Saturday, 31 December 2011

2012 - நான் கொல்ல விரும்பும் நபர்கள்

"ஆண்டொன்று போனால் வயதொன்று போகும், அதற்கு முன்னாலே வா வா வா வா
அழகுடன் இளமை தொடர்ந்து வராது, இருக்கின்ற போதே வா வா வா வா"

வாழ்வின் அனைத்து சந்தர்ப்பங்களுக்கும் ஒரு பாடலை விட்டுச் சென்ற அந்த காவிய கவிஞனை 2012 தொடங்கவிருக்கும் நிலையில் இந்த பாடலின் வாயிலாக நினைவு கூர்கிறேன்.

கடந்து சென்ற வருடத்தில் எனது செய்கைகளை அசை போட, அதில் தவறுகளே அதிகம் தெரிகின்றன. அடடா, அந்த நண்பனிடம் இப்படி பேசியிருக்கலாமே, அவன் மனம் புண்படும்படி அல்லவா சொல்லிவிட்டேன், அவனை அழைத்து மன்னிப்பு கேட்கலாமோ என்று நினைக்கும் போதே "நான்" என்கிற அந்த எண்ணம் தலைதூக்கி "அவனும் தானே பேசினான், அவனுக்கு மன்னிப்பு கேட்கனும்னு தோணிச்சா? நீ ஏன் கேக்கணும்?" என்கிறது. ஒரு விஷயத்தை பற்றி ஒருவர் பேசும் பொழுது உன்னை விட இதைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும் என்பதாய் அவரை முந்திக் கொண்டு பேசும் போது, மீண்டும் "நான்" என்கிற அந்த கிருமி படருவதை நன்றாகவே உணர்கிறேன். இப்படி தோன்றுகிற அந்த "நான்" என்கிற எண்ணத்தை வரும் புத்தாண்டில் கொலை செய்ய விரும்புகிறேன்.

"உங்களுக்கு கோபமே வராதா சார்?" என்று அலுவலகத்தில் கேட்கும் நண்பர். "எல்லா விஷயத்துக்கும் எப்படி உடனே கோபம் வரது?" என்னும் மனைவி. பணியின் சுமையை பணிபுரியும் இடத்தில் வெளிக்காட்டாமல் வீட்டில் பகிர்ந்து கொள்ளும் நான். யோசித்து பார்க்கையில் இந்த கோபம் நிச்சயமாக ஒரு பயங்கர நோய். கோபமே இல்லாமல் இருப்பது நல்லதா என்று தெரியவில்லை, ஆனால் என்னைப் போன்ற முன்கோபிகள் இந்தச் சமூகத்திற்கு சாபமே. கோபம் என்கிற அரக்கனை கொல்ல வேண்டிய நிர்பந்தம் உள்ளது எனக்கு, இல்லையேல் அவன் என்னை விழுங்கக் கூடும்.

"க்ஷண பித்தம்; கண பித்தம்" என்று சொல்வார்கள், நிலையான புத்தி இல்லாமல் தடுமாறுவதற்கு அப்படி சொல்வார்கள்.இந்த பழமொழி அளவிற்கு இல்லையென்றாலும் ஒரு மிகப்பெரிய தலைமைப் பொறுப்பில் இருக்கும் எனக்கு நிச்சயமாக நிறைய பொறுமை வேண்டும் என்பதை நான் அறிவேன். தடக் தடக்கென்று முடிவுகள் எடுக்கும் விதத்தை மாற்றிக் கொள்ள விழைகிறேன். என் கருத்தை ஸ்தாபிதம் செய்ய நினைக்காமல் பிறர் கருத்தை முழுதும் கேட்டு பின்னர் ஒரு முடிவெடுக்க வரும் புத்தாண்டில் சங்கல்பம் செய்து கொள்கிறேன். இதற்கு இடையுறாக இருக்கும் "அவசரம்" என்னும் எதிரியை சம்ஹாரம் செய்ய சபதம் எடுக்கிறேன்.

"உன் தாய் இருந்திருந்தால் நீ இப்படி வளர்ந்திருக்க மாட்டாய்" என்று முகத்திற்கு நேரே சில காலம் முன் கூறிய அவருக்கு மானசீகமாய் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நான் திரும்பிப் பார்க்க ஒரு அற்புதமான சந்தர்ப்பத்தை அந்த வார்த்தைகள் ஏற்படுத்தி தந்துள்ளது. ஆண் வளர்த்த பிள்ளை என்பதால் அன்பு, கருணை, தியாகம், பரிவு போன்றவை என்னிடம் சற்றுக் குறைவே. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் என்னை சார்ந்தே என் முடிவுகள் உள்ளன. "பிறர்க்காக" இதைச் செய்வோம் என்று இம்மியளவு கூட நினைத்ததில்லை. இந்த முப்பத்திநான்கு என்னை மாற்றிக்கொள்ள நினைக்கிறேன். "ஐந்தில் விளையாதது முப்பதில் விளையுமா?" என்று என்னை கேட்டுக்கொள்கிறேன். காலம் தான் பதில் சொல்ல வேண்டும். மேலே சொன்ன உணர்வுகளை பயிற்சிக்கும் பொழுது ஏற்படும் சோதனைகளை களைய உறுதி கொள்கிறேன்.


"அடர்ந்து இருள்படர்ந்து
அழகாய் இருக்குது காடு
கடந்து வெகுதூரம் செல்லவேண்டும்
கொடுத்த வாக்குகள் நிறைய உண்டு
காப்பதற்கு" - ராபர்ட் பிராஸ்ட்

Thursday, 8 December 2011

பாதகம் செய்பவரை கண்டால்...

நேற்றைய ஹிண்டு நாளிதழில் வந்த இரண்டு செய்திகள் மனதை மிகவும் பாதித்தது. இரண்டுமே கேலி, கிண்டலால் நடந்த கொலை சம்பவங்கள். ஒன்றில் கொலையுண்டவர் ஆண் மற்றொன்றில் பெண்.

சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு லாட்ஜில் இரண்டு பேர் சில மாதம் தங்கியுள்ளனர். அதில் விகாஸ் என்ற நபர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். ராஜேஷ் என்னும் இன்னொரு நபருக்கு அம்பத்தூரில் ஏதோ ஒரு நிறுவனத்தில் பணி. விகாசின் தோற்றத்தை சகட்டு மேனிக்கு கிண்டலடித்திருக்கிறார் ராஜேஷ். ஒரு கட்டத்தில் இது தினமும் நடக்க, பிரச்சனை பெரிதாகி விகாஸ் ஆகஸ்ட் மாதம் ரூமை காலி செய்துவிட்டு வேறு இடம் சென்றுவிட்டார்.

ஆனால், விகாசின் மனதில் ராஜேஷை கொல்ல வேண்டும் என்கிற எண்ணம் தோன்றிவிட்டது. ராஜேஷை தேடி இரண்டு முறை லாட்ஜிற்கு சென்ற போது அவர் அங்கு இல்லை. செவ்வாய் அன்று மீண்டும் ஒரு மண்ணெண்ணெய் டின், சிகரெட் லைட்டர் மற்றும் சென்னை பர்மா பஜாரில் மூன்றாயிரம் ரூபாய்க்கு வாங்கிய கத்தி சகிதமாக ராஜேஷை தேடிச் சென்றிருக்கிறார் விகாஸ். தூங்கிக் கொண்டிருந்த ராஜேஷ் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்த முயற்சிக்க லைட்டர் வேலை செய்யாததால் சில நொடிகள் தாமதமாகி இருக்கிறது. இதற்கிடையே முழித்துக் கொண்ட ராஜேஷ் விகாசை பார்த்து பயந்து பாத்ரூமிற்குள் சென்று ஒளிந்து கொண்டார். சிறிது நேரத்திற்கு பின் ரூமில் ஓசை எதுவும் இல்லாததால் விகாஸ் போய்விட்டார் என்று நினைத்து பாத்ரூமை திறந்து கொண்டு வந்த ராஜேஷை பல முறை கத்தியால் குத்திக் கொன்றிருக்கிறார் விகாஸ். சத்தம் கேட்டு மாடிக்கு வந்த லாட்ஜ் மேனேஜர் கத்தியை சுத்தம் செய்து கொண்டிருந்த விகாசை பார்த்து பயந்து ரூமை வெளிப்புறமாக பூட்டிவிட்டு போலீசை அழைத்திருக்கிறார்.

வெறும் கிண்டல் பேச்சு ஒரு மனிதனை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதற்கு உதாரணம் இந்தச் சம்பவம். கொலையாளி விகாசின் இரண்டு சகோதரிகளும் மருத்துவர்கள். நல்ல குடும்பப் பின்னணி உள்ள நபர் கோபத்தால் செய்த செயல் இது. ஒரு கல்லூரி இளைஞன் தன் வாழ்க்கையை இழந்து விட்டான். பர்மா பஜாரில் அவனுக்கு எப்படி அந்த கத்தியை விற்றார்கள் என்பது எனக்கு புரியவில்லை. ஒருவர் இப்படி ஒரு ஆயுதத்தை வாங்கும் போது கடைக்காரர் உஷாராகி காவல் துறைக்கு தகவல் கொடுக்க வேண்டாமா? அயல்நாடுகளில் நீங்கள் இருபத்தியொரு வயதுக்கு மேற்ப்பட்டவர் என்று புகைப்பட அடையாளத்துடன் நிரூபித்தால் தான் காய் நறுக்கும் கத்தி கூட கிடைக்கும்.

இரண்டாவது சம்பவம் திருநெல்வேலியில். சென்னையில் மருத்துவம் படிக்கும் பத்தொன்பது வயது மாணவன் மொனேஷ் ராஜெர் தன் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு விடுமுறைக்கு வந்திருக்கிறார். அங்கு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மைமூன் ஷர்மிளாவை சென்னைக்கு வரும் முன் ஏற்கனவே பலமுறை பைக்கில் அவர் பள்ளிக்கு சென்று வழிமறிப்பது, வேகமாக பைக்கை ஒட்டி அவரை பயமுறுத்துவது என்று ஆட்டம் போட்டிருக்கிறார். பள்ளி நிர்வாகம் காவல் துறைக்கு இது பற்றி தகவல் கொடுத்துள்ளது ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப் படவில்லை.

செவ்வாய் அன்று தன் நண்பனின் புதிய காருடன் சென்று படு வேகமாக ஷர்மிளாவை இடிப்பது போல் அருகில் சென்று நகர்ந்துவிடலாம் என்று நினைத்தவர் வேகத்தை அடக்க முடியாமல் ஷர்மிளா மீது மோதி அவரை கொன்றுவிட்டார். காவல்துறையோ கொலை என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்யாமல் விபத்து என்று பதிவு செய்ய கொந்தளித்த பள்ளி மாணவர்களும் பொது மக்களும் சாலையில் போராட்டம் செய்ய ஆரம்பிக்க அதன் பின் காவல்துறை கொலை என்று வழக்கு பதிவு செய்துள்ளது.

1998 ஆம் ஆண்டு சென்னை எத்திராஜ் கல்லூரி மாணவி சரிகா ஷா மரணம் நிகழ்ந்த விதம் நம் நெஞ்சை விட்டு இன்னும் கூட விலகாத நிலையில் இப்போது மைமூன். இது கூட மரணம் என்பதால் வெளி வந்துள்ளது. ஈவ் டீசிங் என்கிற கொடுமைக்கு தினமும் ஆளாகும் எத்தனையோ பெண்களுக்கு எப்போது விடிவுகாலம்? ஒரு பெண்ணை முதல்வராக கொண்டுள்ள இந்த மாநிலம் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எப்போது களையப் போகிறது? ஈவ் டீசிங் செய்தாலே பத்து வருடம் கடுங்காவல் என்று சட்டம் எழுதுவதில் என்ன சிக்கல்? என்று மாறும் இந்த நிலை?


பாதகம் செய்பவரை கண்டால் நீ பயம்
கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா
அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா

Wednesday, 30 November 2011

நாவல்களே உலகை ஆள்கின்றன

இன்றைய தேதியில் உலகில் அதிகம் வாசிக்கபடுவது எது, கவிதையா, நாவலா, கட்டுரைகளா, சுயமுன்னேற்ற நூல்களா என்ற விவாதம் முடிவில்லாமல் நடந்து கொண்டேதானிருக்கிறது, புள்ளிவிபரங்களைப் பார்க்கையில் நாவலாசிரியர்களே அதிகம் வாசிக்கவும் கொண்டாடவும் படுகிறார்கள் என்பதே நிஜம்.

ஹாரிபோட்டர் 450 மில்லியன் விற்பனையாகியிருக்கிறது, டாவின்சி கோடு 80 மில்லியன் பிரதிகள் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது, ஜப்பானிய நாவலாசிரியரான ஹருகி முராகமியின் நாவல் 13 மில்லியன் விற்பனையாகியிருக்கிறது, இந்த வரிசையில் நூறு மில்லியனுக்கும் மேல் விற்பனையாது என்று இருபதிற்கும் மேற்பட்ட நாவல்கள் உள்ளன, சார்லஸ் டிக்கன்ஸின் நாவல்கள் 200 மில்லியனுக்கு மேல் விற்கபடுகின்ற பட்டியலில் எப்போதுமிருக்கின்றது.

இன்று ஒரு நாவல் உலக அளவில் புகழ்பெற்றுவிட்டால் அந்த எழுத்தாளர் அடையும் குறைந்த பட்ச பணம் பத்து கோடி, திரைப்படஉரிமை, பிறமொழி உரிமை என்று எளிதாக அவர் ஐநூறு கோடி வரை சம்பாதித்துவிட முடியும், அதைவிட நாவலை எழுதுவதற்கு முன்பாகவே அதை யார் வெளியிடுவது என்று பதிப்பகங்கள் ஏலம் விடுகின்றன, எவர் அதிகப் பணத்திற்கு ஏலம் எடுக்கிறார்களோ அவர்களுக்கே நாவலை வெளியிடும் உரிமையை எழுத்தாளர் தருகிறார்.

ஆனால் தமிழ்நாட்டின் சூழல் இதற்கு நேர் எதிரான ஒன்று, இங்கே அதிகம் விற்பனையான நாவல் என்றால் அது ஐந்தாயிரம் விற்பனையாகியிருக்கும், தமிழின் பெஸ்ட் செல்லர் பொன்னியின் செல்வன் கூட இதுவரை மொத்தமாக பத்துலட்சம் பிரதிகள் விற்றிருக்குமா என்பது சந்தேகமே.

ஒவ்வொரு பத்து வருசத்திலும் உலக இலக்கியத்தின் கவனம் ஏதாவது ஒரு தேசத்தின் மீது குவிகிறது, அப்படி தான் லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் புகழ்பெற்றன, ஆப்பிரிக்க நாவல்கள் கொண்டாடப்பட்டன, அந்த வரிசையில் இன்று உலகின் கவனம் ஆசியாவின் மீது குவிந்துள்ளது, அதிலும் குறிப்பாக இந்தியா மற்றும் சீன இலக்கியங்களே உலக இலக்கியப்பரப்பில் அதிகம் பேசப்படுகின்றன.

புக்கர், புலிட்சர் உள்ளிட்ட பல முக்கிய இலக்கியப்பரிசுகளை இந்தியர்கள் வென்று வருவது இதன் அடையாளமே. குறிப்பாக சித்தார்த்த முகர்ஜி எழுதிய “தி எம்பரர் ஆஃப் ஆல் மாலடீஸ்: எ பயாகிரஃபி ஆஃப் கேன்சர் (The Emperor of All Maladies: A Biography of Cancer) என்ற புற்று நோய் பற்றிய ஆய்வு நூலுக்கு புலிட்சர் விருது கொடுக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் குறித்து மிகவும் உணர்ச்சிபூர்வமாகவும் நுண்மையாகவும் எழுதப்பட்ட புத்தகமது.

காமென்வெல்த் இலக்கியப் பரிசை வென்றுள்ள ரானா தாஸ் குப்தாவின் சோலோ (Rana Dasgupta , Solo) நாவல் சமகால நாவல்களில் அதிகம் பேசப்பட்ட ஒன்று, யதார்த்தமும் மாயமும் ஒன்று கலந்து எழுதப்பட்ட இந்த நாவலின் கதை சொல்லும் முறை வசீகரமானது, கதைக்களன்களில் ஒன்றாக டெல்லி உள்ளது, ரானா தாஸ் குப்தா பிரிட்டனில் வசிக்கும் இந்தியர், இது அவரது இரண்டாவது நாவல், இப்படி நீண்டு கொண்டே போகிறது இந்தியர்களின் எழுத்திற்கான அங்கீகாரம், ஆனால் இவை ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்திய எழுத்திற்கே கிடைக்கின்றன, பிராந்திய மொழிகளில் எழுதுபவர்கள் இவர்களை விட தரமானதாக இருந்தாலும் உலக அளவில் அங்கீகாரம் கிடைக்காமலே தானிருக்கிறார்கள்

நம் காலத்தின் முக்கியமான பிரச்சனை எழுத்தாளர்கள் உள்ள அளவிற்கு வாசகர்கள் இல்லை என்பதே, எல்லா நாடுகளிலும் புதிது புதிதாக எழுத்தாளர்கள் பெருகிவருகிறார்கள், ஆனால் வாசகர்களின் எண்ணிக்கையோ அந்த அளவிற்கு அதிகமாகவில்லை.

வாசகர்களில் கதை, கவிதை, கட்டுரை என எதையும் எழுதாவர் என்று ஒருசதவீதம் இருப்பார்களா என்று சந்தேகமாகவே இருக்கிறது, ஆகவே அறியப்பட்ட எழுத்தாளர்கள் அறியப்படாத எழுத்தாளர்கள் என்ற இரண்டுவகை தான் இருக்கிறார்கள், இதில் வாசகர்களாக இருப்பவர்களை அதிகம் அறியப்படாத எழுத்தாளர்கள் என்ற வகையில் குறிப்பிடலாம்

இருபது வருசத்தின் முன்பு ஐநூறு பக்க புத்தகத்தை படிக்க மனதிருந்தது, ஆனால் புத்தகம் வாங்குவதற்கு பணமில்லை, இன்று ஐநூறு ரூபாய் பணம் எளிதாக இருக்கிறது, ஆனால் ஐநூறு பக்கப் புத்தகம் படிப்பவர்கள் வெகுவாக குறைந்து போய்விட்டார்கள், ஆகவே போன தலைமுறையினரை போல இன்று இலக்கியவாதிகளை ஆதர்சிக்கும், கொண்டாடும் வாசகர்கள் குறைந்து போய்விட்டார்கள் என்பதே என் எண்ணம்.

சமகால உலக கவிதையுலகில் கவிதையை ஒரு போர்வாளாக மாற்றியவர் என்று புகழாராம் சூட்டப்படுபவர் மஹ்முத் தர்வீஸ் ( Mahmoud Darwish ) இவர் ஒரு பாலஸ்தீன கவிஞர், அரசியல் நம்பிக்கைளுக்காகப் இஸ்ரேலிய ராணுவத்தால் பலமுறை கைது செய்யப்பட்டார், நிலத்தையும் மொழியையும் மீட்டெடுக்க போராடும் ஒரு அகதி நான் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார் தர்வீஸ், ஆகவே தான் எங்கே சென்றாலும் தனது நிலத்தையும் மக்களின் நினைவுகளையும் அவர்களின் மொழியையும் சுமந்து கொண்டே செல்கிறேன் என்கிறார், , தமிழில் மஹ்முத் தர்வீஸ் கவிதைகள் தொகுப்பு உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது

சிறுகதையில் இன்று சர்வதேச அளவில் முக்கிய கவனம் பெற்றிருப்பவர் ஹருகி முராகமி, ஜப்பானிய எழுத்தாளரான இவரது சிறுகதைகள் பெருநகரங்களின் அபத்தமான வாழ்க்கையை பகடி செய்யக்கூடியவை, முராகமியின் கதைகளை காப்காவின் கதைத் தொடர்ச்சி என்றே சொல்லத் தோன்றுகிறது, விசித்திரமான நிகழ்வுகளும் மாயமும் யதார்த்தமான விவரிப்பும் கொண்டவை இவரது கதைகள் இவரது The Elephant Vanishes சிறுகதை தொகுப்பு முப்பது லட்சம் பிரதிகள் விற்றிருக்கின்றது.

முராகமி ஒரு மாரத்தான் ஒட்டப்பந்தய வீரரும் கூட, தனது ஒட்டப்பந்தய அனுபவங்களை What I Talk About When I Talk About Running நூலில் சிறப்பாக எழுதியிருக்கிறார்

சமீபத்தில் நியூயார்க்கர் இதழில் வெளியான இவரது பூனைகளின் நகரம் கதை மிகுந்த பாராட்டுதல்களுக்கு உள்ளாகியிருக்கிறது

உலக அரங்கில் மூன்று பேர் முக்கியமான நாவலாசிரியர்களாக கொண்டாடப்படுகிறார்கள், ஒருவர் ஒரான் பாமுக், நோபல் பரிசு பெற்றுள்ள துருக்கியை சேர்ந்த எழுத்தாளர், இவரது My Name is Red,, என்ற நாவல் என் பெயர் சிவப்பு எனத் தமிழில் வெளியாகி உள்ளது. நுண்ணோவிய மரபைக் களமாக கொண்டு எழுதப்பட்ட இந்த நாவல் ஆயிரத்தோரு அராபிய இரவுகளை போன்ற கதை சொல்லும் முறையைக் கொண்டது

மற்றவர் கார்லோஸ் ருயுஸ் ஜெபான், இவரது The Shadow of the Wind நாவல் 2001 ம் ஆண்டு வெளியானது, மறக்கப்பட்ட புத்தகங்களுக்கென ஒரு கல்லறைத்தோட்டம் இருக்கிறது, என்றும் அங்கே அனைவராலும் கைவிடப்பட்ட புத்தகங்கள் தங்களை எவராவது நேசிக்கமாட்டார்களான எனக் காத்திருப்பதாகவும், அப்படியான ஒரு கல்லறைநூலகத்திற்குப் போய் புத்தகம் ஒன்றைத் தேர்வு செய்கின்றவன் அந்தப் புத்தகத்திற்கு விசுவாசமான ஆளாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளதாகவும் கதை நீண்டு செல்கிறது, புறக்கணிக்கப்பட்ட புத்தகங்களின் குரலாக ஒலிக்கும் இந்த நாவல் உலகை புத்தகங்களே மேம்படுத்துகின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறது

மூன்றாவது நாவலாசிரியர் கனடாவைச் சேர்ந்த யான் மார்டில் , இவரது Life of Pi நாவல் பாண்டிச்சேரியை பின்புலமாக கொண்டு எழுதப்பட்டது, விலங்குகளை ஏற்றிக் கொண்டு போகும் ஒரு கப்பலில் நடைபெறும் சம்பவங்களைக் கதையின் பிரதான களம், இவரது சமீபத்திய நாவலான Beatrice and Virgil.. தொன்மத்தையும் சமகாலத்தையும் ஒன்றிணைத்து உருவாக்கபட்ட பகடிவகை எழுத்து, இந்த மூவருமே இன்று அதிகம் பேசப்படும் நாவலாசிரியர்களாகும்

சர்வதேச இலக்கிய அரங்கில் எடுவர்டோ கலியானோவின் ( Eduardo Galeano) கட்டுரைகளுக்கு முக்கியமான இடமிருக்கிறது, இவர் வரலாற்றையும், இலக்கியத்தையும் லத்தீன் அமெரிக்க அரசியலையும் பற்றி அதிகம் எழுதியவர், இந்தியாவைப் பற்றி அதிகம் எழுதியிருப்பவர் என்பது கூடுதல் செய்தி

இவரைப்போலவே வில்லியம் டேல்ரிம்பிள் (William Dalrymple) வரலாற்றையும் பயணத்தையும் பற்றி கட்டுரைநூல்களை எழுதும் தனித்துவமான எழுத்தாளர், கடைசி மொகலாய அரசரான பகதூர் ஷா பற்றிய The Last Mughal, The Fall of a Dynasty, Delhi 1857 நூல் விரிவான ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒன்று, தஞ்சை பெரிய கோவில் வரலாறு உள்ளிட்ட பல முக்கிய கட்டுரைகளை எழுதிய இவர் சில காலம் டெல்லியில் வசித்தவர்.

