Thursday 6 November 2014

பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாத்யாரே

"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" புத்தகத்தில் எனக்குப் பிடித்த ஒரு பகுதி.

பாலகுமாரன்: கமல், நான் வேலையை விட்டுட்டு சினிமாக்கு வரலாம்னு இருக்கேன்.
கமல்: ஏன்? எதுக்கு?
பாலகுமாரன்(மனதிற்குள்): என்ன பதில் சொல்ல?
கமல்: நான் கேட்ட பிறகு காரணத்தை யோசிக்கறீங்களா? நான் கேள்வி கேக்கட்டுமா உங்களுக்காக? பணம், இல்ல. மொசைக் போட்டு சொந்த வீடு இருக்கு, ஸ்கூட்டர் இருக்கு. புகழ் இல்ல. இன்னைக்கு தேதில பெரிய எழுத்தாளர். இரும்புக் குதிரைகள் வெளியீடு விழால வைரமுத்து உணர்ச்சி வசப்பட்டு பேசினார் தெரியுமா? வைரமுத்து அவ்வளோ சீக்கரம் யாரையும் புகழ மாட்டார். வேற என்ன?
பாலகுமாரன்: எனக்கு அந்த பியட் கார் வேணும் கமல்.
கமல்: குட், அப்போ நீங்க தேடறது லக்சரி. இவ்வளோ நாளா என்ன பண்ணீங்க. வீடியோ வந்து சினிமா அழிக்கற டைம்ல வரீங்க.
"நகுதற் பொருட்டன்று நட்பு"..யாரோ கமல்ஹாசனுக்கு விளக்கமாய் சொல்லியிருக்க வேண்டும்.
சீண்டினால் கூட நண்பர்களிடம் இதமாய் பேசும் கமல் அன்று கோபப்பட்டார். நான் இரண்டாய் கிழிக்கபட்டேன்.

(சில நாட்களுக்கு பிறகு) கமல்: என்ன கவிதாலயால சேர்ந்துட்டீங்க போல இருக்கு?
பாலகுமாரன்: ஆமாம், ஆனா அன்னைக்கு நீங்க நான் சினிமால..
கமல்: சினிமால சேரட்டுமானு அபிப்பராயம் கேக்கக் கூடாது. முடிவு உங்களோடதா இருக்கணும்னு தான் அப்படி பேசினேன். இப்போ சேர்ந்துட்டீங்க. இதுல உள்ள நெளிவு சுளிவு நான் சொல்லித் தரேன்.

"செட்டுக்கு முதல் ஆளா வாங்க. கடைசி ஆளா போங்க. செய்னு சொல்றதுக்கு முன்னாடி வேலை செய்யுங்க. யாராவது மூஞ்சில எச்சை துப்பினா தேங்க்ஸ் அப்படின்னு சொல்லிட்டு வந்துடுங்க. கோபத்த உள்ளுக்குள்ள வெச்சுக்குங்க. பின்னாடி உதவும். நான் நெறைய அனுபவப்பட்டிருக்கேன். இதோ இப்படி கால் அகட்டி நிக்கறீங்களே இது கூட தப்பு. இன்னும் பணிவா இருக்கணும். திமிர் பிடிச்சவன்னு சொல்லிடுவாங்க. இன்னொன்னு சொல்லட்டுமா?கொஞ்சம் கொஞ்சமா நீங்க எழுதறத குறைச்சுக்கனும்."

பாலகுமாரன்: ஐயோ.
கமல்: நான் பேசறது கைய அறுத்து டிஞ்சர் போடறா மாதிரி இருக்கு இல்ல? உண்மை இதமா இருக்காது பாலா.
"பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாத்யாரே."

Saturday 4 October 2014

சிக்கெனப் பிடித்தேன்

நான் வசிக்கும் Fremont நகரிலிருந்து சற்று தள்ளி Concord என்ற இடம் உள்ளது. இங்குள்ள முருகன் கோவிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றேன். விநாயகர், முருகர், சிவன், துர்க்கை சந்நிதிகள். அர்ச்சனை செய்த சிவாச்சார்யார் திருவாசகத்தில் உள்ள

"அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே."

என்ற பாடலை கணீர்க் குரலில் பாட, எனக்கு இந்த "சிக்கெனப் பிடித்தேன்" என்கிற வரியை எங்கேயோ கேட்டிருக்கிறோமோ என்று வெகு நேரம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. ஏழாம் உலகத்தில் பண்டாரம் பழனியில் உருப்படிகளை விற்றது தெரிந்து பிக்பாக்கெட் திருடன் ஒருவன் பண்டாரத்தின் பின்னேயே வெகு நேரம் அலைந்து ஒன்றும் தேறாமல் அவரிடமே வந்து தேநீர் வாங்கிக் தரச் சொல்வான். அப்போது "நம்ம ஊர்ல ஆழ்வார் பிரபந்தம் பாடுவாங்களே, 'சிக்கெனப் பிடித்தேன்னு' அப்படி தான் அண்ணாச்சிய பிடிக்கலாம்னு வந்தேன் என்பான்.

