Friday 5 December 2008

இன்றைய தமிழகத்தின் எம்.ஆர்.ராதா

தமிழ்நாட்டில் எம்.ஆர். ராதாவிற்கு பிறகு காமெடி மற்றும் வில்லன் வேடங்களை சிறப்புடன் செய்யக்கூடியவர் யார் என்று இப்போது கேட்டால் குழந்தை கூட யோசிக்காமல் சொல்லும் பதில் "கலைஞர் கருணாநிதி" என்பது தான்.

சட்டக்கல்லூரி மாணவர்களிடையே வன்முறையை தூண்டியது ஜெயலலிதா தான் என்றார். அதற்கு எதிராக வழக்கு தொடர போவதாக ஜெயலலிதா அறிவித்தவுடன் தான் "விளையாட்டுக்கு" சொன்னதாக ஒரு அந்தர்பல்டி அடித்தார். ஒரு மாநில முதல்வர் விளையாட்டாக சொல்லக்கூடிய வார்த்தைகளா இவை?

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தி.மு.க ஆட்சியை காட்டமாக விமர்சித்ததை அடுத்து காடுவெட்டி குருவை தமிழக அரசு கைது செய்தது. அதே ராமதாசுடன் சில நாட்களுக்கு முன் சமரசம் ஏற்பட்ட நிலையில் காடுவெட்டி குரு விடுதலை செய்யப்பட்டார்.

இலங்கை தமிழரை காக்க தேவைப்பட்டால் ஆயுதம் ஏந்துவோம் என்று பேசிய வைகோ கைது செய்யப்பட்டார். அதே போல், அவர்களுக்கு ஆதரவாக பேசிய இயக்குனர்கள் சீமான் மற்றும் அமீர் கைது செய்யப்பட்டனர். ஆனால், தொல்.திருமா கூட்டணி தர்மம் காரணமாக கைது செய்யப்படவில்லை.

தி.மு.க அரசு வரும் முன்னே, வன்முறை வரும் பின்னே என்று புது பழமொழியே எழுதலாம் போல் இருக்கிறது. திரும்பிய பக்கம் எல்லாம் தமிழகத்தில் கொலை/கொள்ளை. இதற்கிடையே, அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பல கைதிகளை விடுதலை வேறு செய்துள்ளார்.

தினகரன் மதுரை அலுவலகம் தாக்கப்பட்டதற்கு அழகிரி பொறுப்பல்ல. எந்த செய்தியின் காரணமாக தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டதோ அந்த செய்தியை வெளியிட்ட மாறன் சகோதரர்களே காரணம் என்றார். கடந்த பிப்ரவரி மாதம் மாறன் சகோதரர்களை எச்சரித்து கலைஞர் முரசொலியில் கவிதையை பார்ப்போம்:

நாடு போற்றிய நல்லறிவாளனே
ஏடு புகழ் என்னருங் கண்மணியே!
தோகாவில் திறன்காட்டி இந்தியத் திருநாட்டின் கீர்த்தி
தொல் புவியில் நிலைநாட்டியவனே!
இங்கிலாந்துப் பிரதமரை சந்தித்துப் பேசியபின்;
“இத்தனைக்கும் காரணம் இந்த மாமன் தான்’ என்று;
எழுதி நீ அனுப்பிய கடிதத்தில்
இறுதி வாசகமாய் “நான் உங்கள் வளர்ப்பன்றோ’ என்று
அன்றைக்கு நீ இலண்டன் மாநகர் இருந்து மடல் எழுதி
நன்றியினைக் குன்றின் மேல் இட்ட விளக்காக
ஏற்றி வைத்து; இன்றைக்கும் எனை அழவைக்கும் அன்பே ஆரமுதே!
தூற்றுகின்றான் நான் பெற்ற பிள்ளையினை; நீ பெற்ற பிரகலாதன்!
மகனே ஆயினும் தவறு செய்யின் மன்னிக்காமல் கண்டிக்கின்ற
மனு நீதிச் சோழன் பிறந்த மண்ணுக்குச் சொந்தக்காரன் நான்;
தோளுக்கு நிகராக வளர்ந்தோரின் பகை கண்டுள்ளேன் இன்று நான்
தோளில் தூக்கி வளர்த்தோரும் வாளைத் தூக்குகின்றார்;
வசைமாரி பொழிகின்றார்
மானம் போற்றுதற்கும் திருக்குறள் தரும் மறை நீதி
மறையாமல் காப்பதற்கும் இந்தத் தமிழ்
மண்ணில் நிலைத்த திராவிட இயக்கத் தருவை வீழ்த்த நினைத்து
கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு அலைவோரின்
கண்ணில் விரலை விட்டு ஆட்டுதற்கும் கழகப் பாசறை வீரர்கள்
எண்ணற்றோர் உண்டு; எதிரிகள் ஓடி ஒளியட்டும் இதனை
எச்சரிக்கையாகக் கொண்டு!