சமீபத்தில் என்னை உலுக்கிய புத்தகம் அருண் ஷோரி எழுதிய Does He Know A Mother’s Heart , அரசியல்வாதி, பத்திரிக்கையாளர், முன்னாள் மத்திய அமைச்சர் என்று பன்முகம் கொண்டுள்ள அருண்ஷோரியின் இப் புத்தகம் அவரது மனவளர்ச்சி குன்றிய மகனைப்பற்றியது, அவனது பிறப்பில் துவங்கி இன்றுவரை அவனுக்காக அருண்ஷோரியும் அவரது குடும்பமும் எவ்வளவு வலிகளை தாங்கிக் கொண்டார்கள், அந்த சிறுவனை எப்படி பாசமாக வளர்த்து வருகிறார்கள் என்பதைப்பற்றி மிகவும் உணர்ச்சிபூர்வமாக எழுதியிருக்கிறார்,

மனவளர்ச்சி குன்றிய குழந்தை தனக்கான தனிவுலகில் வாழ்கிறது, அதன் மீது பரிவு கொள்ளவும். பாசம் காட்டவும் பெற்றவர்கள் எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது, சமூகம் அந்தப் பெற்றோர்களை எந்த அளவு பரிகாசம் செய்கிறது என்பதை கண்ணீர்வர எழுதியிருக்கிறார், உண்மை சுடும் என்பார்கள், அதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம்

Source: www.sramakrishnan.com

Sunday, 20 November 2011

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்

பாரதிராஜாவின் "அன்னக்கொடியும் கொடிவீரனும்" படத் துவக்கவிழா தேனியின் அல்லிநகரத்தில் நடந்ததை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன். வைரமுத்து பேசும் போது தான் எழுதிய "இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்" புத்தகத்தில் பாரதிராஜா பற்றிய பகுதியை நினைவுகூர்ந்தார். படித்து வெகு நாள் ஆயிற்றே என்று அதை கையில் எடுத்து ஏதோ ஒரு பக்கத்தை திறக்க அது யேசுதாஸ் பற்றி வைரமுத்து எழுதியது. வைரமுத்துவின் சொல்லாட்சியில் ஆட்கொள்ளப்பட்டேன். இதோ அந்த வரிகள்.

அவரை நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்று அவருக்கே தெரியாது. ஆனாலும் அவரை நான் நேசிக்கிறேன். என்னோடு அவர் அடிக்கடி சண்டை பிடிக்கிறார். அதனால் அவரோடு நானும் அடிக்கடி சண்டை பிடிக்கிறேன். ஆனாலும் அவரை நான் நேசிக்கிறேன். நான் அவரை நேசிக்கும் அளவுக்கு அவர் என்னை நேசிக்கவில்லை என்பதை அறிவேன். ஆனாலும் அவரை நான் நேசிக்கிறேன். அவரை நான் ஒரு பங்கு நேசிக்கிறேன்;அவர் என்னை அரைப் பங்கு நேசிக்கிறார். எனவே எங்களுடையது ஒருதலைக் காதல் அல்ல;ஒன்றரைத்தலைக் காதல்.

சூரியன் தன்னை நேசிக்கிறதா என்பது தாமரைக்கு முக்கியமில்லை. சூரியனை நேசிப்பது தாமரையின் தர்மம். ஆகையால், அவரை நான் நேசிக்கிறேன்.பள்ளிப் பருவத்திலிருந்தே நான் யேசுதாசின் காதலன்.

அவர் குரல் - சோகமான காந்தம்; காற்றை காயப்படுத்தாமல் பரவுகிற அருவ நதி; காது மடலோரம் தென்றலின் கச்சேரி;மனசை நனைக்கின்ற மர்ம மழை;இந்த எந்திர வாழ்வின் ஆறுதல் மந்திரம்.

கலையும் கலைஞர்களும் வற்றிவிடாமல் இருப்பதால் தான் இந்த வறண்ட நூற்றாண்டு வாழ்க்கையில் கூட இன்னும் ஈரம் இருக்கிறது. வாழ்கை இன்னும் மிச்சமிருக்கிறது என்பதை அடிக்கடி நினைவூட்டும் அடையாளங்கள் கலைகளும், இலக்கியங்களும் தாம். நம் தலைமுறையில் அந்த அடையாளங்களுள் ஒன்றாய் யேசுதாசின் குரலை நான் குறிப்பிடுவேன்.

அவர் உச்சரிப்பை பற்றித் தமிழ்நாட்டில் சச்சரவு உண்டு. தமிழர்களே தமிழை தமிலாக உச்சரித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பிற மொழிக்காரர் தமிழை பிறழ உச்சரிப்பதில் ஆச்சர்யமில்லை.

'திருக்கோயிலே' என்று எழுதிக் கொடுத்தால் 'தெருக்கோயிலே' என்று பாடுகிறார்கள் என்று கவியரசு கண்ணதாசன் இவரை ஒருமுறை கண்டித்தார். 'ஒலிப்பதிவின் போது எழுதிக் கொடுத்தவர் வந்து திருத்தவேண்டியது தானே' என்று யேசுதாஸ் திருப்பிக் கேட்டார்.கவியரசு கண்ணதாசனுக்கு யேசுதாஸ் வழங்கிய உரிமையை அவர் எடுத்துக் கொண்டாரோ இல்லையோ நான் எடுத்துக் கொண்டேன். அந்த உரிமையை தான் அவரால் ஜீரணிக்க முடியவில்லை என்று சிறுகச் சிறுகக் கண்டு கொண்டேன்.

யேசுதாஸ் குரல் மீது எனக்கு எவ்வளவு மயக்கமோ தமிழ் சரியாக உச்சரிக்கப்பட வேண்டும் என்பதிலும் எனக்கு அவ்வளவு இருக்கும். பிரசவ அறைக்கு வெளியே நிற்கும் புருஷனின் கவலையெல்லாம் பெற்றவளும் இறந்துவிடக் கூடாது பிள்ளையும் இறந்துவிடக் கூடாது என்பதுதான். கர்ப்பமே குழந்தைக்கு கல்லறையாகிவிட்டால்...? பிறக்கும் குழந்தை கையில் கொள்ளியோடு பிறந்தால்..? அந்தக் கணவனின் கவலை தான் இந்தக் கவிஞனின் கவலை.

அவ்வளவு பெரிய சங்கீத மேதையால் இந்தச் சின்ன விஷயத்தை செரித்துக் கொள்ள முடியவில்லை. திருத்துவதை அவர் தன்னை வருத்துவதை நினைக்கிறார். ஒலிப்பதிவுக் கூடத்திற்கு நான் பிரம்போடு வருவதாக ஒரு பிரமை இருக்கிறது அவருக்கு. ஒலிப்பதிவுக் கூடத்தில் ஒவ்வொரு முறையும் நாங்கள் ரோஜாக்களாய்த் தான் கைகுலுக்கிக் கொள்கிறோம். குலுக்கிய கைகள் பிரிகிற போது கையில் ரத்தமே கசிகிறது. ஆனாலும், அவரை நான் நேசிக்கிறேன்.

'ஈரமான ரோஜாவே' ஒலிப்பதிவாகிக் கொண்டிருந்த போது 'தண்ணீரில் மூள்காது காற்றுள்ள பந்து' என்றே பாடிக் கொண்டிருந்தார். ரொம்ப நேரமாய் தமிழ் மூழ்கிக் கொண்டிருந்தது. மயிலிறகால் மருந்திடுவது மாதிரி நளினமாய்ச் சொன்னேன்;திருத்திக் கொண்டார்.

'வெள்ளைப்புறா ஒன்று' பாட வந்தபோதும்
'முதல் எளுத்து தாய்மொளியில்
தலை எளுத்து யார்மொளியில்'
என்று தான் சோகமாய்ப் பாடிக் கொண்டிருந்தார்.

அதன் பிறகு பாடல்களை நான் சொல்லச் சொல்ல அவர் தன் தாய்மொழியில் எழுதிக் கொள்ளும் வழக்கத்தை ஏற்படுத்தினோம்.நாமெல்லாம் சிறப்பு 'ழ' கரம் என்று கருதிக் கொண்டிருக்கிற 'ழ' கரம் தான் பிற மொழியாளர்களுக்கு 'வெறுப்பு ழகரமாக' இருக்கின்றது என்ற உண்மையை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். லதா மங்கேஷ்கரும் ஆஷா போன்ஸ்லேயும் கூட மராட்டியின் மூலமாகத் தான் இந்த 'ழ' கரத்தைப் புரிது கொள்கிறார்களே தவிர இந்தியில் சுட்டுவதற்கு எழுத்தே இல்லை. 'அ' கரம் தமிழுக்கு சிகரம் என்பதைக் கூட நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம்.

'அ' கரம் தமிழுக்கு அஸ்திவாரம் தான்
'ழ' கரம் தான் தமிழுக்கு சிகரம்.

அந்தச் சிகரத்தில் ஏற முடியாமல் தான் பலருக்கு சிராய்ப்புகள்.

அடிக்கடி திருத்துகிற ஆசிரியர் உத்தியோகம் பார்க்க கூடாது தான் என்பதை அறிவேன் நான். ஆனாலும் கோடிக்கணக்கான தமிழர்கள் கேட்கும் பாடு, கொச்சையாகி விடக் கூடாது என்பதற்காகவே, அவர் புண்படுத்தப்படுவாரே என்று புரிந்தும் கூட பண்படுத்தப்பட வேண்டிய பணியைப் பண்பாட்டோடு செய்ய வேண்டியிருக்கிறது.

கலைஞன் மேன்மையானவன் தானே! சற்றேண்டு பற்றிக் கொள்ளும் கற்பூரம் தானே!
பறவையினத்தில் இருந்தாலும் பறக்க முடியாத கோழி கூட, பருந்தைக் கண்டால் பறக்கும்வரை பறக்கப் பரபரக்கிறதே!

கோழிக்கே இந்த குணம் என்றால், ராஜாளிக்கு...! யேசுதாஸ் ஒரு ராஜாளி.

யேசுதாஸ் பாடிக் கொண்டிருந்த ஓர் ஒலிப்பதிவில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அடிக்கடி திருத்தங்களை அடுக்கிக் கொண்டேயிருந்தாராம்.

'ரெடி..டேக்..' என்றதும் குரலே வரவில்லையாம். உள்ளே போய்ப் பார்த்தால் ஆளே இல்லையாம். அவர் காரை சாலையில் பார்த்ததாய் சிலர் அடையலாம் சொன்னார்களாம். இவையெல்லாம் கலைஞனின் குணங்கள். கலைக்காகத் தன்னை அழுத்தி வைத்து அடக்கிவைப்பதால் கலைக்கு வெளியே புறப்பட்டு வரும் போர்க் குணங்கள்.

அண்மையில் நடந்ததொரு சம்பவம். ஒளிப்பதிவுக்கு சற்றே தாமதமாய்ப் போனேன். யேசுதாஸ் பாடிக் கொண்டிருந்தார்.

"ஆண் அழுவது பிழையானது
பெண் அழுவது கலையானது"

என்ற என் வரிகளில் வழக்கம்போல் "ழகர" விவகாரம் வந்தது.

ஒளிப்பதிவை நிறுத்தச் சொல்லி திருத்தினேன். உள்ளேயிருந்த யேசுதாஸ் உஷ்ணப்பட்டுவிட்டார்.

"சாகிறவரைக்கும் திருத்திக் கொண்டு தான் இருப்பீர்களோ?" என்றார். "யார் சாகிறவரைக்கும்?" என்றேன். "நாம் ரெண்டு பெரும் சாகிறவரைக்கும்" என்றார். "இல்லை. தமிழ் சாகாத வரைக்கும்" என்றேன். பிறகு அவரிடம் விடைகொள்ளாமல் வீடு வந்தடைந்தேன். இரவெல்லாம் அடையாளம் தெரியாத சோகம், இருதயத்தை அடித்துக் கொண்டிருந்தது. ஆனாலும், அவரை நான் நேசிக்கிறேன்.

யேசுதாஸ் ஒரு சுதிவிலகாத ராகம்; ஆனால், அடிக்கடி ஊடல் கொள்ளும் ஒரு பாடல். அவரது ஆடையைப் போலவே அவர் மனத்திலும் எந்தக் கரையும் இல்லை என்பதை நானறிவேன். அவர் அழகான தாளில் தான் எழுதுவார். அந்தத் தாளே ஒரு பவளச் செதுக்கலாயிருக்கும்.

"நல்ல தாள் இது. எங்கே கிடைக்கும்?" என்று கேட்டேன்.

அவ்வளவுதான்!

மறுநாள் ஒரு பெரிய காகிதக்கட்டு என் வீட்டுக் கதவு தட்டியது. என் மனைவி தன் 'டாக்டர்' பட்டத்துக்கான ஆய்வை அந்தத் தாளில் தான் எழுதி முடித்தாள்.

யேசுதாஸ் ஒரு மனிதாபிமானி.

Thursday, 17 November 2011

திமலா-2

உடன் பணிபுரியும் நண்பரின் திருமணம் திருப்பதியில் இரண்டு வாரங்களுக்கு முன் நடந்தது. ரொம்ப நாளாக இரண்டு பிரார்த்தனைகள்(மொட்டை மற்றும் திருப்பதி-திருமலா நடை பயணம்) பாக்கி இருந்ததால் இந்த சந்தர்ப்பதில் அதை முடித்துக்கொள்ளலாம் என்று கிளம்பிச் சென்றேன். ஸ்கார்பியோ ஒன்றை எடுத்துக்கொண்டு எட்டு பேர் சென்றோம். புழலில் ஒரு திருமண வரவேற்பை முடித்துக்கொண்டு அங்கிருந்து தடா, காலஹஸ்தி மார்கமாக திருப்பதி சென்றோம். திருப்பதி சென்றடைந்த போது இரவு மணி பதினொன்று. நண்பர் தெலுங்கர் என்பதால் இரவு முஹுர்த்தம். ஆனால், நாங்கள் சென்ற போது முஹுர்த்தம் முடிந்து மணமக்கள் உணவிற்கு செல்ல தயாராக இருந்தனர். நாங்களும் உணவருந்தி மண்டபத்திலேயே தங்கினோம்.

காலை ஐந்தரை மணிக்கு ஒரு டீ குடித்து விட்டு நடை பயணத்தை துவங்கினோம். காளிகோபுரம் சென்றடைவதற்குள் நுரை தள்ளிவிட்டது. ஒரு பத்து லெமன் சால்ட் ஜூஸ், லிம்கா, புளிப்பு மிட்டாய் எல்லாம் உண்டு புத்துணர்ச்சி பெற்று மீண்டும் நடக்க ஆரம்பித்தேன். தமிழ்நாட்டில் தான் 200ml பானங்கள். குடித்தால் திருப்தியே இல்லை. திருப்பதியில் கோக், பெப்சி, லிம்கா என்று சகலமும் 300ml. ஆந்திராவில் தமிழ் நன்றாகவே புரிகிறது. அதுவும் திருப்பதி இன்று ஒரு சுற்றுலா தலமாகவே மாறிவிட்டது. ஆந்திர அரசோ அல்லது தேவஸ்தானமோ நடைபாதையில் உள்ள ஆழ்வார்கள் சிலையை செப்பனிட வேண்டும். ஆழ்வார்கள் எல்லாம் அநியாயத்துக்கு விழுப்புண் பெற்று ஆள் அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து இருக்கிறார்கள்.

ஒரு வழியாக நான்கு மணி நேரத்திற்கு பிறகு காலை பத்து மணிக்கு திருமலை வந்து சேர்ந்தேன். ஜனங்களின் செண்டிமெண்ட் அறிந்த நல்ல மார்க்கெட்டிங் நபர் ஒருவர் கடைசி படிக்கட்டில் நின்றுகொண்டு, "ஏழுமலையானை பார்க்க ஏழு மலை தாண்டி வரீங்க, அதனால ஏழு கற்பூரம் வாங்கி கடைசி படில கொளுத்துங்க. எல்லா கஷ்டமும் தீரும். ஏழு கற்பூரம் பத்து ரூபாய்" என்று தெலுங்கில் விற்றுக் கொண்டிருந்தார். பெரும்பாலான கூட்டம் ஏழு கற்பூரம் வாங்கி கொளுத்தியது. கடைசி படி கொழுந்து விட்டு எரிந்தது. அதற்குள் ஒரு கூட்டம் அந்த இடத்தில் தேங்காய் வெட்டி, குங்குமம், சந்தனம், மஞ்சள் எல்லாம் நிறைய கொட்டி அங்கேயே ஒரு சின்ன வேங்கடவனை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தது.உடன் இருந்த நண்பர் ஒருவர், "ஏங்க, இவன் டாக்ஸ் பிரச்சனை இல்லாம ஒரு மாசத்துக்கு முப்பதாயிரம் சம்பாதிப்பான் போல இருக்கே, நம்ம வேணா நடுவுல எதாவது படில நின்னு இத பண்ணலாம்" என்றார்.

மொட்டையடிக்க தேவஸ்தானம் வசூலிப்பது பத்து ரூபாய். மொட்டை அடித்தவர் பணியை செய்துகொண்டே என் காதில் "பொதுவா வரவங்க நூறு ரூபா தருவாங்க, பாத்து செய்யுங்க" என்றார் . விவரமாக இருபது ருபாய் மட்டுமே எடுத்துக்கொண்டு சென்றதால், "நான் ரொம்ப ஏழைங்க, இவ்வளோ தான் முடியும்" என்று இருபது ரூபாயை நீட்டினேன். அவ்வளவு நேரம் தமிழில் பேசியவர், தெலுங்கில் ஏதோ சொல்லியபடி அதை வாங்கிக்கொண்டார்.

நான் மொட்டையடித்து முடித்து நடந்து வருவோருக்கான சிறப்பு வரிசையில் சென்று நின்ற போது மணி பதினொன்று. ஆறு மணி நேரம் கழித்து ஐந்து மணிக்கு தரிசனம் கிடைத்தது. பெருமாளை சேவிக்க நின்ற கூட்டத்திற்கு கொஞ்சம் குறைவாக உண்டியல் கூட்டம் இருந்தது. பத்மநாப சுவாமி இவரை ஓவர்டேக் செய்துவிட்டாரே என்று பக்தர்களுக்கு வருத்தம் போலாம். உண்டியலை சுற்றி பின்னி பெடலெடுத்துக் கொண்டிருந்தனர். லட்டு வாங்க புதிய கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. இருபது வரிசைக்கு மேல் உள்ளது இதில்.தங்கு தடையின்றி லட்டு பெற்றுக் கொள்ளலாம்.

ஒரு வழியாக காரை எடுத்துக்கொண்டு கிளம்பி திருப்பதி வந்தோம். அனைவரும் கடும் பசியில் இருக்க, நண்பர் ஒருவர் இங்கே "சிந்து இன்டர்நேஷனல்" ஹோட்டல் இருக்கு, எல்லாம் கிடைக்கும், ருசியும் நல்லா இருக்கும், அங்க சாப்பிடலாம் என்றார். சரியென்று சென்றோம். எங்க கெட்ட நேரம், சப்பாத்தி, பிரைட் ரைஸ் தவிர எதுவும் இல்லை என்றார் ஹோட்டல் சிப்பந்தி. சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள எதுவும் இல்லை. வேண்டுமானால் சைட் டிஷ் ஆர்டர் செய்துக்கொள்ளுங்கள் என்றார். ஒரு சப்பாத்தி மட்டும் இருபத்திநான்கு ரூபாய் என்றார். ஹோட்டலை சிபாரிசு செய்த நண்பரை சபித்துக்கொண்டு சாப்பிட்டு முடித்தோம்.

இந்த பதிவிற்கு ஏன் திமலா என்று பெயர் என்பதை அறிய கோகுல் எழுதிய திமலா பதிவை படியுங்கள்.

Saturday, 12 November 2011

கோபுலுவெள்ளியன்று ஹிந்து நாளிதழுடன் வந்த Friday Review இணைப்பில் Art world's Famous Five என்கிற தலைப்பில் மணியன் செல்வம்(பிரபல ஓவியர் மணியனின் மகன்)சில நாட்களுக்கு முன் சென்னை தக்கர் பாபா வித்யாலயத்தில் K.மாதவன், ராஜம், சில்பி, கோபுலு மற்றும் தன தந்தை மணியன் ஆகிய ஐவரை பற்றி அவர்களின் ஓவியங்களுடன் நிகழ்த்திய பேச்சு வந்திருந்தது. அதில் கோபுலு வரைந்திருந்த இந்த படம் என்னை மிகவும் கவர்ந்தது.

கும்பகோணம் கலைப் பள்ளியில் படித்து விட்டு வேலைக்காக சென்னை வந்த கோபாலனின் திறமையை அறிந்து கொண்ட ஆனந்த விகடன் மாலி அவரை கெட்டியாக பிடித்துக்கொண்டார். அவரே கோபுலு என்ற நாமத்தையும் தந்தார்.அதன் பின் தேவன் மற்றும் கொத்தமங்கலம் சுப்பு இருவரின் தலைமையில் விகடனில் பணி புரிந்தார் கோபுலு. இருபது வருடங்கள் ஆனந்த விகடனில் இருந்தார் கோபுலு.

குங்குமம்(புத்தகம்), சன் டிவி, ஸ்ரீராம் சிட்ஸ் ஆகிய நிறுவனங்களின் முத்திரை கோபுலுவின் கைவண்ணம். பக்கவாதம் வந்து வலது கை பாதிக்க பட்ட போதும் இடது கையால் ஓவியங்கள் வரைந்தார் கோபுலு.