கதையில் அந்த வரியை படித்த போது, "பணம், குடும்பம், வேலை" என்று எத்தனையோ விஷயங்களை "சிக்கெனப் பிடித்துக் கொள்ள வேண்டியுள்ளது" ஆனால் ஒருபோதும் இறைவனை அப்படி பற்றிக்கொள்ள தோன்றவில்லையே என்று எண்ணிக்கொண்டேன். கோவிலில் இந்த வரிகளை கேட்டபோது மறுபடியும் அதே நினைவு வந்தது.அது சரி, பிரபந்தம்னு சொல்லிடு இங்கே திருவாசக வரிகளை போட்டிருக்கேனேனு கேக்கறீங்களா..இதோ பிரபந்தம்..

வைகுந்தா!மணிவண்ணனே!என்பொல்லாத்
திருக்குறளா!என்னுள் மன்னி,
வைகும் வைகல் தோறும்
அமுதாய வானேறே,
செய்குந் தாவருந் தீமையுன் னடியார்க்குத்
தீர்த்தசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா, உன்னைநான்
பிடித்தேன்கொள் சிக்கெனவே.

Monday 29 September 2014

2 ஸ்டேட்ஸ்

சேத்தன் பகத்தின் இந்த புத்தகத்தை மனைவியிடம் இரவல் வாங்கி படித்தேன். சுவாரசியமான புத்தகம். புத்தகத்தில் எனக்கு பிடித்த இடம் கதை நாயகன் க்ரிஷ் சென்னை வந்து படும் அவஸ்தைகள். சென்னை ஆட்டோ ஓட்டுனர்கள் பேசும் கெட்டவார்த்தை எல்லாம் ஞாபகம் வைத்து எழுதியிருக்கிறார் சேத்தன் பகத். நம்மை மீறி பல இடங்களில் சிரிக்கிறோம். புத்தகத்தில் பகத் தனது முதல் நிறுவனமான Citibank பற்றி எழுதிய பகுதிகளை படித்த போது எனக்கு என் முதல் வேலை நினைவுக்கு வந்தது. வணிகவியல் முடித்து என்ன செய்வது என்று தெரியாமல் நாளிதழ்களில் வரும் வேலை வாய்ப்பு விளம்பரங்களை பார்த்து "walk in" என்று போட்டிருக்கும் இடங்களுக்கு நானும் என் நண்பனும் செல்வோம்.

முகப்பேரில் அந்த மருந்து தயாரிக்கும் அலுவலகம் இருந்தது. சிறிய தொழிற்சாலை அவர்களுக்கு ராமாபுரத்தில் இருந்தது. விற்பனைப் பிரதிநிதி தமிழகம் முழுதும் தேவை என்று சொன்னது விளம்பரம். ஒரு சனிக்கிழமை காலை பல்லாவரத்தில் இருந்து முகப்பேர் சென்றோம். பிரதான சாலையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் உள்ளே சென்று வரவேற்பறையில் லேசாக புடவை விலகி செழுமை தெரிய அமர்ந்திருந்த அந்த சுமார் பெண்ணிடம் பெயர் கொடுத்துவிட்டு வெளியே நின்றுகொண்டிருந்தோம். எங்களை அழைத்த போது மதியம் மணி மூன்று. இரண்டு பச்சை வாழைப்பழம், ஒரு டீ வயிற்றில் இருந்தது.

நேர்முகத் தேர்வு, குழு கலந்துரையாடல் எல்லாம் முடிந்து இறுதி பெயர்ப் பட்டியல் வந்த போது மணி ஏழு. எங்கள் பெயர் இருந்தது. பத்துநாட்கள் முகப்பேரில் பயிற்சி. பயிற்சி முடியும் இறுதி நாளன்று நிறுவன தலைவருடன் நேர்முகம். அவர் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு வேலை. பத்து நாள் பயிற்சி ஆரம்பித்தது. நிறுவனத்தில் மருந்து பெயரை சரியாக உச்சரிப்பது தான் முதல் பயிற்சி. "செபெக்ஸ்" என்பது மருந்தின் பெயர். அதன் பிறகு, மருத்துவரை சந்திக்கும் போது எப்படி பேச வேண்டும், மருந்து அட்டையை எப்படி பிடித்துக்கொள்ள வேண்டும் போன்ற பயிற்சிகள். கிட்டத்தட்ட முப்பது பேருக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி கொடுத்தவர் நிறுவனத்தின் ஆரம்ப காலத்தில் சேர்ந்த ஒருவர்.

