Saturday 17 October 2009

மதுரையில் சிவாஜி சிலை திறப்பு விழா- அழகிரி பேச்சு

மதுரையில் சமீபத்தில் நடந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழாவில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் பேச்சு, சில பகுதிகளில் சிவாஜி ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. அழகிரிக்கு முன்னால் பேசிய கமல் தன்னை நடிகர் திலகத்தின் மூத்த மகன் என்றார். இதை சிவாஜி தான் முதலில் சொன்னதே. இது கமலின் நடிப்பின் காரணமாக சொல்லப்பட்டது.

இதற்கு பின் பேச வந்த அழகிரி, "கமல் சொன்னது தவறு என்றும் சிவாஜியின் மூத்த மகன் அவர் தான் என்றும் கூறினார்". சிவாஜியை வெகுவாக புகழ்ந்த அழகிரி, தன் திருமணத்திற்கு சிவாஜி வராததால், அவரை சில நாட்கள் பார்க்கும் இடத்தில் எல்லாம் அலட்சியப்படுத்தியதாகவும் பின்னர் சமாதானம் அடைந்ததாகவும் சொன்னார்.

பராசக்தி படத்தில் சிவாஜி நடித்த சில காட்சிகளை பார்த்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார், "என்ன நடிகர் இவர்? இவரை மாற்றுங்கள்" என்று சொன்னதாகவும், அப்போது பெருமாள் முதலியாரும், கருணாநிதியும் தான் சிவாஜிக்கு குரல் கொடுத்து, அவர் தான் நடிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததாகவும் குறிப்பிட்ட அழகிரி, அன்று என் தந்தை மட்டும் போராடியிருக்கா விட்டால் தமிழகத்துக்கு இப்படி ஒரு நடிகர் கிடைத்திருப்பாரா? இன்று நாம் தான் அவருக்கு சிலை வைக்க முடியுமா என்றார்.பாவம், சிவாஜி ரசிகர்கள். இதையெல்லாம் கேட்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.

சரி, இந்த செய்தி உண்மை என்றால் கூட பரவாயில்லை. பிரபல சினிமா செய்தியாளர் "பிலிம் நியூஸ் ஆனந்தன்" அவர்களிடம் துக்ளக் நிருபர் இது பற்றி கேட்ட போது, "அண்ணா அவர்கள் தான் செட்டியாரிடம் இது பற்றி பேசியதாகவும், சிவாஜி கொஞ்சம் மெலிந்து காணப்பட்டதால் செட்டியார் அவரை ஹீரோவாக அறிமுகப்படுத்த தயங்கியதாகவும் கூறுகிறார். பெருமாள் முதலியார் தயாரித்த இந்த படத்திற்கு ஏ.வி.எம்.செட்டியார் தான் நிதியுதவி. அதனால், செட்டியாரை சமாதானப்படுத்த பெருமாள் முதலியாரும் அண்ணாவும் நாடக நடிகரான சிவாஜி கணேசனுக்காக வாதாடியதாகவும் கூறுகிறார் ஆனந்தன்.கலைஞரை பற்றி ஒரு வார்த்தை கூட இதில் இடம்பெறவில்லை.

கலைஞர் என்னும் திருதிராஷ்ட்ரன் தன் மகன்கள் என்ன சொன்னாலும் செய்தாலும் மௌனம் சாதிப்பது நமக்கு புதிதல்ல.

பின்குறிப்பு: நிகழ்ச்சிக்கு வந்த பலர், அழகிரி காலில் விழுந்து ஆசி பெற்றனர். அதே போல், பேச்சிலும் அழகிரி புகழ் நெடி தூக்கலாகவே இருந்தது. கமல் மட்டும் இதற்கு விதிவிலக்கு.

Thursday 15 October 2009

கமல் - 50 விழாவில் கவனித்தது..



- கமலின் ஆரம்ப கால நாயகிகளான ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா போன்றோர் வரவில்லை. காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான் (அதாவது இப்போது நாற்பதுகளில் இருப்பவர்க்கு).

- கமலின் வளர்ச்சிக்கு முக்கியமான ஆளான பாரதிராஜா வரவில்லை ஏன் என்று தெரியவில்லை

- கமலின் மற்றொரு நெருங்கிய நண்பரான நாசர் வரவில்லை

- பார்க்க முடியாத மற்றும் சிலர் - சத்யராஜ்,குஷ்பு,அஜித், விஜய்,மனோரமா,சூர்யா ...மற்றபடி விக்ரம்,பாலா பற்றியெல்லாம் நான் சொல்லப்போவதில்லை.

