
சுகாதார துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நேற்று காலை திடீரென்று, சென்னை அரசு பொது மருத்துவமனை வந்தார்.
மருத்துவமனை சரிவர பராமரிக்கப்படாததைப் பார்த்து, கடும் கோபம் அடைந்து, ஒவ்வொரு மருத்துவமனைக்கும் மாறு வேடத்தில் சென்று சோதனை செய்யப் போகிறேன்' என்று அறிவித்தார்.
அரசு பொது மருத்துவமனைக்கு திடீர் விசிட் செய்த அமைச்சர் பன்னீர்செல்வம், சில மாதங்களுக்கு முன் திறந்து வைக்கப்பட்ட கட்டண வார்டுகளை பார்வையிட்டார். நரம்பியல் துறை கட்டடத்திற்கு சென்றார். அங்கு ஐந்து மற்றும் ஆறாவது மாடிகளில் மின் விசிறிகள் ஓடாமல் இருப்பதை பார்த்து, அதிகாரிகளிடம் கேட்டார். பொதுப்பணித் துறை யினர் சரி செய்ய வேண்டும்' என்று, மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுப்பணித் துறை அதிகாரிகளை அழைத்து, அமைச்சர் கேட்ட போது,மின் விசிறி போடுவது மட்டும் தான் எங்கள் வேலை; பராமரிப்பை, மருத்துவ மனையின் மின்சாரத் துறையினர் தான் கவனிக்க வேண்டும்' என்று கூறினர். அதைக் கேட்டு எரிச்சல் அடைந்த அமைச்சர், எல்லை விவகாரத்தை எல்லாம் வெளியில் வைத்துக் கொள்ளுங்கள்; எனக்கு இப்போது மின்விசிறி ஓட வேண்டும்; இல்லையேல் நீங்கள் ஓடி விடுவீர்கள்' என்று எச்சரித்தார்.
பின்னர் அமைச்சர், மருத்துவமனை நோயாளிகளுக்கு வழங்கும் உணவு தயாரிக்கும் இடத்திற்கு சென்றார். அங்கு சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவை பார்த்து, இதுபோல, உங்கள் வீட்டில் சமைப்பீர்களா?' என்று ஊழியர்களை கடுமையாக எச்சரித்தார். அதோடு,நோயாளிகளுக்கு மதிய நேரத்தில் வழங்க தயாரிக்கப்பட்ட, உணவு வகைகளை முகர்ந்து பார்த்துவிட்டு, முகம் சுளித்தார்.
உணவு தயாரிக்க உபயோகப்படுத்தும் அரிசி, பருப்பு வகைகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த அமைச்சர், `நீங்கள் சமைக்கும் உணவை சாப்பிட்டால், நோயாளி மேலும் நோயாளி ஆகிவிடுவார் போல் இருக்கே' என்று கூறி, உணவு பொருள் வழங்கும் கான்ட்ராக்டை உடனடியாக ரத்து செய்து, அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களை, உணவு பொருள் வழங்கும் துறை மூலம் வழங்க, நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதோடு, சமையல் கூடத்தில் பணி புரியும் டயட்டீஷியனுக்கு, நோட்டீஸ் கொடுக்கும்படி உத்தரவிட்டார் அமைச்சர்.பின்னர் நிருபர்களிடம், மருத்துவமனையில் நோயாளிகளிடம் பணம் வாங்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும். இனி, ஒவ்வொரு மருத்துவமனைக்கும் நானே மாறுவேடத்தில் சென்று சோதனை செய்வேன்' என்றார்.இதை கேட்ட மருத்துவர்களும், அதிகாரிகளும் கலவர முகத்துடன் காணப்பட்டனர்.