செபெக்ஸ் என்ற பெயர் சபெக்ஸ், சபீக்ஸ், சபேக்ஸ், செக்ஸ், சிக்ஸ் என்று ஒவ்வொருவர் வாயிலும் மாறி மாறி வந்த போது பயிற்சி கொடுத்தவர் பதட்டப்படாமல் சொன்ன ஒரே வரி "கடைசி நாள் முதலாளி முன்னால் இப்படி சொல்லாதீர்கள்" என்பது தான். அது ஏன் என்று அப்போது புரியவில்லை. என் விடலை பருவத்தின் உச்சம் அந்த காலகட்டம். நானும் என் நண்பனும் அவர் சொன்ன எதையுமே காதில் போட்டுக்கொள்ளவில்லை. ஆனால், நாங்கள் மருந்து பெயரை சரியாகவே உச்சரித்தோம்.

பயிற்சியின் கடைசி நாள் வந்தது. மதிய உணவு வேளை முடிந்த பின் நிறுவனத் தலைவர் வந்தார். எங்கள் எல்லாரையும் அவர் பார்க்கும் மாதிரி ஒரு வட்ட மேஜை போடப்பட்டு நாங்கள் அவரை சுற்றி அமர்ந்திருந்தோம். என்னை மருத்துவராக பாவித்து நீங்கள் பயிற்சியின் போது "கத்துகிட்ட வித்தைகளை மொத்தமாக இறக்குங்கள்" என்றார் லிங்குசாமி போல.

முதல் நபர் "சபெக்ஸ்" என்றார். "தே மவனே, நான் கஷ்டப்பட்டு மார்க்கெட் பிடிச்சிருக்கேன்டா, ஏன்டா பேரை மாத்தறே?" என்றார். அறையில் மயான அமைதி. நானும் என் நண்பனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். அடுத்த நபரை பார்த்து "நீ சொல்லு" என்றார் தலைவர். அவர் "செபிக்ஸ்" என்றார். முதலாளி அமைதியாக, "தம்பியோட அப்பா என்ன செய்யறாரு?" என்றார். "எண்ணெய் வியாபாரம் ஊர்ல", என்றார் நம்ம செபிக்ஸ். "அப்போ உங்க அப்பன் கூட சேர்ந்து அந்த மயித்தையே செய்ய வேண்டியதானே. இங்க எதுக்கு வந்த? என் உசிர வாங்கவா? எந்த நேரத்துல உங்க அப்பன் கோவணத்த அவுத்தானோ" என்றார்.

என் நண்பன் இயல்பாகவே கொஞ்சம் முன்கோபி. என்னிடம், "ஒம்மாள, நம்மள எதாவது சொன்னான், ஒத்த இவன நாளைக்கே பசங்ககிட்ட சொல்லி தூக்கறோம் மச்சான்" என்றான். நல்லவேளையாக எங்களுக்கு முன்னே இருந்தவர்கள் செய்த தவறுகளில் இருந்து நாங்கள் கொஞ்சம் கற்றுக்கொண்டு ஒழுங்காக பேசினோம். பெரிய அளவில் எங்களை எதுவும் சொல்லவில்லை அவர். ஆனால், மறக்கவே முடியாத ஒரு அனுபவம் அது. கடைசியில், வெளியூர் போக சொன்னதால் அந்த வேலை வேண்டாம் என்று முடிவு செய்தோம் நானும் என் நண்பனும். அப்பறம், தகவல் தொழில்நுட்பம் தான் நிறைய பணம் தரும் என்று ஞானம் பெற்று அதற்காக பயிற்சி பெற்று வேளைக்கு வந்ததை எல்லாம் புத்தகமாகவே போடலாம்.

மீண்டும் குளம்பியகத்தில்

பல்வேறு காரணங்களினால் எழுதுவது ரொம்பவே குறைந்துவிட்டது. வேலை, இடமாற்றம் எல்லாம் காரணம் தான் என்றாலும் மனம் சொல்கிறது "சோம்பல்" தான் நிஜமான காரணம் என்று. மீண்டும் எழுத உத்தேசித்திருக்கிறேன். குறைந்தது இரண்டு பதிவு வாரம் ஒன்றிற்கு. எனக்கு ஊக்கமளிப்பது நீங்கள் படிப்பதும் பின்னூட்டம் போடுவதும் தான். அதை எதிர்நோக்கி..

நன்றியுடன்,

வாசு

Wednesday 7 May 2014

ஹம்சலேகா, சந்திரபோஸ், மரகதமணி (கீரவாணி)...

