Saturday 3 September 2011

தஞ்சாவூர் மெஸ்

"யோஹான்: விஞ்ஞானத்தை வென்ற வீரன்" பகுதி இரண்டு எழுத கொஞ்சம் நேரம் எடுப்பதால் அதற்கிடையே ஒரு interim பதிவு. மேற்கு மாம்பலம் வாழ் நண்பர்கள் பலருக்கும் தஞ்சாவூர் மெஸ் பற்றி தெரிந்திருக்கும். தி.நகர் பேருந்து நிலையம் தாண்டி மாட்லி சப்வே இறங்கி ஏறி காசி விஸ்வநாதர் கோயில் அருகில் இருக்கும் அந்த சைக்கிள் மட்டுமே செல்ல கூடிய சந்தை தாண்டி வந்து இடது புறம் சென்றால் வலது கை பக்கம் தஞ்சாவூர் மெஸ்.

தொண்ணூறுகளின் மத்யமத்தில் ஆரம்பிக்கப்பட்டது என்று நினைக்கிறேன். மேற்கு மாம்பலம் ஸ்டேஷன் ரோட்டில் முதலில் ஸ்தாபித்தார்கள். பின்னர் குப்பையா செட்டி தெருவில் இருந்ததாக ஞாபகம். ஆரம்பித்த புதிதில் புல் மீல்ஸ்(unlimited) ஏழு ரூபாய். இப்போது நாற்பது ரூபாய். பல வருடங்களுக்கு பிறகு நேற்று மதிய உணவிற்காக தாம்பரத்தில் இருந்து கிளம்பி சென்றேன். பீன்ஸ் பருப்புசிலி, முருங்கை சாம்பார், வெள்ளரி கூடு, பூசணி மோர்குழம்பு, ரசம், அப்பளம் என்று அட்டகாசமான சாப்பாடு.உணவின் ருசியை காட்டிலும் அங்குள்ளவர் கேட்டு பரிமாறும் விதமே அதன் வெற்றிக்கு காரணம் என்று நினைக்கிறேன்.

தஞ்சாவூர் மெஸ் தொடங்குவதற்கு முன் அறுசுவை அரசின் தம்பி ஜெயராமன் மாம்பலம் ஜுபிலி ரோடு அருகே ஞானாம்பிகா மெஸ் நடத்திக் கொண்டிருந்தார். அதுவும் அந்த நாளில் சக்கை போடு போட்டது. என் தாயார் இறந்து பின் சில வருடங்கள் என் தந்தையுடன் நான் அங்கு தான் உணவருந்த செல்வேன். ஞாயிறு காலை உருளை பிரை, அவியல். பத்தரை மணிக்கெல்லாம் சாப்பாடு தயாராகி விடும். ஜெயராமன் மாமா உடம்பெல்லாம் விபூதி பூசி மெஸ் முழுதும் சாம்பிராணி மணக்க வலம் வருவார். ஹரிதாஸ் கிரி அவர்களின் சம்பிரதாய பஜனை பாடல்கள் மெஸ்ஸில் ஒலித்துக்கொண்டிருக்கும்.இன்றும் மறக்க முடியவில்லை அந்த நாட்களை. தாயில்லா பிள்ளை என்று எனக்கு ஸ்பெஷல் கவனிப்பு உண்டு. சில வருடங்களுக்கு பின் ஞானாம்பிகா மூடப்பட்டது. இப்போது அவர் பிள்ளைகள் டிசம்பர் சீசனில் மட்டும் நாரத கான சபா, வாணி மஹால் போன்ற சபாக்களில் மாலை கான்டீன் நடத்துகிறார்கள். அறுசுவை அரசின் மற்றொரு தம்பி மேற்கு மாம்பலத்திலேயே மீனாம்பிகா கேட்டரிங் என்று மெஸ் நடத்தினார். ஆனால், ஞானாம்பிகாவுடன் போட்டிப்போட முடியாமல் புறமுதுகு காட்ட வேண்டியதாயிற்று.