-இது போன்ற விழாக்களில் தேர்ந்தெடுத்து எப்படி திரு.விஜயகாந்த் கழற்றி விடப்படுகிறார் என்று தெரியவில்லை. கேப்டன் சீக்கிரம் சி.எம்.ஆகுங்க எல்லோரும் பொன்னாடை போர்த்த வருவாங்க.

-கமலை பாராட்டி பலர் பேசினார் , இருப்பதிலேயே சிறப்பாக பாராட்டியவர் பிரபுதேவா (பேசவேயில்லை, அவரும் அவர் தந்தையும் சேர்ந்து நடனமாடினர்). ஒரு கலைஞன் மற்றொரு கலைஞனுக்கு இதை விட சிறப்பாக யாரும் மரியாதை செய்ய முடியாது , (Juggler கதை ஞயாபகம் வருகிறது).

-கமல் என்றொரு மகத்தான கலைஞன் மேல் தமிழக திரையுலகம் வைத்திருக்கும் மரியாதையை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானாவர் ஒருவர் மட்டுமே .. அது திரு.கமல்ஹாசன்.

-நான் கமல் பற்றிய் பல்வேறு காலகட்டங்களில் பல பத்திரிக்கை செய்திகளை படித்ததில் இருந்து கமலுக்கும் அவருடன் நடித்த பல பேருக்கும் பிரச்சினை என்றே நினைத்து இருந்தேன்

..உ.தா.அர்ஜுன், குருதிப்புனல் படத்தில் நடித்ததில் அர்ஜுன் மிகவும் காயப்பட்டு விட்டார் என்று படித்து இருக்கிறேன். இந்த விழாவில் கமலின் காலில் விழப்போனார் அர்ஜுன்.

-நாயகன் என்றொரு படத்தை அளித்தவரும் (பேசிய பலரும் நாயகனை பற்றி சொன்னார்கள், நாயகன் வந்து சுமார் 22 வருடங்கள் ஆகின்றன)
கமலின் மருமகனுமான மணிரத்னமும் , அவரின் அண்ணன் மகளுமான சுஹாசினி , மற்றும் அண்ணனான சாரு ஹாசன் போன்றோரை பார்க்க முடியவில்லை.

-தெலுங்கு படவுலகில் இருந்து வந்த வெங்கடேஷ் மற்றும் அல்லு அர்ஜுன் போன்றோர் தமிழில் பொளந்து கட்டினர் ...

-பிரகாஷ்ராஜின் தமிழ் அறிவு பிரமிப்பூட்டியது- தமிழ் கண்ணதாசன் கையில் இருப்பது போலவும் - பாரதியின் கையில் இருப்பது போலவும் - தமிழ் சினிமா கமலின் கையில் இருப்பதாக குறிப்பிட்டார்.செல்லம்.. எப்படி செல்லம்...?

--நாயகியருள் அருமையாக பேசியது ராதிகா ... ஒரு சாம்பிள் " கமலை விட கமல் கூட நடித்த ஹீரோயின்களைதான் அதிகம் பாராட்ட வேண்டும், நாங்க இல்லாமல் நீங்க எப்படி காதல் மன்னன் ஆக முடியும்?"

-விழாவில் கடைசியாக பாராட்ட வந்தது ரஜினி. இருவரும் உண்மையிலேயே நண்பர்கள்தான் போல .. இருவரும் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு யாரும் பார்த்திருக்க முடியாது. இருவருமே கண்கலங்கி போனார்கள்.முத்தம் குடுத்துக்கொண்டார்கள்.ரஜினி தன்னை தாழ்த்தி கொண்டு பேசினார், தன்னை தாழ்த்துவதின் மகிமையை அவர் முற்றிலும் உணர்ந்தே இருக்கிறார். ரஜினி பேசும்போது நான் கவனித்தவரை முகத்தை சுளித்தது மம்மூட்டி, அவருக்கு ரஜினி மிகவும் ஓவராக பேசுவதாக தோன்றி இருக்கும் போல.