இன்று கொடி பறக்குது படத்தின் 'சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு' படத்தின் பாடலை கேட்டு கொண்டு இருந்தேன். இசை:ஹம்சலேகா ..ஆனால் பலர் இளையராஜா என்றே நினைத்திருப்பர். ஹம்சலேகா, சந்திரபோஸ், மரகதமணி (கீரவாணி)   போன்றோர் ஜொலிக்காமல் போனதற்கு காரணம். அவர்கள் இசையை மக்கள் இளையராஜா இசை என்று நினைத்ததே. பாடல்கள் அற்புதமாக இருந்தாலும் , அது இளையராஜா இசையிலிருந்து வேறுபடவில்லை, அதனால் Hero Worship உச்சத்தில் இருந்த தமிழகத்தில் இளையராஜாவை அசைக்க முடியவில்லை.

சில உதாரணங்கள்

ரஜினியின் மனிதன் - இசை சந்திரபோஸ்
பார்த்திபனின் புதிய பாதை - இசை சந்திரபோஸ்
பாலச்சந்தரின் அழகன் - இசை மரகதமணி(கீரவாணி)
பாலச்சந்தரின் ஜாதி மல்லி - இசை மரகதமணி
பாரதிராஜாவின் கொடி பறக்குது - இசை ஹம்சலேகா
பாரதிராஜாவின் வேதம் புதிது - இசை தேவேந்திரன்

இளையராஜா இசையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இசையை தந்த ரஹ்மானே கடைசியில் வெற்றி பெற்றார்.


Monday 5 May 2014

மெல்ல பேசும் கள்ளப் பார்வை...

இன்று தற்செயலாக உலகம் சுற்றும் வாலிபன் படப்பாடலான 'பச்சைக்கிளி முத்துச்சரம்' கேட்டேன். அதில் வரும் ஒரு வரி என்னை உலுக்கி விட்டது..

மெல்ல பேசும் கள்ளப் பார்வை ஜாதிப்பூவின் மென்மை
நான் வாழ்வில் காதலித்தது இல்லை..ஆனால் காதலிக்கவில்லையே என்று ஏங்க வைத்துவிட்டது இந்த வரி.

இதுதான் கவிஞரின் (வாலி) வெற்றி போல..

Thursday 20 February 2014

அர்னாபும் விஜயவாடா மக்களும்...

இன்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் வழக்கம் போல் அர்னாப் ஹய் பீபீயில் கத்திக்கொண்டு இருந்தார் , என்ன விஷயம் என்று பார்த்தால், நாடாளுமன்றத்தில் பேப்பர் ஸ்ப்ரே அடித்த காட்சியும், பிறகு ராஜ்ய சபாவில் அதன் செக்ரெட்ரி ஜெனெரலை பார்த்து அசிங்க அசிங்கமாக பேசிக்கொண்டே அவர் கையில் இருக்கும் பேப்பரை வலுக்கட்டாயமாக பிடுங்கும் காட்சியும், ஜம்மு காஷ்மீரில் எம் எல் ஏ ஒருவர் சபை மார்ஷலை அடிக்கும் காட்சியும் , உபி யில் சட்டையை கழட்டி போராட்டம் பண்ணும் இரு எம் எல் ஏ பற்றிய காட்சிகளையும் காட்டிக்கொண்டு இருந்தனர். வழக்கப்படி அர்னாப் ஒரு செத்த பாம்பை (காங்கிரஸ் கட்சி பிரமுகர்) அடி அடி என்று வெளுத்து வாங்கி கொண்டு இருந்தார்.






இதில் அந்த காஷ்மீர் எம் எல் ஏ கலந்து கொண்டு மிக தெளிவாக அர்னாப் சொல்வதை ஒரு கணம் கூட காது கொடுத்து கேட்காமல் , ஏறக்குறைய உருதுவில் தனி ஆவர்தனம் நடத்திக்கொண்டே இருந்தார், ஒரு கட்டத்தில் ஆனானப்பட்ட அர்னாபே வேறு வழியில்லாமல் செத்த பாம்பிடம் திரும்பி அடிக்க ஆரம்பித்தார் (செத்த பாம்புதான் அர்னாப் பேச இடம் கொடுத்தார் , ஆங்கிலத்திலும் பேசினார்).

அந்த தெலுகு மனவாடுகள் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளவேயில்லை. அவர்களை கலந்து கொள்ள வைக்கவும் முடியாது.









இந்த மனவாடுகள் போலதான் தமிழ், கர்நாடக , பீகார் , உ பி , வங்காள , மற்றும் பல மாநில கட்சிகளின் எம் எல் ஏ - க்கள் எம் பி கள் இருக்கின்றனர் , இந்தியாவை ஆட்சி செய்வது இவர்களே , பணம் குவிவதும் இவர்களிடமே.. இவர்கள் தவறியும் டைம்ஸ் நவ் போன்ற விவாத மேடைகளுக்கு வர மாட்டார்கள், வர வைக்கவும் முடியாது.







