்படின்னு வள்ளுவர் குறளை சொல்லிட்டு, தோன்றனும் அப்படின நான் சொன்ன மூணு விஷயங்கள் தேவை என்றார் பாலா. அவர் சொன்ன மூணு விஷயங்கள் நல்லது தான். ஆனா, புகழ் பெறாதவன் எல்லாம் தோன்றாமை நன்று அப்படின்னு எப்படி சொல்லலாம்?

இப்போ சுஜாதா பாருங்க. பழமொழியை அனுபவிக்க மட்டும் செய்யாம ஆராய்ச்சி பண்றாரு. திருக்குறள் புதிய உரை புத்தகத்தில் சுஜாதா அந்த குறளுக்கு கொடுத்திருக்கும் விளக்கம் கீழே.

"தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று."

என்கிற வினோதமான குறளிலும் பலர், 'பிறந்தால் புகழோடு பிறக்க வேண்டும் இல்லாவிட்டால் பிறக்காதே' என்று மனிதனாகவோ மண்புழுவாகவோ பிறப்பது நம் கையில் இருப்பது போலத்தான் அர்த்தம் சொல்லியிருக்கிறார்கள். பரிமேலழகர் "இல்லையேல் மிருகமாகப் பிற" என்று கூடக் கடிந்து சொல்லியிருக்கிறார்.

புகழை நாம் எப்படி 'அட்வான்ஸ் புக்கிங்' செய்ய முடியும்? இந்த காலத்துக்கு எவ்விதத்திலும் பொருந்தாத குறள். மற்ற குறட்பாக்களின் எளிமையான தர்க்க வாதங்களுடன் இடிக்கும் குறள். "தோன்றுவது" என்பது "பிறப்பது" என்று கொள்வதினால் வரும் சிக்கல் இது. அதற்கு பதிலாக அதைச் சபையில், ஒரு மேடையில் அல்லது கூட்டத்தில் தோன்றுவதாகக் கொண்டால் இந்த குறள் புதிய ஜீவன் பெறுகிறது. 'எந்தச் சபையிலோ மேடையிலோ தோன்றினாலும். அதற்கு ஏற்ற புகழ் இருந்தால் தோன்றுவது.இல்லாவிட்டால் சும்மா இரு' என்கிற அர்த்தம் நான் கொண்டது.


கலக்கிட்ட வாத்யாரே.

Thursday, 18 November 2010

FIITJEE

இன்று காலை ஹிண்டுவில் "FIITJEE" விளம்பரம் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் கூட IIT பயிற்சியில் சேரலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தை IIT பயிற்சி வகுப்பில் என்ன செய்யும்? இன்னும் சில வருடங்களில் LKG மாணவர்களும் சேரலாம் என்று சொல்வார்களோ என்னவோ...

Sunday, 7 November 2010

வாலி, சுஜாதா

பொதிகையில் வாலி தன் பால்ய கால நினைவுகள் பற்றி பேசும் போது ஸ்ரீரங்கத்தையும் சுஜாதாவையும் குறிப்பிட்டார். கேட்டவுடன் சுஜாதா பற்றிய நினைவுகள் பீறிட, கற்றும் பெற்றதும் எடுத்து புரட்டிக் கொண்டிருந்தேன். அதிலிருந்து ஒரு பகுதி.

வாலியின் "பாண்டவர் பூமிக்கு" பாராட்டு விழ மூப்பனார் தலைமையில் பாரதிய வித்யா பவனில் நடந்தது. நான் போனபோது, உள்ளே நுழைய முடியாதபடி கூட்டமாக இருந்ததால் கற்பகாம்பாள் மெஸ்ஸில் காபி சாப்பிட்டுவிட்டு மெரீனாவில் வாக் போகும் போது வாலியை பற்றிய நினைவுகளில் ஆழ்ந்தேன்.

வாலி என் சிறு வயது ஸ்ரீரங்கத்து சிநேகிதர். என் அண்ணன் கிச்சாயிக்கு கொஞ்சம் சீனியர். மேலச்சித்திரை வீதிக்காரர். அவரை நான் கெடிகார ராமையாவின் வீட்டில் ஜனனி சீனிவாசனை சந்திக்க வரும் போது பார்த்திருக்கிறேன். கொஞ்சம் ஜூனியர் என்பதால் எங்களையெல்லாம் அவர்கள் இலக்கிய சர்ச்சையில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். வாலியை பற்றி அதிகம் அறியப்படாத இரண்டு விஷயங்கள்...அவர் பெயரும் ரங்கராஜன், நன்றாக படம் என்பதே(ஆர்ட் ஸ்கூலில் படித்ததாக படித்த ஞாபகம்). எங்கள் "தென்றல்" கையெழுத்துப் பத்திரிகைக்குள் ஒரு மலர் போட்ட போது அவர் வரைந்த சித்திரம் எனக்கு ஞாபகம் இருக்கிறது.

நாங்கள் பகுதி நேரத்தில் தான் இலக்கியமும் கலையும் பேசினோம். வாலி அப்போதே எதாவது சாதிக்க வேண்டும் என்கிற வைராக்கியத்திலே இருக்கிறார். ஸ்ரீரங்கம் ஹைஸ்கூலில் நாடகம் போடுவார். திருச்சி வானொலி நிலையத்திற்கு நாடகங்கள் எழுதுவார், நடிப்பார். அப்போதே பாடல்களும் எழுதி இருக்கலாம். பின்னர் சென்னை சென்று கிருஷ்ணா பிக்சர்ஸ், கே.எஸ்.ஜி போன்றவர்களின் ஆரம்ப ஆதரவுடன் கஷ்டப்பட்டு முன்னேறியதை "புதியபார்வையில்" விஸ்தாரமாக எழுதியிருக்கிறார்.அந்த நாட்களில் அவருடன் எனக்கு தொடர்பு விட்டுப் போனது.

டெல்லியில் இருக்கும் போது "கற்பகம்" படத்தில் "அத்தைமடி மெத்தையடி" என்று தாலாட்டுப் பாட்டு மூலம் அவர் முதலில் பிரபலமானது('டேய், இவரை எனக்கு தெரியுமடா' வகையில்) பெருமையாக இருந்தது. கண்ணதாசன் கொடிகட்டிப் பறந்த காலத்திலும் தனக்கென அடையாளம் தேடிக்கொண்டதும், எம்.ஜி.யாரின் நாட்களில் ஏறக்குறைய கழகத்துக் கொள்கை விளக்கமாக "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்" போன்ற எளிய பாடல்கள் எழுதியதும், அரசியல் மாறுதல்களை எதிர்ப்பார்த்தோ என்னவோ..அந்த மூன்றெழுத்தும் கடமை என்று பின்குறிப்பிட்டதால் அந்தப் பாட்டு காலம் கடந்ததும், கண்ணதாசனுக்கு பின் திரை இசையில் மற்ற கவிஞர்கள் கொண்டு வந்த மாறுதல்களையும் மக்கள் ரசனையில் ஏற்ப்பட்ட திருப்பங்களையும் சமாளித்துத் தான் தாடி வளர்த்தாலும் தன் பாடல்களுக்கு தாடி வளராமல் பார்த்துக் கொண்டதும், மகாதேவனில் இருந்து ரஹ்மான் வரை தாக்குப்பிடித்ததும் மரத்தான் கவிஞர் வாலியின் சாதனைகள்.

புதுக்கவிதையும் மரபுக்கவிதையும் இல்லாத, பகுதி நேர எதுகைகள் கொண்ட ஓர் எளிய கவிதை வடிவத்தை தனக்கே அமைத்துக்கொண்டார். அதன் லேசான சந்தத்துடன் ராமாயண, மகாபாரதங்களை எழுதியது அவர் வாழ்வின் முத்தாய்ப்பான சம்பவங்கள். வாலியின் இதிகாச முயற்சிகளை நம் நாட்டுப்புறக் கதை பாடல்களுக்கு ஒப்பிடத் தோன்றுகிறது. புராணக் கதைகளைக் காவிய வடிவில் சொல்லாமல் இன்றைய உடனடி தமிழனும் புரிந்து பகிர்ந்து கொள்ளும்படி, கொச்சைப்படுத்தாமல் எளிமைப் படுத்தியிருக்கிறார். இந்த முறை நம் பாரம்பரியத்தில் உள்ளதே. "ஐவர் ராசாக்கள் கதை" போன்ற நம் நாட்டார் கதைப் பாடல்கள் இதையேதான் செய்தன.

ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்
தாழ் இருஞ் சடைகள் தாங்கி, தாங்க அருந்தவம் மேற்கொண்டு
பூழி வெங் கானம் நண்ணி புண்ணியத் துறைகள் ஆடி,
ஏழ்-இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினான் அரசன்

என்று கம்பம் விஸ்தாரமாக அறுசீர் விருத்தத்தில் சொன்னதை "பரதனுக்கு ராஜ்யம், ராமனுக்கு பூஜ்யம்" என்று இரண்டே வரிகளில் சொன்னார் வாலி. வாழ்த்துக்கள்.

தீபாவளி நிகழ்ச்சிகள்

பொதிகை தவிர்த்து மற்ற சேனல்கள் விளம்பரங்களுக்கு நடுவில் சில நிகழ்ச்சிகளை "சான்ட்விச்" செய்திருந்தன என்றே சொல்ல வேண்டும். பொதிகையில் கவிஞர் வாலியின் பேட்டி ருசிகரம். அரங்கில் இருந்த இளைஞர்/யுவதிகள் கேள்வி கணைகள் தொடுக்க வாலி அனாயாசமாக அவற்றை கையாண்டார். நீங்கள் மூன்று தலைமுறைகளாக எழுதி வருகிறீர்கள், இந்த மூன்று தலைமுறையில் உங்கள் பாடலுக்கு சிறப்பாக நடித்த நடிகர்களை சொல்லுங்கள் என்றார் ஒரு பெண். யோசைனையே செய்யாமல் சிவாஜி என்றார். தற்போது கமலை சொல்லலாம் என்றார். தனக்கு வாலி என்ற பெயரை வைத்துக்கொண்ட காரணத்தையும் அதோடு தொடர்புடைய நகைச்சுவையான நிகழ்ச்சி ஒன்றையும் குறிப்பிட்டார். ஒரு விளம்பரம் கூட இல்லாமல் பார்க்க முடிந்த நிகழ்ச்சி.

பொதிகையில் இருந்து தாவி அப்படியே "Koffee with Anu" பக்கம் சென்றால் சிறுப்பு விருந்தினர் நம்ம கமல். சித்தப்பாவை பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார் அனு. ஆனால், அந்த சாயலே இல்லாமல் ஒரு விருந்தினர் போலவே கேள்விகள் இருந்தன. வழக்கம் போல் கமல் முடிவில் நாத்திக பிரச்சாரம் செய்தார். "மக்களின் தெய்வங்கள்" என்ற நூலை குறிப்பிட்டார் கமல். ஆனால் அதை எழுதியவரின் பெயரை கவனிக்க தவறிவிட்டேன். இந்தப் பதிவை படிப்பவர்கள் தெரிந்தால் கூறவும். புகைப்படங்கள் பகுதியில் சிறப்பாக இருந்தது. அதே போல் கமலை ஒரு கவிஞனாய் வைரமுத்து, பேராசிரியர் ஞானசம்பந்தன், வாலி போன்றவர்கள் பாராட்டினார்கள். அந்த பகுதிக்கு முத்தாய்ப்பாய் ஞானசம்பந்தன் "கல்லும் சொல்லாதோ கதை" என்று ஒரு வரியை சொல்லி அதில் கமலை ஒரு வெண்பா புனைய சொல்ல, கமலும் கலக்கினார். ஒரு திரைக்கதை வல்லுனராய் கமல் பற்றி கே.பி பேசினார். கே.பி திரைக்கதைக்கு நரி, காக்கா, வடை கதையை வைத்து சொன்ன உவமை அற்புதம்.

மதியம் ஜெயா தொலைக்காட்சியில் பேராசிரியர் ஞானசம்பந்தன் கமலை சந்தித்து தமிழ் குறித்து உரையாடினார். ஞானசம்பந்தன் கமலை அளவுக்கு மீறி புகழ்ந்ததும் கமலின் "மொக்கையும்" தாங்க முடியாததால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் அதை பார்க்க முடியவில்லை.மீண்டும் ஜெயாவில் மாலை நான்கரை மணிக்கு "Kings in Concert" நிகழ்ச்சி. ஹரிஹரனும் ஷங்கர் மகாதேவனும் பின்னிப் பெடலேடுத்தார்கள். "கண்டேன் காதலை" படத்தின் "கொக்கே கொக்கே பூவை போடு" பாடலின் அந்த "ஓஓஓஓ" ஸ்வரத்தை ஹரிஹரன் பாடியதை பார்த்தவர்கள் பாக்கியவான்கள்.

Thursday, 21 October 2010

மும்பையில் ஒரு நாள்

இன்று காலை பணி காரணமாக மும்பை வந்தேன். மாலை ஆறு மணிக்கு சென்னை விமானம். இன்று ஒரு நாளில் மும்பையில் கவனித்தவை.

1. டெல்லியை போல மும்பை Taxi ஓட்டுநர்களுக்கும் செல்லும் இடத்தை பற்றிய விபரம் தெரியவில்லை. நம்ம சென்னை ஆட்டோ/டாக்சி மக்கள் எல்லாம் கில்லி.

2. மடிப்பாக்கத்தில் இருந்து வடபழனி செல்லும் தூரத்திற்கு மும்பை ஆட்டோவில் வெறும் 85 ரூபாய். நம்மூரில் குறைந்த பட்சம் முன்னூறு கறந்து விடுவார்கள்.

3. மும்பை பெண்களை பார்க்கும் போது சென்னை "பட்டிக்காடு" என்றே சொல்ல தோன்றுகிறது. சும்மா பட்டையை கிளப்புகிறார்கள்.

4. வெளிநாடுகளுக்கு இணையாக கட்டப்பட்டிருக்கும் "Mall" எனப்படும் வெவ்வேறு அங்காடிகள் நிறைந்த பல மாடி கட்டிடங்கள்.

5. சாலை பராமரிப்பு படு மோசம். நான் சென்ற பெரும்பாலான சாலைகள் "வேலை நடைபெறுகிறது" என்ற அட்டையுடன் பாதி தூரத்திற்கு அடைக்கப்பட்டிருந்தது.

6. Lexus, Benz, Outlander என்று எங்கு பார்த்தாலும் வெளிநாட்டு கார்கள். இந்தியாவின் பணக்கார நகரம் இது தான் என்று நினைக்கிறேன்.

7. மேலே சொன்னதற்கு எதிர்மறையாக எந்த சிக்னலில் நின்றாலும் பிச்சை எடுக்கும் "slumdog" குழந்தைகள்.

8. பொறுமையை சோதிக்கும் போக்குவரத்து நெரிசல்.

Saturday, 2 October 2010

இன்ப வேதனை

நீண்ட நாட்களுக்கு முன் குமுதம் அரசு பதிலில் வந்த கேள்வி பதில் :

கேள்வி : 'இன்ப வேதனை' என்றால் என்ன?
பதில்: காசு குடுத்து சிறு நீர் கழிப்பது!

Monday, 20 September 2010

சிங்கம், புலி, சிறுத்தை

கார்த்தி நடிக்கும் புதிய படம் ஒன்றிற்கு "சிறுத்தை" என்று பெயரிட்டுள்ளார்கள். முதலில் சூர்யா நடிப்பில் சிங்கம் வந்தது. அதற்கும் முன்பே S.J.சூர்யா இயக்கத்தில் விஜய் "புலி" என்றொரு படம் நடிப்பதாய் இருந்தது. விஜய் அந்த கதை பிடிக்கவில்லை என்று நிராகரிக்க, இதே படத்தை தெலுங்கில் எடுத்து வெற்றி பெறுகிறேன் பார் என்று இயக்குனர் S.J.சூர்யா பவன் கல்யாண் நடிப்பில் "கொமறம் புலி" என்று எடுத்து சென்ற வாரம் ரிலீஸ் செய்தார். வந்த வேகத்தில் பொட்டிக்கு போய்விட்டது படம். இப்போது சிறுத்தை. சிறுத்தை வெற்றி பெற்றால் அடுத்து ஓநாய், நரி, யானை என்று வரிசையாக வரும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

திரைப்படங்களுக்கு விலங்குகள் பெயரிடுவதை பற்றி பேசும் இந்த வேளையில், விலங்குகளுக்கு மனிதர்களின் பெயரை சூட்டி மகிழ்ந்திருக்கிறார் நம் முதல்வர். வண்டலூரில் புதிதாக பிறந்த ஆண் புலிக்குட்டிக்கு "செம்பியன்" என்றும் இரண்டு பெண் புலிக்குட்டிகளுக்கு "இந்திரா", "வள்ளி" என்று பெயரிட்டுள்ளார். பாவம் புலிகள்.பெயர் வைத்ததற்காக கலைஞருக்கு பாராட்டு விழா எடுக்காவிட்டால் விரைவில் "புட்டத்தில் கடித்த புலிகள்" என்ற தலைப்பில் முரசொலியில் ஒரு கவிதை வரும்.

Sunday, 12 September 2010

சாரு வெளிநாட்டுக்கு போகிறார்

சாரு சீக்கிரம் வெளிநாடு போக போகிறார்! இதுவரை 2 பதிவில் அவர் புகார் கூறிவிட்டார்..இதே போல் முன்பு கையில் பணம் இல்லை என்று புலம்பி இப்போது எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறார் , பிறகு நான் வசதியாக இருந்து என்ன பிரயோஜனம் ...புத்தகங்கள் விற்கவில்லையே என்று புகார் கூறினார்..இப்போது "Pyramid of needs" படி வெளிநாடு போக முடியவில்லை என்று புலம்பல்.இந்த ஜெயமோகன் வேறு எப்போ பார்த்தாலும் வெளிநாடு போய் வயத்தெரிச்சல் கொட்டிகொள்கிறார்..

ஆகவே மகாஜனங்களே தலைவர் சீக்கிரம் அமெரிக்கவோ , மலேசியாவோ , ஐரோப்பவோ பறக்க போகிறார்.. பல ஜில்பான்ஸ் பதிவுகளை சாருவிடமிருந்து எதிர்பாருங்கள்...(இங்கேதான் இதுக்கு பேரு பஸ்சு ,
அமெரிக்காவில இதுக்கு பேரு குப்பை லாரி..)

Thursday, 9 September 2010

கெட்ட வார்த்தைகள்

கெட்டவார்த்தைகளைப் பற்றி நம்முடைய மனப்பதிவுகள் நம் பெற்றோரால் சிறுவயதில் ஒழுக்க நடத்தை சார்ந்து கற்றுக்கொடுக்கப்பட்ட நிலையில் உள்ளன. சமூக உளவியலைக் கொஞ்சம் கவனித்து அவற்றைப்பற்றி ஆராய்ந்தால் மேலும் பலவகையான புரிதல்களை நோக்கி நம்மால் செல்ல முடியும். ஒரு சமூகத்தில் கெட்டவார்த்தைகள் எப்படி உருவாகின்றன, ஏன் நீடிக்கின்றன?