Wednesday, 9 November 2011

தாயும் மகளும்தாயும் மகளும் அறியப்பட்ட எழுத்தாளர்களாக இருப்பது அபூர்வம், அப்படி இருந்தாலும் தாய் பல ஆண்டுகாலமாக காத்திருந்த ஒரு இலக்கியப்பரிசை மகள் வென்றுவிடுவது சந்தோஷமும் உள்ளார்ந்த வலியும் தரும் ஒரு நிகழ்வு, இலக்கியத்தின் விசித்திரத்தைப் போலவே இலக்கியவாதிகளின் வாழ்விலும் விசித்திரங்கள் நிறையவே இருக்கின்றன

மூன்று முறை புக்கர் பரிசிற்கான இறுதிபட்டியலில் இடம் பெற்ற இந்திய ஆங்கில எழுத்தாளரான அனிதா தேசாய் அந்த விருதைப்பெறவில்லை, ஆனால் அவளது மகள் கிரண் தேசாய் தனது இரண்டாவது நாவலான The Inheritance of Lossற்கு புக்கர் பரிசை வென்றுவிட்டார், ஆனாலும் என்றாவது தானும் அந்த விருதை வெல்வேன் என்ற கனவோடு காத்திருக்கிறார் 75 வயதான அனிதா தேசாய்,

ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் பெரும்பான்மையினர் மேல்தட்டு இந்திய சமூக வாழ்க்கையை தான் கதைக்களமாக்க் கொண்டிருக்கிறார்கள், முக்கியக் காரணம் அவர்கள் அதிலிருந்து உருவானவர்கள், விதிவிலக்கானவர்களும் கூட மேற்கத்திய வாசகர்களைக் கவனத்தில் கொண்டு அவியலான ஒரு இந்திய சமூகவாழ்க்கையை எழுதிப் போயிருக்கிறார்கள்,

சுவாரஸ்யம் தான் இவர்கள் எழுத்தின் ஒரே பலம், பகடி செய்வதில் ஆங்கில இந்திய நாவல்களுக்கு என்று தனிபாணியிருக்கிறது, அதில் ஒருவர் ஆர்.கே.நாராயணன்,

இன்னொரு வகை எழுத்திருக்கிறது, அது தத்துவார்த்தமாக வாழ்க்கையை ஆராய்வது, மெய்தேடல், இந்திய ஞானம் மற்றும் துறவு வாழ்க்கை, ஞானமரபின் நவீன அடையாளங்களைக் காணுவது என்று நாவலின் ஊடே மேலோட்டமான தளத்தில் தனது அறிவுத்திறனை வெளிக்காட்டுவது,

மூன்றாவது வகை தனது வேர்களைத் தேடுவது, தனது பூர்வீகம் குறித்தோ முன்னோர்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கே போனார்கள், என்னவானார்கள் என்று அடையாளத்தை தேடும் சுயசரிதைத் தன்மை கொண்ட எழுத்துகள்,

நான்காவது வகை சமகால இந்திய சமூக, அரசியல், பன்னாட்டுகலாச்சாரச் சூழலை ஊடுபாவாகக் கொண்டு தனிமனித எத்தனிப்புகள். காதல், கல்யாணம், மணமுறிவு, ஐடி கம்பெனி வேலை, சுற்றுபுறச் சூழல் விழிப்புணர்வு, மாற்று அரசியல், இந்திய புராணீகத்தின் மறுவாசிப்பு என்று கலந்து கட்டி அடிக்கும் ஜனரஞ்சக எழுத்து, இதன் ஒரு பிரதிநிதியே சேதன் பகத், சுவாரஸ்யமான கதை சொல்லுதலும், தெறிக்கும் கேலியும் மட்டுமே அவரது எழுத்தில் இருக்கின்றன, பெரும்பாலும் இந்தி நடிகர்களை மனதில் வைத்துக் கொண்டு ஹிந்தி சினிமாவிற்கு ஏற்ற கதாபாத்திரங்களையே தனது நாவல் எழுதுகிறார். சேத்தன் பகத்தின் மனைவி தமிழ்பெண் என்பதால் நாவல்களில் மயிலாப்பூர் கலாச்சாரத்தைக் கேலி செய்வதை சேர்த்துக் கொள்கிறார். ஐஐஎம்மில் இருந்து வெளிவந்து நாவலாசிரியர் ஆனவர் என்பதால் பல ஐஐஎம்கள் வேலையை உதறி நாவலாசிரியர்களாகி இந்திய ஆங்கில இலக்கிய உலகினை நாறடித்துக் கொண்டிருக்கிறார்கள், நல்லவேளை தமிழ்வாசகர்கள் ஆங்கில இந்திய நாவல்களை அதிகம் வாசிப்பதில்லை,

ஆங்கில நாவல்களுக்கு விமர்சனம் எழுதுகின்றவர்களின் பாசரங்கும் பொய்யான அறிவுஜீவி தோற்றமும் மிகுந்த எரிச்சலூட்டக்கூடியது, தான் கற்றுக்கொண்ட சகல இலக்கிய சொற்களையும். அரசியல் மற்றும் கருத்தியியல் சார்ந்த பிரயோகங்களையும் கலந்து கட்டி விமர்சனம் எழுதி எந்த ஒரு குப்பையான நாவலையும் உலகதரமானது என்பது போலக் காட்டிவிடுவார்கள், கடந்த பத்து வருசத்தில் ஆங்கில இந்திய நாவல் பற்றி ஒரு நல்ல விமர்சன கட்டுரையை கூட ஆங்கிலத்தில் நான் வாசித்ததேயில்லை, அத்தனையும் சுயபுகழ்ச்சிகள், துதிபாடுதல்கள், அல்லது வெறுப்பை கக்குபவை,

விமர்சனம் எழுதித் தருவதை தொழில்முறையாக கொண்டவர்கள் வேறு பெருகிவிட்டார்கள், அவர்களுக்கு பணம் மற்றும் குடிவிருந்து தாராளமாகக் கொடுத்தால் நாவலைப்பாராட்டி தங்களுக்கு தொடர்பில் உள்ள இதழ்களில் அரைப்பக்க விமர்சனம் எழுதுவார்கள், பெரும்பான்மை ஞாயிறு இணைப்பு இலக்கிய கட்டுரைகளின் தரம் இவ்வளவே,

அனிதா தேசாய் இதிலிருந்து சற்று மாறுபட்டவர், இந்தியாவை விட்டு ஒதுங்கி அமெரிக்காவில் வாழ்பவர், இந்தியாவில் என் எழுத்திற்கான சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை, என்னை குறைவாகவே வாசித்திருக்கிறார்கள் என்று வெளிப்படையாக கூறுகிறார், அவரது எழுத்து உயர்தட்டு மக்களின் அன்றாட வாழ்வைப் பேசிய போதும் நுட்பமாக புனைவின் சாத்தியங்களை எழுத்தில் உருவாக்கி காட்டியிருக்கின்றன

இவரது மலைமேல் நெருப்பு நாவலை தமிழாக்கம் செய்திருப்பவர் அசோகமித்ரன், இந்த நாவல் சாகித்ய அகாதமி விருது பெற்றது, ஆங்கில இந்திய நாவல்களில் முற்றிலும் மாறுபட்ட ஒன்று,

அனிதா தேசாய் பற்றி தமிழில் அதிகம் எழுதப்படவில்லை, சா.தேவதாஸ் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார், கிரண்தேசாய் விருது பெற்ற போது அதை ஊடகங்கள் கொண்டாடி மகிழ்ந்தன, ஆனால் அவளது நாவலை விட பன்மடங்கு சிறப்பானது அனிதா தேசாயின் நாவல்கள், அவற்றை இன்றைய தலைமுறை கவனம் கொள்ளவேயில்லை,

அனிதா தேசாயிடம் இருப்பது ஒரிஜினலான கதை சொல்லும் தன்மை, சுயமான தேடல், கிரண்தேசாயிடம் இருப்பது இரவல் சரக்கு, அவர் கதையைச் செய்கிறார், இந்தியாவைப்பற்றி எழுதும் போது என்னவெல்லாம் கதைக்குள் போடவேண்டும் பட்டியலை தயார் செய்து கொண்டு கதையை உருவாக்குகிறார்

அனிதா தேசாயிடம் இருந்த நிசப்தமும் உள்ளார்ந்த தனிமையின் விகசிப்பும் கவித்துவமும் புனைவின் வழியே தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முயன்ற தவிப்பும் அவரிடமில்லை,

தாயும் மகளும் தங்களது படைப்புகளைப் பற்றி விவாதித்துக் கொள்வதேயில்லை என்று ஒரு நேர்காணலில் கிரண்தேசாய் குறிப்பிடுகிறார்

சிறுவயதில் அம்மாவிற்கு என்று தனியே ஒரு அகஉலகம் இருந்தது என்று தனக்குத் தெரியும், ஆனால் அந்த எழுத்தின் வலிமை எனக்கு தெரியாது, அம்மா தனது படைப்புகள் குறித்து வீட்டில் விவாதிப்பதில்லை, அதை தனது ரகசியமாக தனக்குள்ளாகவே வைத்துக் கொண்டிருந்தார், நானும் ஒரு நாவலை எழுதும்போது அதைப்பற்றி அம்மாவிடம் விவாதிப்பதில்லை, அம்மா எனது நாவல்கள் பற்றி கருத்துச் சொல்வதுமில்லை என்றும் அந்த நேர்காணலில் கிரண் தேசாய் சொல்கிறார்

அனிதா தேசாய் நுட்பமான வாசகரும் கூட, அவருக்கு தனது மகளின் எழுத்து எப்படிப்பட்டது என்று நன்றாக தெரிந்திருக்கும் தானே, இது தான் நெருக்கடியின் உச்சகட்டம், பதில்சொல்லாமல் தனக்குள்ளாகவே ஒடுங்கிக் கொண்டுவிட்டார் அனிதா தேசாய்.

அனிதா தேசாயின் நாவல் Journey to Ithaca மாறுபட்ட ஒரு நாவல், பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரம்மும் அன்னையின் வாழ்வும் இதன் கதைக்களத்தில் ஒன்றாக உள்ளது, இதாகா நகரத்தைத் தேடி வருபவர்களுக்கு அந்நகரம் எதையும் தருவதில்லை, தொலைதூரங்களில் இருந்து அந்த நகரத்திற்கு பயணம் செய்து வரும் பயணஅனுபவமே நகரம் தரும் மிகப்பெரிய பரிசு என்பார்கள், அந்த மனநிலையைப் பிரதானமாக கொண்டு அனிதா தேசாய் நாவலை எழுதியிருக்கிறார்,

எனக்கு இந்திய பெண் எழுத்தாளர்களில் மிகவும் பிடித்தவர் நால்வர், ஒன்று குர்அதுல் ஐன் ஹைதர்(Qurratulain Hyder), உருதுமொழி நாவல் எழுதியவர், இவரது புகழ்பெற்ற நாவல் அக்னிநதி, மற்றவர் இஸ்மத் சுக்தாய் (Ismat Chughtai ) இவரது சிறுகதைகள் அற்புதமானவை, இவரும் உருது எழுத்தாளரே, மகேஸ்வதா தேவி (Mahasweta Devi) வங்காள நாவலாசிரியர், இவரது நாவல்கள் மற்றும் ஆதிவாசிகளுக்கான போராட்டச் செயல்பாடுகள் முக்கியமானவை, மற்றவர் கமலா தாஸ், மாதவிக்குட்டி என்ற பெயரில் கதைகள் எழுதியவர், கேரளாவைச் சேர்ந்தவர், முக்கிய கவிஞர் மற்றும் சிறுகதையாசிரியர், இந்த நால்வருமே அசலான மொழியையும் தனக்கான தனி அகவுலகையும் வெளிப்பாட்டு திறனையும் கொண்ருந்தவர்கள், முன்னோடி சாதனையாளர்கள்,

ஒளிரும் நியான் விளக்குகளின் பகட்டான வெளிச்சத்தில் நட்சத்திரங்கள் கண்டுகொள்ளாமல் போய்விடும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், ஆகவே அசலான படைப்புகள் கண்டுகொள்ளப்படாமலே தான் போகும்.

ஆனால் எங்கோ ஒரு மூலையில் எவரோ ஒருவர் தனிமையோடு வானத்து நட்சத்திரத்தைப் பார்த்து வியந்தபடியே தானிருப்பார் என்ற உண்மை தான் பலரையும் தொடர்ந்து எழுத
வைத்துக் கொண்டிருக்கிறது.

Source: www.sramakrishnan.com

Sunday, 6 November 2011

முதல்வருக்கு ஒரு கடிதம்

மாண்புமிகு முதல்வர் அவர்களே,

சில மாதங்களுக்கு முன் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற போது "ஐந்தாண்டு கால ஆட்சியில் ஒரு மாநிலம் முழுமையான வளர்ச்சி பெற இயலாது. ஐந்தாண்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள் நிறைவேற இன்னொரு ஐந்தாண்டுகள் தேவை. கடன் சுமையில் இருந்த தமிழகத்தை நான் 2001 ஆம் ஆண்டு ஆட்சி ஏற்ற பின் செப்பனிட்டு வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றேன். ஆனால், ஆம் ஆண்டு 2006 ஆட்சி மாறியதால் மீண்டும் தமிழகம் பின் தங்கி விட்டது" என்றீர்கள்.

சரி, அது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். இப்போது நீங்கள் அறிவிக்கும் திட்டங்கள் அல்லது எடுக்கும் நடவடிக்கைகள் தமிழகத்தை எப்படி வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்று மீண்டும் மீண்டும் திராவிட கழகங்களுக்கே ஓட்டளிக்கும் மாங்காய் மடையனான குடிமகன் எனக்கு புரியவில்லை. வடிவேலு ஒரு படத்தில் சூப்பர் சுப்பு என்று பெயரில் அரசியல்வாதியாக வருவார். தமிழகத்திற்கு ஏன் மத்திய அரசின் நிதி மற்றும் மற்ற நன்மை தரும் திட்டங்கள் கிடைப்பதில்லை என்ற நிருபர் ஒருவரின் கேள்விக்கு, "தமிழகம் இந்தியாவின் அடிப்பகுதியில் உள்ளது. அதை அப்படியே தூக்கி டெல்லி அருகே வைத்து விட்டால் நமக்கு எல்லா நன்மையையும் கிடைக்கும்" என்பார்.

அந்த காட்சிக்கு சற்றும் குறைவில்லாமல் ஹாஸ்யம் உள்ளது உங்கள் திட்டங்களில். விழி பிதுங்கும் பிரச்சனைகள் பல இருக்க, அண்ணா நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப் போகிறேன் என்று ஒரு அறிவிப்பு. இதற்கு இப்போது என்ன அவசியம் வந்தது? ஆசியாவின் பெரிய மருத்துவமனை என்று அழைக்கப்படும் ஜி.ஹெச் எந்த நிலையில் உள்ளது என்று நமக்கு தெரியாதா? அங்கு சென்று வைத்தியம் பெற்றுக்கொள்ளும் தைரியம் உங்களுக்கு உள்ளதா? மக்கள் மக்கள் என்று உருகும் நீங்கள் ஒரு முறை நேரம் கிடைத்தால் யாருக்கும் சொல்லாமல், யாரையும் அழைத்துச் செல்லாமல் ஜி.ஹெச்சின் மூலை முடுக்குக்கெல்லாம் சென்று பாருங்கள். மக்கள் வாழும் நிலை என்று நன்றாகவே புரியும். இப்போது நீங்கள் அறிவித்திருக்கும் குழந்தைகள் நல மருத்துவமனை அதே நிலையை தான் அடையும். ஏற்கனவே எழும்பூரில் உள்ள தாய்-சேய் நல அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் உட்பட சகல அலங்கோலங்களுக்கும் அரங்கேறுவது நான் அனைவரும் அறிந்ததே.

ஆட்சியேற்ற ஆறு மாதத்தில் ஆறு அமைச்சர்கள் மாற்றம். என்ன அவசியம் ஏற்பட்டது இந்த மாற்றம் கொண்டு வர? எப்போது தனக்கு வேலை போகும் என்ற நினைப்பிலேயே இருக்கும் ஒரு அமைச்சர் தன் வசம் உள்ள துறையின் நிர்வாகத்தை எப்படி சிறப்புடன் செய்ய முடியும்? அப்படி ஒருவர் தகுதியானவர் இல்லை எனில் ஏன் அவருக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டது?

தி.மு.க அரசின் திட்டங்களை ஒழிப்பதும், தி.மு.கவினரை சிறையில் அடைப்பதும் மட்டுமே இந்த ஆறு மாதங்களில் அரசின் சாதனையாக மக்களாகிய எங்கள் கண்களில் தெரிகிறது. ஒரு வேளை வேறு எதாவது நல்ல திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தாலும் மேலே சொன்ன தி.மு.க விஷயம் அதை மழுங்கடித்துவிட்டது. சென்ற ஆட்சியில் தவறுகள் இருந்தாலும் அதை நீதிக்கு முன் கொண்டு வந்து நிறுத்துவதுடன் இந்த அரசின் கடமை நிறைவு பெறுகிறது. முழு நேரமும் யாரை கைது செய்யலாம், யார் வீட்டில் சோதனை போடலாம் என்று யோசிப்பதால் என்ன பயன்?

கோடிக்கணக்கில் செலவழித்து மக்கள் வரிப் பணத்தில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தில் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளீர்கள். பெய்து வரும் மழையின் விளைவாக காலரா, வாந்தி, பேதி என்று நோய்கள் வரிசை கட்ட ஆரம்பிக்குமே, அதை கையாள தமிழக மருத்துவமனைகள் தயாராக இருக்கிறதா என்று உங்கள் சுகாதாரத் துறை அமைச்சரை கேட்டீர்களா? அது சரி, சுகாதாரத் துறை அமைச்சர் யார்?

நீங்கள் தினமும் செல்லும் போயஸ் கார்டன் - தலைமை செயலகம் சாலையை தவிர சென்னை நகரின் மற்ற சாலைகளில் பயணம் செய்யும் அரிய வாய்ப்பை பெற்றீர்களா? ஒரு முறை பெரும்பாக்கம் ஆரம்பித்து போயஸ் கார்டன் சென்று பாருங்கள். ஆஹா, என்ன ஒரு அனுபவம் அது? தினம் ரூபாய் 35 சுங்கச்சாவடியில் செலுத்தி அந்த சாலையை பயன்படுத்தும் எங்களை போன்றவர்கள் பாக்கியசாலிகள்.

பெருகி வரும் சென்னை மற்றும் தமிழக போக்குவரத்து நெரிசலை சமாளிக்க என்ன செய்வதாக உத்தேசம்? இன்று எதாவது திட்டம் போட்டால் தான் ஐந்து வருடத்திற்கு பின் அந்த நெரிசலை சமாளிக்க இயலும். சென்னை சுற்றுப்புறங்களில் உங்கள் அல்லக்கைகள் செய்யும் அட்டூழியங்கள் தெரியுமா உங்களுக்கு? தெருவோர வியாபாரிகளிடம் உங்கள் பேரை சொல்லி வசூல் வேட்டை, உங்கள் கட்சிக்கொடியை காரில் மாட்டிக்கொண்டு சுங்கச்சாவடியில் வரி செலுத்தாமல் செல்வது, கவுன்சிலர் போன்ற கட்சியின் கடைநிலை ஆட்கள் ஆடு, மாடுகளை சாலைகளில் அலைய விட்டு போக்குவரத்தை பாதிப்பது, இதை தட்டிக் கேட்பவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்துவது என்று பல.

வெளிநாட்டினர் தினம் வந்து செல்லும் பழைய மகாபலிபுரம் சாலை மழையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. பாதசாரிகளுக்காக கட்டப்பட்ட ஓவர்ப்ரிட்ஜ் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. அதை இடித்துவிட்டு உபயோகப்படும் வகையில் ஒன்றை உருவாக்கலாம். அண்ணா நூலகத்தை மூடும் அக்கறையில் ஒரு பத்து சதர்விகிதம் இதற்கெல்லாம் செலவழித்தால் நன்றாக இருக்கும்.

மக்கள் அன்றாடும் சந்திக்கும் பிரச்சனைகள் பல உள்ளன. அவை உங்கள் கவனத்திற்கு வர நீங்கள் மக்களை சந்திக்க வேண்டும். குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து கொண்டு மக்களை காப்பேன் என்று சூளுரைப்பது எந்தப் பயனும் தராது.

இப்படிக்கு,
தமிழகம் என்றாவது வளர்ச்சி பாதையில் செல்லும் என்று நம்பும் ஒரு சராசரி குடிமகன்

Friday, 4 November 2011

குழி முன்னேற்ற கழகம்


இந்தியாவில்  தி.மு.க/அ.தி.மு.க மாதிரி சொகுசான கட்சிகள் வேறு எங்கயும் பார்க்க முடியாது. இதில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எதிர்கட்சிக்கு வேலையே வெக்கரதில்லை , வந்த சில மாதங்களிலேயே தனக்கு தானே குழி தோண்ட  ஆரம்பிச்சு, 4
3/4 வருஷங்கள்ல ஒரு பிரமாண்ட குழியை தோண்டிஅடுத்த தேர்தல் வந்தவுடன் அதில் கவுந்தடிச்சு தம் கட்டி படுத்துக்க வேண்டியதுதான் , பிறகு வந்த மற்றொரு முன்னேற்ற கழகம் பக்கத்தில் இந்த குழிக்கு நாலடி (அதாவது நாலு மாசம்) இடைவெளி விட்டு ஒரு பெரிய குழி தோண்ட ஆரம்பிக்கலாம். அப்போ எதிர்கட்சி முன்னேற்ற கழகம் என்ன பண்றது? ........ அஞ்சு வருஷம் நல்ல தூங்கலாம் இல்லன்னா புது குழி வெட்டறத வேடிக்கை பாக்கலாம். லைப்ரரியை மாத்த போறேன் அப்படின்னு குழியை தோண்ட ஆரம்பிச்சு இருக்காங்க .. இனிமேல் போர்க்கால அடிப்படையில் பணிகள் பூர்த்தியாகும், இதற்கென ஜெயலலிதா (சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யபடாமல் இருந்தால்) தனி குழுவை நியமித்து வெரட்டி வெரட்டி வேலை வாங்க போறாங்க. குழி எத்தனை அடி அகலம் , எத்தனை அடி நீளம் குறிப்பா எத்தனை அடி ஆழம்  அப்படின்னு தெரியலை ...இன்னும் 4 3/4 வருஷம் பொறுத்துக்குங்க மொத்தமா அளந்து பார்த்திடலாம்.
வருங்கால முதல்வர் ஸ்டாலின் வாழ்க..

Sunday, 30 October 2011

நண்பன்


நண்பர் ஒருவர் மேலே உள்ள புகைப்படத்தை முகநூலில்(Facebook) கொடுத்து இதை பற்றி எதாவது பதிவு எழுதும் எண்ணம் உள்ளதா என்று கேட்டிருந்தார். அவருக்காக இது.

புகைப்படத்தை பார்த்தவுடன் தோன்றுவது, "இந்த படத்தின் தோல்விக்கு காரணம் விஜய் தான் என்று ஸ்ரீகாந்தும், ஜீவாவும் கை காட்டுவது போலவும், இல்லை இல்லை இவங்க ரெண்டு பேரும் தான் என்று விஜய் சொல்வது போலவும் உள்ளது". கோடிக்கணக்கில் பணத்தை போட்டு படம் எடுக்கிறார்கள். அதன் வெற்றி, தோல்வியை பற்றி நாம் பேசத்
தேவையில்லை இருந்தாலும் உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்ற ஒரு இந்தியத் திரைப்படம் என்பதால் அதை தமிழில் எடுக்கும் போது மூலப் படத்தின் Originality பாழாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது.

வெற்றிக்கு முக்கியக் காரணம் அப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி. அபிஜத் ஜோஷியுடன் இணைந்து இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்தவரும் அவரே. பொதுவாக படத்தொகுப்பாளருக்கு இயக்குனரின் பார்வை இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். 3 Idiots படத்தை பொறுத்தவரை அதன் தொகுப்பாளரும் ராஜ்குமார் ஹிரானி தான். இயக்குனரே படத்தை எடிட் செய்வது காட்சிகளுக்கு வலு கொடுக்கிறது. Rashomon, Seven Samurai போன்ற படங்களை இயக்கிய உலக புகழ் பெற்ற ஜப்பானிய இயக்குனரான அகிரா குரோசவா தன் படத்தொகுப்பாளருடன் பல நாட்கள் படதொகுப்பறையில் நேரத்தை செலவிடுவார் என்று படித்திருக்கிறேன்.

ஷங்கர் கைதேர்ந்த இயக்குனர். அவர் கலையில் நமக்கு சந்தேகம் இல்லை. இருந்தாலும் அமீர் கானால் அமரத்துவம் பெற்ற ராஞ்சோ பாத்திரத்தை விஜய் செய்கிறார் எனும் போது விஜய்யின் பழைய படங்களை பார்த்தவர்கள் என்கிற முறையில் நம்மை பீதி பற்றிக்கொள்வதை தவிர்க்க முடியவில்லை. சாத்தூர்(Chattur) வேடத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார் என்று படித்த போது அதே பீதி பன்மடங்கு அதிகமாக தொற்றிக்கொண்டது. ஓமி வைத்யா என்ற நடிகர் அந்த பாத்திரத்தை மூலப் படத்தில் செய்திருந்தார். இயக்குனரால் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட கதாப்பாத்திரம்.

