
தாயும் மகளும் அறியப்பட்ட எழுத்தாளர்களாக இருப்பது அபூர்வம், அப்படி இருந்தாலும் தாய் பல ஆண்டுகாலமாக காத்திருந்த ஒரு இலக்கியப்பரிசை மகள் வென்றுவிடுவது சந்தோஷமும் உள்ளார்ந்த வலியும் தரும் ஒரு நிகழ்வு, இலக்கியத்தின் விசித்திரத்தைப் போலவே இலக்கியவாதிகளின் வாழ்விலும் விசித்திரங்கள் நிறையவே இருக்கின்றன
மூன்று முறை புக்கர் பரிசிற்கான இறுதிபட்டியலில் இடம் பெற்ற இந்திய ஆங்கில எழுத்தாளரான அனிதா தேசாய் அந்த விருதைப்பெறவில்லை, ஆனால் அவளது மகள் கிரண் தேசாய் தனது இரண்டாவது நாவலான The Inheritance of Lossற்கு புக்கர் பரிசை வென்றுவிட்டார், ஆனாலும் என்றாவது தானும் அந்த விருதை வெல்வேன் என்ற கனவோடு காத்திருக்கிறார் 75 வயதான அனிதா தேசாய்,
ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் பெரும்பான்மையினர் மேல்தட்டு இந்திய சமூக வாழ்க்கையை தான் கதைக்களமாக்க் கொண்டிருக்கிறார்கள், முக்கியக் காரணம் அவர்கள் அதிலிருந்து உருவானவர்கள், விதிவிலக்கானவர்களும் கூட மேற்கத்திய வாசகர்களைக் கவனத்தில் கொண்டு அவியலான ஒரு இந்திய சமூகவாழ்க்கையை எழுதிப் போயிருக்கிறார்கள்,
சுவாரஸ்யம் தான் இவர்கள் எழுத்தின் ஒரே பலம், பகடி செய்வதில் ஆங்கில இந்திய நாவல்களுக்கு என்று தனிபாணியிருக்கிறது, அதில் ஒருவர் ஆர்.கே.நாராயணன்,
இன்னொரு வகை எழுத்திருக்கிறது, அது தத்துவார்த்தமாக வாழ்க்கையை ஆராய்வது, மெய்தேடல், இந்திய ஞானம் மற்றும் துறவு வாழ்க்கை, ஞானமரபின் நவீன அடையாளங்களைக் காணுவது என்று நாவலின் ஊடே மேலோட்டமான தளத்தில் தனது அறிவுத்திறனை வெளிக்காட்டுவது,
மூன்றாவது வகை தனது வேர்களைத் தேடுவது, தனது பூர்வீகம் குறித்தோ முன்னோர்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கே போனார்கள், என்னவானார்கள் என்று அடையாளத்தை தேடும் சுயசரிதைத் தன்மை கொண்ட எழுத்துகள்,
நான்காவது வகை சமகால இந்திய சமூக, அரசியல், பன்னாட்டுகலாச்சாரச் சூழலை ஊடுபாவாகக் கொண்டு தனிமனித எத்தனிப்புகள். காதல், கல்யாணம், மணமுறிவு, ஐடி கம்பெனி வேலை, சுற்றுபுறச் சூழல் விழிப்புணர்வு, மாற்று அரசியல், இந்திய புராணீகத்தின் மறுவாசிப்பு என்று கலந்து கட்டி அடிக்கும் ஜனரஞ்சக எழுத்து, இதன் ஒரு பிரதிநிதியே சேதன் பகத், சுவாரஸ்யமான கதை சொல்லுதலும், தெறிக்கும் கேலியும் மட்டுமே அவரது எழுத்தில் இருக்கின்றன, பெரும்பாலும் இந்தி நடிகர்களை மனதில் வைத்துக் கொண்டு ஹிந்தி சினிமாவிற்கு ஏற்ற கதாபாத்திரங்களையே தனது நாவல் எழுதுகிறார். சேத்தன் பகத்தின் மனைவி தமிழ்பெண் என்பதால் நாவல்களில் மயிலாப்பூர் கலாச்சாரத்தைக் கேலி செய்வதை சேர்த்துக் கொள்கிறார். ஐஐஎம்மில் இருந்து வெளிவந்து நாவலாசிரியர் ஆனவர் என்பதால் பல ஐஐஎம்கள் வேலையை உதறி நாவலாசிரியர்களாகி இந்திய ஆங்கில இலக்கிய உலகினை நாறடித்துக் கொண்டிருக்கிறார்கள், நல்லவேளை தமிழ்வாசகர்கள் ஆங்கில இந்திய நாவல்களை அதிகம் வாசிப்பதில்லை,
