Friday 30 March 2012

இரண்டாம் உலகம்

வாழ்நாள் முழுதும் துன்பம் கண்டு சோராமல் இருக்க ஒரு மனிதன் என்ன செய்ய வேண்டும்? என்னைப் பொறுத்தவரை வருடத்திற்கு ஒரு முறை என ஒரு வாரம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பார்த்தாலே போதும். பள்ளி, கல்லூரி சென்று கல்வி கற்றுள்ளேன் என்றாலும் வாழ்க்கை "பொறுமை, சகிப்புத்தன்மை, மனிதநேயம்" போன்ற வார்த்தைகளை கடந்த ஏழு நாட்களில் தான் எனக்கு அறிமுகப்படுத்தியது என்பேன்.

மருத்துவமனையின் மறு பெயர் காத்திருத்தல். "சார், டாக்டர் எப்போ வருவார்? தெரியாது சார், வெயிட் பண்ணுங்க. சார், பேஷேண்டை எப்போ வார்டுக்கு மாற்றுவீங்க? தெரியாது சார், டாக்டரை தான் கேக்கணும். வெயிட் பண்ணுங்க. டாக்டர், இந்த நோய் மறுபடியும் வருமா? தெரியல, வெயிட் பண்ணி பார்ப்போம். டாக்டர், எப்போ வீட்டுக்கு போலாம்? வெயிட் பண்ணுங்க, நான் சொல்றேன். சிஸ்டர், மூத்திரப் பை புல் ஆயிடிச்சு, வார்டு பாயை கூப்பிடு மாத்த சொல்லுங்க. வெயிட் பண்ணுங்க சார், வருவாங்க. இன்சுலின் கொடுத்த பிறகு எவ்வளோ நேரம் கழிச்சி சாப்பிடலாம்? வெயிட் பண்ணுங்க சார், டாக்டரை கேக்கறேன்". இப்படி எங்கு சென்றாலும் காத்திருத்தல்கள். ஆனால், சொல்லப்படும் எந்த பதிலிலும் கோபம் இல்லை. எந்த சூழலிலும் பதட்டப்படாமல், கோபப்படாமல் இருக்க பயிற்சி கொடுக்கபட்டவர்கள். "சிஸ்டர், எங்க பாட்டிக்கு தனி ரூம் வேணும், இருக்கா? ரூம் இல்லையே சார். ஸ்பெஷல் வார்டுல? ஜெனரல் வார்டுல? டீலக்ஸ் ரூம்? எதுலயும் இல்ல சார். மார்ச்சுவரில இருக்கா? அந்த கோபத்திற்கும் புன்னகையுடன் தான் பதில்.

ஊரிலிருந்து உறவினரை பார்க்க வரும் கூட்டம் இங்கேயே தங்கி, குளித்து, உண்டு ஒரு கட்டத்தில் தன் வீடு போல பாவிக்கிறது. நைட் போடில வண்டி ஏறி காலைல கோயம்பேடு வந்தேன். பெரும்பாக்கம் போக எந்த வண்டி ஏறனும்னு கேட்டேன். அங்க ஒருத்தன் இந்த வண்டி தான்னு சொன்னான். கண்டக்டர் தூக்கத்துல இருந்திருப்பான் போல. பெரும்பாக்கம்னு சொல்லிட்டு நானும் தூங்கிட்டேன். எறங்கி பாத்தா செங்கல்பட்டு. மறுபடியும் பஸ் பிடிச்சு வந்தேன் என்று உறவினரிடம் சொல்லிவிட்டு அருகில் இருக்கும் நம்மை பார்க்க, அவன் நிலையை எண்ணி பரிதாபப்படுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியாது.