மேலும், இவர்கள் அனைவரும் அடுத்த எலக்ஷனில் ஜாம் ஜாமென்று மீண்டும் எம். பியாக வருவார்கள் , அதாவது, மிளகு ஸ்ப்ரே அடித்தது, அதிகாரியின் கையில் இருந்த தீர்மானத்தில் நகலை பறித்தது எல்லாமே அந்த எம்.பி இல்லை, அதற்கு பின்னால் அவரை தேர்ந்தெடுத்த , அவைக்கு அனுப்பிய ஒரு தொகுதி இருக்கிறது.ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கின்றனர், அவர்கள் உண்மையிலேயே அவர்கள் எம்.பியிடம் விசுவாசம் கொண்டோ , பணம் வாங்கி கொண்டோ , மற்ற வழியில் ஆதாயம் கொண்டோ, ஒட்டு போட்டோ , போடாமலோஅந்தந்த எம்பிக்களை அவைக்கு அனுப்பிக்கொண்டே இருக்கின்றனர். அர்னாபும், அந்த மக்களின் மனநிலை பற்றி, ஏன் அவ்வாறு செய்கிறார்கள் என்பது பற்றி  கேட்கவே போவதில்லை.

Those MPs are just the mirrors of Morally corrupt average Indian, and that moral corruption of that aam aadhmi will never be questioned and the reason behind the moral corruption will never be explained by Mr. Arnab Goswami..He will always fight with Mirror image and we are safe watching the mirror image.

(மூன்றாவது படம் , ஹைதராபாதில் உள்ள மனவாடு எம்.பி சி.எம் ரமேஷ்காருவின் இல்லு)

Wednesday 12 February 2014

புறநானூறு - ஓர் எளிய அறிமுகம்

சுஜாதாவின் "புறநானூறு - ஓர் எளிய அறிமுகம்" புரட்டிக் கொண்டிருந்தேன். சில சுவையான பாடல்களை பகிர்கிறேன்.

வாழ்க்கை தடுக்கிறது

பாடியவர் - ஒரேருழுவர்
திணை - பொதுவியல்
துறை - பொருண்மொழிக் காஞ்சி

அதள் எறிந்தன்ன நெடு வெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
ஓடி உய்தலும் கூடும்மன்;
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே

பொருள்:

தோல் நிறமுள்ள
சேற்று நிலத்தில்
துரத்தப்பட்ட மான்போல
தப்பி ஓடிவிடலாம் என்றால்
வாழ்க்கை தடுக்கிறது

ஒரு வீட்டில் சாவு ஒன்றில்

பாடியவர் - பக்குடுக்கை நன்கணியார்
திணை - பொதுவியல்
துறை - பெருங்காஞ்சி

ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப
புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப
படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!
இன்னாது அம்ம, இவ் உலகம்;
இனிய காண்க! இதன் இயல்பு உணர்ந்தோரே.

பொருள்:

ஒரு வீட்டில் சாவுப் பறை
மற்றொரு வீட்டில்
கல்யாண மேளம்
மணமக்கள் பூச்சுட,
கணவரை இழந்த பெண்கள்
கண்ணீர் விட
இவ்வாறு உலகம்
படைத்தவன் பண்பில்லாதவன்
உலகம் கொடுமையானது
இதை உணர்ந்தவர்கள் தான்
இனிமையைக் காண்பர்.

Sunday 19 January 2014

ஜெயமோகன் பற்றி சுஜாதா

சுபமங்களா மார்ச் 1993 இதழில் ஜெயமோகனின் "திசைகளின் நடுவே" சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து சுஜாதா எழுதியவற்றிலிருந்து சில பகுதிகள்.

தற்போது தமிழில் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருப்பவர்களில் கவனிக்க வேண்டியவர்கள் பட்டியலில் ஜெயமோகனின் பெயர் இருக்கிறது. சில ஆண்டுகளாக எழுதி வரும் இவர் கதைகளை நான் அவ்வப்போது கவனித்ததுண்டு. போன வருஷம் "கதா" என்கிற அகில இந்திய நிறுவனம் வெளியிட்ட தொகுப்பில் இவர் கதையான 'ஜகன் மித்யை' இடம் பெற்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வந்து ஜனாதிபதி பரிசு பெற்றது சந்தோஷமாக இருந்தது. (இவருடைய வேறு நல்ல கதையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்பது வேறு விஷயம்) சிறு பத்திரிகைகளில் எழுதி வரும் ஒரு எழுத்தாளருக்கு இந்த மாதிரி அடையாளம் கிடைத்திருப்பது சந்தோஷமான விஷயமே.

