Wednesday, 9 September 2009

சாப்ட்வேர் இன்ஜினியரும் கவிஞர்களும்

இன்று காலை கவலையின்றி சற்று இளைப்பாறலாம் என்று கழிப்பிடம் சென்ற போது தான் இந்த உன்னத சிந்தனை உதயமானது. இப்போ மென்பொருள் துறையில் உள்ளவர்கள் ஒரே மாதிரி வேலையை மறுபடியும் செய்ய நேர்ந்தால் உடனே என்ன செய்வார்கள்? ஏற்கனவே அடித்த கோடை எடுத்து காப்பி பேஸ்ட் செய்வார்கள்.

ஆனால், ஒரு கவிஞரை ஒரே மாதிரி சிச்சுவேஷனுக்கு இரண்டு படங்களில் பாட்டெழுத சொன்னால் அவர்களுக்கு எவ்வளவு கஷ்டம்? காப்பி பேஸ்ட் எல்லாம் அவர்கள் செய்ய முடியாது. உதாரணமாக,"அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே" எழுதிய வாலி தான் "காலையில் தினமும் கண்விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா" பாட்டையும் எழுதினர். அதே போல்,"முஸ்தபா முஸ்தபா" பாடல் எழுதிய வாலி "தோஸ்த் படா தோஸ்த் தோஸ்த்துக்கு இல்லை வாஸ்து" பாடலையும் எழுதினார்.

இதன் மூலமாக நாம் சொல்ல வரும் கருத்து என்னவென்றால் மென்பொருள் பொறியாளர்களும் அதே கோடை காப்பி அடிக்காமல் கொஞ்சமாவது மாற்றி அடிக்க வேண்டும் என்பதே.

Monday, 7 September 2009

டெல்லிக்கு ரயில் பயணம்

மீண்டும் அலுவல் காரணமாக டெல்லி பயணம். சரி, நம்ம ப்ராஜெக்ட் செலவை கொஞ்சம் குறைக்கலாமே என்று விமானத்தில் போகாமல் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் வண்டியில் இரண்டாம் வகுப்பு குளிர் சாதன பெட்டியில் சைடு லோயர் இருக்கை முன்பதிவு செய்திருந்தேன். சென்னையில் இருந்து கடந்த சனிக்கிழமை இரவு கிளம்பி இன்று காலை டெல்லி வந்தடைந்தேன். வரும் வழியில் நடந்த சில சுவாரசியமான நிகழ்வுகளை பற்றியது இந்த பதிவு.

பொதுவாக, குளிர் சாதன வகுப்பில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு கம்பளி, போர்வை மற்றும் தலைக்கு வைத்துக்கொள்ள தலைகாணி கொடுப்பது வழக்கம். ஆனால், என் இருக்கையில் கம்பளியும் போர்வையும் மட்டுமே இருந்தன. சரி மறந்திருப்பார்கள் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். காலை பல் துலக்க சென்ற பொது அங்கே இருந்த கோச் பணியாளரிடம் கேட்ட போது சொன்னார், "நான் நேத்து நைட் உங்க பில்லோவும் சேர்த்து மேல் பெர்த்ல வெச்சேன் சார். போய் பாருங்க என்றார்". அப்பறம் தான் தெரிந்தது. மேல் பெர்த்தில் இருந்த நண்பர் ஒரு தலைகாணியை தலைக்கும் இன்னொன்றை காலுக்குமாக வைத்து தூங்கிக் கொண்டிருந்தார். சரி, அவர் உபயோகித்ததை நாம் கேட்டால் நன்றாக இருக்காதே என்று கோச் உதவியாளரிடம் இன்னொரு தலைகாணி கேட்க அவர், "தலைகாணி இல்ல சார். உங்க தலைகாணி சார் அது. சண்டைபோட்டு வாங்குங்க என்றார்.

கேவலம், ஒரு தலகாணிக்காக சண்டைபோட வேண்டுமா என்று ஞாயிறு இரவும் தலைகாணி இல்லாமல் தூங்கினேன். இதில் என்ன விசேஷம் என்றால், மேல் பெர்த்தில் இருந்த நண்பர் இரண்டாவது தலைகாணி எப்படி வந்தது என்று துளிக்கூட யோசித்ததாக தெரியவில்லை.