என் நேரடி மனப்பதிவுகளை மட்டுமே நம்பி இதை விவாதிக்க விரும்புகிறேன். நடைமுறையில் கெட்டவார்த்தைகள் இரண்டு தளங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்று, கோபம், வெறுப்பு, கசப்பு முதலியவற்றை வெளிக்காட்டுவதற்காக. இரண்டு, கிண்டல், கேலி, நகைச்சுவைக்காக. இரண்டிலும் ஒரு பொதுத்தன்மை உள்ளது. கெட்டவார்த்தைகள் எப்போதுமே நேர்நிலையான ஒரு சமூகநிலைக்கு எதிரான எதிர்மறை வெளிப்பாடாக உள்ளன.

சமூகத்தின் எந்த ஒரு இயக்கத்தையும் நேர் எதிர் சக்திகளின் முரணியக்கமாக புரிந்துகொள்வது ஒரு உபயோகமான கருவி. சமூக இயக்கத்தின் நேர்சக்தி என்பது அறம், ஒழுக்கம், விழுமியம் என்றெல்லாம் சொல்லப்படும் சீரமைக்கும் முறை. அதற்கு எதிரான மீறல் அதற்கு எதிர்சக்தியாகச் செயல்படுகிறது. நேர்ச்சக்தி இருந்தால் எதிர்சக்தி இருந்தே தீரும். அது இயற்கையான இயக்கவியல்.

சமூகச் சீராக்கம் என்னும் நேர்ச்சக்தியின் அழுத்தம் எப்போதுமே வன்முறை கலந்தது. அந்த அழுத்தத்தை எதிர்கொள்ளும் எதிர்ச்சக்தி தன் வன்முறையை சொல்லில் ஏற்றிக்கொள்கிறது. கெட்டவார்த்தைகளைக் கூர்ந்து கவனித்தால் சீர்முறையின் மீறல் என்பதே கெட்டவார்த்தையாக உருவம் கொள்கிறது என்பதைக் காணலாம்.

உதாரணமாக கேரளத்தில் மயிர் என்றால் கெட்ட வார்த்தை. அந்தரங்கமயிரை இது குறிக்கும். முடி என்றால் நல்ல வார்த்தை. ஆக, உடலில் ஒருபகுதியை வெளியே காட்டக்கூடாது, அதைப்பற்றிப் பேசக்கூடாது என்ற சமூகச் சீராக்கத்தின் விதிக்கு எதிரான ஒரு மீறலே இங்கே கெட்டவார்த்தையாக ஆகிறது.

நூற்றுக்கு தொண்ணூறு கெட்டவார்த்தைகள் வரைமீறிய பாலுறவைச் சார்ந்தவை. நம் சமூகசீராக்கத்தின் மிகமுக்கியமான, மிகக் கடுமையான விதி என்பது தாயுடனான பாலுறவை தடைசெய்தல்தான். ஆகவே கெட்டவார்த்தைகளில் தாயோளி போன்ற வார்த்தைகள் பெரிதும் புழங்குகின்றன. இதற்கு அடுத்தபடியாக அக்கா தொடர்பானவை. தாயின் அந்தரங்க உறுப்புகள் தொடர்பான சொற்கள் கெடவார்த்தையாக ஆவது அவற்றை எண்ணவும் பேசவும் சமூகத்தடை இருக்கிறது என்பதனாலேயே.

தந்தைவழிச் சமூகம் உருவானபோது தாயின் கற்பு முக்கியமான ஒரு சமூக நெறியாகியது. அதைத்தொடர்ந்தே முறையான தந்தை இல்லாதவன் என்ற வசை கடுமையான ஒன்றாக ஆகியது. புராதன தாய்வழிச்சமூகமான கேரளத்தைப்பற்றி ஆராய வந்த மேலைநாட்டவரான எட்கார் தர்ஸ்டன் அங்குள்ள மக்கள் ‘பாஸ்டர்ட்ஸ்‘ என்றார். அவர் அதை வசையாகக் கண்டாலும் அந்த மண்ணில் அது வசையாக இல்லை. அங்கே ஒருவரின் அடையாளம் தாய் வழியாகவே. தந்தை பெயர் தெரியாமல் இருப்பது ஒரு தவறே அல்ல. தாயின் குடும்பவழியின் பெயர் தெரியாமல் இருந்தால்தான் கேவலத்திலும் கேவலம். ‘தறவாடித்தம்‘ இல்லாமை.

ருஷ்ய இலக்கியம் ‘போரும் அமைதியும்‘ நாவலை மொழியாக்கம் செய்தபோது டி.எஸ்.சொக்கலிங்கம் ‘சோரபுத்திரன்‘ என்ற சொல்லை பயன்படுத்துகிறார். பியரி அவன் அப்பாவுக்கு சோரபுத்திரன். ஆனால் அங்கே அது வசை அல்ல. அவன் ஒரு பிரபு முறையாக கல்யாணம் செய்யாத பெண்ணுக்குப் பிறந்தவன், அவ்வளவுதான். ஆனால் தமிழ்நாடு போன்ற தந்தைவழிச் சமூகத்தில் அது கொலைக்குக் காரணமாக அமையும் கெட்டவார்த்தை.

பலசொற்கள் எப்படி கெட்டவார்த்தை ஆகின்றன என்பது ஆச்சரியம் அளிப்பது. ‘பொறுக்கி‘ என்பது ஒரு கெட்டவார்த்தை. உற்பத்திசெய்யாமல் திரட்டி உண்ணும் வாழ்க்கை மேல் உள்ள இழிவுணர்ச்சியின் வெளிப்பாடு. ‘செற்றை‘ என்பது குமரிமாவட்டத்தமிழின் கெட்டவார்த்தை. அதன் பொருள் ஓலைவேய்ந்த குடில். அதாவது அஸ்திவாரம் அற்றவன். வீடற்றவன். பண்பாடு அற்றவன். எரப்பாளி என்பதும் கெட்டவார்த்தை. இரப்பவன்.

‘போடா புல்லே‘ என்று கெட்டவார்த்தை உண்டு குமரி மண்ணில். கொஞ்சம் அசந்தால் புல்வந்து மூடும் மண்ணில் அது ஒரு வசை. ஆனால் தன்னை புல் என்று சொல்லிக்கொள்வது குஜராத்தில் ஒரு பெருமை. திருணமூல் காங்கிரஸ் என்றால் புல்வேர் காங்கிரஸ் என்று பொருள். தமிழகத்தில் இப்போதுகூட ஒரு உயர்சாதிக்காரனை கீழ்சாதிப்பெயர் சொல்லி வசைபாடினால் அது கெட்ட வார்த்தையாகவே கருதப்படும். சாதியே கெட்டவார்த்தை ஆகிறது இங்கு.

வடிவேலு தமிழில் புகழ்பெறச்செய்த கெட்டவார்த்தைகள் பல. நாதாரி என்றால் மதுரைப்பக்கம் பன்றிமேய்க்கும் போயர்களைக்குறிக்கும் சொல். அவர்கள் புகார்செய்ததை அடுத்து அதை தணிக்கைத்துறை தடைசெய்தது. எடுபட்ட பயல் என்றால் பேதிநோய் வந்து பொட்டலமாகக் கட்டி எடுக்கப்பட்ட சடலம் என்று பொருள்.

கொடூரமான நோய்கள் வேட்டையாடிய காலத்தில் நோய்கள் சார்த கெட்டவார்த்தைகள் உருவாயின. குமரிமாவட்டத்தில் நீக்கம்பு, குரு என்னும் கெட்டவார்த்தைகள் முறையே காலரா மற்றும் சின்னமையைக் குறிக்கின்றன. பேதிலபோவான், கழிச்சிலிலே போவான் போன்ற வசைகள் தமிழ்நாட்டில் பிரபலம். பிளேக் பற்றிய கெட்டவார்த்தைகள் தமிழில் இல்லை

நாம் கெட்டவார்த்தையாக நினைக்கும் பல சொற்கள் பலதளங்களில் புழங்கிய சொற்களே. உவத்தல் [ மகிழ்தல்] என்ற தூய தமிழ்ச்சொல் ”ஒத்தா” ஆக சென்னைத்தெருக்களில் தினமும் அடிபடுகிறது. அடையாளம் என்பதற்கான தூய தமிழ்ச்சொல் புண்டை. அது பெண்குறியையும் சுட்டுகிறது. எஸ்.வையாபுரிப்பிள்ளை அதற்கு அவரது பேரகராதியில் அர்த்தமும் கொடுத்திருக்கிறார். அதாவது வைத்தியம் முதலியவற்றின் புழங்கிய சாதாரண சொல் அது. இப்போது கெட்டவார்த்தையாக ஆகிவிட்டது. புண்டரம் என்றால் விபூதி ,குங்குமத்தால் போடப்படும் திலகம். ஊர்த்துவபுண்டரம் என்றால் நாமம். திரிபுண்டரம் என்றால் முப்பட்டை விபூதி. புண்டரீகம் என்றால் தாமரை. புண்டரிகை என்றால் மகாலட்சுமி.

நாயே என்றால் ஒரு இனிய அற்புதமான மிருகத்தின் பெயர். ஆனால் சிலருக்கு அது வசை. இந்துக்களுக்கு பன்றி விஷ்ணு அவதாரம். இஸ்லாமியர்களுக்கு அந்த மிருகத்தின் பெயரே ஒரு கெட்டவாத்தை. ஆங்கிலத்தில் பிருஷ்டம் மலம் போன்ற சொற்கள் கெட்டவாத்தையாக உள்ளன. சம்ஸ்கிருதத்தில் கெட்டவார்த்தையே இல்லை. ஏனென்றால் அதை மக்கள் பேசவில்லை. எல்லாவற்றுக்கும் அங்கே வார்த்தைகள் உள்ளன. ஆனால் அவற்றை வசைபாட பயன்படுத்தும்போதே அவை கெட்ட்வார்த்தை ஆகின்றன

சமூக வரைமுறைகளை மீறுவது ஒழுக்கக் கேடு. அது சொற்கள் மூலமானாலும். எனவே கெட்டவார்த்தைகள் ஒரு நாகரீக சமூகத்தில் எப்போதும் தடுக்கப்பட்டே இருக்கும். ஆனால் கெட்டவார்த்தைகளை முழுக்க தடுக்க முடியாது. ஓர் எல்லைவரை அனுமதித்தும் ஆகவேண்டும். வசைகள் மூலம் எவ்வளவோ அழுத்தங்கள் சமன்செய்யப்பட்டுவிடுகின்றன.

கெட்டவார்த்தைகள் நகைச்சுவையுடன் கையாளப்படுவது இதன் அடுத்த கட்ட நீட்சி. அதுவும் வரைமுறைகளை மீறும் ஒருசெயல்தான். அதன்மூலம் ஒருவகையான சுதந்திரம் கொண்டாடப்படுகிறது. சமூக அதிகாரத்தின் அழுத்தம் உடைக்கப்படுகிறது. எந்தெந்த மனிதர்களிடம் கெட்டவார்த்தைகள் வேடிக்கையாக அதிகம் புழங்குகின்றன என்று பார்த்தால் தெரியும். கடுமையான உடலுழைப்புடன் கட்டுப்பாட்டுக்குள் வேலைசெய்ய நேரும் மக்கள். மற்றும் பெரியவர்களின் கண்காணிப்பை சற்றே தவிர்க்க ஆரம்பிக்கும் இளைஞர்கள். நீங்களும் நானும் பதினைந்து வயதில் கெட்டவார்த்தைகளை பிறர் சொல்ல கேட்டு சிரிக்க ஆரம்பித்திருப்போம்.

குமரி நெல்லை மாவட்டங்களில் கிண்டலாகவும் நக்கலாகவும் கெட்டவார்த்தைகளை போடுவது சாதாரணம். காரணம் இங்குள்ள அன்றாட உரையாடலில் எப்போதுமே இருந்துகொண்டிருக்கும் கிண்டல்தான். இந்தக் கிண்டல் வழியாகத்தான் பலவகையான சமூக அகழிகள் தாண்டப்படுகின்றன. குமரிமாவட்டத்தில் சாதிப்பிரிவினை உண்டு. ஆனால் கிண்டல் நக்கல் வழியாக அதை தாண்டிச்செல்வதைக் காணலாம். புலையர்கள் இங்கே சாதாரணமாக நாயர்களையும் நாடார்களையும் கிண்டல்செய்வார்கள். சின்னப்பையன்கள் அருகே நின்றால் முகம் சிவந்துபோகும்.

நெல்லையில் நாயக்கர்களுக்கும் ராவுத்தர்களுக்கும் இடையேயான உறவும் இதைப்போலத்தான் என்பதைக் கவனித்திருக்கிறேன். கிண்டல்செய்து கண் பிதுங்கவைப்பார்கள். நாயக்கர்களும் ராவுத்தர்களும் மாறி மாறி மாமா முறை போட்டு கூப்பிடுவதைக் கவனித்திருக்கிறேன். அதன் பின் ”…வாரும்வே முக்காலி ” என்று நாயக்கர் கூப்பிடுவார். ”நம்ம தங்கச்சி நாமக்காரி எப்டிவே இருக்கா” என்பார் ராவுத்தர். நாமம் என்றால் குறியீட்டுப்பொருள். நாயக்கர்களும் முஸ்லீம்களும் முந்நூறு வருடம் போரிட்டுவந்தவர்கள் என்ற பின்னணியில் இந்த உரையாடலில் உள்ளது மிக ஆக்கபூர்வமான ஒரு வரம்புமீறல்.

இத்தகைய நகைச்சுவை இல்லாத வடமாவட்டங்களில் உக்கிரமான நேரடியான சாதிக்காழ்ப்புகள் இருப்பதை நான் தர்மபுரியில் இருக்கும்போது கண்டிருக்கிறேன். நட்பார்ந்த கிண்டலும் நக்கலும் ஒரு சமூகம் வரலாற்றில் இருந்து பெற்றுக்கொண்ட பிளவுகளை மழுங்கடிக்க மிகவும் இன்றியமையாதவை.

சமூக ஒழுங்குகள் எப்படி பாரம்பரியமாக கைமாறப்பட்டு நெறிகளாக முன்வைக்கப்படுகின்றனவோ அதேபோலத்தான் இத்தகைய சாதி-சமயக் காழ்ப்புகளும் வரலாற்றில் உருவாகி கைமாறபப்ட்டு நெறிகள்போலவே அளிக்கப்படுகின்றன. ஆகவே காழ்ப்புகளை மீறிச்செல்லும்போது கூடவே நெறிகளும் மீறப்படுகின்றன.

குமரிமாவட்டத்திலும் நெல்லையிலும் மொத்த தமிழ்நாட்டில் எங்குமே இல்லாத ஒரு சமூக நட்புணர்வு இருந்து வந்தது — சாதி மத அரசியல் தலையெடுக்கும் காலம் வரை. அந்த நட்புணர்வும் சமத்துவமும் உருவானதும் நீடித்ததும் ‘கெட்ட வார்த்தைகள்‘ வழியாகத்தான். ஆகவே சாதிமத அரசியல் அளவுக்கு ஆபாசமானதாக நான் கெட்ட வார்த்தைகளைக் கருதவில்லை.

மேலும் கெட்டவார்த்தைகள் எல்லா சமூகங்களிலும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு நிபந்தனையுடன் — சொல்லிச்சொல்லி அவை தேய்ந்துபோயிருக்க வேண்டும்! கேட்டால் அது கெட்டவார்த்தையாகவே காதுக்குப் படக்கூடாது. பலவருடங்கள் முன்பு நானும் நண்பரும் சில்வெஸ்டர் ஸ்டாலோன் நடித்த ஒரு படம் பார்த்தோம். அதில் ஸ்டாலோன் ‘·பக்‘ என்ற வார்த்தையை தவிர்த்து நாலைந்து வார்த்தைகள் மட்டுமே சொல்கிறார். ”ஹாலிவுட் படமுல்லா மச்சான்..உலகம் முழுக்க போகணுமில்லா…அதனாலதான் உலகம் முழுக்க தெரிஞ்ச டைலாக்க மட்டும் வச்சிருக்கான்”என்றார் நண்பர்

ஒரு நண்பர் மொழியாக்கம் செய்த சிறுகதையில் அடிக்கடி ”காளைச்சாணம்” என்று வந்தது. அவருக்கு சந்தேகம் தனியாக ஷிட் என்று வரும் இடத்தில் என்ன எழுதுவது. ”பீ” என்று போடலாம் என்றேன் நான். ”அதெப்படி முதல் வரியில் புல் ஷிட்டென்று வருகிறதே”’ என்று அவர் கவலைபப்ட்டார். கதையில் ”இந்த வேலையும் போய்விட்டதா?” ” காளைச்சாணி” ”என்ன செய்யப்போகிறாய்? ”சாணி” — இப்படி ஓர் உரையாடல் போவது பற்றி அவருக்கு புகாரே இல்லை.

எங்களூர் இயக்குநர் ஒருவர் உண்டு. அவருக்கு கமா என்ற எழுத்துக்கான ஒலி தாயளி தான். அது மருவி தாளி. ”எங்கப்பா என்னமாதிரி மேடையிலே பேசுவார்னு நெனைக்கிறீங்க…சைவசித்தாந்தம் பத்தி பேசினா தாளி கொன்னு எடுத்திருவார்” கெட்டவார்த்தைகள் அர்த்தபூர்வமாக அமரும் இடங்களும் உண்டு

நன்றி: jeyamohan.in

Thursday, 12 August 2010

பாலகுமாரன்

ரொம்ப நாளாக பாலகுமாரன் அவர்களை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். தீப்பொறி திருமுகம் a.k.a சாரு நிவேதிதா தனது வலைதளத்தில் தனக்கு "ல லே லா லலி ல லா" என்று பாடியிருந்த ஒருவரின் பதிவை வெளியிட்டிருந்தார். அதை பார்த்தவுடன் ஒரு எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று தோன்றியது.