அக்கம் பக்கம் நோயாளிகளின் உறவினர்களிடம் பேச ஆரம்பித்து, நெருங்கி பழகி ஒரு கட்டத்தில் அவர்கள் குடும்பத்தினர் போல ஆகிவிடுவார்கள். "இந்த ஆஸ்பத்திரி எல்லாம் வேண்டாம். கீழக்கரைல நம்ம பாய் ஒருத்தர் இருக்காரு. போய் பாத்தீனா பத்தே நிமிஷத்துல எவன் சூன்யம் வெச்சு இந்த வியாதி வந்துச்சுன்னு சொல்லிடுவாரு. அவன் குடும்பத்துக்கு இதே நோய வர வைப்பாரு. நான் நாளை கழிச்சி மறுநாள் ஊருக்கு போறேன். வரியா? என்பார். கேட்டுக்கொண்டு இருக்கும் நோயாளியின் உறவினன், "அப்பறம் ஏன் நாயே நீ இங்க வந்த என்று கேட்காமல் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டிக் கொண்டிருப்பான்". சர்வ மதங்களும் பிரார்த்தனை செய்யும் வார்டுகள். ஒரு பக்கம் ராதாகிருஷ்ண சாஸ்திரிகள் குரலில் ருத்ரம், சமகம். இன்னொரு இடத்தில பாதிரியை அழைத்து ரட்சை, வார்டுக்குள்ளேயே தொழுகை என்று அனைத்தும் பார்க்கலாம். அய்யரே, ஏன் இவ்வளோ சத்தமா உங்க சமாச்சாரத்தை வைக்கறீங்க என்று யாரும் கேட்பதில்லை. இன்னொரு மதத்தின் விஷயம் தான் என்றாலும், நோயாளி கேட்கட்டுமே, சரியாகும் என்கிற நம்பிக்கை.

எந்த உறவும் இல்லாத போதும் வாஞ்சை. "கண்ணு, அப்பாக்கு சரியாடும். நீ ஒன்னும் கவலைப்படாத. ஏசப்பா காப்பாத்துவாரு". எந்த நோயாளின் உறவினர் என்று தெரியவில்லை. காண்டீனில் என்னிடம் இதை சொன்னார். அவர் யாருக்காக வந்திருக்கிறார் என்று கேட்க தோன்றியது. உங்க அப்பாருக்கு பக்கத்துக்கு ரூம். பையனுக்கு ஆக்சிடென்ட் ஆகி ஒரு மாசமா கோமா. மருமவ அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டா. தாய் நானு விட முடியுமா சொல்லு?". என்ன சொல்லி தேற்ற அந்த தாயை. தன் ப்ரச்சனைகிடையே என்னிடம் கரிசனம்.

மாறி மாறி ரத்தமும் சதையும் தினமும் பார்க்கும் டாக்டர், செவிலியர். "உங்க புருஷனுக்கு ரத்தமா வெளிக்கி போறது. ரத்தம் ஏத்த சொல்லியிருக்கேன். பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை என் கிட்ட எப்படியிருக்கார்னு கேட்டா நான் என்ன சொல்றது? மன்னிச்சிடுங்க டாக்டர், கவலை அதான் கேட்டேன். விலையுர்ந்த காரில் வரும் அந்த பெண்மணி கெஞ்சுவார். ஒரு நாளில் நான்கு குடல் அறுவை சிகிச்சை. ஒவ்வொன்றும் மூன்று அல்லது நான்கு மணி நேரம். அறுவை சிகிச்சை அரங்கிற்கு வெளியே அழுகையுடன் காத்திருக்கும் உறவினர்கள். மருத்துவரை பார்த்தவுடன் முகம் மலர்ந்து தன் சொந்தம் குறித்த கேள்விகள். அவை அனைத்திற்கும் பதில் சொல்ல வேண்டும். எப்போது உணவு, தூக்கம், குடும்பம் அவருக்கு? மலப்பை, மூத்திரப்பை சகிதம் நோயாளியுடன் நேரம் செலவிடும் செவிலியர்கள். நம் சொந்தம் தான் என்றாலும் அந்த மூத்திரப்பையை இரண்டு நாள் பிடித்தால் தான் நம் சகிப்புத்தன்மையின் அளவுகோல் தெரிய வரும். எத்தனை நன்றி சொன்னாலும் அவர்கள் செய்யும் சேவைக்கு தகாது.

நம் கஷ்டம் பெரிது என்ற நினைப்பை புரட்டிப் போடும் வினோத நோய்கள். ஆறு வயது குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை. வலியின் சுவடே தெரியாமல் நம்மை பார்த்து சிரிக்க நமக்கு கண்ணீர் பீறிடுகிறது. ஒரே வரியில் கவிஞர் சொன்னார், "உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு". என் நிலையை அவர்களுடன் ஒப்பிட்டு என்னால் நிம்மதி நாட முடியாது.

சகலே ஜனா சுகினோ பவந்து.