இப்படி எல்லாம் கவிதை எழுதியும் பல ஊடகங்களின் வாயிலாகவும் மாறன் சகோதரர்களுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று கூறியவர், நான்கு நாட்களுக்கு முன் அவர்களுடன் ஒன்றாக நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறார்.

ஆட்சிக்கு வந்து இரண்டாண்டு தான் ஆகிறது. அதற்குள், ஆட்சி எப்போது முடியும் என்று தோன்ற ஆரம்பித்து விட்டது.கேவலம் ஒரு கலர் டிவி, மலிவு விலையில் அரிசி இவற்றுக்காக ஒட்டு போட்ட தமிழனுக்கு இது தேவை தான்.

Twenty20

மலையாள திரையுலகின் பிரபலங்கள் அனைவரும் நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம். விறுவிறுப்பாகவும் அதே சமயத்தில் அனைவருக்கும் நடிக்க வாய்ப்பு கொடுக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ள திரைக்கதை தான் படத்தின் உண்மையான ஹீரோ. AMMA(Association of Malayalam Movie Artists) அமைப்பிற்கு நிதி உதவி செய்ய நடிகர் திலீப் தயாரித்துள்ள இப்படத்தை இயக்கியுள்ளார் பிரபல மலையாள இயக்குனர் ஜோஷி. தமிழில் இப்படி ஒரு படம் விரைவில் வரும் என நம்புவோம்.

Wednesday 3 December 2008

Vaaranam Aayiram (English,200 Minutes)

நான் வாரணம் ஆயிரம் படத்தை முழுமையாக பார்க்கவில்லை, CD-யில் ஒரு மணி நேரம் துண்டு துண்டாக பார்த்தேன். முதல் விஷயம் english. வாசு சொன்னது உண்மைதான், நாம் பத்து வார்த்தைகளில் நான்கு வார்த்தைகள் english கலக்குகிறோம், ஆனால் முக்கியமான விஷயம், இப்படி கலக்கும் பெரும்பான்மை மக்கள் இரண்டு வார்த்தைகளுக்கு மேல் ஆங்கிலம் சரளமாக பேச மாட்டார்கள். அதாவது, நேராக போய் லெப்ட்ல திரும்பி திரும்பவும் straightaa போனா ஒரு விநாயகர் temple வரும், என்றுதான் பேசுகிறோமே தவிர, " go straight and take a left turn" என்று பேச மாட்டார்கள், யார் பேசமாட்டார்கள் என்றால் தியட்டருக்கு போய் படம் பார்க்கும் மக்கள் பேச மாட்டார்கள்.
Go straight and take a left turn என்று பேசுபவர்கள் படத்தின் வசூலை பொறுத்தவரை மிகவும் குறைவான மக்கள்.


கவுதம் மேனன் தன் படங்களில் ஒரு படித்த (அதாவது குடும்பத்தின் தாய் தந்தையர் கல்லூரி படிப்பு படித்த) குடும்பத்தை காண்பிக்கிறார். இது தமிழ் சூழலுக்கு ஒத்து வராதது மட்டுமல்ல, கவுதம் மேனனின் career-க்கும் நல்லது அல்ல.

தமிழில் நல்ல படமாக இருந்தாலும் கெட்ட படமாக இருந்தாலும், தோல்வி படமாக இருந்தாலும், வெற்றி படமாக இருந்தாலும் படத்தில் ஒரு "பளபளப்பு இல்லா தன்மையை" இருக்க வேண்டும், ஒரு lower middle class வாழ்க்கையை எதிர்பார்க்கிறோம். ஏனெனில் தமிழர்கள் பெரும்பாலும் தன் பொருளாதர நிலையை விட ஒரு படி குறைவாகத்தான் நினைத்துக்கொள்ளுகிறார்கள். தமிழ் சினிமா மார்க்கெட் மிகவும் குறுகியது, அதில் இரண்டாம் தலைமுறை பட்டதாரிகள் மிகவும் குறைவு.

மேலும் பொதுவாகவே தென்னிந்தியருக்கு, குறிப்பாக தமிழருக்கு தன்னை மேற்கத்திய கலாச்சாரத்திற்கு பொருத்திக்கொள்ள வேண்டும் என்று வட இந்தியர் அளவிற்கு வெறி இல்லை.

நம் சினிமாவில் பணக்கார் இருந்தாலும் அவர், ஒன்று வெள்ளை வெட்டி சட்டை போட்டு இருக்க வேண்டும் அல்லது ஒரு பொருந்தாத கோட் சுட் போட்டு இருக்க வேண்டும். அவர் படித்தவர் என்று காண்பிக்கவே கூடாது, மேலும் படித்தவரை விட படிக்காதவருக்கே அதிகம் விஷயம் தெரிந்து இருக்கிறது என்று காண்பிக்க வேண்டும். ஒரு படம் c-center-இல் ஹிட் ஆனால்தான் அது வெற்றிப்படம் என்று இருக்கும் வரை தமிழ் சினிமா இப்படித்தான் இருக்கும்.