"தடி எடுத்தவன் தண்டல்காரன்" என்பது போல யார் வேண்டுமானாலும் எவரை/எதை பற்றி வேண்டுமானாலும் இணையத்தில் எழுதலாம் என்றாகிவிட்டது. நம்ம எங்க இருக்கோம்னு கண்டுபிடிச்சு வரவா போறான் என்கிற எண்ணமே இதற்கு முக்கிய காரணம். உதாரணமாக சாரு அபிமானி எழுதியுள்ள இந்த பதிவை பார்ப்போம்.

http://sathish777.blogspot.com/2010/08/blog-post_03.html

பாலகுமாரனின் "தலையணை" நாவல் என்கிறார். பாலா "தலையணை மந்திரம்" என்று எழுதியாக தான் நினைவு. முதல்ல நாவலை படிங்கப்பா. எதையாவது படிச்சிட்டு எழுதாதீங்க. பாலாவுக்கு குடி பழக்கம் கிடையாது. புகை பிடித்து கொண்டிருந்தவர் பின்னாளில் அதையும் நிறுத்திவிட்டார். பாலா குடித்து விட்டு சுஜாதாவிடம் கலாட்டா செய்தார் என்பதெல்லாம் கொடூரமான கற்பனை.சிறுகதை எழுத சுஜாதாவிடம் சில "டிப்ஸ்" பெற்றார். அவ்வளவு தான்.

சினிமாவில் பாலா சில அற்புதமான வசனங்கள் எழுதினர். ரஜினி ரசிகரான சதிஷுக்கு "நான் ஒரு தடவை சொன்ன நூறு தடவை சொன்ன மாதிரி" மட்டும் தான் நினைவில் உள்ளது. உல்லாசம், முகவரி, மாதங்கள் ஏழு போன்ற படங்கள் பாலாவின் வசனம் எழுதும் திறமைக்கு நல்ல உதாரணங்கள். பாலாவின் சினிமா அனுபவங்கள் பற்றி தெரிந்து கொள்ள சதீஷ் அவர்கள் "இதற்குத் தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா?" படிக்கலாம்.

பாலா நிறைய எழுதுவதால் ஒரே விஷயம் பல முறை கூறப்படுகிறது என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. அது ஓரளவுக்கு உண்மையும் கூட. ஆனால், இதை நிறைய எழுத்தாளர்களிடம் காணலாம். பீமா, சண்டக்கோழி, தாம் தூம், உன்னாலே உன்னாலே போன்ற படங்களுக்கு வசனம் எழுதிய எஸ்.ராமகிருஷ்ணன் சில படங்களில் ஒரே வசனத்தை மீண்டும் பிரயோகம் செய்திருப்பார். அந்த இடத்துக்கு அது தேவைப்பட்டிருக்கலாம். அதற்காக அவர் எழுத்தாளரே இல்லை என்பீர்களா? கும்பகோணத்தையும் காவிரியையும் மீண்டும் மீண்டும் எழுதிய தி.ஜா எழுத்தாளர் இல்லையா? சுத்த பேத்தல்.

பாலாவுக்கு தெளிவில்லையாம். நேரக் கொடுமைடா சாமி. "காலடி" என்கிற பாலாவின் நூலை நேரம் கிடைத்தால் படியுங்கள். சிக்கலான அத்வைத தத்துவங்களை மிகச் சுலபமாக புரிய வைத்திருப்பார் பாலா. படித்து தெளிவு பெறுங்கள்.

ஒருவரை விமர்சிக்கும் முன்பு அவரை பற்றிய அறிதல் மிக முக்கியம். நம்மைப் போன்ற இன்று முளைத்த காளான்கள் பாலா, சுஜாதா பற்றி எல்லாம் பேசும் முன்பு நூறு முறை யோசிக்க வேண்டும். சுஜாதா சொல்வது போல,"எழத்து என்பது தனக்குத் தானே பேசிக்கொள்வது. அதிர்ஷ்டம் இருந்தால் ஒத்த மனதுடையவர்களுடன் பேசலாம்". சுஜாதா, பாலகுமாரன் எல்லாம் என்ன சதீஷ், வாசு, ராமசாமி, கந்தசாமி போன்றவர்களுக்கு புரியவில்லை என்றால் தாங்கள் எழுத்தாளனாக பிறந்த பயனை அடைய மாட்டோம் என்று நினைத்தா எழுதினார்கள்?முதிர்ச்சி பெறுங்கள் சதீஷ்.

நாம் பாதுகாப்பாக இருக்கிறோமா?



நம்மில் எத்தனை பேர் தலைவலி ஜுரம் போன்ற சாதாரண உடல் பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுகுகிறோம்? நான் Dolo-650,Saridon, Resteclin 500 Mg போன்ற மருந்துகளை அந்த நோய் தீரும் வரை எடுத்துக்கொள்வேன்.அப்படி ஒரு சாதாரண மருந்தான Combiflam என்ற மருந்து எத்தனை பெரிய பின்விளைவை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை படத்தில் பாருங்கள். குணசுந்தரி என்ற இந்த பெண் வைரல் பீவர் எனப்படும் விஷ ஜுரம் ஏற்பட்டு அதற்காக நங்கநல்லூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.(இங்கு தான் என் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தாள்)

அங்கிருந்த மருத்துவர் Combiflam எடுத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். Combiflam ஜுரம் மற்றும் உடல் வலிக்கான மருந்து. Paracetamol மற்றும் iBrufen கலவை. நானே இரண்டொரு முறை இதை உட்கொண்டிருக்கிறேன். குணசுந்தரி ஒவ்வாமை(Allergy) காரணமாக இந்த நிலையை அடைந்துள்ளார். மருந்தில் இருந்த ஏதோ ஒன்று அவருக்கு ஒற்றுக் கொள்ளவில்லை. அந்த பெண் போலீசில் புகார் செய்ய இப்போது மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், வழக்கை பரிசீலித்த அகில இந்திய தலைமை மருத்துவ/மருத்துவர் குழு தலைவர் ரவிசங்கர், "மருந்தின் கலவையால் சம்பந்தப்பட்ட நபருக்கு ஒவ்வாமை காரணமாக இது நிகழ்ந்துள்ளது. இதற்கு மருத்துவமனை பொறுப்பேற்க முடியாது" என்று கூறியிருக்கிறார்.

ஒரு நோயாளியின் முந்தைய உடல் பிரச்சனைகளை பற்றி தெரிந்து கொள்வது ஒரு மருத்துவரின் கடமை இல்லையா? நோயாளியின் இதர உடல் கோளாறுகள் பற்றி தெரிந்து கொள்ளாமல் எப்படி மருத்துவர் ஏதோ ஒரு மருந்தை சிபாரிசு செய்ய முடியும்? Combiflam எனப்படும் இந்த மருந்து 1997 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது என்கிறது கூகுள் வாயிலாக நான் பார்த்த சில வலைத்தளங்கள். அதற்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்காவில் இந்த மருந்து தடை செய்யப்பட்டுள்ளது. இது கூட தெரியாமல் எப்படி மருத்துவர் இதை நோயாளிக்கு பரிந்துரைக்க முடியும்?

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரண்டு வயது குழந்தை உள்ளது. இத்தனை பெரிய விஷயம் டெக்கான் நாளிழதில் ஒரு ஓரத்தில் வந்துள்ளது. இதற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை நமது மீடியா. என்ன பாதுகாப்பு இருக்கிறது நமக்கு இந்தியாவில்? இந்த பெண்ணிற்காக யார் போராடுவார்கள்? இந்த மருந்தை சிபாரிசு செய்த மருத்துவருக்கு குறைந்த பட்ச தண்டனையாவது கிடைக்குமா? எனக்கு நம்பிக்கையில்லை.

Saturday, 7 August 2010

இந்தியாவில் பணம் - குரங்கு கையில் பூமாலை

டெல்லி common wealth games பற்றி படிக்கும்போது மனதில் தோன்றுவது என்ன? இந்திய அரசாங்கம் அதன்  கட்டமைப்பை மெல்ல இழந்து வருகிறது. ஒரு கம்பனி இருக்கிறது, அதன் Board of Directors தாம் நினைத்ததை கம்பனிக்கும் செயல்படுத்த முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்? அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றே அர்த்தம்.

சமீபத்தில் படித்த செய்தியில் 1990-2010 இடைப்பட்ட ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 20 மடங்கு ஊழல் அதிகமாகி இருக்கிறது என்றிருக்கிறது ! இதன் காரணம் என்ன?

1982-யில் ஆசிய விளையாட்டு போட்டிகளை நடத்தும் திறன் பெற்ற நாடு பல பொருளாதார முன்னேற்றங்களுக்கு பிறகு 2010-ஆம் ஆண்டு common wealth games நடத்த முடியவில்லை என்றால் என்ன காரணம்?

90-களின் ஆரம்பத்தில் இருந்து காஷ்மீரில் அந்நிய சக்திகளை திறன்பட எதிர்த்த நாம், இன்று மாவோயிஸ்டுகளின் கையில் மிகவும் கேவலமான முறையில் அடி வாங்குவது எப்படி?

இதற்கு எல்லாம் காரணம் , நாம் நல்ல அதிகாரிகளின் மனதை கொன்று விட்டோம்! We , the middle class people , killed the morale of honest Indian Government officers!


ஆம் இதுதான் உண்மை நடுத்தர மக்கள் நேர்மையான அதிகாரிகளின் நம்பிக்கையை , அவர்களுக்கு தேவையான மிடுக்கை அவமானபடுத்தி விட்டார்கள். இது 90'களில் ஆரம்பித்து இந்த இருபதாண்டுகளில் உச்சிக்கு சென்று விட்டது.யாரும் பின்னால் வாங்கும் pension பற்றி யோசிக்க தயாராக இல்லை!

Liberization என்ற விஷயத்தின் ஒரு கொசுறு இது!  Socialism என்ற சித்தாந்தத்தில் இருந்து மெதுவாக capitalism நோக்கி திரும்பிய நாம், அதற்கான நல்ல பலன்களோடு அடைந்த மிகுந்த தீமையான பலன் இந்த நல்ல அதிகாரிகளின் மனசாட்சியை கொன்று புதைக்கும் விஷயமும். உலகமயமாக்கமும், எதிர்பாராது கிடைத்த "I.T" வேலை வாய்ப்பும், மக்களிடம் பெரும் பொருளாதார மாறுபாட்டை செதுக்க தொடங்கிய காலத்தில், நமது அதிகாரிகளின் மனோ நிலையை எண்ணி பாருங்கள் "நேத்து காலேஜ் முடித்தவன் ஒரு I.A.S சம்பளம் வாங்கினால், மாவட்ட அளவிலான (லஞ்சம் வாங்காத) அதிகாரிகளின் நிலை என்ன? எனக்கு தெரிந்து இது பற்றி எந்த பத்திரிக்கையும், தொலைக்காட்சியும் வாயை திறக்கவில்லை.

அந்த  IT வருமானத்தை ஒட்டியே வீட்டு மனைகள் , ஹோட்டல்கள், வீட்டு வாடகை, சினிமா தியேட்டர்களின் டிக்கட்களின் விலை என்று பலதும் முடிவு செய்யப்பட்டது.அந்த  IT வருமானத்தை ஒட்டியே வீட்டு மனைகள் , ஹோட்டல்கள், வீட்டு வாடகை, சினிமா தியேட்டர்களின் டிக்கட்களின் விலை என்று பலதும் முடிவு செய்யப்பட்டது.

இந்த வருமான வித்தியாசத்தை கண்டு கொண்டு அரசாங்கம் சம்பளம் உயர்த்தியது 2000-களின் தொடக்கத்தில்தான் , இடைப்பட்ட காலத்தில் அதிகாரிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள ஊழலை நோக்கி தள்ளப்பட்டனர், இங்கு சொல்லபடுவது அதுவரை ஊழல் செய்யாத அதிகாரிகளை பற்றி. இந்த நேரத்தில் அரசாங்க கிளார்க்குகள் என்ன செய்தனர் , தங்கள் பிள்ளைகளை அரசாங்க பதவிக்கு வரவேண்டாம் என்று பிரச்சாரம் செய்வது மற்றும், தாமும் வேலை செய்யாமல் "இதெல்லாம் ஒரு சம்பளமா?  வாழ்ந்தால் IT company ஊழியராக வாழ வேண்டும்" என்று பல் குத்திக்கொண்டு இருந்தனர்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் கெட்டிக்கார மாணவர்கள் - அரசாங்க பதவிகள் வரும் தன்மை, இது பற்றி ஒரு ஆய்வே நடத்தலாம், முன்பெல்லாம் மாணவர்களின் லட்சியம் டாக்டர்,எஞ்சினியர், வக்கீல்
என்பதோடு IAS என்பதும் இருக்கும். அவ்வாறு 100 மாணவர்கள் நினைத்தால் அதில் அறிவிற்சிறந்த சில மாணவர்கள் அந்த பதவிக்கு வருவது சாத்தியமாக இருந்தது , ஆனால் இப்போது IAS என்பது அரசியல்வாதிகளுக்கு சலாம் போடும் வேலையாக பார்க்கடுகிறது, அந்த மாணவர்கள் அமெரிக்கா  போவதற்கு தயாரிக்க  படுகிறார்கள்.

உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்கள் வகுப்பில் படித்த எத்தனை கெட்டிக்காரர்கள் IAS அதிகாரிகள் ஆகி இருக்கின்றனர் என நினைத்து  பாருங்கள்!


இதே  நிலை PSU எனப்படும் Public Sector Unit-களிலும் வந்தது, பல engineers,மானேஜர்கள் பதவியை விட்டு நீங்கினர்! அந்த இடத்தை நிரப்பிய நபர்களின் தரம், விலகியவர்களின் தரத்துடன் சரியாக இருக்க முடியும் என்று எவரேனும் நினைக்க முடியுமா..? இதில் இன்னொரு விஷயம், அரசாங்க கருவூலத்தில் கிடைக்கும் அதிகப்படியான பணம், ஆகவேதான் சொல்கிறேன், இப்போதுள்ள இந்திய பணம் குரங்கு கையில் பூமாலை!

Thursday, 5 August 2010

ப்ளாஷ்பாக் - 1

இன்று வரும் இளைஞர்களை போல் பொறியியல் முடித்துவிட்டு இந்த துறையில்(கணினி) நான் சேரவில்லை. நான் படித்தது வணிகவியல். என்னோடு படித்தவர்கள் CA, MBA, ICWA, ACS என்றெல்லாம் பேசிக்கொண்டு இருந்த போது நான் கலைத்தாயிடம் ஒரே ஒரு கோரிக்கை தான் வைத்தேன். "இத்தனை வருஷம் என்ன எப்படியோ காப்பாத்திட்ட. இனிமே என்னால முடியாது. இவ்வளவு வருஷம் என் கூட இருந்ததுக்கு நன்றி" என்று ஒரு பெரிய கும்பிடு போட்டேன். என்னை மாதிரியே சிந்தித்த என் நண்பர்கள் சிலருடன் பொழுதை கழிக்க ஆரம்பித்தேன். என்ன வேலைக்கு போகலாம் என்று யோசித்து சேல்ஸ் தான் எங்களுக்கு சரியாக வரும் என்று தீர்மானம் செய்தோம். அந்த தொழிலில் நிறைய ஊர் சுற்றலாம் என்பதால் அதை தேர்ந்தெடுத்தோம்.

வாரம் தவறாமல் நாளிதழ்களை பார்த்து அதில் எங்களுக்கு பிடித்த நிறுவனங்களுக்கு வேலைக்கு விண்ணப்பித்தோம். ஒரு வழியாக சென்னை அண்ணாநகரில் இருந்த ஒரு மருந்து நிறுவனம், விற்பனை பிரதிநிதி வேலைக்கு என்னையும் என் நண்பனையும் நேர்முக தேர்வுக்கு அழைத்தது. உலக அனுபவம் கொஞ்சம் கூட இல்லாததால் எங்களை மட்டும் தான் அவர்கள் அழைத்திருப்பார்கள் என்று நினைத்து ஷு கூட அணியாமல் சென்ற எங்களுக்கு அங்கு கண்ட காட்சி பீதியளித்தது. "காதலுக்கு மரியாதை" விஜய் ரேஞ்சுக்கு வந்திருந்தனர் பலர். சிலரிடம் பேசிய போது அவர்கள் B.Pharm படித்தவர்கள் என்று தெரிந்தது. எப்படியும் வேலை கிடைக்க போவதில்லை, இருந்தாலும் பஸ் காசு செலவு செய்து வந்துவிட்டோம், இருந்து பார்த்து விட்டு போகலாம் என்றான் என் நண்பன்.

காலை பத்து மணிக்கு வந்த எங்களை ஒரு வழியாக மதியம் இரண்டு மணிக்கு அழைத்தனர். எதற்காக எங்களை தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை.ஆனால் பத்து நாள் பயிற்சி உள்ளதாகவும் அதற்கு நாங்கள் தகுதி பெற்று விட்டதாகவும் கூறி மறு நாள் வரும்படி சொல்லி அனுப்பினார்கள்.

அந்த நிறுவனம் தயாரித்த மருந்தின் பெயர் "சேபெக்ஸ்". அதை மருத்துவர்களிடமும் மருந்து கடைகளிலும் சென்று அறிமுகப்படுத்தி விற்பனையை அதிகரிப்பதே நிறுவனத்தின் குறிக்கோள். நாள் முழுதும் வேலையில் மூழ்கியிருக்கும் மருத்துவர்கள் விற்பனை பிரதிநிதிகளை பார்க்க இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்குவார்கள். அந்த இரண்டு நிமிடத்தில் மருந்தின் பெயர் மருத்துவரின் மனதில் நிற்கும்படி செய்வதே விற்பனை பிரதிநிதியின் வேலை. அதற்குத்தான் பயிற்சி. குரல் பயிற்சி, மருந்தின் பெயரை உச்சரிக்க வேண்டிய விதம் போன்றவை பயிற்சியின் போது கற்றுத் தரப்படும்.

இந்த இடத்தில் நிறுவனத்தை பற்றி கொஞ்சம் கூற வேண்டும். அது ஒரு தனி நபர் நடத்திய நிறுவனம். பல ஆண்டுகளாக அந்த துறையில் இருந்து அவர் அந்த மருந்தை கண்டுபிடித்திருந்தார். பயிற்சி முடியும் நாள் வரை நாங்கள் அவரை சந்திக்கவில்லை. பயிற்சின் கடைசி நாளன்று அவர் வருவாரென்றும் அவரை மருத்துவராக கருதி நாங்கள் பயின்றதை செய்து காட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டது. அதன் பிறகு எங்களை எந்தெந்த ஊரில் விற்பனை பிரதிநிதிகளாக நியமிப்பது என்று அவர் முடிவு செய்வார் என்றார்கள். ஒரு வழியாக பயிற்சியும் முடிந்தது. பத்து நாளைக்கு பிறகும் சிலர் "சேபெக்சை" "சபக்ஸ்" என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.

நிறுவனத்தின் உரிமையாளர் எங்களை சோதிக்க பயிற்சியின் இறுதி நாள் வந்தார். ஆறடி உயரத்தில் கருப்பாக இருந்தார். ஒரு வட்ட வடிவ மேஜையில் நாங்கள் சுற்றி அமர்ந்திருக்க அவர் நடுவில் எங்கள் அனைவரையும் பார்க்கும் படியான ஒரு கோணத்தில் அமர்ந்திருந்தார். ஆங்கிலத்தில் சரளமாக தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு எங்களை பற்றி கேட்டுக் கொண்டார். எங்களில் ஒருவரை அவரே தேர்வு செய்து இவர் என்னை மருத்துவராக பாவித்து நம் மருந்தை பற்றி ஒரு விற்பனை பிரதிநிதி போல பேசட்டும் என்றார்.