-கடைசியில் ஏற்புரை ஏற்க வந்தார் கமல் - பொதுவாக ஒரு கலைஞனாக கமலை நமக்கு தெரியும்.ஆனால் தமிழ் பத்திரிக்கைகள் மூலமாக ஏற்பட்ட பிம்பம் - அவர் மனித உறவுகளை பேணுவதில் அவ்வளவு நாட்டமில்லாதவர் என்று- அது உண்மை என்று பல சம்பவங்கள் சொல்கின்றன - சாருஹாசன், மணிரத்னம் போன்றோரின் absence ஒரு உதாரணம். அப்படிப்பட்ட கமலுக்கு இத்தனை பேர் திரண்டு இருந்து செய்த மரியாதையை அவரை திக்குமுக்காட செய்து விட்டது என்றே தோன்றியது.ஏறக்குறைய அழுவதற்கு முந்தைய நிலையில் இருந்தார் - அந்த நேரத்திலும் அவர் மக்களை தன்னுடைய சிக்கலான தமிழில் குழப்ப தவறவில்லை - இவர் கூட பேசிப்பேசி சந்தான பாரதிக்கு  தலையில் முடியே இல்லாமல் போய்விட்டது போல.கமலுடைய ஏற்புரையில் தனித்தனியே மற்றவர்க்கு நன்றி செலுத்த முடியாமல் போனதால் - பொதுவாக எல்லோருக்கும் நன்றி செலுத்தி விட்டு , ரஜினியை மட்டும் தன்னுடைய பேச்சில் சேர்த்துக்கொண்டார் - கமல் ரஜினியை பற்றி சொன்னது - "எவன் பேசுவான் இப்படி?"...ஹ்ம்ம்...

-பொதுவாக விஜய் டி.வியின் நேயர்கள் நகரத்தில் வசிக்கும் நடுத்தர, உயர்நடுத்தர வர்க்கம்தான், கமலின் ஏரியாவும் அதுதான், so, விஜய் டி.வி பின்னி விட்டார்கள். மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யத்தான் போகிறார்கள்.

சிறந்த நிகழ்ச்சி .. கொஞ்சம் நேரத்தை குறைத்து இருந்தால் மிகச்சிறப்பான நிகழ்ச்சியாக இருந்து இருக்கும்.

Tuesday 13 October 2009

ஞானி - என்னை போல் ஒருவனா நீங்கள்?

சமீபத்தில் உன்னை போல் ஒருவன் படத்தை குமுதத்தில் ஞானி விமர்சனம் செய்து இருந்தார் , அதற்கு ஒரு எதிர்வினை.//  // குறிக்குள் இருப்பது ஞானியின் எழுத்துக்கள். ஞானியின் முழு விமர்சனத்தையும் படிக்க நினைப்பவர்கள் இங்கே செல்லலாம்.

//படத்தில் பெயர் இல்லாத நாயகனே, என்னைப் போல் ஒருவனா நீ?

நான் மனசாட்சியின் குரலுக்கு எப்போதும் செவி கொடுக்கிற ஒரு நடுத்தர வகுப்பு மனிதன். என்னால் பிறருக்கு வலியும், பிறரால் எனக்கு வலியும் ஏற்படக்கூடாது என்று விரும்பும் சாதாரண மனிதன். ஜாதி, மதம், மொழி, இனம் அடிப்படையில் மனிதரை மனிதர் உயர்வு தாழ்வு பார்க்கக்கூடாது என்று விரும்பும் ஒருவன். //


இதுவரைக்கும் சரி.. இனிமேல்தான் பிரச்சினை, ஞானி மேலும் எழுதுகிறார்

//
குற்றம் சாட்டப்பட்ட எவரும் முறையாக விசாரிக்கப்பட்டு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவேண்டும் என்றே விரும்புகிறவன். கொலைக் குற்றவாளிக்குக் கூட அதிகபட்சமாக ஆயுள் தண்டனையே தரப்படலாமே தவிர, மரண தண்டனை கூடாது என்று நினைக்கிறவன். சட்டத்தை என் கையில் எடுத்துக் கொள்ள ஆசைப்படாதவன்.