ஆங்கில நாவல்களுக்கு விமர்சனம் எழுதுகின்றவர்களின் பாசரங்கும் பொய்யான அறிவுஜீவி தோற்றமும் மிகுந்த எரிச்சலூட்டக்கூடியது, தான் கற்றுக்கொண்ட சகல இலக்கிய சொற்களையும். அரசியல் மற்றும் கருத்தியியல் சார்ந்த பிரயோகங்களையும் கலந்து கட்டி விமர்சனம் எழுதி எந்த ஒரு குப்பையான நாவலையும் உலகதரமானது என்பது போலக் காட்டிவிடுவார்கள், கடந்த பத்து வருசத்தில் ஆங்கில இந்திய நாவல் பற்றி ஒரு நல்ல விமர்சன கட்டுரையை கூட ஆங்கிலத்தில் நான் வாசித்ததேயில்லை, அத்தனையும் சுயபுகழ்ச்சிகள், துதிபாடுதல்கள், அல்லது வெறுப்பை கக்குபவை,
விமர்சனம் எழுதித் தருவதை தொழில்முறையாக கொண்டவர்கள் வேறு பெருகிவிட்டார்கள், அவர்களுக்கு பணம் மற்றும் குடிவிருந்து தாராளமாகக் கொடுத்தால் நாவலைப்பாராட்டி தங்களுக்கு தொடர்பில் உள்ள இதழ்களில் அரைப்பக்க விமர்சனம் எழுதுவார்கள், பெரும்பான்மை ஞாயிறு இணைப்பு இலக்கிய கட்டுரைகளின் தரம் இவ்வளவே,
அனிதா தேசாய் இதிலிருந்து சற்று மாறுபட்டவர், இந்தியாவை விட்டு ஒதுங்கி அமெரிக்காவில் வாழ்பவர், இந்தியாவில் என் எழுத்திற்கான சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை, என்னை குறைவாகவே வாசித்திருக்கிறார்கள் என்று வெளிப்படையாக கூறுகிறார், அவரது எழுத்து உயர்தட்டு மக்களின் அன்றாட வாழ்வைப் பேசிய போதும் நுட்பமாக புனைவின் சாத்தியங்களை எழுத்தில் உருவாக்கி காட்டியிருக்கின்றன
இவரது மலைமேல் நெருப்பு நாவலை தமிழாக்கம் செய்திருப்பவர் அசோகமித்ரன், இந்த நாவல் சாகித்ய அகாதமி விருது பெற்றது, ஆங்கில இந்திய நாவல்களில் முற்றிலும் மாறுபட்ட ஒன்று,
அனிதா தேசாய் பற்றி தமிழில் அதிகம் எழுதப்படவில்லை, சா.தேவதாஸ் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார், கிரண்தேசாய் விருது பெற்ற போது அதை ஊடகங்கள் கொண்டாடி மகிழ்ந்தன, ஆனால் அவளது நாவலை விட பன்மடங்கு சிறப்பானது அனிதா தேசாயின் நாவல்கள், அவற்றை இன்றைய தலைமுறை கவனம் கொள்ளவேயில்லை,
அனிதா தேசாயிடம் இருப்பது ஒரிஜினலான கதை சொல்லும் தன்மை, சுயமான தேடல், கிரண்தேசாயிடம் இருப்பது இரவல் சரக்கு, அவர் கதையைச் செய்கிறார், இந்தியாவைப்பற்றி எழுதும் போது என்னவெல்லாம் கதைக்குள் போடவேண்டும் பட்டியலை தயார் செய்து கொண்டு கதையை உருவாக்குகிறார்
அனிதா தேசாயிடம் இருந்த நிசப்தமும் உள்ளார்ந்த தனிமையின் விகசிப்பும் கவித்துவமும் புனைவின் வழியே தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முயன்ற தவிப்பும் அவரிடமில்லை,
