Thursday, 1 January 2015

இந்தியத் தத்துவம்

நண்பர் ஒருவர் டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் "Indian Philosophy" புத்தகம் இரண்டு பாகங்களையும் ஆறு மாதம் முன்பு பரிசளித்தார். நேற்று தான் முதல் பாகத்தை படிக்கத் துவங்கினேன். அற்புதமான ஆங்கிலம். ராதாகிருஷ்ணன் அவர்களை ஆசிரியர் நாள் தவிர ஒரு போதிலும் நாம் நினைப்பதில்லை. அவர் எவ்வளவு பெரிய மேதை என்பதை விக்கிபீடியா படித்து தெரிந்து கொண்டேன்.

புத்தகத்தின் முதல் சில பக்கங்களிலேயே எத்தனை ஐரோப்பியர்கள் இந்திய தத்துவத்தை ஆராய்ந்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு அவர்கள் பெயர்களையும் தருகிறார் ராதாகிருஷ்ணன். Monier Williams என்ற பெயரை பார்த்தவுடன் ஜெயமோகன் நினைவு வந்தது. வெண்முரசு நூல் வெளியீட்டு விழாவில் அவரை சிலாகித்து பேசினார் ஜெயமோகன்.முழு நூலையும் படித்து விட்டு விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். அதற்கு சில மாதங்கள் ஆகலாம்.

Thursday, 6 November 2014

பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாத்யாரே

"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" புத்தகத்தில் எனக்குப் பிடித்த ஒரு பகுதி.

பாலகுமாரன்: கமல், நான் வேலையை விட்டுட்டு சினிமாக்கு வரலாம்னு இருக்கேன்.
கமல்: ஏன்? எதுக்கு?
பாலகுமாரன்(மனதிற்குள்): என்ன பதில் சொல்ல?
கமல்: நான் கேட்ட பிறகு காரணத்தை யோசிக்கறீங்களா? நான் கேள்வி கேக்கட்டுமா உங்களுக்காக? பணம், இல்ல. மொசைக் போட்டு சொந்த வீடு இருக்கு, ஸ்கூட்டர் இருக்கு. புகழ் இல்ல. இன்னைக்கு தேதில பெரிய எழுத்தாளர். இரும்புக் குதிரைகள் வெளியீடு விழால வைரமுத்து உணர்ச்சி வசப்பட்டு பேசினார் தெரியுமா? வைரமுத்து அவ்வளோ சீக்கரம் யாரையும் புகழ மாட்டார். வேற என்ன?
பாலகுமாரன்: எனக்கு அந்த பியட் கார் வேணும் கமல்.
கமல்: குட், அப்போ நீங்க தேடறது லக்சரி. இவ்வளோ நாளா என்ன பண்ணீங்க. வீடியோ வந்து சினிமா அழிக்கற டைம்ல வரீங்க.
"நகுதற் பொருட்டன்று நட்பு"..யாரோ கமல்ஹாசனுக்கு விளக்கமாய் சொல்லியிருக்க வேண்டும்.
சீண்டினால் கூட நண்பர்களிடம் இதமாய் பேசும் கமல் அன்று கோபப்பட்டார். நான் இரண்டாய் கிழிக்கபட்டேன்.

(சில நாட்களுக்கு பிறகு) கமல்: என்ன கவிதாலயால சேர்ந்துட்டீங்க போல இருக்கு?
பாலகுமாரன்: ஆமாம், ஆனா அன்னைக்கு நீங்க நான் சினிமால..
கமல்: சினிமால சேரட்டுமானு அபிப்பராயம் கேக்கக் கூடாது. முடிவு உங்களோடதா இருக்கணும்னு தான் அப்படி பேசினேன். இப்போ சேர்ந்துட்டீங்க. இதுல உள்ள நெளிவு சுளிவு நான் சொல்லித் தரேன்.

"செட்டுக்கு முதல் ஆளா வாங்க. கடைசி ஆளா போங்க. செய்னு சொல்றதுக்கு முன்னாடி வேலை செய்யுங்க. யாராவது மூஞ்சில எச்சை துப்பினா தேங்க்ஸ் அப்படின்னு சொல்லிட்டு வந்துடுங்க. கோபத்த உள்ளுக்குள்ள வெச்சுக்குங்க. பின்னாடி உதவும். நான் நெறைய அனுபவப்பட்டிருக்கேன். இதோ இப்படி கால் அகட்டி நிக்கறீங்களே இது கூட தப்பு. இன்னும் பணிவா இருக்கணும். திமிர் பிடிச்சவன்னு சொல்லிடுவாங்க. இன்னொன்னு சொல்லட்டுமா?கொஞ்சம் கொஞ்சமா நீங்க எழுதறத குறைச்சுக்கனும்."

பாலகுமாரன்: ஐயோ.
கமல்: நான் பேசறது கைய அறுத்து டிஞ்சர் போடறா மாதிரி இருக்கு இல்ல? உண்மை இதமா இருக்காது பாலா.
"பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாத்யாரே."

Saturday, 4 October 2014

சிக்கெனப் பிடித்தேன்

நான் வசிக்கும் Fremont நகரிலிருந்து சற்று தள்ளி Concord என்ற இடம் உள்ளது. இங்குள்ள முருகன் கோவிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றேன். விநாயகர், முருகர், சிவன், துர்க்கை சந்நிதிகள். அர்ச்சனை செய்த சிவாச்சார்யார் திருவாசகத்தில் உள்ள

"அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே."

என்ற பாடலை கணீர்க் குரலில் பாட, எனக்கு இந்த "சிக்கெனப் பிடித்தேன்" என்கிற வரியை எங்கேயோ கேட்டிருக்கிறோமோ என்று வெகு நேரம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. ஏழாம் உலகத்தில் பண்டாரம் பழனியில் உருப்படிகளை விற்றது தெரிந்து பிக்பாக்கெட் திருடன் ஒருவன் பண்டாரத்தின் பின்னேயே வெகு நேரம் அலைந்து ஒன்றும் தேறாமல் அவரிடமே வந்து தேநீர் வாங்கிக் தரச் சொல்வான். அப்போது "நம்ம ஊர்ல ஆழ்வார் பிரபந்தம் பாடுவாங்களே, 'சிக்கெனப் பிடித்தேன்னு' அப்படி தான் அண்ணாச்சிய பிடிக்கலாம்னு வந்தேன் என்பான்.

கதையில் அந்த வரியை படித்த போது, "பணம், குடும்பம், வேலை" என்று எத்தனையோ விஷயங்களை "சிக்கெனப் பிடித்துக் கொள்ள வேண்டியுள்ளது" ஆனால் ஒருபோதும் இறைவனை அப்படி பற்றிக்கொள்ள தோன்றவில்லையே என்று எண்ணிக்கொண்டேன். கோவிலில் இந்த வரிகளை கேட்டபோது மறுபடியும் அதே நினைவு வந்தது.அது சரி, பிரபந்தம்னு சொல்லிடு இங்கே திருவாசக வரிகளை போட்டிருக்கேனேனு கேக்கறீங்களா..இதோ பிரபந்தம்..

வைகுந்தா!மணிவண்ணனே!என்பொல்லாத்
திருக்குறளா!என்னுள் மன்னி,
வைகும் வைகல் தோறும்
அமுதாய வானேறே,
செய்குந் தாவருந் தீமையுன் னடியார்க்குத்
தீர்த்தசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா, உன்னைநான்
பிடித்தேன்கொள் சிக்கெனவே.