ராஞ்சோ மிஷின்கள்(Machines) பற்றி தன் பேராசிரியருக்கு விளக்கும் காட்சி, படிப்பது எப்படி என்று ராஞ்சோ கல்லூரி முதல்வரான போமன் இரானிக்கும் சக மாணவர்களுக்கும் அளிக்கும் விளக்கம், வயிறு புண்ணாக சாத்தூர்(Chattur) சிரிக்க வைக்கும் பலாத்கார் காட்சி போன்றவற்றை ஷங்கர் தமிழில் எப்படி செய்திருக்கிறார் என்று பார்க்க வேண்டும். தமிழில் கல்லூரி வாழ்வை மையமாக கொண்ட படங்கள் பல வந்திருந்தாலும்(தலைவாசல், நம்மவர், காதல் தேசம் ஆகியவை சில உதாரணங்கள்) அவற்றில் காதல், வன்முறை போன்றவையே பிரதானமாக முன்னிறுத்தப்பட்டது. 3 Idiots முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் கல்லூரிகளையும் நம் கல்வி முறையையும் சாடியது. நம்மில் பலர் மனதில் நினைப்பதை திரையில் காட்டியதே அதன் அமோக வெற்றிக்கு காரணம். இளைய தளபதி குறித்த பயம் இருந்தாலும் நானும் நண்பனுக்காக காத்திருக்கிறேன்.

Thursday, 27 October 2011

தி.ஜானகிராமன்

தி.ஜா அல்லது தி.ஜா.ரா எனப்படும் தி.ஜானகிராமன்  1921-இல் பிறந்தவர் , பிறந்தது பழைய தஞ்சை மாவட்ட தேவங்குடி.தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.சுமார் 10 நாவல்கள் பல சிறுகதை தொகுப்புகள் மேடை நாடகங்கள் பயண நூல்கள் என ஒரு வட்டம். இதற்கு மேலும் அவர் படைப்புகளை பற்றி அறிமுகபடுத்துமளவிற்கு எனக்கு படிப்பில்லை.

பயண நூல்களை தவிர்த்து மிகப்பெரும்பாலான கதைகள்,தமிழ்நாட்டு காவிரிக்கரை (உலராத காவிரி),பிராமண சமூகம்,ஒரு 'புருவம் உயர்த்தும்' உறவு முறை என சுற்றி வருபவை.ஆனால் இங்கே நான் சொல்லபோவது அவரின் எழுத்து நடை.

நான் படித்த புனைக்கதைகள் , நான் ரசித்த கதைகள் பல மிச்சங்களை  விட்டு செல்லும்.  சில சமயம் பிரமிப்புக்களை (விஷ்ணுபுரம் போல) , சில சமயம் ஆச்சர்யங்களை, திகைப்பை (ஜீரோ டிகிரி போல) சில சமயங்கள் சில படிப்பினைகளை (வெகு சில பாலகுமாரன் நாவல்கள் போல),பரவசத்தை (சில சுஜாதா நாவல் / கட்டுரை போல) ஆனால் தி.ஜா.வை படிக்கும்போது வருவது ஆசுவாசம்,இதுதான் சரியான சொல் என்று நினைக்கிறேன், மூச்சு திணறி தண்ணீரில் எழுந்தால் வரும் ஆசுவாசம் போல.

தி.ஜாவின் கதைகளை படிக்கும்போது  நீங்கள் தமிழை நேசித்தால்,பேரரசு படங்களை ரசிக்காதவராக இருந்தால்,அநாவசிய political correctness பார்க்காதவராக இருந்தால்  உங்களுக்கு நிச்சயம் இவர் காட்டும் வாழ்க்கை பிடிக்கும்.

இவரின் எழுத்து நடையை ஒரு வார்த்தையை வைத்து சொல்வதாக இருந்தால்,இவர் மொழியிலேயே சொல்லலாம் "நறுவிசு", நாம் அன்றாட வாழ்க்கையில் பார்க்கும் மிக மிக எளிய விஷயங்களையே கூர்ந்து கவனிக்கும் அழகுனர்ச்சியே இவரது பெரும் பலம். வீடுகளை,மனிதர்களை, உடைகளை, உணவுகளை, உறவுகளை, மரங்களை, செடிகளை, வீதிகளை, காலங்களை, வானை, பூமியை ,வாசனையை , பெண்ணை, ஆணை, குழந்தையை , குழந்தைதனத்தை, பணத்தை, பாரம்பரியத்தை, ரயிலை, பூவை, காயை ,கனியை, பசுமையை, வளமையை, மேட்டிமைதனத்தை, பக்தியை, மேன்மையை, பாலுணர்ச்சியை, கை கால் போன்ற உடல் உறுப்புக்களை, பெண்மையை , ஆண்மையை இவர் விவரிக்கும் விதமே இவரது பலம். கார்மே (Gourmet) என்று சொல்லலாமா? இல்லை sensualist என்று சொல்லலாம்!

ஒரு உதாரணம் பாருங்களேன், அவர் ஒரு தஞ்சை கிராமத்தின் ஒரு வசதியான வீட்டை விவரிக்கிறார்,

"வீட்டில் ஒரு குளிர்ச்சி. வெளியே வெள்ளையாய் காய்கறி வெயிலின் வெப்பமே படாத ஒரு குளிர்ச்சி. வழவழவென்று கூடம் தாவாரம் எல்லாம் சிவப்பு சிமிண்டு. கூடத்தையும், தாழ்வாரத்தையும் பிரிக்கிற கூடத்தில் நான்கு தேக்கு தூண்கள். கூடத்துக்கு மேல் ஓட்டு போட்டு இருந்தது. மாடி.அங்கு அறைகள் இருப்பது போலிருந்தது. இடைகழி நிலைக்கு இந்த பக்கம் மாடிப்படி. மாடியும் பிறகு சார்ப்பும் இருந்ததால் முற்றம் அகலமின்றி குறுகியிருந்தது. முற்றத்திற்கு மேலே கம்பி கம்பிகிராதி. முற்றத்தின் ஓரத்தில் ஒரு ஜாதிக்கொடி கிளம்பி மேலே கம்பிமீது படர்ந்திருந்தது.முற்றத்தில் ஒரு ஓரமாக சுவரை ஒட்டி ஒரு உயரத்தில் புதைத்த சந்தனக்கல்.கிளி கொஞ்சுகிற வீடு-புதிதாக கட்டினாற்போல ஒரு நறுவிசு. வர்ணம் அடித்த ஜன்னல்கள்.கிணற்றுக்கு பக்கத்தில் சுவரோரமாக மல்லிகை செடி நாலு - துளசி செடி - திருநீர்றுபச்சை எல்லாம் ஒரு குட்டை சிமென்ட் சுவருகுள்ளாக நிரப்பியிருந்த மண்ணில் வளர்ந்திருந்தன. இடது பக்கம் வாழைத்தோட்டம்- நிலைக்கு நேராக நடைபாதை - பாதையில் நடந்தால் - நலிந்து வாழைகள் தார் போட்டு அறுக்க காத்திருந்தன - பாதை ஒரு வாய்க்காலில் போய் முடிந்தது - வாய்க்காலில் தண்ணீரின் மந்த ஓட்டம்-அப்பால் பெரிய தோட்டம் வாழை , எலுமிச்சை, கொய்யா , துரிஞ்சிகள் தோட்டம் முழுவதும் கொத்தி போட்டிருந்தது.மதமதவென்று மரங்களுக்கெல்லாம் ஒரு வளர்த்தி. ஒரே நிழல்."


இது போன்ற வீட்டில் நான் இருந்ததில்லை, இனிமேல் இருக்க போவதும் இல்லை, இது போன்ற ஒரு வீடு 2011-இல் தமிழ்நாட்டில் எங்காவது இருக்குமா என்பதே சந்தேகம்தான்.

ஒரு பெண் பாத்திரத்தை அறிமுகபடுத்தும்போது இப்படி விவரிக்கிறார்,"உனக்கு நான் சளைத்தவளா என்று ஒரு எடுப்பு. செதுக்கின முகம். காலையும், கையையும் , விரல்களையும் நாள் முழுதும் பார்த்து கொண்டிருக்க வேண்டும். நறுக்கின மூக்கு நுனி. இந்த சமையல் அறைக்குப் பிறக்காதது போன்ற ஒரு பெருமித பார்வை, நடை. ஆனால் அவள் சமைக்கும்போது பார்த்துக்கொண்டே இருக்க தோணும். அவள் சமையலின் மனத்தையும் ருசியையும் நுகர்கிறபோது எனக்கு இதுவும் வரும், உங்களையெல்லாம் விட நன்றாக வரும் என்று சொல்வது போலிருக்கும். இவளை பார்த்தால் இருபது வயது போல, முப்பது வயதுபோல - நாற்பது வயது போல - ஐம்பது வயது போல - பத்து வயது போல - எல்லா வயதும் தெரிகிற தோற்றம்.

ஒரு பெண்ணை பார்த்து இருபது வயது போல , முப்பது வயது போல நாற்பது வயது போல என்று எப்படி சொல்ல தோணும  , அப்படி சொல்லி மீண்டும் பத்து வயது போல என்று சொல்ல தோணுமா ? இப்படி விவரிக்க எந்த விதமான கற்பனை வேண்டும் ? எழுதும்போது யாரை நினைத்து எழுதி இருப்பார்?

இவர் கதைகளில் நான் ரசித்து படிக்கும் இன்னொரு விஷயம், இவர் மத்தியானங்களை , இளமாலைகளை விவரிக்கும் பாங்கு,

பெரும்பாலும் படைப்பாளிகள் மதியங்களை விட்டு விடுவார்கள் நேரா போய் ரைட்ல திரும்பின மாலைதான், மாலை நேரத்து மயக்கம்தான், அப்புறம் ஒரு லெப்ட் திரும்பினா இரவும் அதன் மர்மங்களும். ஆனால் தி.ஜா முற்பகலையும் , பிற்பகலையும் அப்போது மனித மனம் கொள்ளும் அமைதியையும் வெகு லாவகமாக படம் பிடிப்பார். ஒரு விடுமுறை நாளின் தூங்கி எழுந்த பிற்பகல் (ஒரு 3 மணியை எடுத்துக்கொள்ளுங்கள்) எப்படி இருக்கும்?அப்போது மனதிற்குகந்த துணையின் பேச்சும், காப்பியும் பேச்சின் ஊடாக இருக்கும் காதலும், ஒரு நிம்மதியும் , நிறைவும் ..தி.ஜாவின் உலகில் நுழைந்து விட்டீர்கள்.

சாரு ஒருமுறை தி.ஜாவிடம் சொன்னாராம் "நீங்கள் ஒரு refined பாலகுமாரன்" என்று, அது உண்மைதான்.இவர் refined-ஆக இருப்பதற்கு காரணங்கள் இரண்டு

ஒன்று ,இவர் வாழ்ந்த காலகட்டம் , சுதந்திரம் வாங்கி முதல் இருபது ஆண்டுகளே இவரது காலம், கதைக்களனும் அப்போதுதான். இன்றைய உலகமயமாக்கம் உச்சத்தில் இருக்கும் காலத்தில், இவரது நாவல்கள் வாசகருக்கு 'மயிலிறகு வருடுவது போல' கொசுக்கடி போல இருக்கும்.

இரண்டாவது,இவர் எழுத்தை தன் தொழிலாக வைத்துக்கொள்ளவில்லை ,அதனால் பாலகுமரானுக்கு வந்த வணிக நெருக்கடிகள் இவருக்கு இல்லை.அதனால் அதீத உணர்சிகள் சொல்ல தேவையில்லை, டமார் என்று காலில் விழ வேண்டாம், காமத்தையும் வஞ்சத்தையும் பிசைந்து சொல்ல வேண்டாம் , ரஜினி படம் போல 'Rise and Rise of Hero' கதை சொல்ல தேவையில்லை.

தி.ஜா கதையை போலவே நடுவில் ஆரம்பித்து நடுவில் முடிக்கிறேன். இன்னும் தோன்றினால் பார்ப்போம்.

Tuesday, 25 October 2011

தீபாவளி நிகழ்ச்சிகள்-அரைச்ச மாவை அரைப்போமா?

தொலைக்காட்சியில் எந்த அலைவரிசைக்கு சென்றாலும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளின் பட்டியல். விதி விலக்காக தெரிவது பொதிகை மட்டுமே. இந்த நிகழ்ச்சி பட்டியலில் ஒரு விஷயத்தை கவனித்தேன். விஜய், சன், ஜெயா, ராஜ், கலைஞர் என்று எல்லாவற்றிலும் நிகழ்ச்சிகளின் format ஒன்று தான். காலை மங்கள இசை, எதாவது நடிகர் அல்லது நடிகையின் பேட்டி, தீபாவளியன்று திரைக்கு வரும் படம் பற்றி அதன் நடிகர், நடிகை, இயக்குனருடன் ஒரு நிகழ்ச்சி, பட்டிமன்றம், மீண்டும் நடிகர்/நடிகை பேட்டி, சிறப்பு திரைப்படம் etc etc..

இந்த நிகழ்ச்சிகளைத் தான் பார்ப்பேன் என்று நாமெல்லாம் என்ன சங்கல்பமா செய்து கொண்டிருக்கிறோம்? கொஞ்சம் மாறுதலான நிகழ்ச்சிகளை அளித்தால் என்ன? உதாரணமாக தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளில் கூட தீபாவளி கொண்டாடப்படுகிறது. அங்குள்ள மக்கள் அதை எப்படி கொண்டாடுகிறார்கள், அவர்கள் தீபாவளி கொண்டாடும் கதை என்ன என்று ஒரு கவரேஜ் செய்யலாம். மருத்துவம், போலீஸ் போன்ற துறையினருக்கு தீபாவளி, பொங்கல் என்று பண்டிகை விடுமுறை எதுவும் இல்லை. சில பிரபல மருத்துவர்கள், போலீஸ் அதிகாரிகள் போன்றவர்களின் குடும்பத்தினரை பிரத்யேகமாக பேட்டி காணலாம். இந்த பேட்டியின் வாயிலாக அவர்கள் பணியில் உள்ள தங்கள் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் கூறலாம்.

பார்வை இழந்தவர்கள், அனாதை இல்லங்களில் வாழ்பவர்கள் போன்றவர்கள் பிரபலங்களுடன் சில மணி நேரம் தீபாவளி கொண்டாட வழி செய்து அதை படமாக்கி ஒளிபரப்பலாம். பழந்தமிழ் இலக்கியங்களில் தீபாவளி எப்படி கொண்டாடப்பட்டது என்று அறிஞர் பெருமக்களை வரவழைத்து அதைப் பற்றி பேசச் செய்து தமிழ் மறந்த இன்றைய தலைமுறையினருக்கு இலக்கிய அறிமுகம் செய்யலாம். இதை மட்டுமே ஒளிப்பரப்பினால் வருமானம் தேறாது என்பது உண்மைதான். இருந்தாலும் இப்படி ஒன்றிண்டு நிகழ்ச்சிகள் தயாரித்து ஒளிபரப்புவதில் தவறில்லையே?

Friday, 14 October 2011

கடவுள் வந்திருந்தார்,அடிமைகள், சுஜாதா

காயமலர் நிறவா! கருமுகில் போலுருவா!
கானக மாமடுவில் காளியனுச்சியிலே
தூயநடம் புரியும் சுந்தர என்சிறுவா!

- பெரியாழ்வார் திருமொழி(நாலாயிர திவ்யப் பிரபந்தம்)

இரண்டு நாட்களாக தேடிக் கொண்டிருக்கிறேன். நான் நடித்த "கடவுள் வந்திருந்தார்" குறுந்தகடை வீட்டில் காணவில்லை. Dementia வந்து வருங்காலத்தில் நான் அவதிப் பட நேர்ந்து, என் பேரப் பிள்ளைகள் "என்ன எழவு இந்த கிழத்துக்கு இப்படி ஒரு மறதி, பாட்டி எப்படி தான் சமாளிச்சாலோ" என்று சொல்ல நேர்ந்தால் என் மெமரி எப்படிப்பட்டது என்று அவர்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காகவே நான் எடுத்து வைத்திருந்த பொக்கிஷம் அது.

பக்கம் பக்கமாக சுஜாதா சீனு மாமாவுக்காக எழுதி இருந்த வசனங்களை நினைவில் வைத்து எண்ணூறு பேர் முன் மியுசிக் அகாடமி மெயின் ஹாலில் பேசிய தருணங்களை எப்படி மறக்க முடியும்? மேலே சொன்ன பெரியாழ்வார் திருமொழி கிளைமாக்சில் சீனு மாமா தன்னை பெருமாளின் வடிவம் என்றெண்ணி வரும் ஜனங்கள் முன் பேசும் பகுதியில் வரும்.

வேலையில் இருந்து ரிடையர் ஆகும் சீனு மாமா, அவர் மனைவி, மகள் ஆனந்தி. அவர் மகள் ஆனந்தியை காதலிக்கும் மாடி வீட்டு இளைஞன். சீனு மாமா வீட்டுக்கு வரும்(அவர் கண்ணுக்கு மட்டும் தெரியும்) வருங்கால மனிதன் ஜோ. இவர்களை சுற்றி கதை. ரிடையர் ஆகும் தருவாயில் வீட்டில் மரியாதை இல்லாத நிலை சீனு மாமாவுக்கு. திடீரென்று வேற்றுகிரக மனிதன் ஜோ மாமா வீட்டிற்கு வர அதனால் நடக்கும் ஹாசியமான நிகழ்ச்சிகள் தான் கதை.

ஜோவை வைத்துக்கொண்டு மாமா அடிக்கும் லூட்டி அவர் கடவுள் சக்தி பெற்றவர் என்ற புகழை தேடித் தர, மீண்டும் வீட்டில் மரியாதை. ஒரு கட்டத்தில் ஜோ வீட்டை விட்டு தன் கிரகம் செல்வதாக சொல்ல பிரச்சனை ஆரம்பிக்கிறது. அப்போது அவர் மகளை காதலிக்கும் மாடி வீட்டு இளைஞன் அவரை அந்த சிக்கலில் இருந்து காப்பாற்றுகிறான். சீனு மாமாவாக நான் நடித்திருந்தேன்.சுஜாதாவின் பன்முகத் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த நாடகம்.

ஏற்கனவே சுஜாதா நாடகமான அடிமைகள் தகடை தொலைத்துவிட்டேன். இப்போது இது. அடிமைகள் சுஜாதாவின் மற்றொரு masterpiece. நீட்ஷேவை(Friedrich Nietzsche) எனக்கு அறிமுகப்படுத்திய நாடகம். அதன் பின் நீட்ஷேவின் "Thus Spake Zarathustra" வாங்கிப் படித்து இன்னும் புரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறேன். அடிமைகளில் மூத்த அண்ணன் கதாப்பாத்திரம் எனக்கு. வசனங்கள் கடவுள் வந்திருந்தார் அளவுக்கு இல்லை என்றாலும் கடைசியில் பெரியப்பாவை கொன்று அவர் இடத்தை எடுத்துக்கொள்ளும் பாத்திரம். அற்புதமாக சிருஷ்டித்திருப்பார் சுஜாதா.

கடவுள் வந்திருந்தார், அடிமைகள் பற்றி பேசும் போது இந்த நாடகங்களை இயக்கிய GD என்கிற காயத்ரி தேவி அவர்களை பற்றி நான் சொல்லியாக வேண்டும். அவரும் ஒரு சுஜாதா ரசிகை. CSS நிறுவனத்தின் Microsoft Technologies பிரிவில் மேலாளராக இருந்தார். BITS Pilani மாணவி. இப்போது WIPRO நிறுவனத்தில் Senior Delivery Manager பொறுப்பில் இருக்கிறார். இவர் இல்லையென்றால் நிச்சயம் இந்த நாடகங்கள் நடந்திருக்காது. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஏற்ற ஆட்களை தேர்வு செய்து, ரீடிங் செஷன்ஸ் வைத்து முதலில் வசனங்களை மனப்பாடம் செய்ய வைத்து பின்னர் காட்சிகளை வடிவமைப்பார். கடினமான உழைப்பாளி, எடுத்துக் கொள்ளும் வேலையில் நிறைய சிரத்தை. வார இறுதியில் மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ், போன்ற இடங்களில் ரிகர்சல் நடக்கும். அற்புதமான நாட்கள் அவை. GD, என்னை இந்த நாடகங்களில் நடிக்க வைத்ததற்காக உங்களுக்கு என் நன்றி.

சனி, ஞாயிறு, திங்கள் மூன்று நாளும் இந்த நாடக தகடுகளை தேடுவது தான் வேலை.

Sunday, 2 October 2011

கவிதை,கணிதம், கணிப்பொறி

இன்று Social Networking, Cloud Computing என்று தகவல் மற்றும் கணிப்பொறி தொழில்நுட்பத்தில் நாம் பல மடங்கு தூரம் பிரயாணித்து விட்ட போதிலும், Charles Babbage என்னும் பெயரை மறக்க முடியாது. முதல் முறை நமக்கு பள்ளியில் கணிப்பொறி அறிமுகப்படுத்தப்பட்ட போது இந்த பெயருடன் இணைத்தே அந்த அறிமுகம் நிகழ்ந்தது. இன்றைய கணிப்பொறியின் முன்னோடியான அனலிடிகல் என்ஜினை(Analytical Engine)வடிவமைத்தவர் அவர்.ஆனால்,இந்த பதிவு Charles Babbage பற்றி அல்ல.

அவருடைய யோசனைகளை முற்றிலும் புரிந்து கொண்டு அனலிடிகல் எஞ்சினுக்காக Program எழுதிய Ada Lovelace என்பவரை பற்றியது. அந்த காலகட்டத்தில் அனலிடிகல் என்ஜின் முழுமையாக உபயோகிக்கக் கூடிய ஒரு நிலையை அடைந்திருக்குமெனில் இந்த program மூலமாக அதனால் ஒரு வரிசை முறையில் Bernoulli Numbers கணித்திருக்க முடியும் என்கிறது விக்கிபீடியா.இதன் பொருட்டே உலகின் முதல் பெண் கணிப்பொறி நிரலர்(Programmer) என்கிற பெருமையை Ada பெறுகிறார்.

Augusta Ada King a.k.a Augusta Ada Byron 1815 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரபல ஆங்கில கவி பைரனுக்கு(Lord Byron) மகளாக பிறந்தார். பைரன் கேட்டுக்கொண்டதின் பேரில் அடாவின் தாயார் தன் மகளுக்கு ஒரு வயது இருந்த போதே பைரனை பிரிந்து பிறந்தகம் வந்து விட்டார். அடாவின் வாழ்க்கையில் அவர் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. சிறு வயதில் பார்வை குறைபாடு, தட்டம்மையால் ஏற்பட்ட பக்கவாதம் என்று உடல் ரீதியான சிக்கல்களால் அவதிப்பட்டார் அடா.இதற்கு நடுவில் தன் படிப்பை தொடர்ந்தார். கணிதம் மற்றும் அறிவியலில் அடாவிற்கு சிறு வயதில் இருந்தே ஈடுபாடு வளரச் செய்தார் அவர் தாயார். பிரபல கணித மற்றும் அறிவியல் மேதைகளை வரவழைத்து தன் மகளுக்கு அந்த ஞானத்தை போதித்தார்.அப்படி ஒரு மேதையான Mary Somerville அடாவை 1833 ஆம் ஆண்டு Charles Babbage அறிமுகம் செய்து வைத்தார். Charles Dickens, Michael Faraday போன்றவர்களுடனும் அடாவிற்கு அறிமுகம் நடந்தது.

பல சந்தர்ப்பங்களில் பாபேஜின் Analytical Engine மற்றும் Difference Engine வடிவங்களில் பணி புரிந்தார் அடா. அவர் கணிதத் திறமையை பார்த்த பாபேஜ் அவரை "Enchantress of Numbers" என்கிறார். அடா 1852 ஆம் ஆண்டு மறைந்தார். அப்போது அவருக்கு வயது 36. அவர் மறைந்து நூறு ஆண்டுகளுக்கு பின் 1953 ஆம் ஆண்டு அவர் எழுதிய நிரல்கள் பிரசுரிக்கப்பட்டன. அமெரிக்க பாதுகாப்பு துறை அவர் நினைவாக அடா என்ற Object Oriented கணிப்பொறி மொழியை 1980 ஆம் ஆண்டு தயாரித்து வெளியிட்டது.