ஆக, கடந்த இருபது வருடங்களாக பல தொழில் போட்டிகளுக்கிடையே வெற்றிகரமாக நடத்தப்படுகிறது தஞ்சாவூர் மெஸ். இவர்களுக்கும் ஸ்பெஷல் உணவு வகைகள் உண்டு. குறிப்பிட்டு சொல்லக் கூடியவை கத்திரிக்காய் ரசவாங்கி மற்றும் இட்லி/தோசைக்கு தொட்டுக்கொள்ள தரப்படும் கடப்பா. இந்தப் பதிவை தஞ்சாவூர் மெஸ் பற்றி மட்டுமே எழுத வேண்டும் என்று நான் நினைத்த போதிலும் மாம்பலம் என்று வரும் போது சில பெயர் போன உணவகங்களை குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

தம்பையா ரோட்டில் உள்ள வெங்கட்ரமணா போளி ஸ்டால். இன்று சென்னை முழுதும் போளி கடைகள் புற்றீசல் போல முளைத்து விட்டன. ஆனாலும், போளி என்றால் அது மாம்பலம் வெங்கட்ரமணா போளி ஸ்டால் தான். ரஜினி ஊரில் இருந்தால் ஞாயிறு இங்கிருந்து அவர் வீட்டிற்கு போளி செல்லும். இது கதையல்ல நிஜம். தினமலரில் வந்த செய்தி. பருப்பு போளி, தேங்காய் போளி இரண்டும் உண்டு. நாக்கில் அமிர்தமாய் கரையும். ஒரு நாளாவது மாலை நான்கு மணிக்கு சென்று உருளைகிழங்கு போண்டவுடன் இரண்டு போளி சாப்பிட முடியாதவர்கள் சபிக்கப் பட்டவர்கள். உருளைக்கிழங்கு போண்டாவில் எலுமிச்சை சாறு பிழிந்து ஒரு மாதிரி வித்தியாசமாக செய்திருப்பார்கள். எண்பதுகளின் இறுதியில் ஒரு இருட்டு இடத்தில் நடத்தப்பட்ட இந்த கடை இன்று கூட்ட நெரிசலில் திணறுகிறது

தம்பையா ரோடு ஆரம்பத்தில் இருக்கும் மோகன் விரைவு உணவு விடுதி இரவு பனிரெண்டு வரை திறந்திருக்கும். இங்கு கிடைக்கும் மசாலா பால் பிரபலம். அசோக் நகரில் இயங்கும் மாட்டாஸ் விரைவு உணவு விடுதியும் மிகப் பிரபலம். போஸ்டல் காலனி பேருந்து நிலையம் அருகிருக்கும் ப்ரிஜ்வாசி கடை சமோசா, அதே தம்பையா ரோடு இறுதியில் இருக்கும் Deluxe டீ கடை சமோசா/சுண்டல், Deluxe எதிரே இருக்கும் விநாயகா உணவு விடுதியின் இரவு நேர சப்பாத்தி/சப்ஜி, Deluxe பின்புறம் உள்ள காமேஸ்வரி உணவகத்தின் மதிய மற்றும் இரவு நேர கலந்த சாதங்கள் ஆகியவை மாம்பலம் வாழ் குடும்பங்களின் ஒரு அங்கம். வீட்டில் சோற்றை மட்டும் வைத்தால். ஐந்து ரூபாய்க்கு சாம்பார், ஐந்து ரூபாய்க்கு ரசம், கூட்டு என்று வீட்டிலிருந்து ஒரு சம்படம் எடுத்துச் சென்று வாங்கிக் கொண்டு வந்துவிடலாம். மாம்பலம், மயிலாப்பூர் போன்ற இடங்களில் எல்லாம் வீடு அமைவது போன ஜென்மத்து புண்ணியம்.