முதலில் பேச ஆரம்பித்த அந்த நண்பர், சபக்ஸ் என்ற உடனே, நம்ம முதலாளி, "டேய் பு.மவனே, பேரை ஒழுங்க சொல்லுடா, பத்து நாளா என்ன புடுங்கின என்றார்". எனக்கும் என் நண்பனுக்கும் தூக்கி வாரிப் போட்டது. அறையில் இருந்த அனைவர் முகத்திலும் பயம் அப்பிக் கொண்டது. முதல் நபர் வாங்கிய திட்டில் அடுத்த நபரும் பயந்து உளறத் தொடங்க, நிறுவனர் அவரை கொஞ்சம் சாந்தப்படுத்தும் விதம், "ஏன் பயப்படற, எந்த ஊரு உனக்கு, அப்பா என்ன செய்யறாரு என்றார்?". அவரும் கொஞ்சம் சகஜ நிலைக்கு திரும்பி, "அப்பாக்கு எண்ணை விக்கறது தான் தொழில்" என்றார். "அப்போ அந்த மயிரையே புடுங்க வேண்டியது தான, ஏன்டா இங்க வந்து என் உசிர வாங்குற" என்று பாய்ந்தார்.

ஏற்கனவே கொஞ்சம் கோபம் அதிகம் உள்ள என் நண்பன் என்னிடம், "ஒ!!!, நம்மள எதாவது சொன்னான், மூஞ்சிலே மங்கேர் மங்கேர்னு ரெண்டு குத்து விடறோம்.சாயங்காலமே அவனை குடும்பத்தோட தூக்கறோம் மச்சான்" என்றான். எனக்கு வயிற்றில் புளியை கரைத்தது. ஒரு வழியாக எங்கள் முறை வந்த போது தொழிலதிபர் சோர்ந்து போய் இருந்தார்.
நானும் என் நண்பனும் சுமாராக எதோ பேசியதால் இருவரும் தேர்வானோம். சென்னையில் இருப்போம் என்று நினைத்த எங்களை தஞ்சைக்கும் மதுரைக்கும் போக சொன்னதால் அந்த வாய்ப்பை புறக்கணித்தோம். அதன் பின் கணினி கற்று இந்த துறைக்கு வந்ததெல்லாம் பெரிய கதை. இந்த பத்து வருடத்தில் எத்தனையோ நிறுவனங்கள், நேர்முக தேர்வுகள். ஆனால், மருந்து நிறுவன அனுபவத்தை மறக்கவே முடியாது.

Thursday, 29 July 2010

நெகிழ்ச்சி

இன்று காலை பிரீமொண்டிலிருந்து சான் பிரான்சிஸ்கோ செல்லும் ரயிலில் பக்கத்துக்கு இருக்கையில் இருந்தவர் படித்துக் கொண்டிருந்தது "அதீதத்தின் ருசி - மனுஷ்யபுத்திரன்".சில வரிகள் படித்தார். புன்னகைத்தார். ஜன்னல் வழியே இயற்கை அழகை பார்த்தார். மீண்டும் சில வரிகளை படித்து ரசித்தார். தன் காதலி/மனைவி பற்றி நினைத்தாரோ என்று எண்ணினேன்.பேச நினைத்தேன் ஆனால் பேசவில்லை.அவர் செய்கையை ரசித்தபடி பயணித்தேன்.பதினைந்தாயிரம் மயிலுக்கு அப்பால் படிக்கும் போது தமிழ் கொடுக்கும் கிறக்கம் தனி தான். அதை சொற்களில் அடைப்பது கடினம்.

Sunday, 25 July 2010

Inception

இங்குள்ள IMAX திரையரங்கில் இன்று இந்த படத்தை பார்த்தேன். பத்து வருடமாக இந்த கதையை மனதில் வைத்திருந்தாராம் இயக்குனர் Christopher Nolan. Gravity, Infinity, Psychology இவையெல்லாம் என்னவென்று தெரிந்தால் தான் படம் கொஞ்சமாவது புரியும். படம் முழுதும் nested for loop பற்றிய நினைவு எழுந்ததை என்னால் தவிர்க்க முடியவில்லை. கனவுக்குள் ஒரு கனவு, அதற்குள் இன்னொன்று என்று செல்கிறது படம். எது நிஜம், எது கனவு என்றே தெரியவில்லை.

வரும் வழியில் நண்பர் ஒருவர்(வழக்கமான தாழ்வு மனப்பான்மையில்)இது போன்ற படங்கள் ஏன் இந்தியாவில் வருவதில்லை என்றார்? எனக்கென்னவோ அந்த யோசனையே அபத்தமாக இருந்தது. இந்த படம் எல்லாம் புரிகிற அளவுக்கு அமெரிக்க பார்வையாளர்கள் புத்திசாலிகளா என்பதே எனக்கு சந்தேகமாக இருந்தது. இந்தியாவில் இந்த படத்தை நிச்சயம் பார்க்க வேண்டிய மனிதர் அய்யா அப்துல் கலாம் அவர்கள். அவர் தானே நம்மை எல்லாம் நிறைய கனவு காணுங்கள் என்று சொன்னார்.

Tuesday, 20 July 2010

யாருக்காக அழுதார்?



படத்துல இருக்கறது யாரு தெரியுதா? மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார் சாரோட மூத்த மகன். அவர் திரையுலகத்துக்கு வந்து இருபத்தியஞ்சு வருஷம் ஆனதுக்காக கொஞ்ச நாள் முன்னாடி விழா எடுத்தாங்க. அப்போ உணர்ச்சிவசப்பட்டு அழுதாராம்.

பி.கு: ஒரு வேளை இத்தனை வருஷமா நம்மளையும் இந்த ஜனங்க பாத்தாங்கலேன்னு நினைச்சு அழுதிருப்பாரோ? அண்ணே, பீல் பண்ணாதீங்க. விஜய், சிம்பு படத்தை எல்லாம் பார்க்கறோமே, அவங்க எல்லாம் எங்கள நெனைச்சு எப்படி அழணும்னு யோசிச்சு பாருங்க.

Monday, 12 July 2010

ரஜினி அங்கிள்.............

தலைப்பை பார்த்த உடனே, நம்ம மீனா சின்ன பொண்ணா ரஜினியை அன்புள்ள ரஜினிகாந்த் படத்துல கூப்பிடுமே, அந்த சீன் உங்களுக்கு ஞாபகம் வந்தா, "நீங்க தீவிர ரஜினி ரசிகர்". இப்போ அப்படி கூப்பிட்டது நம்ம ரஜினியோட "எந்திரன்" பட ஹீரோயின் ஐஸ்வர்யா ராய் பச்சன். அமிதாபுக்கு எவ்வளவு குசும்பு பாருங்க. மனுஷன் ரஜினி ஐஸ்வர்யா கூட ஹீரோவா நடிக்கறத பொறுக்க முடியாம அவர் வலைமனைல நேத்து இப்படி எழுதி இருக்காரு.

"After and during dinner with Balki, we were lead to a site on the net, where RajniKant’s details are secretly kept undisclosed. The site has some really funny anecdotes on Rajni and maybe in my future communications I shall divulge some. Aishwarya was shooting with him in Chennai in the morning and just returned, filled with wonderful stories of her interactions with ‘Rajni Uncle’."

நீ உன் இந்நாள் மருமகளுடன் "Bunty Aur Babli" படத்தில் ஆட்டம் போட்டாயே, அன்று தமிழன் உன்னை நோண்டினானா? Why நோண்டிங் நோண்டிங் ரஜினிகாந்த்? தங்க தலைவர் கலைஞரை தமன்னாவுடன் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்க வைக்க தமிழன் முயற்சி செய்து வரும் வேளையில், இஸ்கூல் பையன் வேடத்திற்கு கூட பொருந்த கூடிய எங்கள் சூப்பர் ஸ்டார் மீது ஏன் உனக்கு இந்த காழ்ப்புணர்ச்சி? கிழட்டு சிங்கமே அமிதாப், உலக தமிழர்கள் சார்பில் உனக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். மீண்டும் ஒரு முறை எங்களின் இன்றைய தலைமுறை நடிகர்களை நீ கிண்டல் செய்தால் பாலிவுட்டிற்கு ஜே.கே. ரித்தீஷை இறக்குமதி செய்யவும் தயங்க மாட்டோம்.

வாழ்க தமிழன், வாழ்க தமிழ் நடிகர்கள், செழிக்க அவர் தம் வாழ்வு.

Thursday, 1 July 2010

அமெரிக்கா

லௌகீகத்தை பற்றி சுந்தர ராமசாமி ஒரு தடவை சொன்னாராம், "அது பொண்ணுங்க மாதிரி.எவன் வேண்டாம்னு சொல்றானோ அவன் பின்னாடி போகும். வேணும்னு சொல்றவன சீண்டாது". Onsite Trip கூட அந்த மாதிரி தான். இல்லேன்னா, சிவனேன்னு சனிக்கிழமை காலைல தூங்கிட்டு இருந்தவன மேனேஜர் போன் பண்ணி நீ நாளைக்கே அமெரிக்கா போகணும்னு சொல்வாரா? ஒரே நாள்ல டிக்கெட் ரெடி பண்ணி, இன்வைட் லெட்டர் வாங்கி, Forex கிடைச்சு, விமானத்தை புடிச்சு ஒரு வழியா வந்து சேர்ந்தாச்சு.

சென்னையிலிருந்து ஹாங்காங் வழியா சான் பிரான்சிஸ்கோ. சென்னையிலிருந்து ஹாங்காங் ஒரு ஐந்தரை மணி நேர பயணம். ஹாங்காங்ல ஒரு ஐந்து மணி நேர காத்திருப்பு. திரும்ப அங்கேந்து சான் பிரான்சிஸ்கோ ஒரு பனிரெண்டு மணி நேரம். வந்து எறங்கும் போது டிக்கி ட்ரவுசர் நடுவுல சிக்கி சின்னாபின்னமாகி இருந்தது. பக்கத்துல நம்மூர் பொண்ணு ஒருத்தங்க தன் ரெட்டை பெண் குழந்தைங்களோட புருஷனோட சேர போயிட்டிருந்தாங்க. ஹாங்காங்ல ஆரம்பிச்சு ரெண்டு குழந்தைங்களும் அமெரிக்கா வரைக்கும் அழுதே தீருவோம்னு கங்கணம் கட்டிட்டு வந்தாங்க. தெரியாம நான் ரெண்டு பசங்களுக்கு அப்பன்னு வேற சொன்னதால அவங்க பால் கலக்கும் போது, டைபர் மாத்தும் போது எல்லாம் குழந்தைங்க நம்ம கைல. வர வழியெல்லாம் அண்ணா அண்ணான்னு உருகின பொண்ணு சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட்ல எறங்கும் போது புருஷன பாக்கற ஆசைல போயிட்டு வரேன்னு கூட சொல்லல.

நாலு வருஷத்துல சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட்ல நிறைய மாற்றங்கள். ஏர்போர்ட் இன்னும் பெரிசானா மாதிரி இருக்கு. சுஜாதா சொல்ற மாதிரி "இங்க எல்லாமே பெரிசு. பர்கர், பிட்சா, பெப்சி பாட்டில், பொண்ணுங்க மார்பு". வெய்யில் இப்போ கொஞ்சம் அதிகமா இருக்கு ஆனா அதே சமயத்துல காத்தும் சில்லுனு அடிக்குது. அடுத்த ரெண்டு மாசம் இங்க தான். மீண்டும் அடுத்த பதிவுல சந்திப்போம்.

Monday, 21 June 2010

The Score



The Score படத்தை சமீபத்தில் பார்த்த போது இந்த மாதிரி ஒரு படத்தையோ அல்லது இதையே கூட யாராவது ஏன் தமிழில் எடுக்க கூடாது என்று தோன்றியது. Marlon Brando, Robert De Niro மற்றும் Edward Norton நடித்தது. இந்த படத்தை தமிழில் எடுக்க நேர்ந்தால் என் விருப்பத் தேர்வுகள்:

இயக்குனர் - கௌதம் மேனன் அல்லது ஸ்ரீராம் ராகவன் (Johnny Gaddar)
Marlon Brando - பிரகாஷ்ராஜ்
Robert De Niro - கமல்
Edward Norton - சூர்யா

இந்த படத்தை பிராண்டோவின் வேடம் இல்லாமலே கூட தமிழில் செய்யலாம். அல்லது பிராண்டோவின் பாத்திரத்தை கொஞ்சம் அதிகரிக்கலாம். "Heist" வகை படங்கள் தமிழில் பெரிதாக வரவில்லை. The Score அந்த வகையை சேர்ந்தது.

Sunday, 20 June 2010

ஆயிரத்தில் ஒருவன் குறித்து பாலகுமாரன்?

சோழர்களை பற்றி மிகவும் எழுதியவர் பாலகுமாரன். சமீபத்தில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழர்களை சித்தரித்த விதம் பற்றி பாலகுமாரன் அவர்களின் கருத்து என்ன? இது பற்றி அவர் எங்கேனும் எழுதி / சொல்லி இருக்கிறாரா? அறிந்தவர்கள் சொல்லலாம்!

Friday, 18 June 2010

நாங்களும் "Title" கொடுப்போமில்ல..

இன்று ராஜீவ் காந்தி சாலையில் சோழிங்கநல்லூர் தொடங்கி சிறுசேரி செல்லும் பாதையில் ஒரு கிலோமீட்டருக்கு அ.தி.மு.க தொண்டர் ஒருவர் ஜெயலலிதாவிற்கு கொடுத்துள்ள பட்டங்கள்.

மீனவ குலத்தின் சகோதரியே
கருனை கொடையே ("கருனை" அங்கு எப்படி இருந்ததோ அப்படியே கொடுத்திருக்கிறேன்)
கழக கருவூலமே
செயல் வீராங்கனையே
எங்கள் தாயே

இன்னும் நிறைய ஹாஸ்யம் நிறைந்த பட்டங்கள் இருந்தன. இப்போது நினைவுக்கு வரவில்லை.ஆனால், இவர்களால் தி.மு.கவினரை தாண்டி செல்ல முடியும் என்று தோன்றவில்லை.

துக்ளக்

இந்த வார துக்ளக்கில் இடம் பெற்றுள்ள பழ.கருப்பையா அவர்களின் "சில சாமியார்களை பார்த்தாலே தெரியும்" என்ற கட்டுரையும் சோவின் "போபால் விஷவாயு விபத்து" குறித்த கட்டுரையும் நிச்சயம் படிக்க வேண்டியவை. முடிந்தால் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்கிறேன்.

Saturday, 12 June 2010

2 கோடி!

புதிய சட்டசபையின் - Doom போன்ற செட் அமைப்பதற்கு ஆனா செலவு 2 கோடி. உபயம் கருணாநிதி.

புதிய சட்டசபையின் முகப்பு புதுச்சேரி போலீஸ்காரரின் தொப்பி போல உள்ளதால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய கோட்டையிலேதான் சட்டமன்றம் நடைபெறும்.- ஜெயலலிதா




Wednesday, 9 June 2010

ஐயோ..இப்போவே கண்ணை கட்டுதே


நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான விஜயகாந்தின் மூத்த மகன் பிரபாகரன் சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஆசைப்படுகிறாராம். அரசியலுக்கு வருவேன்... அரசியலுக்கு வருவேன் என்று பூச்சாண்டி காட்டால் அதிரடியாக அரசியல் களத்தில் குதித்து முன்னணி கட்சிகளுக்கு சவால் விடும் அளவுக்கு உயர்ந்திருக்கும் விஜயகாந்த், அரசியல், சினிமா என இரட்டை குதிரை சவாரி செய்து வருகிறார். ஒரு காலகட்டத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபடும் எண்ணமும் விஜயகாந்திற்கு இருக்காம். இதற்கிடையில்தான் அவரது வாரிசு, திரையுலகில் கால்பதிக்க ஆசைப்படுவதாக ‌செய்தி வெளியாகியிருக்கிறது.

விஜயகாந்தின் மூத்த மகன் பிரபாகரன். இவருக்குத்தான் சினிமா ஆசை. அந்தரத்தில் பறந்து இடதுகாலை உந்தி பின்பக்கமாக உதைக்கும் விஜயகாந்த் ஸ்டை‌லுடன் சினிமாவில் குதித்து, விஜயகாந்தின் இடத்தை நிரப்புவதுதான் இவரது திட்டமாம். இதற்கு அவரது உடல்பருமன் ஒத்துழைக்காது என்பதால், தற்போது உடல் எடையை குறைக்கும் எண்ணத்தில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம் பிரபாகரன். சீக்கிரமே இளைச்சு அப்பாவின் ஆக்ஷன் இடத்திற்கு வருவேன் என்று தன்னை உசுப்பி விட்ட நண்பர்களிடம் மார் தட்டிச் சொல்கிறாராம் சின்ன கேப்டன்.

நன்றி: தினமலர்

Monday, 7 June 2010

தமிழ்

வேளச்சேரியில் உள்ள McDonalds உணவகத்திற்கு சென்றிருந்தேன். "Veg Burger and Fries" வேண்டும் என்றேன். கவுன்டரில் இருந்த பெண்மணி ஆங்கிலத்தில் ஏதோ சொன்னார். அதில் "சீஸ்" என்ற வார்த்தை மட்டுமே எனக்கு புரிந்தது. மீண்டும் "Veg Burger" என்றேன். மீண்டும் அவர் பதிலுக்கு ஏதோ சொல்ல அதிலும் சீஸ் மட்டுமே புரிந்ததால் "எஸ்" என்றேன். பில்லை பார்த்த போது தான் அவர் எக்ஸ்ட்ரா சீஸ் வேண்டுமா என்று கேட்டிருக்கிறார் என்று தெரிந்தது. அதற்கு இருபது ரூபாய் பில்லில் சேர்த்திருந்தனர்.

என்னிடம் பேசிய அந்த பெண் தமிழர். நான் தமிழில் தான் அவரிடம் பேச ஆரம்பித்தேன். அவர் ஆங்கிலத்தில் பதில் பேசியதால் நான் வேறு வழியின்றி ஆங்கிலத்தில் பேசினேன். McDonalds போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் குரல் பயிற்சி, உச்சரிப்பு பயிற்சி போன்றவற்றை அளிக்கின்றன. அது அங்கு வரும் வெளிநாட்டினருக்காக. உள்ளூர்வாசிகளிடம் ஆங்கிலம் எதற்கு? போதாகுறைக்கு அந்த பயிற்சி எல்லாம் எடுத்தும் கூட அவர் சொன்ன அந்த எக்ஸ்ட்ரா சீஸ் எனக்கு புரியவே இல்லை. என்னைப் போன்ற accent புரியாத ஜென்மங்களை எல்லாம் கொஞ்சம் பெரிய மனதுடன் மன்னித்து தமிழில் பேசலாமே?