Charles Babbage அடா பற்றி கூறிய வரிகள் இவை:

"Forget this world and all its troubles and if
possible its multitudinous Charlatans – every thing
in short but the Enchantress of Numbers."

அவசியம் படிக்க வேண்டியவை

உலகின் மிகப்பெரிய வேலி
நல்லார் ஒருவர்

Saturday, 1 October 2011

என்னத்தை சொல்றது?

என்னுடன் பணிபுரியும் பெண்ணைப் பார்த்து Days Inn ஹோட்டலின் ரிசப்ஷனில் இருந்த அந்த அமெரிக்க பெண் சொன்னார். "உங்களை பார்த்தால் ஹிந்தி நடிகை ரேகா போல இருக்கீறீர்கள்". ஏதோ கவனத்தில் இருந்த நான் சட்டென்று நிமிர்ந்தேன். "உங்களுக்கு இந்த அளவுக்கு இந்தியா பற்றி தெரியுமா?" என்றேன். அவர் சொன்னார், "என் தாய் இரானை சேர்ந்தவர். தந்தை அமெரிக்கர். நான் பார்த்த முதல் இந்தியப் படம், கபி கபி. அதிலிருந்து நான் அமிதாப் பச்சனின் தீவிர ரசிகை. இந்தியாவில் நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்தே வாழ்கிறீர்கள். பெரியோரை மதிக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கை முறை எனக்கு மிகவும் பிடிக்கும்". இந்தியாவைப் பற்றி புத்தகத்தில் மட்டும் படித்திருப்பார் போலும் என்று நினைத்துக் கொண்டேன்.

மூச்சு விடாமல் இத்தனையும் சொன்ன அந்த பெண்ணை பார்த்து, "அப்பறம்"? என்றேன். "எனக்கு புடவை கட்டிக் கொள்ள மிகவும் விருப்பம்" என்றார். மரியாதையின் பொருட்டு, "அடுத்த முறை இங்கு வந்தால் உங்களுக்காக ஒரு புடவை எடுத்து வருகிறேன்" என்றேன். "உங்களுக்கு அதை எப்படி அணிவது என்று தெரியுமா?" என்றார். "இல்லை" என்றேன்.

Death at my doorstep புத்தகத்தில் குஷ்வந்த் சிங் ஒரு வெள்ளையரிடம் சொல்வார், "எனக்கு சில புடவைகள் அவிழ்த்து பழக்கம் உண்டு. அவற்றை கட்டி விட்டு பழக்கம் இல்லை".

Friday, 23 September 2011

கர்நாடக இசைக் கலைஞர்கள்: நேற்றும் இன்றும்

"இசையின் பயனே இறைவன் தானே" என்ற பாடல் வரியை நாம் கேட்டதுண்டு. இறை குறித்த தேடலில் இசைக்கு முக்கிய பங்குண்டு என்பதே இதற்கு அர்த்தம் என்று நினைக்கிறேன். இஸ்லாம் மத சூபி இசை, பாரம்பரிய கர்நாடக இசை போன்ற வடிவங்கள் இறையருள் பெரும் முக்கிய நோக்குடனே அமைக்கப்பட்டவை. கர்நாடக இசையின் மும்மூர்த்திகளான தியாகராஜர், தீக்ஷதர், சியாமா சாஸ்திரி போன்றவர்கள் இறையை அடையும் பொருட்டே வெவ்வேறு ராகங்களில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இசை கொடுத்த ஆன்மீக தொடர்பு அதிகம் இருந்ததாலேயே குடி, பரத்தையருடன் கூடுதல் போன்ற social taboos இவர்களை அண்டாமல் இருந்திருக்க கூடும். இவர்களின் பிராமண பின்புலம் மற்றுமொரு முக்கிய காரணம்.பிராமணன் ஹோட்டலில் சென்று சாப்பிடுவது கூட தவறு என்று நினைக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில் குடிப்பது எல்லாம் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது. ஆனால்,மும்மூர்த்திகளை தொடர்ந்து வந்த இசை விற்பன்னர்கள் பலர், காலப் போக்கில் விதிகளை கொஞ்சம் தளர்த்திக் கொண்டனர். ஆறு மணிக்கு மேல் ஒரு கிளாஸ் சல்பேட்டா, தாசி வீட்டுக்கு செல்வது போன்ற விஷயங்கள் தவறில்லை என்று நினைத்தார்கள். ஜெயமோகனின் ஒரு அக்கினிப்ப்ரவேசம் என்ற கட்டுரை எம்.எஸ்.சுப்புலட்சுமியை மையமாக கொண்டது என்றாலும், மேலே சொன்னவற்றை பற்றிய குறிப்புகளை சுமந்து வருகிறது. ஆனால், "ஆம், நான் இப்படிதான்" என்று வெளிப்படையாக சொல்லும் தைரியம் அப்போது யாருக்கும் இருந்ததாக தெரியவில்லை.

ஆக, சமூகம் குறித்த பயம், சாதி நிறுவிய விதிகள் எல்லாம் இன்று ஒரு பொருட்டே இல்லை என்ற நிலை வந்தாகி விட்டது. சமீபத்தில் ஹிந்து நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள கர்நாடக இசைக் கலைஞர் தி.எம்.கிருஷ்ணா, "ஒரு லார்ஜ் சிங்கிள் மால்ட் விஸ்கி" தனக்கு பிடித்த பானம் என்கிறார். சில மாதங்களுக்கு முன் சென்னை தி.நகரில் உள்ள ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டலின் பாருக்கு சென்ற போது ஒரு பிரபல சங்கீத வித்வானை சந்திக்க நேர்ந்தது. நல்ல கூட்டம் இருந்த போதிலும் யாருக்குமே அவரை தெரியவில்லை. நான் சென்று முகமன் கூறி, அவர் கச்சேரிகளை பற்றி பொதுவாக பேச ஆரம்பித்த போது அவர் கேட்ட முதல் கேள்வி, "உங்களுக்கு என்னை எப்படி தெரியும்? நீங்க எதாவது பத்திரிகை ஆசாமியா?" என்றார். நான் இல்லை என்றேன். நான் பத்திரிகை நிருபர் என்று சொல்லியிருந்தால் கூட அவர் அலட்டிக் கொண்டிருப்பார் என்று தோன்றவில்லை. உன் தொழில் முடிஞ்சு ஒரு ஓய்வுக்கு தானே நீ இங்க வர, அப்படி தான் நானும் என்கிற ரீதியில் தான் அவர் இருந்தார்.

கை கால் முழுக்க பட்டை, கழுத்தில் ருத்திராச்ச கோட்டை,பஞ்சகச்சம் இவற்றுடன் தான் கச்சேரி செய்ய வேண்டும் என்ற நிலை இல்லை இன்று. "ராமா, உன்னை விட்டா எனக்கு யாரு இருக்கா, என்னை விட்டுடாதே" என்னும் தியாகய்யர் கதறலை உணர்ச்சி பொங்க மேடையில் பாடும் கலைஞர், மேடைக்கு வெளியே, "I an am athiest" என்கிறார்.நிறைய கட்டுப்பாடுகள், கர்நாடக இசை கலைஞர்கள் சாட்சாத் கடவுளே, கர்நாடக இசை கற்க வேண்டும் என்றால் காலை நான்கு மணிக்கு எழுந்து சாதகம் செய்ய வேண்டும், குடித்தால் கடவுள் தண்டிப்பார் என்று வளர்க்கப்பட்ட எனக்கு அந்த பிம்பங்கள் உடையும் இந்த நேரம் குழப்பம் கலந்த உவகை ஏற்படுகிறது.

Wednesday, 14 September 2011

ஜெயமோகன் வலைதளத்திலிருந்து

இந்த கட்டுரையை படித்த பின் ஏதோ இனம் புரியாத ஒரு உணர்வு. குறிப்பாக இந்த வரிகள்:

"நாம் நம் வாழ்க்கையை ஒரு ஐம்பது அறுபது வயதில் திரும்பிப்பார்க்கும்போது நமக்குக் கிடைத்த வாழ்நாளை வீணடித்துவிட்டோம் என்ற எண்ணம் வராத வாழ்க்கையை வாழ்வதே நம் இலக்காக இருக்கவேண்டும்"என் ஊரில் நம்பர் 1 மளிகைக்கடை என்று பெயரெடுத்தவிட்ட ஒரு மளிகைக்கடை ஓனரிடம் “நீங்கள் பிளாகில் எழுதும் எழுத்தாளர்களின் கட்டுரைகளைப் படியுங்களேன்” என்று சொன்னேன். அவர் என்னிடம் பிளாகைப் பற்றி விசாரித்தார்.சொன்னேன். அவர் என்னிடம் “அவனுங்க கிடக்குறானுங்க லூசுப்பசங்க” என்றார்.

அவர் தினசரி பார்க்கும் லாபமே பல லட்சங்களிருக்கும். அதன் காரணமாக இப்படி ஆணவமாய்ப் பேசுகின்றார். ஏதோ ஒரு தொழி்லில் கொடி கட்டிப் பறப்பதனாலேயே தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? தன்னைப் பற்றிய மதிப்பீடே அவன் வெளிப்புறத்தில் சாதிக்கும் சாதனையை அடிப்படையாக வைத்துத்தான் எனில் வெளிப்புறத்தில் எதையுமே சாதிக்க முடியாதவன் என்ன ஆவான்? அவனுக்கு இந்த சமூகம் எந்த வகையிலும் ஒத்து வராத ஒன்றாகி விடுமே?

நித்ய சைதன்ய யதி போன்றவர்கள் வெளிப்புறத்தில் எதையுமே சாதிக்காமல் உள் நோக்கிய அகப்பயணம் மூலம் தானே தன்னைப் பற்றிய ஒரு உயர் அபிப்ராயத்தை அடைந்து கொண்டார்கள். எனக்கு சரியாகக் கேள்வி கேட்கத் தெரியவில்லை. நான் கேட்க‌ வருவதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

கே.ஆர்.மணி, மும்பை

அன்புள்ள மணி,

பக்கத்திலேயே ஒரு சங்கீதவித்வான் இருப்பார். அவரிடம் சென்று அந்த மளிகைக்கடைக்காரரைப் பற்றி கேட்டுப்பாருங்கள். ‘பாட்டெல்லாம் கேப்பாரோ?’ என்பார். ‘இல்லை ‘ என்றார். ‘சரிதான் காட்டுப்பயல்…காது இருந்தா போருமா?’ என்பார்.

சாதனை என்பது அவரவருக்கே. நாம் நம் வாழ்க்கையை ஒரு ஐம்பது அறுபது வயதில் திரும்பிப்பார்க்கும்போது நமக்குக் கிடைத்த வாழ்நாளை வீணடித்துவிட்டோம் என்ற எண்ணம் வராத வாழ்க்கையை வாழ்வதே நம் இலக்காக இருக்கவேண்டும். அந்த வாழ்க்கை பக்கத்துவீட்டுக்காரனின் கண்ணில் என்னவாகத் தெரிகிறது என்பதில் அர்த்தமே இல்லை.

மனிதர்களுக்கிடையே திறன்கள், ருசிகள் ஆகியவற்றில் பிறப்பிலேயே பெரும் இடைவெளி உள்ளது. அதை ஒட்டியே அவர் செய்யக்கூடியவையும் செய்யவேண்டியவையும் அமைகின்றன. மளிகைக்கடைக்காரர் அறிவார்ந்த விஷயங்களில் ஏன் ஈடுபடக்கூடாது என்பது ஊருயிர் ஏன் பறக்கக்கூடாது என்று கேட்பது போல. அதற்குச் சிறகு அளிக்கப்படவில்லை என்பதே பதில். கீதை சொல்வதை வைத்துப்பார்த்தால் அதற்கான தன்னறம் [சுவதர்மம்] ஊர்ந்து வாழ்வதே. ஆகவே ஊர்வதே இயல்பானது, அதுவே மேன்மையானது பறப்பன எல்லாம் அசட்டுத்தனமானவை என்றெல்லாம் அது ஒரு சுயபுரிதலை அல்லது சுயநியாயப்படுத்தலை உருவாக்கிக்கொண்டுமிருக்கும்.

ஒரு பறக்கும் உயிர் தன் இயல்பு பறப்பதே என உணராமல் ஊருயிரின் மதிப்பைத் தேட விழைந்து ஊர்ந்து செல்ல ஆரம்பித்தால் அது ஊருயிர்களாலேயே கேலிக்குரியதாகப் பார்க்கப்படும், ஏனென்றால் அதனால் ஒரு திறமையற்ற ஊருயிராகவே இருக்க முடியும். தன் இயல்பு எதுவோ அதற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுதலே தன்னறம். அதுவே நிறைவைத்தரும்.

முப்பதாண்டுக்காலம் வணிகத்தில் பெருவெற்றியை ஈட்டிவிட்டுத் தன் உள்ளம் கோரும் நிறைவு அதில் இல்லை என்பதனால் விவசாயத்துக்குத் திரும்பியவர்களை, சேவைக்கு வந்தவர்களை நாம் அறிவோம். அவர்களுடைய உண்மையான தளத்தை நோக்கி அவர்கள் வருகிறார்கள். அவர்களுக்கும் பக்கத்திலேயே ஒரு நம்பர் ஒன் மளிகைக்கடைக்காரர் ‘பணத்தையும் தொழிலையும் விட்டுட்டு இங்க வந்திருக்கான், லூசுப்பய’ என்று சொல்லக்கூடும்.

அகப்பட்ட வாழ்க்கையை முட்டிமோதி வாழ்ந்து முடிப்பவர்கள்தான் பலர். அதில் வெற்றிகொள்ளும்போது அவர்கள் அகங்காரம் கொண்டு எக்களிக்கிறார்கள். பொதுவாகவே கொஞ்சம் காசு சேர்ந்ததுமே அந்த எக்களிப்பு வந்துவிடுகிறது. நான் இவர்களிலேயே இருவகையினரைக் காண்கிறேன்.

ரயில்களில் முதல்வகுப்பு கூபேக்களில் வரும் புதுப்பணக்காரர்கள், நிறையப் பணமீட்டும் டாக்டர்கள் போன்ற தொழில்நிபுணர்கள் ஒருவகை. அதிலும் டாக்டர்களில் வசூல்ராஜாக்கள் பெரும்பாலும் முதல்தலைமுறையில்தான் பணத்தைப் பார்க்க ஆரம்பித்திருப்பார்கள். அவர்களுக்கென்று ஒரு தனி மொழியே உண்டு. இந்த ஆசாமிகள் சுயததும்பலால் நிறைந்திருப்பார்கள். அவர்களின் பேச்சில் சிரிப்பில் உடலசைவில் எல்லாமே ’காசு வச்சிருக்கேன்ல’ என்றபாவனை.

இவர்கள் ரயிலில் ஒருவரைச் சந்தித்ததுமே அவரது பொருளியல்நிலையை அறிய முயல்வார்கள். சமூகத்தொடர்புகளைக் கேட்பார்கள். அதன் பின்னர் தன்னுடைய பணம் , சமூகத்தொடர்புகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்ல ஆரம்பிப்பார்கள். ‘புதுசா ஸ்கோடா ஒண்ணு வாங்கினேன்…என்னமோ தெரியல, அப்பப்ப சிக்கிக்குது…’ ‘போனவாட்டி இப்டித்தான் ஒரு கான்ஃபரன்ஸுக்காக பாங்காக் போயிருந்தப்ப பாத்தீங்கன்னா…’

நட்சத்திர விடுதிகளில் சந்திக்க நேரும் நெடுங்காலப்பணக்காரர்கள் இரண்டாம் வகை. நாங்கள் தேவர்கள் என்ற பாவனை. மிதப்பாக இருப்பார்கள். ஒரேசமயம் அலட்சியமாகவும் அடக்கமாகவும் இருக்கவேண்டும். ஒரேசமயம் திமிராகவும் பண்பாகவும் இருக்கவேண்டும். ஒரேசமயம் நுண்ணிய ரசனையுடையவர்களாகத் தோற்றமளிக்கவும் வேண்டும், மிகமிக லௌகீகருசிகளையும் கொண்டிருக்கவேண்டும். இந்த முரணியக்கத்தை நெடுங்காலப்பழக்கம் மூலம் கற்றுத்தேர்ந்தவர்கள்.

இந்த இருசாராருக்குமே நரகம் என்ற ஒன்று உண்டு, அது அவர்களை விடப் பெரியவர்களைக் காணும் அனுபவம்தான். ஒருமுறை ஒரு நட்சத்திரவிடுதியில் இருவர் பேசிக்கொண்டிருக்க நான் அருகே அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன். இருவருமே ஏதோ தொழிலதிபர்பிள்ளைகள். சட்டென்று கமல்ஹாசன் அங்கே வந்தார். அந்தக் கூடமே அவரை நோக்கித் திரும்பியது. பெரும்புகழ் மட்டுமே அளிக்கும் கம்பீரமும் தோரணையுமாக கமல் எல்லாரிடமும் நாலைந்து சொற்கள் பேசி சென்றார்.

அவர் சென்றதுமே இவர்கள் இருவரும் முகம் சிவந்து ஏதோ ஜென்மவிரோதியைப்பற்றிப் பேசுவதுபோல அவரைப்பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். வசைகள், அவதூறுகள், இளக்காரங்கள், நக்கல்கள். எனக்குப் பரிதாபம் வந்து தொண்டையை அடைத்தது. எவ்வளவு எளிய மனிதர்கள். எவ்வளவு சாமானியர்கள். அவர்களுக்கான நரகம் அவர்கள் அருகே எப்போதுமே உள்ளது. அவர்கள் அந்த நரகத்தை ஒருகணமேனும் மறக்கமுடியாது. உங்கள் மளிகைக்கடைக்காரரின் அருகிலேயே அவரைவிடக் கொஞ்சம் அதிகமாகச் சம்பாதிக்கும் இன்னொரு வியாபாரி இருந்து இவரைக் கனவிலும் நினைவிலும் கொத்திப்பிடுங்கிக்கொண்டிருப்பார்.

ஆம், இவர்களின் இன்பம் என்பது ஒருவகை அகங்கார நிறைவு மட்டுமே. அந்த நிறைவு சில கணங்கள் கூட நீடிக்காதபடி அகங்காரம் அடிபட்டுக்கொண்டும் இருக்கும். உண்மையான இன்பமென்பது இயற்கையால் அளிக்கப்படவே இல்லை. புலனின்பங்கள் கிடைக்கலாம். ஆனால் மனிதன் விசித்திரமான பிராணி. பத்தாயிரம் வருடப் பண்பாடு அவனுள் உருவாக்கிய தன்னுணர்வு காரணமாக அவன் எந்தப் புலனின்பத்தையும் அகங்காரம் குறுக்கிடாமல் அனுபவிக்க முடியாது. நல்ல உணவு சாப்பிட்டால் மட்டும்போதாது, அது பிற எவருக்கும் கிடைக்காத உணவாகவும் இருக்கவேண்டும். இல்லையேல் அவன் புலன்கள் சுவையையே அறிவதில்லை.

இன்பங்களில் தலையாயது அறிதலின் இன்பம் என்கிறார் சாக்ரடீஸ். படைப்பாக்கத்தின் இன்பம் அதைவிடவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். அதைவிடவும் முழுமையான இன்பம் தன்னைச்சுற்றி முழுமையை உணர்ந்து அதில் தன்னை இழந்திருக்கும் சில தருணங்கள். அந்தத் தருணங்களை அடைவதற்கு இந்த மனிதர்களுக்கு அவர்கள் கைகளில் சுமந்தும் அக்குளில் இடுக்கியும் தலையில் சுருட்டியும் வைத்திருக்கும் சுமைகளே பெரும் தடைகளாகின்றன.

லௌகீகம் முக்கியமே அல்ல என்று நான் சொல்லமாட்டேன். அது பலசமயங்களில் ஏணிப்படி. அதிலேறிச் சென்றே அதற்கப்பாற்பட்ட விஷயங்களைத் தொடமுடியும். ஆனால் அதிலேயே மூழ்கியவர்கள் இழப்பவை பெரிது. ஒரே மரம்தான். சில உயிர்கள் அதன் இலைகளை உண்கின்றன. சில உயிர்கள் கனிகளை. சில உயிர்கள் மலர்களின் தேனை மட்டும். தேனுண்ணும் உயிர் இலையுண்ணும் உயிரிடம் சுவை பற்றி என்ன பேசமுடியும்? எதை விளக்கமுடியும்?

மரங்கள் செறிந்த இந்த மாபெரும் காட்டுக்கு மூவகை உயிர்களும் எப்படியோ தேவைப்படுகின்றன, அவ்வளவுதான்.

Saturday, 10 September 2011

யோஹான்: விஞ்ஞானத்தை வென்ற வீரன்: பாகம் இரண்டு

(மறுநாள் ஷூட்டிங் தொடர்கிறது)

கெளதம்: சார், இப்போ கதை உங்களுக்கு தெரியும். first நீங்களும் ஹீரோயினும் இருக்கற scenes shoot பண்ண போறோம், அப்பறம் வில்லன், நீங்க and ஹீரோயின், finally நீங்க and வில்லன். Let's go for the first shot. நேத்து சொன்ன மாதிரி ஹீரோயின் உங்க மடில இருக்காங்க..flashback start ஆகுது ..assistant come here..tell him the dialogues..

Assistant: கண்ணுல கோவம், பதட்டம். "i dont believe this..i just dont believe this.."

விஜய்:(கோவமாக) கெளதம் , என்ன இவரு நான் நடிகனானத நம்ப முடிலேன்னு சொல்றாரு..என்னை கிண்டல் பண்றாரு இவரு..ஒழுங்கா டயலாக் மட்டும் சொல்ல சொல்லுங்க..

கெளதம்: Sir, அது தான் டயலாக்.

விஜய்: தப்பா நெனைக்காதீங்க ..எனக்கு பஞ்ச் டயலாக் சொல்லி ஆரம்பிக்கறது தான் ராசி..அது மட்டும் இல்லாம, முதல் வார்த்தையே இங்கிலீஷ்ல இருந்தா, படம் பூரா இப்படி தான் இருக்கும்னு ரசிகர்கள் எழுந்து போய்டுவாங்க..முழுக்க தமிழ்ல பண்ணாலே இண்டர்வெலுக்கு அப்பறம் தியேட்டர் கூட்டறவங்க மட்டும் தான் பாக்கறாங்க..அப்படி தனியா பார்த்த ஒன்னு ரெண்டு பேரு ஜென்னி கண்டு செத்து போனதா சேதி வந்தது..வேணாம் இந்த ரிஸ்க்..

கெளதம்: (கடுப்புடன்)என்ன சார் நீங்க..இப்போ பஞ்ச் டயலாக் எழுத யாரை கூப்படறது? பேசாம இந்த டயலாக் சொல்லுங்க. பின்னாடி பாக்கலாம்.

விஜய்: நீங்க இப்படி சொல்வீங்க அப்படின்னு தான் நானே சில டயலாக் எழுதி கொண்டு வந்திருக்கேன்..

கெளதம்: (முகம் முழுக்க பீதியில்) என்ன சார் சொல்றீங்க? பஞ்ச் டயலாக் எழுதி இருக்கீங்களா?

விஜய்: வெவ்வேறு சிச்சுவேஷனுக்கு தகுந்த மாதிரி எழுதியிருக்கேன். சொல்றேன் கேளுங்க.