தாயும் மகளும் தங்களது படைப்புகளைப் பற்றி விவாதித்துக் கொள்வதேயில்லை என்று ஒரு நேர்காணலில் கிரண்தேசாய் குறிப்பிடுகிறார்
சிறுவயதில் அம்மாவிற்கு என்று தனியே ஒரு அகஉலகம் இருந்தது என்று தனக்குத் தெரியும், ஆனால் அந்த எழுத்தின் வலிமை எனக்கு தெரியாது, அம்மா தனது படைப்புகள் குறித்து வீட்டில் விவாதிப்பதில்லை, அதை தனது ரகசியமாக தனக்குள்ளாகவே வைத்துக் கொண்டிருந்தார், நானும் ஒரு நாவலை எழுதும்போது அதைப்பற்றி அம்மாவிடம் விவாதிப்பதில்லை, அம்மா எனது நாவல்கள் பற்றி கருத்துச் சொல்வதுமில்லை என்றும் அந்த நேர்காணலில் கிரண் தேசாய் சொல்கிறார்
அனிதா தேசாய் நுட்பமான வாசகரும் கூட, அவருக்கு தனது மகளின் எழுத்து எப்படிப்பட்டது என்று நன்றாக தெரிந்திருக்கும் தானே, இது தான் நெருக்கடியின் உச்சகட்டம், பதில்சொல்லாமல் தனக்குள்ளாகவே ஒடுங்கிக் கொண்டுவிட்டார் அனிதா தேசாய்.
அனிதா தேசாயின் நாவல் Journey to Ithaca மாறுபட்ட ஒரு நாவல், பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரம்மும் அன்னையின் வாழ்வும் இதன் கதைக்களத்தில் ஒன்றாக உள்ளது, இதாகா நகரத்தைத் தேடி வருபவர்களுக்கு அந்நகரம் எதையும் தருவதில்லை, தொலைதூரங்களில் இருந்து அந்த நகரத்திற்கு பயணம் செய்து வரும் பயணஅனுபவமே நகரம் தரும் மிகப்பெரிய பரிசு என்பார்கள், அந்த மனநிலையைப் பிரதானமாக கொண்டு அனிதா தேசாய் நாவலை எழுதியிருக்கிறார்,
எனக்கு இந்திய பெண் எழுத்தாளர்களில் மிகவும் பிடித்தவர் நால்வர், ஒன்று குர்அதுல் ஐன் ஹைதர்(Qurratulain Hyder), உருதுமொழி நாவல் எழுதியவர், இவரது புகழ்பெற்ற நாவல் அக்னிநதி, மற்றவர் இஸ்மத் சுக்தாய் (Ismat Chughtai ) இவரது சிறுகதைகள் அற்புதமானவை, இவரும் உருது எழுத்தாளரே, மகேஸ்வதா தேவி (Mahasweta Devi) வங்காள நாவலாசிரியர், இவரது நாவல்கள் மற்றும் ஆதிவாசிகளுக்கான போராட்டச் செயல்பாடுகள் முக்கியமானவை, மற்றவர் கமலா தாஸ், மாதவிக்குட்டி என்ற பெயரில் கதைகள் எழுதியவர், கேரளாவைச் சேர்ந்தவர், முக்கிய கவிஞர் மற்றும் சிறுகதையாசிரியர், இந்த நால்வருமே அசலான மொழியையும் தனக்கான தனி அகவுலகையும் வெளிப்பாட்டு திறனையும் கொண்ருந்தவர்கள், முன்னோடி சாதனையாளர்கள்,
ஒளிரும் நியான் விளக்குகளின் பகட்டான வெளிச்சத்தில் நட்சத்திரங்கள் கண்டுகொள்ளாமல் போய்விடும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், ஆகவே அசலான படைப்புகள் கண்டுகொள்ளப்படாமலே தான் போகும்.
ஆனால் எங்கோ ஒரு மூலையில் எவரோ ஒருவர் தனிமையோடு வானத்து நட்சத்திரத்தைப் பார்த்து வியந்தபடியே தானிருப்பார் என்ற உண்மை தான் பலரையும் தொடர்ந்து எழுத
வைத்துக் கொண்டிருக்கிறது.
Source: www.sramakrishnan.com