நீ என்னைப் போல் ஒருவனா? நிச்சயம் இல்லை.//


ஞானியே நீங்கள் என்னை போல் ஒருவரா? நிச்சயம் இல்லை.நிச்சயமாக இந்தியாவில் தூக்கு தண்டனையை ஆதரிப்பவர் இருக்கவே செய்கின்றனர், எப்படி சிலர் தூக்கு தண்டனையை எதிர்க்கின்றனறோ , அப்படியே மிகப்பலர் ஆதரிக்கவே செய்கின்றனர், "இந்த மாதிரி குண்டு வைக்கின்ற ஆட்களை தூக்குல போடணும் சார்" என்று பலர் பேசிக்கொண்டேதான் இருக்கின்றனர்.இது ஒரு பொது புத்தி, பொது புத்தியை உருவாக்குபவர் பெயரில்லாத பொதுஜனம், அந்த பொதுஜனமே நோக்கியே சொல்கிறார் அந்த படத்தை எடுத்தவர் "உன்னை போல் ஒருவன்"

இதுவரை தீவிரவாதாத்தால் இறந்தவர் எத்தனை பேர் (அது இஸ்லாமிய தீவிரவாதமோ அல்லது இந்து தீவிரவாதமோ அல்லது மற்ற எந்த தீவிரவாதமோ) , கொல்லப்பட்டும் ஒவ்வொரு தீவிரவாதியும் சுமார் பத்து பொதுமக்களை கொன்று விட்டே சாகின்றனர்.

இந்தியாவில் உள்ள வாக்கு வங்கி அரசியலுக்கு குந்தகம் வராமல் செயல்படுத்தப்படும் 'விசாரணையின் வேகம்' உங்களுக்கு தெரியாதா? "என்னை போல் ஒருவன்" எதிர்கொள்ளும் ஆமை வேக விசாரைணையின் எதிர்வினையே அந்த படம் என்பதும் உங்களுக்கு தெரியாமல் போனதில் ஆச்சர்யமே!

//எந்த மதத்து தீவிரவாதியாக இருந்தாலும் சரி, அவர்களை விசாரிக்காமல் சுட்டுக் கொன்றுவிடவேண்டும் என்று நினைக்கிறவர்கள் சார்பாக புறப்பட்டு வந்தவனும் அல்ல நீ.
அப்படி நினைக்கிறவர்கள் கருத்தை ஏற்பதாக இருந்தால், மசூதியை இடித்து மதக் கலவரங்களை உற்பத்தி செய்த அத்வானியையும், அரசு இயந்திரத்தின் உதவியோடு முஸ்லிம்களை கும்பல் கும்பலாகக் கொல்ல ஏற்பாடு செய்த மோடியையும் சுட்டுக் கொல்ல நீ புறப்பட்டிருப்பாய். //

 
இது நிச்சயமாக ஒத்துக்கொள்ளவேண்டிய ஒரு விஷயம், ஞானி எழுதுவது உண்மை.
ஆனால் மீரா நாயரின் water மற்றும் Fire வந்தபோதும் இந்துத்தவா ஆட்கள் இதையேதான் சொன்னார்கள் (அதாவது இம்மாதிரியான படங்களை இஸ்லாமிய கதாபாத்திரங்களை கொண்டு எடுக்க முடியுமா என்று?) அதாவது இந்துத்தவா ஆட்கள் சொல்லும் வாதத்தையே ஞானியும் வேறு சொற்களை வைத்து வேறு பாத்திரங்களுக்காக வேறு மதத்திற்காக சொல்கிறார்.ஹிந்தி படத்தில் வராத ஒரு ஹிந்து தீவிரவாதியை தமிழ் version-இல் சேர்த்தே இந்த கதி. இதற்காக மோடியையோ, அத்வானியோ ஆதரிக்கறேன் என்று நினைக்க வேண்டாம், என்னுடைய பதில் ஞானி அவர்களின் விமர்சனத்திற்கு மட்டும்தான்.

ஞானி அவர்களே, நீங்கள் மிகச்சிறந்த விமர்சகர், தமிழகத்தில் கலை மற்றும் அரசியலில் இன்றுள்ள நேர்மையான விமர்சகர் நீங்கள் மட்டுமே. ஆனாலும் உங்கள் விமர்சனத்தை மற்றவர் விமர்சிக்கலாம்தானே?

குளம்பியகத்தின் 300-வது பதிவு இது, இதுவரை ஆதரவு தந்த (இனிமேலும் ஆதரவு தரப்போகும்) அனைவருக்கும் நன்றி.