இது வந்து வில்லனோட ஆள் யார்டா யோஹான் அப்படின்னு தேடி வரும் போது பேசறதுக்காக.."யார் அடிச்சா பேகான் பட்ட கரப்பான் மாதிரி துடிக்கிறியோ அவன் தான் யோஹான்"

இது வந்து என்னை தாய்மார்கள் எல்லாம் புகழறா மாதிரி. ரோட்ல நான் நடந்து போறேன், ஒரு அம்மா தன் பிள்ளைக்கு என்னை காட்டி சோறு ஊட்டுது. அப்போ ஊருக்கு புதுசா வர ஒருத்தன் அந்த அம்மாகிட்ட கேக்கறான் ஏன் என்னை காமிச்சு சோறு ஊட்டறீங்கனு, அப்போ அந்த அம்மா சொல்லுது, "சந்திரனை காமிச்சு குழந்தைக்கு சோறு ஊட்டினது
அந்த காலம். யோஹானை காட்டி ஊட்டறது இந்த காலம். ஏன்னா இருட்டா இருக்கிற எங்க ஊருக்கு நிலா இந்த யோஹான் தானே." மின் வெட்டு பிரச்சனைய லேசா சுட்டிக் காட்றேன். எப்படி?

கிளைமாக்ஸ்ல இதே அம்மா வில்லன் கிட்ட சொல்லுது, "இந்தியா விட்ட ராக்கெட்டு சந்திரயான். அன்னை ஷோபா பெத்து போட்ட புல்லட்டு எங்க யோஹான்."

இன்னொரு எடத்துல பாருங்க, நானும் ஹீரோயினும் நாசா உள்ள நடந்து போறோம். அங்க இருக்கற ராக்கெட் எல்லாம் என்னை பாத்து பயந்து ஒளிஞ்சுகுது. அப்போ ஹீரோயின் கேக்கறாங்க, ஏன் எல்லா ராக்கெட்டும் உங்கள பாத்து ஒளியுதுன்னு.நான் என் ஸ்டைல்ல வாய்குள்ள நாக்க துழாவி மண்டைய ஆட்டிகிட்டே சிரிக்கிறேன்.

அப்போ ஒரு ராக்கெட் ஹீரோயின் முன்னாடி வந்து சொல்லுது, "நான் தான் இந்த தறுதலைகளுக்கு(மத்த ராக்கெட் எல்லாம் காமிச்சி) எல்லாம் "தலை". "எங்களுக்கு எல்லாம் பின்னாடி நெருப்பு வெச்சா தான் பறப்போம். ஆனா, யோஹான் பார்வை பட்டா அந்த நெருப்பே பத்தடி பின்னால போகும். அவரு பார்வை பட்டு நாங்க பஸ்பமாயிட கூடாது இல்ல..அதான்..

கிளைமாக்ஸ்ல ஹீரோயின காப்பாத்திட்டு வில்லன பார்த்து சொல்ற டயலாக் இது.
"நீ விடற ராக்கெட் செவ்வாய்ல போய் எறங்கும்னு உன்னால காரண்டி கொடுக்க முடியுமா? ஆனா, இவ செவ்வாய்ல இருந்து வந்து எறங்குற வார்த்தை எல்லாத்துலயும் என் பேரு இருக்கும்னு என்னால காரண்டி கொடுக்க முடியும். இப்போ சொல்லு, உன் ராக்கெட்டு பெரிசா இல்ல என் மார்க்கெட்டு பெரிசா?"

விஜய்: எப்படி சார் இருக்கு டயலாக் எல்லாம்?

கௌதம்: சார், The X-Files: Fight the Future, Hannibal, Catch me if you can, The Kingdom, The Punisher, Mississippi Burning, Face/Off எல்லாத்தையும் பார்த்து ஒரு மாதிரி இந்த கதைய ரெடி செஞ்சிருக்கேன்.கொஞ்சம் தயவு பண்ணுங்க.

(நொந்து போய்)சரி சார், மொதல்ல சாங்க்ஸ் ஷூட் பண்ணலாம். அப்பறம் We'll can the scenes. மொதல்ல ஒரு romantic number.உங்களுக்கும் ஹீரோயினுக்கும் லவ் ஆகற time. தாமரை lyrics. ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக். பாம்பே ஜெயஸ்ரீ and Krish பாடறாங்க. Assistant, read out the lyrics.

Assistant:
காற்றாக வந்தெனை இடை மறித்தான் என் பூமுகம் தன்னில் இதழ் பதித்தான்
என் குறுக்கின் குறுக்கு சந்துகளில் விரல்களால் வேகம் பிடித்தான்
நாணம் என் தேகம் மேல் படர என் பெண்மை சிதற..

விஜய்: நிறுத்துங்க..இதுல என்னை பத்தி எதுவுமே இல்லையே..என்ன சார் பாட்டு இது?

கௌதம்: இது காதல் பாட்டு. உங்கள பத்தி என்ன சொல்ல முடியும்?

விஜய்: நீங்க குருவி, சுறா இந்த படங்கள் எல்லாம் பார்க்கல போல இருக்கு? அதுல காதல் பாட்டுல கூட என்னை புகழ்வாங்க.

"இன்ப போரிலே நீ எந்தன் இளைய தளபதி, இதய ஊரிலே நீ தானே என்றும் அதிபதி, நீ தந்த வெப்பத்தில் தூங்கவில்லை, உன்னை யாரும் வெல்லத்தான் ஊரில் இல்லை இல்லை இல்லை".

எப்பேர்பட்ட காவிய வரிகள்? இதுல எல்லாம் காதல் இல்லையா? காதலோடு சேர்த்து என்னமா புகழ்ந்திருக்காங்க என்னை? இது மாதிரி எழுத முடியாதா?

கௌதம்: எழுதலாம் சார், ஆனா இந்த பாட்டுக்கு எதுக்கு அதெல்லாம்? இது ஒரு தலைவன் தலைவி காதல் வசப்பட்டு பாடற பாட்டு.

விஜய்: அதெல்லாம் வேண்டாம் சார். சரி, இதை விடுங்க. என் ஒபெனிங் சாங் என்ன ஆச்சு? அதைப் பத்தி நீங்க எதுவுமே சொல்லல.

கௌதம்: சார், நீங்க ஒரு middle aged detective.உங்களுக்கு என்ன சார் ஒபெனிங் சாங் வெக்கறது?

விஜய்: சார், ஒபெனிங் சாங் இல்லேனா நான் செத்துடுவேன். என் பையன வேற ஒபெனிங் சாங்ல நடிக்க வெக்கறேனு சொல்லியிருக்கேன். எதாச்சும் பண்ணுங்க சார்.

(கௌதம் எதுவும் சொல்லாமல் எழுந்து செல்கிறார். படப்பிடிப்பு தளத்தில் குழப்பம் நிலவுகிறது. கௌதம் எங்கு சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை. இரண்டு மணி நேரம் பொறுத்து பேரரசுடன் வருகிறார்)

கௌதம்: இவரு தான் இந்த படத்தை எடுக்க தகுதியான டைரக்டர். நீங்க இவர் கூடவே வேலை செய்யுங்க.

பேரரசு: தளபதி நான் வந்துட்டேன் இல்ல. கவலையே படாதீங்க. படத்தோட தலைப்ப மொதல்ல மாத்துவோம். "யோஹான்: விஞ்ஞானத்தை வென்ற வீரன்". கீழ கேப்ஷன், "கிரகம் தான் மனுஷன பிடிக்கும் இவன் வந்த கிரகதுக்கே கிரகம் பிடிக்கும்".

விஜய்: இதை தான் நான் எதிர்ப்பார்த்தேன்.

பேரரசு: கிளைமாக்ஸ்ல பறந்து வர ராக்கெட்டை கால்ல உதைச்சு வேற எடத்துக்கு அனுபறீங்க. ஹீரோயினை ஒளிச்சு வெச்சு இருக்கற ராக்கெட் கிட்ட பத்து நிமிஷம் பஞ்ச் டயலாக் பேசி திருத்தறீங்க. வில்லன் விஞ்ஞானிய அடிச்சு அவன் அவங்கம்மா கிட்ட குடிச்ச பால காக்க வெக்கறீங்க. அந்த பால குடம் குடமா எடுத்து உங்க படத்துக்கு அபிஷேகம் பண்றாங்க மக்கள் எல்லாம். அப்படின்னு போட்டு அதோட படத்தை முடிக்கறோம்.

(விஜய்யும் பேரரசும் கட்டித் தழுவிக் கொள்கின்றனர். கௌதம் மூர்ச்சையாகிறார்)

Wednesday, 7 September 2011

விட்டல் ருக்மிணி சம்ஸ்தான்

மாயவரம் - கும்பகோணம் சாலையில் திருவிடைமருதூர் அருகில் அமைந்துள்ளது கோவிந்தபுரம். தக்ஷிண பண்டரிபுரம் என்று பெயரும் உண்டு. இங்கு அமைக்கப்பட்டுள்ளது விட்டல் ருக்மிணி சமஸ்தான் என்னும் மிகப்பெரிய பாண்டுரங்கன் திருக்கோயில். நேற்று இங்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன். அற்புதமான கலையழகுடன் கட்டப்பட்டுள்ள கோவில். கோவிலில் உண்டியல் இல்லை. பாண்டுரங்கனுக்கும் ருக்மிணி தாயாருக்கும் அர்ச்சனை, பூஜை எல்லாம் கிடையாது. துளசி மட்டும் வாங்கிச் சென்று கொடுக்கலாம். ரங்கன் மற்றும் தாயாரின் பாதம் தொட்டு வேண்டிக்கொள்ளும் படி பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சுவர் மற்றும் கதவேங்கும் ஹரிதாஸ் கிரி மற்றும் ஞானனந்தரின் சிற்பங்கள். பக்கத்தில் பசுக்களை பராமரிக்க கோசாலை. சற்றுத் தள்ளி போதேந்த்றாள் மடத்தில் பித்ரு காரியங்கள் செய்ய தேவையான வசதிகள்.

நேற்று வார நாள் என்பதால் கூட்டம் அறவே இல்லை. சனி, ஞாயிறு தினங்களில் கூட்டம் அள்ளும் என்றார்கள். பாண்டுரங்கனை தரிசித்து விட்டு கீழே இறங்கி வந்தவுடன் இளஞ்சூட்டில் நிறைய காய்கறிகளுடன் சாம்பார் சாதமும் தொட்டுக் கொள்ள அரை வேக்காட்டில் சுண்டலும் தந்தார்கள். இருந்த பசிக்கு அந்த காம்பினேஷன் நன்றாகவே இருந்தது. விஜய் டிவி புகழ் விட்டல் தாஸ் மகாராஜ் தான் இந்த கோயிலை ஸ்தாபித்துள்ளார். கோவிலுக்கு பிரைவேட் செக்யூரிட்டி சர்வீஸ், போட்டோ எடுக்க எங்குமே அனுமதி இல்லை. கோசாலை, பக்தர்கள் வந்து தங்கி சேவை செய்ய பெரிய தங்குமிடம், உட்கார்ந்து பஜனை செய்ய இடம் என்று பல ஏக்கரில் பாண்டுரங்கன் விரிந்து கொண்டிருக்கிறார். இன்னும் கொஞ்ச நாளில் இந்த இடத்தை சுற்றியுள்ள நிலங்களின் விலை விண்ணை எட்டும். நான் திரும்பி வரும் வழியில் பல இடங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்படுவதை கண்டேன். ஆனால், அவசியம் பார்க்க வேண்டிய ஸ்தலம். நேரம் கிடைத்தால் சென்று வாருங்கள்.

Saturday, 3 September 2011

தஞ்சாவூர் மெஸ்

"யோஹான்: விஞ்ஞானத்தை வென்ற வீரன்" பகுதி இரண்டு எழுத கொஞ்சம் நேரம் எடுப்பதால் அதற்கிடையே ஒரு interim பதிவு. மேற்கு மாம்பலம் வாழ் நண்பர்கள் பலருக்கும் தஞ்சாவூர் மெஸ் பற்றி தெரிந்திருக்கும். தி.நகர் பேருந்து நிலையம் தாண்டி மாட்லி சப்வே இறங்கி ஏறி காசி விஸ்வநாதர் கோயில் அருகில் இருக்கும் அந்த சைக்கிள் மட்டுமே செல்ல கூடிய சந்தை தாண்டி வந்து இடது புறம் சென்றால் வலது கை பக்கம் தஞ்சாவூர் மெஸ்.

தொண்ணூறுகளின் மத்யமத்தில் ஆரம்பிக்கப்பட்டது என்று நினைக்கிறேன். மேற்கு மாம்பலம் ஸ்டேஷன் ரோட்டில் முதலில் ஸ்தாபித்தார்கள். பின்னர் குப்பையா செட்டி தெருவில் இருந்ததாக ஞாபகம். ஆரம்பித்த புதிதில் புல் மீல்ஸ்(unlimited) ஏழு ரூபாய். இப்போது நாற்பது ரூபாய். பல வருடங்களுக்கு பிறகு நேற்று மதிய உணவிற்காக தாம்பரத்தில் இருந்து கிளம்பி சென்றேன். பீன்ஸ் பருப்புசிலி, முருங்கை சாம்பார், வெள்ளரி கூடு, பூசணி மோர்குழம்பு, ரசம், அப்பளம் என்று அட்டகாசமான சாப்பாடு.உணவின் ருசியை காட்டிலும் அங்குள்ளவர் கேட்டு பரிமாறும் விதமே அதன் வெற்றிக்கு காரணம் என்று நினைக்கிறேன்.

தஞ்சாவூர் மெஸ் தொடங்குவதற்கு முன் அறுசுவை அரசின் தம்பி ஜெயராமன் மாம்பலம் ஜுபிலி ரோடு அருகே ஞானாம்பிகா மெஸ் நடத்திக் கொண்டிருந்தார். அதுவும் அந்த நாளில் சக்கை போடு போட்டது. என் தாயார் இறந்து பின் சில வருடங்கள் என் தந்தையுடன் நான் அங்கு தான் உணவருந்த செல்வேன். ஞாயிறு காலை உருளை பிரை, அவியல். பத்தரை மணிக்கெல்லாம் சாப்பாடு தயாராகி விடும். ஜெயராமன் மாமா உடம்பெல்லாம் விபூதி பூசி மெஸ் முழுதும் சாம்பிராணி மணக்க வலம் வருவார். ஹரிதாஸ் கிரி அவர்களின் சம்பிரதாய பஜனை பாடல்கள் மெஸ்ஸில் ஒலித்துக்கொண்டிருக்கும்.இன்றும் மறக்க முடியவில்லை அந்த நாட்களை. தாயில்லா பிள்ளை என்று எனக்கு ஸ்பெஷல் கவனிப்பு உண்டு. சில வருடங்களுக்கு பின் ஞானாம்பிகா மூடப்பட்டது. இப்போது அவர் பிள்ளைகள் டிசம்பர் சீசனில் மட்டும் நாரத கான சபா, வாணி மஹால் போன்ற சபாக்களில் மாலை கான்டீன் நடத்துகிறார்கள். அறுசுவை அரசின் மற்றொரு தம்பி மேற்கு மாம்பலத்திலேயே மீனாம்பிகா கேட்டரிங் என்று மெஸ் நடத்தினார். ஆனால், ஞானாம்பிகாவுடன் போட்டிப்போட முடியாமல் புறமுதுகு காட்ட வேண்டியதாயிற்று.

ஆக, கடந்த இருபது வருடங்களாக பல தொழில் போட்டிகளுக்கிடையே வெற்றிகரமாக நடத்தப்படுகிறது தஞ்சாவூர் மெஸ். இவர்களுக்கும் ஸ்பெஷல் உணவு வகைகள் உண்டு. குறிப்பிட்டு சொல்லக் கூடியவை கத்திரிக்காய் ரசவாங்கி மற்றும் இட்லி/தோசைக்கு தொட்டுக்கொள்ள தரப்படும் கடப்பா. இந்தப் பதிவை தஞ்சாவூர் மெஸ் பற்றி மட்டுமே எழுத வேண்டும் என்று நான் நினைத்த போதிலும் மாம்பலம் என்று வரும் போது சில பெயர் போன உணவகங்களை குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

தம்பையா ரோட்டில் உள்ள வெங்கட்ரமணா போளி ஸ்டால். இன்று சென்னை முழுதும் போளி கடைகள் புற்றீசல் போல முளைத்து விட்டன. ஆனாலும், போளி என்றால் அது மாம்பலம் வெங்கட்ரமணா போளி ஸ்டால் தான். ரஜினி ஊரில் இருந்தால் ஞாயிறு இங்கிருந்து அவர் வீட்டிற்கு போளி செல்லும். இது கதையல்ல நிஜம். தினமலரில் வந்த செய்தி. பருப்பு போளி, தேங்காய் போளி இரண்டும் உண்டு. நாக்கில் அமிர்தமாய் கரையும். ஒரு நாளாவது மாலை நான்கு மணிக்கு சென்று உருளைகிழங்கு போண்டவுடன் இரண்டு போளி சாப்பிட முடியாதவர்கள் சபிக்கப் பட்டவர்கள். உருளைக்கிழங்கு போண்டாவில் எலுமிச்சை சாறு பிழிந்து ஒரு மாதிரி வித்தியாசமாக செய்திருப்பார்கள். எண்பதுகளின் இறுதியில் ஒரு இருட்டு இடத்தில் நடத்தப்பட்ட இந்த கடை இன்று கூட்ட நெரிசலில் திணறுகிறது

தம்பையா ரோடு ஆரம்பத்தில் இருக்கும் மோகன் விரைவு உணவு விடுதி இரவு பனிரெண்டு வரை திறந்திருக்கும். இங்கு கிடைக்கும் மசாலா பால் பிரபலம். அசோக் நகரில் இயங்கும் மாட்டாஸ் விரைவு உணவு விடுதியும் மிகப் பிரபலம். போஸ்டல் காலனி பேருந்து நிலையம் அருகிருக்கும் ப்ரிஜ்வாசி கடை சமோசா, அதே தம்பையா ரோடு இறுதியில் இருக்கும் Deluxe டீ கடை சமோசா/சுண்டல், Deluxe எதிரே இருக்கும் விநாயகா உணவு விடுதியின் இரவு நேர சப்பாத்தி/சப்ஜி, Deluxe பின்புறம் உள்ள காமேஸ்வரி உணவகத்தின் மதிய மற்றும் இரவு நேர கலந்த சாதங்கள் ஆகியவை மாம்பலம் வாழ் குடும்பங்களின் ஒரு அங்கம். வீட்டில் சோற்றை மட்டும் வைத்தால். ஐந்து ரூபாய்க்கு சாம்பார், ஐந்து ரூபாய்க்கு ரசம், கூட்டு என்று வீட்டிலிருந்து ஒரு சம்படம் எடுத்துச் சென்று வாங்கிக் கொண்டு வந்துவிடலாம். மாம்பலம், மயிலாப்பூர் போன்ற இடங்களில் எல்லாம் வீடு அமைவது போன ஜென்மத்து புண்ணியம்.

Saturday, 27 August 2011

யோஹான்: விஞ்ஞானத்தை வென்ற வீரன்: பாகம் ஒன்று

நண்பர் ஒருவர்(நடிகர் விஜய்யின் ரசிகர்) ஓரிரு நாட்களுக்கு முன் சாட் செய்கையில் "பாஸ், பாத்தீங்க இல்ல, எப்படி ஓட்டுவீங்க எங்க தளபதிய, கெளதம் மேனனே எங்க ஆளை வெச்சு படம் பண்றாரு. கமல், சூர்யா அப்பறம் விஜய். இன்னொரு வேட்டையாடு விளையாடு தான் "யோஹான் - அத்தியாயம் ஒன்று". விஜய் பயங்கர உலக லெவல் உளவாளியாம் படத்துல. ஐரோப்பா, அமெரிக்கா, சீனா எல்லா எடத்துலயும் ஷூட்டிங் பண்றாங்களாம் " என்றார்.

நமக்கு தான் "அந்த" கொழுப்பு கொஞ்சம் ஜாஸ்தியாச்சே, "ஆமா பாஸ், த்ரிஷா கற்பு காணாம போய்டுதாம். அதை தேடி விஜய் நீங்க சொன்ன நாட்டுக்கெல்லாம் போய் கடைசில இந்தியா வந்து கண்டு பிடிக்கறார்னு நான் கூட படிச்சேன்" என்றேன். நண்பருக்கு கோபம் வந்து விட்டது. உடனே கமலை போட்டுத் தாக்க ஆரம்பித்தார்."இந்தியாவிலேயே ராம் லீலா மைதானத்துக்கு போய் அன்னா ஹசாரேவை ஆமோதிச்ச ஒரே நடிகர் விஜய் தான். கமல் எல்லாம் என்ன பண்றாரு? ஒரு அறிக்கையாவது விட்டாரா லோக்பால் பத்தி? அவனை எல்லாம் ரசிக்கறீங்க..என்ன மனுஷன் நீயெல்லாம்" என்றார். இதற்கு மேல் பேசினால் மம்மி பாவம், டாடி பாவம் நிலை வரும் என்பதால் வேறு விஷயங்கள் பேச ஆரம்பித்தேன். ஆனால், நண்பர் சொன்ன யோஹான் விஷயம் மட்டும் உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. இதையே வைத்து கெளதம்-விஜய் ஷூட்டிங் செய்யும் போது உரையாடுவது போல் ஒரு கற்பனை பதிவு போட்டால் என்ன என்று தோன்றியது. விளைவு, கீழே நீங்கள் படிக்கவிருக்கும் பகுதி.

ஒரு வழியாக விஜய்க்கு Knot எனப்படும் ஒரு வரிக்கதை(உதாரணமாக, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் Knot இது தான். திரைத்துறையில் வெற்றிக்கு போராடும் இளைஞன் ஒருவன் வேறு மதத்தை சேர்ந்த பெண் மீது காதல் வசப்படுகிறான். காதலுக்கும் வெற்றிக்கும் இடையில் அவன் சந்திக்கும் சோதனைகள் என்ன? ) சொல்லி சம்மதம் பெற்று விட்டார் கெளதம். இன்று படப்பிடிப்பு இனிதே ஆரம்பம்.

கெளதம்: Sir, Welcome to the first day shoot of Yohan. It's going to be a milestone in our careers. I am all thrilled and excited about working with you and i am sure you will have a great time working with me. Let me explain you the first shot. The film starts in flashback mode. You are sitting in front of the heroine's deadbody with fire in your eyes thinking about the villain(விஜய் வழக்கம் போல் தன் பாணியில் கையை தூக்கி, ஒரு நிமிஷம், ஒரு நிமிஷம், ஒரு நிமிஷம்..நிறுத்துங்க)

கெளதம்: என்ன சார்?

விஜய்: முதல் நாள் ஷூட் இப்படியொரு சீனா? நானும் ஹீரோயினும் வில்லன் பாடி முன்னாடி..அதுவும் வில்லன் கண்ணை நொண்டி நெருப்புல போடற மாதிரி..நல்லா இல்ல சார்..வேற எதாவது சீன் எடுப்போம்..மொதல்ல ஆரம்பிச்ச போ அந்த மைல்கல் சீன் ஒன்னு சொன்னீங்களே..கில்லி "அர்ஜுனரு வில்லு, அரிச்சந்திரன் சொல்லு" அந்த பாட்டு மாதிரி எதாவது ஹைவே சீனா..அது பண்ணலாம்..

கெளதம்: சார், நான் கதை already எழுதிட்டேன். நீங்க ஏன் தனியா create பண்றீங்க?

விஜய்: அப்போ மொதல்ல கதைய ஒரு பத்து நிமிஷத்துல முழுக்க சொல்லுங்க..நான் கொஞ்சம் என் காரெக்டரை உள்ள வாங்கிக்கறேன். நடிக்க வசதியா இருக்கும்.

கெளதம்: (மனதிற்குள்) என்னத்த உள்ள வாங்க போறீங்க..ஒரே எக்ஸ்ப்ரஷன் தான் எல்லா படத்துலயும்..சரி சார், கதை சொல்றேன்..நல்ல கேட்டுக்குங்க..

மூணு முறை கல்யாணம் ஆகி விவாகரத்தான CBI ஆபிசர் நீங்க..நியூயார்க் நகர்ல காணாம போன ஒரு பொண்ணு கேஸ் விஷயமா உங்கள சென்னை போலீஸ் contact பண்றாங்க..உங்கள நியூயார்க் போய் பல் துலக்க சொல்றாங்க. U know what i mean..Enquiry..அந்த பொண்ணு விஷயமா நீங்க ந்யுயார்க் போறீங்க..