ஒரு முறை ஜெர்மனியின் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் உள்ள McDonalds சென்ற போது அவர்கள் ஜெர்மன் மொழி மட்டுமே பேசினர். மிக குறைந்த ஆங்கில அறிவே இருந்தது. என் முறை வந்த போது ஆங்கிலம் சுமாராக அறிந்த ஒருவரை பேச அழைத்தனர். எனக்கு எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. " Burger with no meat" என்று மட்டுமே சொன்னேன். ஆனால், வேளச்சேரி சீதாராமன் நகர் McDonalds உணவகத்தில் ஆங்கிலத்தில் பேசியதற்கு இருபது ரூபாய் விரயம்.

பின்குறிப்பு: வேளச்சேரி McDonalds செல்லும் அன்பர்கள் கவனத்திற்கு.டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு எல்லாம் இவர்கள் வாங்குவதில்லை.பணம் மட்டும் தான்.என்னிடம் போதிய அளவு பணம் வேறு இல்லை.பின்னர் மனைவியிடம் இருந்து வாங்கிக் கொடுத்தேன்.

Saturday, 5 June 2010

அமெரிக்க NRI-களின் பெரியப்பா




ரஜத் குப்தா என்ற பெயரை கேட்டு இருக்கறீர்களா? பிறந்தது 1948, இன்று அவருக்கு வயது 62!

 டெல்லி மாடர்ன் ஸ்கூலில் மிகச்சிறந்த மாணவனாக வெளிவந்தார் , 16 வயதில் தந்தையை இழந்தவர் 18 வயதில் தாயையும் இழந்தார். டெல்லி IIT-யில் சேர்ந்தார் , IIT-JEE-யில் அகில இந்திய அளவில் 16-வது ரேங்க். 1971-இல் IIT-யை விட்டு வெளியே வந்த குப்தாவிற்கு காத்திருந்தது 3 வாசல்கள் IIM-அகமதாபாதில் MBA சீட் , ITC-யில் உயர் அதிகாரியாக வேலை , மூன்றாவது முழு financial aid-உடன் Harward University-இல் MBA. எதிர்பார்த்த மாதிரியே Harward-ஐ தேர்ந்தெடுத்தார்.

ஹார்வர்ட் கல்லூரியில் MBA படிப்பு.பிறகு 1973-யில் MBA மாணவர்களின் கனவான McKinsey நிறுவனத்தில் சேர்ந்தார். அந்த நிறுவனத்தின் கெட்ட பழக்கம்,  up or out  என்ற கொள்கை அதாவது மூன்று வருடங்களுக்குள் நீங்கள் promotion பெற வேண்டும் இல்லையென்றால் கம்பெனியை விட்டு வெளியே செல்லலாம் (வெளியே செல்ல வேண்டும்).

இந்த சூழ்நிலையில்தான் ரஜத் அங்கு வேலைக்கு சேர்ந்தார், ஆனால் சேர்ந்த 7-8 வருடங்களில் டென்மார்க்கில் உள்ள கிளையை நிர்வகிக்கும் manager-ஆக விமானத்தை பிடித்தார்.இன்றும் McKinsey நிறுவனத்தின் perfect ஆபீஸ் என்றால் அது டென்மார்க்கில் உள்ளதுதான் , ரஜத் குப்தாவின் கைவண்ணம் அது.

நினைத்து பாருங்கள் 70-களில் IT வளராத நேரத்தில் ஒரு management consultant வேளையில் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் பிரதிநிதியாக Denmark நாட்டின் கிளை அலுவலகத்தை நிர்வாகித்து , அதை மிகச்சிறந்த அலுவலகமாக மாற்றுவது என்பது சாதாரண விஷயம் இல்லை. ஒரு படத்தில் கமல் சொல்வது போல ' அதெல்லாம் அப்படியே வர்றதுதான் இல்லை'!

பிறகு chicago நகரத்தில் உள்ள Mckinsey-அலுவலகத்தில் Director வேலை - இது நடந்தது 1989-இல். பிறகு ஐந்து வருடம் கழித்து 1994-இல் Managing Director-ஆக தேர்ந்தெடுக்கபட்டார்.இந்த சமயத்தில் McKinsey நிறுவனம் பற்றி சொல்ல வேண்டும் , அதன் செல்லப்பெயர் 'The Firm'. உலகின் மிகச்சிறந்த Management Consultant நிறுவனம் அது, அங்கே Managing Director (C.E.O) வேலைக்கு சேர்வது என்பது ஏறக்குறைய ஒரு மட அதிபரை / ஜீயரை தேர்ந்து எடுப்பது போன்ற விஷயம், உலகெங்கும் உள்ள Director-கள் வோட்டு போட்டு தங்கள் தலைவரை தேர்ந்து எடுப்பார்.

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் Mckinsey தலை சிறந்த MBA மாணவர்களையே உலகம் முழுவதில் இருந்து தேர்ந்து எடுக்கும். அப்படி வந்த மாணவர்களில் இருக்கும் தில்லாலங்கடி ஆட்கள்தான் Director வரை போகமுடியும் , அப்படி பட்ட தில்லாலங்காடிகள் ஒன்று கூடி உங்களை நம்ப வேண்டும் , நீங்கள்தான் எங்கள் தலைவர் என்று சொல்ல வேண்டும்.



இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் Mckinsey தலை சிறந்த MBA மாணவர்களையே உலகம் முழுவதில் இருந்து தேர்ந்து எடுக்கும். அப்படி வந்த மாணவர்களில் இருக்கும் தில்லாலங்கடி ஆட்கள்தான் Director வரை போகமுடியும் , அப்படி பட்ட தில்லாலங்காடிகள் ஒன்று கூடி உங்களை நம்ப வேண்டும் , நீங்கள்தான் எங்கள் தலைவர் என்று சொல்ல வேண்டும்.

மற்றொரு விஷயம், இவர்கள் இருப்பது Management Consultancy - குறிப்பாக senior management consultancy - அதாவது மற்ற CEO , CFO, COO போன்றவர்களுக்கு அறிவுரை கூற வேண்டிய வேலை , அங்கே ஒரே PPT அல்லது flash presentation வைத்து ஓபி அடிக்க முடியாது, ஏன் என்றால் அவர்கள் போடும் bill அப்படி.

இப்படி தில்லாலங்கடிகளுக்கு அறிவுரை கூறும் பலே தில்லாலங்கடிகள்  சேர்ந்து நீதான் எங்கள் CEO என்று ஒரு இந்தியனை நம்புவது அதுவும் 90-களின் ஆரம்பத்தில் என்பது-... இப்போது தெரிந்து இருக்கும் ரஜத் அடைந்து இருக்கும் உயரம்.

அது மட்டுமல்ல அந்த CEO போஸ்ட் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை  போகக்கூடியது , மறுபடியும்  தேர்தல் , மறுபடியும் வேலை, இப்படி ரஜத் 1994,1997,2000 என மூன்று முறை வென்று இருக்கிறார்.



2003-ஆம் ஆண்டு உலகெங்கும் உள்ள IITians சேர்ந்து அமெரிக்காவில் ஒரு Get Together நடத்தினார்கள் , அதற்கு பிரதம விருந்தினர் Bill Gates, அவருடன் மேடையில் அமர்ந்தவர் ஒருவர் மட்டுமே ..அது ரஜத் குப்தா.மேடையின் கீழ் அமர்ந்த அனைவரும் IITians , அதில் பல பேர் கோடீஸ்வரர்கள்.   








2003-யில் retire ஆன பின் அவர் என்ன செய்தார் ........... மூச்சை பிடித்து கொள்ளுங்கள்,

  • Member of Advisory board of Harward University
  • Member of Advisory board of Kellogs School of Management
  • Chariman of Indian school of Business, Hyderabad
  • Chair of Global Fund to Fight AIDS,Malariya and Tuberclosis
  • Board of Governors of the Lauder Institute of Management & International Studies, The Wharton school, Pennsylvania
  • Chairman of the Board of Associates, Harward Business School
  • Dean Advisory Council MIT Sloan school of Management
(ஸ்ஸ்...ஹப்ப்பா கண்ணை கட்டுதடா சாமி........)

அது மட்டுமல்ல..

Gupta serves on the board of American Airlines Inc. (Director and Member of Audit Committee)
Genpact LTD. (Chairman and Member of Nominating and Governance Committee)
Procter & Gamble Co. (Director)
Goldman Sachs Group Inc. (Independent Director) தற்போது இந்த பதவியை ராஜினாமா செய்து விட்டார்..
Sberbank (Independent Member of the Supervisory Council)
பிறகு ஐ.நா சபை General secretary-ஆக Kofi Annaan இருந்த பொது, அவருடைய Advisor on management reform என்ற பதவியிலும் இருந்து இருக்கிறார்
(இன்னும் சில பதவிகள் இருக்கிறது ..கை வலிக்கிறது)

இவருடையது   காதல் திருமணம், மனைவி கூட IIT-யில் படித்தவர் , IIT-Delhi Gold medalist. அவரும் AT&T நிறுவனத்தில் விஞ்ஞானியாக வேலை பார்த்தவர் (1970-களில்). படிக்கும்போது இருவரும் சேர்ந்து நிறைய நாடகம் எழுதி நடிப்பது உண்டாம். இத்தனை வேலைகளுக்கு நடுவில் இவருக்கு 4 பெண் குழந்தைகள் ... 

சாப்ட்வேர்-இல் ஒரு patented technology-யை வைத்துக்கொண்டு ஒரு product company-ஆரம்பித்து அதனை பிறகு பல மில்லியன்களுக்கு விற்று கோடீஸ்வரர் ஆன எத்தனையோ அமெரிக்கர்களை (அமெரிக்க இந்தியர்களை) கேள்வி பட்டு இருப்போம். ரஜத் விஷயம் வேறு மாதிரியானது ..காலத்தில் முந்தையது... நம்புவீர்கள் என்று நினைக்கிறேன்...

Wednesday, 2 June 2010

ஸ்டீபன் மாணிக்கம் a.k.a சாரு நிவேதிதா

சாருவின் வலைமனைக்கு வருபவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது என்று நினைக்கிறேன். மனிதர் மீண்டும் ஜெயமோகன் மீதான தாக்குதலை ஆரம்பித்து விட்டார். பாருங்களேன், இதற்காக சாரு ஒரு வலைமனை கூட ஆரம்பித்திருக்கிறார். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு இன்று சாருவின் வலைமனையில் வந்துள்ளது. ஸ்டீபன் மாணிக்கம் என்பவர் சாருவுக்கு அனுப்பிய மடலில் உள்ளது இந்த இணைப்பு.

http://arivuputhiran.blogspot.com/2010/05/blog-post.html

எனக்கென்னவோ இந்த ஸ்டீபன் மாணிக்கம் சாரு தான் என்று தோன்றுகிறது. எப்படி என்கிறீர்களா? அந்த இணைப்பில் வேறு ஒரு பதிவு கூட இல்லை. ஒரே ஒரு பதிவு ஜெயமோகனை திட்டி. அதுவும் இரண்டு நாட்களுக்கு முன்பு. இரண்டு நாளில் 507 ஹிட்ஸ். எங்கிருந்தோ சுட்டு போடப்பட்டுள்ள Profile புகைப்படம் என்று நிறைய சந்தேகம் தரும் விஷயங்கள். இந்த இணைப்பில் இன்னும் என்னென்ன பதிவுகள் வருகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

தன்னைத்தானே புகழ்ந்து கொள்வது ஒரு கலை. அது எல்லாருக்கும் கைகூடுவதில்லை. கீழே ஸ்டீபன் மாணிக்கம் எனப்படும் சாரு, சாருவுக்கு அனுப்பியுள்ள மடலின் இணைப்பையும், ஸ்டீபன் மாணிக்கம் எனப்படும் சாருவுக்கு சாருவே எழுதி இருக்கும் பதிலுக்கான இணைப்பையும் தந்திருக்கிறேன். சும்மா சொல்ல கூடாது, சாரு கலக்கியிருக்கிறார். "உலக இலக்கியத்தில் நிறைய படித்திருக்கும் ஸ்டீபன் அது எல்லாம் ஜீரோ டிகிரி புத்தகத்தில் இருக்கிறது" என்கிறார். பதில் கடிதத்தில் சாரு "உங்கள் நம்பரை கொடுங்கள், பேச வேண்டும்" என்கிறார்.
http://charuonline.com/blog/?p=597
http://charuonline.com/blog/?p=600
அந்நியன் படத்தில் வரும் "Multiple Personality Disorder" சாருவுக்கு வரும் அபாயம் நிறைய உள்ளது. ஏற்கனவே கோடம்பாக்க உதவி இயக்குனர் ஒருவர் ஜெயமோகனை கண்ட மேனிக்கு திட்டுவது போல ஒரு கடிதத்தை சில மாதங்களுக்கு முன் பிரசுரித்தார் சாரு. இப்போது இது.

Friday, 28 May 2010

இதுதான்டா நியூசு

சென்னை ஏர்போர்ட்டில் நமீதாவுக்கு முன்னுரிமை கொடுத்ததால் பயணிகள் ஆத்திரமடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து திருச்சி செல்லும், கிங் பிஷர் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று பகல் 11.50க்கு மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. பயணிகளை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அந்த விமானத்தில் செல்ல டைட் பேன்ட், டீ ஷர்ட், கூலிங் கிளாஸ் அணிந்தபடி நடிகை நமீதா 11 மணிக்கு வந்தார்.

பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரை சைகை மூலம் அருகில் அழைத்து, ‘நான் நடிகை, நானும் வரிசையில் நிற்க வேண்டுமா?’ என்று கேட்டார். உடனே அந்த பாதுகாப்பு வீரர், பாதுகாப்பு சோதனை நடக்கும் இடத்துக்கு நடிகை நமீதாவை அழைத்து சென்றார். பெண் அதிகாரிகள், நமிதாவை சோதனை செய்து விமானத்தில் ஏற அனுப்பினர். இதை பார்த்த மற்ற பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். “நாங்கள் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருக்கிறோம். நடிகை வந்தால் வரிசையில் நிற்காமல் சிறப்பு விருந்தினரை போல் உபசரித்து அனுப்பி வைக்கிறீர்கள். இதற்கு எந்த சட்டத்தில் விதி வகுக்கப்பட்டுள்ளது?’’ என்று வாக்குவாதம் செய்தனர்.

உடனே “இந்த பிரச்னையை பெரிது படுத்த வேண்டாம். இனிமேல் இவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்’’ என்று பாதுகாப்பு வீரர்கள் வருத்தம் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

நன்றி: தினமலர்


இதுல நமக்கென்ன வருத்தம்னா,அந்த பாதுகாப்பு படை வீரரையே விட்டு நமிதாவை சோதனை போட சொல்லியிருக்கலாம். மற்ற பயணிகள் கிட்ட வாங்கின திட்டுக்கு ஒரு மனத் திருப்தியாவது இருந்திருக்கும்.

Thursday, 27 May 2010

அசத்தும் ஆந்திரா

IIT-யில் முதல் பத்து ராங்கில் ஏழு பேர் தெலுகுவாடுகள், இப்போது IIT-yil சேரும் நான்கில் ஒருவர் ஆந்திராவை சேர்ந்தவர். எப்படி சாதிக்கிறார்கள் மனவாடுகள்? ஆனாலும் , SAP/ABAP கோர்சை குடிசை தொழில் ஆக்கியோர் என்பதால் முழு மனதோடு பாராட்டுவதற்கு தயக்கமாக இருக்கிறது, என்றாலும் சாதனை சாதனைதான். +2-வில் முட்டி மோதும் தமிழ் மாணவர்கள் IIT சேர முயற்சித்தால் , +2 மார்க் குறைந்து எங்கே சாதாரண BE கூட சேர முடியாமல் போய்விடுமோ என்ற தயக்கமே காரணம் என்று நினைக்கிறேன்.


Monday, 24 May 2010

கோலிவுட் டு பாலிவுட்



நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் இருந்து தமிழ் திரையுலகிற்கு ஹீரோயின்கள் இறக்குமதி நடக்கிறது. ஆனால், அங்கிருந்து வரும் ஹீரோக்கள் இங்கு பெரிய அளவில் பெயர் பெற்றனர் என்று சொல்ல முடியாது. அதே நிலை தான் இங்கிருந்து அங்கு செல்லும் ஹீரோக்களுக்கும். ஹேமமாலினி, ஸ்ரீதேவி, தபு என்று சில நடிகைகள் தெற்கில் இருந்து சென்று அங்கு வெற்றி பெற்றுள்ளனர். அசின் "One film wonder". அவரை இந்த பட்டியலில் இப்போது சேர்க்க முடியாது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். த்ரிஷா கூட தற்போது பிரபல நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து ப்ரியதர்ஷன் இயக்கத்தில் "Khatta Meeta" என்ற படத்தில் நடித்து வருகிறார். அவர் பாலிவுட்டில் வெற்றி பெறுகிறாரா என்பதையும் பார்ப்போம்.

ஹீரோக்களை பொறுத்த வரை கமல், அரவிந்த்சாமி என்று நிறைய பேர் பாலிவுட்டில் தங்களை நிலை நாட்டிக்கொள்ள முயற்சித்தனர் ஆனால் யாரும் அதில் வெற்றி பெறவில்லை. ரஜினி கூட சில பாலிவுட் படங்களில் நடித்தார். அந்த வரிசையில் இப்போது சூர்யா. சூர்யா மும்பையில் நுழைய முயற்சிகள் எடுக்கவில்லை. ராம் கோபால் வர்மா தயாரித்து இயக்கம் "ரத்த சரித்திரம்" என்கிற படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் எடுக்கப்படுகிறது. விவேக் ஓபராய் கதாநாயகனாக நடிக்க சூர்யா வில்லனாக நடிக்கிறார். ஆந்திராவில் பெரிய ரௌடிகளாக இருந்த பரிதள ரவி மற்றும் மட்டலசெருவு சூரி பற்றிய கதை இது. இதில் ரவி வேடத்தை விவேக் ஓபராயும் சூரி பாத்திரத்தில் சூர்யாவும் நடிக்கின்றனர். நிஜ வாழ்க்கையில் ரவியை கொன்று விட்டு ஜெயிலுக்கு சென்ற சூரி சில மாதங்களுக்கு முன்பு தான் விடுதலையானார். மறைந்த ராஜசேகர ரெட்டி அவர்கள் குடும்பத்திற்கு கூட இந்த கொலையில் தொடர்பிருந்தது என்று கூறப்படுகிறது. இதே படத்தில் மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ஆர் ஆக சத்ருகன் சின்ஹா நடிக்கிறார்.