என்னைப் பொறுத்தவரையில், நான் ஒரு சிறுகதையின் உணர்ச்சிப்பூர்வமான அனுபவத்தில் பங்கேற்கும்போது தான் அது எனக்கு நல்ல கதையாகிறது. இல்லையெனில் நான் அதை உடனே நிராகரித்து விடுகிறேன். மற்றவன் அனுபவம் எனக்கு முக்கியமில்லை.

இந்தப் பரிட்சையில் ஜெயமோகனின் பதினான்கு கதைகளில் ஐந்து தேர்ந்தன. இதனால் மற்ற கதைகள் நல்ல கதைகள் இல்லை என்று சொல்லவில்லை. எனக்கு அவை உறைக்கவில்லை. உதாரணம் 'ஜகன்மித்யை' என்கிற கதையை அகில இந்திய அளவுக்கு உயர்த்தித் தேர்ந்தெடுக்க அக்கதையில் ஏதும் இருப்பதாக எனக்குப் படவில்லை. ஆனால், அதைத் தேர்ந்தெடுத்த சுந்தர ராமசாமி ரசித்திருக்கலாம். மாறாக இந்த தொகுப்பில் உள்ள 'பல்லக்கு' என்கிற கதை அண்மையில் தமிழில் எழுதப்பட்ட சிறந்த கதைகளில் ஒன்று என்று கருதுகிறேன். இதை எப்படி அவர்கள் எப்படி விட்டிருக்க முடியும் என்று ஆச்சர்யமாக இருக்கிறது.

ஜெயமோகன் ஒரு வேற்று மொழிக்காரரின் அசாத்திய தைரியத்துடன் சிறுகதையின் பல்வேறு வடிவங்களை முயற்சிப்பதை பாராட்ட வேண்டும். வேதகாலக் கதைகள், சாமியார் கதைகள், பிலாசபி கதைகள் எல்லாமே தயங்காமல் முயற்சிக்கிறார். தன் முன்னுரையில் 'அறச்' சார்பே எனது கடவுள். அறச்சார்பற்ற படைப்பை இலக்கியமாக மதிக்க மாட்டேன். கால் சுண்டு விரலால் எற்றித்தள்ள தயங்க மாட்டேன். அவற்றின் சகல அங்கீகாரங்களின் கூட! என்று ஆரவாரமான அலட்டலான முன்னுரையின் தேவையில்லாமலேயே 'நதி', 'விலை', 'போதி', 'படுகை' போன்ற கதைகளை ரசிக்க முடிகிறது. அறச்சார்பு என்று எதைச் சொல்கிறார் என்பது குழப்பமாக இருப்பினும், ஒரு தொகுதிக்கு ஒரு 'பல்லக்கு' வந்தாலே போதும்.

Saturday 18 January 2014

சக்கரை இனிக்கிற சக்கரை

கடந்த ஏப்ரல் மாதம் எனக்கு ரத்தத்தில் சக்கரையின் அளவு அதிகமாக உள்ளதென கண்டேறியப்பட்டது. உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மற்றும் மருந்தின் மூலம் இப்போது ஓரளவு குறைந்துள்ளது என்றாலும் முழுமையாக அது இருக்க வேண்டிய அளவிற்கு வரவில்லை. கட்டையில் போகும் காலம் வரை இந்த நோயுடன் தான் நீ இருந்தாக வேண்டும் என்று சொல்லிவிட்டார் மருத்துவர்.

குடும்பத்தில் யாருக்கும் இந்த நோய் இல்லை, அதிகமாக இனிப்புகள் எடுத்துக்கொள்ளும் ஆளும் இல்லை என்கிறாய், இருந்தாலும் 35 வயதில் உனக்கு ஏன் இது வந்தது என்று தெரியவில்லையே என்றார் மருத்துவர். சரி, வந்தாயிற்று, நம் கர்மா என்று விட வேண்டியது தான் டாக்டர் என்றேன். அது சரி, ஆனால் உன்னால் முடிந்த வரை இந்த நோயை பற்றி பிறருக்கு எடுத்து சொல்லு(முக்கியமாக குழந்தைகளுக்கு). ஏனென்றால், வருங்காலத்தில் இந்தியாவில் இரண்டில் ஒருவருக்கு இந்த நோய் வரும் அபாயம் இருக்கிறது. தனி மனிதன் முயற்சி செய்தால் மட்டுமே இந்த நோயிலிருந்து தப்பிக்க முடியும் என்றார். நிச்சயம் செய்கிறேன் என்றேன்.