விஜய்: அது துப்பு துலக்கறது..

கெளதம்: இதுக்கு தான் தமிழ் தெரிஞ்சவங்களோட தமிழ் படம் பண்றதே இல்ல..பெரிய இம்சை..yeah..you are right..துப்பி தொலைக்கறது.

விஜய்:ஒரு நிமிஷம் சார், நியூயார்க்ல காணாம போன பொண்ணுக்கு எதுக்கு சார் சென்னை போலீஸ் என்னை தொடர்பு..லாஜிக் இல்லையே..

கெளதம்:(மனதிற்குள்)பில்டிங் மேலேந்து எம்பி பறக்கற ஹெலிகாப்டர பிடிக்கற மாதிரி சீன் வெக்கற டைரக்டர் கிட்ட என்னிக்காவது லாஜிக் கேட்டிருப்பாரா இவரு..எல்லாம் நேரம்..
சார், அந்த பொண்ணு தமிழ் பொண்ணு..அதான் சென்னை போலீஸ் உங்க கிட்ட பேசறாங்க..

விஜய்: இப்போ லாஜிக் கரெக்ட்..மேல சொல்லுங்க..இருங்க இருங்க..மூணு முறை கல்யாணம் ஆகி விவாகரத்து..அது எதுக்கு..

கெளதம்: மூணு கல்யாணம் பண்ணி divorce ஆகி பெண்களே பிடிக்காம இருக்கீங்க..இப்போ நீங்க ந்யுயார்க்ல தேட போற பொண்ணு தான் ஹீரோயின்..அவ மேல உங்களுக்கு லவ் வருது..கிளைமாக்ஸ்ல I want to make love to you அப்படின்னு சொல்றீங்க..அது தான் ரியல் லவ். ஆடியன்ஸ் பீல் பண்ண போற சீன்..அதுக்கு தான் இந்த பில்டப்..நீங்க சென்னைல flight ஏறி US போறதுக்குள்ள உங்க மூணு கல்யாணம் and divorce thru flashback காட்றோம் ..

விஜய்: எனக்குன்னு லேடி ஆடியன்ஸ் இருக்காங்க..மூணு கல்யாணம் ஆகி விவாகரத்தான மாதிரி காட்டின படம் பி, சி சென்டர்ல அடி வாங்கும்..வேணும்னா மூணு காதல் தோல்வி வெச்சுக்கலாம்..அந்த பொண்ணுங்க என்னை ஏமாத்தினா மாதிரி..
எனக்கு படிப்பறிவு இல்ல..அதனால என்னை காதலிக்கற மாதிரி நடிச்சு ஏமாத்தறாங்க.."பூவே உனக்காக" படத்துல சொன்ன வசனத்தை வேணும்னா இங்க வெச்சுக்கலாம்.."படிப்பை பார்த்து வரதுக்கு காதல் ஒன்னும் டிகிரி இல்ல..அது ஒரு பீலிங்.."

கெளதம்:(கடுப்புடன்)சார்.. சார்.. சார்.. படிக்காம எப்படி சார் CBI ஆபிசர் ஆனீங்க..ஒரு லாஜிக் வேண்டாமா..ஆடியன்ஸ் எப்படி ஒத்துப்பாங்க..

விஜய்:அதெல்லாம் யோசிச்சு இருந்தா நான் இத்தனை வருஷம் இந்த துறையில இருந்திருக்கவே முடியாது..

கெளதம்: இருந்தாலும் என் படத்துக்குன்னு ஒரு ஆடியன்ஸ் இருக்காங்க சார்..என்னை பேரரசு ஆகிடாதீங்க..நான் கதைய சொல்லி முடிக்கிறேன்..பேசாம கேளுங்க..So, நியூயார்க் போறீங்க..அங்க தான் வில்லனும் இருக்காரு..அவரு Florida Kennedy Space Center(NASA) பெரிய scientist..ஆனா Psycho..இன்னும் ரெண்டு மாசத்துல Mars exploration விஷயமா launch பண்ண போற ராக்கெட்ல ஹீரோயின ஒளிச்சு வெச்சு இருக்காரு..நீங்க அதை கண்டுபிடிக்கறீங்க..

விஜய்: நல்லா இருக்கு கெளதம்..இந்த நிமிஷத்துலேந்து நான் ஒரு விஞ்ஞானி..ஷூட் போலாம்..
(ஏற்கனவே கதை சொல்லி அரை நாள் ஓடிவிட்ட சோகத்தில் கெளதம், படபிடிப்பை மறுநாளைக்கு தள்ளி வைக்கிறார்.)

-தொடரும்

Sunday, 14 August 2011

டப்பிங் படங்கள்

டப்பிங் படங்கள் என்னை பொதுவாகவே வியப்பில் ஆழ்த்துபவை. குறிப்பாக டப்பிங் பட பாடல்கள். ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்கள் தெலுங்கிலும் பிரபலம். இவர்களின் படங்கள் தமிழில் தயாராகும் போதே தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்படுகின்றன. இப்படி மொழிமாற்றம் செய்யப்படும் போது அந்த மொழியின் கவிஞர்கள் பாடலின் கருத்தை உள்வாங்கி அதற்கேற்ற வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டும்.

தெலுங்கிலிருந்தோ அல்லது மலையாளத்திலிருந்தோ தமிழுக்கு வரும் படங்களுக்கும் இதே சவால் உண்டு. ஆனால், அப்படி வரும் படங்களின் எண்ணிக்கை குறைவு. எத்தனை சிரஞ்சீவி, நாகர்ஜுனா, மம்முட்டி, மோகன்லால் படங்கள் நமக்கு தெரியும்? ஆகையால் தமிழிலிருந்து மற்ற மொழிகளுக்கு மாற்றம் செய்யப்படும் படங்களை பற்றி மட்டும் இங்கே பேசுகிறேன்.

டப்பிங் படங்களுக்கு வசனம் மற்றும் பாடல்கள் எழுதும் போது ஏற்படும் மிகப்பெரிய சவால் என்று நான் நினைப்பது காட்சிக்கு ஏற்றபடி அமைக்கும் விதம். உதாரணமாக, "உன் கால் கொலுசொலிகள் போதுமடி, பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி" என்ற வரிகளுக்கு இயக்குனர் ஷங்கர் ரஜினி தன் தொடையை தட்டி ஏற்படும் அந்த புழுதியை தவிடுபொடி என்று காட்டியிருப்பார். சிவாஜி மற்ற மொழிகளுக்கு டப் செய்யப்பட்ட போது அந்த மொழி கவிஞர்கள் எப்படி இதைக் கையாண்டிருப்பார்கள் என்று தெரிந்து கொள்ள விழைகிறேன்.

அதே போல் நீ, நான், மழை, முத்தம், இசை, காற்று, இடை, நடை போன்ற சொற்களை மற்ற மொழிகளில் கையாள்வது சுலபம். இப்போது புதியமுகம் படத்தின் இந்த பாடலை எடுத்துக்கொள்வோம்:

விடிகாலை விண்ணழகு, விடியும் வரை பெண்ணழகு(வைரமுத்து இதையெழுதி சர்ச்சையில் சிக்கிக் கொண்டது ஒரு கதை)
நெல்லுக்கு நாற்றழகு, தென்னைக்கு கீற்றழகு
ஊருக்கு ஆறழகு, ஊர்வலத்தில் தேரழகு
தமிழுக்கு "ழ" அழகு, தலைவிக்கு நானழகு

இந்தப்படம் டப் செய்யப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால், இந்த வரிகளை டப் செய்யப்படும் மொழிக்கு ஏற்றவாறு மாற்றுவது சுலபமே இல்லை. வைரமுத்து அவர்களிடம் சமீபத்தில் ஒரு பேட்டியின் போது "ராவணன்" பட பாடல்கள் குறித்து கேட்கப்பட்டது. "உசிரே போகுது" பாடலுக்கு குல்சார் ஹிந்தியில் உபயோகித்துள்ள வார்த்தைகள் தமிழின் உக்கிரத்தை வெளிக்கொண்டு வரவில்லை என்றார் பேட்டி கண்டவர். வைரமுத்து சொன்னார், "குல்சார் என்னை விட சிறந்த கவிஞர், என்னை விட மூத்தவர். ஆனால், தமிழ் மொழி ஹிந்தியை காட்டிலும் வீரியம் கொண்டது. மொழியின் பலம் காரணமாக பாடல் சிறப்பாக அமைகிறது என்றார்". எவ்வளவு உண்மை.

ரீமேக் என்று வரும் போது இந்த பிரச்சனை இல்லை.இயக்குனர் மூல படத்திற்கு மாற்றங்கள் செய்வார். காட்சி படமாகும் விதம் மாற்றம் செய்யப்படும். அது குறித்து பாடலாசிரியரிடம் சொல்லப்படும். அவர் அதற்கு ஏற்ற மாதிரி பாடல் தர, காட்சி அதற்க்கேற்றவாறு ஒளிப்பதிவு செய்யப்படும்.

ஒரு தமிழனாக தமிழின் செழுமையை பறைசாற்ற எழுதவில்லை இந்த பதிவை. மற்ற மொழியினருக்கும் தங்கள் மொழி பாடல்கள் தமிழாக்கம் செய்யப்பட்ட போது அவை தங்கள் தாய்மொழியில் தந்த உணர்வை தரவில்லை என்ற குறையிருக்கலாம். இதை படிக்கும் தெலுங்கு அல்லது வேறு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே.

Monday, 8 August 2011

ஆயிரத்தொரு விஷயங்கள்

1001beforeyoudie.com என்ற வலைதளத்தை எதேச்சையாக பார்க்க நேர்ந்தது. நீங்கள் இறப்பதற்குள் பார்க்க வேண்டிய ஆயிரத்தொரு படங்கள், படிக்க வேண்டிய ஆயிரத்தொரு புத்தகங்கள், பார்க்க வேண்டிய ஆயிரத்தொரு ஓவியங்கள், கேட்க வேண்டிய ஆயிரத்தொரு பாடல்கள் என்று தொகுத்திருக்கிறார்கள்.

இந்திய பெயர்கள் எவ்வளவு தேறுகின்றன என்று தேடிப் பார்த்தேன். புத்தகங்களில் 28, படங்களில் 3, இசைத்தட்டுகள் நான்கு, ஓவியங்கள் 15, நீங்கள் வளர்வதற்குள் படிக்க வேண்டிய ஆயிரத்தொரு குழந்தைகளுக்கான புத்தகங்கள் பகுதியில் 5.

Sunday, 7 August 2011

கோவிலில் திருமணம் செய்ய ஜாதி சான்றிதழ் தேவையா?

இன்று பெங்களூர் அல்சூரில் உள்ள சோமேஸ்வரர் கோவிலுக்கு சென்றபோது கண்ணில் பட்ட போர்டு

இங்கு திருமணம் செய்ய விதிமுறைகள்

1.Sub Registrar அளித்த திருமண சான்றிதழ் இருக்க வேண்டும்.
2.வயது சான்றிதழ் வேண்டும் , முகவரி தொடர்பான ஆவணங்கள் வேண்டும்.
3.மணமகள் மணமகன் ஜாதி சான்றிதழ் வேண்டும்
4.திருமணம் பற்றி கோவில் அதிகாரிகளுடன் பேச வரும்போது மணமகன் / மணமகள் பெற்றோர் உடன் வரவேண்டும்.

மற்றும் சில விதிகள்..

முதல் இரண்டு விஷயங்களில் பிரச்சினையில்லை .. மூன்றாவது / நான்காவதுதான் இடிக்கிறது..

ஏன் ஜாதி சான்றிதழ் வேண்டும் ? வெவ்வேறு ஜாதி என்றால் கல்யாணம் செய்து வைக்க மாட்டார்களா? அதை வெளிப்படையாக எழுதவில்லை, ஒருவேளை வெவ்வேறு ஜாதி சான்றிதழோடு போனால் வாய்மொழியாக
மறுக்கலாம். கலப்பு திருமணம் சட்ட விரோதமா? கல்யாணம் செய்ய வயது வரம்புதான் தேவை, ஜாதி சான்றிதழ் எதற்கு?

நான்காவது இன்னும் மோசம் , பெற்றோரை எதிர்த்து நடக்கும் திருமணத்திற்கு இந்த கோவிலில் இடமில்லை, இதுதான் மறைமுகமாக சொல்வது (வேண்டுமானால் யாரையாவது பெற்றோராக நடிக்க வைக்கலாம்,ஆனால் பெற்றோருக்கும் அடையாள அட்டை கேட்பார்களா தெரியவில்லை).

ஆக பெற்றோர் எதிர்த்து நடக்கும் காதல் திருமணத்திற்கு இங்கே இடமில்லை, கலப்பு திருமணத்திற்கும் மறைமுகமாக இடமில்லை.

இது இந்த கோவிலில் மட்டும்தான இல்லை கர்நாடகாவில் உள்ள எல்லா கோவில்களிலுமா என்று தெரியவில்லை ..மேலும் இது தனியார் கோவிலா இல்லை அரசாங்க கோவிலா என்றும் தெரியவில்லை.
தமிழகத்தில் இது மாதிரி விதிகள் இருக்கிறதா தெரியவில்லை.

அங்கே நிற்கவே அருவருப்பாக இருந்தது.

Saturday, 6 August 2011

புறநகர் ரயில் பயணம்

அலுவல் காரணமாக சில வாரங்களுக்கு முன் கிண்டி வரை செல்ல வேண்டி இருந்தது. காரை எடுத்து செல்லலாம் என்றால் மேடவாக்கத்தில் டிராபிக் ஜாம். சரியென்று காரை வீட்டில் பார்க் செய்துவிட்டு பஸ் பிடித்து தாம்பரம் ரயில்நிலையம் சென்றேன். லேப்டாப் எல்லாம் தோளில் வைத்துக்கொண்டு தடம் எண் T51 ஏறிய என்னை பேருந்தே விநோதமாக பார்த்தது. எக்ஸ்போர்ட் பிகர் ஒன்று சாமி படத்தின் "இவன்தானா இவன்தானா" மனதில் ஓட இரண்டு முறை லுக் விட்டது. நீ என்ன பெரிய மன்மதனா என்று பின்னூட்டம் எல்லாம் போடக் கூடாது. அது ரேஞ்சுக்கு நான் சுமாராக இருந்தேன்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு எடுக்க நின்ற கூட்டத்தை பார்த்தவுடன் மயக்கமே வந்துவிட்டது. ஒரு வழியாக பத்து நிமிடம் வரிசையில் நின்று கவுண்டர் அருகே சென்றவுடன் "இந்த கூட்டம் தானே ரயிலிலும் வரும், பேசாமல் முதல் வகுப்பில் செல்வோம், அதில் கூட்ட நெரிசல் இருக்காது" என்றெண்ணி, எழுபத்தாறு ரூபாய் கொடுத்து தாம்பரம்-கிண்டி தடத்திற்கு பயணச்சீட்டு வாங்கிக் கொண்டேன். கவனிக்கவும், இரண்டாம் வகுப்பு தாம்பரம்-கிண்டி பயணச்சீட்டு ஆறே ரூபாய்.

மூன்று வருடங்கள் கல்லூரி முடித்த பின் புறநகர் ரயில் பயணம் அரிதாயிற்று. வெகு நாட்களுக்கு பின் இந்த பயணம். முதல் வகுப்பு பெட்டியில் ஏறி அமர்ந்தேன். முதல் வகுப்பு என்றால் இப்படி தான் இருக்க வேண்டும். ஒரு பக்கம் வெண்டார்ஸ் பெட்டி. இன்னொரு புறம் பெண்கள் பெட்டி. ஒன்றரை வயது கைக்குழந்தை கூட எந்த பக்கத்திலிருந்து வேண்டுமானாலும் முதல் வகுப்பில் குதித்து டிக்கெட் பரிசோதகர் வருவதை பார்த்தவுடன் மீண்டும் தன் பெட்டிக்கே செல்லலாம்.அப்படியொரு வசதி.முதல் வகுப்புக்கு என்ன சிறப்பு வசதி செய்யலாம் என்று யோசித்து முடிவாக முன்னால் பெண்கள் பெட்டியாவது வைத்து கண்களை குளிர்விக்கலாம் என்பது தென்னக ரயில்வே நிர்வாகத்தின் எண்ணம் போலும்.

என் வரிசையில் ஜன்னலோரம் இருந்தவர் "பொன்னியின் செல்வன்" படித்துக்கொண்டிருந்தார். சானடோரியத்தில் கொஞ்சம் கூட்டம் ஏறியது. நகர்ப்புற கணினி அலுவலகங்களில் பணியில் உள்ள சிலர் தங்கள் மடிக்கணினி சகிதம் ஏறி கிடைத்த இடங்களில் அமர்ந்து காதில் ஐபாட் பொருத்திக் கொண்டு மடிக்கணினியை திறந்து தங்கள் உலகத்தில் ஆழ்ந்தனர். பத்து வருடம் முன் முதல் வகுப்பில் இதையெல்லாம் பார்த்திருக்க முடியாது. இவர்கள் எல்லாம் அமெரிக்க ரிடர்னாக இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன். Sanjose-Sanfrancisco, Fremont போன்ற வழித்தடங்களில் பெரும்பாலானோர் இப்படி பயணம் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். அந்த பாதிப்பு போலும்.கக்கூசில் உட்கார்ந்தால் கூட ஐபாடுடன் அமர்ந்தால் தான் இப்போது பெருமை. ஔவை இன்று இருந்தால்,"ஐபாட் இல்லா ஊரில் ஐந்து நிமிடம் கூட இருக்காதே" என்று புது ஆத்திச்சூடி எழுதி இருப்பாள்.

ரயில்வே துறையின் கடைநிலை ஊழியருக்கு கூட இந்த முதல் வகுப்பு பிரயாண சலுகை உண்டு போலும். கிரோம்பேட்டை(ஆம், அப்படி தான் பெயர் பலகையில் இருந்தது) ரயில் நிலையத்தில் கடப்பாரை, ஒயர், சிமெண்ட் பலகை என்று சகலத்தையும் ஏற்றி தானும் ஏறிக்கொண்டு ஒரு கூட்டம்.முதல் வகுப்பிற்கு மூச்சு திணறல் ஆரம்பித்தது.

கிரோம்பேட்டை மாமா ஒருவர், பொன்னியின் செல்வனை பார்த்து, "இந்த ஜெனரேஷன் இதெல்லாம் கூட படிக்கறதா, பேஷ்" என்றார். ஜன்னலோர சீட்டு வாய் முழுக்க பல்லாக,"டமில் மேல ரொம்ப லவ். எங்க டாடி படிப்பாங்க. அந்த புக் கிழிஞ்சு போச்சு, புது எடிஷன் வாங்கி படிக்கிறேன் சார். பாருங்க, அட்டை படமெல்லாம் கலர்புல்லா இருக்கு. எப்படியும் ஒரு ஒன் இயர்குள்ள படிச்சுடுவேன். வேலை ரொம்ப ஜாஸ்தி, அதான்." என்றது. மாமா மீண்டும், "நீங்க எல்லாம் தமிழ் படிக்கறதே சந்தோஷம், என் புள்ள தமிழ் படிக்கறதே இல்லை, இங்கிலீஷ் புக்ஸ் தான். ரொம்ப வருத்தமா இருக்கு" என்று சந்தில் சிந்து பாடிற்று.

"ரூபாய்க்கு ரெண்டு கொய்யப்பழம், சீப்பான பூவன் பழம்மா டசன் பத்து ருபாய், மல்லி மொழம் அஞ்சு ரூபாம்மா, சார், சீசன் டிக்கெட், ரேஷன் கார்டு, பால் கார்டு கவர் எல்லாம் சேர்த்து ஒரே கவர் பத்து ரூபாய், வேர்கல்லை வேர்கல்லை " என்ற குரல்கள், "மல்லிகை முல்லை, பொன்மணி கிள்ளை", "இதோ எந்தன் தெய்வம் முன்னாலே, நான் ஒரே ஒரு புன்னகையை கண்டேனே", "அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தெய்வமன்றோ" போன்ற பாடல்களை பாடும் கண் தெரியாத அதே பிச்சைக்காரர், "இந்தியாவோட முதல் பிரதமர் யார் தெரியுமா" என்று ஆரம்பித்து இன்றைய பிரதமர் வரை சொல்லும் குடிகார அறிவாளி என்று நான் கல்லூரி வாழ்க்கையில் பார்த்த அனைவருமே இந்த புறநகர் ரயிலை நம்பி தான் இன்னும் வாழ்கிறார்கள் என்பதை கிரோம்பேட்டை ஆரம்பித்து கிண்டி வரை கண்டேன்.

Thursday, 4 August 2011

அமெரிக்காவில் ஆவணி ஆவிட்டம்

ஆகஸ்ட் பதிமூன்று ஆவணி ஆவிட்டம்(யஜுர் வேதம்), பதினாலு காயத்ரி ஜபம். சில வருடங்களுக்கு முன் ஆவணி ஆவிட்டத்திற்கு Sunnyvale பகுதியில் இருந்தேன். அங்கிருந்த ஹிந்து கோயில் சென்று பூணூல் மாற்றிக்கொண்டு காலை உணவிற்கு கோவிலில் ஓசியில் சுடச்சுட கிடைத்த பொங்கல்-கொத்சு ஒரு பிடி பிடித்து விட்டு இரை உண்ட மலைப்பாம்பை போல நகர முடியாமல் அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன்.அது "வாலிப வயசு".

இந்த வருடம் நான் இருக்கும் Elizabethtown பகுதியில் கோவில் எதுவும் இல்லை. அருகில் உள்ள Louisville நகரில் உண்டு. ஆனால் இங்கிருந்து Louisville நாற்பது மையில்.டாக்ஸி எடுத்துக்கொண்டு சென்று வந்தால் 200 டாலர். இதையெல்லாம் மனதில் கொண்டு சென்னையில் இருந்து வரும் போதே வேஷ்டி, தர்பை, பவித்ரம், கூர்ச்சம் பஞ்ச பாத்திரம் எல்லாம் எடுத்து வந்தாயிற்று.நேரே மந்திரத்தை ஓதி பூணூல் மாற்ற வேண்டியது தான்.

ஆனால் மந்திரம் ஓதுவதில் ஒரு குழுப்பம். இந்தியாவாக இருந்தால் சங்கல்பம் செய்யும் போது "மமோ பார்த்த சமஸ்த துரித..பாரத வருஷே, பரதக் கண்டே மேரோஹோ தக்ஷிணே பார்த்தே சகப்தே அஸ்மின்னு வர்தமானே வ்யவஹாரிக்கே.." என்று சொல்லிவிடலாம். இங்கிருந்து கொண்டு எப்படி பாரத வருஷம் பரத கண்டம் என்று சொல்வது?. கர வருஷம், ஸ்திர வாஸரம்(சனிக்கிழமை), நக்ஷத்திரம் எல்லாம் கூட ஓகே ஆனால் "பாரத" பிரச்சனை மட்டும் நீங்கவில்லை. இரண்டு நாளாய் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். ரொம்ப வருடமாய் இங்கிருக்கும் நண்பர் ஒருவரை அலைபேசியில் அழைத்து "நீங்க எப்படி பண்றீங்க?" என்றேன்.