சூர்யாவின் நடிப்பை ராம் கோபால் வர்மா தனது வலைமனையில் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். Mr.Eyes, Mr.Body என்று ஏகத்திற்கு சூர்யாவை வர்ணித்திருக்கிறார் ராம் கோபால் வர்மா. கடும் உழைப்பால் இத்தனை தூரம் வந்துள்ள சூர்யா பாலிவுட்டிலும் வெற்றி பெற நம் வாழ்த்துக்கள்.

Monday, 17 May 2010

மதுரைக்கு போகாதடி..

ஒரு திருமணத்திற்காக கடந்த வார இறுதியில் மதுரை சென்றிருந்தேன். திருமண முஹுர்த்தம் காலை 10:30 மணிக்கு என்பதால் மீனாட்சி அம்மனை தரிசிப்போம் என்று சென்றேன். கோயிலின் மேற்கு வாயிலில் இருந்த பூ கடைக்காரரிடம் சென்று "இங்கு செருப்பு விடலாமா?" என்றேன். "அர்ச்சனை தட்டு வாங்கிட்டு விடுங்க" என்றார். "தட்டு எல்லாம் வேண்டாம் பத்து ரூபாய்க்கு பூ மட்டும் கொடுங்க" என்று சொல்லி செருப்பை விட்டு சென்றேன்.

திரும்பி வந்து பார்த்த போது செருப்பை காணவில்லை. கடைகாரரிடம் கேட்டதற்கு, "நான் பார்க்கவில்லையே" என்றார். சரி விடுங்க, நான் புதுசு வாங்கிக்கறேன் என்று சொல்லி கிளம்பியபோது, "அந்த மீனாட்சி அம்மன் போட்டோ தொங்குதில்ல, அங்க போய் கேளுங்க, செருப்பு இருக்கும்" என்றார். இது என்னடா வம்பு என்று அங்கு சென்ற கேட்ட போது, கடையின் உட்பகுதியில் இருந்து ஒரு கோணி முழுக்க இருந்த செருப்புகளை கொட்டிவிட்டு "இதுல உங்க செருப்பு எதுன்னு பாத்து எடுத்துக்குங்க" என்றார் அந்த கடைக்காரர்.

என்ன கேட்பது என்று தெரியாமல் செருப்பை எடுத்துக்கொண்டு கிளம்பிய போது, "டீ சாப்பிட அஞ்சு ரூபாய் கொடுத்துட்டு செருப்பை எடுத்துக்குங்க" என்றார். "ஏங்க, நான் அந்த கடையில விட்ட செருப்பை நீங்க இங்க எடுத்துட்டு வந்து போட்டுட்டு என் கிட்ட அஞ்சு ருபாய் கேக்கறீங்க, என்னங்க நியாயம் இது?" என்றேன். "அந்த மாதிரி கண்ட எடத்துல எல்லாம் விட கூடாது. போலீஸ்காரங்க எடுத்துட்டு போய்டுவாங்க, அதுனால தான் நாங்க பத்திரமா கொண்டு வந்து இங்க வெக்கறோம். அதுக்கு தான் அஞ்சு ரூபாய்" என்றார். எனக்கு அஞ்சு ரூபாய் கூட பெரிதாக தெரியவில்லை, போலீஸ்காரங்க செருப்பை எடுத்துக்கொண்டு போய் விடுவார்கள் என்று சொன்னது தான் கொஞ்சம் ஓவராக இருந்தது. "தினுசு தினுசா கொள்ளை அடிக்கறாங்களே ஐயா, வீட்ல ஒக்காந்து யோசிப்பாங்களோ" என்று வடிவேலு பாணியில் புலம்பியபடி நடையைக் கட்டினேன்.

சரி, இப்படி நூதன கொள்ளை ஒரு பக்கம் என்றால் மதுரை ஆட்டோகாரர்கள் அவர்களின் சென்னை பங்காளிகளை மிஞ்சி விடுவார்கள் போலும். மதுரை சந்திப்பிலிருந்து மீனாட்சி அம்மன் கோயிலுக்கு(ஒன்றிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம்) நாற்பது ரூபாய். ஒரு இளநி இருபது ரூபாய், கரும்புச்சாறு பத்து ரூபாய் என்று எல்லாமே தடாலடி விலை. இதெல்லாம் கூட பரவாயில்லை, நம்மூரில் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் பன்னீர் சோடா கூட அங்கு எட்டு ரூபாய். மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியிருந்த இடத்தில் அமைந்த கடைகள் என்பதால் இந்த விலையா அல்லது மதுரை முழுவதுமே இப்படித்தானா என்று தெரியவில்லை. மதுரைவாசிகள் யாராவது கொஞ்சம் சொல்லுங்கள்.

எஸ்.ராவின் வலைதளத்திலிருந்து

சென்ற மாதம் கோவை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். எதிரில் ஒரு அரசு அதிகாரி பயணம் செய்தார். ரயில் கிளம்பும் வரை அவர் யாரோடோ போனில் பேசியபடியே இருந்தார் ஐம்பது வயதிருக்கும். குடிநீர் வடிகால் துறையில் பணியாற்றுவதாக அறிமுகம் செய்து கொண்டார். பேச்சு சினிமா அரசியல் என்று சுழன்று முடிவில் குடும்ப உறவுகள் பற்றியதாக திரும்பியது.

தனது மகள் திருமணமாகி அமெரிக்கா போனதில் இருந்து தனது இயல்பே மாறிப்போய்விட்டது என்றும் இவ்வளவிற்கும் அவள் என் வீட்டில் இருந்த நாட்களில் அதிகம் அவளோடு பேசியதில்லை என்று சொன்னார்.

எழுத்தாளர் டால்ஸ்டாய் தனது மகளை திருமணம் செய்து கொடுத்து பிரிய மனதில்லாமல் பக்கத்து ஊரிலே திருமணம் செய்து வைத்து தினமும் ஒரு முறை தன்னை வந்து பார்த்து போகும்படியாக ஏற்பாடு செய்திருந்தார். அது போலவே டால்ஸ்டாயின் கடைசிமகள் தான் அவரது உதவியாளர் போல கடிதங்கள், இலக்கிய பிரதிகள் யாவையும் கூட இருந்து எழுதியவள். மனைவி மீது கோபித்து கொண்ட டால்ஸ்டாய் மகள்கள் மீது காட்டிய நெருக்கம் அளவில்லாதது. ஞானியை போல வாழ்ந்த டால்ஸ்டாய் மகள் விசயத்தில் மட்டும் எளிய விவசாயி போலவே இருந்தார் என்றேன்.

அப்படிதான் இருக்க முடியும் என்றார் அதிகாரி. எனக்கு ஒரே பெண். இரண்டு பையன்கள். என் மகள் சிறுவயதில் இருந்தே அம்மாவோடு தான் நெருக்கமாக இருந்தாள். அவர்களை தாயும் மகளும் என்றே சொல்ல முடியாது. இரட்டை பிள்ளைகள் போல ஒரே ஜாடையில் ஒரே உடல் அமைப்பில் இருப்பார்கள். குரல் கூட ஒன்று போலவே இருக்கும்

ஆனால் திருமணமானமாகி அமெரிக்கா போனபிறகு அவள் தினம் ஒரு முறை என்னோடு மட்டும் தான் பேசுகிறாள். நானும் அவள் அப்படி பேச வேண்டும் என்று விரும்புகிறேன். என் இரண்டு பையன்களிடம் இல்லாத ஒரு ஒட்டுதல் அதிக நெருக்கம் மகளிடம் மட்டும் இருக்கிறது. நான் எனது பிள்ளைகளிடமே பேதம் காட்டுகிறேனோ என்று கூட தோன்றுகிறது. ஆனால் மகள் மீது உணர்ச்சிபூர்வமான ஈடுபாடு காட்டுவதை என்னால் கட்டுபடுத்த முடியவில்லை. என் மனைவி கூட இதை கேலி செய்கிறாள். இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார்.

எனக்கு உடனடியாக ஷேக்ஸ்பியரின் லியர் அரசன் நாடகம் நினைவு வந்தது. லியர் அரசனுக்கு மூன்று மகள்கள்.அவர்களில் இருவரை திருமணம் செய்து கொடுத்துவிட்டான். மூன்றாம் மகள் திருமண வயதில் இருக்கிறாள். ஒரு நாள் தனது மகள்கள் தன்னை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்ற சந்தேகம் வந்துவிடுகிறது.மூவரையும் அழைத்து கேட்கிறான்

முதல் பெண் இந்த உலகிலே உங்களை போல வேறு யாரையும் நான் நேசிக்கவேயில்லை. நீங்கள் தான் எல்லாமே என்கிறாள். அடுத்தவளோ ஒரு படி மேலே போய் நீங்கள் என் தெய்வம் என்கிறாள். மூன்றாம் மகளோ ஒரு அப்பாவை மகள் எவ்வளவு நேசிக்க வேண்டுமோ அவ்வளவு உங்களை நேசிக்கிறேன். நாளை மணமாகி கணவன் வந்தால் என் நேசித்தில் அவனுக்கும் பங்குண்டு என்கிறாள். அது அப்பாவிற்கு பிடித்தமானதாக இல்லை. மகள் மீது கோபபடுகிறாள். மூன்றாம் மகள் தன்னை நேசிக்கவேயில்லை என்று ஆத்திரம் கொண்டு அவளை துரத்த முடிவு செய்கிறார் என்று நீள்கிறது அந்த நாடகம்.

தான் நேசிக்குமளவு தன்னை மகள் நேசிக்கிறாளா என்ற கேள்வி எல்லா அப்பாக்களின் மனதிலும் இருந்து கொண்டேயிருக்கிறது போலும். உண்மையில் இது ஒரு ஆதங்கம். தன்னை போல வேறு ஒருவர் தன் மகளை நேசிக்க முடியாது என்ற உரிமை கொண்டாடுவது. அது முழுமையான நிஜமில்லை என்று தெரிந்த போதும் அந்த மனவலி தாங்க முடியாதது. ஆயிரம் வருசத்திற்கும் மேலாக இருந்து வரும் அப்பா மகள் உறவின் பிணைப்பு எளிய சொற்களால் புரிந்து கொள்ள முடியாதது என்றேன்.

அவர் சில நிமசங்கள் அமைதியாகிவிட்டார். பேச்சில்லாமல் பயணம் நீண்டது. பிறகு அவர் தன்னை நிதானப்படுத்திக் கொண்டபடியே சொன்னார்

சத்தியமான உண்மை அது. சமீபத்தில் என் மகள் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்திருந்தாள். ஒரு மாத காலம் வீட்டில் இருந்தாள். ஆனால் நான் அவளோடு அதிக பட்சம் பத்து வார்த்தைகளுக்கு மேலே பேச முடியவில்லை. தினமும் அவளை பார்த்து கொண்டேயிருப்பேன். அவளும் என்னை பார்த்து சிரிப்பாள்.

திருமணமாகி சென்ற மகளுடன் பேசும் போது ஏதோ ஒரு சிறிய விலகல் இருக்கிறது. எனக்கு மட்டுமே இருந்த பிரத்யேக உரிமையை நான் இழந்துவிட்டது போலவே நினைக்கிறேன். சொன்னால் சிரிப்பீர்கள். நானும் என் மகளும் மட்டும் தனியே எங்கேயாவது போய்வர வேண்டும் என்று விரும்பினோம். நான் அவளை அழைத்து கொண்டு காரில் பயணம் செய்தேன். காவிரி ஆற்றோரம் உள்ள ஒரு கோவிலை பார்த்து காரை நிறுத்தி இறங்கி நானும் அவளும் இடிந்து போயிருந்த படித்துறையில் உட்கார்ந்து கொண்டோம்.
என் வாழ்நாளில் அது போன்ற நிம்மதியும் சாந்தியும் ஒரு போதும் கிடைத்ததேயில்லை. அவள் வயது கரைந்து போய் சிறுமி போலவே எனக்கு தெரிந்தாள். என் மனைவியோடு எத்தனையோ கோவில்களுக்கு போயிருக்கிறேன். அப்போது கிடைக்காத ஏதோவொரு உணர்வு மகளோடு தனியே போகையில் கிடைத்தது.

ஊருக்கு கிளம்பும் நாளில் வழி அனுப்ப போகும் வரை இயல்பாக இருந்தேன். வீடு திரும்பி வந்த பிறகு கதவை மூடிக் கொண்டு அழுதேன். இவ்வளவிற்கும் நான் அதிக உணர்ச்சிவசப்படக்கூடியவனில்லை. என் மகள் விசயத்தில் நான் அப்படி என்னால் இருக்க முடியவில்லை. அவளை நான் நேசிக்கிறேன். வார்த்தைகளால் சொல்ல முடியாதபடி நேசிக்கிறேன். அது அவளுக்கும் புரிகிறது. நான் இயல்பாக தான் இருக்கிறேனா என்று சந்தேகமாக இருக்கிறது என்று கேட்டார்

என் அப்பாவும் உங்களை போல தானிருக்கிறார். எங்கோ தொலைவில் வாழும் மகளின் முணுமுணுக்கும் குரல் கூட அப்பாவிற்கு கேட்டுவிடுகிறது போலும். துடித்து போய் மகளை பார்க்க கிளம்பிவிடுகிறார்கள் என்று சொல்லி சிரித்தேன். அவரும் கூட சேர்ந்து சிரித்தார்.

லியர் அரசன் எல்லாக் காலத்திலும் இருந்து கொண்டேயிருக்கிறான் . என் முன்னே ஐம்பது வயதில் அரசு பணியாற்றும் ஒரு லியர் அரசன் அமர்ந்திருப்பதை பார்த்து கொண்டேயிருந்தேன் பிறகு இருவரும் உறங்க சென்றுவிட்டோம். அவர் வழியில் இறங்கி கொண்டுவிட்டார் போலும். இருக்கை காலியாக இருந்தது.

காலையில் எழுந்து ரயிலை விட்டு இறங்கி அறைக்கு வந்து குளித்து சாப்பிட்டு எனது அன்றாட பணிகளுக்குள் சென்ற போதும் அவரது உணர்ச்சிமயமான சொற்கள் என் கூடவே வந்து கொண்டிருந்தது.

உலகில் ஒவ்வொரு அப்பாவும் தன் பிள்ளைகள் பற்றிய எழுதப்படாத நீண்ட கதை ஒன்றை தனக்குள்ளாக சுமந்து கொண்டுதானிருக்கிறார் போலும். நான் அதன் ஒருபக்கத்தை படித்திருக்கிறேன் . அவ்வளவே.

நன்றி: www.sramakrishnan.com

Monday, 10 May 2010

ஜெய்ராம் ரமேஷ்

சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று சீனாவில் உளறியதை படித்த போதே நினைத்தேன் இவர் இன்னொரு சசி தரூர் ஆகப் போகிறார் என்று. "இந்திய உள்துறையின் அதீத பாதுகாப்பு உணர்வு மற்றும் பயம் காரணமாகவே சீன நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதில்லை" என்றார். மேலும், எல்லை பாதுகாப்பின் பொருட்டு Huawei நிறுவனத்தின் ஏற்றுமதிகளை இந்திய அரசு தடுத்தது என்று வேறு ஏதோ கூறியிருந்தார். சீன அமைச்சர் ஒருவர் பேசியது போல் இருந்தது ஜெய்ராம் ரமேஷின் பேச்சு.

மனிதருக்கு ஏழரை சனி. இன்று பிரதமர் அவரை உள்துறை அமைச்சர் சிதம்பரத்துடன் தொடர்பு கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார். அவர் பேசியதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்கிறது காங்கிரஸ் கட்சி. போதாக்குறைக்கு பா.ஜ.க அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோஷமிட ஆரம்பித்திருக்கிறது. எங்கு போய் முடிகிறது என்று பார்ப்போம்.

Sunday, 9 May 2010

படித்துக் கொண்டிருப்பது..

திரு.M.K.காந்தி அவர்களின் "My Experiments with Truth". இந்த புத்தகத்தை இவ்வளவு நாளாக படிக்காமல் இருந்தோமே என்ற வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும் நல்ல வேளை இப்போதாவது படிக்கிறோமே என்று தோன்றியது. எத்தனையோ மேல் நாட்டு ஆசிரியர்களின் புத்தககங்களை படிக்கிறோம், ஆனால் நம் மண்ணில் பொதிந்துள்ள வைரங்களை நாம் தேடுவதில்லை. "My Experiments with Truth" அப்படியொரு வைரம்.

"மகாத்மா" என்ற சொல் பலமுறை தன்னை வெட்கமடைய செய்திருக்கிறது என்கிறார் முகவுரையில். மிகுந்த பாலுணர்ச்சி காரணமாக தன் தந்தை இறந்த போது அவருடன் இருக்க முடியாமல் போனதை குறித்து வருந்துகிறார். நெருங்கிய நண்பர் ஒருவர் பெண்கள் பற்றி சொன்னதை நம்பி தன் மனைவியை சந்தேகித்தது, வேசிப் பெண்களை தேடி சென்று திரும்பி வந்தது, தன் ஆணாதிக்க சுபாவம், பயம் காரணமாக பல பொது மேடைகளில் பேச முடியாமல் போனது போன்ற தன் தவறுகளை தான் நிறைய பதிவு செய்திருக்கிறார். இந்த புத்தகம் எழுதப்பட்ட காலத்தில் அவர் ஒரு "icon". தன் தவறை எல்லாம் அவர் சொல்ல வேண்டியே அவசியமே இல்லை.

ஒரு பக்கம் இதையெல்லாம் காந்தியே செஞ்சிருக்காரு, அட நம்ம செஞ்ச என்ன என்று தோன்றினாலும், தன் ஒவ்வொரு தவறில் இருந்தும் பாடம் கற்று அவர் மகாத்மா ஆனது தான் நாம் குறித்துக்கொள்ள வேண்டிய விஷயம்.இந்த புத்தகம் படித்த பின் மீண்டும் ஒரு முறை ஜெயமோகனின் காந்தி பற்றிய பதிவுகளை படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

Friday, 7 May 2010

கொல்கத்தா மக்களுக்கு ஒரு தமிழனின் வேண்டுகோள்

உங்கள் ஊரில் பிறந்து வளர்ந்த ஒரு "தமிழ்" பெண்ணை திருமணம் செய்ததாலும் மற்றும் என் பணி காரணமாகவும், என் கிரகம் உங்க ஊருக்கு ஒரு வருஷத்துக்கு நாலு இல்ல அஞ்சு முறை வரேன். எந்த அடிப்படைல உங்க ஊரை "மெட்ரோ" கணக்குல கொண்டு வந்தாங்களோ தெரில ஆனா நிச்சயம் அது அந்த வகையறா கிடையாது. உங்க ஊருக்கு அஞ்சு வருஷமா வந்து போறவன் அப்படின்ற முறையில சில வேண்டுகோள் வெக்கிறேன். தயவு பண்ணி கொஞ்சம் மாற முயற்சி பண்ணுங்க.

