Monday, 19 April 2010

திமலா

சில மாதங்களாகவே திருப்பதிக்கு மலை மீது ஏறி வர செல்ல வேண்டும் என்று ஒரு பிரார்த்தனை .தள்ளி போட்டுக்கொண்டே இருந்தது, ஒரு வேகத்தில் இந்த வெள்ளிக்கிழமை என்று முடிவு செய்து கிளம்பிவிட்டேன் தனியாக.

பெங்களூருவில் இருந்து சுமார் ஆறு மணி நேர பஸ் பிரயாணம். சில இடங்களில் சாலை போட்டுக்கொண்டு இருக்க, பொதுவாக நல்ல சாலை. எந்த இடத்தில் ஆந்திர பிரிகிறது என்று பார்க்க ஆசை, அதை முல்பாகல் என்ற ஊர் தீர்த்து வைத்தது கடை திறப்பு விழாவில் ஒரு பக்கம் உபேந்திரா மறுபக்கம் சிரஞ்சீவி படங்கள், எதிர்பார்த்த மாதிரியே சில நிமிடங்களில்
தெலுகு தேசம் வரவேற்றது.

கீழ் திருப்பதியில் சாப்பிட்டுவிட்டு (சும்மா படிக்கலாம் என்று ஒரு குமுதம் வாங்கினேன், ரூ.12 (பிற மாநிலங்களில்) என்று போட்டு இருக்கும் குமுதத்தை ரூ. 15 என்று சொன்னார் ,ஏனென்று கேட்டதற்கு பஸ் ஸ்டாண்டில் ரூ.15 என்றார், இப்படி பல தளங்களில் பல கொள்ளைகள்!) நல்ல வெயிலில் அலிபிரி (மலைக்கு மேலே நடக்கும் பாதை ஆரம்ப இடம் அல்லது மேலே செல்லும் ரோடும், கீழே வரும் ரோடும் சந்தித்துக்கொள்ளும் இடம் ) சென்று, நடக்க ஆரம்பித்தேன். முதல் ஒரு மணிநேரம் வடிவேலு பாஷையில் சொன்னால் 'திணற திணற ' ஏற வேண்டி இருக்கிறது. 20 படிக்கட்டுகள் ஏறினாள் சர்வ நிச்சயமாக உட்கார வேண்டிய சூழ்நிலை.தப்பு பண்ணிட்டமோ என்று யோசிக்கும் போது இரண்டு பெண்கள் என்னை கடந்து சென்றார்கள் ஒருவர் ஒவ்வொரு படிக்கும் மஞ்சள் வைக்க மற்றொருவர் குங்குமம் வைத்துக்கொண்டு சென்றார், பெண்டு நிமிர்ந்துடுச்சு என்று சொல்வோமே அது இதைத்தான் போல...

விளைவு - பயபக்தியுடன் படி ஏறினேன். காளிகோபுரம் என்ற இடம் வந்தவுடன் போட்டோ எடுத்து மேலே தரிசனத்திற்கு டிக்கெட் குடுத்தார்கள். அங்கே தண்ணீர் குடித்து , லெமன் ஜூஸ் குடித்து ஆசுவாச படுத்திக்கொண்டு மேலே ஏற ஆரம்பித்தால் இனிய அதிர்ச்சி ... படிக்கட்டுகள் அவ்வளவு செங்குத்தாக இல்லாமல் ஒரு வகை நடை பாதை போல இருந்தது.

mp3 player-இல் அன்னமைய்யாவும் ராமதாசும் ஒலிக்க , வேகமாக மேல ஏற முடிந்தது. மீண்டும் சேஷாத்ரியில் செங்குத்து படிக்கட்டை பார்க்கும்போது பயம் வரவில்லை, அங்கேயும் ஒரு இளைஞர் படிகளை முட்டி போட்டுக்கொண்டு ஏறிக்கொண்டு இருந்தார், என்ன பிரார்த்தனையோ?!