அவர் வடிவேலு கிரி படத்தில் சொல்லும் கணபதி ஐயர் போல் சிம்பிளாய், "அமெரிக்க வருஷே, அமெரிக்க கண்டே..அவ்வளோதான்" என்றார். நெஜமா வாத்தியார்(ஐயர்) இங்க அப்படி தான் சொல்வாரா? என்றேன். அவர் சொன்னார், "வாசு, இங்க எல்லாம் நம்ம வசதி தான். உனக்கே தெரியும், நியாயமா பார்த்தா ஆவணி ஆவிட்டம் ஹோமம் பண்ணனும். இங்க வீட்ல அவ்வளோ நெருப்பு கொளுத்தி புகை வந்தா, NYPD, LAPD எல்லாம் வந்துருவான். அதனால, ஹோமம் பண்ண முடியாது. உலகத்தோட இந்த பக்கத்துல இருக்கறதால அமெரிக்க வருஷம், கண்டம் அவ்வளோதான்". எங்க இருந்தா என்ன, பண்ணனும்" என்றார். அதுவும் சரி தான் என்று பட்டது.

Friday, 29 July 2011

யோஹான்:அத்தியாயம் ஒன்று


நடுவுல செம லடாய்ல இருந்த கௌதம் வாசுதேவ் மேனனும் இளையதளபதியும் ஒன்னு சேர்றாங்க போல. இன்னைக்கு காலைல ஊடகங்கள்ல வந்திருந்த யோஹான் பட விளம்பரங்கள் தான் அதற்கு சாட்சி. கௌதம் படத்துல தமிழ் ரொம்ப குறைச்சலா தான வரும். தளபதி எப்படி சமாளிக்க போறார்னு தெரியலையே. தமிழ்நாட்டு அடித்தட்ட மக்களுக்கு ஆங்கிலம் புரிய வைக்க தான் இந்த படம் பண்றேன்னு அரசியல்ல நுழைய முயற்சி எல்லாம் பண்ணுவாரே..ஐயோ, இப்போவே பீதி கெளம்புதே..நான் என்ன பண்ணுவேன்..

Sunday, 17 July 2011

தெய்வத்திருமகள்

குடும்பத்தோடு பார்க்க கூடிய படம். ஒரு காட்சியில் கூட ஆபாசம் கிடையாது. அதற்காக இயக்குனருக்கு ஒரு சபாஷ். விக்ரம் மற்றும் அந்த குழந்தை(சாரா) இருவரின் நடிப்புக்காகவும் ஒரு முறை பார்க்கலாம். மற்றபடி சொல்லிக்கொள்ளும்படி படத்தில் ஒன்றும் இல்லை. ஆனால், இந்த படத்தை பார்த்த பின் இயக்குனர் விஜய் அவர்களிடம் சில கேள்விகள் கேட்க தோன்றுகிறது.

1. விக்ரம் மதி இறுக்கம்((Autism) கொண்டவர் எனில், எப்படி இத்தனை இயல்பாக அனைவரிடமும் பழகுகிறார்? மதி இறுக்கத்தின் முக்கிய பிரச்சனையே Social Interaction தானே?

2. I am Sam படத்தை தழுவியே தெய்வத்திருமகள் எடுக்கப்பட்டுள்ளது என்று படித்தேன். நான் "I am Sam" பார்த்ததில்லை. ஆனால், Tom Cruise, Dustin Hoffman நடித்த Rainman பார்த்திருக்கிறேன். மதி இறுக்கம் கொண்டவர்கள் கண்களை பார்த்து பேசுவது அரிது. படத்தில் ஒரு சில காட்சிகளை தவிர மற்ற இடங்களில் விக்ரம் நேரே கண்ணை பார்த்து பேசுகிறார். ஏன்?


3. இந்த பஷீர்-பாஷ்யம் சீன் அநியாயத்துக்கு நெருடல் சார். பாஷ்யம் ஊரறிஞ்ச வக்கீல். அவர் பணம் கொடுத்து IQ சர்டிபிகேட் தர சொன்னதாக பாஷ்யத்தின் உதவியாளன் சொல்கிறான். அந்த டாக்டர் பஷீர் ஒரு போன் பாஷ்யத்திற்கு செய்திருந்தால் விஷயம் தெரிந்திருக்கும். அதை ஏன் செய்யவில்லை அவர்?

4. இன்னொரு நெருடல். அமலா பால் பள்ளியில் விக்ரமை பார்த்தவுடன் அவர் கண்ணில் ஒரு பயம் தெரிந்து பக்கத்தில் இருக்கும் பாஸ்கரிடம் குழந்தையை வைத்துக்கொண்டிருப்பது யார் என்கிறார்? அவர் உடனே விக்ரம் மற்றும் குழந்தை பற்றி சொல்கிறார். அடுத்த காட்சியில் அமலா தன் தந்தைக்கு போன் செய்து "நான் பார்த்திருக்கிறேன்" அவர் தான் என்கிறார்.

போட்டோவில் பின்னர் ஒரு காட்சியில் அமலா பாலின் தந்தை ஐந்து வருடங்களாக தேடுகிறேன் என் மூத்த மகளை , எங்கு சென்றாள் என்றே தெரியவில்லை என்கிறார். போட்டோல விக்ரமை அமலா பால் பார்த்திருந்தா அவங்கப்பா கிட்ட முன்னமே சொல்லியிருப்பாங்க இல்ல? இங்க பார்வையாளன் யூகிக்கனுமா?? அதாவது விக்ரம் மனைவி(அமலா பாலின் அக்கா) தன தந்தைக்கு தெரியாம தங்கையோட தொடர்புல இருந்தாங்கன்னு?என்ன சார் நடக்குது?

5."ஏவம்" கார்த்திக் குமாருக்கு படத்துல என்ன வேலை? அவர் மூலமா இயக்குனர் சொல்ல வர ஒரே விஷயம், "அமலா பால் வாழ்கையில கல்யாணத்த விட முக்கியம் அவங்க அக்கா குழந்தை. பேசாம, கார்த்திக் பாத்திரமே இல்லாம, அமலா அவங்க அப்பாக்கிட்ட, "அப்பா, நிச்சயம் பண்ண மாப்பிள்ளை கிட்ட நான் பேசணும். கல்யாணத்துக்கு அப்பறம் நிலா என் கூட தான் இருப்பா. அவருக்கு சம்மதமான்னு கேக்கணும். அவருக்கு போன் பண்ணுங்க அப்படின்னு சொல்லி பேசி முடிச்சிருந்தா கார்த்திக் சம்பளம் தயாரிப்பாளருக்கு மிச்சம்.

6. இந்த மாதிரி படத்துக்கு பாட்டெல்லாம் தேவையா?

நிலா தனக்கு வேண்டும் என்று போராடும் விக்ரம், இறுதிக் காட்சியில் நிலாவை தன் மாமனார், மச்சினியிடம் கொண்டு சேர்க்கும் போது இந்த ஆளா மன வளர்ச்சி குன்றியவர், பயங்கர உஷாரான ஆளா இருப்பார் போல இருக்கே என்று எண்ணத் தோன்றுகிறது.

Monday, 4 July 2011

மகத்தான சந்திப்புஆறு மாதங்களுக்கு முன்பாக சேலம் சென்றிருந்த போது திருவண்ணாமலையில் இருந்து நண்பர் பவா செல்லதுரை தொலைபேசியில் என்னை அழைத்து சேலத்தில் உங்களை காண வேண்டும் என்று இரண்டு வாசகர்கள் விரும்புகிறார்கள், அவர்களைச் சந்திக்க முடியுமா என்று கேட்டார், அவசியம் சந்திக்கிறேன், என் அறைக்கு வரச்சொல்லுங்கள் என்றேன்,

அவர்களால் வீட்டிலிருந்து வெளியே வர இயலாது, உங்களுக்கு நேரமிருந்தால் அவர்கள் வீட்டிற்குப் போய் பார்க்கலாம் என்றார், அதற்கென்ன அவசியம் பார்க்கிறேன் எனறேன்,

வாசகர்களை வீடு தேடிப்போய் சந்திப்பது எனக்கு மிகவும் இயல்பானது, புத்தகங்களை நேசிக்க கூடிய ஒருவரை எழுத்தாளர் தேடிச் சென்று பார்ப்பதே சரி என நினைக்கிறவன் நான், அதனால் அன்று காலை அவர்கள் வீடு உள்ள எழில் நகருக்கு போகும் வரை அந்த வாசகர்களைப் பற்றி எந்த்த் தகவலும் தெரிந்து கொள்ளவில்லை

நகரை விட்டு விலகிய சாலைகளில் கார் பயணம் செய்து மண்சாலையில் இறங்கிச் சென்றது, முகவரியைத் தேடிக்கண்டுபிடித்து போய் சேர்ந்தேன், என்னோடு கவிஞர் சிபிச்செல்வன் வந்திருந்தார், வாழையும் மரங்களும் கொண்ட அழகான சிறிய வீடு, வீட்டின் உள்ளே முகம் எல்லாம் சிரிப்பும் சந்தோஷமாக என்னை இருவர் வரவேற்றார்கள், அப்போது தான் முதன்முறையாக வானவன் மாதேவியையும் வல்லபியையும் சந்திதேன்,

இருவருமே சகோதரிகள், Muscular Dystrophy எனும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். முப்பது வயது என்றார்கள், ஆனால் ரெக்கையடிக்கப் பழகும் புறாக்குஞசுகளைப் போல இருந்தார்கள்,

அவர்களுக்காக நான் கொண்டுபோயிருந்த புத்தகங்களைக் கையில் கொடுத்த போது அந்த கரங்களைப் பற்றிக் கொண்டேன், என் கையில் இருந்த நடுக்கத்தை என்னால் மறைக்க இயலவில்லை, அதை அவர்களும் உணர்ந்திருக்க கூடும், மனம் அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் கனத்துப் போயிருந்த்து, பேச முடியாத தவிப்பேறிய தொண்டையுடன் அவர்களையே பார்த்துக் கொண்டேயிருந்தேன்,

நடக்கமுடியாமல் ஒடுங்கிப்போன உடல், ஆனால் பேச்சில், முகத்தில் உற்சாகம் பீறிடுகிறது, ஆர்வம் கொப்பளிக்க அங்கிருந்த அத்தனை பேரிடமும் என்னைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள், துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி, நெடுங்குருதி, யாமம் என்று பேச்சு வளர்ந்து கொண்டேயிருந்த்து, நான் அவர்கள் மீதிருந்த கவனித்திலிருந்து விலகவேயில்லை

எல்லா மனிதர்களுக்கும் உடலில் உள்ள செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகும். ஆனால், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பழைய செல்கள் அழியும். புதிய செல்கள் உருவாகாது. அதன் காரணமாக உடலில் உள்ள தசைகள், மெள்ள மெள்ளத் தனது செயல்பாட்டை இழக்கத் தொடங்கும்.

அதாவது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்கத்துவங்கி அவர்கள் உடல் முடங்கிவிடும், முடிவில் ஒரு நாள் இதயம் கூட செயல் இழந்து விடும்,

வலியும் சோர்வும் பயமும் அவர்களை முடக்க முயலும் போதெல்லாம் நோயிற்கு எதிராக உறுதியான மனவலிமையுடன் வாழ்வின் மீது தீராத பற்றும், சக மனிதர்கள் மீது மிகுந்த அன்பும் அக்கறையுமாக அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நன்றாகவே உணர முடிந்தது,

உடல் நலிவுற்று நடமாட இயலாத சூழலிலும் கூட அவர்கள் புத்தகங்களைத் தேடித்தேடி வாசித்திருக்கிறார்கள். தங்கள் வீட்டில் உள்ள சிறிய நூலகத்தை எனக்குக் காட்டினார்கள்,

பிரபஞசன், வண்ணதாசன். அசோகமித்ரன். சுந்தர ராமசாமி, கிரா. ஜெயமோகன் நான் என அத்தனை முக்கிய தமிழ் படைப்பாளிகளையும் வாசித்து, ஆழமாகப் புரிந்து கொண்டு விவாதிப்பதோடு அந்த எழுத்தைப் பற்றி தன்னைத் தேடி வருபவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

படித்த நல்ல பதவியில் உள்ள, பல ஆயிரம் பணம் சம்பாதிக்கும் பலருக்கும் இல்லாத இந்த மனநிலையும் அக்கறையும் என்னை நெகிழ்ச்சியுறச் செய்தது,

பெரிய புத்தகங்களை அவர்களால் கைகளில் வைத்துப் படிக்க முடியாது, கைவலியாகிவிடும், ஆனாலும் வலியைப் பற்றிய கவலையின்றி விரும்பிய புத்தகங்களை வாசிக்கிறார்கள், இவ்வளவு தீவிரமான இலக்கிய வாசிப்பு கொண்ட இருவரை நான் கண்டதேயில்லை, என் வாழ்வில் நான் சந்தித்த மகத்தான வாசகர்கள் இவர்களே,

இவர்களை ஒருவேளைச் சந்திக்காமல் போயிருந்தால் அந்த இழப்பு எனக்குத் தீராத ஒன்றாகவே இருந்திருக்கும்

சிறிய அகல் விளக்கின் வெளிச்சம் மொத்த அறையையும் ஒளிரச்செய்வது போல அவர்கள் சிரிப்பும் சந்தோஷமும் அங்கிருந்த அத்தனை பேரிடமும் தொற்றிக் கொண்டிருந்தது, தங்கள் மீது எவரும் பரிதாபம் கொள்ளவோ. வேதனை கொள்ளவோ வேண்டியதில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள், அது எனக்கு மிகவும் பிடித்திருந்த்து, தனது நோயைப் பற்றி சொல்லும் போது கூட உணர்ச்சிவசப்படாமல் இயல்பாகவே பேசினார்கள்

இருபது வருசங்களுக்கும் மேலாக மாதேவியும் வல்லபியும் தசை சிதைவு நோயோடு வாழ்கிறார்கள், அவர்கள் அப்பா இளங்கோ மின்சார வாரியத்தில் கடைநிலை ஊழியர், சிறியகுடும்பம்,

வானவன் மாதேவிக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது நோய் துவங்கியிருக்கிறது, கெண்டைக்கால் சதைகள் வலுவிழந்து போயின, நடக்க முடியாமல் சிரமமானது, பள்ளிக்கூடம் போய்வருவதற்குள் பத்து இடத்தில் விழுந்து விடுவாள். தனியே டாய்லெட் கூட போக முடியாது, மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு தசைச் சிதைவு நோய் அதிக நாள் வாழமுடியாது என்று சொன்னார்கள்

.இரண்டாவது வருசமே இதே நோய் அவரது தங்கைக்கும் ஏற்பட்டது, குடும்பமே கலங்கிப்போனது, நோயோடு போராடியபடியே இருவரும் பத்தாம் வகுப்பு வரை படித்தார்கள், பிறகு வீட்டில் இருந்து கொண்டு பிளஸ் டு அதன் பிறகு அஞச்ல் வழிடியல் டிசிஏ படித்திருக்கிறார்கள்,

வானவன் மாதேவி யாருக்கோ நடந்தைதைப் பேசுவது போல இயல்பாகத் தன் உடலின் வலி வேதனைகளைப் பற்றி சொல்லிக கொண்டிருந்தார்
எங்களால் எதையும் தன்னிச்சையாக செய்ய முடியாது, எங்களை ஒருவர் தூக்கி உட்கார வைக்க வேண்டும், போன் பேச வேண்டும் என்றால் கூட யாராவது காதருகே போனை வைக்க வேண்டும். பேசிக் கொண்டிருக்கும் போது கழுத்து சாய்ந்து பின்பக்க்மாக போய்விடும், உடம்பு எங்களுடையது, ஆனால் அதன் கட்டுபாடு எங்களிடமில்லை,

ஆனால் மனம் வலிமையாக இருக்கிறது, புத்தகங்களின் வழியே நாங்கள் நிறைய நம்பிக்கை பெற்றிருக்கிறோம், வாழ்நாளில் நாங்கள் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது என்பதைப் புத்தகங்களே அறிமுகம் செய்து வைத்தன, இன்று எங்களை போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நாங்கள் ஒரு அறக்கட்டளை உருவாக்கி, மருத்துவ நிலையம் அமைக்க முயன்று வருகிறோம், எங்களை போல நூற்றுகணக்கானோர் இதே நோயில் பாதிக்கபட்டு உரிய மருத்துவ வசதியின்மையால் அவதிப்படுகிறார்கள்

இந்த நோய் உருவாக முக்கியக் காரணங்களில் ஒன்று சுற்றுச்சூழல் சீர்கேடு, ஆகவே அதற்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொள்கிறோம் பி.டி. கத்தரிக் காய்க்கு எதிராக, எங்கள் பகுதிக் கிராமங்களில் கையெழுத்துக்கள் வாங்கினோம். மேல்வன்னியனூர் என்ற இடத்தில் மலைக் குன்றின் பாறைகளை வெட்டிக் கடத்துவதற்கு எதிரான போராட்டங்களில் கலந்துக் கிட்டோம். என்கிறார்

அவரைத்தொடர்ந்து வல்லபி சொன்னார்

அதிகபட்சம் 10 வருஷங்கள்தான் உயிரோடு இருக்க முடியும்னு டாக்டர்கள் சொன்னாங்க ஆனால் நாங்கள் மனஉறுதியால் இன்றும் நோயை எதிர்த்துப் போராடி வருகிறோம், ஒருவேளை எங்கள் இதயம் கூட செயல் இழந்து போய்விடலாம், அதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை, நோயின் மொத்த வலியை நாங்கள் ஏற்றுக் கொண்டுவிட்டோம் அடுத்த தலைமுறைக்கு இந்த நோய் இருக்காது, என்று தீர்க்கமாகச் சொன்னார்

அவர்களது நோயிற்குப் புதிய மருந்து கண்டுபிடிக்கபட்டிருக்கிறது, அதன் விலை அதிகம், உங்களுக்கு மட்டும் இலவசமாக தருகிறோம் என்று ஒரு மருத்துவமனை முன்வந்த போது எங்களைப் போன்று தசைச் சிதைவு நோயால் பாதிக்கபட்ட அத்தனை பேருக்கும் இலவசமாக மருந்து கொடுங்கள் கடைசியாக நாங்கள் வருகிறோம் என்று வானவன் தேவியும் வல்லபியும் மறுத்திருக்கிறார்கள் என்பது சமீபத்திய செய்தி

அதை விடவும் ஒரு அமெரிக்க தன்னார்வ நிறுவனம் அவர்களது அறக்கட்டளை வழியாக மருத்துவமனை உருவாக்க பெரிய தொகையை தர முன்வந்த போது அவர்களை போன்ற பன்னாட்டு கம்பெனிகளால் தான் இந்தியா சீரழிக்கபடுகிறது என்று அந்த்த் தொகையை வாங்க மறுத்துவிட்டார்கள், அந்த தார்மீக நெறி மகத்தானது

தனது நோயைப் பற்றி பொருட்படுத்தால் சமூக போராட்டங்களில் கலந்து கொள்வதுடன் தீவிரமான புத்தக வாசிப்பு. விவாதம். சூழலியல் செயல்பாடு என்று துடிப்போடு இயங்கும் அவர்களைக் காணும் போது பரவசமாக இருந்த்து

நான் எழுதிய கட்டுரைகளில் விவாதிக்கபட்ட செகாவை பற்றியும் டால்ஸ்டாய் பற்றியும் நெடுங்குருதி நாவலின் கதாபாத்திரங்களைப் பற்றியும் விரிவாகப் பேசினார்கள், அன்று அவர்களின் பிறந்த தினம் என்று பிறகு தான் தெரிய வந்த்து, அதை அனைவரும் சேர்ந்து கொண்டாடினோம், அவர்கள் வீட்டின் பின்புறம் ஒரு மரக்கன்று நட்டேன்,

அந்த மரம் வளரும் போது அதன் இலைகளின் வழியே அவர்களை அருகிலிருந்து நான் பார்த்துக் கொண்டேயிருப்பேன் என்ற நம்பிக்கை உருவானது

அவர்கள்’ஆதவ் அறக்கட்டளை என்ற ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்கள். தசைசிதைவு நோயால் வட இந்தியாவில் ‘ஆதவ்’ என்ற சிறுவன் இறந்து போயிருக்கிறான் அவனது நினைவாக இந்த பெயரை வைத்திருக்கிறார்கள்

மஸ்குலர் டிஸ்ட்ரோபி வியாதியால் பாதிக்கப் பட்டவர்களைப் பாதுகாத்துப்�
பராமரிக்க ஒரு மருத்துவமனை உருவாக்க வேண்டும் என்ற கனவு அவர்கள் கண்களில் மின்னுகிறது.

ஆறு மாதங்களுக்கு முன்பாகவே சென்னை திரும்பியதும் அவர்களை பற்றி எழுத வேண்டும் என்று மனதில் தோன்றியது, ஆனால் கணிப்பொறியின் முன்பு உட்கார்நது அவர்களைப் பற்றி நினைக்க துவங்கியதும் மனதில் இனம்புரியாத வலியும் வேதனையும் சேர்ந்து கொண்டுவிடும், சொல்லற்று போன நிலையில் அவர்கள் புகைப்படங்களையே பார்த்துக் கொண்டிருப்பேன்

நேற்று கோவையில் அவர்கள் இருவரும் உயிர்கொல்லி எதிர்ப்பு கருத்தரங்கின் மேடையில் அமர்ந்து ஆவேசமாக தங்கள் எதிர்ப்புணர்வைப் பகிர்ந்து கொண்ட போது மனதில் அவர்களது நோய் சார்ந்து உருவாகியிருந்த பிம்பம் உடைந்து போய் அந்த ஆவேசம் எனக்குள்ளும் புகுந்து கொண்டது.

புத்தகங்கள் என்ன செய்யும் என்ற உதவாத கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் இந்தப் பெண்களின் வாழ்க்கையைப் படித்துப் பாருங்கள், அவர்களுக்கு நம்பிக்கை தரும் மருந்தாக இருந்திருக்கிறது புத்தகங்கள்,

புத்தகங்களைப் படித்துத் தூர எறிந்துவிடாமல் அதிலிருந்து ஒரு வாழ்க்கை நெறியை உருவாக்கி கொண்டு வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள், அந்த துணிச்சல். அக்கறை பலருக்கும் இல்லை என்பதை நிதர்சனம்,

வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்வது நம் கையில் தானிருக்கிறது, வானவன் மாதேவி வல்லபி இருவரும் வேண்டுவது நமது பரிதாபத்தை அல்ல, அன்பை, அக்கறையை, ஆக்கபூர்வமான செயல்பாடுகளை,

,இவர்களை பற்றி முன்னதாக விகடன் மற்றும் நாளிதழ்களில் கட்டுரைகள் வெளியாகி உள்ளன, அவர்களோடு இணைந்து செயல்படும் இளைஞர்கள் பலர் வீடு தேடி வருகிறார்கள், அன்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள், அந்த வீட்டில் எப்போதும் சந்தோஷம் ஒளிர்ந்து கொண்டயிருக்கிறது, அதன் கதகதப்பும் நெருக்கமும் வேறு எங்கும் கிடைக்காத்து

வானவன் மாதேவி வல்லபி இருவரும் படிக்க நல்ல புத்தகங்கள் தேவைப்படுகின்றன, விருப்பமான நண்பர்கள் அவர்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கி கொடுங்கள், மருத்துவசிகிட்சை சார்ந்த அவர்களின் தேவைகளுக்கு உதவி செய்யுங்கள், அவர்கள் முன்னெடுகின்ற சமூக இயக்கங்களில் கைகோர்த்து உறுதுணை செய்யுங்கள்,

எல்லாவற்றையும் விட அவர்களை நேரில் சென்று பாருங்கள், உங்கள் அன்பையும் அக்கறையையும் தெரியப்படுத்துங்கள், எவ்வளவோ பணத்தை விரையும் செய்யும் நாம் தங்கள் நோய்மையோடும் சமூகமேம்பாட்டிற்காக போராடும் அவர்களுக்கு உதவி செய்வது கட்டாயமான ஒன்று.
தொடர்புக்கு:
ஆதவ் அறக்கட்டளை Aadhav Trust
கடை எண்: 28-1 F, பிளாட் எண் 1,
எழில் நகர், போடிநாயக்கன்பட்டி,
சேலம் – 636005,
அலைபேசி : 99763 99403 .9976399409

நன்றி: www.sramakrishnan.com