Tuesday 31 May 2011

தேசிய திரைப்பட விருதுகள் - தமிழ் இலக்கியத்திற்கு அங்கீகாரம்?

ஆடுகளம் இந்த வருடம் ஆறு தேசிய விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த கதை இயக்கம் என்று இரு விருதுகளை அந்தப் படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் பெற்றுள்ளார்.
2009 ஆம் ஆண்டு சிறந்த இயக்குனருக்கான விருதை நான் கடவுள் படத்திற்காக பாலா பெற்றார்.

வெற்றிமாறன் பாலா இருவருமே இயக்குனர் பாலு மகேந்திராவின் சீடர்கள். பாலு மகேந்திரா அவர்களோ தமிழ் மற்றும் ஈழ இலக்கியத்தில் நிறைய ஞானம் உள்ளவர். தன்னிடம் உதவி இயக்குனராக சேர வரும் இளைஞர்களிடம் பாலு மகேந்திரா கேட்கும் முதல் கேள்வியே "சமீபத்துல தமிழ்ல என்ன நாவல் படிச்ச?" என்பது தான். ஆடுகளம் படத்தின் ஒலிநாடா வெளியீடு விழாவில் கூட படத்தில் தனுஷின் குருநாதராக(பேட்டைக்காரன் ) வரும் VIS.ஜெயபாலனை ஈழத்தின் சிறந்த கவிஞர்களில் ஒருவர் என்று அறிமுகப்படுத்தினார் பாலு மகேந்திரா. VIS.ஜெயபாலனுக்கு ஆடுகளத்தில் பேட்டைக்காரனாக நடித்ததற்கு
சிறப்பு விருது கிடைத்ததை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

பாலா மற்றும் வெற்றிமாறனின் தேசிய விருதுகள் தமிழ் இலக்கியத்திற்கு கிடைத்த பெருமையாகவே நான் பார்க்கிறேன். ஜெயமோகனின் ஏழாம் உலகத்தை தழுவி எடுக்கப்பட்டது தான் நான் கடவுள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆக, தமிழ் இலக்கியவாதிகள் தங்கள் காலரை கொஞ்சம் ஸ்டைலாக தூக்கிவிட்டுக் கொள்ள வேண்டிய காலம் இது.