சரி, போனால் போகட்டும் தலைகாணி இல்லாவிட்டால் தூக்கமா வராது என்று படுத்தால் எதிர் பக்கம் மிடில் பெர்த்தில் இருந்து கர்ண கொடூரமான குறட்டை சத்தம். கவுண்டமணி ஒரு படத்தில் செந்திலை பார்த்து, "ஏன்டா காண்டாமிருகம் கக்கூஸ் போற மாதிரி சத்தம் போடற என்பார்". இது அதை விட மோசம். இரவில் மட்டுமல்லாது மனிதர் பகல் தூக்கத்திலும் அதே டெசிபெல் சத்தத்தில் குறட்டை விட்டார். அவர் எதிரில் உட்கார்ந்து இருந்த ஹிந்தி குடும்பம் ஒன்று அவரை பயங்கரமாய் கிண்டல் செய்து சிரித்துக்கொண்டு இருந்தது. ஆனால், மனிதர் அசரவில்லை.முப்பத்திமூன்று நேர பயணத்தில் இருபத்தைந்து மணி நேரம் தூங்கி கொண்டு வந்தார்.தூங்காத சமயத்தில் எதாவது கொறித்து கொண்டே இருந்தார். விளைவு, தூக்கத்தில் வாய், ஆசனவாய் இரண்டும் வேலை செய்தன.குளிர் சாதன பெட்டி, சொல்ல வேண்டுமா என்ன? எனக்கு மூக்கடைப்பு இருந்ததால் நான் தப்பித்தேன்.ஆனால், மற்றவர்கள் நாலா பக்கமும் தெறித்து ஓடிக்கொண்டிருந்தார்கள்.

இப்படியாக வண்டி ஒருவழியாக போபால் வந்து சேர்ந்தது. அனைவருக்கும் இரவு உணவு அளிக்கப்பட்டது. பகல் உணவே பாடாவதியாக இருந்ததால் நான் இரவு உணவு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். போபால் வந்தவுடன் இறங்கி நாலு சப்பாத்தி, பால் சாப்பிட்டுவிட்டு மீண்டும் என் இருக்கைக்கு வந்து உட்கார்ந்தேன். அப்போது தான் அம்பியை சந்திக்க நேர்ந்தது. ரயில் போபால் ஸ்டேஷன் தாண்டியவுடன் எனது அடுத்த இருக்கையில் இருந்த அம்பி(அந்நியன் பட புகழ்) சென்று கோச் உதவியாளரை அழைத்து வந்தார்.

சாம்பார்ல உப்பில்லை, பப்படம் ஒடஞ்சு இருக்கு, தயிர் புளிக்கிறது என்று குறை சொல்ல ஆரம்பித்தார். இரண்டு நிமிடம் கேட்டுவிட்டு உதவியாளர் இதற்கு தான் எதுவும் செய்யலாகாது என்றார். நம்ம அம்பி உடனே உணர்ச்சிவசப்பட்டு IRCTC அதிகாரிக்கு போன் போட்டார். எடுத்தவுடன், "நான் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில்ல அஞ்சு வருஷமா போயிட்டு வரேன். "I am one of your loyal customers. How can you do this to me? என்றார். அந்த பக்கத்தில் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை. அம்பி டீடைல்ஸ் சொல்ல ஆரம்பித்தார். "Food was provided on Tamilnadu Express in Bhopal. Pappadam Broken. No salt in Sambar. Pickle is old" என்றார். மறுபடியும் அந்த பக்கம் என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை. இவர் உடனே, ஓகே சார், தேங்க்ஸ். Please take action. You need to meet the contractor and check the quality" என்று சொல்லி போனை வைத்துவிட்டார். அதே பந்தாவில் எங்கள் எல்லாரையும் ஒரு முறை பார்த்து "This is our right. We need to fight." என்றார். கோச் உதவியாளர் அங்கேயே நின்று கொண்டிருக்க அவரை பார்த்து ஒரு நக்கல் சிரிப்பு சிரித்தார். கோச் உதவியாளரோ, "போடா பொக்கி, உன்ன மாதிரி எத்தனை பேரை பார்த்திருக்கேன். நீ பண்ண போனை எடுத்ததே எவனாவது சமையல்காரனா இருப்பான்டா என்கிற மாதிரி பார்த்தார்".

இந்த கூத்தையெல்லாம் ரசித்துக்கொண்டு ஒரு வழியாக டெல்லி வந்து சேர்ந்தேன்.