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டு அதை கவனிக்காமல் இருப்பவர்கள் பல உடல் உபாதைகளுக்கு உள்ளாவார்கள் என்பது உண்மை. உடனே எந்த பாதிப்பும் இருக்காது என்றாலும் சில வருடங்களில் பார்வை மங்குதல், சிறுநீரக பாதிப்பு, இதய நோய் போன்றவை சாதாரண மனிதர்களை காட்டிலும் இவர்களுக்கு வருவதற்கான சாத்தியங்கள் 50% அதிகம் உள்ளது. இதையெல்லாம் விட பெரிய உபாதை "அறிவுரை" சொல்லியே நம்மை சாகடிக்கும் நண்பர்/உறவினர் கூட்டம். "51 வயசு பக்கத்துக்கு வீடு ஆளுக்கு. சுகர் 700 போச்சு ஆனா திடீர்னு 55 வந்து கோமால போனான். பத்து நாள் தான். ஆள் போய்ட்டான். அவனுக்கு பரவாயில்ல ரெண்டு ஆம்பிள பசங்க. உனக்கு ரெண்டு பொண்ணுங்க. என்ன பண்ணுவா உன் பொண்டாட்டி? இன்சூரன்ஸ் எல்லாம் பண்ணியிருக்க இல்ல? எனக்கு பாரு 75 ஆயாச்சு. உடம்புல ஒரு பிரச்சனை இல்ல. என்னத்த IT கம்பெனி வேலையோ. சுகர் வந்தது தான் மிச்சம்." என்பார் பக்கத்து வீட்டு மாமா.

"இந்த அலோபதி எல்லாம் நம்பாதே. திருநெல்வேலி கிட்ட நமக்கு தெரிஞ்ச சித்த மருத்துவர் இருக்காரு. கான்சர் ஆளுங்களையே நூறு வருஷம் வாழ வெச்சவரு. சுகர் எல்லாம் சும்மா. நீ அங்கே போய்டு. சுத்தமா சரி பண்ணி அனுப்புவாரு" என்பார் இன்னொருவர்."டேய், அனாவசியமா மனசை போட்டு அலட்டிக்காத. காலம்பற வெறும் வயத்துல வெந்தயத் தண்ணி குடி. இல்லேனா வெண்டைக்காவ தண்ணில மொதல் நாள் ராத்திரி ஊற போட்டு அந்த தண்ணிய மறுநாள் காலம்பற குடி. சுகர் எப்படி கொறையும் பாரு. எங்காத்து மாமாக்கு 19 வயசுல சக்கரை வியாதி. சாகும் போது 82 வயசு. மருந்தா சாப்டார்? எல்லாம் என் கை வைத்தியம் தான்" என்பார் ஒரு மாமி.

இந்த மாதிரி அறிவுரைகள் ஆரம்ப நிலையில் பயங்கர ஆறுதல் அளிக்கும். எல்லாவற்றையும் முயற்சி செய்ய சொல்லும். ஆனால், சக்கரை நோயை நிரந்தரமாக குணமாக்கவே முடியாது. அதை கட்டுப்படுத்த மட்டும் தான் முடியும். இந்த நிதர்சனம் புரிய ஆறு மாதம் ஆகும். மேலும், உங்கள் உடல் வாகை பொறுத்தே மருந்து, மாத்திரை, வெந்தய தண்ணி, வெண்டைக்காய் எல்லாம். எல்லாருக்கும் ஒரே மாதிரி வைத்தியம் உதவாது. ஆக, சக்கரை நோய் இருக்கிறது என்று தெரிந்தவுடன் நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம், உங்களுக்கென ஒரு மருத்துவரை தேர்ந்தெடுத்து அவரிடம் முறையான சிகிச்சை பெறுவது தான்.அலோபதி, சித்தா, ஆயுர்வேதா எதுவாக இருந்தாலும் ஒரு மருத்துவரை அணுகி தொடர்ந்து அவரிடம் சிகிச்சை பெறுங்கள்.

சக்கரை ரத்தத்தில் ஏறுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். மன அழுத்தம்(Stress) கூட ஒரு காரணம். அதற்கு Stress induced sugar என்பார்கள். ஆகையால், சக்கரை அளவுக்கு அதிகம் என்று பார்த்தவுடன் பதட்டம் வேண்டாம். HbA1C எனப்படும் Glycosylated Haemoglobin டெஸ்ட் எடுத்துப் பார்க்கவும். அது ஏழுக்கு மேலே இருந்தால் நீங்கள் கொஞ்சம் கவலைப்பட வேண்டும். அது தான் நீங்கள் சர்க்கரை நோயாளி என்று முடிவு செய்ய மருத்துவர் பயன்படுத்தும் பிரம்மாஸ்திரம். இந்த டெஸ்ட் உங்களுக்கு சர்க்கரை திடீரென்று இன்றோ நேற்றோ வந்ததல்ல சில மாதங்களாக/வருடங்களாக இருக்கிறது என்று உறுதி செய்யும். அடியேனுக்கு 11.9 இருந்தது. எந்த நேரமும் Heart attack அல்லது Stroke வரலாம் என்றார்கள்.