ஒரு வழியாக மேலே போய் சேரும்போது மணி மாலை 6:30 ! உடனே டிக்கட்டில் குறிப்பிட்ட வைகுந்தம் complex போய் சேர்ந்த போது மணி ஏழு. என்னடா குழப்பம் இல்லாமல் போகிறதே என்று கவலைப்படும்போது, பெருமாள் புன்னகைத்தார்.. அங்கே Cellphone/Luggage Receiving counter என்று எழுதி வைத்து இருந்தனர். அங்கே எனது செல்போனை / Shoulder Bag - ஐ கொடுத்த போது , செல் போனை மட்டும் வாங்கிக்கொண்டு பையை திருப்பி தந்துவிட்டனர்- பிறகு security checking-இல் பையில் MP3 player கண்டுபிடிக்கப்பட்டு அங்கே இருந்த போலீஸ் காரர்களால் 'அன்பாக' தள்ளப்பட்டேன்! பிறகு அதே ரசீதில் பையையும் சேர்த்து விட்டு Queue என்ற ஜோதியில் ஐக்கியமானேன். பலவருடங்களாக மாறாத அதே கரிய மொட்டைகள் / அதே தெலுகு ... நடுவில் இரண்டு அடி அகலத்தில் உள்ள ஒரு பாதையில் சுமார் 1 மணிநேரம் நிற்க வைத்து விட்டார்கள் .. அந்த அனுபவத்தை வார்த்தையில் விவரிப்பது கடினம் ,சுருக்கமாக சொன்னால் வைகுண்டத்திற்கு அருகில் போய் வரலாம்.அல்லது நரகத்திற்கு அருகிலும் போய் வரலாம் , உங்கள் கர்ம வினையை பொருத்து இருக்கிறது. அங்கே இருக்கும் பலர் குறிப்பாக தமிழ் இளைஞர்கள் "ஏடு குண்டலவாடா வெங்கடரமணா கோவிந்தா கோவிந்தா " என்ற கோஷத்தை ஒரு காமெடி டைலாக் போல ஆக்கிவிட்டாச்சு , கோவிந்தா , பசிக்குது கோவிந்தா , லட்டு கோவிந்தா , அரியர்ஸ் கோவிந்தா என்று பல கோவிந்தா கோஷங்கள்! பிறகு ஆனந்த நிலையத்தை அடைந்ததுமே பலமான நெரிசல்... மொத்தமாக தரிசன நேரம் 5 வினாடிகள்.தரிசனம் முடிந்து தீர்த்தம் சடாரி வாங்கும் க்யூவில் ஒரு மாமி தனது கைப்பையை துழாவி 2 ரூபாய் எடுத்து வைத்துக்கொண்டார் , போட்டாரா தெரியவில்லை.

தரிசனத்திற்கு பிறகு , இலவச பிரசாதம் அளிக்கும் இடத்தை ஆர்வமாக நெருங்கினேன், எனக்கு முன்பு வரை வெண்பொங்கல் குடுத்து இருந்தவர்கள், நான் போன போது, லட்டுக்கு மாறி விட்டார்கள் ஹ்ம்ம்... பிறகு வீட்டிற்கு லட்டு வாங்க நிற்க தனி Q ,பெருமாளை பார்பதற்கு இருக்கும் கஷ்டத்தை விட  லட்டு வாங்குவதற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டி இருக்கிறது.

இந்த பிரயாணத்தில் கவனித்தது,

திருப்பதியில் தமிழ் influence நன்றாகவே இருக்கிறது, எல்லா இடங்களிலும் தமிழ் போர்டுகள் வரவேற்கிறது, முன்பே இருந்ததுதான் என்றாலும் இப்போது அதிகமாகவும் தவறு ஏதும்

இல்லாமல் தெளிவாக எழுதப்பட்டு இருக்கிறது.இவ்வளவு கூட்டத்திற்கு திருப்பதி மிக மிக சுத்தமாக இருக்கிறது.இந்த பிரம்மாண்டத்தில் பக்தி என்ற விஷயம் அடிபட்டு போவதற்கு மிக அதிக வாய்ப்பு இருக்கிறது.

நடை பாதை நடுவில் 12 ஆழ்வார்கள் சிலை வைத்து அவர்க்கான சரித்திரத்தை எழுதி வைத்து இருக்கின்றனர், முழங்கால் முறிச்சான் என்ற இடத்தில் ராமானுஜர் பற்றி எழுதி இருக்கின்றனர். கீழ் திருப்பதியில் M.S.சுப்புலட்சுமி அவர்களுக்கு சிலை வைத்து இருக்கின்றனர்.

எனக்கு தோன்றியதெல்லாம் இதே திருப்பதி தமிழ்நாட்டோடு இருந்தால் அன்னமையா பற்றி எழுதி வைத்து இருந்தால் என்ன சொல்லி இருப்பர்? தெலுகு மொழிக்காரர்கள் எப்படி dominate செய்கிறார்கள் என்று சொல்லி சொல்லி ஒரு விதமான இயக்கத்தை நடத்தி இருப்பர்? இன்று மார்கழி மாதத்தில் திருப்பாவையை ஒலிக்க செய்கின்ற இதே இடத்தில் ஒரு மாதம்
அன்னமையா கீர்த்தனைகளை ஒலிக்க செய்ய திருமாவளவன் , வீரமணி போன்றோர் அனுமதிக்க வேண்டும்.

சரி, இந்த பதிவிற்கு தலைப்பு திருமலை இல்லை திமலாதான் , ஏனென்று சொல்வோருக்கு 1000 பொற்காசுகள் பரிசு!