இந்த சூழ்நிலையில் கவ்தம் மேனன் தன் படங்களில் தொடர்ந்து கதாநாயகனை படித்தவனாகவே காண்பிக்கிறார். கதாநாயகனை சுற்றி உள்ளவரும் படித்தவர்களாகவே காண்பிக்கிறார், மேலும் english பேசவும் வைக்கிறார்.

Sunday 30 November 2008

வாரணம் ஆயிரம்

தமிழ் சினிமா ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை எத்தனையோ மாறுதல்களை பார்த்து விட்டது. ஆனால், இன்றும் மாறாமல் இருக்கும் விஷயங்களில் முதன்மையானது "தாய் அல்லது அம்மா சென்டிமெண்ட்". பல தயாரிப்பாளர்கள் இன்றும் இயக்குனர்களிடம் கேட்கும் முதல் கேள்வி "படத்துல அம்மா சென்டிமெண்ட் இருக்கா?". இப்படி அம்மா சென்டிமெண்டை நம்பி வாழும் தமிழ் சினிமாவில் அப்பாவிற்காக எடுக்கப்பட்டுள்ள இரண்டாவது படம் "வாரணம் ஆயிரம்". முதல் படம் "தவமாய் தவமிருந்து" என்பது என் அபிப்பிராயம்.

இராணுவத்தில் மேஜராக உள்ள கதாநாயகன் ஒரு முக்கிய பணிக்காக செல்லும் போது தனது தந்தை இறந்த செய்தி கேட்டு அவரை பற்றிய நினைவுகளில் மூழ்குகிறான். சிறுவனாக, இளைஞனாக வெவ்வேறு கால கட்டங்களில் தனது வாழ்கையில் நடந்த நிகழ்வுகளையும் அதன் பின்னணியில் தனது தந்தையையும் நினைவு கூறுகிறான். இது தான் படத்தின் கதை.

கௌதமின் படங்கள் பொதுவாக "நோ நான்சென்ஸ்" தன்மை கொண்டவை. படம் பார்க்கும் பார்வையாளனிடம் ஒரு முதிர்ச்சியை எதிர்பார்க்கிறார் என்று கூட எனக்கு தோன்றும். வாரணம் ஆயிரம் பார்த்த பின் அந்த எண்ணத்தை மீண்டும் ஒரு முறை உறுதி செய்து கொண்டேன். சூர்யாவின் நடிப்பு அபாரம். கமலுக்கு பிறகு விக்ரம் என்கிறார்கள். அந்த இடத்திற்கு விக்ரம் சூர்யாவுடன் கடுமையாக போட்டியிட வேண்டி இருக்கும். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் பிரமாதம். இனி, கௌதமும் ஹர்ரிசும் இணைய மாட்டார்கள் என்பது வருத்தமான விஷயம்.

படத்தின் குறை என்று நான் நினைப்பது அதன் வேகத்தன்மை. வேகம் என்று இங்கே நான் சொல்வது, பார்வையாளன் ஒரு விஷயத்தை உள்வாங்குவதற்குள் மற்றொன்று வந்து விடுகிறது. உதாரணமாக, சூர்யா கல்லூரி மாணவன் என்று நினைத்து கொண்டு இருக்க, அவர் கம்பெனி ஆரம்பித்து, வீடு கட்டி, காதலில் தோல்வி அடைந்து போதைக்கு அடிமை ஆகிறார். சரி, அவர் போதையில் இருந்து எப்படி மீள்கிறார் என்று புரிவதற்குள் அவர் இராணுவத்தில் மேஜர் ஆகி விடுகிறார். மற்றொரு மைனஸ் பாயிண்ட், சொற்ப நேரமே வரும் சிம்ரன்-சூர்யா கல்லூரி பருவம். இன்னும் சில காட்சிகள் சேர்த்து இருக்கலாம். திவ்யா ஸ்பந்தனா எதற்காக இந்த ரோலை ஏற்றுக்கொண்டார் என்று தெரியவில்லை. பொதுவாக, படம் பார்த்த பலர் கூறும் மற்றொரு குறை, "படத்தில் பல வசனங்கள் ஆங்கிலத்தில் உள்ளது". இன்றைய கால கட்டத்தில் நாம் சாதாரணமாக பத்து வார்த்தை தமிழில் பேசினால் அதில் நான்கு ஆங்கிலத்தில் உள்ளது. அதனால், அதையெல்லாம் மன்னித்து விடலாம்.

மொத்தத்தில், வாரணம் ஆயிரம் is watchable in parts.