சர்க்கரை நோய் உள்ளது என்று உறுதி செய்யபட்டால் மற்ற எல்லா சோதனைகளையும்(சிறுநீரகம், இருதயம், கண்கள்) ஒரு முறை செய்து விடவும். இந்த சோதனைகளை விடாது வருடத்திற்கு ஒரு முறை செய்யவும். இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் திட்டமிட்டு உடற் பரிசோதனை செய்து கொள்வதே இல்லை என்பது மருத்துவர்களின் பெரிய குற்றச்சாட்டு. வியாதி வந்த பின் தான் மருத்துவரை தேடிச் செல்கிறார்கள். முதலிலேயே வியாதி இருப்பது தெரிந்தால் இன்சூரன்ஸ் போன்ற சமாசாரங்களை அதற்கு ஏற்றார் போல் திட்டமிடலாம்.

சக்கரை நோய் வந்த பின் சக்கரை சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பது இன்று குழந்தைக்கு கூட தெரியும் என்பதால் நான் அதையெல்லாம் சொல்லப்போவதில்லை. எதை சாப்பிடலாம் அல்லது சாப்பிட வேண்டாம் என்றும் சொல்லமாட்டேன். Glycemix Index என்று ஒன்று இருக்கிறது. ஒவ்வொரு உணவிற்கும் இது உண்டு. இதை பார்த்துக் கொள்ளவும்(கூகுள் செய்தால் ஒரு வண்டி தகவல் கிடைக்கும்). இது எந்த உணவு ரத்தத்தில் சக்கரையின் அளவை விரைவாக/குறைவாக ஏற்றும் என்பதின் சுட்டு. இதற்கு ஏற்றவாறு உங்கள் உணவை திட்டமிடவும்.

சிலர் சுகர் ப்ரீ சேர்த்துக் கொள்ளலாமே என்பார். அவரவர் உடல் நிலையை பொறுத்து உபயோகிக்கலாம். சிலருக்கு சுகர் ப்ரீ சேர்த்தால் வயிற்றால் போகும். பார்த்துக் கொள்ளுங்கள். சக சக்கரை வியாதி நண்பர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை பெறாமல் எடுத்துக் கொள்ளாதீர்கள். வெந்தயம், வெண்டைக்காய் போன்றவை சக்கரை அளவை கட்டுப்படுத்தும் தான். ஆனால் முற்றிலும் குறைக்காது. சாப்பிடாமலே இருந்தால் சக்கரை அளவு குறையும் என்று நம்பாதீர்கள். அது சக்கரை அளவை மேலும் ஏற்றும். தினசரி உடற் பயிற்சி செய்யுங்கள். அரை மணி நேரம் வியர்வை சொட்ட நடந்தால் கூட போதும். நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

Wednesday 1 January 2014

அர்விந்த் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகி விட்டார். 'டில்லியில் உள்ள, ஒவ்வொரு வீட்டுக்கும், தினமும், 667 லிட்டர் குடிநீர் இலவசமாக வழங்கப்படும்' என, நேற்று முன்தினம் அறிவித்தார். இதைத் தொடர்ந்து , 50 சதவீதம் வரை மின் கட்டணத்தை குறைத்து, அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திண்டுக்கலில் இருந்து திருச்சி வரும் வழியில் ATM ஒன்றில் பணம் எடுக்க காரை நிறுத்தினேன். டீ கடைக்காரரும் டீ குடிக்க வந்த ஒருவரும் கெஜிரிவாலை பற்றி பேசிக்கொண்டிருந்தனர். "ஊழலை ஒழிக்க ஒருத்தன் வந்துட்டான்யா" என்ற சொல் காதில் விழுந்தது. கெஜிரிவாலை இந்த நாடே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. அவர் ஐந்து வருடங்கள் ஆட்சி செய்து சொன்னதை எல்லாம் நிறைவேற்றினார் என்றால் இனி எந்த அரசியல்வாதியும் பொய் வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்ற முடியாது. ஊழலற்ற ஆட்சி சாத்தியமே என்று இந்திய மக்கள் நம்பக்கூடும்.

இதற்கிடையே நாம் என்ன செய்யலாம்? லஞ்சம் கேட்பதை/கொடுப்பதை நிறுத்த கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்யலாம். அரசியல்வாதிகளை மட்டுமே லஞ்சம் வாங்கும் வில்லன்கள் என்று சித்தரித்துக் கொண்டிருக்கிறோம். அதில் நமக்கும் பெரும் பங்கிருக்கிறது. நாடெங்கும் நல்லாட்சி அமைய நாம் எடுத்து வைக்கும் முதலடி இதுவாக இருக்கலாம். கெஜிரிவாலுக்கும் அவர் அமைச்சர் குழுவுக்கும் வாழ்த்துக்கள்.