1. மம்தா பானர்ஜிக்கு வெளிக்கு வரலேனா கூட சிகப்பு கொடி பிடிக்கறீங்க. இதுல என்ன பிரச்சனை அப்படின, நீங்க சிகப்பு கொடி பிடிச்சு ஊர்வலம் போற பக்கம் பஸ் விட மாட்டேன்கறான். காலைல ஒரு ஸ்டாப்ல எறங்கிட்டு அதுக்கு எதிர் ஸ்டாப்பிங் போய் சாயங்காலம் நின்னா பஸ் வர மாட்டேன்குது. கேட்டா ஊர்வலம் போற பக்கம் பஸ் வராதுங்கறான். எங்களை மாதிரி வெளியூர்காரன் எப்படி அங்க வாழறது?

2. கொல்கத்தா பெண்களே, இது உங்களுக்கு. நீங்க எங்கள அண்ணன் மாதிரி நெனைச்சு தான் பஸ்ல பக்கத்துல நெருக்கிகிட்டு உட்கார்றீங்க. ஆனா, எங்களுக்கு ஒரு தம்பி இருக்கான். அவன் ஒரு சமயம் போல இருக்க மாட்டான். கூட்டம் தள்ளினா எங்க மேல விழறது, உங்க சொத்துக்களை எங்க மேல வெச்சு தேய்க்கறது எல்லாம் தாங்க முடில. நாங்கெல்லாம் தமிழன். அக்கா, தங்கச்சி, அம்மா தவிர எல்லாமே எங்களுக்கு பிகர் தான். உங்க அளவுக்கு சகோதரத்துவம் எல்லாம் எங்களுக்கு கிடையாது.

3. கொல்கத்தா ஆண்கள் கவனிக்க. பஸ் சீட்ல கொஞ்சம் அடக்கமா ஒக்காருங்க. கவட்டைய நல்ல விரிச்சிக்கிட்டு பக்கத்துக்கு சீட்ல முக்கால் பகுதியை எடுத்துகாதீங்க. நாங்களும் மனுஷங்க தான். அப்பறம், கைல பொட்டி, பை இதெல்லாம் வெச்சி இருந்தா
எறங்கற எடம் வரைக்கும் அத நீங்களே வெச்சுக்குங்க. யவன் ஒக்காந்து இருக்கானோ அவன் மடில அஞ்சு கிலோவை எறக்கி வெக்காதீங்க.

4. எச்சை துப்பும் போது சுத்திப் பாருங்க. யாரும் வரலேனா துப்புங்க. மேல துப்பிட்டு கூச்சமே இல்லாம, "ஏன்டா நான் துப்பும் போது வந்தேன்னு கேக்கறீங்க?". என்ன நியாயம் இது?

5. நாடு ரொம்ப முன்னேறியாச்சு. ரயில் பயணத்துக்கு முன்பதிவு எல்லாம் கம்ப்யூட்டர் உபயோகிச்சே செய்யலாம். அதை எல்லாம் தெரிஞ்சுக்குங்க. இன்னும் ஐம்பது வருஷம் பின் தங்கியே இருக்கீங்க. அதே மாதிரி, காளி மாதாக்கு பான் பராக் போட்ட வாயோடையே பூஜை எல்லாம் செய்யாதீங்க. உங்களுக்கு அது பிரச்சனை இல்ல. என்ன மாதிரி வெளியூர்காரனுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.

6. கொல்கத்தா கணினி பொறியாளர்களே, நீங்களும் ஆபீசுக்கு பான் பராக், ஜர்தா எல்லாம் போட்டுட்டு வராதீங்க. எனக்கு புரியுது, அது உங்க குல வழக்கம். இருந்தாலும் பக்கத்துல இருக்கறவனுக்கு எவ்வளோ கஷ்டமா இருக்கும் அப்படின்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. அத மாதிரி கண்ட இடத்துல சிகரட் பிடிக்காதீங்க. பொது இடங்களில் புகை பிடிக்க தடை இருக்கு. ஆனா, உங்க ஊர்ல அதெல்லாம் விஷயமே இல்ல. அந்த சட்டத்தை அன்புமணி ராமதாஸ் கொண்டு வந்தப்போ அப்படி தான் பிடிப்போம்னு சொன்னவரு உங்க முதலமைச்சர். "யதோ ராஜா, ததோ பிரஜா".

7. எந்த கேள்விக்கும் சுருக்கமா பதில் சொல்ல முயற்சி செய்யுங்க. ஒரு எடத்துக்கு எப்படி போகணும் அப்படின்னு என்ன மாதிரி ஒரு வெளியூர்க்காரன் கேட்டா, அவனுக்கு அந்த எடத்தோட வரலாறு, பூகோளம் எல்லாம் சொல்லாதீங்க. நாங்களே நெறைய பேசறவங்க. ஆனா உங்க கூட பேசும் போது எங்களுக்கு கண்ணை கட்டுது.

8. எடுத்த உடனே சண்டைக்கு வராம, உங்க பக்கம் தப்பு இருக்கான்னு ஒரு வாட்டி நிதானமா யோசிங்க. முக்கியமா சண்டை போடும் போது ரோட்ல ஓரம் கட்டி சண்டை போடுங்க. உங்க சண்டைய பாக்க பஸ் டிரைவர், பஸ்ல இருக்கறவன் எல்லாம் போறானுங்க. நாங்க எல்லாம் எப்போ வீடு போய் சேரர்து?

9. குப்பைய எல்லாம் ஊருக்கு ஒதுக்கு புறமா எங்கயாவது போட சொல்லுங்க உங்க மாநகராட்சிய. இப்போ எங்கள பாருங்க. பள்ளிக்கரனை அப்படிங்கற எடத்தை குப்பை போடற எடமாவே மாத்திட்டோம். அந்த மாதிரி எதாவது செய்யுங்க. நடு ரோட்ல குப்பைய போட்டா நல்லாவா இருக்கு?

10. கடைசியா, கம்யூனிஸ்ட் கட்சிக்கு தான் ஒட்டு போடறதுன்னு முடிவு பண்ணிடீங்க. அதுல கொஞ்சம் படிச்சவனா, பண்புள்ளவனா பார்த்து ஓட்டுப் போடுங்க. உங்க ஊரு முன்னேற நீங்க பார்த்து எதாவது செஞ்ச தான் உண்டு.

Sunday, 2 May 2010

என்னை செதுக்கியவர்கள்

திரு.சிவகுமார் அவர்கள் ஒரு நல்ல நடிகர் என்று தெரியும் ஆனால் அவர் ஒரு சிறந்த பேச்சாளர் என்பதை நேற்று தான் தெரிந்து கொண்டேன்."என்னை செதுக்கியவர்கள்" என்ற தலைப்பில் "பாவை பொறியியல் கல்லூரியில்" கடந்த மாதம் அவர் பேசியதை விஜய் டிவி நேற்று ஒளிபரப்பியது. நாற்பது வருடங்களுக்கு முன் அவர் நடித்த படங்களில் இருந்து வசனங்கள், பாரதி பாடல்கள், கலியன் பூங்குன்றனார் பாடல்கள் என்று ஒன்றை கூட எழுதி வைத்துக் கொள்ளாமல் அவர் பேசியது அவரது அபாரமான ஞாபக சக்திக்கு உதாரணம். அவர் தமிழும் அற்புதம்.

ஒரு சினிமா நடிகன் படும் கஷ்டம் என்ன என்று அனைவருக்கும் தெரியும் விதம் ஒரு சம்பவத்தை விவரித்தார். "கவிக்குயில்" படத்திற்காக மழையில் அவர் படுத்திருப்பது போல் ஒரு காட்சி. காட்சி படமாக்கப்பட்ட இடம் ஒரு மலை போலும். வழக்கம் போல் செயற்கை மழை பெய்ய, காட்சியை படம் பிடிக்க ஆரம்பித்த குழு அப்போது தான் அந்த மலையை சுற்றியிருந்த கிராம மக்கள் அந்த மலையை தங்கள் இயற்கை உபாதைகளுக்காக பயன்படுத்துவதை உணர்ந்தார்களாம். வேறு இடம் தேட முடியாது என்பதால் காட்சியை படமாக்க முடிவு செய்யப்பட்டது. மழையில் அந்த மலக் கழிவுகள் நீரோடு கலந்து சிவகுமார் அவர்களின் முகம், உடல் என்று எங்கும் படர, மூன்று மணி நேரம் அதற்கு நடுவில் இருந்து அந்த "ஷாட்" எடுக்கப்பட்டது என்றார். அந்த நிகழ்ச்சி மனதை வேதனைப்படுத்தியது என்றாலும் அந்த காலகட்டத்தில் மனித மலம் அள்ள ஒரு கூட்டம் இருந்ததே, அவர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் வாழ்வை நினைத்து எவ்வளவு வேதனை அடைவார்கள் என்று நினைத்து பார்த்தேன். அதோடு ஒப்பிட்டால் என் கஷ்டம் பெரிதல்ல என்று மனதை தேற்றிக் கொண்டேன் என்றார்.

திரு ஏ.வி.எம் செட்டியார் அவர்கள் தான் பாரதியாரின் பாடல்களை பொதுவுடைமை செய்தவர் என்ற புது தகவலையும் தெரிவித்தார். சிவாஜி அவர்களின் நேரம் தவறாமை, தொழில் பக்தி, டைரக்டர் ஏ.பி.நாகராஜன் அவர்களின் வசனம் எழுதும் திறமை மற்றும் அனைவரையும் சரி சமமாக நடத்தும் அவர் பண்பு என்று நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். வெகு நாளைக்கு பிறகு ஒரு நல்ல நிகழ்ச்சிக்காக தொலைக்காட்சி முன் நேரம் செலவழித்தேன். நிறைவாக இருந்தது.

Monday, 26 April 2010

The Alchemist

பிரேசிலிய எழுத்தாளர் பாலோ கொய்லோ அவர்களின் "The Alchemist" புத்தகத்தை படிக்க நேர்ந்தது. இதுவரை உலகின் 42 மொழிகளில் இந்த புத்தகம் பிரசுரமாகியுள்ளது. "உங்கள் கனவுகளை தொடருங்கள்" என்பது தான் புத்தகத்தின் முக்கிய கருத்து. அப்படி தொடரும் ஒரு சிறுவனின் வாழ்வில் ஏற்படும் அனுபவங்களை அங்கங்கே கொஞ்சம் தத்துவம் தெளித்து நமக்கு வழங்குகிறார் கொய்லோ. நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.

புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட சில எண்ணங்களை தவிர்க்க முடியவில்லை. உதாரணமாக, சுய பரிசோதனை செய்தல், கனவுகளை தொடர்தல், மனதுடன் பேசுதல் போன்றவற்றை விட சிறப்பாக சொல்லும் புத்தகங்கள் தமிழிலும் பிற இந்திய மொழிகளிலும் உண்டு. உதாரணமாக, பாலகுமாரனின் கற்றுக்கொண்டால் குற்றமில்லை, சுவாமி சுகபோதனந்தவின் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ், அய்யா அப்துல் கலாம் அவர்களின் அக்னிச் சிறகுகள் போன்றவை உடனே நினைவிற்கு வருகின்றன. ஆனால், இந்த புத்தகங்களை பற்றி எத்தனை வெளிநாட்டினருக்கு தெரியும்? வெளிநாட்டை விடுங்கள், நம்ம ஆளுங்க எத்தனை பேருக்கு இந்த புக் எல்லாம் தெரியும்?

இந்தியா பல தத்துவங்களின் பிறப்பிடம். ஆனால், நம்ம புத்தகங்கள் மற்ற மொழிகளில் பிரசுரமாவதே இல்லை. ஏன் இந்த நிலை? தெரியவில்லை. பாலகுமாரன் அவர்களின் பல புத்தகங்கள் "உங்களை அறிவது எப்படி", "வாழ்வின் அர்த்தம்" போன்ற தலைப்புகளில் வெவ்வேறு மொழிகளில் வெளியிடும் அபார தகுதி பெற்றவை. பாலகுமாரன் போன்றவர்களை படித்ததனால் தானோ என்னவோ தெரியவில்லை "The Alchemist" படித்த போது உற்சாகம் பீறிட்டு கொண்டெல்லாம் வரவில்லை. ஆனால், பலரை கேட்ட போது "The Alchemist" தங்கள் வாழ்வை மாற்றியது என்றார்கள். இதை சில பிரபல நடிகர்/நடிகைகள் சொல்ல கூட நான் பேட்டிகளில் கேட்டிருக்கிறேன்.

நல்ல புத்தகங்களை தேடிப் படிக்கும் பலர் நம்மில் உண்டு. நிச்சயம் நம் மொழியின் சிறந்த படைப்புகளை உலகிற்கு அடையாளம் காட்ட நம்மால் முடிந்த முயற்சிகளை எடுக்க வேண்டும்.

Sunday, 25 April 2010

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?

பாண்டியிலிருந்து காரில் சென்னை வந்து கொண்டிருந்தேன். கிழக்கு கடற்கரை சாலையில் "மாயாஜால்" அருகே வரும் போது வாகனங்களின் வேகத்தை கண்காணிக்கும் "Interceptor" என்ற போலீஸ் குழு ஒன்று நின்று கொண்டிருந்தது. என் காரை ஓரம் கட்டும்படி தூரத்தில் இருந்தே சமிக்ஞை செய்தனர். கார் நின்றவுடன் அருகே வந்த காவலர் ஒருவர் "நீங்க, 75 கிலோமீட்டர் வேகத்துல வரீங்க, இங்க 40 தான் போகலாம்" என்றார். பாண்டியில் இரண்டு "Fosters" அடித்திருந்ததால் எங்கே குடி போதையில் வாகனம் ஓட்டினார் என்று 3000 ரூபாய் தீட்டி விடுவார்களோ என்று பயந்து, "சரி, என்ன செய்யலாம் சொல்லுங்க?" என்றேன். "300 ரூபாய் அபராதம் கட்டுங்க, நான் ரசீது தரேன்" என்றார். சரி என்று என் Driving License மற்றும் 300 ரூபாய் பணம் கொடுத்தேன். அதை வாங்கிக்கொள்ளாமல் "நீங்க எங்க வேலை செய்யறீங்க?" என்றார் அவர். "Manufacturing Industry" என்றேன்.

சரி, "பைன் எல்லாம் வேண்டாம். ஒரு நூறு ரூபாய் கொடுத்தது போங்க" என்றார். நான் அபராதம் செலுத்த தயாராக இருந்தேன். ஆனால், அரசு ஊழியரோ அரசுக்கு வருமானம் வேண்டாம், என்னை கவனித்துகொள் என்கிறார். சரி என்று நூறு ரூபாய் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்த போது, "எவ்வளோ இருந்தாலும் கொடுங்க, நூறு ரூபாய் இல்லாட்டி பரவாயில்லை" என்றார். சரி என்று சில்லரையாக இருந்த தொண்ணூறு ரூபாய் பணத்தை எடுத்துக் கொடுத்தேன். மனிதர் அதை வாங்கிக்கொண்டு பம்மியபடி, "சார் நான் பணம் வாங்கிட்டேன்னு கோச்சுக்க கூடாது. இனிமே வேகம் பார்த்து போகணும், சரியா? என்றார். உடம்பை நெளித்துக்கொண்டு அதை அவர் சொன்ன பாணி இருக்கிறதே, அதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. தன் சுய லாபத்துக்காக இயங்கும் இவர்கள் எப்படி சட்டத்தை காப்பார்கள்?

Monday, 19 April 2010

திமலா

சில மாதங்களாகவே திருப்பதிக்கு மலை மீது ஏறி வர செல்ல வேண்டும் என்று ஒரு பிரார்த்தனை .தள்ளி போட்டுக்கொண்டே இருந்தது, ஒரு வேகத்தில் இந்த வெள்ளிக்கிழமை என்று முடிவு செய்து கிளம்பிவிட்டேன் தனியாக.

பெங்களூருவில் இருந்து சுமார் ஆறு மணி நேர பஸ் பிரயாணம். சில இடங்களில் சாலை போட்டுக்கொண்டு இருக்க, பொதுவாக நல்ல சாலை. எந்த இடத்தில் ஆந்திர பிரிகிறது என்று பார்க்க ஆசை, அதை முல்பாகல் என்ற ஊர் தீர்த்து வைத்தது கடை திறப்பு விழாவில் ஒரு பக்கம் உபேந்திரா மறுபக்கம் சிரஞ்சீவி படங்கள், எதிர்பார்த்த மாதிரியே சில நிமிடங்களில்
தெலுகு தேசம் வரவேற்றது.

கீழ் திருப்பதியில் சாப்பிட்டுவிட்டு (சும்மா படிக்கலாம் என்று ஒரு குமுதம் வாங்கினேன், ரூ.12 (பிற மாநிலங்களில்) என்று போட்டு இருக்கும் குமுதத்தை ரூ. 15 என்று சொன்னார் ,ஏனென்று கேட்டதற்கு பஸ் ஸ்டாண்டில் ரூ.15 என்றார், இப்படி பல தளங்களில் பல கொள்ளைகள்!) நல்ல வெயிலில் அலிபிரி (மலைக்கு மேலே நடக்கும் பாதை ஆரம்ப இடம் அல்லது மேலே செல்லும் ரோடும், கீழே வரும் ரோடும் சந்தித்துக்கொள்ளும் இடம் ) சென்று, நடக்க ஆரம்பித்தேன். முதல் ஒரு மணிநேரம் வடிவேலு பாஷையில் சொன்னால் 'திணற திணற ' ஏற வேண்டி இருக்கிறது. 20 படிக்கட்டுகள் ஏறினாள் சர்வ நிச்சயமாக உட்கார வேண்டிய சூழ்நிலை.தப்பு பண்ணிட்டமோ என்று யோசிக்கும் போது இரண்டு பெண்கள் என்னை கடந்து சென்றார்கள் ஒருவர் ஒவ்வொரு படிக்கும் மஞ்சள் வைக்க மற்றொருவர் குங்குமம் வைத்துக்கொண்டு சென்றார், பெண்டு நிமிர்ந்துடுச்சு என்று சொல்வோமே அது இதைத்தான் போல...

விளைவு - பயபக்தியுடன் படி ஏறினேன். காளிகோபுரம் என்ற இடம் வந்தவுடன் போட்டோ எடுத்து மேலே தரிசனத்திற்கு டிக்கெட் குடுத்தார்கள். அங்கே தண்ணீர் குடித்து , லெமன் ஜூஸ் குடித்து ஆசுவாச படுத்திக்கொண்டு மேலே ஏற ஆரம்பித்தால் இனிய அதிர்ச்சி ... படிக்கட்டுகள் அவ்வளவு செங்குத்தாக இல்லாமல் ஒரு வகை நடை பாதை போல இருந்தது.

mp3 player-இல் அன்னமைய்யாவும் ராமதாசும் ஒலிக்க , வேகமாக மேல ஏற முடிந்தது. மீண்டும் சேஷாத்ரியில் செங்குத்து படிக்கட்டை பார்க்கும்போது பயம் வரவில்லை, அங்கேயும் ஒரு இளைஞர் படிகளை முட்டி போட்டுக்கொண்டு ஏறிக்கொண்டு இருந்தார், என்ன பிரார்த்தனையோ?!

ஒரு வழியாக மேலே போய் சேரும்போது மணி மாலை 6:30 ! உடனே டிக்கட்டில் குறிப்பிட்ட வைகுந்தம் complex போய் சேர்ந்த போது மணி ஏழு. என்னடா குழப்பம் இல்லாமல் போகிறதே என்று கவலைப்படும்போது, பெருமாள் புன்னகைத்தார்.. அங்கே Cellphone/Luggage Receiving counter என்று எழுதி வைத்து இருந்தனர். அங்கே எனது செல்போனை / Shoulder Bag - ஐ கொடுத்த போது , செல் போனை மட்டும் வாங்கிக்கொண்டு பையை திருப்பி தந்துவிட்டனர்- பிறகு security checking-இல் பையில் MP3 player கண்டுபிடிக்கப்பட்டு அங்கே இருந்த போலீஸ் காரர்களால் 'அன்பாக' தள்ளப்பட்டேன்! பிறகு அதே ரசீதில் பையையும் சேர்த்து விட்டு Queue என்ற ஜோதியில் ஐக்கியமானேன். பலவருடங்களாக மாறாத அதே கரிய மொட்டைகள் / அதே தெலுகு ... நடுவில் இரண்டு அடி அகலத்தில் உள்ள ஒரு பாதையில் சுமார் 1 மணிநேரம் நிற்க வைத்து விட்டார்கள் .. அந்த அனுபவத்தை வார்த்தையில் விவரிப்பது கடினம் ,சுருக்கமாக சொன்னால் வைகுண்டத்திற்கு அருகில் போய் வரலாம்.அல்லது நரகத்திற்கு அருகிலும் போய் வரலாம் , உங்கள் கர்ம வினையை பொருத்து இருக்கிறது. அங்கே இருக்கும் பலர் குறிப்பாக தமிழ் இளைஞர்கள் "ஏடு குண்டலவாடா வெங்கடரமணா கோவிந்தா கோவிந்தா " என்ற கோஷத்தை ஒரு காமெடி டைலாக் போல ஆக்கிவிட்டாச்சு , கோவிந்தா , பசிக்குது கோவிந்தா , லட்டு கோவிந்தா , அரியர்ஸ் கோவிந்தா என்று பல கோவிந்தா கோஷங்கள்! பிறகு ஆனந்த நிலையத்தை அடைந்ததுமே பலமான நெரிசல்... மொத்தமாக தரிசன நேரம் 5 வினாடிகள்.தரிசனம் முடிந்து தீர்த்தம் சடாரி வாங்கும் க்யூவில் ஒரு மாமி தனது கைப்பையை துழாவி 2 ரூபாய் எடுத்து வைத்துக்கொண்டார் , போட்டாரா தெரியவில்லை.

தரிசனத்திற்கு பிறகு , இலவச பிரசாதம் அளிக்கும் இடத்தை ஆர்வமாக நெருங்கினேன், எனக்கு முன்பு வரை வெண்பொங்கல் குடுத்து இருந்தவர்கள், நான் போன போது, லட்டுக்கு மாறி விட்டார்கள் ஹ்ம்ம்... பிறகு வீட்டிற்கு லட்டு வாங்க நிற்க தனி Q ,பெருமாளை பார்பதற்கு இருக்கும் கஷ்டத்தை விட  லட்டு வாங்குவதற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டி இருக்கிறது.

இந்த பிரயாணத்தில் கவனித்தது,

திருப்பதியில் தமிழ் influence நன்றாகவே இருக்கிறது, எல்லா இடங்களிலும் தமிழ் போர்டுகள் வரவேற்கிறது, முன்பே இருந்ததுதான் என்றாலும் இப்போது அதிகமாகவும் தவறு ஏதும்

இல்லாமல் தெளிவாக எழுதப்பட்டு இருக்கிறது.இவ்வளவு கூட்டத்திற்கு திருப்பதி மிக மிக சுத்தமாக இருக்கிறது.இந்த பிரம்மாண்டத்தில் பக்தி என்ற விஷயம் அடிபட்டு போவதற்கு மிக அதிக வாய்ப்பு இருக்கிறது.

நடை பாதை நடுவில் 12 ஆழ்வார்கள் சிலை வைத்து அவர்க்கான சரித்திரத்தை எழுதி வைத்து இருக்கின்றனர், முழங்கால் முறிச்சான் என்ற இடத்தில் ராமானுஜர் பற்றி எழுதி இருக்கின்றனர். கீழ் திருப்பதியில் M.S.சுப்புலட்சுமி அவர்களுக்கு சிலை வைத்து இருக்கின்றனர்.

எனக்கு தோன்றியதெல்லாம் இதே திருப்பதி தமிழ்நாட்டோடு இருந்தால் அன்னமையா பற்றி எழுதி வைத்து இருந்தால் என்ன சொல்லி இருப்பர்? தெலுகு மொழிக்காரர்கள் எப்படி dominate செய்கிறார்கள் என்று சொல்லி சொல்லி ஒரு விதமான இயக்கத்தை நடத்தி இருப்பர்? இன்று மார்கழி மாதத்தில் திருப்பாவையை ஒலிக்க செய்கின்ற இதே இடத்தில் ஒரு மாதம்
அன்னமையா கீர்த்தனைகளை ஒலிக்க செய்ய திருமாவளவன் , வீரமணி போன்றோர் அனுமதிக்க வேண்டும்.

சரி, இந்த பதிவிற்கு தலைப்பு திருமலை இல்லை திமலாதான் , ஏனென்று சொல்வோருக்கு 1000 பொற்காசுகள் பரிசு!

Wednesday, 7 April 2010

ஏன் இந்த கரிசனம்?

"வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் இந்திய அரசு என்னும் அமைப்பை உடைத்துவிட்டு ஆட்சியை பிடிப்பதே மாவோயிஸ்டுகளின் லட்சியம்".

இதை சொன்னது எந்த மாவோயிஸ்ட் தலைவரும் இல்லை. கடந்த மாதம் புது டெல்லியில் "இடதுசாரி தீவிரவாதம்" என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் இந்திய உள்துறை செயலர் G.K.Pillai சொன்ன வார்த்தைகள் இவை. 2009 ஆம் ஆண்டு மட்டும் 908 பேர் மாவோயிஸ்ட் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் சிலர் உதவி செய்துக்கொண்டு இருக்கலாம் என்றும் G.K.Pillai கூறியிருந்தார். அவர் பேசி ஒரு மாதம் கூட ஆகவில்லை. நேற்று சட்டீஸ்கர் மாநிலத்தில் எண்பது காவலர்களை மாவோயிஸ்டுகள் கொன்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற உள்துறை அமைச்சர் சிதம்பரம், "மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்தும் திட்டம் இல்லை என்று கூறியிருக்கிறார். இதையே தான் திரு.A.K.Antony கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொல்கத்தாவில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்திய போது தெரிவித்தார். மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்துவதில் என்ன தவறு? தீவிரவாதத்தை வேரோடு அறுக்க வேண்டும் என்று கூறும் இந்திய அரசு உள்நாட்டில் தீவிரவாதத்தை வளர்க்கும் மாவோயிஸ்டுகளை அழிப்பதில் ஏன் தயக்கம் காட்டுகிறது? இந்திய நிலப்பரப்பில் 40% மாவோயிஸ்டுகள் வசம் இருக்கிறது என்கிறது விக்கிபீடியா.

"As of 2009, Naxalites are active across approximately 220 districts in twenty states of India accounting for about 40 percent of India's geographical area. They are especially concentrated in an area known as the "Red corridor", where they control 92,000 square kilometers. According to India's intelligence agency, the Research and Analysis Wing, 20,000 armed cadre Naxalites were operating apart from 50,000 regular cadres working in their various mass organizations and millions of sympathisers and their growing influence prompted Indian Prime Minister Manmohan Singh to declare them as the most serious internal threat to India's national security."

உள்நாட்டு பாதுகாப்பிற்கு இத்தனை பெரிய சவால் விடுக்கும் இந்த இயக்கத்தை வேரோடு அறுத்தெறிய வேண்டாமா? இவர்கள் மீது கரிசனம் ஏன்? நேற்று கொல்லப்பட்ட எண்பது காவலர்களின் குடும்பங்கள் என்ன செய்யும்? ஐம்பதாயிரம் ரூபாய் பணமும் அவர்கள் பிள்ளைகளுக்கு ஒரு வேலையும் தந்தால் அரசின் பொறுப்பு முடிந்து விட்டதா? இவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து என்ன ஆகப் போகிறது?

இந்தியாவை குறிவைக்கும் லஷ்கர்-இ-தொய்பா, இந்தியன் முஜாஹிதீன் போன்ற அமைப்புகள் இவர்களை உபயோகிக்காது என்பது என்ன நிச்சயம்? உள்துறை செயலர் பிள்ளை அவர்கள் சொல்வது போல் முன்னாள் ராணுவ வீரர்கள் தான் இவர்களுக்கு போர் தந்திரங்களை கற்றுக் கொடுக்கிறார்கள் என்ற சந்தேகம் இருந்தால், அவர்கள் யார் என்று கண்டுபிடிப்பது அத்தனை கடினமா? திரு சிதம்பரம் அவர்களே, "The buck does not stop with the state. You are responsible too".

Tuesday, 6 April 2010

ஜெயலலிதாவிற்கு சில யோசனைகள்

2006 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆரம்பித்த தி.மு.க வெற்றி அதன் பின் நடந்த பத்து இடை தேர்தல்களிலும் தொடர்ந்து இப்போது பதினோரவதாக பென்னாகரத்தில் முடிந்திருக்கிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கை அதன் கடைநிலை தொண்டனுக்கு நிச்சயமாக இருக்காது. அ.தி.மு.க தலைமையும் பாவம் என்ன செய்யும்? சிறுதாவூர், கொடநாடு என்று சென்று வெற்றி பெறுவதற்கான வழிகளை யோசித்துக்கொண்டு தான் இருக்கிறது.

இதற்கிடையே, தமிழினத் தலைவருக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால் அனுதாப ஒட்டு முழுவதும் அங்கு சென்று விடும்.அழகிரி "பவரை" தாண்டி அ.தி.மு.கவிற்கு கிடைக்கிற பத்து பதினைந்து தொகுதி கூட அந்த நிலையில் கிடைக்காது. இப்படி ஒரு இக்கட்டான சுழலில் வரும் சட்டசபை தேர்தலில் தமிழக மக்களை தன் பால் ஈர்க்க ஜெயலலிதா என்ன செய்யலாம்? நம்மால் முடிந்த சில யோசனைகள்.

1. தமிழக மக்கள் ஜாதிப் பற்றுடையவர்கள். உதாரணமாக, அமைச்சர் ஆ.ராசா 3G Spectrum ஊழலில் சிக்கிய போது கலைஞர் என்ன செய்தார் என்று நினைவிருக்கிறதா? ராசா "தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்" என்பதால் தானே அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது என்றார். அவ்வளவு தான். யாரும் வாயை திறக்கவே இல்லை. அது போல்,"நான் பிராமண வகுப்பை சேர்ந்த பெண்மணி என்பதால் தானே தமிழ்நாட்டில் உள்ள மற்ற கட்சிகள் என்னை தீண்டத்தகாத ஒருவரை போல நடத்துகின்றன? தமிழக மக்களே, இது நியாயமா?" என்று கேட்கலாம்.தமிழகத்தில் ஜாதிக் கலவரம் உருவாக இது ஒரு நல்ல வழி. சரியாக சட்டசபை தேர்தலுக்கு முன் இதை செய்தால், தேர்தல் நிறுத்தப்பட்டு ஆளுநர் ஆட்சி அறிவிக்கப்படலாம். அதற்கு பின் நடக்கும் தேர்தலில் அ.தி.மு.க நிச்சயம் வெற்றி பெறும்.

2. "ஸ்டாலினுக்கு அனுபவம் குறைவு. கலைஞரின் உடல்நலமோ சரியில்லை. இந்த நிலையில் என்னை விட சிறப்பாக யார் தமிழகத்தை நிர்வகிக்க முடியும்? எனவே, தமிழக மக்கள் ஆட்சிப் பொறுப்பை என்னிடம் கொடுக்க வேண்டும். ஸ்டாலின் எப்போது தயார் என்று "நான்" நினைக்கிறேனோ அப்போதே ஆட்சிப் பொறுப்பை அவரிடம் தந்து விடுகிறேன்" என்று சொல்லலாம்.

எம்.ஜி.யார் உடல்நலம் சரியின்றி அமெரிக்கா சென்ற போது, கலைஞர் என்ன சொன்னார்? "ஆட்சியை என்னிடம் கொடுங்கள், எம்.ஜி.யார் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் திருப்பித் தருகிறேன்" என்றார். அதை போல தான் இதுவும். எதையும் கூர்மையான மதி நுட்பத்துடனும் தொலைநோக்கு பார்வையுடனும் சிந்திக்கும் தமிழக மக்கள் இதை ஏற்றுக்கொள்ள வாய்ப்புண்டு. "ஸ்டாலினுக்கு அனுபவம் வந்தவுடன் ஆட்சியை தருகிறேன் என்கிறாரே, இந்த பெரிய மனது யாருக்கு வரும்?" என்று பாராட்டுக்கள் வேறு குவியும்.

3. "என்னை பொறுத்தவரை அழகிரி தான் தமிழகத்தை ஆள ஸ்டாலினை விட தகுதியானவர். ராமன் இருக்க பரதனுக்கு முடிசூட்ட நினைக்கும் தசரதனை தமிழக மக்கள் என்ன செய்ய போகிறார்கள்?" என்று கேள்வி எழுப்பலாம். இது ஜாதிக் கலவரத்தை காட்டிலும் உக்கிரமான விளைவுகளை உருவாக்க கூடியது. குறைந்த பட்சம் தமிழகத்தில் ஆயிரம் பேர் மரணம், நூறு பஸ் எரிப்பு போன்றவை நடக்கும். தேர்தல் ரத்தாகும். தேர்தல் மீண்டும் நடக்கும் பட்சத்தில் மக்கள் உயிருக்கு பயந்தாவது அ.தி.மு.கவிற்கு ஓட்டளிப்பார்கள்.

4. ஜெயா டிவியில் "ஆங்கிலம் சிறப்பாக பேசுபவர் கலைஞரா/அழகிரியா/ஸ்டாலினா?" என்று தென் மாவட்டங்களில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தலாம். ஸ்டாலின் தான் வெற்றி பெற்றார் என்று அறிவித்த உடனே தென் மாவட்டங்களில் உள்ள ஜெயா டிவி அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்படும். அந்தந்த மாவட்ட தி.மு.க தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் சுவரேறி குதித்து உள்ளே வந்து ஆட்களை உதைப்பார்கள். மதுரையில் அழகிரியே கூட பங்கேற்கலாம். இதையெல்லாம் காமெராவில் பதிவு செய்து தேர்தல் வரும் வரை ஒளிபரப்பலாம். அனுதாப ஒட்டு முழுதும் அ.தி.மு.கவிற்கு தான்.

5. தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றால் இலவச டிவியுடன் DVD ப்ளேயர் இலவச இணைப்பாக வழங்கப்படும் என்று அறிவிக்கலாம். மேலும், DVD வாங்க மக்கள் அலையவேண்டாம், அவை ரேஷன் கடைகளில் விற்கப்படும். இரண்டு கிலோ துவரம்பருப்பு வாங்கினால் ஒரு DVD இலவசம், ஒரே சமயத்தில் பத்து கிலோ மற்றும் அதற்கு மேலாக மளிகை சாமான்கள் வாங்குபவர்களுக்கு புதுப்பட டிவிடிக்கள் கொடுக்கப்படும் போன்ற அறிவிப்புகள் நிச்சயம் வெற்றிக்கனியை பறிக்க அ.தி.மு.கவிற்கு உதவும்.

6. "அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் எனக்கு பாராட்டு விழாக்கள் எதுவும் நடத்தப்பட மாட்டாது" என்று அறிவிக்கலாம். இன்றைக்கு இருக்கின்ற சூழ்நிலையில், இந்த ஒரு காரணத்திற்க்காகவே தமிழக மக்கள் அ.தி.மு.கவிற்கு ஓட்டளிப்பார்கள்.

Friday, 12 March 2010

ராம நவமி விழா - அயோத்யா மண்டபம்

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்யா மண்டபத்தில் நடக்கும் வருடாந்திர ராம நவமி விழாவிற்கு நான் செல்வது வழக்கம். சென்ற வாரம் கூட ஹிந்துவின் "Memories of Madras" பகுதியில் லால்குடி ஜெயராமன் தான் 1946 ஆம் ஆண்டு சென்னை வந்ததாகவும் அப்போது சபாக்கள் பெரிய அளவில் இல்லை எனவும் அயோத்யா மண்டபம் போன்ற இடங்களில் தான் கச்சேரி செய்வோம் என்றும் கூறியிருந்தார். 1954 ஆம் ஆண்டு முதல் இங்கு ராம நவமி விழ கொண்டாடப்படுகிறது. அயோத்யா மண்டபத்தில் உள்ள ராமர் பட்டாபிஷேகம் மற்றும் இதர புகைப்படங்கள் மிக அரிதானவை.

இந்த மாதம் 26 ஆம் தேதி ராம நவமி உற்சவம் துவங்குகிறது என்று நினைக்கிறேன். பகல் நேரங்களில் ராமாயண பாராயணம், சீதா கல்யாணம் போன்றவை நடைபெறும். மாலையில் நல்ல கச்சேரிகள் உண்டு. இந்த வருடம் டி.எம்.கிருஷ்ணா, அருணா சாய்ராம், சிக்கில் குருசரண், சௌம்யா ஆகியோர் பங்கேற்கிறார்கள். ஆனால்,வழக்கமாக இடம்பெறும் கத்ரி கோபால்நாத்(Saxophone), கன்னியாகுமரி வயலின் மற்றும் ஹரித்வாரமங்கலம் A.K.பழனிவேல்(Special Thavil) மிஸ்ஸிங். மேற்கு மாம்பலம் பக்கம் செல்பவர்கள் அவசியம் அயோத்யா மண்டபம் சென்று ராம நவமி விழா நிகழ்ச்சி நிரலை வாங்கிக் கொள்ளவும்.